செவ்வாய், 21 நவம்பர், 2023

சிறுகதை : வரலக்ஷ்மி - துரை செல்வராஜூ

 வரலக்ஷ்மி

துரை செல்வராஜூ

*** *** *** ***

கடகட கடாம் கடூம்..  - என்று மேகங்களுக்குள் பெரிய சத்தம்..

அடுக்களைக்குள் மஞ்சள் நிற முட்டை விளக்கின் மங்கலான ஒளி நடுநடுங்கியது..

" அடி.. மகமாயி... இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்க மாட்டியா?... பாப்பா.. எதுக்கும் அந்த லாந்தர் விளக்கை ஏத்தி வச்சிடு.. "

அடுப்புக்குள் சவுக்குக் கட்டையின் தணலைத் துழாவி விட்ட வரலக்ஷ்மி படபடத்தாள்..

இருக்காதா பின்னே.. பொழுது விடிஞ்சா தீவாளி..  ரெண்டு நாள் சும்மா இருந்துட்டு இன்னிக்கு மத்யானத்ல இருந்து தூறலும் சாரலுமா இருக்கு.. 

" சரிம்மா... "

பாப்பா எனப்பட்ட மகேஸ்வரி அடுக்களையில் இருந்து கூடத்துக்குச் சென்றாள்.. 

இவள் தான் வீட்டுக்குப் பெரியவள்..   பதினேழு முடிந்து பதினெட்டில்  நிற்கிறாள்..  மூன்று வருசத்துக்கு மேல் ஆகின்றது பள்ளிக்கூடத்துக்குப் போய்.. அம்மாவுக்கு ஒத்தாசையாய் அடுப்படியே அடைக்கலம்.. 

இவளுக்கு அடுத்தவள் சரஸ்வதி.. இன்னும் சில மாதங்களில் தாவணி போட வேண்டியவள்.. யாருடனும் அதிகம் பேச மாட்டாள்.. வாசல் ஓரமாக அமர்ந்து பஜ்ஜிக்கு வாழைக்காய் அரிந்து கொண்டிருக்கின்றாள்..

மூன்றாவதாக சுவாமிநாதன்.. சின்னவன் சரவணன்..

சற்று நேரத்தில் அடுக்களைக்குத் திரும்பிய மகேஸ்வரி - " அம்மா.. அங்கே பெரியவனும் சின்னவனும் அடிச்சுக்கிறாங்க... " - என்றாள்..

" எதுக்காம்?.. " 

"  தீவாளி மலர்ல படம் பாக்குறதுக்கு.. "

" அவங்க வந்தப்புறம் தான் அடங்குவானுங்க.. வரட்டும்.. இந்த மாசத்தோட அதை நிறுத்திடச் சொல்றேன்.. பெரிய பரிச்சை வருது.. ஆனந்த விகடனா வந்து  மார்க்கு போடுவான்?.."

அடுப்பினுள் மேலும் ஒரு விறகை எடுத்து வைத்தாள் வரலக்ஷ்மி..

அவங்க எனப்பட்டவர் வீட்டுக்காரர்..  

சங்கர மூர்த்தி..  அண்ணாச்சி பலசரக்குக் கடையில் கணக்கப் பிள்ளை.. இன்னிக்கு காலைல  இருந்து ஏவாரம் சக்கரம் கட்டி ஓடிட்டு இருக்கு.. நாலு ஊரு சனங்களும் ஒண்ணா வந்து நிக்கிறப்போ பசியாவது தாகமாவது... 

பல பேரும் வந்து பஜார் ல ஏட்டிக்குப் போட்டி ன்னு கடை போட்டுப் பார்த்துட்டு ஓடிட்டானுங்க.. இப்போ இந்தக் கடைக்கு எதிர் கடை இல்லாததால ஏகத்தும் வியாபாரம்..

சொடசொடப்பு அடங்கியிருந்த வடைகளை அரிகரண்டியால் வாரி எடுத்த வரலக்ஷ்மி - 

" மணி என்னாச்சு பாரு பாப்பா.. " - என்றாள்..

