செவ்வாய், 28 நவம்பர், 2023

சிறுகதை : காகா.. கா.. - துரை செல்வராஜூ

 காகா.. கா..

துரை செல்வராஜூ

*** *** *** ***
" காகா.. கா கா... "

கூடுதலாக ஒரு அழைப்புச் சத்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்.. 

பக்கத்து வீட்டு மாடியில் அந்தப் பெண் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள்..

ஆவணியில்  கிரஹப் பிரவேசம் நடந்த வீடு அது..

பக்கத்து வீடு என்ற அளவில் விசேஷத்துக்குச் சென்று காலை சிற்றுண்டியும் தாம்பூலமும்..

அதற்குப் பிறகு  பக்கத்து வீடாக இருந்தும் அந்தப் பெண்ணை நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் அமையவே இல்லை..  

வீடு எப்போதும் அமைதியாகவே இருக்கும்..

அவரவர் வேலை அவரவர்க்கு..

அப்படி இருக்க எங்கிருந்து பேசிப் பழகிக் கொள்வது?...

மறுபடியும் அந்தப் பெண் குரல் கொடுத்தாள்..

" காகா.. கா... "

இப்போது தான் கவனித்தேன்..  இன்று அமாவாசை..

மாடித் தளத்தில்  வாழையிலை ஒன்றில் சோறும் வேறு சில பட்சணங்களும் வைக்கப்பட்டிருந்தன..

சில நாட்களாக வட்டாரத்தை அதிரடித்துக் கொண்டிந்த வேட்டுச் சத்தம் இன்று தான் ஓய்ந்திருக்கின்றது..

இவ்விடத்தில் - வெறும் வயிற்றோடு இருப்பது அவருக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் பத்தரை மணிக்கெல்லாம் அமாவாசை விரதம் முடித்து காக்கைக்கும் வைத்தாயிற்று..

" கா.. கா.. கா!.. "

மூன்றாவது முறையாக அழைப்பு.. அந்தப் பெண்ணின் குரல் தழுதழுத்திருந்தது..

இப்படி காக்கை இறங்கி வரவில்லை எனில் வேறு வேறு காரணங்கள் சொல்லுவார்கள்.. அதையெல்லாம் கேட்டால்  மனதுக்குக்  சங்கடமாகவே இருக்கும்.. 

விளக்கெண்ணெயைப் பூசிக் கொண்டு வீதியில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்கிற மாதிரி அந்தந்த ஜென்மத்திலும் விதிக்கப்பட்டவை எவ்வளவோ அவ்வளவு தான் நடக்கும்.. 

போனவர்களை  மனதில் வைத்து இருப்பவர்களிட்ம் அன்பு காட்டுவதே உசிதம்..  அதுவே நம்மால் ஆகக் கூடியது.. அதனோடு சேர்ந்தது தான் பசுவுக்கு கீரை கொடுப்பதும்  காக்கைக்கு சோறு வைப்பதும்...

இப்போது புரிந்து விட்டது..

காக்கைக்கு தனியானதொரு குணம்.  இயற்கையாக இரை தேடிப் பறக்கின்ற இடம் தவிர்த்து வேறு எங்கும் சட்டென்று தரை இறங்கி விடாது..

இத்தனைக்கும் இதோ எங்கள் வீட்டு மாடி மேல்தளக் கூரையின் கீழ் இரண்டு காக்கைகள் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றன..  அவைகளுக்கும் இப்படிக் கூப்பிடும் சத்தம் கேட்டிருக்கும்.. ஆனாலும் கீழே இறங்கிப் பறந்து அந்தப் பக்கம் போய் உணவை எடுக்கவில்லை..

காரணம் அவற்றுக்கு அடுத்த வீட்டு மாடி புதிய இடம்.. இதுவரைக்கும் அங்கே கூப்பிட்டு சோறு வைத்ததை நான் பார்த்ததில்லை..

இருந்தாலும் எனக்கு மனம் தாளவில்லை..

இங்கிருந்து குரல் கொடுத்தேன்..

" நீங்க உள்ளே போங்க..  காக்கா வந்து எடுத்துக்கும்..  புது இடம்.. ன்னு பயப்படுது..  அதுவும் இல்லாம ஏதாவது மரம் மட்டை இருந்தா அதுங்களுக்கு ஏதுவா இருக்கும்.. இப்போ தான் ஒன்னும் இல்லையே.. "

திரும்பிப் பார்த்த அப்பெண்ணின் முகத்தில் வியப்பு..

" நீங்க நகர்ந்தால் தான் காக்கா வரும்.. "

கையால் சைகை செய்து காட்டினேன்..

வியப்பு மாறாமல் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்தாள்

நானும் மெல்ல நகர்ந்து கதவுக்குப் பின்னால் நின்றது தான் தாமதம்..

இங்கே தகரக் கூரையின் கீழிருந்த காக்கைகள் இரண்டும் சரேலென இறங்கிப் போய் அந்த இலையில் அமர்ந்து கொண்டு, கா.. கா... - என்றன..

நான் திருப்தியுடன் கீழே இறங்கி வீட்டுக்குள் சென்று தொலைக்காட்சியைத் தோண்டினேன்..  

தீபாவளிக்குப் பிறகும் கூட தொலைக்காட்சிக்குள் வியாபாரக் கூச்சல்கள் ஓயவில்லை..

கை கால் ல ஏதோ பிசின் மாதிரி தடவிக்கிட்டு  இதுல பாதாம் இருக்கு முந்திரி இருக்கு பிஸ்தா இருக்கு ன்னு பல்லைக் காட்றதும்..

பட்டுச் சேலைக் கட்டிக்கிட்டு காலி நெற்றியோட தல விரி கோலமா கும்மியடிக்கிறதும்..

