வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சின்னஞ்சிறு கதை. விடியோ வினோதம்.

வெளி நாட்டிலிருக்கும் ராமுவால் திடீரென்று இந்தியா வர முடியவில்லை. விடியோவில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். யார் யாரையோ கேட்டுவிட்டு கடைசியில் என் சிபாரிசுக்கு வந்தார்கள் ராமுவின் வீட்டார். நெருங்கிய நண்பன் விசுவத்தை விடியோவுக்கு ஏற்பாடு செய்தேன்.

இரண்டே நாளில் விசுவம் போன் செய்தான். " தனியா ம்யூசிக் விடியோ மேலே ரெகார்ட் செய்யணுமான்னு தெரியலை " என்றான்.

" ம்யூசிக் போடாமல் அப்பிடியே விட்டால் நல்லா இருக்காது. பொருத்தமா தேடிப் போட்டுடு. "

" சுலபமாசொல்லிட்டே. இவங்க ஒத்தொத்தருக்கும் பிடிச்ச மாதிரி, கமெண்ட் வராத மாதிரி ம்யூசிக் பிடிச்சுப் போடறது அவ்வளவு சுலபம் இல்லை. பார்க்கறேன். "

நான்கே நாட்களில் ராமு வந்துவிட்டான். அவனோடு உட்கார்ந்து நானும் விடியோ பார்த்தேன்.

அமைதியான பின்னணி இசை எனக்கு நன்றாக இருப்பதாகப் பட்டது. " விசுவம் நல்லா செட் அப் பண்ணி சவுண்ட் குடுத்து எடுத்திருக்கான்." என்றேன்.

ராமுவின் அக்கா பதில் சொன்னாள்: " வாஸ்தவம். இல்லாத போனா நான் கதறக் கதற அழுதது ரெகார்ட் ஆயிருக்கும். அம்மா போன சோகத்துக்கு மேலே இந்த கண்றாவி வேறே சேந்திருக்கும்" என்றாள்.

காலமாகிவிட்ட ராமுவின் அம்மா வின் ஈமச் சடங்கு விடியோ ஓடிக் கொண்டே இருந்தது.

13 கருத்துகள்:

  1. காலமாகிவிட்ட ராமுவின் அம்மா வின் ஈமச் சடங்கு விடியோ ஓடிக் கொண்டே இருந்தது.

    கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க.

    ஈமச்சடங்கை வீடியோ எடுக்கிறாங்களா...
    இல்ல கதைக்காகவா...

    பதிலளிநீக்கு
  2. சில விஷயங்களைக் கதைக்காகக் கூட கற்பனை செய்ய நன்றாக இல்லை. ---------கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒன்று நடந்தது உண்மையாக எங்கள் ஊரிலும். பாரிசில் இருக்கும் மகனுக்கு அனுப்புவதற்காக .

    பதிலளிநீக்கு
  4. ஈமச்சடங்குகளை விடியோ எடுத்து ஒளிபரப்புகிறார்களே, நாமும் பார்த்திருக்கிறோமே? பைசா கொடுத்து லைன் கட்டி நின்று கூடப் பார்த்திருக்கிறோமே? சினிமா அரசியல் வாதிகள் மரணங்களை நினைத்துப் பாருங்கள்.

    ஈமச்சடங்குகளை விடியோ எடுப்பது சாதாரணமான நிகழ்ச்சி. நினைவுகளைத் தக்க வைக்க விடியோ ஒரு சாதனம். மரண நினைவைத் தக்க வைக்க வேண்டுமா - அது தான் கேள்வி. சாவு என்றதுமே நாம் எல்லோருமே சங்கடப்படுகிறோம்.

    சில வருடங்களுக்கு முன் பிறப்பை விடியோ எடுப்பது கூட 'அசிங்கமாகப்' பட்டது.

    பதிலளிநீக்கு
  5. நான் ஆறாவது படிக்கும்போது எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் இருந்த ஒரு வயதான மூதாட்டியின் கணவர் இறந்தபோது, இடுகாட்டிருக்கு அவரை எடுத்துச்செல்லும் அலங்காரத்துடன் கூடிய மலர் ஊர்தி கிளம்புவதற்கு முன் அந்த அம்மாவையும் அந்த மலர் ஊர்தியில் ஏற்றி, இறந்துபோன அவர் கணவரின் அருகில் நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார்கள். அவரும் பிணமான அவர் கணவரின் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, பின் மீண்டும் அழத் தொடங்கினார். அப்பொழுது அதை நேரில் பார்த்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்று இந்த பதிவை படிக்கும் பொழுது அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தால், இந்த கதை ஒன்றும் புதியதாகவோ, வியப்பாகவோ தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  6. என்னன்னு சொல்றது? இதுவே கலாச்சாரமாகி விடும். :-(

    பதிலளிநீக்கு
  7. இப்படியும் நடக்கிறது என்பது பத்மா சொல்வதில் தெரிகிறது.

    ஆனாலும் இந்த வினோதம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  8. அப்படி படம் எடுக்கும்போது அந்த ஆளு எழுந்து நடந்த வீடியோ எடுப்பவர் போட்டுவிட்டு ஓடிவிடுவார் ?

    பதிலளிநீக்கு
  9. இப்படியும் நடக்கிறது.
    நானும் பார்த்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  10. ஐயோ.... இதுவும் வீடியோலயா? கலிகாலம் தான் போங்க

    பதிலளிநீக்கு
  11. பள்ளியில் படிக்கும்போது தோழி தன் அண்ணனின் (அகால) மரணத்தின்போது எடுத்த ஃபோட்டோ ஆல்பம் என்று கொண்டு வந்தாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது, இதுக்கும் ஃபோட்டோ பிடிப்பீங்களான்னு கேட்டேன் அதிர்ச்சியுடன்!!

    சிலர் வீட்டில் இறந்தவரைச் சேரில் உட்காரவைத்து, மாலையுடம் படம் பிடித்து, வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள்.

    இப்ப வீடியோவேவா??

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!