சனி, 18 நவம்பர், 2023

நல்ல விஷயங்கள் நாலுக்கும் மேல... மற்றும் நான் படிச்ச கதை

 நடக்குமோ..  நடக்காதோ...   செய்தி இனியது!

80 Wash நிறுவனம் உலர் நீராவி மற்றும் அயன் இல்லாத கதிர்கள் கொண்ட ஐஎஸ்பி ஸ்டீம் தொழில்நுட்பம் மூலம் அரை கோப்பை தண்ணீரில் சலவைத்தூள் இல்லாத துணி துவைக்கும் நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்பின் மிஷின்கள் முன்னோட்ட அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.  


நன்றி JKC ஸார்.


====================================================================================================

சென்னை:  தமிழக அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கினார் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீர முத்துவேல்.


==================================================================================================



=============================================================================================

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கும் அரசு பள்ளி தலைமையாசிரியை...


===========================================================================================


 

நான் படிச்ச கதை (JKC)

 கதை : காசி

கதையாசிரியர் பாதசாரி


 ஆசிரியர் பற்றிய குறிப்பு

பாதசாரி என்பது புனை பெயர். இயற்பெயர் நா விஸ்வநாதன். கோயம்புத்தூரில் வசிக்கிறார்.

இன்றைய விமரிசனத்திற்கு உள்ளாகும் காசி என்ற இக்குறுங்கதை எஸ்ரா மற்றும் பலரால் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நான் கதை முழுதும் தரவில்லை. சுருக்கம் போலும் இங்கு எழுதவில்லை. கதையின் சுட்டிகள் கடைசியாக தரப்பட்டிருக்கின்றன. கதையைப் பலரும் யூடியூபிலும் பேசி வெளியிட்டுள்ளனர். பவா செல்லதுரை உட்பட. 

அறிவுப்பசி தீர்க்க ஆராய்ச்சி செய்து மடிந்த ‘ஆயிஷா’ கதையை மறந்திருக்க மாட்டீர்கள்.  அதே போன்று தன்னைத் தானே அறிய முற்படும் ஒரு இளைஞனின் கதை தான் ‘காசி’ என்ற கதை. கதை என்று சொல்வதை விட ஒரு மனோதத்துவ ஆராய்ச்சி, ஒரு டயரிக் குறிப்பு எனலாம். “சாவை எடுத்து அளந்து பார்த்தவன் காசி.”

காசியின் கதை குணா என்ற அவனுடைய நண்பன் சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது. 

காசியின் வாழ்க்கையை மூன்று பருவங்களாக பிரிக்கலாம். குணாவுக்கு  காசியுடன் நட்பு என்பது கடந்த 10 ஆண்டுகளாகத்தான். காசியின் தற்போதைய வயது 29. அதற்கு முன் நடந்த விசயங்களை பிறர் சொல்ல அறிந்ததாகக் கூறுகிறார்..

//காலேஜ் பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். ‘ஹிப்பாக்ரசி’யை அம்பலப்படுத்தி மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து குதூகலித்துத் திரிந்த எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது. வித்தியாசமானவர்களாக மாற்றி மாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம்.//

//காசியின் அப்பா, காசிக்கு ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயது மூத்த ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின் அப்பா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இரண்டோடு, காசியின் பெரியப்பா – தன் அண்ணன் – குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டார். மில் வேலை. சாந்தமான குணம்.//

//அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ, வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின் இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும்.//

//அவனுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில், கனிகள் அல்லது ஐசக் நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான் என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள் வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது.//

//76-இல் காலேஜ் விட்டு வெளியே வந்தான். இரண்டு பேப்பர்கள் ஃபெயில். அப்புறம் அதை எழுதவே இல்லை. //

இப்படியாக முதல் இரண்டு பருவங்களை விவரிக்கிறான் குணா. பின்னர் வரும் 10 வருடங்கள் கதையை குணா சொல்வதாக கதை அமைகிறது.

கதையின் துவக்கம்:

//போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான். உறைந்த ரத்தப் படுக்கை மீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள்.

ஊரில் நான்கு பேர் ‘மறைலூஸ்’ என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நான்கு பேருக்கும் இடையிலான ‘ஷாக்’ அப்ஸார்பரை’ பழுது பார்த்து சரியாக வைத்துக் கொள்ளாமல், இவர்கள் உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நேற்று காசியிடமிருந்து கடிதம், ‘காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம்’ என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான். //

இப்படி துவங்கும் கதை காலம் இடம்  என்று சீரில்லாமல் எப்படியோ எங்கெங்கோ  செல்கிறது.