பசங்களுக்கு சமானமா அரையாடையோட  தத்துறதும் தாவுறதும்.. 

நாங்க அரைச்சுத் தர்ற மசாலாப் பொடி தான் ஒங்க ஒடம்புக்கு நல்லது.. ன்னு தாடியத் தடவிக்கிட்டு வர்றதும்..

அடச் சே..

வழக்கம் போல திருப்பதி வேங்கடேச பவனத்துக்குச் சென்று நின்றேன்...

மீனாட்சி கல்யாணம் பரத நாட்டியமாக நிகழ்ந்து கொண்டிருந்தது..

ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்.. 

நாட்டியத்தில் மனம் லயித்திருந்த வேளையில் அழைப்பு மணியின் சத்தம்..

உட்கார்ந்தால் எழுந்திருப்பது கஷ்டமாக இருக்கின்றது.. மெல்ல எழுந்து நடந்து ஜன்னல் வழியே நோக்கினேன்..

சற்று முன் மாடியில் பார்த்த அந்தப் பெண்.. கையில் சிறிய  தூக்கு வாளி..

" வாம்மா!... "  கதவைத் திறந்தபடி அழைத்தேன்..

உள் நுழைந்த அந்தப் பெண்ணின் முகத்தில் பரவசம்..  மகிழ்ச்சி..

" பக்கத்துல இருந்தும் பழகி வர்றதுக்கு நாளாயிடுச்சி.. " - என்றாள் சட்டென்று..

" அதனால என்னம்மா.. நானும் அடிக்கடி மாடிக்கு ஏறி வர்றது  இல்லை.. உட்காரு.. " - என்றேன்..

' இன்னிக்கு அமாவாசை ன்னு வீட்ல செஞ்சது.. பால் பாயசம் வடை!.. " - என்றபடி  தூக்கு வாளியை நீட்டினாள்..

புன்னகையுடன் வாங்கிக் கொண்டேன்..

" நீங்க மட்டும் தான் இருக்கீங்களா ம்மா?.. "

" பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகி மதுர, கோயம்புத்தூர் ந்னு இருக்காங்க.. கடைத் தெரு ல சொந்தமா பார்மஸி இருக்கு.. விரதம் முடிச்சிட்டு அவங்க கடைக்குப் போய்ட்டாங்க... ராத்திரி எட்டரைக்கு மேல தான் வருவாங்க.. " என்றேன்..

அந்தப் பெண் சொன்னாள்..

" அவர் தாலுகா ஆபீஸ் ல வேலை பார்க்கிறார்.. அதால விரதம் எல்லாம் இருக்க முடியறதில்லை.. நாள் ஒழுங்கா இருந்தா - நான் குளிச்சு முழுகிட்டு எல்லாம் செஞ்சு  மாமா அத்தைக்கு கும்பிடுட்டு காக்காய்க்கு சோறு வைப்பேன்.. "

" அப்படியா!.. அப்போ அவருக்கு  மதியச் சாப்பாடு?.. "

" பிரைடு ரைஸ் செஞ்சு கொடுத்திருக்கேன்.. பௌர்ணமி கார்த்திகை வெள்ளிக்கிழமை ன்னு  விரதம்  இருப்பார்.. நானும் இருக்கேன்.. விரதம் ஒன்னொன்னும் லீவு நாள் ல வந்தா நல்லாருக்கும்..  அங்கே மேல வீதியில சாப்பாடு எடுக்க ஆள் தினசரி வருவாங்க.. கவலை இல்லாம இருந்தது.. இப்போ இங்கே புது வீட்டுக்கு வந்ததும் பிரச்னை.. இவ்ளோ தூரம் வந்து சாப்பாடு எடுக்க யோசிக்கிறாங்க.. தனியா ஆள் வச்சிக்கணும் போல இருக்கு..  "

அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கினேன்..  தொடர்ந்து பேசினாள்..

" புது வீடு கிரஹப் பிரவேசம் ஆனதும் சீர்காழி சித்தி வீட்ல அழைப்பு.. அங்கேயே ஆவணி  அமாவாசை.. அடுத்தது  திருவாரூர் கோயில் குளத்துல கொடுக்கணும் ன்னு சொன்னதால புரட்டாசி அமாவாசை அங்கே.. இந்த வீட்ல இருந்து இது தான் முதல் அமாவாசை.. "

இளம் வயது தான்... இருபத்தாறு எனில் அதுவே அதிகம்.. 

இந்த சின்ன வயதிலேயே இத்தனை விரதங்களா?..  கேட்கக்கூடாது தான்.. 

ஆனாலும் கேட்டு விட்டேன்..

" கல்யாணம் ஆகி எத்தனை வருஷம்மா ஆகுது!.. "

" மூனு வருஷம் மா.. வீட்ல ஜாதகம் பார்த்துட்டு சொல்றாங்க.. பித்ரு தோஷம் இருக்குதாம்... அதான் அமாவாசை அன்னிக்கு காக்கா வந்து சோறு எடுக்கலே ன்னா ரொம்பவும் கவலையா இருக்கு.. "  - மெலிதான புன்னகை அந்தப் பெண்ணிடம்...

" தினசரி காக்காய்க்கு வைக்கணுமாம்.. நான் செய்யத் தவறிட்டேன்.. "

எனக்கு திக் என்றிருந்தது.. இருந்தாலும் மனதுக்குள் ஒரு மின்னல்..

" கவலைப்படாதே  மா... இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை.. நான் ஒரு வழி சொல்றேன்... "

" ஏதும் விரதமா அம்மா?.. " - ஆவல் பீறிட்டது..

விரதம் தான்..  விஸ்தாரமா செய்றது.. ