வாசகர்கள் கேள்விகளுக்கு
" ஜீவி யின் பதில்கள் "
நெல்லைத் தமிழன்:
1. கேள்வி: வாழ்க்கையைப் பற்றிய விசால அறிவு வருவது எந்த வயதில்?
பதில்: எந்த வயதில் சேமிப்பாக வங்கிக் கணக்கில் மிக அதிகத் தொகை இருக்கிறதோ, அந்த வயதில்.
வி.அறிவு வேறே. ப.மனப்பான்மை வேறே.
2. கேள்வி: ஒன்றைக் கண்டுபிடித்து உபயோகிப்பவனா, இல்லை அதனை மார்க்கெட் செய்து விற்று கல்லாக் கட்டுபவனா. இதில் யார் புத்திசாலி?
பதில்: மார்க்கெட்டுக்கு வருவதையெல்லாம் வாங்காதவன் தான் அதிபுத்திசாலி.
3. கேள்வி: வாழ்க்கையில் நம்மைப் பற்றி நம் கடமையோடு பிணைந்திருப்பவர் களைப் பற்றிச் சிந்தித்து அதற்காக வாழ்வது நம் கடமையா, இல்லை மற்றவர்கள் பற்றிச் சிந்தித்து அவர்களுக்கு வாழ்ந்து நம் கடமையை விட்டு விடுவது நல்ல வாழ்க்கையா?
பதில்: நம் கடமையோடு பிணைந்திருப்பவர்களுக் கு வாழ்வதைத் தான் கடமையாக நீங்கள் நினைக்கும் பொழுது கேள்வியில் இந்தக் குழப்பம். ஏன்? மற்றவர்கள் பற்றி சிந்தித்து என்றால் அந்த மற்றவர்கள் யார்?யார்? அது தெரியாததால் அவர்களுக்காக வாழ்வதும் கடமையா என்று சொல்ல முடியவில்லை.
மேற்கண்ட இரண்டு Categories -யையும் ஒன்றிணைக்க முடியுமா என்றும் தெரியவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். சென்ற தலைமுறைகளில் பலர், இதுவும் நம் கடமை என்று கருதிய தங்கள் சொந்த பந்தங்களாலேயே வளர்க்கப்பட்டு ஆளாகியிருக்கிறார்கள் என்பதனையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இதை நினைத்தாலே எனக்கு சிவாஜி கணேசன் நடித்த பழனி, தெய்வப்பிறவி போன்ற படங்கள் நினைவுக்கு வந்து மனதை உருக்கும்.
4. கேள்வி: அப்பா, அம்மா தம்தம் கடமையைச் செய்தாலும் குழந்தைகள் மனதில் அம்மா அதிக இடம் பிடிப்பதன் காரணம் என்ன?
பதில்: அப்பா, அம்மாவின் பெத்த பாசத்தை கடமை என்று கட்டம் கட்டினால்?..
அந்த அம்மா கூட எதுக்கெடுத்தாலும் 'ஒங்க அப்பா சொன்னாங்கப்பா' என்பாங்க.. (ஓரு தடவை கூட தன் புருஷன் என்ற தனக்கேயான உரிமை தலைகாட்டாது).. அயலார் கிட்டே கூட 'அவங்க அப்பா' தான்!
5. கேள்வி: சாகா வரம் பெற்ற இலக்கியம், நாவல், கவிதை என்று ஒன்று இருக்குமா?
பதில்: இருந்தவையெல்லாம் காலப்பெருவெளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் அவற்றில் பல அனுபவிதவர்களின் மனதில் வாழ்கின்றன.
6. கேள்வி: வாழ்க்கையில் பணத்தை விட முக்கியமாகக் கருதும் விஷயங்கள் என்ன, என்ன? இது ஆளாளுக்கு வேறுபடுமா?
பதில்: உடல் நலன் தான் அதி முக்கியம்.. அதை பணத்தின் உதவியால் சீராக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதி புத்திசாலிகள்.
7. கேள்வி: நம் அம்மாவின் செய்முறை என்று செய்முறைகளைக் குறித்து வைத்துக் கொள்வது முக்கியமா? இல்லை உணவில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? காசை விட்டெறிந்தால் விதவித உணவு என்று கருதுவது காலத்திற்கேற்ற எண்ணமா?