சுருக்கமாக காசியின் இந்தப் பத்து வருடக் கதையை  இப்படி சொல்லலாம்.

ஒழுக்கச்சிதைவு.:

கல்லூரியில் படிக்கும் காலத்தில் எல்லா இளைஞர்கள் போலவும் புரட்சியாளனாக தோற்றமளிக்க விரும்பினான் காசி. சிகரெட், குடி பழக்கங்களை பற்றுகிறான்.

அறிவு ஜீவி:

இலக்கியத்தில் பற்று. நிறைய புத்தகங்கள் வாங்குகிறான். படிக்கிறான். தத்துவப் புத்தகங்கள் அதிகம். கவிதைகளில் ஈடுபாடு, எழுதுதல்.

காதல்:

காசி நான்கு பெண்களை காதலித்திருக்கிறான். முதலில் தெலுங்கு கற்றுக்கொள்கிறேன் என்று தெலுங்கு வாத்தியாருடைய பெண்ணைக் காதலிக்கிறான். அடுத்து PUC படிக்கும்போது அடுத்த தெருவில் இருந்த பெட்டிக்கடைக்காரரின் பெண்ணைக் காதலிக்கிறான். காதல் மயக்கத்தில் கவிதை எல்லாம் எழுதுகிறான். அடுத்து ஒரு வேலையில்லா பட்டதாரிப் பெண்ணைக் காதலிக்கிறான். அவள் வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள்..

//இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும் அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப் போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்கள்…. சூதுவாது தெரியாத பெண். ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள்.//

இதற்கு மேலும் ஒரு கல்லூரி பேராசிரியையை ஒரு தலையாக காதலித்திருக்கிறான். கடிதங்கள் எழுதியிருக்கிறான். அடி வாங்காதது தான் மிச்சம்.

வேலை:

எப்படியாவது ஒரு வேலை வேண்டும் என்று ஒரு டைம் கீப்பர் வேலையில் சேர்ந்தான். முடியவில்லை. பூப்பந்து விளையாட்டில் சிறந்தவன் என்பதன் அடிப்படையில் விளையாட்டுக் கோட்டாவில் NTC மில்லில் வேலை. பின்னர் கொஞ்ச நாட்கள்

//ரேடியோ நிலையத்தில் தினம் போய்க் குலாவினான். ‘நாளொரு தகவல்’, ‘உங்கள் கவனத்திற்கு’ என்று கண்டதை எழுதிக் காசு வாங்கினான். மாதம் 75,100 என்று வருவதை டீ, சிகரெட், கள்ளென்று செலவழித்துச் சுற்றினான்.//

சில நண்பர்களின் தயவால் மார்க்கெட்டிங் மேனேஜர் என்று தற்போது ஊர் ஊராக சுற்றுகிறான். கதையின் ஆரம்பத்தில் மெடிக்கல் ஷாப் வைத்திருப்பதாக கூறுகிறான்.

//”இல்லடா குணா… எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா… எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம் தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செய்யறது, செயற்கையா ‘டாண்’ணு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, ‘கன்’ டயத்துக்கு குளியல்… கட்டுப்பாடான தினம் தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா… வெறுத்து, குமட்டி…. இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே… அதிகாரி உருட்டல்… ஓவர் டைம்… அப்பா!//

கல்யாணம்:

 //….ஒரு ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும், உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக் கேட்டு அப்பாவை வாதித்தான்….அப்பாவும் யாரையோ பார்த்து கேட்டுவிட்டார். ‘பெண் கேட்க என்ன தைரியம்’ என்று அப்பன் குடிகாரன் தூதுவரை ஏசி அனுப்பினானாம்.//

குணாவின் முயற்சியால் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை மணம் முடிக்கிறான். ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்ற பெண்.

