புதன், 22 நவம்பர், 2023

தேனொழுகும் தீந்தமிழே !

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பிரின்ஸஸ் டயானா, ஜெயலலிதா - ஒப்பிடுக.

(சமீபத்தில் வாஸந்தி எழுதிய  'ஜெயலலிதா மனமும் மாயையும்' என்னும்  புத்தகம் படித்தேன். இன்று 'Crown' சீரிஸின் இறுதி பாகத்தின் முதல் பகுதியை பார்த்து முடித்தேன். அதன் விளைவு இந்த கேள்வி.) 

# ஒருவர் அளவுக்கு மீறி ஊழல் மற்றவர் ஊழல் செய்ததில்லை. இருவருமே பிரபலம். ஒருவர் உலகளாவிய பிரபலம். மற்றவர் பேட்டை பயில்வான். என் கருத்தில் ஒருவர் நல்ல அழகு.  அடுத்தவர் அழகியாக (ஏனோ எப்படியோ) பெயர் பெற்றவர். ஒருவரை மணந்தது கணவரின் பெரிய வெற்றியாக ஆரம்பத்தில் சொல்லப் பட்டது.  அடுத்தவர் வாழ்க்கைத் துணை விஷயத்தில் சிக்கலும் மர்மமும் இருந்தது. ஒருவர் சமூக சேவையில் அக்கறை காட்டியவர்.  மற்றவர் சமூகத்தை பயன் படுத்தி லாபம் சம்பாதித்தவர். இருவரது மரணமும் மர்மம் நிறைந்ததாக காணப்பட்டது. ஒருவர் இளம் வயதில் விபத்தில் மாண்டார்.  ஆனால் மற்றவர் தன் மோசமான ஆரோக்கியத்தை மீறிய அவபத்தியம் காரணமாக நோயில் விழுந்தவர். இருவருக்கிடையே ஒப்பிட நிறைய இல்லை.

இருவரும் தன் "சினேகத்தால்" பலியானவர்கள்.

 டயானா பிறந்த ஊர் : Sandringham. 


ஜெயலலிதா பதவி இழந்தபோது Srirangam MLA

 

Diana = ஐந்து எழுத்துகள். 
ஜெயலலிதா = ஐந்து எழுத்துகள். 

= = = = = = =

சென்ற வாரம் வேறு யாரும் எங்களை கேள்விகள் கேட்கவில்லை. அதனால நாங்க உங்களைக் கேள்வி கேட்கிறோம். 

எங்கள் கேள்விகள் : 

சமையல் கேள்விகள் திங்கக் கிழமையில் கேட்கப்பட்டு - அதற்கு பதில்களும் அன்றைய பதிவில் வெளியாகியுள்ளன. 

1) நீங்கள் முதலில் பார்த்த பிறமொழி திரைப்படம் எது? 

2) தமிழ் ஆங்கிலப்படம் தவிர மற்ற மொழி படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? பிடித்த பிறமொழி நடிகர், நடிகை யார்? 

3) சமீபத்தில் நீங்கள் சென்ற புதிய ஊர் / புதிய இடம் எது? 

= = = = = =

KGG பக்கம் : 

நாகப்பட்டினம் - தமிழ் - இரண்டையும் ஒருங்கே நினைத்துப் பார்த்தால் - நாகையில் நான் பயின்ற தமிழ் குறித்துத்தான் - எண்ணத் தோன்றுகிறது. எட்டாம் வகுப்புக்குப்பின் - ஆங்கில மொழிக் கல்விக்கு (JTS) தடம் மாறிவிட்டதால், அதுவரை தமிழை ஒரு பாடமாக - நினைத்து தேர்ச்சி பெற வேண்டிய அளவுக்கு, மதிப்பெண் எடுக்க , என்று படித்த காலம் போய், தமிழை, தமிழுக்காக படித்த காலம் ஆரம்பமானது. இலக்கணம் கிடையாது, கட்டுரை, துணைப் பாடம் இத்யாதிகள் கிடையாது. 

அந்தக் காலத்தில் எங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க பன்னீர்செல்வம் என்று ஓர் ஆசிரியர் வந்தார். ஆசிரியப் பணி அரை மணி - அரட்டை மற்றும் அக்கப்போர் - அரை மணி என்று வகுப்பு நடத்துவார். (பொன்னியின் செல்வன் படித்துவிட்டு - நாகப்பட்டினம் புவியியல் குறித்து அவர் அவிழ்த்துவிட்ட அரை டஜன் 'டுப்'புகள் இப்பொழுதும் எனக்கு கனவில் வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் - எவ்வளவு பலமான தாக்கம் என்று!) 

அப்பொழுது பதவியைப் பிடித்த ஒரு மூன்றெழுத்துக் கட்சி மீதும், அதற்கு பெரும் பங்கு காரணமாயிருந்த ஒரு மூன்றெழுத்து நடிகர் மீதும் அவருக்கு நிறைய பக்தி. ஒரு கிறித்துவப் பாதிரியாரின் மகனாக இருந்ததால், வாய்ப்பு வாய்க்கும்போதெல்லாம் இந்துக் கடவுள்களை ஜாடை மாடையாக கிண்டல் செய்வார். ஆனால் எல்லை மீறியதில்லை.

மாணவர்களிடம் அவர் ஒரு முறை தேர்வு எழுதப் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து சொல்லும்பொழுது - விடைத் தாளில் பிள்ளையார் சுழி போடாமல் - மாணவர்கள் கீழ்க் கண்ட வரிகளில் ஏதேனும் இரண்டு வரிகளை எழுதி, பிறகு தமிழ்த தேர்வு எழுதினால் - விடைத்தாள் திருத்துபவரைக் கவரலாம் என்று கூறினார்.

அவற்றில் சில இதோ:

தேனொழுகும் தீந்தமிழே - நீ கனி, நான் கிளி
வேறென்ன வேண்டும் இனி!

இறக்கின்ற நிலையினிலும் - இன்பத தமிழே உன்னை
மறக்காது நான் ஓத வேண்டும்.

இதுமாதிரி - அவர் பத்து இருவரிக் கவிதைகள் எழுதிப் போட்டார் - கரும்பலகையில். மாணவச் செல்வங்கள் - அதை எல்லாவற்றையும் தங்கள் நோட்டில் பக்தி சிரத்தையுடன் எழுதிக் கொண்டனர்.

அந்த ஆண்டு - (எஸ் எஸ் எல் சி) தமிழ்ப் புத்தகத்தில் பாடம் முடிவில் - கேள்விகள் இருக்காது -- கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் மட்டும் மனப்பாடம் செய்து - அதை அப்படியே தேர்வில் எழுதி - மதிப்பெண் பெறுவது என்ற மனோபாவத்தில் வளர்ந்த பல மாணவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகவும் திணறிப் போய்விட்டார்கள். 

