புதன், 15 நவம்பர், 2023

இவர்கள் எங்களைக் கேட்டிருந்தால் ..

 

சென்ற வாரம் தீபாவளி கொண்டாட நகை, புதுத் துணி, வெடி, வாணம் வாங்குவதிலும், பட்சணங்கள் செய்வதிலும் மும்முரமாக இருந்ததால், எல்லோரும் எங்களைக் கேள்விகள் கேட்கவில்லை. 

ஆனாலும் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் தீபாவளி சம்பந்தப்பட்ட சிலர் எங்களை கேள்வி கேட்டிருந்தால், நாங்கள் என்ன பதில் சொல்லியிருப்போம் என்று ஒரு சிறிய கற்பனை! 

நரகாசுரன், பிரக்ஜோதிஷா : 

இதுவரை சந்தோஷமாக இஷ்டம்போல வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். ஆனாலும் வா. கிருட்டிணன் என்பவரால் எனக்கு இடர் வரும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.. இதற்குப் பரிகாரம் உண்டா என்று கூறவும். 

& நாங்கள் உங்களுக்காக நாடி ஜோதிடம் பார்த்தோம். உங்களுக்கு வா கிருட்டிணன் மூலம் இடர் வருவதைவிட அவர் மனைவி கி ச பாமா மூலம்தான் மரணம் என்று நா ஜோ சொல்கிறது. நீங்கள் தாய்க்குலங்கள் எல்லோரையும் க உ தொகை ரூ ஆயிரம் கொடுத்து சாந்தப்படுத்தினால் மரணத்தை தவிர்க்கலாம். இல்லையேல் உங்கள் மரணத்தை கொண்டாட நகை வியாபாரிகளும், ஜவுளி வியாபாரிகளும், புது மாப்பிள்ளைகளும் காத்திருக்கிறார்கள். 

அஸ்ஸாமில் பிறந்த உங்களுக்கு, தமிழகத்தில் பிறந்து வாழ்கின்ற கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் எல்லோரும் இருபத்தோராம் நூற்றாண்டில் நீங்கள் மரணம் அடைந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்றும் துக்க நாளாக அனுசரிக்கவேண்டும் என்றும் போராடுவார்கள். 

புண்ணியமூர்த்தி, துக்காராம் துணிக்கடை: 

முன் காலத்தில் தீபாவளி சமயத்தில், புடவைகளுக்கு ' பாலும் பழமும் ' டிசைன், எம் எஸ் புளூ பட்டுப்புடவை என்றெல்லாம் விளம்பரம் செய்து நிறைய பட்டுப் புடவைகள் விற்றோம். ஆனால் இந்தக் காலத்தில் புடவைகள் யாரும் வாங்குவதில்லையே! என்ன செய்வது?

& நீங்க இப்போ " பிக் பாஸ் கமல் சுடிதார்", "பி பா க உள்பாவாடை" என்றெல்லாம் வியாபாரத்தை மாற்றிக்கொண்டால் பயங்கர லாபம் கிடைக்கும். முயற்சிக்கவும். 

தங்கரத்தினம், GXT ஜ்வெல்லரி : 

இந்த தீபாவளிக்கு எங்கள் Blog ஆசிரியர்கள் GXT ஜ்வெல்லரியில் நகைகள் வாங்கினால், நகை விலையில் 10% தள்ளுபடி தருகிறோம். வருவீர்களா? 

& நீங்கள் 90% எடுத்துக்கொண்டு, எங்களுக்கு 10% தள்ளுபடி தருவதைவிட, 90% தள்ளுபடி செய்து, 10% விலைக்குக் கொடுப்பதாக இருந்தால் வருகிறோம். 

தி பண்டாரம், நெல்லூர் : 

இந்த வருட தீபாவளிக்கு என்ன ஸ்வீட் சாப்பிட்டீர்கள்?

& சம்பந்தி வீட்டு மை பாக், பக்கத்து வீட்டு பாதுஷா, கோடி வீட்டு கோதுமை அல்வா. 

லாவண்யா, எல் போர்டு: 

தீபாவளிக்கு அதிரசம் செய்ய நிறைய மாவு தயார் செய்து, அதிரசம் செய்யத் தொடங்கினேன். ஆனால், அதிரசம் எண்ணெயில் போட்டவுடன் அ. தி. ர. ச. ம் என்று புள்ளி வைத்த கூட்டணியாகப் பிரிந்துபோய் விடுகிறது. இத்தனை மாவையும் என்ன செய்வது? 