//மூன்று பெண்களில் நடுப்பெண். ‘ஆணாக’ சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். கல்லுமில்லை, புல்லுமில்லை ‘இம்பொட்டண்ட்’ என்று தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்துவிட்டவள்.//

//காசி கல்யாணம் முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை…. ‘வீட்டு மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் ‘மாமனார்’ வீட்டுலையே வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்’ //

//என்னால முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா மனம் விட்டுப் போச்சு. ‘இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம, இதப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாதுப்பா… என்னாலே அந்த வீட்லே சமாளிக்க முடியாதுப்பா… அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா… எனக்கு பயமா இருக்குது… அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா’ ன்னு கதறினேன்டா. ‘//

//இருமனமொப்பிய திருமண விலக்கு (Mutual Divorce) கிடைத்து விட்டதாகச் சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவே தனது அதே ‘குடும்ப வக்கீல்’ மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது என்றான்.//

சாமியார்களின் அறிமுகம்:

 //ஒரு சாமியாருடன் தீவிரப் பழக்கமாயிருந்தது எனக்கு. …இங்கிலீஷ் சாமியார் அவர்….சாமியிடம் காசியை அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான். பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு, ‘பாத்துட்டு மறக்காம தாடா’ என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை புரிந்து கொண்டுவிட்டது.

‘நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில் ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு’

‘கடவுள் நம்பிக்கை உண்டா?’

காசியே பதில் சொன்னான். “இல்லே சாமி… ஆனா ‘கடவுள்’னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!”

‘நல்லாப் பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?”

”போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம் கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார்.//

//..குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து பழகணும்” என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி, அவனை ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டார்.//

//திருப்பதி போய் வந்தானாம்….அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். ‘நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக் கூடியதாக இல்லை’ என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச் செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும் சொன்னான்.//

மனக்குழப்பங்கள்:

//”தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்… எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி… சில சமயம் எனக்குள்ளே இருக்கற ‘நான்’ தான் நிஜம் – இந்த வெளியிலே ‘நான்’ சூட்சுமம்னு பயமா தோணுதடா…”//

//காபிக் கரண்டியாலே வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே எனக்கு முடிவுக்கு வர முடியலே…”//

//காபியா, டீயா என்று கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால் சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.//

//எனக்கு வேலைக்குப் போக பயமாயிருக்குடா… ‘ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம்’ டா.//

//ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை அவ்வளவுதான்.//

//ஒரு முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப் பிரமையில்(?) பரிதவித்துப் போனானாம் காசி. நிறைய மாத்திரைகள்… மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் – ஷணச்சித்தன் என்றானான் காசி.//

//ஜி.எச்.சில் இரண்டு வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம். கழுத்தில் ஒரு சின்ன ஆபரேசன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ்.

Personality disorder, Affection seeking phenomenon, Advised psycho therapy.//

தற்கொலை முயற்சிகள்:

பெண் கிடைக்காத விரக்தியில்// …தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பர்பியைக் கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக்-20ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய, பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள். மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள்.//

கல்யாணம் ஆனபின் மனைவியுடன் குடும்பம் நடத்த முடியாமல் போனபோது

 //மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான். ஆத்மார்த்தமான தற்கொலை முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான். அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது.//

இக்கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி

 //போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்து கொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான். உறைந்த ரத்தப் படுக்கை மீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள்.//

இவ்வாறு காசியின் 10 வருட வாழ்க்கை குறிப்பை மனோதத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்கிறார் ஆசிரியர். கதையின் முடிவு என்று ஒன்று தனியே இல்லை.

ஒன்னுமே புரியலை. கதையில் இருந்து பிட் பிட்டாக சில வரிகளை தலைப்பு கொடுத்து கொட்டி விட்டால் போதுமா? நடந்தது என்ன? என்ற கேள்விகள் தோன்றலாம்.

எனக்கு தோன்றியது இவ்வாறு.

காசியை ஒரு முரண்பட்ட பாத்திரமாக சிருஷ்டித்திருக்கிறார் ஆசிரியர். காசி கூறுவது ஒன்று செய்வது ஒன்று.

* பைத்தியத்திற்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால் நான் பைத்தியம் இல்லை. இவ்வாறு கூறுபவன் பைத்தியத்திற்கு ஷாக் சிகிச்சை நான்கு முறை எடுத்துக் கொள்கிறான்.

* கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவன் திருப்பதிக்கு சென்று மொட்டை போடுகிறான்.

* 100கி.மீ தூரத்தில் உள்ள ஊருக்கு டிக்கெட் எடுப்பான். ஆனால் பத்து கிமி யில் இறங்கி ஊர் திரும்புவான்.

* சாதாரண முடிவெடுக்க பயப்படுபவன் தற்கொலை முயற்சி செய்ய  பயப்படவில்லை . . அதுவும் நான்கு முயற்சிகள்.

இப்படி பல முரண்பாடுகள்.

