வியாழன், 22 ஏப்ரல், 2010

சொல்பவர் யார்? யாருக்கு?


ஒரு முறை என்னை நானே பார்த்துக் கொண்டேன்.  எனக்குப் பழக்கமில்லாத உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றியது.  என்றாலும் மனதில் பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்ற உணர்வு இல்லவே இல்லை.  ஒரு மாதிரியான சம நிலை, நன்றாக இருந்தது.  இந்த இடத்துக்கு இதுதான் சரியான உடை போலும்!  

அக்கம் பக்கம் எல்லாம் என்னை மாதிரியே பலரும்.  ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியான மேக் அப்பில் (இந்த வார்த்தை இங்கு பொருத்தமில்லாதது போல தோன்றியது). எல்லாரிடமும் ஒரு அசாதாரண அமைதி.  சுகமாக ஒரு தென்றல் வீசுவது போலவும் சுகந்தம் பரவுவது போலவும் ஒரு உணர்ச்சி.  

நான் செத்துப் போனதும் என் உடம்பை (அது என்னது இல்லை மாதிரி இப்போது உணர்கிறேன்) மையமாக வைத்து பலரும் பல மாதிரியாக நினைத்தும், பேசியும், செயல்பட்டும் தங்களை வேண்டுமென்றேயும், தெரியாமலும் வெளிப்படுத்தியது நன்றாக நினைவுக்கு வருகிறது.  அதெல்லாம் ரொம்ப முக்கியமில்லை என்கிற எண்ணம் கூட உடன் வருகிறது.  

திடீரென்று சூழ் நிலையில் ஒரு குறிப்பிடத் தக்க ஆனால் இன்னதென்று சொல்ல முடியாத மாற்றம்.  அங்கிருக்கும் எல்லாரும் யாருடனோ பேசுவது போல நன்றாகத் தெரிகிறது.  ஆனால் சப்தம்?  கொஞ்சம் கூட இல்லை.  பாஷை கூட ஏதும் பயன் படுத்தப் பட வில்லை என்றே தொன்றுகிறது.  எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம்?  என்ன பேசுகிறார்கள்? எதைப் பற்றி? எதை எதிர்பார்த்து?  தெரிந்து கொண்ட மாதிரியும் தெரியாதது போலவும் ஒரே சமயத்தில் இருந்தது.   

திடீரென்று இங்கும், எனக்குள்ளும் என்று சொன்னால் சரியாக இல்லையோ, ஒரு புது அதிர்வு. 

"என்ன, எப்படி இருக்கிறது எல்லாம்?" என்ன அப்பா, என்ன அம்மா என்று குறிப்பிட்டுக் கேட்காதது பொருத்தமாக இருந்தது.  

"அடுத்து என்ன என்று பார்க்கத் தோன்றுகிறது" புத்திசாலித் தனமான பதில் இல்லைதான்.  ஆனாலும் உண்மையானது.  கேட்கப் படாத கேள்விக்கு சொல்லப் படாத பதில் சொல்லியாகிவிட்டது. 

"இந்த ஆளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்த பின் எனக்கு சொல்லி அனுப்பு-- வேண்டாம் வேண்டாம், செய்து முடி. அது முடிந்ததும் நானே வருகிறேன் "
புது அதிர்வு அங்கிருந்து அகன்றது தெரிந்தது.  அந்த நகர்தல் என்னிடமிருந்து மட்டும்தானா? அல்லது எல்லாருக்கும் விசாரிப்பு முடிந்து விட்டதா? அக்கம் பக்கம் பார்த்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.  

அதற்கப்புறம் நடந்ததைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்களா வேதனைப் படுவீர்களா, கவலையுறுவீர்களா எனக்குத் தெரியவில்லை. 

என்னை உட்கார வைத்து என்மீது புனித நீரை குடம் குடமாக, நீரும் இல்லாமல், குடமும் எடுக்காமல் ஊற்றினார்கள்.  அதன் பின் என்ன தெரியுமா? பஞ்சாமிர்தம் தலை மேல் எக்கச் சக்கமாக கொட்டப் பட்டு என் மீதெல்லாம் பிசு பிசு வென்று ஊறியவாறு வழிந்தது.  அதன் பின் நீர்.  தொடர்ந்து மஞ்சள் நீர், குங்கும கலவை, சந்தனம், தயிர் (புளித்த வாடை இல்லாத நல்ல தயிர் தான் என்றாலும் அது என் மேல் ஊறும் போது உண்டான உணர்ச்சி!!) ரொம்ப நேரம் பால். இப்படியாக எனக்கு அபிஷேகம். அதன் பிறகு ஒரு அழுக்குத் துண்டு கொண்டு என்னை துவட்டி புகையூட்டினார்கள்.  ஒரு ஜவந்திப் பூ மாலையை என் மேல் சார்த்தி பின்பு எனக்கு ஒரு அழுக்கு ஆடை உடுத்தினார்கள்.  

யார் சொன்னார்களோ, அந்தப் புது அதிர்வு மீண்டும் இங்கே! 

"ஒன்றுக்குப் பத்தாக தருவான் என்று சொல்லிச் சொல்லி செய்து கொண்டாடினாயே இப்போது திருப்தி ஆகியதா?" மீண்டும் கேட்கப் படாத, உணரப் பட்ட கேள்வி. 

"அறியாமல் செய்த பிழையைப் பெரியோர் பொறுப்பது கடனே" என்று உருவேற்றத் தொடங்கினேன்.  

"சரி சரி.  அலகிலா விளையாட்டுடையார் என்று சும்மா சும்மா சொன்னால் அதற்குண்டானதையும் அனுபவிக்கத் தானே வேண்டும்" என்ற ஃபீலிங் பதில் கிடைத்த மாதிரி இருந்தது.  

சரிதான். நாளை முதல் என்னைச் சுற்றி நின்று கொண்டு உன்னை மாதிரி உண்டா, உன் கண்ணென்ன காலென்ன மேனி எழிலென்ன வாக்கு சுத்தம் என்ன என்று தினம் (இங்கே அது எவ்வளவு நேரம்?) சொல்லிச் சொல்லி எனக்கு ஆயாசம் உண்டாக்குவார்களா என்று அரண்டு போகும்போதே என்னவோ செய்தது.  நான் சந்திக்க விரும்பும் பேர்வழிகள், அவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்களோ என்று சிறு அளவில் ஒரு கவலை தோன்றி மறைந்தது.  

அப்புறம் நான் இல்லாமல் போனேன்.  கவலைகள் கரைந்து போயின.  எனின் இதைச் சொல்பவர் யார்? யாருக்கு?    

7 கருத்துகள்:

  1. சில கேள்விகளுக்கு பதிலே கிடையாது...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கற்பனை. ஆனாலும் தேவையான, ஆராய வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  3. அப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. எனின் இதைச் சொல்பவர் யார்? யாருக்கு?

    ..... நல்லா இருக்குங்க.. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சிறுகதையா ஸ்ரீராம் ?
    ஒரு ஆன்மாவின்
    குமுறல் போல இருக்கு !

    பதிலளிநீக்கு
  5. //எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம்? என்ன பேசுகிறார்கள்? எதைப் பற்றி? எதை எதிர்பார்த்து? //
    ரசித்தேன் கல்யாண்ஜி!

    பதிலளிநீக்கு
  6. //அப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. //

    எழுதிய விதம் நல்லா இருக்கு..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. //அப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. எனின் இதைச் சொல்பவர் யார்? யாருக்கு?//

    ஆன்மாவின் குரல் பதிலை எதிர்பாராமல் கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!