& எங்கள் வாசகி ஒருவர் திப்பிசம் செய்வதில் நிபுணி - அவரிடம் கேட்டால் அதிரசம் மாவை வைத்து என்ன திப்பிசம் செய்யலாம் என்று கூறுவார். 

= = = = = = = =

KGG பக்கம். 

சென்ற வாரம் ஆசிரியர்களின் பட்டப் பெயர் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு வந்த மறுமொழிகள் மேலும் சில பட்டப்பெயர்களை, அந்தப் பெயருக்கு உரியவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. 

நான்காம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடத்தில், ஒரு ஆசிரியருக்கு அவர் தோற்றத்தை வைத்து ஜெமினி கணேசன் என்று பெயர். நான்காம் வகுப்பு ஆசிரியை ஒருவருக்கு உண்மைப் பெயரே சாவித்திரி. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு கொஞ்சம் 'இது' உண்டு என்று அரசல் புரசலாக பேசிக்கொள்வார்கள். 

மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் பெயர் உளுத்த வடை. இவர், மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக தன்னுடைய வகுப்பில் படிக்கும் பையனிடம், ஓரணா கொடுத்து, " கொல்லைப்பக்கம் வழியா போய் ( வாசல் பக்கம் வழியாகப் போனால், தலைமை ஆசிரியரிடம் அந்த மாணவன் சிக்கிக்கொள்ளக் கூடும் என்பதால்!) பக்கத்து ஹோட்டலிலிருந்து இரண்டு உளுத்தம் வடை  வாங்கி வா" என்று அனுப்புவார். அதனால் அவருக்கு 'உளுத்த வடை' என்று பெயர். 

ஐந்தாம் வகுப்புப் படித்த பள்ளிக்கூடத்தில், வகுப்பு ஆசிரியரின் ப பெயர்  வல்லம் வயிற்றுவலி. தடித்த மூக்குக் கண்ணாடி அணிந்திருந்ததால் வல்லம் என்றும் அடிக்கடி வயிற்றுவலி காரணமாக லீவு போட்டதால், வயிற்றுவலி என்றும் அவருக்குப் பெயர் வைத்திருந்தனர் மாணவர்கள். அவர் ஒருமுறை பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, வகுப்புக்கு வெளியே இரண்டாம் கிளாஸ் பையன் ஒருவன் " மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" என்று உரத்த குரலில் பாடிக்கொண்டே தண்ணீர் குடிக்க, தண்ணீர் தொட்டியை நோக்கி நடந்துசென்றான். 

அமைதியாக நடந்துகொண்டிருந்த வகுப்புக்கு வெளியே இப்படி அவன் பாடியபடி நடந்து சென்றது எங்கள் எல்லோருக்கும் சத்தமாகக் கேட்டது. ஆசிரியர், பாடம் நடத்திக்கொண்டிருப்பதை நிறுத்தி, ' யாருடா அது?' என்று கேட்டார். 

என் வகுப்பில் இருந்த ஒரு பையன் எழுந்து நின்று, " ஈ புடிச்சான் தம்பி சார்" என்றான். 

ஆசிரியர் உடனே, " அது யாருடா ஈ புடிச்சான் ?" என்று கேட்டார். எங்கள் வகுப்பில் இருந்த ஞானப்பிரகாசம் என்ற பையனுக்குத்தான் 'ஈ புடிச்சான்' என்ற பட்டப் பெயர்! அவன் எழுந்து நின்று அசட்டுச் சிரிப்பு சிரித்தான். 

" உனக்கு ஏண்டா அந்தப் பெயர்? " என்று கேட்டார் ஆசிரியர். 

அதற்கும் அவன் அதே அ சிரிப்பு சிரித்தான். 

பக்கத்தில் இருந்த இன்னொரு பையன், " சார் - இவன் மதியான சாப்பாடு சாப்பிட்டபின் நம்ம பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாடு ரூமுக்கு வெளியே வருகின்ற ஈக்களை எல்லாம் கையை வீசி பிடிப்பான் சார். அதனால்தான் அவனுக்கு ஈ புடிச்சான் என்று பெயர்" என்றான். 

ஐந்தாம் வகுப்பின் வேறொரு பிரிவின் ஆசிரியர் ஒருவருக்கு 'காரா பூந்தி' என்று பெயர். அவருடைய கன்னத்தில் 'கார பூந்தி' போல ஒரு மரு இருந்ததால், அவருக்கு அந்தப் பெயர்! 