ஆகவே  ஆசிரியர், ஆசிரியரின் நண்பர்கள் பலரின் குணாதிசயங்கள், மற்றும் சந்திப்புகள் இவற்றை ஒன்று சேர்த்து  காசி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி சிறுகதை இலக்கணத்தில் அடங்காத ‘புதுக்கதை’ யாக எழுதியிருக்கிறார் என்பதே என் அனுமானம்.

கதையின் சுட்டிகள்.

அழியாச் சுடர்கள்

காசி-பாதசாரி சிறுகதைகள்.காம் 

கதையைப் படிக்க பொறுமை வேண்டும். அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போல் தோன்றும். காலம், இடம் சட்டு சட்டென்று மாறி வரும். ஒரே இருப்பில் படிக்க முடியாது. 

இக்கதையை இருவர் விரிவாக ஆராய்ந்து விமரிசனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். சுட்டிகள் கீழே. 

வல்லினத்திலும், சொல்வனத்திலும் கதை பற்றிய விமரிசனங்கள் வெளியாகி உள்ளன. 

வல்லினம் சுட்டி - விமர்சனம்

சொல்வனம் சுட்டி - விமர்சனம்

கடைசியாக ஒரு ஜோக்.

 ‘கடவுள் நம்பிக்கை உண்டா?’

காசியே பதில் சொன்னான். ” இல்லே சாமி… ஆனா ‘கடவுள்’னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!”

இந்த பதிலை ஒரு நடிகரும் சொன்னார் என்று படித்திருக்கலாம். அவர்தான் காசி என்று கூறலாமா?

ஜோக் 2.

ஒருவன் மனநோய் மருத்துவரிடம் “ஒருத்தனுக்கு பைத்தியம் குணம் ஆகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்” என்று கேட்டான்.

அவர் “ பல வழிகள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து விட்டு அதற்கு பக்கத்தில் ஒரு ஸ்பூனையும், மக்கையும் வைத்து விட்டு அவனைக் கூப்பிட்டு பக்கெட்டை காலி பண்ண சொல்வோம். தண்ணீரை ஸ்பூனால் எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தால்  அவனுக்கு குணமாகவில்லை என்று முடிவு செய்வோம்.” 

“அது சரி நீங்களானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

கேள்வி கேட்டவர் “மக்கால் தண்ணீரை மொண்டு ஊற்றுவேன்” என்றாராம்.

மருத்துவர் “இதைத் தான் நாங்கள் செமி என்று கூறுவது.” என்றாராம்

“ஏன் அப்படி?” என்று கேட்டானாம்

“முழுதும் குணமடைந்தவன் பக்கெட்டை கவிழ்த்து விட்டு சென்று விடுவான்” என்றாராம் மருத்துவர்.

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    தாய்மை அறக்கட்டளை செய்தி இருமுறை வந்துள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதில் ஒரு குழப்பம்! வணக்கம் நெல்லைத்தமிழன்.. வாங்க...

      நீக்கு
  2. உதவும் கருணை கரங்கள்.... சாதாரண நிலையில் இருக்கும் மனிதனும் பிரம்மாண்டமான தன் சமூகப் பங்களிப்பைச் செய்யமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த வெங்கடேசன் அவர்கள். இவருக்கு எஸ் வி சேகர் இன்ஸ்ப்பிரேஷன். (அனாதை சடலங்களுக்கு இறுதிக் காரியம் செய்வதில்). மிக நல்ல மனிதர்.

    இவருக்குப் பிடிக்காத வார்த்தை சாதி. இவருடைய நற்காரியங்களில் சாதி மதம் பார்க்காத அபூர்வ மனிதர். இவருடைய படம் என்னிடம் உண்டு.

    நல்ல மனிதர் அறிமுகத்திற்கு துரை செல்வராஜு சாருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களால் தான் இவரது அறிமுகம் கிடைத்தது..

      தங்களுக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  3. 'இன்றைய விமர்சனத்திற்குள்ளாகும் காசி என்ற இக்குறுங்கதை'--

    இன்றைய வாசிப்புக்குள்ளாகும் -- என்று இருந்திருக்கலாம்.

