செவ்வாய், 14 நவம்பர், 2023

சிறுகதை : தலை தீபாவளி - துரை செல்வராஜூ

 தலை தீபாவளி..

துரை செல்வராஜூ

*** *** *** *** ***
கியிங்.. கியிங்..

குரல் பதிவு வந்திருப்பதாகச் சொல்லியபடி விழித்துக் கொண்டது உள்ளங்கை உலகம்..

கைத்தலபேசியை எடுத்து நோக்கினாள் அருணா..

தம்பி அனுப்பியிருக்கின்றான்.. என்னவாக இருக்கும் ?..

யோசனையுடன் மாடிக்குச் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள்..

மதியம் எல்லோரும்  சாப்பிட்டு விட்டு அமர்ந்தபோது மெல்ல ஆரம்பித்தாள்..

" நாளைக்கு  தீபாவளி சீர் வைக்கிறதுக்கு அப்பா அம்மா வர்றாங்களாம்.."

" போன் வந்துச்சா?.. "

" மெசேஜ் வந்துச்சு.. 

வந்திருந்த செய்தியைப் போட்டுக் காட்டினாள்..

" நான் தான் சொல்லி இருக்கிறேன்.. போன் பேசணும்னா பன்னண்டு மணிக்கு மேல பேசுங்க.. ன்னு.. " - அருணாவின் புன்னகை..

" ஏம்மா.. நாங்க தூங்குனா என்ன... நீ பேச வேண்டியது தானே.. "

" நீங்க நல்லா ஓய்வு எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்கள்ல..   அதான்.. "

" நல்ல பொண்ணும்மா.. " - சிரித்துக் கொண்ட மாமனார்,  " என்ன..  தீவாளிக்கு அழைக்கத் தானே வர்றாங்க..  தீவாளிக்குத் தான் இன்னும் ஏழு நாள் இருக்கே!... " -  என்றார்..

" வேறு ஏதோ சேதியும் பேசணுமாம்.. " என்றாள் அருணா..

" சரி.. பொழுதுக்குள்ளே நீயும் அத்தையுமா மார்க்கெட்டுக்குப் போய் நாலு நாளைக்குத் தாங்கற மாதிரி காய்கறி வாங்கிட்டு வந்துடுங்க.. "

" சும்மா இருங்க.. உங்களுக்கு என்ன  தெரியும்?. சாயங்காலமா மார்க்கெட்டுக்குப் போனா பழய காய்களாக் கிடக்கும்.. எல்லாம் காலைல போய் வாங்கிக்கலாம்.. அவங்க பட்டுக்கோட்டையில  புறப்பட்டு இங்க வர்றதுக்கே பதினோரு மணி ஆயிடும்.. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்குப் போனா அவங்க வர்றதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணிடலாம்.. என்ன சொல்றே அருணா?.. "

"  சரிங்க அத்தை.. " - என்றாள் அருணா.

பிரசாத் - அருணா, அருணா - பிரசாத் என்றாகியதில் இந்த வருடம் தலை தீபாவளி..  முத்துக் கிருஷ்ணன் ரங்கமணி தம்பதியருக்கு ஒரே மகன் பிரசாத்.. எனவே  மருமகளிட்ம் இயற்கையாகவே கொள்ளைப் பிரியம்..

பிரசாத் வங்கி ஒன்றில் பெரிய வேலையில்..  அருணாவும் மேற்படிப்பு முடித்தவள்.. வேறு எங்கும் வேலைக்கு என்று செல்வதற்கு அவசியம் இல்லாதபடி - வாழ்க்கைப் பட்டிருக்கின்ற இடம் நல்ல வசதி.. 

வீட்டிற்குள் வளைய நடந்து மகள் இல்லாத குறையைப் போக்கினால் போதும் என்று மருமகளிடம் சொல்லி விட்டார்கள்..