பதில்: அம்மாவா? கல்யாணம் ஆனவங்களுக்கு அதுவும் தாமும் அப்பா - அம்மா ஆனவர்களுக்கு இன்னும் என்ன அம்மா, ஆட்டுக்குட்டிலாம்?.. வளர்ந்து தலையெடுத்தவர்கள் தலைமை தாங்கத் தாங்க அவர்களும் தாத்தா - பாட்டி ஆக..ஆக...
8. கேள்வி: தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இலவச உணவு சாப்பிட்டது தவிர தமிழகத்திற்காக கடந்த பத்து வருடங்களில் என்ன என்ன செய்திருக்கிறார்கள்?
பதில்: நாங்க வாடகை வீட்லே இருக்கறவங்க.. இந்த மாதிரி சமாச்சாரங்களை ஓனர்கிட்டே கேட்டுக்கங்க..
இதுக்கெலாம்தான் இங்கே இடம், இதுக்கெலாம் இல்லேன்னு நீ ள நீளமா ரூல்ஸ் வைச்சிருப்பாங்க. என்ன, அவிங்கதான் கேக்கச் சொன்னாங்களா? சரியாப் போச்சு.. வாடகை கொடுக்கறது பத்தாதாமா?..
இப்படி அண்டை அசல்லே கருத்து வேறுபாடு கொள்ளணுமா?.. 40/40 மார்க் வாங்கி பக்காவா பாஸ் பண்ணினவங்கன்னு சொல்லிடுங்க.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
9. கேள்வி: தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் தீபாவளி சிறப்பு மலர் ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?
பதில்: தொலக்காட்சிகளில் என்றால் தனிச்செலவு கிடயாது. பத்தோடு பதினொன்றாகப் பார்த்து வைக்கலாம். வெவ்வேறு சானல்களுக்குத் தாவித் தாவி வெவ்வேறு தீபாவளி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்,
பத்திரிகைகளில் என்றால், அதுக்காக தனியா துட்டு அழணும்.. (இப்போலாம் 200/-க்கு குறைஞ்சு எதுவும் இல்லே போல இருக்கு!) பக்கம் பக்கமா புரட்டலாம். எல்லாருடைய டேஸ்டுக்கும் ஏதோ ஒண்ணு இருக்கற மாதிரி பத்திரிகைக்காரங்க பார்த்துப்பாங்க! 'டே! டே! கசக்கிடாதே.. அம்மன் படம் அழகா இருக்கு! ப்ரேம் போட்டு வைச்சிக்கலாம்' என்று இந்தத் தலைமுறைகளோடு போராடலாம்! நம்மை மாதிரியே மலர் வாங்கிய மற்றவங்களோடு பகிர்கிற பண்டமாற் றில் ரூ.200/- முதலீட்டில் ரூ.2000/- வரை படித்து விட்டு படித்த விஷயத்தை வைத்து மற்ற நண்ப, நண்பிகளிடம் அரட்டை அடிக்கலாம்! மத்யமர்லே மதர்ப்பா உலா வரலாம்.. முக நூல்லே முகமில்லாமல் முகங்காட்டலாம். பதிவுலகில் கெத்தாக கொடி நாட்டலாம்.. .
அதுக்குள்ளே, உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீயாடன்னு தீபாவளி பழசாகி, கார்த்திகை விளக்கு வைக்கிறதெல்லாம் புதுசாயிடும்! அப்போ கூட யார் விட்டாங்க?.. சரசரன்னு சரவிளக்குகள் படம் பிடித்துப் போடறவங்க எத்தனை இருக்காங்க.. எல்லாமே இந்த குட்டியூண்டு மன சந்தோஷத்துக்கு தாங்க..
டாக்டர் கார்த்திகேயனைத் தெரியுமா, உங்களுக்கு?.. அவர் உடல் நலனை எப்படியெல்லாம் பேணிக் காக்கலாம் என்பது பற்றி நிறைய சொல்லியிருக்காருங்க.. எங்கேயானும் அவரைப் பார்த்தா தவற விட்டுடாதீங்க.. மன சந்தோஷம் உத்தரவாதம்!
10. கேள்வி: முத்திரைகள் செய்வதின் மூலம் பல நோய்களை குண்மாக்க முடியும் என்கிறார்களே, முயன்றதுண்டா?
பதில்: முக நூல், யூ ட்யூப்களில் பார்த்துப் படித்ததுண்டு. எதுவும் என்னில் செயல்வடிவம் கொண்டதில்லை. கொஞ்சம் டைம் கொடுங்க.. அல்லாத்துக்கும் டாகடர் கார்த்திகேயன் தாங்க.. பார்த்து அல்லது கேட்டுச் சொல்றேன். அதுசரி, பரத நாட்டியமணிகளுக்கு அவர்கள் அறிந்திராமலேயே பல உடல்நல நனமைகள் கிடைத்திருக்குமோ? ஹி..ஹி..