    காசி என்ற இந்த ஆகச்சிறந்த. படைப்பு ஒவ்வொருவரின் தனிப்பட்ட
    உள்ளுணர்வுகளின் தீண்டலில் அறியப்படுவதாய் இருக்கிறது. பொது விமர்சனம் என்னும் அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நேர்த்தியை தரிசிக்க முடிந்தது. அந்த அனுபவத்தைத் தந்ததிற்காக நன்றி ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  4. ஏதோ ஒரு அபூர்வப் பிறவியை, கதை என்ற பெயரில் எழுதுவதால் கதாசிரியர் கண்டது என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லை //ஏதோ ஒரு அபூர்வப் பிறவியை, கதை என்ற பெயரில் எழுதுவதால் கதாசிரியர் கண்டது என்ன?//
      ஒன்றும் இல்லை. புகழ், திருப்தி, மற்றும் கொஞ்சம் சாதித்த கர்வம்.

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. கோடிகளில் கொள்ளையடித்து தலைக்கிழ் வைத்து உற்ங்குகின்ற மனிதர்களிடையே தனக்கு உதவியாக வழங்கப்பட்டவை சைக்கிள்களை விற்று நோயாளிக்கு உதவிய
    செல்வி தேவிகா மனிதருள் மாணிக்கம் என, உயர்ந்து நிற்கின்றார்..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இன்றைய நல்ல செய்திகள் அனைத்தும் அருமை.
    மக்கள் சேவகரான வெங்கடேசன் அவர்களையும் . சிறுமி தேவிகாவின் நல்ல உள்ளத்தையும் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. கதை அழியாசுடரில் முன்பு படித்து இருக்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் இப்போதும். தெளிவில்லா மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்டீம் வாஷ் எங்கேயோ வாசித்த நினைவு. கூகுள் செய்திகளில்? அப்படித்தான் நினைக்கிறேன். நல்ல விஷயம். குறைவான த்ண்ணீரில் எனும் போது ...ஆனா பாருங்க ஸ்ரீராம் இதை வாசித்த போதும் உங்களுக்கு அனுப்பத் தோன்றலை. பாசிட்டிவ்ல போட்லாமான்னு கேட்டு.
    ஜெகே அண்ணா அனுப்பிட்டாங்க.

    தனக்குக் கிடைத்த ஊக்கத் தொகையைக் கல்லூரிகளுக்குக் கொடுத்த விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    தாய்மை அறக்கட்டளைச் செய்தியும் நல்ல பாசிட்டிவ் செய்தி

    சிறுமி தேவிகா டாப்! மிக மிக அருமையான செயலைச் செய்திருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. துரை செல்வராஜு அண்ணா அனுப்பியிருக்கும் செய்தியும் அருமையான செய்தி. நிறைய பேருக்கு உதவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான நல்ல மனிதருடன் பழக்கம் அமைந்தற்கு நெல்லை அவர்களுக்குத் தான் நன்றி..

      நீக்கு
    2. //இந்த அமைப்பினர் கும்பகோணத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர்களைத் தேடிச் சென்று நித்தமும் கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்குகின்றனர்..//

      துரை அண்ணா அண்ட் நெல்லை, என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இதுதான். அதாவது மனநலம் பாதிக்கப்பட்டோர்களைத் தேடிச் சென்று உணவு கொடுத்தல்.....

      இதே போன்று மனநலம் பாதிக்கப்பட்ட் ஆதரவற்று இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளித்து ஓரளவேனும் தங்கள் வாழ்க்கையை ஓட்ட செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். அவர்கள் அதுவும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

      ஏனென்றால் ஏழைகளுக்குக் கூட உதவி கிடைத்துவிடும் ஆனால் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும், ஆட்டிசம், ஹைப்பர் போன்றவை உள்ள மனிதர்களுக்கும் கிடைப்பது அரிது.

      நெல்லை குறிப்பிட்டிருக்கும் வரி

      //இவருக்குப் பிடிக்காத வார்த்தை சாதி. இவருடைய நற்காரியங்களில் சாதி மதம் பார்க்காத அபூர்வ மனிதர்.//

      இது என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது. மிகவும் பிடித்தும் போனது.

      கீதா

      நீக்கு
  12. இன்றைய நான் படிச்ச கதையை முழுவதும் வாசித்தேன் ஜெ கே அண்ணா.

    அண்ணா, பல மனிதர்களின் செயல்பாடுகளையோ குணாதிசயங்களையோ ஒன்றாகக் கலந்து கட்டி காசியின் பாத்திரத்தை ஆசிரியர் படைத்திருப்பார் என்பதற்கில்லை. இவை அனைதும் கொண்ட மனிதர்கள் நம்மிடையே இருக்கின்றனர்தான் ஆனால் நமக்குத் தெரிவதில்லை அல்லது பழக்கத்தில் இல்லை.