அங்கே பட்டுக்கோட்டையில் அருணாவின் பெற்றோர்க்கு மகளின்  வாழ்க்கையை நினைத்து  ஏகத்திற்கும் மகிழ்ச்சி.. பாலத்தளி துர்க்கையம்மனின் மகிமையே மகிமை என்று இறும்பூது எய்தியிருந்தனர்..

மணிவாசகம் ராஜலக்ஷ்மி தம்பதியரின் மூத்த மகள் அருணா..  இளையவன் வசந்த்.. இப்போது பள்ளி இறுதி ஆண்டில் அவன்..

வீடு திரும்பிய பிரசாத் மாமனார் மாமியார் வர இருப்பதைக் கேட்டதும் தேன் குடித்த நரி ஆனான்.. 

பின்னே என்ன.. இந்தப் பக்கம் நாடியம்மன், அடைக்கலம் காத்த ஐயனார், பாலத்தளி துர்க்கையம்மன்.. இஷ்டம் போல சுற்றி வரலாம்..

இன்னும் கொஞ்ச தூரம் போனால் மல்லிப்பட்டினம் கடற்கரை..  மணல்வெளி மனோரா - என்று நாள் முழுதும் கிடந்து வரலாம்.. 

மனோரா  என்பது உப்பரிகை கோபுரமும் மாளிகையும்.. தஞ்சை சரபோஜி மன்னரால் கடற்கரையில் கட்டப்பட்டவை..

' ஆகா.. தலை தீபாவளியே!.. '  மகிழ்ந்தான் பிரசாத்.

இடையில் -  இதோ.. அதோ.. என்று  மிரட்டி காற்றும் மழையும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றன..  இந்நிலைக்குள் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை வட்டாரங்களும்..

மழைக்கும் காற்றுக்கும்  தெரியுமா ஊர் சுற்றக் கிளம்புகின்ற ஜோடிக்கு தலை தீபாவளி என்று!...

எப்படி இருந்தாலும் நமக்கு வேட்டை தான்!..

இப்படியாக  அவனுக்குள் கொஞ்சம் அச்சமும் ரொம்பவே ஆனந்தமும் பொங்கிக் கொண்டிருந்தன..

காலையில் சீக்கிரமாகவே அருணாவுடன் மார்க்கெட்டுக்குச் சென்று பச்சைப் பசேல் என்று கையில் கிடைத்ததை எல்லாம் வாங்கிக்  கொடுத்து விட்டு வங்கிக்குச் சென்று விட்டான் பிரசாத்.. தீபாவளி நேரத்தில் கூடுதல் லீவு கிடைக்காது என்று..

பேசிக் கொண்ட மாதிரி பத்தே முக்கால் மணிக்கு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.. அம்மா அப்பாவுடன் தம்பியையும் கண்டதில் அருணாவுக்கு மகிழ்ச்சி..

ஆனாலும் கையில் பெரியதாக பைகள் இல்லாததால் சற்றே குழப்பம்...

" வசந்து!.. " - குரல் தழுதழுக்க தம்பியைக் கட்டிக் கொண்டாள்..

" மாப்பிள்ளை சௌக்கியமா.. அருணா?.. "

அடுத்தடுத்த கேள்விகள்..

வீட்டிற்குள் வந்து சம்பந்திகள் நலம் விசாரித்துக் கொண்டனர்..

கையில் இருந்த பையை சம்பந்தியம்மாளிடம் ராஜலக்ஷ்மி கொடுக்க அவர்களுக்கு முகம் மலர்ந்தது.. 

வாழைப்பழம் ஒரு சீப்பும் ஜாங்கிரி ஒரு பாக்கெட்டும்  மல்லிகைப் பூ நாலு முழமும்  அதனுள் இருந்தன.. 

திடுக்கிட்டாள் அருணா..

"  இதுதானா சீர் ?.. "

தாயின் கையைப் பிடித்து இழுத்து கிசுகிசுத்தாள்..

" என்னம்மா இது.. இதக் கொடுக்கிறதுக்காகவா அங்கேருந்து வந்தீங்க?.. "

அருணாவின் கேள்வியை கொஞ்சமும் பொருட்படுத்தாத  ராஜலக்ஷ்மி சம்பந்தியம்மாளின் கையைப் பிடித்தவாறே -

" நீங்க இவ்வளவு பெருந்தன்மையா சம்மதிப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.. " - என்றாள்..

