புதன், 22 டிசம்பர், 2021

மார்கழி மாதம் கோயில்களுக்குச் சென்றதுண்டா?

 

கீதா சாம்பசிவம் :

1.இன்னிக்கு தனுர் மாத வழிபாடுகள் எல்லாக் கோயில்களிலும் ஆரம்பம் ஆகின்றது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் மார்கழி மாதம் மட்டும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன?

# தனுர் மாத காலை நேரங்கள் மிக விசேஷம் .  அந்த குளிர் , அந்த மனோபாவம்,:அந்த பக்தி உணர்வு இவை  தனித்தன்மை வாய்ந்தவை. மார்கழியின் சிறப்புகள் பற்றி சுருக்கமாக சொல்வது கடினம். " மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் "  என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுது என்று சொல்லுகிறார்கள். எனவே பிரார்த்தனைகள் கவனிக்கப் படலாம். அவை  பலிக்கும் நேரம் என்றும் மக்கள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

2. சின்ன வயசில் மார்கழி மாதம் கோயில்களுக்குச் சென்றதுண்டா?

# சின்ன வயதில் பெருமாள் கோயில் சென்று,  அதிகாலை வழிபாடு, அதன்பின்  அதிகாலை சுடச்சுட பொங்கல் பிரசாதம் - ரசித்தது உண்டு.

& நான்கு வயதிலிருந்து, பத்து வயது வரை, மார்கழி மாதத்தில், பெரும்பாலும் எல்லா நாட்களிலுமே, நானும் அண்ணனும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று, மார்கழி மாத காலைப் பொழுதுகளை பக்தியில் மூழ்கி, பரவசத்தில் ஆழ்ந்து, சுடச்சுட வெண்பொங்கல் இரு கைகளிலும் வாங்கிக்கொண்டு, உள்ளங்கைகள் சிவந்து, பொங்கல் உண்டு மகிழ்ந்ததுண்டு. 

3. பெரும்பாலும் உண்ணக்கூடிய பிரசாதங்கள் பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் பிள்ளையார் கோயில்களில் மட்டுமே ஏன் கொடுக்கிறார்கள்? எவ்வளவு பெரிய சிவன் கோயிலாக இருந்தாலும் அங்கே விபூதி, குங்குமத்தைத் தவிர்த்துப் பிரசாதம்னு ஏன் பக்தர்களுக்கு விநியோகிப்பதில்லை?

# ஒருவேளை, பக்தர்கள் மட்டுமே வரட்டும், ருசிக்காக  வருபவர்கள் வேண்டாம் என்று  சிவபக்தர்கள்  நினைத்து விட்டார்களோ என்னவோ !(சிவஸ்தலங்களிலும் பிரசாதம் வாங்கி ருசித்திருக்கிறேன்.)

& பெருமாள், ஆஞ்சநேயர், பிள்ளையார் எல்லோரும் ஆடை, அணிகலன், ஆபரணங்களோடு ஜ்வலிக்கிறார்கள். ஆகவே அவர்களை தரிசிக்க வருபவர்களுக்கும் விதவிதமான உண்ணக்கூடிய பிரசாதங்கள் கிடைக்கின்றன. 

புலித் தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை மட்டும் அணிந்தவரை தரிசிக்க வருபவர்களுக்கு சிம்பிள் ஆக வி / கு. அவ்வளவுதான்.  

நெல்லைத்தமிழன் : 

1. நாள்கள் என்றுதான் இலக்கணப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்று இருக்கும்போது, தமிழ் தெரிந்தவர்கள் என்று பேசுபவர்கள் ஏன் நாட்கள் என்று உபயோகிக்கின்றனர்?    

# நாட்கள் என்பதை ஓசை நயம்,  பேச்சு வசதி காரணமாக தமிழறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். விவரம் இணையத்தில் காண்க.

2.  வயது நிறைய ஆகும்போது 70+, உணவில் ஆர்வம் குறைந்துவிடுமா?   

# முதுமையின் ( வயது அவரவர்க்கு ஏற்ப) அடையாளங்களில் ஒன்று ஆர்வம் குறைதல் - உணவு மட்டுமல்ல, எல்லாவற்றிலும்.

& எனக்கு இதுவரை குறையவில்லை. குறைந்தால் சொல்கிறேன். 

3.  பாதி சொல்வோம் மீதி என்ன என்பதுபோல, பாதிக்கதை சொல்லி, மீதிக்கதையை வாசகர்களை எழுதச் சொல்லக்கூடாது?  அல்லது க்ளைமாக்ஸ் சொல்லி முதல் பகுதி. இதில் ஒரேமாதிரி எழுதியிருந்தால், முதலில் உங்களை வந்து சேர்ந்ததைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இன்னும் சில நாட்களின் பதிவுகளை மாற்றலாம் என்று நினைக்கிறேன். இதுபற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?  

# இப்போது சிந்திப்போம்.

& பா சொ - மீ எ - சிலவற்றை நம்ம ஏரியா (இப்போ மின்நிலா) வலைப்பக்கங்களில் முயற்சி செய்தோம். பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கதை எழுதுபவர்கள் ஒரு spark ஐ எடுத்து அதை விரிவாக்கம் செய்வார்கள். அதில் அவர்கள் ஒரு பகுதியை எழுதி, மற்றவர்களிடம் முடிக்கச் சொன்னால், அவர் எதிர் பார்க்கும் வகையில் கதை செல்லாது. 

இது பற்றி மற்ற வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கருத்து பதிக்கவும். 

4.  ஒரு ingredient கொடுத்துவிட்டு, அதை வைத்துச் செய்யும் தி.பதிவுகளை வரவேற்கலாமே. இதுபோல செவ்வாய் பகுதியும். எபியில் மாற்றங்கள் தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

# எதுவும் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

ஜெயக்குமார் சந்திரசேகர் :

அச்சில் வரும் பேப்பர் செய்தி தாள்கள் மற்றும் பத்திரிகைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்கும்?

& ஏற்கெனவே கரோனா / ஊரடங்கு சமயத்தில், பல செய்தி தாள்களும், பத்திரிகைகளும் நலிவடைந்து மெலிந்தன. இணையம் மேலும், மேலும் வலுவடையும் காலத்தில் - அச்சு பத்திரிகைகள் இன்னும் சுருங்கி காணாமல் போகும். என்னுடைய அனுமானத்தில் இந்த நிலை ஏற்பட, இன்னும்  பத்தாண்டுகள் ஆகலாம். 

அக்கார அடிசிலுக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்? என்னுடைய அம்மா கூடாரை வள்ளியில் சீனி/அஸ்கா சேர்த்து செய்வதை அக்கார அடிசில் என்றும் வெல்லம் போட்டு செய்வதை சர்க்கரைப் பொங்கல் என்றும் பெயர் சொல்வார்கள். 

# கூடாரவள்ளி இல்லை கூடாரவல்லி.  அதுவும் முற்றிலும் சரியல்ல.  அக்கார அடிசில் சர்க்கரைப் பொங்கல் விஷயம் நெல்லைக் தமிழர் விளக்கலாம்.

& மற்ற கிச்சன் கில்லாடிகளும் விளக்கலாம்! 

நவக்கிரகங்களுள்ள வாகனங்கள் எவை? சூரியன்: ஏழு குதிரை பூட்டிய தேர், சனி: காகம். மற்றவை? 

& சந்திரன் : வெள்ளை யானை. 

செவ்வாய் : ஆட்டுக்கிடா 

புதன் : குதிரை 

குரு : மீனம். 

சுக்கிரன் : முதலை. 

ராகு : நீலச் சிம்மம் 

கேது : கழுகு. 

LPG CNG வேறுபாடு என்ன? LPG உருளையில் வருகிறது. CNG பைப்பில் அல்லது டேங்கர்களில் விநியோகிக்கப்படுகிறது. ஏன்? 

