திங்கள், 24 ஜூலை, 2017

திங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி



சொஜ்ஜி அப்பம்.



     எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் "திங்க"ற கிழமைக்குப் புதுசாச் சமைச்சுப் படங்களோட அனுப்பும்படி கேட்டிருந்தார். எனக்கிருந்த வேலை மும்முரத்தில் முடியுமானு சந்தேகம்.  அதோட நம்மளோட உணவு வகைகளிலே புதுசுனு எதுவும் இல்லையேனும் சந்தேகம். இருந்தாலும் பாரம்பரிய உணவுகளை மறு அறிமுகம் செய்து வைக்கலாமேனு நினைச்சேன்.  (இது நல்ல ஐடியா.  அப்படியே செய்யலாம்- ஸ்ரீராம் )  நேற்று சொஜ்ஜி அப்பம் செய்தேன். அதைச் செய்யும்போது வழக்கம்போல் படம் எடுக்கணும்னோ எங்கள் ப்ளாகுக்கு அனுப்பணும்னோ நினைவில் வரலை. (இந்த தடவை ஓகே.  அடுத்தடுத்த முறைகளில் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்கக்கா... - ஸ்ரீராம்) கடைசியில் முடிக்கிறச்சே தான் நினைவு வந்தது. கொஞ்சம் சொஜ்ஜியும், மேல் மாவும் மிச்சம் இருந்தது. அதைப் படம் எடுத்துக் கொண்டேன். அடுப்பில் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டிருந்த சொஜ்ஜியையும் ஒரு படம் எடுத்துக் கொண்டேன்.

     அதுக்குள்ளே எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு!   பாதி வேலைலே அழைப்பைக் கவனிக்கப் போயாச்சு. இம்மாதிரியான செய்முறைகள் எல்லாம் எப்போவோ செய்யறது தானே!  இதெல்லாம் நிதானமாச் செய்ய வேண்டியதில்லையோ! இப்படி அவசரம் அவசரமாச் செஞ்சு என்னத்தைக் கிழிக்கப் போறேன்! மனசிலே நினைச்சுண்டேன். படம் எப்படி வந்திருக்குமோ என்றும் தெரியலை.  காமிராவைப் பயன்படுத்தணும்னு தான் நினைக்கிறேன். அதை எடுத்துத் தயாரா வைச்சுக்கணும். நமக்கோ ஏதேனும் செய்கையில் நினைப்பே வராது! அப்புறமாத் தான் அடாடானு நினைவு வரும். அரணை புத்தி தானே!





     இப்போ இதுக்குத் தேவையான பொருட்கள்னு பட்டியல் போட்டுடுவேன். ஆனால் எல்லோரும் தேவையான பொருட்களை மட்டுமல்லாமல் அதுக்கு ஊத்தற தண்ணீர், உப்பு, எண்ணெய்னு எல்லாமும் படம் காட்டறாங்களா! நாம ஒண்ணையும் படம் போடலைனா இது என்ன "பப்படம்"னு நினைக்க மாட்டாங்க?  ( இது பாராட்டா கிண்டலா அக்கா?  ஆனால் அநியாயம்.  தண்ணீர், பாத்திரம்னுல்லாம் படம் காட்டறதில்லை நாங்க...  நைஸாய் நெல்லையையும் என்னுடன் சேர்த்துக்கொள்கிறேன் - ஸ்ரீராம்  )  சரினு சொஜ்ஜிக்குத் தேவையான கோதுமை ரவையை ஒரு படம் எடுத்துக் கொண்டேன். 
  