அருணா குழம்பினாள்

' என்னடா நடக்குது இங்கே?.. '

ஒன்றும் புரியவில்லை அவளுக்கு..

" நீங்க காலைல போன் பண்ணிக் கேட்டப்ப எங்களுக்கும் ஒண்ணும் புரியலை.. இது சம்பிரதாயம் இல்லையேன்னு குழப்பம்..  காலம் போற போக்கில் எதை எதையோ பார்க்கிறோம்.. கேட்கிறோம்.. இப்படியிருக்க இதுவும் சரிதான்ன்னு புரிஞ்சது!.. "

மாமியாரின் கண்கள் கலங்கியதைக் கண்டதும் அருணா திடுக்கிட்டாள்...

'காய்கறி வாங்கப் போன நேரத்தில் என்னமோ நடந்திருக்கின்றது.. எதையும் சொல்ல மாட்டேன்றாங்களே...' - என்ற நினைப்புடன் அருகே சென்று ஆதரவாய் நின்று கொண்டு முகத்தை ஏறிட்டாள்.. 

" புரியலை.. ஒண்ணும் புரியலை இல்லையா அருணா?.. " 

அப்பாவின் சிரிப்பைக் கண்டதும் அருணாவிற்கு கொஞ்சம் ஆறுதல்..

" அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு யாரும் இல்லாம ஒத்த ஒத்தையா நிக்குது இந்தத் தலைமுறை..  சிறு குடும்பம்.. சிறு குடும்பம் ன்னு நாம தான் திசை தெரியாம தவிக்கிறோம்.. "

தவிப்புடன் தொடர்ந்தார் மணிவாசகம்..

" இருபத்து நாலு வருசம் மகனோட நல்ல நாள் பெரிய நாள் கொண்டாடிட்டு இந்த வருசம் மகனைப் பிரிஞ்சு இருக்குறதுன்னா அது மனசுக்கு சரி இல்லை.. அதுக்காக தீபாவளி சம்பிரதாயத்தையும் விட்டுட முடியாது.. அதனால தான்.. "

தொடர்ந்தார் அப்பா ..

" அவங்களும் வந்து நம்மோட இருந்து தீபாவளி கொண்டாட வேணும்.. ன்னு ஆசைப்பட்டோம்.. பெரிய மனசோட அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.. "

" இன்னிக்கு வந்து இதைப் பேசிட்டு வெள்ளிக்கிழமை சீர் வைத்து அழைக்கலாம்னு இருந்தோம்.. நாடியம்மா எல்லாத்தையும் நல்லபடியா நடத்தி வெச்சுட்டா.. " 

அம்மா விவரித்தாள்..

" தீவாளி அன்னிக்கு மழைன்னா நாடியம்மன் கோயில் துர்க்கையம்மன் கோயில் மட்டும் தான்.. மழை இல்லைன்னா கோயிலுக்குப் போய்ட்டு கடற்கரைக்கும்  மனோராவுக்கும் போவோம்!.. "  - வசந்த் குதூகலித்தான்..

' அவருக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கும்.. ' - என்று நினைத்துக் கொண்ட அருணாவின் கன்களில் ஆனந்தம் துளிர்த்தது.

***

50 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்.

      நீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் அழகூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. புது மஞ்சள் கயிறும்
    பூவும் பொட்டும் புன்னகையும்..

    ஆகா.. ஆகா!..

    புதியதோர் உலகம் செய்வோம்!..

    பதிலளிநீக்கு
  6. சித்திரச் செல்வர் அவர்களது கற்பனையும்
    கை வண்ணமும்
    - என்ன சொல்லிப்பாராட்டுவது!..

    வாழ்க வாழ்க...