LPG அதிக அழுத்தத்தில், திரவ நிலை எய்தும். CNG எந்த அழுத்தத்திலும், வாயு நிலையில் மட்டுமே இருக்கும். இரண்டுமே உருளையில் வருகின்றன. CNG உருளைகள் அளவில் பெரியவை. LPG உருளைகள் சிறியவை. LPG வீட்டு உபயோகங்களுக்கு ஏற்றது.  CNG, காற்றை விட எடை குறைவு.    LPG, காற்றை விட எடை அதிகம். CNG உபயோகிக்கப்படும் வண்டிகளில், அது உருளைகளில்தான் அடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப் படுகின்றது. இப்போ LPG கூட பைப்பில் வீடு தேடி வருகின்றதே. 

சூரியன் 7 குதிரை பூட்டிய ஒற்றை சக்கரத் தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகள் VIBGYOR என்ற நிறக்கதிர்களே மற்றும் சூரிய ஒளி என்பது இவையே என்று முன்பே நமக்கு தெரியும் என்று கொள்ளலாமோ?

லாஜிக் இடிக்காதவரை எதையும் எப்படியும் கொள்ளலாம்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

எல்லா தெய்வங்களுக்கும் விதம் விதமான பட்சணங்களை படைக்கும் நாம், சிவனுக்கு மட்டும் வெகு எளிமையாக களி, கூட்டு, வெல்லம் போட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பயத்தம் கஞ்சி என்று முடித்துக் கொள்வது ஏன்?

# இதற்கு இரண்டு விதமான பதில் சொல்ல‌‌லாம். வசதி அதிகம் இல்லாதவரும் திருப்தியாக ஆராதித்த நிறைவை அடைய சிவன் திருவுளம் கொண்டு இருக்கிறார் என்பது ஒன்று.

இரண்டாவது சில தத்துவத்தை மானிடர் உணர்ந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த பண்டங்கள் படைக்கப்பட்டு நியதி ஆயிற்று என்பது.

கதை, கட்டுரைகளில் படித்த இடங்களை பார்க்க ஆசைப்பட்டதுண்டா? அப்படி சென்ற பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

# ஆசைப்பட்டதில்லை. செல்ல நேர்ந்த போது கதை நினைவுக்கு வந்ததுண்டு. பெரிதாக உணர்ச்சி வசமாக வில்லை.

& நான் சிறிய வயதிலேயே  சில இடங்களுக்குப் போய்ப் பார்த்து வந்துவிட்டு, பிறகுதான் அவை சம்பந்தமான கதைகள், கட்டுரைகள் படித்தேன். சென்றபொழுது உணராமல், படிக்கும்போது நினைவுபடுத்திக்கொண்டு சந்தோஷமடைந்தேன். 

கீதா ரெங்கன் :

நாம் நம் வாழ்க்கையில் நடப்பதற்கு நம் வினைகளைக் காரணமாகச்சொல்வதுண்டு இல்லையா? நமக்கும் மிஞ்சிய சக்தி, அலல்து விதி, கர்மா இவைதான் நம் வாழ்க்கையை வகுக்கிறது என்றும் சொல்வதுண்டு. அப்படி இருக்க நாமே நம் வாழ்க்கையை (நியூமராலஜி படி பெயரை மாற்றிக்கொள்வதின மூலம்) அமைத்துக் கொள்ள முடியுமா? மாற்றிக் கொள்ள முடியுமா? அப்படி என்றால் நம்மை மீறிய சக்தி என்பது அடிபட்டுப் போகிறது இல்லையா?

ஆம். என்ன விதிக்கப் பட்டதோ அதுவே நடக்கும் என்பதை ஏற்பதானால், இப்படி ஸ்பெல்லிங் மாற்றம், தாயத்து, அர்ச்சனை, பரிகார பூஜைகள் இவற்றை நாடுவதும் "விதிக்கப் பட்டது" என்று கொள்ள வேண்டியதுதான்.

= = = = =


இவைகள், இவர்களின் கருத்துகள். 

இது குறித்து உங்கள் கருத்துகள் என்ன? எழுதுங்க :

1) ஜெயக்குமார் சந்திரசேகர் : 

எ பி யில் புதன் அல்லது ஞாயிறு அன்று "பாட்டி வைத்தியம்/பரம்பரை வைத்தியம்/சித்த வைத்தியம்/வீட்டு வைத்தியம்" என்று சிறு குறிப்புகள் வாசகர் பங்களிப்போடு வெளியிடலாம் என்று தோன்றுகிறது. 

( # # வைத்தியம், ஜோசியம், யோகா மனோதத்துவம் இவை யாவும் துறை வல்லுநர்கள் மட்டுமே பொறுப்பேற்றுச் செய்யக் கூடியவை.)

& வாசகர்கள் கருத்து என்ன? 

2) நெல்லைத்தமிழன் :

ஒருவேளை தி.கிழமை கீரிப்பாறை, ஞாயிறு  கதம்பம், வியாழன் நல்ல செய்திகள், செவ்வாய் கேள்வி பதில், புதன் திரையிசைப்பாடல்கள் மற்றும் கிசுகிசுக்கள் என்று மாற்றினால், பதிவுக்கு வருபவர்கள் அதிகமாவார்களா இல்லை குறையுமா?

& குறையும். (வாசகர்கள் கருத்து என்ன?)

= = = = =

மின்நிலா வார இதழ் 83 சுட்டி <<<<<  

= = = = 

படம் பார்த்துக் கருத்து எழுதுங்க :

1) 

2) 

3) 

= = = =


120 கருத்துகள்:

 1. காலை வணக்கம் எல்லோருக்கும்

  பா சொ மீ எ - & பதில் ஏற்கக் கூடியதே. ஏனென்றால் ஒவ்வொருவரின் எழுத்து, எண்ணங்கள் வித்தியாசமானவை. அது ஒன்றிப் போய் எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டம். தவிர ஒருவர் எழுதி அடுத்த பகுதி அல்லது க்ளைமேக்ஸ் மற்றவர் எழுத அது அதில் பங்கு பெறும் ஒருவருக்குச் சரிப்படவில்லை என்றால் கருத்து வேறுபாடு எழலாம்.

  இப்போது ஏணிமலையே எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவர் எழுதுவதாகவும் கூடக் கருத்துகளில் வந்தது. அது சரியோ இல்லையோ...அதை விடுங்கள்

  ஒரு வேளை அதில் நான் பங்கு பெற்றிருந்தால் (நான் கண்டிப்பாக இல்லை!!!அதில்) முதல் பகுதி இரண்டாம் பகுதிக்குப் பிறகு வருபவை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஒரு வேளை 1, 2 நான் எழுதியிருந்தால் கண்டிப்பாக அடுத்த பகுதியை எழுதியவரோடு எனக்குக் கருத்து வேறுபாடு வரலாம். நான் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு வேளை நான் பிரபல!!!!!!! எழுத்தாளராக இருந்தால் கண்டிப்பாக வந்திருக்கலாம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் திறந்த கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. ஒங்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. சுவையாகவே இருக்கும் என நினைக்கிறேன். மூன்று வித்தியாசமான க்ளைமேக்ஸ் மட்டும் பதிவிடலாம்.

   வெந்நீர் சுட வைப்பதைப் பற்றி செய்முறை எழுதினாலே அதில் வேரியேஷன்ஸ், திப்பிசம் எனப் பலவித கருத்துகள் சுவையூட்டத்தான் செய்யும்.

