செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஜே கே 05 கடவுளும், உண்மையும்.

கடவுளை அவரைத் தேடுவதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? அறிய இயலாத ஒன்றை உங்களால் தேட முடியுமா? தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தேடப் படும் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால், நீங்கள் கண்டு பிடிப்பது உங்கள் மனம் உருவாக்கும் மாய உருவாகத்தான் இருக்கும். நீங்கள் எப்படியான ஒன்றைக் காண ஆசைப் படுகிறீர்களோ அதுவாக ஒரு தோற்றம்தான் உண்டாகும். ஆசையின் பயனாக ‘காணப்படும்’ வடிவம் உண்மைக்குத் தொடர்பில்லாத ஒன்று. (கெட்டுப் போக்கிய ஒன்றை மட்டுமே தேடுதல் சாத்தியம். எனவே) தேடுவது என்றாலே ஒன்றை இல்லாததாக்குவதாகும்.  


உண்மை சாஸ்வதமாக இருக்கும் இடம் என்று ஒன்று இல்லை. அதை அடைய ஒரு வழியோ வழிகாட்டி உபாயங்களோ இல்லை. உண்மை வெறும் சொல் தொகுப்பு அல்ல. உண்மை என்பது ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில், பிரத்யேகமான சூழலில், குறிப்பிட்ட நபர்களின் மத்தியில் காணப் படும் ஒன்றா? அது இங்கு இருக்கிறது, அங்கு இல்லை என்று சொல்லமுடியுமா? உண்மையைக் காட்ட ஏதோ ஒன்றைச் சரியான கையேடு என்றும் இன்னொன்று சரியானது அல்ல என்றும் சொல்ல முடியுமா? கையேடு என்று எந்த ஒன்றும் இருக்க முடியுமா? உண்மையைத் தேடிச் செல்லும்போது, அந்தத் தேடல் அறியாமையிலிருந்தே தொடங்கப் படுகிறது. எனவே பெறப் படுவதும் அறியாமையின் விளைவாகவே இருக்கும். நீங்கள் சத்தியத்தை தேடிப் பிடிக்க முடியாது. சத்தியம் பிரசன்னமாக, “தான்” என்பது முடியவேண்டும். 

உண்மை க்ஷணத்துக்கு க்ஷணம் பெறக் கூடிய ஒன்று.

உண்மையை சேர்த்து வைக்க முடியாது. சேர்த்து வைக்கப் படும் எதுவும் அழியக் கூடியது ஆகும். அது காலக் கிரமத்தில் குறைந்து மறைந்து போகும். உண்மை என்பது அழியக் கூடியதல்ல. ஏனென்றால் அது ஒவ்வொரு க்ஷணத்திலும் புதியதாகக் காணக் கிடைப்பதாகும். எல்லா எண்ணங்களிலும், எல்லா உறவுகளிலும், ஒவ்வொரு சொல்லிலும் சைகையிலும், ஒரு புன்சிரிப்பிலும், கண்ணீரிலும் அது இருக்கிறது. நீங்களும் நானும் இந்த உண்மையைக் கண்டுகொண்டு அதில் வாழ்ந்தால், அந்த வாழ்தலே அதைக் கண்டு கொள்வதாகும். அப்போது நாம் பிரசாரகர்களாக செயல்பட மாட்டோம். படைப்பாற்றல் மிக்க மனிதர்களாக இருப்போம். அப்பழுக்கில்லாத சீரிய மேம்பட்ட மனிதர்களாக அல்ல, படைப்பாற்றல் கொண்ட மனிதர்களாக இருப்போம். இது மிக மிக வித்தியாசமானதாகும்.    

6 கருத்துகள்:

 1. உண்மை பற்றிய விளக்கம் உண்மையாக இருக்கிறது. அருமையான பதிவு!
  தொடருங்கள்......

  பதிலளிநீக்கு
 2. தெளிவான விளக்கம். அழகான கருத்து.

  //நீங்களும் நானும் இந்த உண்மையைக் கண்டுகொண்டு அதில் வாழ்ந்தால், அந்த வாழ்தலே அதைக் கண்டு கொள்வதாகும்.//

  அருமை.

  பதிலளிநீக்கு
 3. கடவுளை தேடுவதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? , நீங்கள் கண்டு பிடிப்பது உங்கள் மனம் உருவாக்கும் மாய உருவாகத்தான் இருக்கும். நீங்கள் எப்படியான ஒன்றைக் காண ஆசைப் படுகிறீர்களோ அதுவாக ஒரு தோற்றம்தான் உண்டாகும்.
  இதுவரை உருவாக்கப் பட்ட எல்லா கடவுள்களின் வரலாறும் இவ்விதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. வாவ்...உங்கள என்னமோன்னு நெனச்சேன். அழகா சொல்லி இருக்கீங்க ஸ்ரீராம். "உண்மையை சேர்த்து வைக்க முடியாது"

  பதிலளிநீக்கு
 5. //தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தேடப் படும் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. //

  கூறிய விதம் அருமை.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. எளிமையான நடையில் மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!