" சரிம்மா... " என்றபடி மீண்டும் கூடத்துக்குச் சென்றாள்..

அந்தப் பெரிய கடிகாரம்  அப்போது தான் டொண் டொண் என்று பன்னிரண்டு தரம் அடித்து நின்றது.. 

" பாப்பா அவனுங்க என்ன பண்றானுங்க?.. "

" தூங்கிட்டானுங்கம்மா!.. "

" பாவம்.. ஆனந்த விகடன நிறுத்தப் போறேன்னு சொன்னதும் பயந்துட்டானுங்க.. சரி.. ஒரு போர்வை ய எடுத்து மேல போட்டுட்டு வாம்மா.. "

" அம்மா வாழக்காய் எல்லாம் நறுக்கிட்டேன்.. தூக்கம் வருது ம்மா.. " - என்றாள் சரஸ்வதி..

"..சரிடா எந்தங்கம்... தூங்கு.. நாலு மணிக்கு அம்மா எழுப்பி விடறேன்.. "

அந்தக் குழந்தை அப்படியே அங்கேயே படுத்துக் கொண்டது.. 

" ஏய்.. சரசு.. எழுந்திரி.. கூடத்துல வந்து தூங்கு வா.. " - என்று எழுப்பி நடத்திச் சென்றாள் மகேஸ்வரி..

கடலை மாவு கரைத்து அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு  புரட்டி வைத்தாள்.. 

" இன்னும் சுழியன் மட்டும் பாக்கி.. இட்லியும் சட்னியும்  காலைல வச்சுக்கலாம்.. "

தனக்குத் தானே சொல்லிக் கொண்ட போது மகேஸ்வரி குறுக்கிட்டாள்..

" அம்மா.. நான் சுழியன் பூரணம் உருட்டித் தரவா.. "

" நீயும் கொஞ்ச நேரம் தூங்கு மகேசு.. நான் பார்த்துக்கறேன்.. வயசுப் புள்ளை அடுப்புக்கிட்ட ரொம்ப நேரம் உட்காரக் கூடாது.. "

வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டது..

" ஹை.. அப்பா வந்துட்டாங்க.. "

பாவாடை பரபரக்க வாசலுக்கு ஓடினாள் மகேஸ்வரி..

எதிரில் வந்து நின்ற கணவனை ஏறிட்டு  புன்னகைத்தபடி புறங்கையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டாள் வரலக்ஷ்மி..

" சாப்பிட்டீங்களா... பெரியவன் சொன்னான் கடையிலயே சாப்பாடுன்னு.. "

" ஆயிரம் இருந்தாலும் உங்கையா ல ஒரு வாய் சாப்டற மாதிரி ஆகுமா.. "

இன்னும் குறும்பு குறைய வில்லை என்ற நினைப்பு வந்ததும் நெஞ்சுக்குள் - ஜில் என்றிருந்தது..

" கடையில வேலை கடுமையா இருந்திருக்கும்.. "

" ஏன்.. எதுவும் செய்யணுமா?.."

" புதுத் துணியெல்லாம் மடிச்சது மடிச்சபடி கெடக்கு.. அதை எடுத்து உதறி மஞ்சள் தடவி வைக்கணும்.. நாஞ்செய்றேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாள் மகேஸ்.. பாவம் ரொம்பவும் களைச்சுப் போய்ட்டா.. ஆனாலும் பட்சணம் எல்லாம் ஆர்வமா செய்றா.. நல்ல இடம் வந்தா பேசிடுவோமா!.. "  

நல்ல இடத்தில் ஒப்படைத்து விட் வேண்டும் - என்று தாய்மையின் தவிப்பு வரலக்ஷ்மியிடம்..

" பேசிடலாம் தான்.. இருந்தாலும் என்ன அவசரம்?..  பதினெட்டு முடியட்டுமே.. "

" நான் உங்க வீட்டுக்குள்ள வந்தப்போ எனக்கு எத்தனை வயசு!?.. " - வரலக்ஷ்மியின் கேள்வி..