   கீர, கருத்துகள் எழுதும் நேரத்தில் இரண்டு கதைகளை முடித்திருக்கலாமே... டிராப்டில் உள்ளதை

   நீக்கு
  3. கஞ்சியை தயார் செய்தோமா.. கால்நீட்டு உட்கார்ந்து எபி தளத்துக்கு வந்தோமா.. ப்ரார்த்தனைகள் பின்னூட்டம் போட்டுவிட்டு, பிறகு பல பின்னூட்டங்களில் அடித்துத் துவைத்தோமா என அக்கடான்னு இருந்தவரை ஓடவிட்டு அலைக்கழிக்க குகு வந்ததால் எபி வருகை குறைந்துவிட்டதோ?

   நீக்கு
  4. கீர, கருத்துகள் எழுதும் நேரத்தில் இரண்டு கதைகளை முடித்திருக்கலாமே... டிராப்டில் உள்ளதை//

   நெல்லை அது கடினமான காரியம்....

   அதற்கான மனம் வேண்டும். அது இல்லை இப்போது. கருத்து எழுதுவதற்கும் கதை எழுதுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு! கருத்து ஜாலியாக இங்கு மனதை ரிலாக்ஸ் செய்யவே. கதை அப்படி எழுத முடியாது. அதில் மனம் ஊன்றினால்தான் ஓரளவேனும் எழுத இயலும்.

   கீதா

   நீக்கு
  5. நெல்லை இங்க வந்து எட்டிப் பார்த்து எங்களை வம்புக்கிழுக்காம, ஒழுங்கா உங்க ஆன்மீக பயணத்தைத் தொடங்குக!!! மலைநாட்டு பாண்டி நாட்டுத் திருப்பத்க்கு போனோமா அதில் லயித்தோமான்னு!! இருக்கணுமாக்கும்!!!!

   மனம் இருக்கும் நிலையில் உங்க கருத்தை எல்லாம் பார்த்து நான் சிரிச்சு வம்பு பண்ணிட்டுப் போறதுக்குத்தான்....வீட்டு வேலைகள், நான் செய்யும் வேலை வேற இப்ப மீண்டும் வ்ருது. அது வந்தா வலைப்பக்கம் வருவது ரொம்பக் கஷ்டம்..நேற்றுதான் கணவருக்கு உதவிய ஒரு PPt வேலை முடிஞ்சுச்சு...கொஞ்சம் இங்க வந்தா உங்களுக்குப் பொறுக்காதே !!!!ஹாஹாஹாஹா

   கீதாக்கா குகு வோடு எஞ்சாய் செய்யாம பின்ன? அது ஊருக்குப் போய்விட்டால் கீதாக்கா அப்புறம் வீடியோலதான் பார்க்க முடியும்.!!

   உங்களுக்கு அடுத்த 10 நாள்?? மூச்!! ஒன்லி நாம ஜபம்!! ஓகே?? ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
  6. பாதிக்கதை இங்கே!மீதிக்கதை எங்கே! என்னும் தலைப்பில் பிரபல வாரப்பத்திரிகைகள் கூட முயன்றுவிட்டன. வலை உலகில் திரு ஜிஎம்பி சார் இப்படி ஒரு போட்டி வைச்சு எழுதச் சொல்லிட்டு கணேஷ்பாலாவை அதற்கு நடுவராகப் போட்டார். கணேஷ் பாலா யாரை முதலிடத்துக்குத் தேர்வு செய்தார்னு தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்! என்னையே தான். அதில் அவர் என்னை மிகவும் பாராட்டியும் இருந்தார். திரு ஜிஎம்பி சார் தன் பங்கிற்குப் பரிசாக அவர் எழுதிய ஒரு புத்தகம்+இன்னொன்று+அவரே தன் கைகளால் தஞ்சாவூர்ப் பாணியில் வரைந்து ஃப்ரேம் போட்டு மாட்டக்கூடியது போன்ற குழந்தை கண்ணன் படம். அதை அழகாகப் பாக்கிங் செய்து உடையாமல் கூரியரில் அனுப்பி வைத்திருந்தார். கண்ணன் படம் எங்க வீட்டு விருந்தாளிகள் அறையை அலங்கரிக்கிறது. அது வந்த பின்னரே குஞ்சுலுவும் பிறந்தது! :))))))

   நீக்கு
  7. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி. பரிசுக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 2. ஏழோ அல்லது ஒன்பதோ எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு நாவல்/நடுங்கதை/குறுநாவல் எழுதியிருந்தார்கள். பிரபல எழுத்தாளர்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு எழுத்து நடை. அதை வாசித்த போது வித்தியாசம் ரொம்பவே தெரிந்தது. அது வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை. ரொம்ப வருடங்கள் முன்னர்.

  ஆனால் ரொம்பப் பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. ஒரு முறை வாசிக்கலாம் என்ன என்று தெரிந்து கொள்ள அல்லாமல் ஈர்க்குமா என்றால் என்னை ஈர்க்கவில்லை. கடைசியில் சினிமா பாணியில் லாஜிக் இல்லாமல் சென்றது. எல்லா எழுத்தாளர்களும் அதை ஏற்றுக் கொண்டார்களா எனும் விவரம் எல்லாம் தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்ல விடுபட்டுவிட்டது....ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போதும் அந்த அத்தியாயத்தை எழுதும் எழுத்தாளர் முந்தைய அத்தியாயத்தின் எழுத்தாளர் பற்றி நல்ல விதமாகவே சொல்லிவிட்டுத் தன் அத்தியாயத்தை எழுதியிருந்தார். அதில் பங்குபெற்ற எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான் சொல்லியிருந்தார்கள். அப்படிப் பங்கு பெற்றது நிஜமாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம். தங்களின் ஈகோவைத் தள்ளி வைத்து...

   கீதா

   நீக்கு
  2. நல்ல கருத்துரைகள். நன்றி.

   நீக்கு
  3. கதை எழுதறதில் என்ன ஈகோ?

   எனக்கு கீதா ரங்கனைப் பிடிக்காது என்றால், என்முறை வரும்போது, அவர் நல்லவராக்க் காட்டியவரை பொல்லாதவராகவும் பொல்லாதவரை நல்லவராகவும் காட்டி புளியைக் கரைத்தால் போதுமே

   நீக்கு
  4. நெல்லை நான் சொன்ன ஈகோ இங்கில்லை. எனக்குத் தெரிந்து சில பிரபலங்களிடம் இருக்கிறது.!!!!!! அதைத்தான் சொன்னேன்.

   கீதா

   நீக்கு
  5. எனக்கு கீதா ரங்கனைப் பிடிக்காது என்றால், என்முறை வரும்போது, அவர் நல்லவராக்க் காட்டியவரை பொல்லாதவராகவும் பொல்லாதவரை நல்லவராகவும் காட்டி புளியைக் கரைத்தால் போதுமே//

   ஹாஹாஹாஹா....க்தைல தானே போனா போகுது!!

   கீதா

   நீக்கு
  6. தி/கீதா சொன்ன நாவல் என்னிடம் இருக்கு. ஆனந்த விகடனில் வந்தது. சுமார் பத்துப் பதினைந்து எழுத்தாளர்கள் எழுதினது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு திருப்பத்தில் கொண்டு நிறுத்துவார்கள். எனக்கென்னமோ அது வெற்றி பெற்றது என்றே நினைவு.

   நீக்கு
 3. பதில்களுக்கு நன்றி. முக்கியமாக LPG CNG விளக்கம்.

  நவக்கிரக வாகனங்களில் குருவிற்கு மீனம் என்று போட்டிருக்கிறீர்கள். மீனம் என்பது மீனா? மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே செல்ல முடியும். இந்திரன் வாகனமும் வெள்ளை ஆனை தான். கழுகு பெரிய திருவடி அல்லவா?