காலாண்டுத் தேர்வில் - அந்தத் தமிழ் ஆசிரியர் - கேள்விகளை -- மிகவும் கடினத் தமிழில் -- உதாரணமாக " பொய்யா விளக்கு பற்றி ஆசிரியர் புகலுவதைப் புகலுக ", "வரைந்தவைகளை வரைக", "அறைந்தவைகளை அறைக ", "விளக்குபவைகளை விளக்குக " என்றெல்லாம் அமைத்து - தன புலமையைக் காட்டியிருந்தார்.

அந்தக் காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் எழுதியிருந்த விடைத் தாள்களை -- திருத்தி, மதிபெண்களுடன் திருப்பிக் கொடுக்கும் நாளில் - அந்த ஆசிரியர் எவ்வளவு திண்டாடிப் போயிருப்பார் என்று தெரிந்தது.

பல மாணவர்கள் அவர் எழுதிப் போட்ட - எல்லா இரு வரிகளையும் பக்தியோடு எழுதி, வேறு விடைகள் எதுவும் எழுதாமல் விட்டிருந்தனர். விடைகளுக்கு பதிலாக - அந்த இரு(பது) வரிகள் போதும் என்று நினைத்திருந்தனர் போலிருக்கிறது.

ஒரு மாணவர் இரண்டே வரிகள்தான் எழுதியிருந்தார்.
" இறக்கின்ற நிலையில் இருக்கும் இன்பத் தமிழே
நீ கிளி - வேறென்ன வேண்டும் இனி?"


= = = = = = = = 
அப்பாதுரை பக்கம் : 

தூங்கு தம்பி தூங்கு

முப்பத்து வயதைக் கடந்தபின், வார நாட்களில் காலை நாலரை மணிக்கு எழுவது ஓரளவுக்கு இயல்பாகிப் போனது.  அதிகாலையின் அமைதியில் குடும்பத்தார் தொல்லையில்லாமல் சிந்திக்க வசதியாக இருந்தது. அலுவலக வேலையோ, சொந்தப் பிரச்சினையோ, கதையெழுதவோ, படிக்கவோ, நண்பர்களுடன் ஓடவோ, பிரிய பைரவருடன் பனிபடர் தெருக்களில் நடக்கவோ, வெட்டியாக வானத்தைப் பார்த்தபடி உட்காரவோ.. காரணமே தேவையிருக்கவில்லை. உறக்கம் துறந்த உணர்வும் ஏற்படவில்லை.

முப்பது வயது நாற்பதாகி ஐம்பதாகி அறுபதைத் தொட.. விழிப்பதும் நாலரை நழுவி அடிக்கடி மூன்றரையாகி சமீபத்தில் இரண்டரையானது கொஞ்சம் திடுக்கிட வைத்துள்ளது. இப்போதெல்லாம் இரண்டு மணிக்கு விழிப்பு வருகிறது.  நாலரைக்கு எழுவதைப் பொருட்படுத்தாத மனம் இரண்டரைக்கு எழுந்தால் பதைக்கிறது.  திரும்பத் தூங்க முடியாமல், எழுந்து ஏதாவது செய்யவும் துணியாமல், பிசைந்த மாவுபோல் கிடக்கும் உணர்வு பிடிக்கவேயில்லை.

ஏதாவது வியாதியில் விடப்போகிறது என்ற அச்சத்தில் பழகிய மருத்துவரை அணுகினேன்.  அச்சத்தில் மருத்துவரை அணுகுவதே ஒரு வியாதி என்பதை அனுபவத்தில் சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

பாசெம் பழகிய மருத்துவர். பின் வீட்டுக்காரர்.  ஒரு ஞாயிறு காலை (மணி ஐந்தாகவில்லை) மருத்துவர் வீட்டுப் பின்கட்டில் விளக்கெரிவதையும் அவர் வீட்டு ஜூலியன் பலமாகக் குரைப்பதையும் கவனித்தேன். முன்னிரவு என் வீட்டில் செய்த வாழைப்பழ ரொட்டி அரை பாகம் வெட்டி எடுத்துக்கொண்டு பின்வேலிப் பொதுக்கதவைத் திறந்து சட்டென்று அவர் வீட்டுக்குள்  நுழைந்தேன்.  "ஹலோ" என்றேன். "ஹலோ" என்றார் பாசெம் பாயாமல். "வள்" என்றது ஜூலியன் பாய்ந்து. 

"காரணமில்லாமல் இரண்டு மணிக்கெல்லாம் அடிக்கடி விழித்துக் கொள்கிறேன்.  சில சமயம் பத்து நிமிடங்களில் தூக்கம் திரும்புகிறது. பல சமயம் நாலு ஐந்து மணி வரை தூக்கம் திரும்பாமல் தவித்து எழுந்து கொள்கிறேன்" என்றேன். 

"இதைச் சொல்ல நல்ல நேரம் கிடைச்சுதாய்யா உனக்கு ?" என்றபடி நான் நீட்டிய ரொட்டியைப் பிடுங்கிக் கொண்டார் பாசெம். "இது ஒரு வியாதியின் தொடக்கமாக இருக்கலாம்" என்று அவர் தொடங்கினார்.  "பிஎஸ்சில இதை நிறைய ஆய்வு செஞ்சிருக்கோம்" என்றார். 

"அப்படியா!" என்றேன். 

"பெட்டர் ஸ்லீப் கவுன்ஸில்" என்றார். 

"ஓஹோ" என்றேன். 

அவர் பிஎஸ்சில நிர்வாகியா இருந்தவராம். "படுக்கைப் பழக்கங்களை நிறைய கவனித்து ஆராய்ந்து.." என்று அவர் தொடர,  இதென்ன.. ராவெல்லாம் ராங்காகுதேனு நான் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்சுகிட்டாரா என்று பதைத்தேன். "இருங்க பாசெம்" தடுத்தேன். "நான் கேட்டது என் தூக்கம் போனது ஹெல்த் மேட்டரா இருக்குமானு.." என்றேன். "நானும் அதைத்தான் சொல்றேன்.. கவனமா கேளு யூ பெர்வர்ட்" என்றார். ரொட்டியைத் துண்டு துண்டாக தன் வாயிலும் ஜூலியன் வாயிலும் எறிந்தார். எனக்கு ஒரு துண்டு கூட ஈயவில்லை. எல்லாம் செவிக்குணவு.

லட்சம் பேர் பங்கு கொண்ட உலகளாவிய கணிப்பாய்வில் அறிந்தது:

- ஆண்களில் 53% பேர் தேவையான அளவு தூங்குவதில்லையாம். 

- பெண்களில் 76% இதே கேசாம். (யாரு தான் தூங்கறாங்க அப்ப?)

- 40% பேர் படுக்கையில் வாட்சப் யுட்யூப் டிக்டாக் பார்த்து தூங்கும் நேரம் கடத்தி தூக்கத்தை தொலைக்கிறார்களாம். இந்த கும்பலில் பதினாறிலிருந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள் 75%க்கும் அதிகமாம். (இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?!)

- ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் சொல்லும் காரணம்: பிள்ளைகள் அல்லது பணம் பற்றிய இறுக்கம். 

- ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள் அதிகம் சொல்லும் காரணம்: உடல் வலி (ஆச்சரியம்! இவர்கள்தான் பணம் பற்றிக் கவலைப்படுவார்கள் என்று நினைத்தேன். ஐம்பது வயதுக்குள் உடல்வலிக் கவலை வேறா?)

