வியாழன், 30 நவம்பர், 2023

83 உலகக்கோப்பை - கடவுளும் கொலைகாரனானான்.

 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த சமயம்.  

வீட்டில் தொலைகாட்சி எல்லாம் கிடையாது.  வானொலிதான்.  ஆனால் தொலைக்காட்சியில் பார்த்த வேறு சில கிரிக்கெட் மேட்ச்கள் உண்டு.  நண்பர்கள் இல்லத்திற்கு சென்று பார்த்தவை, ஒருமுறை மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலில் பார்த்தது என்று எல்லாம் பதினைந்து மூன்றுதான்!

ரோத்மேன்ஸ் கப், சேம்பியன்ஸ் டிராபி என்று அப்போது நடந்த சிலபல ஆட்டங்களை கருப்பு வெள்ளை தொலைக்காட்சியிலும், வண்ணத் தொலைக்காட்சியிலும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்திருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் மேட்ச் என்றால் ABC என்ற தொலைகாட்சி நிறுவனம் ஒளிபரப்பும்.  அது அற்புத க்ளியராக இருக்கும்.

அது யார் வீடு என்றே தெரியாது.  அப்போதெல்லாம் தொலைகாட்சி வைத்திருந்த அன்பர்கள் பந்தா செய்யாமல் புதியவர்களைக் கூட ஆட்டம் பார்க்க அனுமதித்திருக்கிறார்கள்.  புதியவர்கள் என்றால் எப்படி என்றால், தொலைக்காட்சி வைத்திருப்பவரின் நண்பர், அந்த நண்பரின் நண்பர், அந்த நண்பரின் நண்பரின் நண்பர்...  இப்படி ஒரு கூட்டமே தொலைகாட்சி முன் ஆட்டம் பார்க்கும்.

அப்படி எந்த வீட்டில் பார்த்தோமோ அவர்களை மறுபடி வேறு எங்காவது வெளியில் பார்த்தால் பெரிதாக நட்பு பாராட்டி ஒட்டிக்கொள்வதெல்லாம் இல்லை.  அதை அவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பதும் தெரியும்.  பெரும்பாலும் முகம் கூட நினைவிருக்காது.  நமக்கு ஓசி கிரிக்கெட்தான் முக்கியம் பாஸ்!  நானும் கிடைத்தால் பார்ப்பேன் தவிர, கிரிக்கெட் பைத்தியமெல்லாம் பிடித்து அலையும் ரகமல்ல.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கியபின் எங்கள் வீட்டிலும் இப்படி யாரோ எல்லாம் வந்து மேட்ச் பார்த்ததுண்டு.  அதுவும் எங்கள் வீடு சாலையை ஒட்டி இருந்த வீடு.  அவர்களால் இந்தக் கெடுதலும் ஆண்டவன் புண்ணியத்தில் வந்ததில்லை.  ஒரே ஒரு சிரமம் நான் முன்பு சொன்ன 'சித்தப்பா' என்பவனால் வந்ததது.  அவனைப் பற்றி, அவனை சமாளித்தது பற்றி  முன்னர் பதிவில் சொல்லி இருக்கிறேன்.

சரி, உலகக்கோப்பை மேட்சுக்கு வருகிறேன்.  

இப்போது மக்களுக்கு இருக்கும் பைத்தியம் போல எனக்கு கிரிக்கெட் மோகம் இருந்தது இல்லை என்றாலும், கபில் 183 நாட் அவுட் போன்ற செய்திகள் படித்து குறைந்த அளவு முறுக்கேறியது உண்டு!  தொலைகாட்சி இலலாததால் அப்போது அந்த கபில்தேவ் மேட்ச் தொலைக்காட்சியில் கேமிராக்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரிய வருத்தத்தைத் தரவில்லை!

இறுதி ஆட்ட சமயத்திலும் கூட இரவு வேறு ஏதோ விதிதபாரதி போன்ற ரேடியோ ஸ்டேஷன்களை நிரடிக் கொண்டிருந்தபோது ஷார்ட் வேவில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் கிரிக்கெட் கமெண்ட்ரி வந்தது.  பெயர் தெரியாத சில ஸ்டேஷன்களில் ஹிந்திப் பாடல்கள் கேட்க முடியும்.  அந்த ஸ்டேஷன்களை விஜயம் செய்து கொண்டிருந்தபோதுதான் கமெண்ட்ரி காதில் விழ, பாடல் கொஞ்சம், கமெண்ட்ரி கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

போகப்போக (தெரியும்..  இந்த பூவின் வாசம் புரியும் என்று பாடவேண்டாம்! பாடல்கள் ஒலிக்கும் நேரங்கள் முடிந்து ஸ்டேஷன்கள் தொடர் கீய் என்ற ஒலியை எழுப்பிக்கொண்டு காணாமல் போக, கமெண்ட்ரி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

நம்பிக்கை இல்லாமல்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு விக்கெட்டாக விழ விழ மெல்ல மெல்ல சுவாரஸ்யம் கூடியது.  நெஞ்சுக்குள் படபடவென்றது.  கைகால்கள் பரபரத்தன.  

வீட்டுக்குள் பார்த்தேன்.  எங்கள் நாய் மோதி உட்பட அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  மோதி என் படுக்கையில்தான் படுத்திருக்கும்!

கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன்.  சாலை வெறிச்சென்று இருந்தது.  மோதி சடாரென்று எழுந்து என்னைத் தாண்டி வெளியே ஓடி இயற்கையின் அழைப்பை முடித்து வந்து என் பக்கத்தில் நின்றது.  'என்ன விஷயம்' என்பது போல என் முகத்தைப் பார்த்தது.