    பதிலளிநீக்கு
  7. சிறு கதையில் அழகிய மனங்களும், உறவுகளும் காணக் கிடைத்தன. மனதுக்கு உற்சாகமூட்டும் கதை. இதுபோல நூற்றுக்குப் பத்து குடும்பங்கள் இருக்கலாம். அது இருபது முப்பதானால் எல்லோருக்கும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சிறு கதையில் அழகிய மனங்களும், உறவுகளும் காணக் கிடைத்தன.. ///

      அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. எந்த ஒரு பண்டிகையுமே உறவுகளுக்கான அடித்தளமாகவும் கூடி இருந்து கொண்டாடும் விதமாகவும் இருக்கவேண்டும். சடங்கு, சம்ப்ரதாயம் என்று பணம் சார்ந்ததாகவும் மற்றவர்கள் கஷ்டப்படும்படியாகவும் இருக்கக்கூடாது.

    துரை செல்வராஜு சாரின், இந்த உறவு சார்ந்த கதை என்னைக் கவர்ந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எந்த ஒரு பண்டிகையுமே உறவுகளுக்கான அடித்தளமாகவும் கூடி இருந்து கொண்டாடும் விதமாகவும் இருக்கவேண்டும். ///

      நமது பாரம்பரிய த்தில் பண்டிகைகள் எல்லாமே அன்பின் நோக்கத்திற்காக அமைந்தவையே.. கால சூழ்நிலையினால் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன..

      தங்களது கருத்தினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. சடங்கு, சம்ப்ரதாயம் என்று பணம் சார்ந்ததாகவும் மற்றவர்கள் கஷ்டப்படும்படியாகவும் இருக்கக்கூடாது.//

      டிட்டோ நெல்லை. சூப்பர் கருத்து நெல்லை. எனது கருத்தும் இதுவே. அப்படி பல இனிய கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை இழப்பதுண்டு. என் அனுபவங்கள்.

      பல மருமகள்கள் இருக்கும் வீடுகளில் சடங்குகள், சீர் என்பது எத்தனை பிரச்சனைகளைக் கொண்டு வரும் என்பது என் அனுபவம். அதனாலேயே நான் அதிலிருந்து விலகி இருக்க விரும்புபவள்.

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். அனைவருக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும் வாழ்க்கை அமையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அனைவருக்கும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும் வாழ்க்கை அமையப் பிரார்த்தனைகள்... ///

      தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  10. பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டும் போவது இந்தக்கால வழக்கமாகி உள்ளது. எங்க காலத்தில் எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் குடும்பத்துடனேயே கலந்துப்பாங்க. குறைந்த பட்சமாகப் பெண்ணின் நாத்தனார், மைத்துனர்கள் இருந்தால் அவங்க கட்டாயம் அண்ணன், அண்ணியோடு தலைதீபாவளிக்குப் போகும் வழக்கம் உண்டு. இப்போ எல்லாமே குறுகிப் போய் நாத்தனாரோ/மைத்துனரோ இல்லாமல் அந்த உறவு முறையே அழிந்து வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்போ எல்லாமே குறுகிப் போய் நாத்தனாரோ/மைத்துனரோ இல்லாமல் அந்த உறவு முறையே அழிந்து வருது... ///

      நியாயம் தான்..
      உண்மை தான்..

      நம்மால் ஆகக் கூடியது ஏது,?..

      எல்லாம் அரசியல் அரசியல்..

      நீக்கு
  11. இளம் தம்பதியினர் இனிமையாக தீபாவளியை இரு பெற்றோருடனும் கொண்டாடட்டும். அருமையான கதையைக் கொடுத்த தம்பி துரைக்கும் அதற்கேற்ற படத்தைக் கொடுத்த திரு கௌதமனுக்கும் பாராட்டுகள்/வாழ்த்துகள். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி புதுமணத் தம்பதியர் சாமி தரிசனம் செய்து விட்டு நேராக கடற்கரை சுற்றுலா சென்று விட்டனராம்..
    ***

    அவுங்களுக்கு என்னப்பா!..
    ரெண்டு நாளா மழை இல்லை.. அதான் ஜாலி!..