     அப்புறமா வெல்லம், தேங்காய். ஏலக்காயை எல்லாம் எடுக்கலீங்க! அதைச் சேர்க்கணும்னு சொன்னாப் போதாதா? என்ன தண்ணீரா? அட தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வாணலி அல்லது உருளியில் தாங்க கிளறணும்! அதெல்லாமுமா படம் எடுக்கணும்! சரியாப் போச்சு போங்க! எடுக்கலை! என்ன இப்போ?  :)))))   





     எடுத்த படங்களே முன் பின்னாக எடுத்தவை தாங்க! ஆரம்பத்திலிருந்து வரிசையாப் படங்களே எடுக்கலை! முதல்லே எண்ணெயில் பொரியும் சொஜ்ஜி அப்பம் படமும், மேல் மாவு படமும் தான் எடுத்தேன். அப்புறமா சொஜ்ஜியோட படம்!  அப்புறமா நினைச்சு நினைச்சு மற்றப் படங்கள்! சரியா! கொடுக்கிறச்சே ஶ்ரீராம் வரிசைக்கிரமமாக் கொடுப்பார்! அவர் பாடு, உங்க பாடு! ( நானும் வந்த படங்களை வெளியிட்டு விடுகிறேன்.  புதன் புதிர் இப்போ வருவதில்லை இல்லையா?  இதை புதிரா நினைச்சு போட்டோக்களை பார்த்துப் புரிஞ்சுக்கோங்க வாசகர்களே! - ஸ்ரீராம்  )

     சொஜ்ஜி அப்பத்துக்குத் தேவையான பொருட்கள்: கோதுமை ரவை ஒரு கிண்ணம், வெல்லம் அவரவர் இனிப்புக்கு ஏற்றாற்போல் இரண்டு அல்லது மூன்று கிண்ணம். இந்த முறை சொஜ்ஜி அப்பத்திற்குத் தித்திப்புப் போறலைனு ரங்க்ஸ் புகார் கொடுத்தாச்சு!  கிளற நெய் இரண்டு டேபிள் ஸ்பூன், மு.ப. தி.ப. எல்லாம் தேவையானால்! ஆனால் உள்ளே வைச்சு மூடி இடும்போதோ அல்லது தட்டும்போதோ நெருடலாம். நான் போடறதில்லை.  ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்.  தேங்காய்த் துருவல் ஒரு கிண்ணம்.

     மேல் மாவுக்கு: கோதுமை மாவில் தான் நேத்துப் பண்ணினேன். அதனாலோ என்னமோ நல்ல சாஃப்டா வந்திருக்கு. ஆனால் கொஞ்சம் மொறுமொறுப்பும் வேணும்னா ரவை கொஞ்சம் சேர்க்கணும். அல்லது கோதுமை மாவு+ரவை+மைதா மாவு சம அளவில் கலந்துக்கணும். மூன்றும் ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் நெய்யைக் காய்ச்சி ஊற்றிக் கலந்து நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அது ஒரு பக்கம் ஊறட்டும். இங்கே நாம் சொஜ்ஜி அதுக்குள்ளே கிளறிடலாம்.

      அடுப்பில் உருளி அல்லது நான் ஸ்டிக் பானை வைத்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றவும். நெய் காய்ந்ததும் கோதுமை ரவையை அதில் போட்டு நன்கு வறுக்கவும். அடுப்பிலேயே இன்னொரு பக்கம் ஒரு பாத்திரத்தில் மூன்று கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். ரவை நல்ல வாசனை வரும் வரை வறுபட்டதும் கொதிக்கும் வெந்நீரை அதில் ஊற்றி நன்கு கிளறவும். ரவை நன்கு வெந்து பதமானதும் வெல்லத் தூள் மூன்று கிண்ணம் சேர்த்துக் கிளறவும். மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றவும். தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். நன்கு கிளறியதும் அது கெட்டிப் பட்டு உருட்டும் பதம் வரும். அப்போது கீழே இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும். 