- பதினெட்டு வயதுக்கும் இளைய பிள்ளைகள் உள்ள வீட்டில் (பெற்றோர் உள்பட) 50% பேர் இரவில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் தூங்குவதில்லையாம். 

- ஜப்பானில் 22% பேர் படுக்கையில் தினம் நாய் பூனை என்று செல்லப் பிராணிகளோடு தூங்குவதால் அடிக்கடி விழித்துக் கொள்கிறார்களாம். (நாய் பூனை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக அவற்றைத் தனியாகப் படுக்க வைக்க வேண்டும் இல்லையெனில் நாளடைவில் நிறைய மனவியாதிகளைக் கொண்டு வருமாம். என் பெண்னிடம் சொன்னால் அடிக்க வருவாள்)

- 66% பேர் செல்போனைத் தலையடியிலோ காதருகிலோ வைத்துப் படுப்பதால் அடிக்கடி விழித்துக் கொள்கிறார்களாம் (பாசெம் இந்த வழக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். மாறிவிட்ட சமுதாயம் பற்றிப் பொருமினார். வணிகத்தனம் என்பதை கெட்ட வார்த்தை போல் சொன்னார். நிற்க, இன்னொரு முக்கிய செய்தியில் செல்போன் போன்ற செயலி ஒன்றை மனித மூளையுடன் பொருத்திப் பரிசோதன செய்ய மஸ்கின் ந்யூரலிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. பலே பாண்டியா।)

- கீழை மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் திறந்த வெளியிலும் தரையிலும் படுப்பவர்களில் 90% பேர் தினம் எட்டு மணி நேரம் தூங்குகிறார்களாம்.

- ந்யூஸீலாந்து நாட்டில் தான் உலகிலேயே அதிகம் பேர் (79%) தினம் ஆறு மணி நேரமாவது தூங்குகிறார்களாம் (அரையிறுதி ஆட்டத்துக்குப் பிறகு இந்தக் கணக்கில் பத்து பேராவது குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்)

- அறுபது வயதுக்கு மேல் தினம் பத்து மணி நேரமாவது தூங்குவதே பெரிய நோய் தடுப்பாகுமாம் (பொற்காலம் பற்றிப் புலம்பும், தற்காலம் பற்றிக் குறை சொல்லும், நேரம் குறையும்)

-  50% பேர் படுக்குமுன் தினம் சுடுநீரில் குளித்துப் படுத்தால் இரவில் அமைதியாக உறங்கலாம் என்றார்கள். 

- சாப்பிட்ட பின் நாலு மணி நேரமாவது பொறுத்து உறங்கப்போனால் ஆறு மணி நேரத் தூக்கம் உத்தரவாதம் என்பது 53% பேர் கணிப்பு (இந்தியாவின் இளைஞர் கூட்டம் தினம் இரவில் பத்து மணிக்கு மேல் சாப்பிடுவதை பல முறை நொந்திருக்கிறேன்)

- தூக்கத் தொந்தரவுகளுக்கு உணவே காரணமென்று 88% பேர் அடித்துச் சொன்னார்களாம்

- மனைவி, கர்ல் ப்ரண்ட் தொந்தரவே காரணம் என்று ஆண்களும் உல்டாவாகப் பெண்களும் சம அளவில் - 60% பேர் - கணித்துள்ளனர். (இதெல்லாம் ஒரு மேட்டரா?)

- தினம் படுக்கு முன் ஐந்து நிமிடம் மனதை அமைதிப்படுத்தும் விதத்தில் ஏதாவது செய்தால் நாளடைவில் உறக்கம் செம்மைப்படும் (தியானம், நல்ல செய்தி படித்தல், மூச்சுப் பயிற்சி வகையறா) 

- அறுபது வயதுக்கு மேற்பட்டு நன்றாக உறங்குவோரில் 50% பேர் துணையிழந்து வாழ்கிறார்கள் (அட!), 33% பேர் தினம் கடுமையான உடற்பயிற்சி செய்கிறார்கள் (அடேங்கப்பா!), 20% பேர் மதிய உணவோடு சரி (அச்சச்சோ!), 40% ஏதாவது தன்னார்வு செயலில் ஈடுபடுகிறார்கள் (ஆகா!), 70% பேர் கடவுள் வழிபாட்டில் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறார்கள் (ஓஹோ!), 50% பேர் டிவி சினிமா பார்ப்பதில்லை (பேஷ்,பேஷ்!)

விவரம் சொல்லி முடிக்கவும் கீழ்வானம் சிவக்கவும் சரியாக இருந்தது. "உபயோகமான தகவல்கள் பாசெம்.. விவரம் தெரிஞ்சு இருக்கறதால உங்களால நல்ல தூக்க பழக்கங்களை கடைபிடிக்க முடியுது" என்றேன்.

"அட போயா। நானும் ஒரு மணிக்கெல்லாம் முழிச்சிக்கிட்டேன்... ஏதோ நீ வந்தே.. ரெண்டு மணி நேரம் பொழுது போச்சு" என்றார். உள்ளிருந்து பத்து வேலியம் கொண்டுவந்து கொடுத்தார்.

= = = = = = = =

110 கருத்துகள்:

  1. தூக்கத்தைத் தொலைத்தவர்களின் ஸ்டாடிஸ்டிக்சே, படித்தால் தூக்கம் வரப் போதுமாயிற்றே. இந்த ஸ்டாடிஸ்டிக்சினால் ஏதாவது பயன் உண்டா என்று சிந்தித்தாலே தூக்கம் வருமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கத்தின் மதிப்பு எனக்கு தெரிய வேண்டியதில்லை என்று நினைத்திருந்தேன். சட்டென்று படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். படுத்தவுடன் சட்டென்று உறங்குவது அவ்வளவு நல்லதில்லையாம். புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கப்பா.

      நீக்கு
  2. நான் இரவு 8 மணியிலிருந்து காலை 9-10 மணி வரை செல்கோனில் வாட்சப் போன்றவை பார்க்கமாட்டேன். நடைப்பயிற்சியின்போது ஏதாவது கேட்டுக்கொண்டே (இது முக்கியம். பலர் அநாகரீகமாக ஆல் இண்டியா ரேடியோபோல் அலற விட,டுக்கொண்டு நடக்கிறார்கள். அதில் பலர் ஸ்தோத்திரங்களை அலற விட்டுக்கொண்டு நடக்கிறார்கள். தலைவலி ஜென்மங்கள் இவர்கள். இரயில் பயணங்களின்கோதும் ஹெட்போன் என்ற வார்த்தையே தெரியாத ஆதிவாசிகளுடன் பயணிக்கும்போது எரிச்சலாக இருக்கும். சக பயணயர்க்குத் தொந்தரவு என்று தெரியாத கயவர்கள் இவர்கள் என நினைத்துக்கொள்வேன்).