    //எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான 'ஷாக்' அப்ஸார்பரை' பழுது பார்த்து சரியாக வைத்துக் கொள்ளாமல், இவர்கள் உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. //

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். ஆசிரியர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களை மறைலூஸு அலல்து பைத்தியம் என்று இந்த சமூகம் முத்திரை குத்தி விடும். ஆனால் பாவம் இவர்கள்.

    ஒரு மருத்துவரிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுத வைக்க எவ்வளவு லஞ்சம் , மருந்துத் துறையில் நடக்கும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாத காசி - இதைத்தானே அந்நியனில் சுஜாதா சொல்லியிருப்பார்!

    //நீ பெண்ணாக இருந்திருக்கக் கூடாதா என்று தன் நண்பனிடம் காசி சொல்லும் இடம் - பரிதாபத்துக்குரிய இடம். அம்மாவின் அருகாமை கிடைக்காத அது எவ்வளவு அவன் மனதை பாதித்துள்ளது என்பது அதுவும் பாட்டியால் ஒப்படைக்கப்பட்டுச் ....ஏற்கனவெ மனம் எமோஷனல் அண்ட் சென்சிட்டிவ் ஆக உள்ள மனதிற்குச் சரியான சூழல் அமையவில்லை என்றால் அது இந்த சமூகத்தில் எப்படி அலைகிறது, என்பதுதான். அதுவும் மணவாழ்க்கையிலும் அவனால் இருக்க முடியவில்லை எனவே அப்படியான உணர்வுகள் அவனை அலைக்கழிக்கிறது என்பதும் கதையில்..

    //காபியா, டீயா என்று கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால் சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.//

    இதுதான் இந்த முரண்பாடுதானே இப்படியானவர்களின் மனம். அதைத்தான் ஆசிரியர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

    கீதா


    பதிலளிநீக்கு
  13. பைத்தியம் என்ற ஒரு சொல் கிடையாது. மன நிலை பாதிக்கப்பட்டவரை மக்கள் சமூகத்தில் அப்படி ஒரு பெயரை வைத்து கேலி செய்வது என்னால் ஏற்க முடியாத ஒன்று.

    கதையை வாசித்து வரும் போதே பலவித டிஸார்டர்கள் இருக்கோ என்று தோன்றியது personality disorder என்று தெரிந்தது. கதையிலும் வருகிறது personality disorder என்று.
    இயல்பு வாழ்க்கையில் உலக வாழ்க்கையில் இயங்குவதற்குச் சிரமப்படுவார்கள். இப்படியானவர்களுக்குச் சிந்தனைகளில் coherence - கோர்வை இருக்காது. அதனால் அவர்களால் எண்ணுவதையோ பேசுவதையோ செயலில் செயல்படுத்த முடியாது. பணம் நிர்வாகம் கஷ்டம். எதையும் பொறுப்பெடுத்து செய்வது என்றால் அவர்களால் முடியாது. அதனால்தான் வேலையில் தொடர்ந்து இருக்க முடியாது. மொனொடொனி அவர்களால் முடியாது.

    அப்படியான ஒருவரைப் பற்றிய கதை. இப்படியான கதைக்கு முடிவு என்று சொல்வது கடினம் தான். அவன் சரியானான் என்று சொல்வது கடினம். இதற்கு சரியான வைத்தியம் சரியான நேரத்தில் பார்த்தால் தொடர்ந்து மருந்து மாத்திரைகளில் இருந்தால் வாழ்க்கையை ஒருவிதம் ஓட்டலாம். இல்லை என்றால் காசியைப் போலதான் வாழ்க்கையாகும்.

    மனதை வாட்டிய கதை. இதைவிட மோசம் அப்படியே சித்தம் கலங்கி தெருவில் இருப்பவர்கள். பாவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தான் ஒவ்வொருவரின் உள்ளுணர்வின் தீண்டலில் அறியப்படுவதாய் இருக்கிற ஒன்றென்றும் பொது விமர்சனம் என்கிற அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டதான நேர்த்தியை தரிசிக்கமு டிந்த தென்றும் சொல்லியிருந்தேன்.
      நான் உணர்ப்திருந்தது போலவே
      இந்தக் கதையின் கருவை சிறப்பாக அலசுவீர்கள் என்ற எதிர்பார்ப்பும் என்னிடமிருந்தது.
      நான் எழுதிய மனவுணர்வுகள் ரீதியான கதைகளுக்கு நீங்கள் இட்டிருந்த பின்னூட்டங்கள் இந்த நம்பிக்கையை எனக்குத் தந்திருந்தது.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜீவி அண்ணா, உங்கள் கருத்தை பார்த்தேன், அங்கு பதில் கொடுக்காம விட்டுப் போச்சு.ுஉங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன். இப்படியான கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கதையில் கொண்டுவருவது என்பது சிரமமான விஷயம். ஏனென்றால் இப்படியான கதைகளை எலலாராலும் உள்வாங்க முடியாது. கொஞ்சம் வறண்டு போர் என்பதாகப் படலாம்.

