Sunday, April 11, 2010

அக்கா வந்தாள்.

"அம்மா, ஷோபா அக்கா மூணு நாள் லீவில வராளாம், ஹையா, ஹையா " என்று குதியாட்டம் போட்டுக் கொண்டு வந்தாள் அஞ்சு -- ஷோபாவின் ஆறு வயசு அருமைத் தங்கை.

"வரட்டும், வரட்டும். உனக்கு என்ன வேணும்னு போன்ல சொல்லு வாங்கிண்டு வருவா" என்று சொல்லிவிட்டு தான் என்ன கேட்கலாம் என்று யோசித்து கடைசியில் நல்ல காட்டன் புடவை என்று முடிவு செய்தாள் ஷோபாவின் அம்மா.

ஷோபா வந்தே விட்டாள். அஞ்சு கேட்ட பார்பி பொம்மை, அம்மாவுக்கு நல்ல கலரில் காட்டன் புடவை வந்து விட்டது. "கலர் பிடிச்சுருக்கா" என்று பத்து தடவை கேட்டாள் அம்மாவை. எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. அதற்குப் பின்புதான் கொஞ்சம் அதிருப்தி தலை காட்டியது.

" இந்த நேரத்தில் பிட்ஸா சாப்பிட்டா ஜோரா இருக்கும். அப்படியே பழகிடுச்சு இல்லையா " என்றாள் மாலை ஏழு மணிக்கு.

" கொஞ்ச நேரம் ஏ ஸி போட்டு ஆஃப் பண்ணிட்டு தூங்கினா நல்ல்ல்லா தூங்கலாம். அப்பிடியே வழக்கமாயிடுச்சு இல்லையா" என்று மூன்று நாளும் கமெண்ட்.

" போ அக்கா, சும்மா குத்தி குத்திக் காட்டாதே. இங்கே எல்லாம் நல்லாதான் இருக்கு" என்று அஞ்சு சிணுங்கினாள்.

" அப்பிடி இல்லைடி, நீ ஒரு தடவை மெட்ராஸ் வந்து ரெண்டு நாள் இருந்து பாரு, எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா! நான் பெர்மிஷன் வாங்கிட்டு சொல்றேன் . . ." என்ற் ஷோபாவை இடை மறித்து அம்மா சொன்னாள்:

" அடி ஷோபா, நீ பணக்கார வீட்டுல இருக்கிற பெரிய மனுஷி. அதுக்காக சும்மா சொல்லிச் சொல்லி இந்தக் குழந்தையை ஏன் ஏங்க வக்கறே! அப்பிடியெல்லாம் பர்மிஷன் குடுத்துடுவாங்களா மாமாவும் மாமியும்?. இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி!"

மூன்று நாள் லீவு விட்டு பள்ளி திறந்ததும் ஷோபா சென்னையில் வசதியான வீட்டுக் குழந்தைக்கு ஆயா உத்தியோகம் பார்க்க மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு பயணமானாள்.

13 comments:

Chitra said...

அருமையான ட்விஸ்ட். பாராட்டுக்கள்!

ராமலக்ஷ்மி said...

அக்கா வந்தாள்.

சரி.

திரும்பப் போனாள்.

எங்கே?

அங்கேதான் வைத்தீர்கள் சித்ரா சொன்னது போல எதிர்பாராமல் ஒரு திருப்பம்:)!

நன்று.

padma said...

சில பேருடைய காலத்தின் கோலம்
நல்லாஇருக்கு கஷ்டமாவும் இருக்கு

தமிழ் உதயம் said...

குமுதத்துக்கு - ஒரு பக்க கதைக்கு முயற்சி பண்ணி இருக்கலாம்.
நான் ஏற்றத்தாழ்வுக்கு வழி வகைக்கூடிய கதையோன்னு நினைச்சேன். மாறுதலான கதை.
பாராட்டுக்கள்!

வானம்பாடிகள் said...

ஆமாம் ஸ்ரீராம். நல்ல சிறுகதை. விகடன், குமுதத்துக்கு அனுப்பியிருக்கலாமே!

meenakshi said...

குடும்பத்திற்கு பண வசதி போதாத போது, வேலைக்கு சென்று சம்பாதித்து, யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆசையுடன் வாங்கி கொடுப்பதில் உள்ள திருப்தியே அலாதிதான். Lower middle class இல்லத்தில் நடப்பதை அப்படியே அழகாக சொல்லி இருக்கும் அருமையான சிறு கதை.

LK said...

//மூன்று நாள் லீவு விட்டு பள்ளி திறந்ததும் ஷோபா சென்னையில் வசதியான வீட்டுக் குழந்தைக்கு ஆயா உத்தியோகம் பார்க்க மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு பயணமானாள். //

arumai arumai

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் ஸ்ரீராம்... எதிர்பாராத திருப்பம்.. நல்ல குட்டி கதை. என்னால எல்லாம் இப்படி short & sweet ஆ எழுதவே வராது

Madhavan said...

Good story.... could not be guessed.


என்னுடைய 'டாஷ்போர்டு' சொல்லுது,
"அக்கா வந்தாள்,
எங்கள் Blog இல் kggouthaman ஆல் இடுகையிடப்பட்டது – 1 நாளுக்கு முன் "

அப்பாவி தங்கமணி said..." சூப்பர் ஸ்ரீராம்... எதிர்பாராத திருப்பம்." &
வானம்பாடிகள் said..."ஆமாம் ஸ்ரீராம். நல்ல சிறுகதை. விகடன், குமுதத்துக்கு அனுப்பியிருக்கலாமே! "

------ made me to think,
ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?

kggouthaman said...

Madhavan said...

ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?

அட ராமா !

Kasu Sobhana said...

Madhavan said...

ஸ்ரீராம்,kggouthaman.. இருவருமே ஒருவர்தானோ ?

ஹய்யா! நல்லா வேணும் உங்க ரெண்டு பேருக்கும்!

ஜீவி said...

கடைசியில் அந்த 'எங்கள்', 'அரசு'
கதையானா ஆகிப்போச்சு!

ரகசியம் காக்கவும். வெளிப்படும் வரை அதற்கு இருக்கும் சுவை, சொல்லப் போனால் கவர்ச்சி நாளுக்கு நாள் கூடிப் போகும்.

இது தான் அமரர் எஸ்.ஏ.பி.யின் ஃபார்முலா!

Anonymous said...

விரசம் அல்லது சரசம் தவிர்த்த எதையும் யார் எழுதினாலும் எழுதியவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையும் மீறி எழுதுபவர் பின்னணியில் மறைந்திருக்கிறார் என்றால் இரண்டு விஷயம். அவர் தன் கதை குறித்த சரியான விமர்சனத்தை எதிர்பார்க்கிறார் அல்லது தன் படைப்பு குறித்த பெருமிதம் எதுவும் அவருக்கு இல்லை இரண்டில் ஒன்றுதானா? பெயர் சொல்லாமல் எழுதிப் போட்டால் என்ன ஆகிறது என்று பார்க்கலாமே என்ற ஆர்வம் காரணமா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!