கதவை மூடி விட்டு மறுபடி ரேடியோவை நான் அடைய, மோதி படுக்கைக்குத் திரும்பி  தூக்கத்தைத் தொடர்ந்தது.

கடைசியில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது.  ஒரே கூச்சல் ரேடியோவில்.  உள்ளே இருந்து அப்பாவின் உறுமல் கேட்டது.  "ரேடியோவை அணைச்சுட்டு படுடா"

மோதி தலை நிமிர்ந்து அரைக்கண்களால் ரூமையும் என்னையும் பார்த்தது.  படுக்கையில் சற்று தள்ளி - எனக்கு இடம் விடுகிறதாம் - படுத்துக்கொண்டு சோம்பல் முறித்தது.  தலை மெல்ல மெல்ல தூக்கத்தால் தாழ்ந்தது.

"பா...   இந்தியா ஜெயிச்சுடுச்சு..."  நடு இடத்தில் நின்று குத்துமதிப்பாக ரூமுக்குள் பார்த்து மெல்லிய குரலில் ஆனால் உற்சாக பரபரப்பில் வார்த்தைகளை தோய்த்து சொன்னேன்.  மோதி நிமிர்ந்து என்னை கூர்மையாக பார்த்தது.

"--------------------------"

"பா...."

"கொர்...  கொர்..."

மீண்டும் கதவைத்திறந்து வெளியே வந்தேன்.  யாரிடம் சொல்ல என்று தெரியவில்லை.  உடனே யாரிமாவது சந்தோஷத்தை பகிர வேண்டும் என்று வெறியாய் இருந்தது.  கைகால்கள் பரபரவென்று எதையாவது செய்ய துடித்தன.

இந்தியா பெற்ற பெருவெற்றியைப் பற்றி அறியாது மதுரை மக்கள் உறக்கத்தில் இருந்தனர்.  என் நண்பர்கள் கூட இல்லாதது துக்கமாய் இருந்தது.  ரொம்பப் பேர்கள் அறியாத ஒரு பரபரப்பான நியூஸ் என்னிடம் இருக்கிறது..  யாரிடமாவது சொல்ல வேண்டும்....  தூரத்தில் ஒரு சைக்கிள் தெரிந்தது.  சைக்கிளின்மேல் ஒல்லியாய் ஒரு உருவம் தெரிந்தது. உற்சாகமாகி சாலை நடுவுக்கு சென்றேன்.  என் கூடவே யாரோ வருவது போலிருக்க திரும்பி பார்த்தால் மோதி கடமையாய் எங்கோ பார்த்தபடி என் அருகில் வந்து நின்று கொண்டு இருந்தது.  நான் நகர நகர அதுவும் கூடவே நகர்நதது.

தூரத்தில் வந்த சைக்கிள் என்னை, அல்லது எங்களைக் கண்டதும் சற்றே 'ஸ்லோ' ஆனது. என் அருகே முன்னங்கால்கள் விறைத்து பின்னங்கால்களில் குத்திட்டு உட்கார்ந்திருந்தது மோதி.  அதன் பார்வையும் அந்த சைக்கிள்வாலா மேலேயே இருந்தது.  தயங்கிய சைக்கிள். மெல்ல அரைவட்டமடித்து திரும்பி வந்த வழியே விரைந்தது.  ஓட்டுநர் ஒருமுறை திரும்பிப் பார்த்தது போல இருந்தது.   அசுவாரஸ்யமான மோதி படுத்துவிட, நான் திரும்பி பின்புறம் பார்த்தேன்.   இந்தப் பக்கம் வந்த மனிதர் தாட்டியாய் இருந்தார்.   தைரியமாய் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்.

அருகில் வந்ததும் "ஹலோ..  இந்த ஏரியாவா?" என்றேன்.  

"ஏன் கேட்கறீங்க...சொக்கிக்குளம்" என்றார்.

"இந்தியா ஜெயிச்சுடுச்சு..  கப்பு வாங்கிடுச்சு"

"என்னங்க..."

"கிரிக்கெட்...  கிரிக்கெட்ல இந்தியா ஜெயிச்சுடுச்சு...  இப்போதான்...  கப்பு நமக்குதான்..  உலகக்கோப்பை"  என்றேன்.  உணர்ச்சி வசத்தில் என் குரல் நடுங்கி இருக்க வேண்டும்.

மோதி என் இடுப்பின்மேல் தன் முன்னங்கால்களை வைத்து நின்று அவரைப் பார்த்து விட்டு, நான் "ப்ச" என்று உதட்டில் ஆட்சேபித்து அதைப் பார்த்ததும்  இறங்கி நின்று கொண்டது.

"நல்லதுங்க...   நாய் நம்மளுதுங்களா?  கடிக்குமா?"

"ஆமாம்...  கடிக்காதுங்க" என்றேன்.  'ஆமாம்' எனபது 'நம்மளுதுங்களா' என்ற கேள்விக்கான பதில் என்பதை அவர் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை.  ஏனோ என்னிடமிருந்தும் அந்த உற்சாகம் வற்றி போயிருந்தது.

"சரிங்க.." என்றவர் இறங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றார். ஓரிருமுறை மோதியை, அப்புறம் என்ன திரும்பிப் பார்த்துக்கொண்டவர், ஓரளவு நல்ல தூரம் சென்றவுடன் சைக்கிள் சீட்டை ஒரு தட்டு தட்டினார்.  இரண்டு முறை உந்தி ஏறி அமர்ந்தார்.  ஜோராய் மிதித்து கண்களிலிருந்து மறைந்தார்.