      கீதா

      நீக்கு
  14. அவர்களால் யதார்த்த வாழ்வியல் வாழ முடியாத போது ஆனால் அதெ சமயம் வயிறு பசிக்குமே அதுக்கு ஏதேனும் ஈட்டத்தான் வேண்டும் அப்படி அவர்கள் நிலைமைக்கு ஆளாகும் போது அவர்களால் அதில் நிலை கொள்ள முடியாது ஏனென்றால் பொறுப்பு...ஆனால் காசும் வேண்டும்....முடியவும் இல்லை..அதான் அந்த இன்லென்ட் லெட்டர் வார்த்தைகள்.

    அதே போல சில வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்த்துவாங்க கொஞ்ச நாட்கள் அதன் பின் வேறு வார்த்தை. அது கொஞ்ச நாள் எதுக்கெடுத்தாலும் சொல்லுவாங்க....மனநிலை சிகிச்சைக்குச் செலவு எல்லாம் அவன் அவ்வப்போது பார்த்த வேலைகளில் ஈட்டியதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அது பற்றி கதையில் தெரியவில்லை...

    இப்படியான ஒரு மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை. யதார்த்தம்.

    கீதா


    பதிலளிநீக்கு
  15. இந்த முறை உங்கள் பதிவு மிகவும் வித்தியாசமான ஒரு பதிவு....தலைப்பு இட்டு அக்கதாபாத்திரத்தின் குணங்களை சொல்லியிருப்பது நல்லாவே ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க ....எனக்கு ரொம்பப் பிடித்தது அண்ணா இப்படித் தலைப்பிட்டு எழுதியது.

    இந்தக் காதாபாத்திரத்தின் வடிவமே அதுதான். இப்படியானவர்களை நான் அறிவேன். மனநல மருத்துவமனையில் சந்தித்த இப்படியான பல நபர்களின் பல விஷயங்கள் என் சில கதைகளில் வந்ததுண்டு முன்பு.

    ஆனால் இப்படியானவர்களைப் புரிந்து கொள்ள முடியாத வாசகர்களால் இப்படியான கதைகளையும் புரிந்து கொள்வது கடினம். இதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். அனுபவப்பட்டவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு 'இதென்ன' என்றுதான் தோன்றும்....இவர்களைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு அசாத்திய பொறுமை வேண்டும்.

    இதில் காசிக்கு சரியான சிகிச்சையும் இல்லை எந்த பொறுப்பான பார்த்துக்கொள்ளும் ஆதரவும் இல்லை, எனவே மனம் போன போக்கில் அலைந்து கொண்டிருக்கிறான்.

    நான் சந்தித்த வகைகள் பல அவற்றுள் குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் - hysteria, bipolar, schizophrenia, obsessive compulsive personality disorder with bipolar, obsessive compulsive personality disorder, இவை எல்லவற்றின் trace களும் உள்ள மனிதர்கள்... இப்படியானவர்களால் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். புரிந்து கொண்ட உறவுகள் நட்புகள் மட்டுமே இவர்களோடு தொடர்பில் இருப்பார்கள்.

    என் அனுபவத்தில், இவர்களுள் ஓருவரைத் தவிர மற்றவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பார்த்துக் கொள்பவர்களும் இருப்பதால் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு

  16. காசி கதை உண்மையோ, பொய்யோ, ஆனால் மனோதத்துவம், உளவியல் கற்ற காரணத்தால் கீதா ரங்கன் காசியின் குணாதிசயங்களை "இப்படியும் சிலர் உண்டு" என்ற தனது தீர்ப்பை கூறுகிறார். அவர் மற்றும் கோமதி அரசு மாடம் ஆகிய இருவரும் கதையைப் பொறுமையுடன் வாசித்திருக்கிறார்கள் என்பது வியக்கத் தக்கது.