= = = = = = = =

அப்பாதுரை பக்கம்: 

எப்போ தாவ தெழுதும் பட்சத்தில்

அப்பா துரைப்பக்கம் ஏன்?

( அவர்தான் இதை எழுதி அனுப்பினார்!) 

= = = = = = = = =

33 கருத்துகள்:

  1. இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. /// எப்போ தாவ தெழுதும் பட்சத்தில்
    அப்பா துரைப்பக்கம் ஏன்?..///

    தப்பா துரைத்தமிழ் தான்வரும் பட்சத்தில்
    அப்பா துரைப்பக்கமும் நன்று
    இப்போ துரைத்திட்ட எழில்நல மோங்கி
    எப்போ துமிருந்திட ஏந்தி ழையான் துணை..

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ஆசிரியர் ஒருவருக்கு மற்ற ஆசிரியர் அளவில்
    எஸ். எம். டி. என்று செல்லப்பெயர்..

    அது அவருக்கும் தெரியும்..

    பசங்கள் யாரும் வெளிப்படையாக செல்வதில்லை..

    ஒருநாள் என்ன ஆயிற்று என்றால் -

    மீதியை
    வெள்ளித் திரையில் காண்க..

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரை சார் புதன் பகுதிக்கு கேள்வி கேட்டிருக்கிறாரோ? அவரிடமே

    அபூர்வ குட்டி ஈனும் யானையை
    வீட்டில் வளர்ப்பது ஏன்?

    என்ற கேள்வியைக் கேட்டுவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு ஸ்கிரீன் ஷாட் அனுப்புகிறேன். பதில் சொல்கிறாரா பார்ப்போம்.

      நீக்கு
  6. அப்பாதுரை தாத்தாதுரை ஆகிவிட்டதால் இனி கொஞ்சம் மெல்லவே அவ்வப்போது வருவார்.

    அவர்தான் எழுதவில்லை. அவர் எழுதியதை கொஞ்சம் தருகிறேன். மன்னிப்பாராக.

    கார்த்தால வடபழனி கோவிலுக்குப் போக வேண்டியிருந்தது. இன்னைக்குப் பாத்து என்னோட பழைய எடர்னோ வேலை செய்யலை. கால் டேக்சி பிடிச்சு கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். அசோக் நகர் பக்கம் ரோடு மகா மோசம். தூக்கித் தூக்கிப் போட்டுதா, இந்தப் பொடி டப்பா எங்கயோ விழுந்து காணாம போயிடுத்து. என்னோட மாமனார் உபயோகிச்ச வெள்ளி டப்பா. நித்யம் பொடி டப்பாவைப் பாத்தாலே அழகான முகத்தை அஷ்டகோணலா பண்ணிக்கிற எங்காத்துக்காரி, இன்னிக்கு டப்பா காணோம்னதும், பொறந்தாத்து சொத்தாச்சே, கங்களாஞ்சேரி பிராமணரைக் கல்யாணம் பண்ணிண்டா இப்படித்தான் சகலத்தையும் தொலைச்சுட்டு வந்து நிப்பார்னு இடிக்கறா. பொடி இல்லாம நேக்கு கையும் ஓடமாட்டேங்கறது, கதையும் ஓடமாட்டேங்கறது. ஜிடாக்ஷம்னு சொல்வா பாருங்கோ, துறந்த நிலை, பொடி போட்டா நேக்கு ஜிடாக்ஷம் எட்டு ஊருக்கு வரும். கால் டேக்சிக்காரா நல்லவானு சொல்றா. கொண்டு வந்து குடுத்தாலும் கொடுப்பான் தீர்க்காயுசுக்காரன். திரும்பக் கெடச்சா அந்த வைத்தீஸ்வரபுத்ரன் அனுக்ரகம். கிடைக்கலேன்னா என்னோட கர்மபலன். எல்லாமே அப்படித்தான். விடுங்கோ,

    பதிலளிநீக்கு
  7. திரு. அப்பாத்துரை அவர்கள் தாத்தா ஆனதற்கு வாழ்த்துகள்.

    அதிரசமும்.....திப்பிசமும் .....ஹா...ஹா.

    பட்டப் பெயர்கள் ரசனை.

    பதிலளிநீக்கு
  8. கேள்விகளும் பதில்களும் அருமை.
    பட்டபெயர்களும் விளக்கமும் அருமை.
    அப்பாதுரை சார் எழுதி அனுப்பியதா ? எப்போது எழுதினாலும் அது அப்பாதுரை பக்கம் தானே!