11. கேள்வி: யார் வீரன்? யார் தீரன்? யார் சூரன்? இவைகளுக்கு பெண்பால் சொல் என்னென்ன?
பதில்: வீரன், தீரன், சூரன் -- எல்லாமே தொன்ம காலச் சொற்கள். இல்லேனா இந்த தலைப்பு பஞ்ச கால சினிமா தலைப்புகள்..
வீராங்கனை, தீர மகள், சூர மகள் என்றெல்லாம் பெண்பால் சொற்கள் கொள்லலாம். வீராங்கனை மாதிரி ஏன் தீராங்கனை, சூராங்கனை இல்லை? தெரிலைங்க.. பொழுது போகாதவங்க ஆய்வு செய்யலாம். செஞ்சா டாக்டர் பட்டம் நிச்சயம்..
எ பி பதில்கள் :
கே. சக்ரபாணி சென்னை 28:
1. விறகு அடுப்பு. கரிஅடுப்பு (கும்முட்டி) மண்ணென்னை திரிஸ்டவ் மண்ணென்னை பம்ப்ஸ்டவ் இவைகளில் சமையல் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள். உபயோகித்த அனுபவம் ஏதேனும் உண்டா?
# பார்க்கிறதென்ன ? இவை அனைத்தையும் நான் பயன்படுத்தி இருக்கிறேன். அது மட்டுமா ? " ஐயோ காஸ் சிலிண்டர் விலை 27 ரூபாயாமே ! நமக்கு எதுக்கு இந்த லக்ஸரி - மாதம் எட்டே ரூபாயில் அடுப்பு எரிகிறது " என்று மறுத்திருக்கிறேன். அன்று பிளந்த பச்சை சவுக்கு விறகில் 'சிலாம்பு' எடுத்து அடுப்பு மூட்டியிருக்கிறேன். Pre WW II ஆசாமி நான் !!
& அம்மா எல்லா அடுப்புகளிலும் சமையல் செய்து பார்த்திருக்கிறேன். நான் திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ் எல்லாவற்றிலும் சமையல் செய்துள்ளேன். விறகு அடுப்பு, கரி அடுப்பு இவைகளைப் பற்ற வைக்கும் technic எனக்குத் தெரியாது! ஆனால் கடைக்குச் சென்று விறகு வாங்கி வருவது, அடுப்புக் கரி வாங்கி வருவது எல்லாம் உண்டு. அம்மாவுக்கு முதல் பம்ப் ஸ்டவ் நான்தான் (1972) வாங்கிக் கொடுத்தேன்.
# ஒற்றை மாட்டு வண்டியில் பயணம், இரட்டை மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு சுமார் 20 கிமீ பயணம், சோனிக் குதிரை வாடகை வண்டியில் முன் பக்கம் அமர்ந்து ஓடும் குதிரை காலில் உராயும் அனுபவம் -- அனைத்தும் எமக்கு உண்டு.
& நாகையில் அடிக்கடி குதிரை வண்டிப் பயணம் செய்தது உண்டு.
3. அரிச்சந்திரன் பொய்யே பேசாமல் தப்பித்ததற்கு அவரது மனைவியாரின் பங்கு மகத்தானது. அரிச்சந்திரன் சாப்பிடும்போது உணவு பரிமாறிவிட்டு
'ஏங்க சாப்பாடு எப்படி இருக்கு' என்று. ஒருநாளும் கேட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். சரியா?
# காசி ராஜனின் செல்வ மகள் ராணி சந்திரமதி. சமையலறைப் பக்கமே போயிருக்க மாட்டார் ! "சுவாமி ! இந்த உணவு மிகச் சுவையாக இருக்கிறது சாப்பிட்டுப் பாருங்கள்" என்று கூடச் சொல்லியிருக்க மாட்டார். காரணம் அவர்கள் எல்லாம் கணவர் சாப்பிட்ட தங்கத் தட்டில் அவருக்குப் பின் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள்.
& அரிச்சந்திரன், சந்திரமதி இடையே ஒரு கற்பனை உரையாடல் :
ச : " சுவாமி நான் செய்த இட்டலி எப்படி இருக்கிறது? "
அரி : " உன் மூஞ்சியாட்டம் இருக்கு !"
ச : " நல்லா இல்லியா ?"
