28.4.25

"திங்க"க்கிழமை   :  ஜாம்பக்காய் ஜூஸ் - ஜெயக்குமார் சந்திரசேகரன் ரெஸிப்பி 

 

 Drink of Dracula 

ஜாம்பக்காய் ஜூஸ்


J K C

இது ஒரு ஒப்பேற்றப்பட்ட பதிவு மாத்திரமே. ஜாம்பக்காய் மார்க்கட்டில் கிடைக்காது. ஜாம்பக்காய்க்கும் ஜாம்பவானுக்கும் சம்பந்தம் இல்லை. இது மருந்து பொருளும் இல்லை. சும்மா பார்த்து “அப்படியா” என்று சொல்லி விட்டு செல்லலாம் .

வீட்டில் ஒரு ஜாம்பக்காய் மரம் உண்டு. இந்த வருடம் காய்க்க ஆரம்பித்துவிட்டது. ஆகவே கொஞ்சம் எடுத்து ஜூஸ் அடித்து குடித்தேன்.

English Name : Rose Apple. ஜாம்பக்காய் மரம் (வீட்டில் உள்ளது)
படத்தில் காட்டியிருக்கும் ஜாம்பக்காய் பிஞ்சு தான். எடுத்ததன் காரணம் லோக்கல் பிள்ளைகள் விளைய விடுவதில்லை. கம்பவுண்ட் சுவரில் ஏறி பறித்து கொண்டு சென்றுவிடுகிறார்கள். கண்டிக்க முடியாது. ஒரு கல் போதும் ஜன்னல் கண்ணாடி உடைய.

இரண்டாக பிய்த்தால் உள்ளே விதை தெரியும். விதைகளை நீக்கி விட்டு ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து மிக்ஸியில் ஜூஸ் அடிக்கவும். வடிகட்டி குடிக்கலாம். ஐஸ், எலுமிச்சம் பழ சாறு, புதினா, குறுமிளகு பொடி என்று விருப்பப்பட்டதை சேர்த்துக் கொள்ளலாம்.


2. ஜாம்பக்காய் ஊறுகாய் (இனிப்பு)

நான் ஒரு ஊறுகாய் பிரியன். ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காது. ஒரு பரீட்சார்த்தமாக ஜாம்பக்காய் ஊறுகாய் செய்யலாம் என்று ஜாம்பக்காய் கொஞ்சம் எடுத்து விதை நீக்கி துண்டுகளாக்கி கொண்டேன்.

செய்முறை.

வாணலியை அடுப்பில் வைத்து ஜாம்பக்காய் துண்டுகளை நெல்லிக்காய் வதக்குவது போன்று வதக்கவும்.

எடுத்து ஆறவைத்து சிறிது கல் உப்பு, காஷ்மீர் மிளகாய் பொடி, natural வினிகர் (preservative) ஒரு ஸ்பூன் ஊற்றி பிரட்டி பாட்டிலில் அடைத்துக் கொள்ளவும். (நான் சொல்லாமல் பாஸ் கடுகு தாளித்திருக்கிறார்.) 

எரிப்பு, உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு ஆகிய சுவைகளுடன் ஊறுகாய் நன்றாக இருந்தது. தயிர்சாதத்திற்கு நல்ல துணை.

20 கருத்துகள்:

  1. இதனை தண்ணீர் ஆப்பிள் என்ற பெயரில் விற்பனை செய்யறாங்க. மார்க்கெட்டில் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

    முந்திரிப் பழமாவது வாசனையா இருக்கும். இதுல வாசனை இல்லாமல் சுவையில்லாமல் இருக்கும் என நினைத்து வாங்கியதில்லை.

    எந்தப் பழத்தையும் ஜூஸாகச் சாப்பிட்டுவிடலாம். இதில் ஊறுகாயா? வித்தியாசமான முயற்சிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​டூர் முடிந்து விட்டதா? ஊர் திரும்பி விட்டீர்களா? காலையிலேயே வந்து பின்னூட்டம். நல்வரவு.

      நீக்கு
    2. இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டேன். நாங்கள் வந்த மறுநாள், சிக்கிமில் நிலச் சரிவு, ஆயிரம் டூரிஸ்டுகள் மாட்டிக்கொண்டனர். நாங்கள், நிலச்சரிவு ஏற்படும் இடம், ஜாக்கிரதை, பனிச்சரிவு ஏற்படும் இடம் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை போர்டுகள் இருந்த பல இடங்களை மலைப்பகுதியில் கடந்து சென்றிருந்தோம். மேகாலயாவில் மலைப்பகுதியில் இத்தகைய பிரச்சனையால் கடுமையான டிராபிக், 4 மணி நேரங்களுக்குப் பதில் ஆறரை மணி நேரங்களானது.

      நீக்கு
    3. கடவுள் உங்களுக்கு துணையிருந்திருக்கிறார்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஜெ கே அண்ணா கலக்கறீங்க.

    இங்கு சென்னையில் இருந்தப்ப ஜம்பக்காய் வாங்கி ஜூஸ், அது போல ஊறுகாய், தொக்கு போல போட்டு சாதம் கலந்து மாங்காய் சாதம் செய்வது போலவும் செய்திருக்கிறேன். நல்லாருக்கும்.

    சென்னைல ரோஸ் கலர் பார்த்திருக்கிறேன். இங்கு பெங்களூரில் பச்சை, நல்ல சிவப்பு கலர், ரோஸ் கலர் என்று கிடைக்கின்றன. விலைதான் குதிரை விலை!