மோதியும் நானும் ஓரமாய்  நின்று ........கிருந்துவிட்டு உள்ளே வந்தோம். படுத்தோம்.

மறுநாள் செய்தித்தாள் பார்த்தபோதும், நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோதும் கூட பெரிய உற்சாகம் எல்லாம் இல்லை.  ஜெரோம் மட்டும் "நீ நம்ம தெருவுக்கு புதூர் வந்திருக்கணும்..  நாங்க இங்க அந்தர் பண்ணிட்டோம்" என்றான்.

=====================================================================================================

முகம் எங்கே?  ரசித்த துல்லிய கண க்ளிக்.


============================================
============================================================================================================

ஏகாந்தமாய்....


மன்னிக்கவும்...   அடுத்த வாரம் பார்க்கலாமா!  எதிர்பாரா காரணங்களால் இந்த வாரம் இடம்பெறவில்லை.
==================================================================================================


நியூஸ் ரூம் 

 


பிற்சேர்க்கை 


================================================================================================

தி.ஜானகிராமன் கடிதம்
தி. ஜானகிராமன் எழுதிய ஒரு கடிதம்
அன்புள்ள பாலகுமாரன்,
நேற்று நீங்கள் அவ்வளவு அந்தரங்க அன்புடன் விசாரித்து, பலவித (எனக்குப் பிடித்த) பொருள்களை வாங்கி வந்தபோது, எனக்கு
பி. எஸ். ராமையா, இன்னும் மூன்று நாலு பேர் ஞாபகம் வந்தது. அவர்கள் மிக்க உற்சாகத்துடனும் திறந்த மகிழ்ச்சியோடும் உங்களைத் தழுவி, நன்றி தெரிவிப்பார்கள்.
எனக்கு இந்த மாதிரி செய்ய தைரியம் வருவதில்லை. காரணம் - வெளியே காட்ட பயந்து. பல பேருக்கு "ஒரு வார்த்தை சொல்லணுமே. இதெல்லாம் இவனுக்கு Due என்று எண்ணம் போலிருக்கிறது" என்று தோன்றும். தோன்றியிருக்கிறது, சிலருக்கு.
ஒரு சினிமா டைரக்டர் இருபது வருஷம் முன் என் கதை ஒன்றைப் படம் எடுக்கிறேன் என்று வந்தவர்,
தாம் படமாக்கப் போகிற, ஆக்கிய இரண்டு கதைகளை - அந்தந்த பாவத்திற்கேற்ப, முக பாவ, அங்க அசைவுகளுடனும், அபிநயங்களுடனும்
சொல்லிக்கொண்டு வந்தார்.
நான் வழக்கம் போல இடித்த புளி போல கேட்டுக் கொண்டிருந்தேன். "என்ன இவ்வளவு சொல்றேன். ரீயாக்டே பண்ண மாட்டேங்கறேளே?" என்று despair உடன் சொன்னார்.
எனக்கு வருத்தமாயிருந்தது.
நான் இப்படி placid ஆகவும் prosaic ஆகவும் இருக்கிறேனே என்று.
ஆனால் குருடன் எப்படி ராஜ முழி முழிப்பான்? நான் அவரிடம் எப்படி என் இயலாமையை விளக்குவது?
அவர் அப்புறம் என் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். ஓரளவுக்கு நீங்களும் என் மாதிரி சங்கோசியாக இருப்பதால், என் placidity யைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்கு ஒரு ஆச்வாசம். இது சரியான ஊகம் என்று நினைக்கிறேன்.
தேடி வந்தவர்களுக்குத் திருப்தியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆதங்கம்.
நாம் நிறையப் பேசவும் இல்லை. புரிந்து கொள்கிறவர்கள் இப்படித் தான் அதிகமாகப் பேசாமல் திளைப்பார்கள் என்று தோன்றுகிறது.
சாந்தாவுக்கு சென்னை பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோருக்கும்
என் அன்பு.
நமஸ்காரம்.
தி. ஜா
........
பாலகுமாரன் : " இந்தக் கடிதம் பற்றி எதுவும் சொல்லி அபிப்ராயம் உருவாக்க விரும்பவில்லை.  இது மிகவும் ஆழ்ந்த ஸ்நேகமான கடிதம். மேலோட்டமாய் இதில் ஒன்றும் தெரியாது.  உள்ளே நிறைய பொதிந்திருக்கும், கொழுக்கட்டைப் பூரணமாய்.
மனசும் எழுத்தும் ஒன்றாக இருக்கும் நிலை எல்லோருக்கும் ஏற்படாது.
..........
சாரு நிவேதிதா இந்த கடிதம் குறித்து விசாரித்தார்.
"இந்தக் கடிதம் எப்படிக் கிடைத்தது ராஜநாயஹம்?"
அதற்கு என் பதில் :
முப்பது வருஷம் முந்தி கல்கியில் 'வி. ஐ. பிக்கு வந்த கடிதங்கள்' என்று தொடர்ந்து வாராவாரம் வெளியிட்டு வந்தார்கள்.
அப்பொழுதுதான் இந்த கடிதம் பால குமாரன் குறிப்புடன் வெளியிட்டார்கள். அதை கத்தரித்து நான்
தி. ஜானகிராமன் நள பாகம் நாவலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.
இன்று புத்தகங்களை ஒழுங்கு செய்யும் போது கண்டு பிடித்தேன்.
கடிதத்தில் 21.12.1983. தவறாக அச்சுப்பிழையுடன் வருடம் 1983 என்று பிரசுரமாகியிருந்தது. வருடம் 1981 ஆக இருக்கும். ஏனென்றால் தி. ஜானகிராமன் 1982 நவம்பர் 18ம் தேதி இறந்து விட்டார். இதை அப்போதே நான் அதில் மார்க் செய்து வைத்திருந்தேன்.
.........
எப்போதோ கல்கியில், முப்பது வருஷம் முந்தையதாய் இருக்கும். அதில் படித்த விஷயம்.
தி. ஜானகிராமனை சந்தித்த அனுபவம் பற்றி பாலகுமாரன் எழுதியிருந்தார்.
பாலகுமாரன் : "இன்றைக்கும் அந்த சந்திப்பு பசுமையாக இருக்கிறது. மிக அரிதாகத் தான் இம்மாதிரியான சந்திப்புகள் நிகழ்கின்றன.
தில்லியிலிருந்து திருவான்மியூருக்கு ஜானகிராமன் குடிபெயர்ந்த நேரம். அவரைப் பார்க்க நானும் என் மனைவி சாந்தாவும் போனோம்.
மடியில் வைத்து எழுதுகின்ற மரப்பலகை, பேனா, குறிப்பு நோட்டு, ஹார்லிக்ஸ் பாட்டில், அன்று அரைத்த காப்பிப்பொடி, கும்பகோணம் வெற்றிலை, வறுத்த சீவல், பழங்கள் என்று வாங்கிப் போனோம். நமஸ்கரித்தோம்.
ரொம்ப மேலோட்டமான விசாரிப்புகள், மிகச் சுருக்கமாய், அவர் எழுத்து என்னை எப்படி பாதித்தது என்று சொன்னேன். சாந்தாவும் சொன்னாள்.
நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவது பற்றி எதிர்ப்பாக சொல்லாது, லேசாக கவலைப்பட்டார். அவ்வளவு தான் பேச்சு.
பிறகு வெறுமே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எதுவும் பேசாமல் வெறுமே அருகிருக்கும் நட்பு எல்லாரிடமும் ஏற்படுவதில்லை.
அவர் பேசாதது எனக்கோ சாந்தாவுக்கோ புதிதாயில்லை.
தி. ஜானகிராமன் கண்களால் ஊடுருவார். ஆழ்ந்து மனிதர்களைப் பார்ப்பார். ஓரக்கண் பார்வையோ, பார்த்துப் பார்த்து கண்களை விலக்குவதோயில்லை.
பிறிகொரு சமயம் இப்படி ஆழ்ந்து பார்க்கின்ற பழக்கம் எனக்கு வந்தபோது, கண்களின் வழியே மனதைப் படிக்கிற இயல்பு ஏற்பட்ட போது, தி. ஜானகிராமன் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. "
-R P RAJANAYAHEM