    9 மணிக்குமேல் யார் போன் செய்தாலும் எடுக்கமாட்டேன் (வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதும் இதே கொள்கை. யாராவது போன் செய்து எடுக்க நேர்ந்தால் பதிலுக்கு நான் அதிகாலை எழுந்தவுடன் ஐந்து மணி வாக்கில் போன் செய்து அவர்கள் தூக்கத்தைக் கலைத்துப் புரிய வைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழிக்குப் பழி...  புளிக்குப் புளி!

      நீக்கு
    2. படுத்துக்கொண்டு நள்ளிரவிலும் அதிகாலையிலும் தேவையில்லாமல் வாட்சப் பார்க்கும் வழக்கம் ஆறு மாதமாகத் தொற்றிக் கொண்டு விட மறுக்கிறது. சமீபத்தில் ஒரு அதிகாலை படுத்தபடி வாட்சப்பும் நெட்டும் பார்த்து இரண்டு மணி நேரம் செலவழித்தது புரிந்து அதிர்ந்தேன். துறக்க வேண்டும்.

      நீக்கு
    3. எனக்கு காலைல எழுந்த உடனே வரிசையா வேலைகள் உண்டு, 12 மணி வரை (வார இறுதியில் சனி/ஞாயிறு 11 மணி வரை). இடையில் மொபைலைத் தூக்கி வாட்சப் பார்த்து வேலை தடங்கல் ஏற்பட்ட நாட்களும் உண்டு. அதனால் ஸ்டிரிக்டா வாட்சப் பார்க்க மாட்டேன். பிறரிடம் பேசுவதும் நடைப்பயிற்சியின்போதுதான்.

      வாட்சப், யூடியூப் நம்மை அறியாமலேயே நமது நேரத்தை விழுங்கிவிடும்.

      நீக்கு
  3. என்னுடைய தமிழாசிரியர்கள் சிலர் நினைவில் வந்துபோகிறார்கள்.

    இப்போதெல்லாம் யூடியூபில் தலைப்புச் செய்திகள், காணொளியில் இருக்கும் தமிழ் வார்த்தைகளில் உள்ள எழுத்துப் பிழை, மட்டமான தமிழறவிவு அற்றவர்கள்தாம் நூடியூபில் இருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது (பெரும்பாலும் அரசியல் காணொளிகள்)

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை.

    பதிலளிநீக்கு
  5. 1) நீங்கள் முதலில் பார்த்த பிறமொழி திரைப்படம் எது?

    பிறமொழி என்றால் தமிழ் தவிர என்று எடுத்துக்கொண்டால் ஹிந்தியும், மலையாளமும் பெங்காலியும் தான் . முகல்-ஏ-ஆஜம், மேரா நாம் ஜோக்கர் போன்ற ஹிந்தி படங்களும, செம்மீன், அடிமைகள், துலாபாரம் போன்ற மலையாள படங்களும் தான். பெங்காலியில் பதேர் பாஞ்சாலி, ஆபூர் சன்சார், கல்கத்தா 71 நினைவில் உள்ளன.

    இங்கு இஸ்ரோவில் வேலையில் இருந்தபோது பிலிம் சொசைட்டியில் சேர்ந்து கண்டது நிறைய வெளிநாட்டு படங்கள். ஆங்கில சப் டைட்டில் இருக்கும். அவ்வாறு கண்டது ஜப்பான் படங்கள் ராஷ்மோன், சமுராய், சீன படங்கள் ஹிபிஸ்க்ஸ் டவுன், ரெட் சோர்கம், என்டர் தி ட்ராகன் நினைவில் வருகின்றன.
    மற்றபடி நிறைய சென்சார் செய்யப்படாத ஆங்கில படங்களும் கண்டதுண்டு.
    2) தமிழ் ஆங்கிலப்படம் தவிர மற்ற மொழி படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? பிடித்த பிறமொழி நடிகர், நடிகை யார்?

    ஹிந்தியில் ராஜ் கபூர், ராஜேஷ் கன்னா, அமிதாப். மலையாளத்தில் பிரேம் நஷீர், மம்மூட்டி, சத்யன், மது, சாரதா. பெங்காலியில் வேறு யார் சௌமித்ரா, மௌஸிமி தான். வேறு யாரையும் பெயர் தெரியாது (உத்தம் குமார் உட்பட).

    3) சமீபத்தில் நீங்கள் சென்ற புதிய ஊர் / புதிய இடம் எது?

    கோரோனோக்குப் பின் எந்த புதிய ஊருக்கும் செல்லவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  7. அன்பின் நெல்லை அவர்களது கருத்துதான் என்னுடையதும்...

    சற்றே திருத்தியிருக்கின்றேன்..

    என்னுடைய தமிழாசிரியர்கள் நினைவில் வருகின்றார்கள்.

    இப்போதெல்லாம் குழாயடிச் செய்திகள், காணொளிகள் இவற்றில் தமிழ் உச்சரிப்புப் பிழைகள், வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் - ஏராளம்.. ஏராளம்..

    மிக மிக மட்டமான அறிவு..

    தமிழறிவு அற்றவர்கள் தாம் குழாயடி ஏனைய
    தகவல் தொடர்பில் இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது..

    பதிலளிநீக்கு
  8. @ ஸ்ரீராம்..

    /// பழிக்குப் பழி... புளிக்குப் புளி!.. ///

    இன்னிக்கு டமில போடும்மா கன்னு!..

    பளிக்கு பளி... புழிக்கு புழி!..

    அகா ங்..

    பதிலளிநீக்கு
  9. தமிழின் எழுத்துகள் எத்தனை என்பதை அறியாதவர்களின் காணொளிகள் தான் அதிகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் எழுத்துகள் எத்தனை என்பது பலபேருக்குத் தெரியாது. ற,ர, ண, ன, ந, ள, ல, ழ இவற்றின் வித்தியாசம் பயன்பாடு, ஒற்று எங்கே இருக்கவேண்டும் என்பதே தொண்ணூறு சதம் பேருக்குத் தெரிவதில்லை. நானும் சோம்பேறித்தனம் காரணமாக ஒற்று இல்லாமல் தட்டச்சும்போது சங்கடமாக இருக்கும். சிலர் சுறுசுறுப்பு காரணமா ஒற்று தேவையில்லாத எல்லா இடங்களுக்கும் ஒற்றெழுத்து உபயோகிப்பதை வழக்கமா வச்சிருக்காங்க.

      நீக்கு
  10. //நீங்கள் முதலில் பார்த்த பிறமொழி திரைப்படம் எது?//
    திருமணமாகி மும்பையில் நுழைந்த பிறகு பார்த்த முதல் ஹிந்திப்படம் "BEES SAAL BAAD!!
    சினிமா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து இரவு முழுவதும் பயந்து கொண்டே இருந்ததில் தூங்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நெல்லையில், கல்லூரி காலத்தில் பார்த்த புரான் மந்திர் என்ற படம் (ஹிந்தி) நினைவில் வந்துபோகிறது. கடைசி பத்து நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டுவிட்டேன். அவ்வளவு பயபாக இருந்தது.