" அதையெல்லாம் இப்போ சொல்ல முடியுமா!.. சொன்னாத் தான் ஒத்துக்குவியா?.. " 

இருபது வயதில் இருந்த அதே குறும்பு சங்கர மூர்த்தியிடம்..

மெல்லிய புன்னகையுடன் வரலக்ஷ்மியின் மூக்குத்தி மின்னியது..

சுழியன்கள் பக்குவமாகி மணம் வீசிக் கொண்டிருக்க கடிகாரம் நாலரையைக் காட்டியது..

ஊர் விழித்துக் கொள்ள, ஆங்காங்கே டமால்.. டுமீல்..  என்று பெருஞ்சத்தங்கள்..

பிள்ளைகளை எழுப்பி எண்ணெய் வைத்து வெந்நீரில் ஸ்நானம் செய்விக்க - பெருமகிழ்ச்சியுடன் புதுத் துணிகளை கட்டிக் கொண்டனர்.. 

திருச்சிராப்பள்ளி ஆகாச வாணியில் இருந்து நாகஸ்வர மேளதாளங்கள் முழங்க வீட்டுக்குள் சாம்பிராணி வாசனை..

தர்மலிங்க பத்தரிடம் சொல்லி ரெண்டு பிள்ளைகளுக்கும் ஜிமிக்கி செய்து கொடுத்ததில் ரொம்பவும் சந்தோஷம்..

பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருபுவனத்து பட்டுப் பாவாடைகள்.. பசங்களுக்கு  டிராயரும் சட்டையும்.. கும்பகோணம் பெரிய தெருவில் துணி எடுத்துத் தைத்தது..

சங்கர மூர்த்தி புது வேஷ்டி கட்டிக் கொண்டு நிமிர்வதற்குள் கிணற்றில் நீர் இறைத்து ஸ்நானம் செய்து விட்டு ஓடி வந்த வரலக்ஷ்மி புதுச் சேலையை சுற்றிக் கொண்டு கணவனை நமஸ்கரித்து எழுந்தாள்...

அம்மா அப்பாவின் கால்களில் பிள்ளைகளும் நமஸ்கரிக்க ஆளாளுக்கு பத்து ரூபாய் கிடைத்தது..

கிழக்கு முகமாக அமர்ந்து எல்லாரும் சாப்பிடவும் பக்கத்து வீடுகளில் இருந்து பட்சண வரிசைகள் வந்து கொண்டிருந்தன..

எதற்கும் விடாமல் மேகங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தூற்றலில் நனைந்து கொண்டே நகரத் தொழிலாளர்கள் வந்தனர்..

மூங்கில் தட்டுகளில் -  தேங்காய்ப் பாறை, அதிரசம், சோமாசா, முறுக்கு, பஜ்ஜி, வடை, சுழியன், வெற்றிலை பாக்குடன் ஐந்து ரூபாயும் வைத்து ஒவ்வொருத்தருக்கும் வழங்கினர்..

" கணக்கப் பிள்ளைன்னா கணக்கப் பிள்ளை தான்..  மகராசன் மகராசி புள்ள குட்டிகளோட நோய் நொடியில்லாம தீர்க்காயுசா இருக்கணும்!.. "

ஏழை மக்களின் வாழ்த்துகள் மனதுக்கு இதமாக இருந்தன..

மகேஸ்வரியும் சரசும் கம்பி மத்தாப்புகளுடன் ஓடிக் கொண்டிருக்க -
பெரியவனும் சின்னவனும் கொளுத்திப் போட்ட சரவெடிகளால் தெரு அதிர்ந்து அடங்கியது.. 