அரி : " உன் மூஞ்சி நல்லா இல்லை என்று நான் என்றாவது சொல்லியிருக்கேனா? "
= = = = = = = = =
KGG பக்கம்.
kgs நினைவுகள்.
இந்தப் பகுதியில் நான் பகிரும் kgs சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எல்லாமே kgs அவர்களின் மகன் குமார் எனக்கு அனுப்பிய படங்கள்.
kgs அவர்களின் மிகச் சிறிய வயது ஃபோட்டோ எது என்று ஆராய்ந்தேன்.
கீழே உள்ள படத்தில் இருப்பது kgs அவர்களின் 12 (?) வயது படம்!
வலது புற ஓரத்தில் இருப்பவர் kgs. கடலூரில் ரெட்டி சத்திரத் தெரு வீட்டில் எடுக்கப்பட்ட படம். ஆண்டு அநேகமாக 1955/56 ஆக இருக்கலாம். படத்தில் உள்ள மற்றவர்கள் முறையே (இ to வ) பெரிய அண்ணன், இரண்டாவது அண்ணனின் நண்பர் கண்ணன், இரண்டாவது அண்ணன் மற்றும் kgs.
கடலூர் வீட்டில் குடியிருந்த காலத்தில் எனக்கு ஐந்து வயதுக்குக் கீழே! அதனால் அந்த வீட்டின் அமைப்பு அங்கே நிகழ்ந்த சில சம்பவங்கள் மட்டும் மங்கலாக நினைவில் உள்ளது.
அந்த வீட்டின் முற்றப் பகுதியில் ஒருநாள் kgs ஓடி வந்து லாங் ஜம்ப் செய்ததில் அவருடைய ஒரு பக்க மேல் வரிசைப் பல்லில் ஒன்று பாதி உடைந்து, இரத்தம் கொட்டியது எனக்கு நினைவு உள்ளது. அந்தப் பாதிப் பல்லுடனேயே பல நாட்கள் சமாளித்து வந்தார். 70 வயதுக்குப் பிறகுதான் பல் செட் மாட்டிக்கொண்டார்.
கடலூர் காலத்தில் எனக்கு நினைவில் உள்ள சில விஷயங்கள் :
கெடிலம் ஆறு.
பாடலீஸ்வரர் கோவில்.
சின்ன அண்ணன் படித்த கோழிமுட்டை பள்ளிக்கூடம்,
சின்ன அண்ணன் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழாவில் பாடி நடித்த பாடல்.
சின்ன அண்ணன் - வாசலில் சுவாமி ஊர்வலம் வந்தபோது காட்டிய கற்பூரத் தட்டை - தன்னுடைய தொப்புள் பகுதியில் ("டேய் கௌதமா - இது சூடாக இதமாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டபடி) வைத்துக் கொண்டுவிட்டு அலறியது. அந்த (தீச்சு)வடு அவருடைய கடைசி காலம் வரை அப்படியே இருந்தது.
ஜெயகுமார் என்று என்னுடைய சம வயது பையன் ஒருவனுடன் நான் ஓடிப் பிடித்து விளையாடியது. மேலே படத்தில் உள்ள கண்ணன் என்பவரின் தம்பி (என்று ஞாபகம்) - சத்யநாராயணா என்ற சம வயது பையனுடன் நான் விளையாடிய விளையாட்டுகள்.
அப்பாவின் பெரியம்மா (அப்பாவின் அம்மாவுக்கு அக்கா) - குப்பியம்மாள் என்னும் குப்பிப் பாட்டி. அவர் என்னை எப்போதுமே 'பட்டுப் பாப்பா' என்று அழைப்பார்! அந்தக் குப்பிப் பாட்டியின் மரணம்தான் நான் முதன் முதலில் பார்த்த நெருங்கிய சொந்தத்தின் மரணம்.
தங்கை பிறந்த போது - " இதோ உன்னுடைய தங்கை - பாரு" என்று சொல்லியபடி அக்கா என்னிடம் சொன்னபோது பார்த்த தங்கையின் சிவந்த கால்களும், ரோஜா நிற பாதங்களும் மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது!
= = = = = = = = = =
ஜீவியின் பதில்கள் அருமை.