  //.  பாதி சொல்வோம் மீதி என்ன என்பதுபோல, பாதிக்கதை சொல்லி, மீதிக்கதையை வாசகர்களை எழுதச் சொல்லக்கூடாது?//துரை செல்வராஜூ அவர்கள் ஏற்கனவே  செய்து விட்டார். அதுவும்  கவிதையாக.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சர்க்கரைப் பொங்கல் - சாதம், பிறகு அதில் வெல்லம் (இந்தக்காலத்தில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு சுடவைத்துக் கரைத்து வடிகட்டி அந்த வெல்ல ஜலம் சேர்ப்பர்), கொதிக்கவைத்து கிளரி நெய்யில் வறுத்த முந்திரி, கடைசியில் பச்சைக் கற்பூரம் சேர்த்தால் சர்க்கரைப் பொங்கல். பெண்ணைப் போல இன்னும் சிலது சேர்த்து அழகுபடுத்தலாம். (சந்தனம் மிஞ்சினால்... என்ற பழமொழிக்கேற்ப பெரும் பணக்கார்ர்கள் குங்கும்ப்பூ போன்றவற்றைச் சேர்ப்பர். எளிமை விரும்பிகள் ப.கற்பூரம் சேர்க்க மாட்டார்கள். நல்ல ச.பொங்கலை கொதிக்கும்போது நிறைய நெய் சேர்த்து அலங்காரம் செய்வது வழக்கம். கரண்டில எடுத்து இலைல போட்டால் பொத் என விழணும்.

   அக்கார வடிசல்...சாதம் பாலில் வேகவைத்து வெல்லம் சேர்த்து நன்கு குழைய கிளறி, மற்ற அலங்காரங்கள் செய்து, பாயசமாக இல்லாமல், ச.பொங்கல்போல் இல்லாமல் நெகிழ தயார் செய்வது.

   தவம் செய்யும் முனிவரிடம் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் அழகு வித்யாசங்களை அடுக்கச் சொல்வதுபோல, நேற்றுடன் ஒரு மாதமாக இனிப்பை, பொரித்த வஸ்துக்களைச் சாப்பிடாமல் விரதம் இருப்பவனை, ச.பொங்கல், அ.வடிசில் வித்யாசம் எழுதச் சொல்லி கவனம் கலைக்க முற்பட்டநவீன இந்திரனான கேஜிஜி சாரை என்ன செய்யலாம்?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா !! :))))) விளக்கம் அளித்ததற்கு நன்றி.

   நீக்கு
  3. இரண்டிற்கும் பாசிப்பருப்பு வேண்டாமா? கூடாதா?

   Jayakumar

   நீக்கு
  4. பாரம்பர்ய செய்முறையில் பாசிப்பருப்பு கிடையாது

   நீக்கு
  5. நெல்லையின் செய்முறைக்குறிப்புச் சரியாகவே இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு நாங்க பாசிப்பருப்புக் கட்டாயமாய்ச் சேர்ப்போம். அக்கார அடிசிலில் இல்லை. அதோடு அஸ்கா சர்க்கரை என்னும் வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பண்ணியதன் பெயர் சர்க்கரைப் பொங்கலும் இல்லை. வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பண்ணியது அநேகமாக நிவேதனம் பண்ணுவதும் இல்லை. கல்கண்டு பாத் கூடப் பெரிய கட்டிக் கல்கண்டுக்கட்டிகளை உடைத்துச் சேர்த்துத் தான் பண்ணுவார்கள். அது தான் பாலில் வெந்த குழைவான அரிசியும் சேர்ந்து நல்ல ருசியைக் கொடுக்கும். அஸ்கா சேர்த்தால் என்னதான் இருந்தாலும் ரசாயன வாடை வரத்தான் செய்யும். (இது என் தனிப்பட்ட கருத்து)

   நீக்கு
 4. நானும் பானுக்காவும் சேர்ந்து எழுதியது எபி யில் வந்த போது இருவர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் என்றே நினைத்ததாக நினைவு. வேகம் தெரியும் அதாவது டக் டக் என்று நறுக்குத் தெரித்தார் போலச் சுருக்கமான எழுத்து நடையும் கொஞ்சம் நிதாமான நீன்ன்ன்ன்ன்ன்ண்ட எழுத்து நடையும், கூடவே நான் எழுத எடுத்துக் கொள்லும் நேரம் அதிகமோ அதிகம் என்றால் ரொம்பவே அதிகம்.. அதுவும் சேர்ந்து பயணித்த கதை. எங்களுக்குள் சேர்ந்து எழுதுவதில் பிரச்சனை இல்லாததால் நன்றாகச் சென்றது. இருவருமே நிறைய டிஸ்கச் செஞ்சு எழுதினோம்.

  அதன் பின்னும் கூட அக்கா கேட்கத்தான் செய்கிறார். எனக்குத் தயக்கம் இருக்கிறதுதான் ஏனென்றால்...

  ஏற்கனவே நான் எழுத எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிக அதிகம் இப்போது சுத்தமாக நேரப் பற்றாக் குறை, மற்றும் மனம் ஆழ்ந்து செய்ய முடியாத நிலையால் அதில் லயித்து எழுத முடியுமா என்ற சந்தேகமும் சேர்ந்த தயக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் ஒரு கூட்டு முயற்சி அட்வென்ச்சர் செய்யலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. சரியான blue print தயார் செய்த பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்புகிறோம். கால் கெடு எதுவும் இல்லாமல், நிதானமாக எழுதலாம்.

   நீக்கு
  2. ஆஹா சூப்பர் கௌ அண்ணா நல்ல விஷயம்...

   கீதா

   நீக்கு
  3. One blue print ready. Some of you may get it soon through whatsapp or email.

   நீக்கு
  4. மின்ஞ்சல் ஓகே கௌ அண்ணா.

   கீதா

   நீக்கு
 5. கௌ அண்ணா நம்ம ஏரியாவில் நீங்கள் கரு கொடுத்து எழுதிய கதைகள் நிஜமாகவே நல்ல ஐடியா என்று தோன்றியது ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் வரவேற்பு இல்லைதான்..அதில் பானுக்கா, வல்லிம்மாவும் பங்கு பெற்றார்கள். நெல்லை, நீங்கள் தொடங்கிய கதையை வேறு வடிவில் பானுக்காவும், நானும் கூட எழுதியிருந்த நினைவு..வரவேற்பு இல்லை என்பதை விட பெண்கள் எங்களுக்கு நேரப் பற்றாக்குறை, டக்கென்று அதில் மனம் ஈடு படுவது எல்லாம் கொஞ்சம் கஷ்டம். நெல்லை எழுதுவார் ஆனால் அவருக்கும் நேரப்பற்றாக்குறை. அதுவும் இப்போது அவர் ரொம்பவே பிஸி.

  நீங்கள் முன்பு கொடுத்த கருக்களில் நான் எழுத முயற்சி செய்து கதைகள் பாதியிலேயே இருக்கிறது. மீண்டும் அக்கருவிற்குள் பயணித்தால்தான் எழுத இயலும். அதற்கான சூழல் வேண்டும்.

  பல பெண்கள் எழுத்துலகில் எப்படி டக் டக்கென்று எழுதுகிறார்கள் புத்தகங்கள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை நான் மிகவும் வியந்து பார்த்துப் பாராட்டுகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை, நீங்கள் தொடங்கிய கதையை வேறு வடிவில் பானுக்காவும், நானும் கூட எழுதியிருந்த நினைவு..//

   நெல்லையும் எழுதியிருந்தார் என்று வந்திருக்க வேண்டும்

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   பதிவை குறித்தும், அது அல்லாததுமாக உங்கள் எண்ணங்களை நன்றாக அலசி பகிர்ந்துள்ளீர்கள். முக்கால்வாசி உங்கள் மனதில் ஓடுபவையே (எண்ணங்கள்) என் மனதிலும் ஓடுகிறது.