     நன்கு ஆறியதும் அதைச் சின்ன நெல்லிக்காய்/எலுமிச்சை அளவுக்கு உருட்டி வைத்துக் கொள்ளவும். இரும்புச்சட்டி அல்லது கடாயில் சமையல் எண்ணெய் ஏதேனும் ஊற்றவும். நான் கடலை எண்ணெய் தான் இம்மாதிரிப் பொரிப்பதற்குப் பயன்படுத்துவேன். அதிலேயே ஒரு கரண்டி நெய்யையும் சேர்த்து ஊற்றுவேன். எண்ணெய் காயட்டும் அதற்குள்ளாகப் பிசைந்த மாவை எடுத்து நன்கு தேய்த்துக் கொண்டு சப்பாத்திக்கு எடுக்கிற அளவை விடக் கொஞ்சம் குறைவாக எடுத்துக் கொண்டு வட்டமாகச் சப்பாத்தியாக இடவும். ஓரளவுக்கு வட்டமாக வந்ததும் உள்ளே உருட்டி வைத்துள்ள பூரணத்தை வைக்கவும். எல்லாப் பக்கங்களில் இருந்தும் இழுத்து மூடவும். பின்னர் மீண்டும் சப்பாத்திக் குழவியால் அதை இட்டு ஓரளவுக்கு எல்லாப் பக்கங்களிலும் பூரணம் பரவலாக இருப்பதாகத் தெரிந்த பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். நன்கு  உப்பிக் கொண்டு வரும். அதே சமயம் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே பூரணம் உள்ள பாகம் மிருதுவாகவும் இருக்கும். முக்கியமாய் வெல்லம் தேவையான அளவுக்குப் போட வேண்டும். கூடப் போட்டால் வெல்லம் அதிகப்படியாக இருப்பது சூடான எண்ணெயில் கரைந்து வெளியே வந்து எண்ணெயெல்லாம் கசடாக மாற்றி விடும். குறைவாக இருந்தால் ருசி இருக்காது. 

     இம்மாதிரி எல்லாவற்றையும் பண்ணி வைத்துக் கொள்ளவும். சூடாகவும் சாப்பிடலாம். ஆறினாலும் சாப்பிடலாம். ​




( சாப்பிட ஆசையாகத்தான் இருக்கிறது.  பாஸ் கிட்ட காட்டறேன்.  அவங்க என்னிக்கி இதை படிச்சு, என்னிக்கி செய்து...ம்ம்ம்...  - ஸ்ரீராம் )





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே...

42 கருத்துகள்:

  1. சொஜ்ஜி அப்பம் நன்றாக இருக்கிறது. செய்முறை விளக்கம் , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது கீதா.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் உரையாடலுக்கு இடையே ஸ்ரீராம் பேசுவதும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. காலையிலேயே சொஜ்ஜியா!..

    இருந்தாலும் செய்முறையை அறிந்து கொண்டேன்..
    அருமை.. அருமை!..

    பதிலளிநீக்கு
  4. சொஜ்ஜியப்பம் செய்முறை எளிதாத்தான் இருக்கு. ரொம்ப எண்ணெய் குடிக்குமோ? வெல்ல அளவுதான் கொஞ்சம் களேபரமா இருக்கு. சிராத்தத்தின்போதுதான் ஒரு வருடம் விட்டு ஒருவருடம் இதைப் பண்ணச் சொல்லுவேன். எண்ணெய் குடிக்கும்.

    நல்ல சொஜ்ஜியப்பத்தை இப்படிப் படம் எடுத்திருக்கீங்களே!