இணையத்திலிருந்து திரு R கந்தசாமி எடுத்துக் பகிர்ந்ததை அவர்களுக்கு நன்றியுடன் நான் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

===================================================================================

கடவுளும் கொலைகாரனானான்.

முதலில் மரணம் 
ஆண்டவன் ஆர்டரில் 
இல்லையாம் 

முதுமையும் கூட 
முற்றிலும் கிடையாதாம் 
சாகாத மனிதர்கள் 
சளசளவென பேசி 
தூக்கத்தைக் கெடுக்க 
பிறக்கும் உயிர்கள் 
இருக்கும் இடத்தை 
நிரப்பிக்கொண்டே வர  
 பூமியைக் கொஞ்சம் 
பெரிதாக்கிப் பார்த்தானாம் 
விரிவடைந்த பூமியில் 
விடாது நிரம்பியது உயிரினம் 
நிரலை மாற்றினான்.
முதலில் வந்தவர்களை 
வரிசைப்படி அழிக்கத் தொடங்கினான்.
மனிதனின் உற்பத்தித் திறனால் 
அழித்தலே வேலையாய்ப் போக 
ஆண்டவன் 
ஆட்டோமெட்டிக்கில் செட் செய்தான். 
வயது கட்டுப்பாடுகளையும் 
முதுமையையும் கட்டுவித்து 
நோய்நொடிகளையும் உண்டு பண்ணி
உதிர்ந்து விழ 
காரணங்களையும் காலங்களையும் 
உருவாக்கி 
 
கடவுளும் கொலைகாரனானான்.


===================================================================================
பொக்கிஷம்  : - கா ஸ்ரீ ஸ்ரீ பகிர்ந்திருக்கும் ஒரு சுவாரஸ்யமான செய்தி..  


To Be Or Not To Be .........

இதெல்லாம் மெதுவாக டெக்ஸ்ட்டாக டைப் செய்து பகிர எண்ணி இருந்தவை.  அ
ப்படியே பகிர்வதுதான் சிறப்பு என்று ஜீவி ஸார் சொன்னபடி பகிர்ந்து விட்டேன் அப்படியே!இப்படி ஒரு பேட்டரியா?  கேள்விப்பட்டதே இல்லையே....

டெக்ஸ்ட்டாக டைப் செய்ய வேண்டாம்..   அப்படியே போடுங்க...  அதுதான் எபி ஸ்பெஷல் என்று ஜீவி ஸார் சொன்னாலும் சொன்னார்...

92 கருத்துகள்:

 1. 'மனசும் எழுத்தும் ஒன்றாய் இருக்கும் நிலை எல்லோருக்கும்
  ஏற்படாது'.

  அட்சர லட்சம் பெறும் அனுபவ உண்மை.
  ஏற்படாது என்பதைத் தாண்டி வாய்க்காது என்று நான் உணர்கிறேன். இதெல்லாம் நம் கையில் இல்லை. வாய்ப்பது நம்மை அதற்குப் பழக்கப்படுத்தும் இறைவன் சித்தம்.
  'அவன் அருளால் அவன் தாள் வணங்கி.'