   / பல பெண்கள் எழுத்துலகில் எப்படி டக் டக்கென்று எழுதுகிறார்கள் புத்தகங்கள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை நான் மிகவும் வியந்து பார்த்துப் பாராட்டுகிறேன். /

   உண்மையான சிந்தனை. இந்த நேரப்பற்றாக்குறை நமக்கு மட்டுந்தானா என எண்ணி நான் வருத்தப்பட்டதும்/வருத்தப்படுவதும் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் தரும் உங்கள் பாராட்டுகளுடன் என்னுடையதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. கமலாக்கா ஹைஃபைவ்!!! ஹப்பா மீக்கு கூட கமக்கால்லா!!

   மிக்க நன்றி!!!

   கீதா

   நீக்கு
 6. மார்கழியில் கோயிலுக்குப் போன அனுபவங்கள் நிறையவே உண்டு.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 9. //ஒருவேளை தி.கிழமை கீரிப்பாறை, ஞாயிறு  கதம்பம், வியாழன் நல்ல செய்திகள், செவ்வாய் கேள்வி பதில், புதன் திரையிசைப்பாடல்கள் மற்றும் கிசுகிசுக்கள் என்று மாற்றினால்,//

  எ பி க்கு வருபவர்கள் எப்போதும் போல் வருவார்கள்.  இது ஒரு சிறிய வட்டம் தான்.  இந்த தளம் ஒரு "திண்ணை" அல்லது "டீ கடை பெஞ்ச்"  போன்றது. புதிய வாசகர்கள் வேண்டுமானால பதிவு சுப்ஜெக்ட்கள் கூட்ட வேண்ட வேண்டும்

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. யோசிப்போம்.

   நீக்கு
  2. எ.பிக்கு இப்போதே நிறைய ரசிகர்கள் இருக்காங்களே! இப்படிச் செல்வதே சுவாரசியமாகவும் உள்ளது. இன்னும் ஏன் மாற்றணும்?

   நீக்கு
 10. கதைகளுக்கான செவ்வாய்க்கிழமைக்கு தயவு செய்து வேட்டு வைத்து விடாதீர்கள்..

  இன்றைய சூழ்நிலையில் மாதம் ஒரு நாளாக எனக்கொரு ஆறுதல்!..

  பதிலளிநீக்கு
 11. வைத்தியம் யோகா ஜோசியம் ..துறை வல்லுநர்கள்.. - வாட்சப்ல பார்த்தீங்கன்னா ஆளாளுக்கு இஷ்டப்படி எழுதுவாங்களே.. மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரை, வநிற்றுவலிக்கு வல்லாரைத் துவையல் கண் பார்வைக்கு கருவேப்பிலை என்று...

  ஏன்.. தி பதிவிலும் எதையோ எழுதிவிட்டு, இது அதுக்கு நல்லது இதுக்கு நல்லது என போகிற போக்கில் அடிச்சுவிடுவாங்களே... (தயிர் சாதம் சாப்பிட்டால் தலைவலி வராது, அப்புறம் பத்து கிராம் கேரட் போட்டு, நெய், ஜீனி ஏகப்பட்டது போட்டு சாப்பிடுபவர்களுக்கு டயபடீஸ் வரும் எனத் தெரிந்தும், கேரட் அல்வா கண்ணுக்கு நல்லது என எழுதுபவர்களும் உண்டே ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ அதெல்லாம் உண்மை இல்லையா!! ஆண்டவா இது என்ன சோதனை!!

   நீக்கு
  2. நாட்டு/அதாவது பாட்டி வைத்தியம் அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் தெரிந்திருக்கும். மற்றபடி யோகாசனம் பத்தி நானும் மழலைகள் குழுமத்தில் எழுதிட்டு அதை மின்னூலாகவும் போட்டிருக்கேன்.ஆனால் அது ஆசனங்கள் பற்றி மட்டுமே. மற்றபடி யோகம் பத்தி எழுதுவதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். அதுவும் பொதுவெளியில்! சிலவற்றை விபரமாகச் சொல்ல முடியாது. சில குரு மூலமே அனுகிரஹம் ஆகும்படி இருக்கும். அப்போது ஏற்படும் உணர்வுகளை வெளியே சொல்ல முடியாது. இப்படிப் பல! ஜோசியமெல்லாம் நன்கு படித்து அறிந்தவர்கள் சொல்லலாம். உதாரணமாக நம் பானுமதி வெங்கடேஸ்வரன் தாராளமாக ஜோசியம், எண் கணிதம்/ஜோசியத்தில் எது பற்றி வேண்டுமானாலும் அலசிக்காய வைத்துத் துவைக்கலாம்.

   நீக்கு
  3. பா வெ ஒரு சகல கலா வல்லபைதான் !!

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. @ நெல்லை..

  // வைத்தியம் யோகா ஜோசியம் ..துறை வல்லுநர்கள்.. - வாட்சப்ல பார்த்தீங்கன்னா ஆளாளுக்கு இஷ்டப்படி எழுதுவாங்களே.. //

  எனக்கு வாட்சப்பில் இம்மாதிரியான தொந்தரவுகள் எல்லாம் கிடையாது..

  ஆனாலும் இவற்றைப் பற்றி பிலாக்கணம் வைத்து தவறழ்ன தருபவர்களைப் பிடிப்பதில்லை..

  பதிலளிநீக்கு
 14. பதார்த்த குண சிந்தாமணி என்றொரு பழைய புத்தகம் ..
  யாருக்கும் நினைவில் இருக்கின்றதா?..

  மீண்டும் கிடைக்குமா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவில் இருக்கிறது. எங்களுக்கும் ஆகார நியம்ம் உண்டு.

   ஆனால் எதையும் நாரும் (அனேகமாக) தொடருவதில்லை.

   நம் நிலத்துக்குச் சம்பந்தமான வாழைப்பழம், மாம்பழம் பலாப்பழம் உடலுக்கு நல்லதில்லையாம். ஓட்ஸ், ஆப்பிள், கிவிப்பழம் போன்றவை நல்லதாம். இந்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு என்று விடிவு பிறக்குமோ

   நீக்கு
  2. பார்க்கிறேன். கிடைத்தால் அனுப்புகிறேன்.

   நீக்கு
  3. பதார்த்த குண சிந்தாமணி - புத்தகம் கிடைத்தது. 484 MB அளவு உள்ளதால், மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. வாட்ஸ் அப் மூலம் அனுப்ப இயலும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  4. ஸ்ரீ ஆகார நியமம் என்று ஸ்ரீ வேதாந்த தேசிகர் அழகான தமிழில் பாடல்களாக எழுதியவை இருக்கிறது.

   ஆனால் பின்பற்றுவதில்லை!!!!

   பதார்த்த குண சிந்தாமணி கேட்டதுண்டு.

   நெல்லை யார் சொன்னாங்க வாழைப்பழம், மாம்பழம் பலாப்பழம் நல்லதில்லை என்று??!!

   சுகர் என்று சொல்லப்பட்டாலும் பழங்களை நான் தவிர்ப்பதில்லை

   கீதா

   நீக்கு
  5. கொஞ்ச நாளைக்கு என்னோட சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் இந்த மாதிரி அந்தக்காலத்து சமையல் குறிப்புகள் பற்றி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். யாருக்கானும் நினைவில் இருக்கானு தெரியலை. பிரியாணி செய்முறை எல்லாம் 100/150 வருஷங்கள் முன்னரே சொல்லி இருக்காங்க.

   நீக்கு
  6. அதே போல் வெளிநாடுகளின் குதிரை உணவான ஓட்ஸ் தான் இங்கே கஞ்சி வடிவில் சாப்பிடப்படுகிறது. இப்போல்லாம் இதிலும் மாற்றங்கள் செய்து இட்லி, தோசை, பொங்கல், உப்புமாப் போல் செய்து விடுகிறார்கள்.