பதிலளிநீக்குசொந்தபந்தங்களாலேயே வளர்க்கப்பட்டு.... அது ஒரு வசந்தகாலம். கூட்டுக்குடும்பம்... சொந்தக்கார்ர்கள் ஒற்றுமையாக இருந்த காலம். அவர் பையன் இவர்கள் வீட்டில் வளர்வது, எந்த ஊர் சென்றாலும் சொந்தக்கார்ர்கள் வீட்டில் தங்குவது, தன் மகனுக்கும் மற்றவர் மகனுக்கும் வேறுபாடு கருதாத்து, உறவுக்குள்ளேயே பெண் எடுத்துப் பெண் கொடுப்பது.... என்றெல்லாம் பழக்கங்கள் இருந்த காலம்.
பிறகு வந்த காலத்தில் பணமேபிரதானமாகப் போய்விட்டது.
நன்றி, நெல்லை. உங்கள் பதில் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டன. தனிப்பட்ட சொந்த நினைவுகள் வந்தது தான் காரணம்.
நீக்குஜீவி சார்... வசந்தகாலத்தைப் பற்றி நினைத்தாலே எனக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும்... அப்போதெல்லாம் உறவினர்கள் வீடு என்றாலே விளையாட்டு, அன்பு, சுதந்திரம் என்று பல உணர்வு வரும். அப்போதெல்லாம், இந்த வீட்டுக்குப் போகிறோமே இதை வாங்கிச் செல்லணுமா, அங்க சாப்பிடலாமா என்றெல்லாம் சிந்தனையே வந்ததில்லை. 'அந்தக் காலம் வசந்த காலம்' என்று பாடாதது ஒன்றுதான் குறை.
நீக்குபிறகு கருத்து வேறுபாடுகள், சண்டைகளால் உறவுகள் கெட்டுப்போன காலமும் மனதில் வந்து வருத்தத்தை உண்டாக்கும். உறவு என்பது கண்ணாடி தம்ளர் மாதிரி. அது உடைந்துவிட்டால், எவ்வளவு முயன்றாலும் ஒட்டாது. அதிலும் பெரியவர்கள் மனஸ்தாபம் கொள்ளும்போது பாதிக்கப்படுவது சிறியவர்கள்தாம். ஒரு தடவை உடைந்துவிட்டால், என்ன செய்தாலும் அந்த உறவு மறுபடி ஒன்று சேராது, மனதளவில் விரிசல் விட்டது விட்டதுதான். நட்பு என்பது அப்படி அல்ல.
கடமையோடு பிணைந்திருப்பவர்கள்..... சமூக சேவை செய்யப்போகிறவர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்ட (இலக்கியமோ, நடிப்போ பாட்டோ இல்லை வேறெதுவோ) வெளியில் செல்பவர்கள், குடும்பத்தைக் கவனியாது விடுவதைப் பார்க்கிறோமே... சமீபத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய செய்தி பார்த்தோமே
பதிலளிநீக்கு//ஜெயகுமார் என்று என்னுடைய சம வயது பையன் ஒருவனுடன் நான் ஓடிப் பிடித்து விளையாடியது.//
பதிலளிநீக்குஇது நான் அல்ல. ஹி ஹி. என்னுடைய அன்றைய இருப்பிடம் கெடிலம் மறுகரையில் இருந்த புதுப்பாளையத்தில் ஸ்ரீனிவாச பிள்ளை தெருவில் இருந்தது.
கேள்விகளும் பதில்களும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. குழப்பம் தான் மிஞ்சியது. குறிப்பாக எம் பி க்கள் பற்றிய பதில்.
புதுப்பாளையத்தில்தான் நான் பிறந்தேன். 1951 டிசம்பர்.
நீக்குஅந்தக்கால kgs அண்ணா அனுதாபியோ. அந்த கட்சி உறுப்பினர் போல் தோளில் துண்டு போட்டிருக்கிறாரே.
பதிலளிநீக்குJayakumar
நல்ல வேளை அதில் கரைகள் இல்லை.
நீக்குதோளில் துண்டு போட்டிருப்பவர் என் இரண்டாவது அண்ணன். வலது பக்கக் கடைசியில் நிற்கும் பையன் kgs.
நீக்குகௌதமன் அவர்களின் பதிலுக்கு நன்றிகள். போட்டோக்கள் அருமை.
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
நன்றி
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகன் அருள் வேண்டுவோம்.
நீக்குகௌதமன் அவர்களின் பதிலுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குபோட்டோக்கள் பிரமாதம்
கே. சக்ரபாணி
மீண்டும் நன்றி.
நீக்குஇன்றைய பதிவில் கௌதம் ஜி அவர்களது கை வண்ணம் சிறப்பு..
பதிலளிநீக்குஅது எங்கே இருக்கு!