    உங்க வீட்டில் மரமே இருப்பது ஆஹா!!!!

    படங்கள் எல்லாமே நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா...  இரண்டு நாட்களுக்குமுன் ஃபேஸ்புக்கில் 'இது என்ன காய்' என்று தெரியாமல் பதிவிட்டிருந்தேன்.  எல்லோரும் 'நீர் ஆப்பிள்' என்றார்கள்.  அமைதிச்சாரல் மட்டும் ஜாம்பக்காய் என்றதும் எனக்கு சட்டென நினைவுக்கு வந்து விட்டது..  அட,,  இங்கே நாளை மறுநாள் பதிவிட இதை ஷெட்யூல் செய்து விட்டு, அங்கே போய் என்ன காய் என்று கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன் என்று!

      நீக்கு
    2. ஆஹா.. மறதி இருக்கலாம். ஆனால் இது புதுவிதமான மறதி.

      நீர் ஆப்பிள் அடுத்த முறை வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கணும்.

      எனக்கெல்லாம் ஸ்டார் ஃப்ரூட் ரொம்பப் பிடிக்கும் (புளிக்கக்கூடாது). அரை நெல்லிக்காய் மற்றும் பல பழங்கள். ஆனால் அந்த மரங்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவ்வளவு எஞ்சாய் செய்வதில்லை.

      நீக்கு
    3. நானும் மாம்பலத்தில் ஸ்டார் ஃப்ரூட் பார்த்தேன். படம் எடுக்கவில்லை. அவற்றைப் பார்த்தால் சாப்பிடும் எண்ணமும் தோன்றவில்லை. ஒருவகை மீன் அல்லது அட்டைப்பூச்சியின் நினைவு வந்தது! (ஸாரி)

      நீக்கு
    4. நான் 8வது, தாளவாடியில் படித்துக்கொண்டிருந்தபோது, 5 பைசா ஒரு ஸ்டார் பழம். பெங்களூர்ல சீசன்ல நிறைய வரும். அயோத்தில 30 ரூபாய்க்கு 10 வாங்கினேன். புளிப்பு அதிகம்னால சாப்பிட முடியலை. என் உறவினர் வீட்டில் பழுத்துத் தொங்குமாம். சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்காப்பணம் கதை. கேட்டால் அனுப்புவார் ஆனால் கேட்பதில்லை. ரொம்ப ருசியா இருக்கும் நடுத்தண்டை விட்டுவிட்டுச் சாப்பிட்டால்.

      நீக்கு
  4. நிறைய நாள் வைக்க, கொடுத்தனுப்ப ஊறுகாய் போட்டாலும் வினிகர் சேர்த்ததில்லை ஜெ கே அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வினிகர் சேர்த்தால் ஒரு sting கிடைக்கும். சாலடில் வினிகர் சேர்ப்பார்கள். வினிகர் சேர்த்த ஊறுகாய் சாறு வைன் போல சுவைக்கும்.

      நீக்கு
    2. ஆனால் எனக்கு வினிகர் சேர்த்த ஊறுகாய் வகை பிடிக்காது.

      நீக்கு
    3. எனக்கு வினிகரே பிடிக்காது. அதிலும் பிலிப்பினோக்கள், வினிகரைக் கொதிக்கவைத்து அதில் பொரித்தெடுக்கும் வகைகளின் வாசனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

      நீக்கு
  5. இது தஞ்சாவூரில் கிடைக்கிறது. கேரளா நெல்லிக்காய் என்று சொல்லி விற்கிறார்கள். நானும் ரொம்ப நாட்களாகவே இந்தத் தளத்தில் இதைப்பற்றி சொல்லி , காண்பித்து விசாரிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவைப்பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடையிலேயே மிளகாயைப்பொடித்து உப்பும் சேர்த்து கலந்து தடவிக்கொண்டு சாப்பிடச் சொல்லுகிறார்கள்.
    இதற்கான இரண்டு குறிப்புகளும் அருமை!!

    பதிலளிநீக்கு
  6. பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. பச்சை ஆப்பிளில் தொக்கு, ஊறுகாய், பஜ்ஜி, சப்ஜியோட சேர்த்துனு பண்ணி இருக்கேன், இது தெரியாது, இப்போ வரை பார்த்ததும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. ஜாம்பக்காய் கோவையில் ரோட்டோர கடைகளில் கிடைக்கும், வாங்கி இருக்கிறொம் ஜூஸ் போட்டது இல்லை, அறிநெல்லிக்காய் போல புளிக்கும் ஊறுகாய் போட்டு இருக்கிறோம்.
    சிறு பிள்ளைகள் கண் கொட்டாமல் சாப்பிடுவார்கள்.
    அதுதான் பிள்ளைகள் பறித்து சென்று விடுகிறார்கள்.

    நீங்கள் படத்தில் காட்டியதை விட பெரிதாக இருக்குமே என்று நினைத்தேன், நீங்கள் பிஞ்சு என்று சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஊறுகாயில் கடுகு சேர்பது நல்லது கெட்டு போகாது ஊறுகாய்

    பதிலளிநீக்கு
  9. ஜாம்பக்காய், கேள்வி பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. கண்ணில் பட்டால் வாங்க வேண்டும். படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் மூலமாக இந்தப் பழத்தின் ஊறுகாய் செய்முறைகளைப் பற்றி அறிந்து கொண்டேன். இந்த பழத்தை இதுவரை நானும் பார்த்ததில்லை. வாங்கியதுமில்லை.கிடைத்தால் வாங்கி தங்களின் செய்முறைகள் ன்படி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!