திரையரங்குகளை நோக்கி மக்கள் விரைந்து கொண்டிருக்க -
புன்னகையுடன் வீட்டுக்குள் திரும்பிய வரலக்ஷ்மி பம்பரமாகச் சுழன்று அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பட்சணங்களைப் பகிர்ந்து விட்டு அடுக்களையில் அதையும் இதையும் ஒழுங்கு செய்து கூடத்தைக் கூட்டிப் பெருக்கி அள்ளி ஒதுக்கி விட்டு வாசல் கதவைத் தாழிட்டு  நிமிர்ந்த போது மணி ஒன்பதரை ஆகியிருந்தது..

பிள்ளைகள் கூடத்தில் புதுத் துணிகளுடன் உறங்கிக் கிடந்தனர்.. 
அந்தப் பக்கம் அறைக் கதவுகள்  சற்றே சாத்தப்பட்டிருந்தன..

முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்ட வரலக்ஷ்மி அறைக்குள் நுழைந்து, ' என்னங்க!.. ' - என்றாள் மெல்லிய குரலில்..

***

64 கருத்துகள்:

  1. ஒரு தீபாவளி நாள் ஒட்டிய படப்பிடிப்பு. ஆரம்பித்தது தெரியவில்லை. முடித்தது தெரியவில்லை.
    அவ்வளவு சுருக்காக முடிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா அவர்களுக்கும் நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மத்தியதரக் குடும்பத்தின் அந்த நாளைய தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறால்

    இருந்தாலும் நேரம் இடறுகிறது. பஜ்ஜிக்கு இரவே மாவு தோய்ப்பார்களா, தீபாவளிக் கொண்டாட்டங்கள் (அதிகாலை) பற்றி எழுத ஆரம்பித்த உடனேயே ஒன்பதரை என்று குறிப்பிட்டுள்ளது, காலை 9 1/2 தான், அப்போதே பசங்க தூங்கிவிடுமா.... என்பதெல்லாம் நேரக் குழப்பங்கள்.

    கதை நன்றாக வந்திருக்கிறது... இந்தக் காலத்திலும் அத்தகைய கொண்டாட்டம் எங்கேயும் நடந்துகொண்டிருக்கிறதா? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லை...

      /// இருந்தாலும் நேரம் இடறுகிறது.///


      நாலரை மணிக்கு முன்பாக எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.. ஸ்நானம் முடித்தாக வேண்டும்..

      உதவிக்கு யாரும் பெரியவர்கள் இல்லாத நிலையில் பிள்ளைகள் தான் கைக்குத் துணை..

      தவிர இரவில் சரியாக உறக்கம் இல்லாத நிலையில் விடியற் காலையில் எழுந்து குளித்து விட்டு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் சற்று மசமசப்பாகத்தான் இருக்கும்..

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....நெல்லை, அந்த அம்மா மகேஸ் - பெண் குழந்த்ை எல்லாம் விடிய விடிய அடுக்களைல வேலை .....காலைல எல்லாம் முடிக்கறப்ப தூக்கம் கண்ணைத் தழுவாம என்ன பண்ணுமாம்...

      சமீபத்தில் கூட என் தோழி ஒருவரின் வீட்டில் அவங்க உறவுகள் நாலு சகோதரிகளும் அடுத்தடுத்து இருப்பதால் எல்லாருக்கும் சேர்த்து ஒரே வீட்டுல 4 நாளாகப் பலகாரம் தயாரிச்சாங்க அண்ணன் வீட்டுக்கும் சேர்த்து....போதாதுன்னு தீபாவளிக்கு முன்னர் இரவு படுக்கறப்ப 2 மணியாம் எல்லாம் தயாராக்கி வைச்சிட்டு...பலகாரம் எண்ணிக்கை கேட்டப்ப மயக்கமே வந்துவிட்டது. 12 ஐட்டம் சொன்னா....இத்தனைக்கும் பொருளாதார ரீதியாக மிக மிகக் கஷ்டப்படும் குடும்பண்கள்!!!!!!!!!!!!!!!!!!!!