நீக்குகேஜிஜி பக்கம் என்று தொகுக்கப் பட்டவை உங்களது கை வண்ணம் தானே!.…
நீக்குஓ அதுவா ! நன்றி.
நீக்கு",மார்க்கெட்டுக்கு வருவதை எல்லாம் வாங்காதவன்தான் புத்திசாலி:" பதில் பிடித்திருந்தது . சூப்பர் பதில் உண்மையும் கூட.
பதிலளிநீக்குKgs பக்கங்கள் முட்டைப் பள்ளிக் கூடம் ரசனை. படம் பழைய பொக்கிசம்.
நன்றி.
நீக்குஇன்றைய பதிவினை ரசித்தேன். கேஜிஎஸ் குறித்த நினைவுகள் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநெல்லையின் முதல் கேள்விக்கான பதில் அந்த வித்தியாசம் பற்றி ஜீவி அண்ணா சொன்னது அருமை.
பதிலளிநீக்குவிசாலமான அறிவு என்பது வேறு மனப்பக்குவம் வேறு. விசாலமான அறிவு வந்தும் பக்குவம் வராதவர்கள் உண்டு. வாழ்க்கையைக் குறித்த விசாலமான அறிவையும் விட ஒரு படி மேலே வாழ்க்கையைக் குறித்த மனப்பக்குவம் தான் முக்கியம்.
வயதானாலும் இரண்டுமே வராமல் இருக்கும் மக்களும் உண்டு!!!!
வயது கணக்கில்லை நெல்லை ஒரு சிலருக்குச் சிறு வயதிலேயே வாழ்க்கையைக் குறித்த வி அ வந்து ம ப வும் கூட வந்துவிடுவதுண்டு. இதற்கு அனுபவங்கள் மற்றும் மனக்கண் மிக முக்கியம்,
கீதா
நெல்லையின் இரண்டாவது கேள்விக்கான ஜீவி அண்ணாவின் பதில் சூப்பரோ சூப்பர்!
பதிலளிநீக்குமூன்றாவது கேள்விக்கான பதிலும் அருமை.
நெல்லை, இதற்கு என்னால் என் அனுபவ பதிலைக் கொடுக்க முடியும். .
அதாவது நாமும் நாம் கடமைப்பட்டவர்களுக்காக வாழ்வதுதான் முதல் கடமை. அந்தக் கடமையையே சரியாகச் செய்யாமல் மத்தவங்களுக்குக் கடமைப்பட்டவர்கள் போலச் செய்வதால்தான் பல குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் நல்ல வழிநடத்தலும் கிடைக்காமல் போகிறார்கள். பெற்றோருடனான பிணைப்பு இல்லாமல் போகிறது. பெற்றோர் தங்கள் கடமையிலிருந்து கண்டிப்பாகத் தவறியவர்கள் எனலாம். கூட்டுக் குடும்பங்களில் இப்படி நிகழ்வதுண்டு. இதனை உளவியலில் சொல்வது contaminated parenting.
தங்கள் கடமையையும் செய்து பிறரையும் தூக்கிவிடுவது என்பது ஒரு சில குடும்பங்களில் மட்டுமே சாத்தியம். இதிலும் கூட unconditional love என்பது இருந்தால்தான் சாத்தியம்.
கீதா
/கூட்டுக் குடும்பங்களில் இப்படி நிகழ்வதுண்டு. // கூட்டுக் குடும்பங்களைவிட, சமூக சேவை /இடியாப்பம் செய்கிறேன், சமூகத்திற்காக இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று வீட்டை அம்போ என்று மனைவி தலையில் கட்டிவிட்டுப் புறப்படுபவர்களால்தான் இப்படி நிகழும். ஹா ஹா ஹா
நீக்கு4 வது கேள்விக்கு ஜீ வி அண்ணாவின் முதல் பதிலை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன். இதை மேலே உள்ள கருத்தில் சொல்ல விட்டுப் போச்சு. பாசத்தினால் இல்லாமல் கடமை என்று நினைக்கும் போது கண்டிப்பாக அங்கு unconditional love இருக்கச் சான்சே இல்லை. கடமை என்பது ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்திவிடும் ஒன்று. பெற்றோர் பிள்ளைகளை எதிர்பார்ப்புடன் வளர்க்காமல் அன்பு கொடுத்து வளர்த்தாலே போதும் பிள்ளைகள் பெற்றோரை மிக அழகாகப் பார்த்துக்குவாங்க. நான் இவ்வளவு செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன், நான் உனக்கு எவ்வளவு செய்திருக்கேன் என்று என்றுகணக்குப் பேசினால் குழந்தைகளுக்கும் அந்த மனோபாவம் வர வாய்ப்பு உண்டில்லையா? அங்கு அன்பு அடிபட்டு கடமை என்ற சொல் வந்துவிடும் இரு சாராருக்கும்.