    பதிலளிநீக்கு
  5. அட? அதுக்குள்ளே போட்டாச்சா? இந்த வாரம் நெ.த.வோடது ஏதேனும் வந்திருக்குமோனு பார்க்க வந்தேன். இடையில் ஶ்ரீராம் கொடுத்திருக்கும் கருத்துகள் எல்லாம் அருமை! ஹிஹிஹி, சபாஷ், சரியான போட்டி! சொஜ்ஜி அப்பம் அதிகம் எண்ணெய் குடிக்காது நெ.த. மேல் மாவை நன்றாகக் கெட்டியாப் பிசைஞ்சுக்கணும். கொழுக்கட்டையில் நெய்க்கொழுக்கட்டை என்று பொரித்துச் செய்வதில்லையா? அதிலே எண்ணெய் எங்கே குடிக்குது? அது கொழுக்கட்டை போலச் செய்து பொரிப்போம். இது தட்டையாகத் தட்டிப் பொரிக்கிறோம். அம்புடுதேன்! :))))

    பதிலளிநீக்கு
  6. சொஜ்ஜி அப்பம்... நிறைய வேலைகள்... நமக்கு ஒத்து வராது! யாராவது செஞ்சு தந்தா சாப்பிடலாம்! அடுத்த முறை திருவரங்கம் வரும்போது சொல்கிறேன் கீதாம்மா! :)

    பதிலளிநீக்கு
  7. சொஜ்ஜியப்பம் வீட்டில் செய்யச் சொல்லணும்....

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் கீதாக்கா. எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எப்படி செய்தாலும்...அதாவது மைதா மெல் மாவு + ரவை பூரணம்...என்று.. என் பாட்டி அப்பாவின் அம்மா சொஜ்ஜி அப்பம் அப்பப்ப செய்வது வழக்கம். திவசத்தின் போது கண்டிப்பாகச் செய்வார்கள். ரவையில், மைதா மெல் மாவாக வைத்துச் செய்வார்கள். இதே முறைதான்....நான் நீங்கள் செய்திருப்பது பொல் கோதுமை மாவு + கோதுமை ரவை...பூரணம் வைத்துச் செஞ்சுருக்கேன்..பூரணமாக திணை வரகு சாமை யில்....ஏதேனும் ஒன்று, அவல்.... இப்படி....மெல் மாவும் கோதுமை அல்லது மைதா. என்று....

    உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன்...மேல்மாவு +ரவை+...

    இனிய காலை....

    பதிலளிநீக்கு
  9. ப்லாக்லந்து அப்படியே எடுத்து சாப்பிடுற மாதிரி யாராவது கண்டுபிடிக்கக் கூடாதோ?

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம்... புதன் புதிர்..நல்லாருக்கே....ஹஹஹஹ

    .இதற்கு முன் கருத்தும் கீதா...டைப்பும் முன் கை பட்டு போயிருச்சு....மொபைல் வழி ..

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சொஜ்ஜி கேசரி என்ன வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
  12. ஹலோ இதை நான் சாப்பிட்டதே இல்லை......இதை படிச்சு யாரவது செஞ்சு கொடுத்தா அவங்க மேலே காக்கா எச்சம் போடாது... அப்படி செஞ்சு தாராமல் தானாக தின்பவர் மேல் காக்கா தினமும் அவர்கள் மேல் எச்சம் போடும்.......

    பதிலளிநீக்கு
  13. அப்பாத்துரை சார்.. சூஜி (ரவை) என்பதன் மருவு சொஜ்ஜி. கேசரியின் மெயின் இன்கிரிடியன்ட் ரவை. அதனால் சொஜ்ஜி என்பது கேசரியின் ஆகுபெயர். சொஜ்ஜி, கேசரி இரண்டும் ஒன்றுதான். (பெண் பார்க்க வருகிறார்கள், பஜ்ஜி சொஜ்ஜி ரெடிபண்ணணும்னு சொல்றதில்லையா? பஜ்ஜி கேசரியைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதுதான் எனக்குப் புரிந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      சொஜ்ஜி பஜ்ஜி என்ன காம்பினேசனோ.. எப்படி பிரபலமானதோ!