      நீக்கு
  11. /தமிழ் ஆங்கிலப்படம் தவிர மற்ற மொழி படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? பிடித்த பிறமொழி நடிகர், நடிகை யார்?//
    மலையாளத்தில் என்னை மிகவும் பாதித்த படம் ' காக்கத்திக்காவிலே அப்பூப்பன் தாடிகள்'.
    மலையாளத்தில் பிடித்த நடிகர்கள்: மோஹன்லால், மம்மூட்டி
    நடிகைகள்: லக்ஷ்மி, ரேவதி
    ஹிந்தியில் பிடித்த நடிகர்கள்: சஞ்சீவ்குமார், ராஜேஷ் கன்னா
    நடிகைகள்: ஷர்மிளா தாகூர், தனுஜா, நர்கிஸ்

    பதிலளிநீக்கு
  12. நான் ஒருவருக்கு 250 ரூபாய் அனுப்பணும். அவரிடம் வல்கி விவரங்கள், கூகுள் பே முதலியவை கிடையாது. சுலபமா வேறு என்ன வழிகள் உள்ளன?

    பதிலளிநீக்கு
  13. முதலில் பார்த்த பிறமொழி திரைப்படம் eyewitness (mark lester நடிச்சது.. நாலாம்பு படிக்கிறப்ப காரைக்கால் இஸ்கூல்ல போட்டாங்க)

    பிடித்த பிறமொழி படங்கள் நிறைய. ஹிந்தியில் தேவ் ஆனந்த் நூதன் பிடிக்கும். தெலுங்கில் கிருஷ்ணா படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.

    சமீபத்தில் சென்ற புதிய ஊர் / புதிய இடம் ரிஷிகேஷ்.

    பதிலளிநீக்கு
  14. @ நெல்லை..

    /// தமிழ் இனி மெல்ல?...///


    சிங்கப்பூர் தமிழர்களிடமும்
    சுவிஸ் தமிழர்களிடமும் நல்ல தமிழ் இன்றும் தழைத்துக் கொண்டிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கைத் தமிழர்களை மறந்துவிடாதீர்கள். அவர்கள்தாம் தமிழகத்துக்கு நிறைய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தியவர்கள். அதற்கு முன்பு நம்மிடம் அதற்கான தமிழ்ச் சொற்கள் இல்லை. உதாரணம் பரப்புரை, கடவுச்சீட்டு.

      நீக்கு
    2. அதுக்காக அதிரா தமிழை வைத்து எடை போடாதீர்கள் (ஹா ஹா ஹா... இப்போ என்ன பட்டம் வைத்துக்கொண்டிருக்கிறதோ அந்தப் பெண்.... இணையத்தில் காணாமல் போன.அதிரா என்று வைத்துக்கொண்டாலும் வைத்துக்கொண்டிருப்பார்). அவர் தமிழ் பேச்சு டமிள்

      நீக்கு
  15. தமிழ்..
    அமிழ்து!..
    ஒருக்கால்,
    டமிலகத்து டம்ளர்களால் டமில் அழிந்தாலோ அழிக்கப்பட்டாலோ கவலையில்லை..

    நல்ல தமிழ் தழைக்கும் கிளைக்கும்!..

    அமுதே தமிழே நீ வாழ்க
    அழகே உந்தன் புகழ் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  16. 90 களில்
    தினமணி நாளிதழில் தமிழண்ணல் என்பவர்
    சிறப்புக் கட்டுரைகள் எழுதுவார்..

    அன்றைய தமிழில் - பண்ணி - கலப்பதைப் பற்றியெல்லாம் இருக்கும்..

    கட் பண்ணி
    வாஷ் பண்ணி
    குக் பண்ணி
    திங்க் பண்ணி..

    இப்படி ஏகப்பட்ட பண்ணி கள்..

    இப்போதும் சமையல் குறிப்புகள் இத்தகைய பண்ணி களுடன் தான் வருகின்றன..

    இத்தோடு இப்போது - பாத்தீங்கன்னா - எனும் ஒட்டுண்ணி ஒட்டிக் கொண்டு வருகின்றது..

    இப்ப பாத்தீங்கன்னா
    திரி பாத்தீங்கன்னா
    ஆயில் பாத்தீங்கன்னா
    விளக்கு பாத்தீங்கன்னா
    கொலு பாத்தீங்கன்னா
    குந்தாணி பாத்தீங்கன்னா.

    அடக் கொடுமையே..
    அதைப் பாத்தீங்கன்னா!..

    ஆளை விடுங்க ஷாமியோவ்..

    பதிலளிநீக்கு
  17. முதல்பார்த்த பிறமொழிபடம் ஸ்கூலால் கூட்டிச் சென்று காட்டியது 'ரென் கமாண்மன்ஸ் '
    எந்த மொழியாக இருந்தாலும் நல்ல படங்கள் பிடிக்கும்.:)

    சமீபத்தில் சென்றது கண்டி நகர். செல்லும் வழி மலைநாடு என்பதில் அழகிய காட்சிகள் .சிறுவயதிலிருந்தே அடிக்கடி சென்ற இடம்தான்.

    Kgg பக்கம் தகவல்கள் அருமை படிக்கும் போது மனதில் தோன்றிய பாடல்.'தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே " :))

    பதிலளிநீக்கு
  18. 'திரு.அப்பாத்துரை அவர்கள் பக்கம் படிக்கும் போது ' என வரவேண்டும். விடுபட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  19. தூக்கம் பலருக்கும் துக்கம் தான் போல...

    பதிலளிநீக்கு
  20. ஆங்கிலத்தில் 5
    தமிழில் 5

    இதென்ன கணக்கு...?
    முருகா...!

    பதிலளிநீக்கு
  21. மீனழகும் மானழகும்
    கானழகும் கவினழகும்
    வானழகும் தானழகாய்
    தேனொழுகும் தீந்தமிழே!..

    ( இது எப்டிருக்கு!..)

    பதிலளிநீக்கு
  22. @ நெல்லை..

    /// இலங்கைத் தமிழர்களை மறந்து விடாதீர்கள்.. ///

    அவர்களை மறப்பதற்கு இல்லை.

    எனினும் அங்கிருந்து ஒதுங்கி விட்டேன்..

    பதிலளிநீக்கு
  23. எங்க வீட்டில் இடியே விழுந்திருந்தாலும் சண்டை மண்டை உடைந்திருந்தாலும் படுத்த உடனே தூங்கிடுவாங்க. கொடுத்து வைச்சவங்க. நான் தான் "உள்ளத்தில் நல்ல உள்லம்" ஆச்சே(அதன் ஒரிஜினல் அர்த்தத்திலும் பொருந்தும். இஃகி,இஃகி,இஃகி) தூக்கமே வராது. படுக்கப் போவது என்னமோ ஒன்பது மணிக்கு. ஆனால் பனிரண்டு மணி வரை புரண்டு,புரண்டு, புரண்டு, புரண்டு படுத்த வண்ணம் தான். இத்தனைக்கும் சாயங்காலமே கணினியை ஏறக்கட்டிடுவேன். மொபைல் அழைப்பு வந்தால் தவிர எடுப்பது இல்லை. வாட்சப் பார்ப்பதோ பதில் கொடுப்பதோ இல்லை. காடரிங் மெனு தவிர்த்துப் பிறவற்றுக்குப் பதிலே சொல்ல மாட்டேன். காலம்பரவும் எழுந்ததும் மொபைல் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை. ஒவ்வொரு சமய்ம் முக்கியமான செய்தி கொடுத்தவங்க நான் பார்க்கலைனு தெரிஞ்சு கூப்பிடுவாங்க. நானாகப் பார்த்தால் பத்து மணி, பதினோரு மணி ஆயிடும். பெண்ணோடு பேசினால் சில நேரம் அப்படியே ஏதேனும் செய்தி இருக்கானு பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைவான தூக்கம் அவசியமாச்சே?