பதிலளிநீக்குகீதா
நெல்லையின் 5 வது கேள்வி - சாகாவரம் பெற்ற இலக்கியம் நாவல் கவிதை என்று எதுவரை சொல்ல முடியும்? நாம் உயிருடன் இருக்கும் வரை பேசப்படுபவற்றை நாம் சொல்லலாம் அதன் பின் நமக்கு எப்படித் தெரியும் அது இன்னும் நிலைத்து இருக்கு என்று? ஜீவி அண்ணா சொல்லியிருக்கிறார் சிலது காலவெளிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்று....அப்படி எதிர்காலத்திலும் இப்போது எஞ்சி இருப்பவை எப்படி ஆகும் என்று எப்படித் தெரியும்
பதிலளிநீக்குகீதா
எதுவுமே சாகாவரம் பெற்றதல்ல, இதிஹாசங்களைத் தவிர. அதற்கும் காரணம் அது பக்தியோடு/மதத்துடன் சம்பந்தப்படுத்தப் படுவதால்தான்.
நீக்கு6 - ஜீவி அண்ணாவின் பதில் டிட்டோ!! ஆரோக்கியம் இருந்தாலே போதும் பணக்காரன் என்பேன். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பதிலளிநீக்கு7 வதற்கு, ஏன் அம்மாவின், மாமியாரின் குறிப்புகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு நம் குழந்தைகளுக்கு இது பாட்டிகளின் குறிப்பு, அத்தைகளின் குறிப்பு என்று நாம் பலரிடம் கற்றைதைச் சொல்லி செய்து கொடுக்கலாமே நாம் வித விதமாகச் செய்தாலும்?
உணவில் கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கிறது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. உணவே மருந்து!
கீதா
தீபாவளி மலர் - பதில் ரசித்தேன். டாக்டர் கார்த்திகேயன் நன்றாகவே பேசுகிறார்.
பதிலளிநீக்குபானுக்கா முத்திரைகள் செய்வதின் மூலம் நன்மைகள் என்பதெல்லாம் பல கட்டுப்பாடுகளோடு இருக்கறவங்களுக்கு, மனம் உடல் கட்டுப்பாடோடு. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், சர்க்கரை வியாதிக்கு மருந்து எடுத்துக் கொண்டே இன்னொரு புறம் ஸ்வீட்டை உள்ளே தள்ளினால் உடற்பயிற்சி நடை எதுவும் இல்லாமல்? இல்லை அதைச் செய்தாலுமே உணவுக் கட்டுப்பாடு இல்லைனா? அந்த மாத்திரை பாவம் என்ன செய்யும்? மாத்திரைக்குக் கண்டிப்பாகப் பலன் இருக்காது. அது போலத்தான்! என்பது என் சிற்றறிவின் புரிதல்
அதுசரி, பரத நாட்டியமணிகளுக்கு அவர்கள் அறிந்திராமலேயே பல உடல்நல நனமைகள் கிடைத்திருக்குமோ? //
நடனம் மிக மிக நல்ல பயிற்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உணவு மனம் கட்டுப்பாடில்லைனா நோய்கள் வரலாம். மூட்டு வலி, achilles tendinitis போன்றவை வர வாய்ப்புண்டு நடனத்திற்கும் கூட நம் ஆரோக்கியம் மிக முக்கியம்
கீதா
சொல்லப்பட்டிருக்கும் எல்லா அடுப்புகளிலும் அனுபவமும் உண்டு!!
பதிலளிநீக்குவண்டி அனுபவங்களும் உண்டு.
ஏங்க சாப்பாடு நல்லா இல்லைனா உண்மையைச் சொல்வதிலும் இல்லை நல்லாருக்குன்னு பொய் சொன்னாலும் இதெல்லாம் ஒரு பொய்யா!!!!? பொய்யில் அடங்குமாங்க!!ஹாஹாஹாஹா குடும்பம் நல்லா இருக்கணும்னா....வள்ளுவரின் அனுபவம்....பொய்மையும் வாய்மை இடத்து ஹாஹாஹாஹா
கீதா
கேஜி எஸ் அண்ணா பகுதியில் உங்கள் நினைவுகள் அபாரம்.