    நன்றி, பாராட்டுக்கள்.
    இத்தகைய அலசல்கள் வரவேற்கத் தக்கவை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாசித்த காரணம், கதையை கதையாகப் பார்க்காமல், அதில் வரும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைகளை ஆசிரியர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான், ஜெ கே அண்ணா.

      ஏனென்றால் எங்கள் ஊரில் இப்படியானவர்களை இளம் பிராயத்தில் பார்த்திருக்கிறேன். பொதுவெளியில் பெயர்களைக் குறிப்பிட முடியாது என்பதால் தவிர்க்கிறேன்.

      நம் உறுப்புகளிலேயே மிகவும் விசித்திரமான உறுப்பு மூளை/மனம்.

      கீதா

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா அந்த் வல்லினம் விமர்சனம் சூப்பர். நல்ல விரிவான அலசல். கார்த்திகை பாண்டியன் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு அப்படிக் கோர்வையாகச் சொல்லவரவில்லை. அதுவும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி - இதைச் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். பிளவுபட்ட நான் - என்று அவர் ரொம்பச் சரியாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பிளவுபட்ட நானைத்தான் அந்நியனில் சுஜாதா சொல்லியிருப்பார்.

      கீதா

      நீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. இயற்பெயர் நா.விஸ்வநாதன் என்று படிக்கையில் இவர் அவரா எனக் கேட்டது மனம்.

    அவர் நா.விச்வநாதன். கவிஞர், எழுத்தாளர். திசையெல்லாம் பெருவழி, பாட்டிகளின் சினேகிதன் என்கிற தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. பழைய கணையாழி இதழ் ஒன்றின் பின் அட்டையில் இருந்த இவரின் கவிதை ஒன்று, அப்போதிருந்த மனத்தைக் கவர்ந்துவைத்தது!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதசாரி நா விஸ்வநாதன் பற்றிய விவரங்களுக்கு நன்றி

      நீக்கு
    2. மேலே சொல்லியிருப்பது பாதசாரி விஸ்வநாதன்பற்றி அல்ல!

      நீக்கு
    3. நான் மேலே சொன்னது பாதசாரிபற்றி அல்ல!

      நீக்கு
  20. விஞ்ஞானி வீரமுத்துவேல் பாராட்டுக்குறியவர்.

    வணக்கம் ஜி நலமா ?
    வேலை சரியாகி விட்டது மற்ற அபீஸியல் பேப்பர் சரியானதும் நம்பர் வாங்கி விடுவேன்.

    எனக்கு ஆஃபீஸ் கொடுத்து இருக்கும் போனை பர்சனலுக்கு உபயோகிப்பதில்லை.

    வந்து கொண்டு இருக்கும் எனது பதிவுகள் ஊரில் செட்யூல் செய்தது.

    நான் இணையம் வருவது சற்று தாமதமாகும் அனைவரும் மன்னிக்கவும் நன்றி

    பதிலளிநீக்கு
  21. ஐ எஸ் பி ஸ் ரீம் தொழில் நுட்பம் வெற்றி அடைந்தால் வரப்பிரசாதம்.

    உதவும் நற்குணங்கள் அனைவரின் செய்திகளும் சிறப்பு வாழ்த்துகவழி.

    காசி போன்ற மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு துன்பம் அவர்கள் மனநிலையை புரிந்து கொண்டு சிகிச்சை அளிப்பதுதான் இதற்கு வழி.

    பதிலளிநீக்கு
  22. முதல் செய்தி தினமலரில் பார்த்த நினைவு. விஞ்ஞானி வீர முத்துவேலின் செயல் பாராட்டுக்குரியது. மன நலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளான இளம் குழந்தைகளுக்கு உடைகள் அளித்து கௌரவித்தது சிறப்பு. பள்ளி ஆசிரியை முகமே பார்க்க நிறைவாகவும் மனதுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் அறக்கட்டளை இது போல் பல சிறப்பான கைங்கரியங்களைச் சத்தம் போடாமல் செய்து வருகிறது. எல்லாச் செய்திகளுமே சிறப்பு. சிறுமி தேவிகாவின் செயல் பாராட்டுக்குரியது. விரைவில் நல்லதொசு சைகிள் கிடைக்கட்டும். பள்ளிக்குச் செல்லும் சாலையில் மினி பேருந்து விடவும் முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  23. காசி கதை மனதைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டது. அது ஏன் கடவுள் சிலரை மட்டும் மிகவும் கஷ்டப்படுத்துகிறார்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!