      நீக்கு
  14. @அப்பாதுரை, @நெ.த. அந்தக் காலங்களில் சிராத்தம் போது மட்டுமே கோதுமை ரவை போட்டு சொஜ்ஜியாகச் செய்து வந்ததாகவும், (சில வீடுகளில் கோதுமை அல்வா உண்டு,என் புக்ககத்தில் கோதுமை அல்வா) அதன் பின்னர் எப்போதோ யாரோ அதைச் சாதாரண நாட்களில் செய்தப்போ அஸ்கா சர்க்கரை என்னும் வெள்ளைச் சர்க்கரை அறிமுகம் ஆன புதுசு. அப்போது அதில் செய்து பார்த்ததாகவும் அது அப்படியே பிரபலமான ஒன்றாக ஆனதாகவும் சொல்வார்கள். என் அப்பா வெல்லம் போட்டு கோதுமை ரவையில் செய்வதை சொஜ்ஜி என்றும், சர்க்கரை போட்டு வெள்ளை ரவையில் செய்வதைக் கேசரி என்றும் சொல்லுவார். கேசரி என்னும் பெயரும் சாம்பாரைப் போல மராட்டியர்கள் ஆட்சியின் போது வந்ததாகவும் சொல்லுவார்கள். எப்படியோ நம்ம பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகி விட்டது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன? சாம்பார் தமிழ் உணவில்லையா? (அடுத்தது இட்லியும் நம்மது இல்லைனு ஆயிருமொ?)

      நீக்கு
    2. சொஜ்ஜி கேசரி வித்தியாச விளக்கம் பொருத்தமா தான் இருக்கு.

      நீக்கு
    3. அ.து சார் சொஜ்ஜிக்கு விளக்கம் சொல்லாம் னு பாத்தா நெத வும், கீ சா அக்காவும் பளிச் னு விளக்கிட்டாங்க!!!

      கேஸரி தமிழ்ப் பெயர் இல்லை என்றுதான் தெரிகிறது....ஆஞ்சுவின் அப்பா பெயர் கேஸரி இல்லையோ.. அதில் ச எந்த ச என்றெல்லாம் தெரியாது...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  15. செய்முறை விளக்கம் நன்று

    பதிலளிநீக்கு
  16. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  17. சூப்பர்க்கா! நானே இதை செய்யப்போறேன்.

    பதிலளிநீக்கு
  18. கேசரி வேற. சொஜ்ஜி வேற இல்லையோ. ஒண்ணைப் பொரிச்சு எடுக்கணும் இன்னோண்ணு கிண்டணும். நன்றி கீதாமா.ஶ்ரீராம். வெகு சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு இது வேறுன்றீங்களா அப்போ?

      (போகட்டும்.. அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம் சாப்பிட்டா போச்சு.. சமரசம் உலாவும் இடம் வயிறு தான் :-)

      நீக்கு
  19. துரை யைப் பார்ககிறேன் வெகு நாளைக்கப்புறம்.

    பதிலளிநீக்கு
  20. ஆமாம், அப்பாதுரை, இட்லியோட வயசு சுமார் 700 ஆண்டுகள் என்றே அறிகிறோம். அப்போ இதன் பெயர் இட்டவி என இருந்ததாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதேது.. ஆராய்ச்சி கனபயங்க்க்கரமா போகுது போலருக்கே? சட்னி கூட சட்டனினு இருந்துச்சா? :-)

      நீக்கு
  21. ஆனால் ஓர் கல்வெட்டு சாம்பாரை ஆதி காலத்தில் சாம்பரம் என அழைத்ததாகவும் இதைக் குறிக்கும் கல்வெட்டு தமிழ் நாட்டில் 1530 C.E இருப்பதாகவும் சொல்கிறார்கள். சாம்பார் என்ற சொல்லுக்கே பல காய்கள் சேர்ந்த தளிகை என்றே பொருளாம். ஆக உங்கள் மூலம் என் ஆராய்ச்சியும் தொடர்கிறது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வெட்டு எங்க கிடைச்சதாம்? வண்டலூர் பக்கத்துலயா? தாம்பரம்னு ஊர் பேரா இருக்கபோகுது.. லேசா அழிஞ்சிருக்கலாம்.. ஹிஹி