      பாண்டிச்சேரியிலிருந்து பழக்கம். ஒவ்வொரு வருடமும் இப்படிச் செய்யறாங்க. எனக்கு ஆச்சரியமான விஷயம்...பொருளாதார ரீதியாகக் கையில் காசு அவ்வளவாக இல்லாமல் இப்படி இருந்தும் எப்படி இவ்வளவு செய்ய முடிகிறது என்று. உடைகளும் அது போல!

      கீதா

      நீக்கு
    3. ஆகா.. அற்புதம்..

      இப்படியும் ஒரு குடும்பத்தை இங்கு அறிமுகம் செய்ததற்காக மகிழ்ச்சி..

      அன்பின் உறவுகள் பலமாக இருப்பதே அதிர்ஷ்டம்...

      விவரமான செய்திகளுக்கு நன்றி சகோ..

      நீக்கு
  3. சிறுகச் சிறுக தங்கம் சேர்க்கும் நடுத்தரக் குடும்ப உத்தியும், பெண்ணுக்கு படிப்பை நிறுத்தி அடுக்களை வேலை பழக விட்டு, அதன் தொடர்ச்சியாக சின்ன வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் அந்தக்கால நடைமுறையையும் நன்றாக்க் கொண்டுவந்திருக்கிறார்.

    ஓவியம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லை..

      /// பெண்ணுக்கு படிப்பை நிறுத்தி அடுக்களை வேலை பழக விட்டு, அதன் தொடர்ச்சியாக சின்ன வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் அந்தக்கால நடைமுறையை ///

      கதையைப் புரிந்து கொண்ட கருத்து.. மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதைத் தவறவிட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்றாவிப் படம் - சித்தி.

      நீக்கு

    2. பொருத்தமாக நினைவு கூர்ந்த கவியரசரின் இந்த
      அழகுக் கவிதை பற்றி தம்பி துரை என்ன சொல்க்றார் என்று பார்க்கலாம்.

      நீக்கு
    3. ஈடு இணையில்லாத் பாடல் ஒன்றை அண்ணா நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.

      சற்று நேரம் கழித்து வருகின்றேன்.. இந்தப் பாடலைப் பற்றி ஆத்மார்த்தமாக நிறையவே பேசலாம்..

      கை விரலில் சற்று வலி..

      நீக்கு
  6. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  7. இன்று வரலக்ஷ்மி கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  8. அழகான சித்திரம்..

    சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  9. /// மஞ்சள் நிற முட்டை விளக்கின் மங்கலான ஒளி நடுநடுங்கியது.. ///

    /// அந்த லாந்தர் விளக்கை ஏத்தி வச்சிடு.. ///

    /// அடுப்புக்குள் சவுக்குக் கட்டையின் தணலைத் துழாவி.. ///

    - என்றெல்லாம் எழுதி கதையின் காலத்தை இலை மறைவாக வைத்தேன்..

    இந்தச் சம்பவம் நிகழ்கின்ற ஆண்டு 1970.. அப்போது தங்கத்தின் விலை ரூபாய் இருநூறுக்கும் குறைவு தான்..

    எல்லாவற்றையும் போல இந்தக கதையின் உயிரோட்டத்தையும் புரிந்து கொள்வீர்களாக..

    பதிலளிநீக்கு
  10. அறுபதுகளில் எல்லோர் வீட்டிலும் நடைபெற்ற தீபாவளியின் குதூகலக் காட்சிகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ மனோசாமிநாதன்

      /// அறுபதுகளில் எல்லோர் வீட்டிலும் நடைபெற்ற தீபாவளியின் குதூகலக் காட்சி..///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  11. >>> காலமிது காலமிது
    கண்ணுறங்கு மகளே
    காலமிதைத் தவறவிட்டால்
    தூக்கமில்லை மகளே
    தூக்கமில்லை மகளே..<<<

    கவியரசர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்..

    கல் நெஞ்சத்தையும் அசைய வைக்கின்ற உயிரோட்டமான பாடல்..