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. பென்ஸிலால் ஒரு கோட்டை வரைகிறீர்கள். உடனே அது வேண்டாம் என்று ரப்பரை எடுத்து வரைந்த கோட்டை அழித்து வட்டம் வரைகிறீர்கள். இதெல்லாம் வரைந்த உங்கள் விருப்பம் தானே!
  -- இதெல்லாம் சாதாரணமான நமக்கு.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னையில் பலத்த மழையாமே? நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற நினைப்பும் கூடவே வருகிறது.

   நீக்கு
 5. நண்பன் ராஜீவ் தயவில் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்து அசெம்பிள் செய்த கெல்ட்ரான் கலர் டிவி வாங்கி இருந்தார். அடுத்த தெருவில் இருந்த அவருடைய வீட்டில் 1983 வேர்ல்ட் கப் பார்த்தேன். அது ஒரு த்ரில்.

  சிவாஜிக்கு குரல் கொடுத்தது சாதனை? ரஜனிக்கு கொடுப்பதை விடவா?

  பிலோ இருதயநாத்தின் செய்தி முன்பே இப்பகுதியில் இடம் பெற்றது போல் தோன்றுகிறது.

  கடவுளே கொலைகாரன் என்றால் நாமெல்லோருமே கொலைகாரர்கள் தாம். ஆக உலகம் இயங்குவது கொலையால்தான்!

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வாங்கிய முதல் டிவி கெல்ட்ரான்தான்.  நான் அடிக்கடி சொல்லும் சுகுமார் அங்குதான் பணிபுரிந்தார்.  
   பிலோ இருகயநாத் முன்பே வந்து விட்டதா?  எனில், மன்னிக்கவும்.

   நீக்கு
 6. இன்றைய கதம்பம் பரவாயில்லை ரகம். கொஞ்சம் கஷ்டப்பட்டு பெரிதாக்கி பத்திரிகைச் செய்திகளைப் படித்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரோக்ய சமையல் ஹேமா வைரமுடி யாத்திரை படிச்சாங்களாம்.  சென்ற வார பதிவுகளிலேயே பிடித்த பதிவு அவர்களுக்கு இதுதானாம்.  என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  சில டெக்னிகல் காரணங்களால் அவரால் இங்கு கருத்திட்ட முடியவில்லை.

   நீக்கு
  2. நன்றி ஶ்ரீராம். அடுத்து எதை எழுதுவது என இன்னமும் நிச்சயக்கவில்லை. நாள் நெருங்குகிறது.

   தொடர்கதை என்றால் கொஞ்சம் சுலபமோ? நேரம் இல்லையென்றால் புது சைட் கதை அல்லது புதிய கேரக்டரைக் கொண்டுவந்துவிடலாமோ?

   நீக்கு
 7. நான் குன்னூரில் வசித்த பொழுது கோத்தகிரிக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.
  தென்னிந்தியாவின் சுவிட்ஸர்லாந்த் என்று சொல்லுகிற மாதிரி சுவிட்ஸர்லாந்தின் சீதோஷ்ண நிலை அப்படியே இங்கிருக்கிறது என்று இரண்டு இடங்கள் பற்றியும் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. காட்டுப் பன்றியை வேட்டையாடுவது சுலபமல்ல. சிறிய வடிவாக இருப்பதால் டக் எனத் திரும்பி காயம் விளைவிக்கக்கூடியது என்பதால் சிறுத்தை கோன்றவை ஜாக்கிரதையாக வேட்டையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிலோ இருதயநாத் கட்டுரைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

   நீக்கு
 9. 83 என்ற படத்தையும் ஓடிடியில் பார்த்தேன்.

  என்னதான் டீம் வைத்திருந்தாலும், எவ்வளவு திறமை இருந்தாலும் கோப்பை ஒரு சிலரின் கைகளுக்குத்தான் கிடைக்கும் போல.

  டீமில் ராசி இல்லாதவர் கோஹ்லி என்பது என் அபிப்ராயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறுதிப்போட்டி நடக்க தெரிவு செய்த மைதானம் தவறு.  மும்பையில்  வைத்திருக்கலாம்.  ரோஹித் கூட பாவம்தான்.

   நீக்கு
 10. வாழைக் கன்று(கள்) ஓரளவு வளர்ந்தபின் தாய் மரம் உதிர்வதுதானே சரி. ஒருவேளை தொலைக்காட்சி, புத்தகங்கள், செல்போன் இல்லை என்றால் இருக்கும் வாழ்க்கையே நரகமாகிவிடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயங்களில் சில பின்னூட்டங்கள் பயங்கர புதிர் ஆகி விடுகின்றன.  திரும்பி பதிவுக்கு சென்று பார்த்து வரவைக்கும்!  இந்தப் பின்னூட்டம் கவிதைக்கு என்று யூகிக்கிறேன்.

   நீக்கு
 11. கமலா ஹரிஹரன் மேடம் "காணவில்லை" பட்டியலில் சேர்ந்துவிட்டாரா?

  விரைவில் சாம்பசிவம் சாருக்கு உடல் நிலை குணமாகி, கீதா சாம்பசிவம் மேடம் உற்சாகத்தைப் பெறப் ப்ரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா அக்கா மறுபடி காணாமல் போயிருக்கிறார்.  உடல்நிலையா?  விருந்தினர் வருகையா, தெரியவில்லை.

   நீக்கு
  2. அவர் மகன் அயல் நாட்டிலிருந்து வந்து இருப்பதால் கொஞ்ச காலம் இணைய பக்கம் வர முடியாது என்றாரே ஒரு பதிவில் .
   அவருக்கு வேலை சரியாக இருக்கும்.
   சாம்பசிவம் சார் விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்.