   நீக்கு
 15. //நம்மை மீறிய சக்தி அடிபட்டுப் போகிறதா?// - நல்ல சிந்தனை. விதிக்கப்பட்டவைகள் கர்ம வினையால் வருபவை. பரிகாரங்கள் ப்ரார்த்தனைகள் மூலம் அவற்றை (அவற்றில் பலவற்றை) ஒத்திப்போட மட்டும்தான் முடியும்.

  சத்யசாய் பாபா, நடக்கும் சக்தி இழந்த வெளிநாட்டு பக்தருக்கு, தன்னால் தீர்க்க முடியும், ஆனால் இந்தக் கர்ம வினை அடுத்த ஜென்மத்தில் வரும், இப்போது நல்ல நிலையில் இருப்பதால் இந்தப் பிறவியிலேயே கழித்துவிடு என்று சொன்னதைப் படித்திருக்கிறோமே

  மற்றபடி வேறு தாயத்து பிசினெசில் (நாடி பரிகாரம்) ஏமாற்றுதான் உண்டு

  பதிலளிநீக்கு
 16. //சென்றபொழுது எப்படி உணர்ந்தீர்கள்//- இதற்கு நம் மனநிலை அவசியம். லண்டனில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, ராஜராஜன் பெரியகோவிலுக்குச் சென்றபோது, ஒவ்வொரு தடவை ஶ்ரீரங்கம் செல்லும்போதும் உணர்ந்திருக்கிறேன்.

  வேதாரணிய் குழகர் கோவிலும் பரவசப்பட வைத்தது (கல்கி நாவலால்)

  பதிலளிநீக்கு
 17. @ நெல்லை..

  // என்னாது.... மாதம் ஒரு நாள் தான் எபிக்கு வர்றாரா?.. //

  மாதம் ஒருநாள் என்றால் - மாதத்திற்கு ஒன்று என, எனது படைப்பு வெளியாகும் நாள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க. விளக்கத்திற்கு நன்றி.

   நீக்கு
  2. பதார்த்த குண சிந்தாமணி - புத்தகம் கிடைத்தது. 484 MB அளவு உள்ளதால், மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. வாட்ஸ் அப் மூலம் அனுப்ப இயலும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8luxy#book1/3

   நீக்கு
  4. அதுகூடத் தெரியாமல் இத்தனை வருடங்கள் எபிக்கு வரமுடியுமா துரை சார். நீங்க எழுதினதை வைத்து நான் எழுதினேன்.

   அது சரி... உங்கள் அடுத்த கதை எப்போது?

   நீக்கு
  5. 2022 ல் முதல் கதை அவர் எழுதியதுதான்.

   நீக்கு
 18. முன்னொரு காலத்தில் தினத்தந்தி குழுமத்திலிருந்து நாணி என்றொரு வாரப் பத்திரிகை வெளியானது..

  குரங்கு குசலா, அன்புள்ள அல்லி - இதெல்லாம் அதில் பிரசித்தம்..

  அன்றைய திரைத் தாரகைகளை (!) ஒரு பக்கமாக நிற்க வைத்து போட்டோ எடுத்து 1/4 என்ற அளவில் அட்டைப்படமாகப் போட்டிருப்பார்கள்..

  பக்கத்து வீட்டில் வாங்குவார்கள்.. குடும்பப் பத்திரிக்கை என்ற பெயருடன் வரும் அதனுள் கறுப்பு வெள்ளையில் நடிகைகளின் படங்களைப் பார்ப்பதற்குள் உடம்பு வியர்த்து விடும்.. ஜெ... யின் ஓவியங்கள் ரொம்பவும் தூகலாக இருக்கும்..

  அதிலே வரும் சமையல் குறிப்புகள் எல்லாமே இப்படித்தான் முடியும்..

  இதுவே கத்தரிக்காய் காரக் குழம்பு என்பது.. சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்..

  ( அதில் உப்பு போட மறந்ததையும் கடைசியில் அடி பிடித்துத் தீய்ந்து போனதையும் சொல்லாமல் விட்டிருப்பார்கள்..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது "ராணி" இல்லையோ? "நாணி" இல்லைனு நினைக்கிறேன். ராணி/குமுதம் போன்றவை படித்தால் அப்போல்லாம் வீட்டில் இருக்க முடியாது. வாங்கிக் கிழித்துப் போடுவார்கள். ஆனால் பின்னாட்களில் அதில் பிரபலமான எழுத்தாளர்களெல்லாம் எழுத ஆரம்பித்தனர். இது எழுபதுகளில் தொடங்கின நினைவு. அதன் பின்னர் தினத்தந்திக் குழுமமே "ராணி முத்து" என்னும் பெயரில் பிரபலமான எழுத்தாளர்களின் நாவலைச் சுருக்கிப் போட்டு விற்பனைக்குக் கொண்டு வந்து வெற்றி பெற்றது. இதைப் பார்த்துக் குமுதமும் "மாலைமதி" என்னும் பெயரில் பிரபல எழுத்தாளர்களைப் புதிதாக எழுதச் சொல்லி விற்று லாபம் பார்க்க நினைத்தது. அவ்வளவாக வெற்றி பெறவில்லை. சுஜாதாவின் விபரீதக் கோட்பாடுகள் இப்படி மாலைமதியில் வந்தது தான். இன்னொன்று ஶ்ரீதேவி நடித்துப் படமாகவும் வந்தது. ஶ்ரீதேவிக்கு அம்மன் அருள் வரும். இரட்டை வேடம். ஒண்ணு கிறிஸ்தவப் பெண். இன்னொருத்தி உம்மாச்சி

   நீக்கு
  2. ஆம், நீங்கள் சொல்வது சரிதான்.

   நீக்கு
 19. சமீபத்தில் கவனித்தேன்..

  கீச்.. கீச்.. என கத்திக் கொண்டு ஒரு பதிவு..

  பாதாம் பருப்பு, முந்திரி, வால் நட், சாரைப் பருப்பு, கசகசா, பேரீச்சை எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு அதனுடன் ஜீனியையும் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அதை உருட்டி வளரும் பிள்ளைகளுக்குத் தினமும்ப்கொடுங்கள் என்று!..

  அடக் கடவுளே!..
  இப்படியான உருண்டையைத் தினமும் தின்றால் வளரும் பிள்ளைகள் நெறி கெட்டுப் போவார்கள் என்பது தெரியாமல் ஒரு ஞான சூனியப் பதிவு..

  நல்லவேளை.. ஆரம்பத்திலேயே கீச் கீச்.. சொல்லிவிட்டது - நட் எடுக்கப் பட்ட பேரீச்சை என்று..

  இல்லாவிட்டால் மிக்ஸியின் ' நட் ' தெறித்துப் போயிருக்கும்...

  பதிலளிநீக்கு
 20. அக்கார அடிசிலுக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்? என்னுடைய அம்மா கூடாரை வள்ளியில் சீனி/அஸ்கா சேர்த்து செய்வதை அக்கார அடிசில் என்றும் வெல்லம் போட்டு செய்வதை சர்க்கரைப் பொங்கல் என்றும் பெயர் சொல்வார்கள். //

  நெல்லை சொன்னதைப் பார்த்துவிட்டேன் அதனால் நான் விளக்கம் சொல்லவில்லை!!

  ஆனா பாவம் நெல்லை இப்ப ஸ்வீட் க்குத் தடா அவருக்கு!!! அது சரி இப்ப கோயில்களுக்குப் போகும் போது மலைநாடுகளில் பிரசாதம் கிடைக்க வழியில்லை. ஆனால் பாண்டி நாட்டுக் கோயில்களில் கிடைக்குமே...நெல்லை உங்களுக்கு ஒரு உசுபல்..திருக்குறுங்குடி கோயில் சர்க்கரைப் பொங்கல் செமையா இருக்கும்.அது ஒரு தனி மணம்!! அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது போல் புளியோதரையும்மிக மிக நன்றாக இருக்கும். நீங்கள் செல்லும் போது கிடைக்குமா என்று தெரியவில்லை. நேரம் சொல்கிறேன். அங்கு இப்போது மார்கழி என்பதால் சாற்றுமுறை ஆனதும் கிடைக்க வாய்ப்புண்டு.