    மாலையிட்ட கணவன் வந்து
    சேலை தொடும்போது
    மங்கையரின் தேன் நிலவில்
    கண்ணுறக்கம் ஏது?..

    இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் அற்புதம்..

    பிள்ளைகளைப் பெற்று வளர்த்த பின்னும் அருகிருந்து அன்புடைய கணவனை ஆரத் தழுவிக் கொள்வதே நல்மங்கையருக்கு உரிய இயல்பு..

    இதை நுட்பமாக வைத்து கதையை நிறைவு செய்தேன்.

    தாங்களும் இதனைக் கண்டுணர்ந்து அழகுக்கு அழகு செய்வது போல கவியரசரின் பாடலைக் கருத்தாக சொல்லி விட்டீர்கள்.. நன்றி..

    ஆனால் இந்தக் கதை தன்னிச்சையாக என்னுள் எழுந்தது..

    எழுதும் போது வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை..

    இந்தக் கதையை தட்டச்சு செய்தபோது இதற்கான தலைப்பு வேறு..

    நிறைவில் தான் வரலக்ஷ்மி என்று எழுதினேன்..

    போகமும் லக்ஷ்மி கடாட்சம் அல்லவா!..

    தியாகத்தின் திருவுருவான மங்கையர்க்கு இந்தக் கதை சமர்ப்பணம்..

    பதிலளிநீக்கு
  12. 1970
    விளம்பர ஓலங்கள் இல்லாது நேர்மையான வணிகமும் வாழ்க்கையும் செழித்திருந்த காலம்...

    பச்சை நிற ஐந்து ரூபாய்த் தாளைக் கண்டால் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாபகம் பசுமையாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட காலமது.

      பச்சை நிற ஐந்து ரூபாய் நோட்டு, பின்க் நிற இரண்டு ரூபாய் நோட்டு, ஏன் பர்ப்பிள் நிறத்தில் சின்னதாக ஒரு ரூபாய் நோட்டு - நோட்டுன்னா நோட்டு.. அதுல்ல நோட்டு ! இப்போது பெரிசு பெரிசாக நம்பரைக் காண்பித்து, நம் கையைத் தொட்டுவிட்டு பறந்துவிடுபவைதான் தாள்கள்.

      வாழ்க்கையும் வெறுங்காகிதமா ஆகிப்போச்சோன்னு தோணுது..

      நீக்கு
    2. /// வாழ்க்கையும் வெறுங்காகிதமா ஆகிப்போச்சோன்னு தோணுது.. ///

      உண்மை தான்..

      நினைத்தால் நெஞ்சம் அதிர்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  13. நடிகர் திலகத்தின்
    திரைப்பட சுவரொட்டிகளில் சாணியடித்த அரசியல் வக்கிரங்களையும் மறக்க இயலாது..

    பதிலளிநீக்கு
  14. அழகான கதை. கால யந்திரத்தில் பயணித்து 50 வருடங்கள் பின்னோக்கி சென்று தீபாவளி கொண்டாடிய உணர்வை தந்தது.

    பதிலளிநீக்கு
  15. @ இணைய திண்ணை..

    /// ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று தீபாவளி கொண்டாடிய உணர்வை தந்தது. ///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. அந்தக் காலத்துப் பெண்களின் இயல்பை அவங்களுடைய நடவடிக்கைகளைக் கண்ணெதிரே கொண்டு வந்து விட்டீர்கள். சின்ன வயசு தீபாவளி நினைவுகளெல்லாம் வந்து போனது. எங்க வீட்டில் எல்லாம் சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டுப்பத்துப் ப்தினோரு மணிக்குத் தூங்க ஆரம்பிப்போம். கிட்டத்தட்ட அதைப் போலவே இந்தக் கதையிலும். வரலக்ஷ்மிக்குக் கணவனிடம் உள்ள பாசமும்/காதலும் கதையில் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதற்கெல்லாம் முடிவு இல்லை. கௌதமன் அவர்கள் வரைந்திருக்கும் பதினெட்டு வயதுப் பெண்ணின் சித்திரமும் அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// வரலக்ஷ்மிக்குக் கணவனிடம் உள்ள பாசமும்/காதலும் கதையில் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இதற்கெல்லாம் முடிவு இல்லை.. ///

      சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.. முடிவே இல்லாதது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  18. கமலா ஹரிஹரனை இன்னமும் காணோமே? கோமதி அரசுவுக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது ஸ்ரீராமுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கமலா ஹரிஹரன் அவர்களை இன்னமும் காணோம் ///

      எனக்கும் கவலை தான்..