   நீக்கு
 12. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 13. விதவிதமான விஷயங்களை அள்ளித் தெளிப்பதற்கு குமுதம் கைகொடுக்கிற மாதிரி விகடன் இல்லை பாருங்கள்.
  அரசு+புனிதன் -- இந்த நாலு பேரின் சாதனை இது.

  பிரசுரத்திற்காக தேர்வு பெறும் எந்த கட்டுரையையோ துணுக்குச் செய்தியையோ அப்படியே வெளியிடுவதில்லை, குமுதம். மேலே குறிப்பிட்ட குமுத பிர்மாக்கள் நான்கு பேரும் குமுத பரிமாறலுக்கு ஏற்றபடி தங்கள் கைவண்ணத்தைப் பதித்து ரசனை சொட்டச் சொட்ட பண்டமாக்குகிறார்கள். அது தான் இங்கு வெளியிட்டிருக்கும் குமுதச் செய்திகளில் காணக்கிடைக்கிறது.
  அதை அச்சு அசலாக அப்படியே பரிமாறுவதில் தானே சுவை இருக்கிறது?
  இதுவே எபி ஸ்பெஷலின் உன்னதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நான் கூட இன்றைய 83 உலகக்கோப்பை கட்டுரையை இன்றைய உலகக்கோப்பை தோல்வியுய்ப் பற்றிச் சொல்லி ஆரம்பிக்கவே வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  எழுதும்போது மறந்து விட்டது.

   நீக்கு
 14. கிரிக்கெட் வர்ணனை பற்றி சிறப்பாக எழுதி இருக்கின்றீர்கள்..

  பதிலளிநீக்கு
 15. எனக்கு கிரிக்கெட் மீது சாதாரண பிரியம் கூட இருந்தது இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? எனக்கு கொஞ்சம் இருந்தது. பதின்ம வயதில் நான் கிரிக்கெட் டீமில் இருந்திருக்கிறேன் - பனிரெண்டாவது ஆளாக.

   நீக்கு
 16. ஏனைய செய்திகள் பற்றி என்ன சொல்வது?..

  அவற்றை பெரிதாக்கிப் படிப்பது எனக்கு இயலவில்லை..

  பதிலளிநீக்கு
 17. மூன்று ஆண்டுகளாக கைத்தல பேசியுடன் கழைக்கூத்து ஆடிக் கொண்டு இருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 18. கொள்ளை அடிக்கும் கடவுள்...?

  ஆக அனைத்திற்கும் காரணம் கடவுள்...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே இல்லையா? ஆக்குபவனும் அவனே.. அழிப்பவனும் அவனே...

   நீக்கு
 19. இந்த ஆண்டு உலகப்கோப்பை :

  முதல் சீர் : கழாஅக்கால்

  கடை சீர் : புகல்

  பதிலளிநீக்கு
 20. "நல்லதுங்க.. நாய் நம்மளதுங்களா? கடிக்குமா?"

  என்ற இடத்தில் ஆரம்பித்து--

  மோதியும் நானும் நின்று ஓரமாய் ------க்கிருந்து விட்டு..
  உள்ளே வந்தோம். படுத்தோம்..'

  --வரை படித்துப் பாருங்கள்..

  பின்னூட்டங்கள் போடுவதைத் தவிர்த்து, எபி வியாழனிலிருந்து
  எழுதக் கற்க நிறைய இருக்கிறது..

  ஒரு கண் பார்வைதான். ஒரு கை இயக்கம் தான். ஆர்வத்தில் எப்படியோ தட்டச்சில் கொண்டு வந்து விட்டேன்.

  மனம் நிறைந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரமமான நிலையிலும் எடுத்துச் சொல்லி பாராட்டி ஊக்கப் படுத்தி இருப்பதற்கு நன்றி ஜீவி ஸார்.

   நீக்கு
  2. இன்னொரு இடம்.

   உள்ளேயிருந்து அப்பாவின் உறுமல் கேட்டது. "ரேடியோவை அணைச்சிட்டுப் படுடா."
   --என்று ஆரம்பித்து தொடரும் இடம்.
   நேற்று இரவு ரொம்ப நேரம் ஆகி விட்டது. குறிப்பிட முடியாது படுக்கைக்குச் சென்று விட்டேன்.
   ஒரு விஷயத்தை விவரிக்கும் பொழுது அங்கங்கே உரையாடலை நுழைப்பது எழுது கலையின் தத்ரூப விவரிப்பு நேர்த்தி.

   நீக்கு
  3. ரசித்து எழுதியது ரசிக்கப்படும் போது வரும் சுகம் இருக்கிறதே.....

   நீக்கு
 21. ஏனுங்க நாய்க்கு மோதின்னு பேர் வச்சதுக்கு யாரும் கேஸ் போடலியா?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி யாரும் வந்து மோதலீங்ணா....  இன்னொரு செல்லம் இருந்திச்சுங்ணா..  அதும் பேரு சாத்திங்ணா..

   நீக்கு
 22. அது 1983. நம்ம 'T.A. மோதி' தான் கேஸ் போட்டிருக்கணும்.