  ஆனா இப்ப பிரசாதம் பற்றித் தெரியவில்லை எப்படி என்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. கூடலழகர் கோவில், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் - அழகர் தோசை
   திருப்புல்லாணி - பாயசம்
   திருவனந்தபுரம் - அரவணைப்பாயசம்-டப்பாவில்
   குருவாயூர் - பால் பாயசம்
   ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

   இப்போல்லாம் கேரளா கோவில்களில் டப்பாவில் அடைத்த அரவணைப்பாயசம், குருவாயூர் போன்ற சில கோவில்களில் 11 மணிக்கு பால் பாயசம்.

   ஹா ஹா. கேரளா கோவில்கள்ல பிரசாதம் கிடையாதாமே.. சில கோவில்களில் நான் உன்னியப்பம் கூடப் பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
  3. இலவச பிரசாதம் என்பது கேரளத்தில் சில கோயில்களில் மட்டும் தான். காரணம் நிலச் சீர்திருத்த சட்டத்தின் படி கோயில் நிலங்கள் முழுதும் குடியானவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனால் வருமானம் குறைந்தது.  மற்றபடி வழிபாடு மற்றும்  பிரசாத ஸ்டால்  மூலமாக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும்.

   அன்னதானம் பத்மனாப சாமி கோயிலிலும் குருவாயூர் கோயிலிலும் உண்டு.
    
   பத்மநாப சாமிக்கு நெய்வேத்தியம் தங்க கொட்டங்கச்சியில் உப்பு  மாங்காய்.Jayakumar

   நீக்கு
  4. திருப்புல்லாணிப் பாயசம் உண்மையிலேயே சுவை மிகுந்ததாக இருக்கும். சுடச்சுட மடப்பள்ளியில் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வந்து நம் பாத்திரங்களில் ஊற்றிக் கொடுப்பார்கள். அவங்களும் தம்பளர்கள் வைத்துக் கொண்டும் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

   நீக்கு
 21. கதை, கட்டுரைகளில் படித்த இடங்களை பார்க்க ஆசைப்பட்டதுண்டா? அப்படி சென்ற பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?//

  ரொம்பவே ஆசைப்பட்டதுண்டு. ஆசைப்படுவதுண்டு. வாசித்ததை விட சொல்லக் கேட்டுச் சென்ற இடங்கள் உண்டு. இயற்கைக் காட்சிகள், அருவிகள் போன்றவற்றில் லயித்துவிடுவேன். தாஜ்மஹால். கட்டிடக் கலை ஈர்த்தது ஆனால் கூடவே எங்கோ அதைப் பற்றி அதைக் கட்டியவர்களின் துயரம் பற்றி வாசித்த ஒரு விஷயமும் நினைவில் வந்தது எனவே உடனே சப்பென்றாகிவிட்டது.

  இதோ தினமும் கணினி திறக்கும் போது படங்கள் விரிகின்றன ஒவ்வொரு தேசத்தின் இயற்கையும் சரித்திரப் பின்னணி உடைய படங்களும் வந்து ஏக்கத்தைக் கொடுக்கின்றன. வாசித்துத் தெரிந்துகொள்வதோடு மகனிடமும் சொல்லி வைப்பேன்!!!! எப்ப உனக்கு வசதிப்படுகிறதோ அப்போது என்னைக் கூட்டுக் கொண்டு சுற்றிக் காட்டு என்று. அம்மா கண்டிப்பா நாமும் செல்வோம் அதற்கும் காலம் வரும் என்பான்!!

  சொல்லியாவது பார்த்துக்க் கொள்வோமே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். உண்மைதான். சுற்றிப் பார்க்கும் வயதும், வசதியும், ஆர்வமும் இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்துவிடுதல் நல்லது.

   நீக்கு
  2. நான் ஒரு இடத்திற்குப் போனால், அங்கு போட்டோ எடுக்கவோ மற்றவரை எடுக்கச் சொல்லவோ வெட்கப்படமாட்டேன். பலர் போட்டோ எடுக்கும்போது கொஞ்சம் சலித்துக்கொள்வார்கள், ஆனால் பின்பு நான் எடுத்த போட்டோக்களைப் பார்த்து, தங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள். நான் சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட சட் என்று படமெடுத்துவிடுவேன். (என் பெண் முதன் முதலில் கேக் செய்து அதனை அழகுபடுத்திக்கொண்டிருக்கும்போது கற்பனா ஸ்வரம் பாடிக்கொண்டிருந்தாள். மெல்லிய கதவு இடைவெளியில் கேமராவை வைத்து ரெகார்ட் பண்ணினேன். இதுபோல பல நிகழ்வுகளை. பிற்காலத்தில் அவை மிகவும் ரசிக்கத்தக்கவையாக மாறிவிடும்)

   என்றைக்காவது ஞாயிறு பட உலா முடிவடைந்தால் (யாரோ அது எ.பியின் கன்னித் தீவு என்று சொல்வது கேட்கிறது) அப்போது நான் எடுத்த படங்களை (ஆசிரியர் சென்சார் பண்ணாமல் வெளியிடுவேன் என்றால்-பசுமாட்டை பால் கறக்கும் மெஷினாக மடுவை மட்டும் 60 லிட்டர் பால் கொள்ளளவு இருக்கும்படி வளர்க்கிறார்கள். அத்தகைய ஒரு படத்தை கேஜிஜி சார், ஆபாசம், கிராபிக்ஸ் என்று சொல்லிட்டார், ஷேர் பண்ணுகிறேன்)

   நீக்கு
 22. ஆம். என்ன விதிக்கப் பட்டதோ அதுவே நடக்கும் என்பதை ஏற்பதானால், இப்படி ஸ்பெல்லிங் மாற்றம், தாயத்து, அர்ச்சனை, பரிகார பூஜைகள் இவற்றை நாடுவதும் "விதிக்கப் பட்டது" என்று கொள்ள வேண்டியதுதான்.//

  மிக்க நன்றி என் கேள்விக்கு அழகான பதில் கொடுத்தமைக்கு.

  //ஸ்பெல்லிங் மாற்றம், தாயத்து, அர்ச்சனை, பரிகார பூஜைகள் இவற்றை நாடுவதும் "விதிக்கப் பட்டது" என்று கொள்ள வேண்டியதுதான்.//

  அட!!!!!!!!!!!!!!!!!!!!

  என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்பதை ஏற்பதற்கும் மனம் வேண்டும் இல்லையேல் மனம் அல்லல்படும். கேள்விகள் மனதைத் துளைக்கும். எனக்குப் பல சமயங்களில் துளைக்கத்தான் செய்கிறது!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப்பரிகாரங்கள், பெயர் மாற்றங்கள் ஆகியவற்றினால் மனதில் எங்கோ ஒரு மூலையில் உள்ள அச்சம் கொஞ்சமானும் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வளவே இதன் பலன். ஆகவே நான் நேரடியாகவே உம்மாச்சியிடம் எதையும் தாங்கும் இதயத்தைக் கேட்டு விடுவேன்.

   நீக்கு
 23. @ கௌதமன்..

  // 2022 ல் முதல் கதை அவர் எழுதியதுதான்..//

  கடந்த சில வருடங்களாக எனக்கு அந்த பெருமையை மகிழ்ச்சியைத் தந்து வருகின்ற்து..

  நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 24. அன்பின் ஸ்ரீராம் அவர்களை எங்கே காணோம்!..