      நீக்கு
    2. கமலா ஹரிஹரன் மகன் வெளி நாட்டிலிருந்து வந்து இருப்பதால்
      நேரம் சரியாக இருக்கும் பதிவில் சொல்லி இருந்தார்கள். இணைய பக்கம் கொஞ்ச நாள் வர முடியாது என்று.

      நீக்கு
    3. தங்களது தகவலுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. கமலா அக்கா அப்போவே சொல்லியிருந்தாங்க கீதாக்கா. அவங்க மகன் வெளிநாட்டிலிருந்து வருவதால் நேரம் சரியாக இருக்கும் என்று

      கீதா

      நீக்கு
  19. கதை நன்றாக இருக்கிறது.
    //அம்மா.. நான் சுழியன் பூரணம் உருட்டித் தரவா.. "//

    மகேஸ்வரியின் கேள்வி எங்கள் அத்தையிடம் , அம்மாவிடம் நாங்கள் கேட்பது நினைவுக்கு வந்து விட்டது.

    அத்தைக்கு ஒத்தாசையாய் நாங்களும் பூரணத்தை இரவு உருட்டி வைப்போம். ஆனால் காலையில் 3 மணிக்கு விழித்து விடுவார்கள் அத்தை, அம்மா எல்லாம். காலையில்தான் சுசியம் வடை, பஜ்ஜி எல்லாம் செய்வோம்.

    சுசியத்திற்கு பக்குவமாக கடலை பருப்பை வேக வைத்து தேங்காய் பூ , வெல்லம்,ஏலாக்காய் சுக்குத்தூள் போட்டு நெய் விட்டு கிண்டி இறக்க வேண்டிய பக்குவத்தையும், உருண்டைகள் எப்படி உருட்ட வேண்டும் என்று வருடா வருடம் சொல்வார்கள்.

    அத்தை பூரணத்திற்கு தயார் செய்தவுடன் மருமகள் நாங்கள் எல்லாம் பேசிக் கொள்வோம், அத்தை இப்போது வகுப்பு எடுப்பார்கள் என்று .
    ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்து கொள்வோம். அவர்களுக்கு பெண் குழந்தைகள் இல்லை. அதனால் எங்களுக்கு சொல்லி கொடுத்து மகிழ்ந்தார்கள் என்று நினைப்போம்.

    காலை அக்கம் பக்கம் பலகாரம் பகிர்ந்து கொடுத்து காலை ஆகாரம் முடித்து சிறிது ஓய்வு எடுத்தபின் தான் மதியம் சமையல் எங்கள் வீடுகளிலும். அத்தை ஓய்வு எடுப்பார்கள் நாங்கள் சமைப்போம்.

    அம்மாவீட்டில் நாங்கள் வெடிகளை தூக்கி கொண்டு வெடிக்கபோய் விடுவோம் வெளியே அக்கம் பக்கம் நட்புகளுடன். ஓற்றைவெடி, ஓலைபட்டாசு எல்லாம் நட்புகளுன் கதை பேசி வெடிப்போம். பெரிய பட்டாசு எல்லாம்(லட்சுமி வெடி, அணுகுண்டு பெரிய சரம் )
    அப்பா பக்கத்தில் இருக்கவேண்டும் என்பார்கள்.