  பதிலளிநீக்கு
 23. கிரிக்கெட் பற்றிய விரிவான பகிர்வு அருமை! நாங்களும் 1983 உலகக்கோப்பையை ரேடியோ மூலம் தான் கேட்டுக்கொண்டிருந்தோம். இங்கே ஷார்ஜாவில் 1985ல் ராத்தமன்ஸ் கப்பை இந்தியா வென்ற போது வீட்டில் ஆண்கள் எல்லோரும் ஸ்டேடியத்துக்குச் சென்று வந்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அப்புறம் ஷார்ஜாவில் நடந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் சென்று விடுவோம்! ஸ்டேடியமே அதிர்ந்த அந்த நாட்கள்-அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றால் கேட்கவே வேண்டாம்- மறக்க முடியாத நாட்கள் அவை! மலரும் நினைவுகளை மறுபடியும் மீட்டெடுத்ததற்கு அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..  ஷார்ஜா மேட்ச்களை மறக்க முடியுமா?  அதுவும் அந்த டெண்டுல்கர் Vs ஆஸ்திரேலியா மேட்ச்..  செமி ஃபைனல் அண்ட் ஃபைனல் மேட்ச்..  நன்றி மனோ அக்கா.

   நீக்கு
 24. கதம்பம் கண்டோம்.

  அன்றைய நாட்களின் கிரிக்கட், பழைய பத்திரிகை செய்திகள், துணுக்குகள், செய்திகள் என கலந்து நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 25. பிறந்த வீட்டிலும் டிவி அப்போதெல்லாம் கிடையாது. என் அத்தை ஊருக்கு வந்த பிறகு அவங்க டிவி வைச்சிருந்தாங்க. என் தங்கை கிரிக்கெட் பைத்தியம் அதுவரை எனக்குக் கிரிக்கெட் சுத்தமா தெரியாது வீட்டுல அது பத்தி எல்லாம் பேசியதுமில்லையே. அப்போது அத்தை வீட்டு டயனொரா டிவில இந்த உலகக் கோப்பை பார்த்ததுதான். அவங்க மாடில நாங்க கீழயா சாப்பாடு எல்லாம் அங்கும் இங்குமாகத்தான். அப்பாவின் அம்ம்மா அங்க தான் இருப்பார் கிரிக்கெட் பார்க்கறத பார்க்கணுமே....இந்தியா விளையாடும் போது பரவசமாகிப் பார்ப்பாங்க. யாரும் அவுட் ஆகக் கூடாது எதிரணிய திட்டறதுலருந்து காமெடியா இருக்கும். என் தம்பி கிரிக்கெட் விளையாடச் செல்வான் லோக்கல் போட்டிகள் உட்பட.

  எனக்கும் அதீத ஆர்வம் இருந்ததில்லை ஆனால் பார்த்ததுண்டு. திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டில் ஆண்கள் எல்லாரும் ஆர்வத்துடன் பார்ப்பாங்க ஸோ நானும். மற்றபடி அப்புறம் நம்ம வீட்டுல டிவி கிடையாது என்பதால் பார்த்ததில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதை என் அம்மா -அவர்களும் கொஞ்சம் பார்த்தாலும் - பலவகையில் கிண்டல் செய்வார்கள்.  நான் எழுந்து அந்தப் பக்கம் போனால் 'கபில்தேவ் அவுட்' என்று உரக்கக் குரல் கொடுப்பார்.  ஓடிவந்து பார்த்தல் ஆடிக்கொண்டுதான் இருப்பார் கபில்!

   நீக்கு
 26. மோதி பகுதியை ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம்.

  அப்ப கப் வென்ற போது தங்கை, அத்தை, பாட்டி நாங்க ஆட்டம் போட்டோம். என் தங்கை கபில் விசிறி அப்ப. அதனால அவ கமென்ட்ரி சொல்ல சொல்ல நானும் கூடவே ஆர்வம் மேலிட பார்த்தது கிரிக்கெட்டை விட குடும்பத்தோடு ஜாலியா இருந்த தருணங்கள்! அந்தத் தங்கை இப்ப தில்லி குர்காவ்ன்! மறக்க முடியாத நினைவுகள்... இதை இன்று அவளோடு பகிர வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. மோதி, என் இரு செல்லங்களையும் நினைவுபடுத்திட்டான்!

  கீதா

  பதிலளிநீக்கு
 28. இணையப் படம் செம ஷாட்! ஹையோ என்ன ஒரு துல்லியமான ஷாட்!!! ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்தேன், ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 29. கணவன் மனைவி சண்டையால் விமானம் தரையிறங்கியதா? எந்த ஊர்ல?
  ஏதேதோ வைரஸ் காய்ச்சல்னு சொல்றாங்க...கேள்வியும் படுகிறேன் இங்கும் செய்திகள் வருது. இப்ப புதுசா இந்த வைரல் ஃபீவர் னால காது இன்ஃபெக்ஷன் வருதாம். கடவுளே எனக்கு ஏற்கனவே காது அப்பப்ப இன்ஃபெக்ட் ஆகும் இந்த மூணாவது காதுனால இப்ப...இது வேற..

  தவனகெரெ பைரவ செல்லம் வீடியோ நீங்க அனுப்பியதைப் பார்த்தேன் ஸ்ரீராம். ஆச்சரியமான விஷயம்தான்! ஆனால் பொதுவாகவே அவற்றிற்கு இப்படியானவை உண்டாம் மகன் சொன்னான்.

  மீட்புப் பணி நல்லபடியாக முடிந்தது மகிழ்வான விஷயம்

  கீதா

  பதிலளிநீக்கு
 30. திஜா, பா கு - ரொம்ப சுவாரசியம். பாகு சொல்வது போல் அமைதியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துகிடக்கும். தி ஜாவின் கடிதத்தை ரசித்து வாசித்தேன். அவர் சொல்லியிருப்பதையும் பா கு அவரைப் பற்றிச் சொல்லியிருப்பதையும் சேர்த்து வாசித்த போது மனதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலகுமாரன் தி ஜா போல எழுத முயற்சித்தவர் என்று சொல்வார்கள்.