      நீக்கு
    2. இதுக்கும் ஒரு புதுத் தியரி இருக்கு. ஒருவன் ஆயுளில் இவ்வளவு மணி நேரம்தான் தூங்க முடியுமாம். சின்ன வயதில் படிக்காமல், பல மணி நேரங்கள் தூங்கிக் கழித்தால், வயதான பிறகு அதிக நேரம் தூங்க முடியாமல் போய்விடும். சின்ன வயதில் ஒழுங்காகப் படுக்காமல், நிறைய நேரம் படித்துக்கொண்டோ விளையாடிக்கொண்டோ இருந்தால், வேலை கிடைத்த பிறகு ஆபீஸிலும் தூங்க ஆரம்பித்துவிடுவார்களாம். இது எப்படி இருக்கு அப்பாதுரை சார்?

      நீக்கு
    3. மிக சுவாரசியம்.
      வரையறுக்கப்பட்ட உறக்கம் பற்றி இப்போதான் கேள்விப்படுகிறேன். ஆனால் முழங்கால், முழங்கை, தோள், கண், மூச்சுக்குழாய், இருதயம் (of course) என நம் உடலின் பல பாகங்களின் செயல்பாட்டுக்கு இதே போல் கால வரம்புகள் இருப்பதாக சைனா போயிருந்த போது தெரிந்து கொண்டேன். அங்கே இதை நிறைய பேர் நம்புகிறார்கள். நம் சித்த மருத்துவம் இதை நம்புகிறது என்று படித்திருக்கிறேன். கொஞ்சம் யோசித்தால் (இந்த வயசுலயாவது யோசிக்கிறேன் :-) கால வரைக்கு உட்பட்ட மனித வாழ்வில் உடல் இயக்கமும் அடக்கம் தானே? இதற்கான dna சுவடுகள் இருக்கத்தான் செய்யும். மஸ்க் சொந்தப்பணம் செலவழித்துக் கண்டுபிடிக்கட்டும்.

      நீக்கு
    4. இப்பதான் நினைவுக்கு வருது. பிரகாதாரண்ய உபநிஷத்தில் அஜதசத்ரு பாலக்கி உரையாடலில் இது பற்றி வருகிறது. உறங்கும் வேளையில் ஆத்மா ஊர் சுற்றும் என்றும் (நாம் காணும் கனவுகளுக்கு ஒரு எளிய விளக்கம்) ஆத்மாவுக்கு இத்தனை ஊர் சுற்றலாம் என்று திட்டமாக அளவு இருப்பதாகவும் வரும். இதான் தூக்கத்தின் கால வரம்போ என்னவோ! நன்றாக சம்ஸ்க்ருதம் அறிந்திருந்தால் பிஉ ஆழ்ந்து படித்திருப்பேன். :-)

      நீக்கு
  24. தூக்கம் வர என்ன வழினு தான் தெரியலை. இப்போக் கொஞ்சம் சூடு தணிந்திருப்பதால் நம்மவருக்கு ஏசி போட்டுக்கக் கூடாது என்கிறார். போட்டால் மட்டும் தூக்கம் வருவதில்லை. ஆனால் சரியாக இரவு ஒரு மணிக்கு ஒரு சூடு ஒண்ணு உடம்பில் வந்து வியர்த்து விறுவிறுக்கும் அந்த நேரம் கடக்கவே கஷ்டமாயிடும். சில சமயம் தலையணை எல்லாம் நனைஞ்சிடும் வியர்வையால். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ராம ஜபம் பண்ணுவேன். அப்படியே அசந்து போய் ஒரு நாள் தூங்கி உட்கார்ந்த வாக்கில் படுக்கையில் விழ பயந்து கொண்டு, கட்டிலில் இருந்து கீழே விழுந்துட்டேன் என அலற அவரும் அலறி அடித்துக் கொண்டு தூக்கி விட வர, நான் படுக்கையில், கீழே யாரும் இல்லை.இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். மணி மூன்று ஆகி இருந்தது. சரி ஐந்து மணி வரையாவது தூங்கலாம்னு மறுபடி படுத்தோம். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் வருவதற்கு முத்திரைகள் உள்ளன. முயற்சி செய்து பாருங்கள். யூ டியூபில் கிடைக்கும்.

      நீக்கு
    2. புத்தகமே இருந்தது. அதெல்லாம் சரியா வரலை என்பது வேறே விஷயன். புத்தகம் யாரிட்டயோ கொடுத்தேன். அம்புடுதேன்! :))))) நான் யூ ட்யூபெல்லாம் பொறுமையாய்ப்பார்க்கும் ரகம் இல்லை. :)))))

      நீக்கு
  25. தூக்கம் அழுத்தியது எனில் அம்பேரிக்காவில் ஜெட்லாகிலும் அதே போல் இந்தியாவில் ஜெட்லாகிலும் தான். நல்ல தூக்கம் தன்னை மறந்து வரும் அப்போல்லாம். கிடைச்ச நேரம் தூங்கிடுவேன். அதுக்காக தினமுமா அம்பேரிக்கா போயிட்டு வரமுடியும்? ரங்கனிடம் சொல்லிடுவேன், படுத்தாதே என்னை! தூங்க விடுனு.

    பதிலளிநீக்கு
  26. நானும் செக்ரடேரியல் கோர்ஸ் என்னும் சிறப்புப் பாடங்கள் எடுத்ததால் ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் தான். அதோடு கேஜிஜி சொன்னாப்போல் தமிழில் இரண்டாம் பாடமோ, இலக்கணம் சொல்லிக் கொடுத்ததோ, எதுவும் இல்லை. சும்மா தமிழ்னு ஒரு பாடம். ஆனால் மனப்பாடப் பகுதிப் பாடல்களாக சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரிய புராணம், திருக்குறள் ஆகியவையும் நாலடியார், ஏலாதி, திரிகடுகம் போன்றவற்றிலிருந்தும் பாடங்கள் (நல்லவேளையாக) இருந்ததால் ஓரளவுக்குத் தமிழறிவு வந்ததோ, பிழைச்சேன்.