    நீ வேற..
    மழையா இருந்தாலும் அவங்களுக்கு ஜாலி தான்!..

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. மாமியார் , மாமனார் , கணவருடன் மகிழ்வாய் அருணா தாய்வீட்டில் தலை தீபாவளியை கொண்டாட போகிறாள். மகிழ்ச்சி.

    எங்கள் பக்கம் கணவரின் பிறந்த வீட்டில்தான் எல்லா பண்டிகையும் பெண்களுக்கு.
    அம்மா வீட்டுக்கு போகமாட்டோம். அம்மாவீட்டிலிருந்து சீர் கொண்டு வந்து கொடுப்பதுடன் சரி.

    ஒரே ஊரில் இருந்தால் மாமனார் வீட்டில் பண்டிகை கொண்டாடிவிட்டு மாலை நேரம் அம்மா வீட்டுக்கு போய் வருவார்கள்.

    //சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி புதுமணத் தம்பதியர் சாமி தரிசனம் செய்து விட்டு நேராக கடற்கரை சுற்றுலா சென்று விட்டனராம்..//

    நல்ல கதை பொருத்தமான படம் .

    இதை கேட்டவுடன் மகிழ்ச்சி. வெடிகள் வெடித்து மகிழ இரண்டு நாளாக மழை இல்லையே!





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அம்மா வீட்டிலிருந்து சீர் கொண்டு வந்து கொடுப்பதுடன் சரி..///

      அது சரிதான்..
      தலை தீபாவளிக் கொண்டாட்டம் தானே இது..

      தங்களது அன்பின்
      வருகையும் மேல் விவரங்களும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. அன்புள்ளம் கொண்ட குடும்பத்தின் கதை . இனிதாக வாழட்டும்.' தலைதீபாவளி' அருமையான
    கதை.

    படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. தீபாவளி இனிப்பையும், இனிய தருணங்களையும், புதிதாய் மணமான தம்பதியர் சிறியவர்கள், தங்கள் இரு பெற்றோருடனும் கொண்டாடும் அவசியத்தை அருமையாகச் சொல்லியிருக்கும் கதை. பாராட்டுகளும், வாழ்த்துகளும், துரை செல்வராஜு ஸார்.

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தீபாவளி இனிப்பையும், இனிய தருணங்களையும், புதிதாய் மணமான தம்பதியர், தங்கள் இரு பெற்றோருடனும் கொண்டாடும் அவசியத்தை ///

      இந்த பழக்க வழக்கங்களை காப்பாற்றி கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
    2. /// தீபாவளி இனிப்பையும், இனிய தருணங்களையும், புதிதாய் மணமான தம்பதியர் , தங்கள் இரு பெற்றோருடனும் கொண்டாடும் அவசியத்தை ///

      இம்மாதிரியான வழக்கங்களை நாம் தான் தொடர வேண்டும்..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  18. துரை அண்ணா கதை ரொம்ப நல்லாருக்கு. தலை தீபாவளி பெண் வீட்டில் புகுந்த வீட்டினரும் வந்து கொண்டாடும் பழக்கம் தான்.

    அதை அழகா சொல்லியிருக்கும் கதை. உறவுகளோடு கொண்டாட்டத்தைச் சொல்லும் அழகான கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தலை தீபாவளி பெண் வீட்டில் புகுந்த வீட்டினரும் வந்து கொண்டாடும் பழக்கம் தான்..///

      சில குடும்பங்களில் சற்றே யோசிப்பர்.. இந்த வழக்கம் காலகாலத்துக்கும் தொடர வேண்டும்..

      தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  19. முதல் தீபாவளிக்குப் பின் எல்லா பண்டிகைகளும் புகுந்தவீட்டில்தான் கொண்டாடியிருக்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி... எல்லோரும் இப்படியும் கொண்டாட வேண்டும் இனிமேலாவது!

    சிறப்பான கதை - பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின்
      வருகையும் கருத்தும் வாழ்த்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!