   நீக்கு
 31. கடவுளும் கொலைகாரனானான் - ஸ்ரீராம், யோசிக்க வைக்கிறது. எல்லாத்துக்கும் கடவுள் காரணம் என்றுதானே நம்மில் பலரும் சொல்கிறோம்.....நல்லது நடந்தால் இறைவன் அருள்....ஒரு ஆக்சிடென்டில் ஒருவர் இறந்து மற்றவர் பிழைத்தால் - இறைவன் அருளால் பிழைத்தான் அப்படினா இறந்தவன்? அப்படிப் பார்க்கறப்ப, உங்க கவிதை யின் பொருள் கேள்விகள் எழும்தான் ஸ்ரீராம். பொருத்திப் பார்க்கும் போதுதான்

  என்னைப் பொருத்தவரை, இங்கு நடப்பவற்றுக்கும் அந்த சக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாம் எல்லாத்துக்கும் அந்த சக்தியை/கடவுளை இழுத்துவிடுகிறோம்.

  /முதலில் மரணம்
  ஆண்டவன் ஆர்டரில்
  இல்லையாம் //

  யெஸ் இதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்டவன் பெருகும் மனித இம்சை தாங்காமல் மரணத்தைப் படைத்தான் என்கிறேன்! தான் தயார் செய்த பொருளில் இம்ப்ரொவைசேஷன்!

   நீக்கு
 32. ஃபிலோ இருதயநாத் முன்பும் பகிர்ந்திருக்கீங்க ஸ்ரீராம்.

  இவருடையவை சுவாரசியமா இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 33. குரங்கு காப்பாற்றிய விஷ்யாம், நெஞ்சில் கைவைத்துப் பார்த்து சுட்டியது எல்லாமே ஆச்சரியமான விஷ்யங்கள். விலங்குகளுக்கும் உணர்வு அறிவு உண்டு என்று இப்படியான பல நிகழ்வுகள் சொல்கின்றன. நாம் அவற்றோடு உணர்வுபூர்வமாக இருந்தால் இதை உணர முடியும் என்பது என் அனுபவம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  காட்டில் மாட்டிக் கொண்டால் குரங்குகள்தான் மனிதனுக்கு வனத்தை விட்டு வெளியேற வழிகாட்டுமாம்.

   நீக்கு
 34. சிவாஜிக்குக் குரல் கொடுத்த சுந்தரம் அவர்கள் பற்றியது புது தகவல்!

  குண்டு பேட்டரி பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  நான் முன்னரே படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

   நீக்கு
 35. குழந்தைகள் அக்கம் பக்கம் போய் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றே டிவி வாங்கினோம். எங்கள் வீட்டுக்கும் டி.வி பார்க்க எல்லோரும் வருவார்கள். ரேடியோவில் கேட்டபோதும், டிரான்ஸ்சிஸ்டரில் கேட்டபோதும், தொலைக்காட்சி திரையில் பார்த்த போதும் கிரிக்கெட் பிரியர்களுக்கு உற்சாகம் தான் என்பதை என் அண்ணன், என் கணவர் மூலம் தெரிந்து கொண்டேன்.

  மலரும் நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்து வீட்டில் தொலைகாட்சி இருக்கும்போது நம் வீட்டில் இல்லாமல் இருந்தால் எப்படி என்றே வாங்கினோம்.  தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள்தான் பெரும்பாலும்!

   நீக்கு
 36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 37. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 38. கவிதை மற்றும் பொக்கிஷ பகிர்வுகள் படித்தேன்.
  முன்பு கோத்தகிரியில் காட்டுப்பன்றி அட்டகாசம் என்றால் இப்போது கரடிகள் ஊட்டியில் குடியிருப்பு பகுதிகுள் வந்து இருப்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?  பீதியை இருக்கும்.  நான் தொலைக்காட்சி பார்த்து நாட்களாகிறது.  தொலைகாட்சி பக்கம் போனால் OTT தான்.  நேற்று சித்தா பார்த்தேன்!

   நீக்கு
 39. 1972 ல தஞ்சை தெற்கு ராஜ வீதியில் மோதி கார்மெண்ட்ஸ் என்று இருந்திருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் ஸ்ரீராம்ஜி பெரிய ஆட்களின் பழக்கம் அப்பொழுதே உங்களுக்கு இருந்து இருக்கிறது.

  பெரிய ஆட்களிடம் "மோதி"இருப்பீர்கள் போல....

  பதிலளிநீக்கு
 41. Estrela Batteries ..-நினைவில் இருக்கிறது. டார்ச் லைட்டுக்கு சௌகரியமான பேட்டரி. எவரெடியோடு, ஜீப் பேட்டரியும் அவ்வப்போது தமிழ்நாட்டில் கிடைத்தது எழுபதுகளிலும். இப்போதும் இருக்கிறது மார்க்கெட்டில் !

  மொபைல்ல ரேடியோ, லைட்டு, கேமரான்னு எல்லாம் வந்து ஒக்காந்தப்புறம் என்னத்தச் சொல்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் தனி டார்ச்களும் சம அளவில் விற்பனை ஆகின்றன.  இரவு என்றங்களில் சட்டென பாத்ரூமோ, வெளியிலோ செல்ல உதவும்.

   நீக்கு
 42. உலகக் கோப்பை - உணர்வுகளைச் சொல்லும் சிறுகதை வடிவத்தில்..!

  துல்லிய க்ளிக் சிறப்பு, கவிதை யதார்த்தம். எழுத்தாளர்களின் கடிதங்கள், சந்திப்பு.. சுவாரஸ்யம். தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!