    பதிலளிநீக்கு
  27. இந்த இரண்டு மணிக்கு எழுந்துக்கும் வழக்கம் நம்ம ரங்க்ஸுக்கும் இருந்தது. இப்போ ஒரு மாசமாக் குறைஞ்சிருக்கு. திருஷ்டி படப் போகுது. ஆனால் அவரும் செல்ஃபோன், வாடசப் போன்றவை பார்ப்பதில்லை. ஐபாட் நிறையப் பார்க்கிறார். எப்போப் பார்த்தாலும் அண்ணாமலை, அண்ணாமலை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாமலை காலையில் பார்த்துக்க சொல்லுங்க :-)

      சென்னை வந்தால் இந்த தொல்லை நானும் அனுபவிக்கிறேன். அம்மாவும் மாமாக்களும் அண்ணாமலை வீடியோக்களை அலற விட்டுப் பார்ப்பார்கள். நான் கதவைப் பூட்டி காதை பொத்தி தூங்கினாலும் மண்டையில் ஊடுருவி எழுப்பிவிடும்.

      நீக்கு
    2. இந்தக் கருத்துகளில், சாம்பசிவம் சார் 'பாஜக அண்ணாமலை' ஜபமும், அப்பாதுரை அவர்களின் உற்வினர்கள் 'திருவண்ணாமலையார்' காணொளிகளையும் காண்கிறார்களா இல்லை உல்டாவா?

      நீக்கு
    3. எப்படி சிவாஜினு தேடினா ரஜினிகாந்த படம் நினைவு வருதோ இப்ப அண்ணாமலைனு சொன்னாலே ஆட்டுக்குட்டியார் தான். curse of மாஸ்.

      நீக்கு
    4. //அண்ணாமலை காலையில் பார்த்துக்க சொல்லுங்க :-)// ஐபாடைத் திறந்தாலே அண்ணாமலை தான். :( இந்த அண்ணாமலையின் பிரசங்கம் நான் படிக்கவோ, எழுதும்போதோ அந்தப் பேச்சு வார்த்தைகள் காதில் விழுந்தால் எனக்குச் சரியா வரதில்லை. ஆகவே பேசாமல் உள்ளே போய்ப் படுத்துடுவேன்.

      நீக்கு
  28. முதல் முதலாக பார்த்த அன்னிய மொழி படம் 'பாபி'
    பிடித்த பிறமொழி படம் வார் அண்ட் பீஸ்.மலையாளத்தில் நிறைய உண்டு.
    தெலுங்கில் ஸ்வாதி முத்யம், கன்னடத்தில் பணியக்கா
    பிடித்த பிற மொழி நடிகர்கள்: சஞ்சீவ் குமார், ஷாருக்கான், ரன்வீர் கபூர், ரன்வீர் சிங்(இவர் நடிப்பில் 'அன்னியன்' படம் ஹிந்தியில் படமாக்கப்படுகிறதாம், ஆவலாக காத்திருக்கிறேன்)
    மம்முட்டி,மோகன் லால்(ரொம்ப பிடிக்கும்), திலகன், பிருத்விராஜ், துல்கர் சல்மான், ஜெயராம் கூட பிடிக்கும்.
    நடிகைகள்: வஹிதா ரஹ்மான், ஷர்மிலா டாகூர், கஜோல், ஜூஹி சாவ்லா, தபு, ஜெயந்தி, ஷோபனா, ஊர்வசி, தீபிகா, ஆலியா பட். நடிகைகளை ஒரு மொழிக்குள் அடக்க முடியுமா? அதனால் சாவித்திரி, லட்சுமி, ரேவதி,ராதிகா இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மனோரமா, கோவை சரளா... ஆ! லிஸ்ட் நீளுகிறது. நன்றாக நடிக்கும் எல்லோரையும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  29. நான் முதலில் பார்த்த பிறமொழிப்படம் ஆராதனா தான். மதுரை மீனாக்ஷி தியேட்டரில் என் பெரியப்பா பெண்ணும் நானும் மட்டும் தனியாக வந்து பார்த்த படம். பெரியம்மா தான் அனுப்பி வைச்சார். அப்பாவுக்குத் தெரிஞ்சுடுமோனு அவருக்கே பயம். படம் முடியும் முன்னரே தியேட்டர் வாசலில் வந்து நின்று விட்டார். தியேட்டருக்கு அந்தப் புறம் தெற்கே சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த் புரம் ஆகியவை. சுப்ரமணிய புரத்தில் தாத்தா/மாமாக்களும் ஜெய்ஹிந்த்புரத்தில் அத்தை/அத்தை பிள்ளைகளும் இருந்தாங்களா! யாரும் பார்க்காமல் இருக்கணுமேனு கவலை. நல்லவேளையாக் காலை ஒன்பது மணிக்காட்சி.பிழைச்சோம். அடுத்து செம்மீன் அப்பாவே அழைத்துச் சென்ற படம். பின்னர் கல்யாணம் ஆகி வந்து சஃபையர் தியேட்டரில் மெக்கென்னாஸ் கோல்ட். பின்னர் பல படங்கள். தூர்தர்ஷனில் போடும் பிறமொழிப்படங்களைக் காத்திருந்து பார்த்திருக்கேன். ஞாயிற்றுக்கிழமையா எல்லோரும் தூங்குவாங்க. அப்போக் கூட்டுக்குடும்பக் காலம். நான் மட்டும் தொலைக்காட்சியைச் சின்னதா வைச்சுப் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  30. பிடிச்ச நடிகர், நடிகைனு யாரும் இல்லை. ஹிந்தியில் சஞ்சீவ் குமார், அமிதாப் பிடிக்கும். நடிகைகள் நாம் பார்க்கும் படத்தையும் அதன் கதையமைப்பையும் வைச்சு நடிச்சவங்களைப் பிடிக்கும். ஸ்மித படீல், ஷபனா அஸ்மி சேர்ந்து நடித்த படங்கள் க்ளாசிக். மற்ற மொழிப்படங்களில் பிடித்தவை எனில் நிறையவே இருக்கு. எதைனு சொல்லுவது! இப்போ சமீபத்தில் எங்கும் போகலை. ஆகஸ்டில் குலதெய்வம் கோயிலுக்கும், செப்டெம்பரில் சென்னைக்கும் ஒரு சின்ன விசிட். ஒரே நாள். உடனே திரும்பியாச்சு.

    பதிலளிநீக்கு
  31. சஞ்சீவ் குமார், சுமித்ரா சென் நடித்த (இந்திராகாந்தி பற்றிய படம். பெயர் நினைவில்லை) ரொம்பப் பிடிச்ச படம். இருவரின் நடிப்பும் அருமையாக இருக்கும். ஹிந்தியில் பல படங்கள் மூலக்கதையைக் கெடுக்காமல் எடுப்பார்கள். அதையே தமிழில் மாத்தும்போது ஹீரோவுக்காக மாத்துவாங்க. காக்கை/குயில் படம் அப்படித்தான் சுத்த மோசமான படமாக ஆயிடுத்து. அதே ஹிந்தி, மலையாளத்தில் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் பெயர் 'ஆந்தி'. சுமித்ரா சென் இல்லை, சுசித்ரா சென்.