பதிலளிநீக்குகெடிலம் உங்க காலம், ஜெ கே அண்ணா அங்கிருந்தப்ப நல்லாருந்திருக்கும். நான் 7, 8 வருடங்களுக்கு முன் அடிக்கடி பார்த்த நதி ஆனால் சுத்தமாக இருக்கவில்லை. பல சமயங்களில் காய்ந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல இருக்கும்
கீதா
சிறு வயதில் பார்த்ததோடு சரி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் ஜீவி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அதற்கு தகுந்த மாதிரி பதில்கள் தந்த தன்மையும் பாராட்டுக்குரியது.
எ. பி ஆசிரியர்களிடம் கேட்ட கேள்விகளும், ஆசிரியர்களின் பதில்களும் சிறப்பே..!
தங்கள் சகோதரரின் புகைப்படம், அவரைப்பற்றிய விபரங்கள் அனைததும் சுவாரஸ்யமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்கு8--வது கேள்விக்கான பதிலை ஒட்டு மொத்தமாக கடந்து சென்று விட்டீர்களே!
பதிலளிநீக்குஅதாங்க, ஜெஸி ஸார் குழப்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு சொன்ன எம்.பி--களைப் பற்றிய பதில்?
நெல்லை, கேள்வி கேட்ட நீங்கள் தான் பதிலுக்கான விளக்கத்தைச் சொல்ல வேண்டுமோ? தெரிலே.
பதிலளிநீக்குஜெஸி ஸார் குழப்பம் குழப்பமாகவே இருந்து விடக்கூடாதில்லையா?
கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்த பதிவாகப் போகிற பதிவு
பதிலளிநீக்குஇது! 8--வது கேள்வி பதிலுக்கான உங்கள் விளக்கத்தை அவர்களும் படித்து மகிழ்ட்டும். முந்துங்கள்!
நெல்லையின் 8-வது கேள்விக்கான பதில் இது:
பதிலளிநீக்குநாங்க வாடகை வீட்லே இருக்கறவங்க.. இந்த மாதிரி சமாச்சாரங்களை ஓனர்கிட்டே கேட்டுக்கங்க..
இதுக்கெலாம்தான் இங்கே இடம், இதுக்கெலாம் இல்லேன்னு நீள நீளமா ரூல்ஸ் வைச்சிருப்பாங்க. என்ன, அவிங்கதான் கேக்கச் சொன்னாங்களா? சரியாப் போச்சு.. வாடகை கொடுக்கறது பத்தாதாமா?..
இப்படி அண்டை அசல்லே கருத்து வேறுபாடு கொள்ளணுமா?.. 40/40 மார்க் வாங்கி பக்காவா பாஸ் பண்ணினவங்கன்னு சொல்லிடுங்க.
========
இந்த பதிலில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை.
நாங்க வாடகை வீட்டில் குடியிருக்கறவங்க --- எபி தளத்திற்கு கெஸ்ட் மாதிரி எழுத வந்தவன் நான்
இந்த மாதிரி சமாசாரங்களை ஓனர் கிட்டே கேளுங்க -- இந்த மாதிரி கேள்விகளை எபி--க்கான கேள்விகளாய் கேளுங்க.
இந்த மாதிரியான அரசியல் சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டாம், கேட்கலாம், கேட்கணும் என்றால் கேள்விகள் இப்படிலாம் இருக்க வேண்டும் என்று புரிபடாத நிறைய வரையறைகளை வைத்திருப்பார்கள்
என்ன, அவிங்க தான் கேட்கச் சொன்னாங்களா -- என்ன, எபி தளக்காரங்க தான் கேட்கச் சொன்னாங்களா?
சரியா போச்சு, இந்த மாதிரி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பதில்களை அளிப்பது போதாதா?
இந்த மாதிரி கேள்விகளுக்கு பதிலளித்து சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேற்பாடு கொள்ள வேண்டுமா?
40/40 மார்க் வாங்கி -- 40-க்கு 40 தொகுதிகள்லே ஜெயிச்சவங்க அவங்க என்பதெல்லாம் எல்லோருக்குமே தெரியும்.
ஹப்பாடி -- இப்பத்தான் முதல் முதலா செய்யுளுக்கு பதவுரை, பொழிப்புரை எழுதற மாதிரி விளக்கம் எழுதியிருக்கிறேன். தாவு தீந்து போச்சில்லே.. :))