    அதிரசம் பிரிந்து வந்தால் மாவும் பாகும் கலந்த விதம் சரியில்லை அதற்கு கீதாசாம்பசிவம் வந்து நல்ல பதில் சொல்வார்கள் இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், கொஞ்சம் மைதா மாவு கலந்து பிசைந்து செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  9. நிஜம்மாவே அப்பாதுரைதான் எழுதினாரா? அது சரி! அவர் என்ன தாத்தா ஆயிட்டாரா? அதுவும் நிஜம்மாவா? கேள்வி/பதில் கற்பனை எல்லாம் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  10. //எங்கள் வாசகி ஒருவர் திப்பிசம் செய்வதில் நிபுணி - அவரிடம் கேட்டால் அதிரசம் மாவை வைத்து என்ன திப்பிசம் செய்யலாம் என்று கூறுவார். // திப்பிசம் அதிகமாப் பண்ணறது/பண்ணியது நான் தானே? அது சரி! இந்த மாவில் அதிரசமே பண்ணணுமா? அல்லது வேறே ஏதேனுமா? கொஞ்சம் மைதாமாவு அல்லது அரிசிமாவு+உளுத்தமாவு சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு அதிரசமாகவே பண்ணிப் பார்க்கலாம். அல்லது மாவைக் கரைத்துக் கொண்டு நாலைந்து வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்து அப்பக்காரையில் அப்பமாக ஊத்திடலாம். அதிரசமானால் என்ன? அப்பமானால் என்ன?

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை சாரை தாத்தா துரை என்று மாற்றியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இது sarcasm என்ற நிலையில் எழுதப்பட்டது. மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்.

    அவர் எழுதியதாக எடுத்து தரப்பட்ட பகுதி அவர் எழுதியதே. நான் படிச்ச கதை பகுதியில் தைவாதர்சனம் என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கதாப் பிரசங்க சுருக்கம் இரண்டு வாரங்கள் வந்தது. (நினைவிருக்கிறதா தேவர்கள் ஏன் மனிதர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை). அந்தக் கதையில் வரும் ஒரு பகுதியே என்னுடய இன்றைய பின்னூட்டத்தில் வெளியிட்டுள்ளேன். காரணம் "இன்று அவர் எழுதாதற்கு" இந்த வியாக்யானம் ஒரு பதிலாகத் தோன்றியதுதான். (பொடி டப்பா காணாமல் போய் விட்டது
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொடி இல்லாம நேக்கு கையும் ஓடமாட்டேங்கறது, கதையும் ஓடமாட்டேங்கறது

      நீக்கு
  12. கற்பனைக் கேள்விகளும் பதில்களும் செம. சிரித்துவிட்டேன் சிலதுக்கு.

    கௌ அண்ணா உங்க ஸ்கூல் ஆசிரியர்களின் பட்ட பெயர்கள் விளக்கம் எல்லாம் சுவாரசியம். எங்க ஸ்கூல்லயும் உண்டு. ஆனால் ஒரு பட்ட பெயர் மட்டும் இதுவரை எதற்காக அப்படி வைச்சாங்கன்னு தெரியலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஜெ கே அண்ணா பகிர்ந்திருக்கும் அப்பாதுரைஜி யின் பக்கம் தைவாதர்சனம் கதைப் பகுதி. இங்கு எபியிலும் வந்ததே! குறிப்பாக அந்தப் பொடி டப்பா விஷ்யம் என்னை சிரிக்க வைத்த ஒன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஜெ கே அண்ணா பகிர்ந்திருக்கும் அப்பாதுரைஜி யின் பக்கம் தைவாதர்சனம் கதைப் பகுதி. இங்கு எபியிலும் வந்ததே! குறிப்பாக அந்தப் பொடி டப்பா விஷ்யம் என்னை சிரிக்க வைத்த ஒன்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஜெ.கே சார் தயவில் அப்பாதுரை பக்கம் அருமை!
    /ஜிடாக்ஷம்னு சொல்வா பாருங்கோனு சொல்வா பாருங்கோ/
    "ஜிடாக்ஷம்" என்று ஒரு சொல் நிஜமாகவே உண்டா? அப்படி இருந்தால் அதன் பொருள் என்ன? ஸ்ரீராம் பதில் சொல்வார் என்று ஒரு நம்பிக்கை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!