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 26. கேள்விகளும், பதில்களும் அருமை.
  பின்னூட்டங்களில் வந்த கருத்துக்கள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  மார்கழி என்றால் கோயில் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அம்மா, தம்பி தங்ககைகள், அக்கம் பக்கத்து வீட்டு பெண்களுடன் ஓட்டமும் நடையுமாக அதிகாலைபூஜைக்கு போய் சாமியை தரிசனம் செய்து வந்த நாடகளை மறக்கவே முடியாது. பிரசாதம் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.

  அதிகாலையில் குளியல், கோலம் போடுவது விளக்கு வைப்பது, வானொலியில் (தொலைக்காட்சியில் இப்போது) திருப்பாவை, தெருவெம்பாவை, திருபள்ளி எழுச்சி பாடல்களை கேட்டல் , இசை கச்சேரிகள்கேட்டல் என்று மார்கழி மிக அருமையான மாதம்.

  பதிலளிநீக்கு
 27. என் அம்மா நடக்கும் வேகத்திற்கு நாங்கள் எல்லாம் ஓட்டமும், நடையுமாகத்தான் உடன் போக முடியும். வீட்டில் அனைவருக்கும் பள்ளிக்கு செல்ல உணவு தயார் செய்து, காலை வீட்டில் சாமி கும்பிட்டு(பிரசாதம் செய்து) கோயிலில் பூஜையும் பார்க்க வேண்டுமே ! அதுதான் வேக நடை.

  பதிலளிநீக்கு
 28. கேள்வி-பதில்கள் சுவாரசியம். தொடர்ந்து எங்கள் பிளாக் சிறப்பாக இருக்க பல விஷயங்களை செய்யத்தூண்டும் கேள்விகள் நன்று. தொடரட்டும் உங்கள் அதிரடி பதிவுகள். எங்கள் பிளாக் ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. நல்லதொரு பதில்களுக்கு நன்றி. ஆவுடையார் கோயிலில் ஈசனுக்குப் புழுங்கலரிசிச்சோறும், பாகல்காய்க் குழம்பும் பிரசாதம். சிதம்பரத்தில் களியுடன் கூடக் கொடுக்கும் குழம்பில் கீரை வகைகளே இடம் பெறும் என்கிறார்கள். களி கிடைச்சிருக்கு. ஆனால் குழம்பு கிடைச்சதில்லை. எனக்குத் தெரிந்து பொதுவாக ஈசன் கோயில்களில் பிரசாதங்கள் என வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை எனக் கொடுத்துப் பார்த்தது இல்லை. இதற்கு மாற்றாகத் திருநள்ளாறில் (சப்த விடங்கத் தலங்களில் ஒன்று) கொடுப்பதாகக் கேள்விப் பட்டோம். அங்கே மூலவர் சிவன் தானே! ஆனால் சமீப காலங்களில் தானே சனைச்வரனுக்கு யோகம். கடைசியில் பார்த்தால் பிரசாத ஸ்டாலில் டென்டர் விட்டு அந்த ஒப்பந்ததாரர் சமைத்துக் கொண்டு வந்துப் பிரசாதம் என்னும் பெயரில் ப்ளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார். சூரியனார் கோயிலில் ஒரு குறிப்பிட்ட நாளில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதம் கிடைக்கும் என்றார்கள். இப்படிக் குறிப்பாகத் தான் சொல்ல முடியும். மற்றபடிப் பிரசாதங்கள் மடப்பள்ளியில் சொல்லி வைத்துத் தான் வாங்கலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் அபிஷேஹம் பண்ணினால் அங்கே கட்டாயம் கல்கண்டுப் பொங்கல் புளியஞ்சாதம், தயிர்சாதம் பெரிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் அல்லது வாளிகளில் போட்டுக் கொடுப்பார்கள். எங்களுக்கு ஒருதரம் அப்படி வந்த சாப்பாட்டைத் தீர்க்க முடியாமல் கஷ்டப்பட்டோம். :))))

  பதிலளிநீக்கு
 30. வயது நிறைய ஆனால் உணவில் ஆர்வம் குறையும் என்பது என்னளவில் ஏற்கமுடியாதது. கடைசி வரை என் மாமனார் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர் வரை இரண்டு மாம்பழங்கள் வரை ஒவ்வொரு வேளை உணவோடும் சாப்பிட்டார். பக்ஷணங்கள் எல்லாம் அவர் சாப்பிடுவதைப் பார்த்தால் அசந்து போயிடுவீங்க. சொன்னால் நம்பவும் மாட்டீங்க. கல்யாணச் சீருக்கு வைப்பதை விட அதிகமாக எங்க வீட்டில் தீபாவளி பக்ஷணம், கோகுலாஷ்டமி பக்ஷணம்னு பண்ணுவோம். அதைத் தவிரவும் வீட்டில் மத்தியான வேளையில் சாப்பிடவென்றே அடிக்கடி பண்ணி வைப்பார்கள். கார்த்திகைப் பொரி கூடப் படிக்கணக்கில் தான் வாங்கிப் பொரி உருண்டை உருட்டணும். திருவாதிரைக்களி, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் படிக்கணக்கில் தான். அந்தப் பெரிய வெண்கலப்பானை என்னோடது இன்னமும் வைச்சிருக்கேன். தூக்கக் கூட முடியாது. உயரமான பலகையின் மேல் ஏறி நின்று கொண்டு தான் கிளறுவேன். மாமியார் உயரம் என்பதால் அவருக்கு எட்டும். அவரும் கடைசிவரைப் பூரணக்கொழுக்கட்டை பண்ணிக்கொண்டும்/சாப்பிட்டுக்கொண்டும், அடை எல்லாம் 2,3 எனச் சாப்பிட்டுக்கொண்டும் காஃபிக்கெல்லாம் கரண்டியால் சர்க்கரை போட்டுக்கொண்டும் வாழ்ந்தார். ஆகவே வயசுக்கும் உணவு உண்ணும் ஆர்வத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியலை. என் தாத்தா (அப்பாவின் அப்பா) இறக்கும் வரை முழுப்பலாப்பழத்தைத் தன் கைகளால் உரித்துத் தேனில் தோய்த்துச் சுளைகளைச் சாப்பிடுவார் என என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சரியமான தகவல்கள்!! மாமனார், மாமியார் எவ்வளவு வயது வரை வாழ்ந்தார்கள்?

   நீக்கு
  2. மாமனார் 78 வயது வரையிலும் மாமியார் 93 வயது வரையிலும் வாழ்ந்தார்கள். மாமியார் இப்போ 2016 டிசம்பரில் தான் இறந்தார். இருவரும் இறந்ததே மருத்துவத்தில் மருத்துவர்கள் ஏற்படுத்திய சில வேண்டாத சிகிச்சைகளாலேயே! :( அதிலும் மாமியார் கடைசிவரை காஃபி குடிக்கணும், ரசம் சாதம் சாப்பிடணும்னு சொல்லிக் கொண்டிருந்தார். மருத்துவமனைக்குப் போகும் வரை தினம் காலை வாசல் தெளித்து (மார்கழி மாதம் என்பதால்) கோலம் போட்டுக் கொண்டிருந்தார். வைகுண்ட ஏகாதசிக்கு விரதம்!!!!!!!!!!!!!!!!!! கேசரி பண்ணிச் சாப்பிட்டிருக்கார்.

   நீக்கு
 31. மார்கழி என்றால் சிறுவயது கோவில் வழிபாடுதான் நினைவில் வரும் அம்மம்மா நான்கு மணிக்கு எழுந்து வெந்நீர் வைத்து சிறுவர்கள் எங்கள் எல்லோரையும் குளிக்க வார்த்து தானும் குளித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வார். வழிபாடும் பிரசாதங்கள் என மகிழ்ச்சியாக இருந்த காலம் அது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!