      நீக்கு
  22. சொஜ்ஜி, பஜ்ஜி காம்பினேஷன் கடந்த இருநூறு ஆண்டுகளில் தான் பிரபலமாக ஆகி இருக்கணும். :) அதிரசம், போளி போன்றவை தான் முன்னாடி இருந்ததாகத் தெரிய வருகிறது. கல்யாணங்களில் அப்போதெல்லாம் இட்லியை விட தோசை தான் அதிகம் போட்டிருக்காங்க. ஆராய்ச்சி பண்றோமாக்கும்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போளி சொன்னீங்களே அது..

      அதுலயும் என்னவோ இப்ப தேங்காய் போளினு பிடிச்சிட்டு இருக்காங்க.. கொடுமை என்னனு கேட்டீங்கன்னா.. ஆனந்த பவன்ல போளி சாப்பிடலாம்னு போனா 'கார போளி வேணுமா அதான் இருக்கு'ன்றாங்க! .. கார போளியா.. அடேய்னு வெளில வந்தேன்.

      நீக்கு
    2. காரபோளி ஆலுபரோட்டா போல!

      நீக்கு
  23. கல்வெட்டு எங்கே கிடைச்சதுனு தெரியலை! :) போளி தேங்காய் போளி திருநெல்வேலிப்பக்கம் ரொம்பவே பிரபலம் ஆச்சே! உங்களுக்குத் தெரியாதா? தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். கார போளி என்பது உ.கி.வைத்துச் செய்யப்படும் பரோட்டானு நினைக்கிறேன். இந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் காரங்க பிரபலப்படுத்தி இப்போ எல்லோரும் போடறாங்க போல! :)

    பதிலளிநீக்கு
  24. அப்பாத்துரை சார்.. நீங்க உங்க சந்தேகங்களைக் கேட்டுட்டீங்க. எனக்கொரு சந்தேகம். அந்தப் பல்கொட்டிப் பேய் தொடர்ல அந்தப் பல்கொட்டிப் பேய் கடைசில என்னதான் செய்தது? தொடரின் கடைசிப் பகுதி எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பாத்துரை //

      பல் இருப்பதால் த் போட்டு அழுத்தமா பெயர் வருகிறது. பல்கொட்டிப்பேய் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டியதுதான்!!!

      நீக்கு
    2. நெல்லை எனக்கு அப்பா துரை சாரின் பல் கொட்டிப் பேய் ரொம்பப் பிடிச்சுருச்சு...ஆனா அது பாதில தொங்குது...ஏன் னு கேட்கணும்னுஇருந்தேன் நீங்க கேட்டுட்டீங்க....
      கீதா

      நீக்கு
  25. இதனால் நான் அறிந்தது .....பஜ்ஜி சொஜ்ஜி பெயர் வந்த காரணத்தை :)

    பதிலளிநீக்கு
  26. கோதுமை ரவையில் நான் செய்தது இல்லை. மெல்லிய பேணிரவையில்தான் செய்திருக்கிறேன். செய்து பார்க்க வேண்டும். குறிப்பு நன்றாக இருக்கிறது. வெல்லம்தான் அதிகமோ என்று தோன்றியது. செய்யும் போது குறைத்துப் போட்டால் போகிறது. கோதுமைரவை தித்திப்பு அதிகம் இழுக்குமா இருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  27. சாப்பிட ஆசைதான் ஆனால்?

    பதிலளிநீக்கு
  28. போளி மாதிரி இருக்கு. பூரணம்தான் வேற

    பதிலளிநீக்கு
  29. கீதாரங்கன் - பரகேசரி என்பது சோழர் பட்டம். கேசரி-சிங்கம்.

    பதிலளிநீக்கு
  30. சொஜ்ஜி அப்பம்....புதுசா இருக்கு...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!