    தீவாளி மலர்ல படம் பாக்குறதுக்கு.. "//
    "நானும் பார்க்கிறேன், என்னிடம் கொஞ்சம் கொடு நீயே பார்த்து கிட்டு இருக்கே " என்று சண்டையிடுவதும் நடக்கும் வீடுகளில். அம்மா, அப்பா சமரசம் செய்வார்கள்.
    திருமணம் ஆன போது தீபாவளிக்கு கோவை போகும் போது ரயில் பயணத்திற்கு பல வித வாரப் பத்திரிக்கையில் வரும் தீபாவளி மலர் வாங்கி பார்த்து கொண்டு ஊருக்கு போனது நினைவுகளில்.

    தீபாவளி பதிவு பழைய மலரும் நினைவுகளை கொண்டு வந்தது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மகேஸ்வரியின் கேள்வி எங்கள் அத்தையிடம் , அம்மாவிடம் நாங்கள் கேட்பது நினைவுக்கு வந்து விட்டது.. ///

      /// நெய் விட்டு கிண்டி இறக்க வேண்டிய பக்குவத்தையும், உருண்டைகள் எப்படி உருட்ட வேண்டும் என்று வருடா வருடம் சொல்வார்கள்.. ///

      /// அவர்களுக்கு பெண் குழந்தைகள் இல்லை. அதனால் எங்களுக்கு சொல்லி கொடுத்து மகிழ்ந்தார்கள் என்று நினைப்போம்.. ///

      தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் நெகிழ்ச்சி..
      மகிழ்ச்சி.. நன்றி 

      நீக்கு
  20. கதையில் வரும் பாப்பா மகேஸ்வரியை அழகாய் வரைந்து விட்டார் கெளதமன் சார். விரைவில் வரன் பார்க்க வேண்டியது தான். அந்தக்கால இரட்டை ஜடை பருவத்தை அழகாய் வரைந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மகேஸ்வரியை அழகாய் வரைந்து விட்டார் கெளதமன் சார். விரைவில் வரன் பார்க்க வேண்டியது தான்.. ///

      மகிழ்ச்சி..
      நன்றி.. நன்றி..

      நீக்கு
  21. அந்தக்கால குடும்பங்களின் தீபாவளி அழகாக கண்முன்னே விரிந்து நின்றது.
    வாழ்த்துகள்.

    இப்பொழுது பட்சண கடைகள் வந்து தீபாவளியும் ஏனோதானோ என்று வந்துபோகிறது.

    பாவாடை தாவணியில் வண்ணப்படமும் அழகுசெய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்பொழுது பட்சண கடைகள் வந்து தீபாவளியும் ஏனோ தானோ என்று வந்து போகிறது.. ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  22. கதை நன்று துரை அண்ணா. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தீபாவளி கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

    இப்போதும் இப்படிச் செய்பவர்கள் இருக்கிறார்கள் எங்கள் வீடுகளில்.

    கௌ அண்ணா படம் மிக நன்றாக இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// குழந்தைகள் இருக்கும் வீட்டில் தீபாவளி கொண்டாட்டமாகத் தான் இருக்கும்.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  23. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  24. இது சிறுகதையா? தொடர்கதையின் முதல் அத்தியாயமா? ஏனென்றால் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் பாத்திரங்களின் அறிமுகம் மட்டுமே நடந்திருக்கிறது. இறுதியில் "என்னங்க என்றாள் மெல்லிய குரலில்" என்று முடித்திருப்பது தொடர்ந்து ஏதோ வரப்போகிறது என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொமாண்டிக் முடிவு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ரொமாண்டிக்கா? ஆஆ.. துரை செல்வராஜ் துர்வாசர் ஆகிவிடப் போகிறார்.. ஜாக்கிரதை(துரை சார் டேக் இட் ஈஸி)

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. ஸ்ரீராம் அவர்கள்
      விரும்பினால் இந்தக கதையைத் தொடரலாம்..

      நீக்கு
    5. "என்னங்க என்றாள் மெல்லிய குரலில்" என்று முடித்திருப்பது -

      போனஸ்!.. :))

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!