      நீக்கு
    2. என்னோட கண்ணாடியும் ச்ரி, கண்ணும் சரி இன்னும் சரியாகவில்லை. ஆகவே எனக்கு "மி"க்கும் "சி"க்கும் வித்தியாசம் தெரியலை. இது ஆட்டோ கரெக்ஷன் எல்லாம் இல்லை. நான் செய்த பிழை. :( கண் இன்னமும் மசமசமசாமச

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    4. அடடா கீசா மேடம்.... சீக்கிரம் சரியாகட்டும்.

      அது சரி..சீரகத்துக்கும் சோம்புக்கும் வித்தியாசம் தெரியாமல் திப்பிசம் செய்துவிடப்போகிறீர்கள். பாவம் அவர்

      நீக்கு
    5. கண்ணாடி போடாமல் பிரச்னை இல்லை.. பார்க்க முடியும். ஆனால் படிக்கத்தான் முடியலை. கண்ணாடி போட்டால் மசமச! அதோடு சோம்பு வாசனை வரும். கையில் எடுக்கும்போதே உணர்வு சொல்லிடும்.

      நீக்கு
  32. Geetha Sambasivam "தேனொழுகும் தீந்தமிழே ! ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    பிடிச்ச நடிகர், நடிகைனு யாரும் இல்லை. ஹிந்தியில் சஞ்சீவ் குமார், அமிதாப் பிடிக்கும். நடிகைகள் நாம் பார்க்கும் படத்தையும் அதன் கதையமைப்பையும் வைச்சு நடிச்சவங்களைப் பிடிக்கும். ஸ்மித படீல், ஷபனா அஸ்மி சேர்ந்து நடித்த படங்கள் க்ளாசிக். மற்ற மொழிப்படங்களில் பிடித்தவை எனில் நிறையவே இருக்கு. எதைனு சொல்லுவது! இப்போ சமீபத்தில் எங்கும் போகலை. ஆகஸ்டில் குலதெய்வம் கோயிலுக்கும், செப்டெம்பரில் சென்னைக்கும் ஒரு சின்ன விசிட். ஒரே நாள். உடனே திரும்பியாச்சு.

    பதிலளிநீக்கு
  33. சமீபத்தில் சென்ற புதிய இடம்: சமீபத்தில் என்று சொல்ல முடியாது, 2023 மார்ச்சில் ஒடிஸா(புவனேஸ்வர், பூரி)சென்றேன். அதைப் பற்றி என்னுடைய தளத்தில் எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. நம்ம படுக்கையில் வளர்க்கும் செல்லங்களையும் கூடவே படுக்க வைத்துக் கொண்டு படுப்பது என்பது எனக்குச் சுத்தமாய்ப் பிடிக்காது. நாங்க வளர்த்த எல்லா நாய்களுமே இரவிலும் சரி, பகலிலும் சரி, வாசல் பக்கமாகவே இருக்கும். உள்ளெல்லாம் வந்தாலும் சீக்கிரமாய் வெளியே அனுப்பிட்டு அது நுழையாத மாதிரி க்ரில் கதவைச் சார்த்தி வைப்போம். சில சமயம் அடங்கலைன்னா கட்டிப் போடுவோம். அல்லது மொட்டை மாடிக்கு விரட்டிடுவோம். சாப்பிடும் நேரம் கண்டிப்பாக உள்ளே இருக்காது.

    பதிலளிநீக்கு
  35. பிரின்ஸஸ் டயானா, ஜெயலலிதா ஒப்பிடு. சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சொல்ல மறந்து விட்டேன். என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி __/\__ '&' அவர்களின் ஒப்பீடு சுவாரஸ்யம்!

      நீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. Bollywood dance இப்படித்தான் ஆரம்பித்திருக்குமோ என்று தோன்றியது, கிளிகளின் ’ஆட்ட’த்தைப் பார்த்தபின்.

    பதிலளிநீக்கு
  38. டைரக்டர் யார் என்று கவனித்துவிட்டுத்தான் படத்துக்கே போவேன். நடிக, நடிகைகளை அவர்களுடைய பாப்புலாரிட்டிக்காக மட்டுமே பார்ப்பதில்லை.

    வெளிமொழிப்படங்களில் ரசித்தவை - பதேர் பாஞ்சாலி, சத்கதி (Satgati) (ரே), பரஷுராம், ஏக் தின் ப்ரதி தின் (Ek din prati din - ம்ருணாள் சென்), தம்ப் , காஞ்சன சீதா (அரவிந்தன்), எலி பத்தாயம் (ஆடூர் கோபால கிருஷ்ணன்), அர்த் சத்ய, ஆக்ரோஷ் (கோவிந்த் நிஹலானி), மிஸ்டர் இண்டியா (ஷேகர் கபூர்), 36 சௌரங்கி லேன் (அபர்னா சென். என்ன ஒரு அழகான ஒரு கனவு சீனில் ஜென்னிஃபர் கெண்டலை இயக்கியிருக்கிறார் அபர்னா.. ), Albert Pinto ko gussa kyoon aata hai ? (சயீத் அக்தர் மிர்ஸா), (Umrao Jaan (Muzzafar Ali) ...இப்படிச் செல்கிறது நம்ப ரசனை..

    ஹிந்தி படங்களில் பொதுவாக, நஸீருத்தீன் ஷா, ஓம் பூரி, அனுபம் கேர், அமோல் பாலேகர், ஸ்மிதா பாட்டீல், ஷபனா ஆஸ்மி, ஸ்ரீதேவி, ரேகா, நூதன், நர்கீஸ் தத், வஹீதா ரஹ்மான், மதுபாலா, மௌஷுமி சேட்டர்ஜி, மாதுரி தீக்ஷித் (கொஞ்சம் ஆட்டபாட்டமும் ரசிக்கனுமே...), திலீப் குமார், குரு தத், தேவ் ஆனந்த், சஞ்சீவ் குமார், நானா படேகர் (Nana Patekar), இர்ஃபான் கான் ஆகியோரின் படங்கள் கவர்ந்திருக்கின்றன. தரமான பல படங்களை டெல்லியில், சர்வதேச திரைப்பட விழாவின் ’இந்தியன் பனோரமா’ செக்‌ஷனில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. umrao jaan ஏனோ ரசிக்க முடியவில்லை. அத்தனை அருமையான பாடல், இசை, production value.. still...

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. மந்தமாக நகரும் படம்தான் உம்ராவ் ஜான். பாடல்களில் சில ரசிக்கவைக்கும்.

      நீக்கு
  39. என்னுடைய கருத்து காணவில்லையே !

    பதிலளிநீக்கு
  40. டெல்லியில் இருக்கிறேன். பெங்களூரைவிட நன்றாக வருகிறது தூக்கம். நாளைக்கு டி-20 மேட்ச் (Ind-Aus) 11 மணிவரை பார்த்தபிறகு, தூக்கம் சரியாக வருமா தெரியவில்லை.

    இரவு இரண்டுமணிக்குத் தூக்கம் போய்விட்டால், ஜெமோ வைக் கையிலெடுத்து சீரியஸாக வாசிக்க ஆரம்பியுங்கள். அலறி அடித்துக்கொண்டு திரும்பிவிடும் தூக்கம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!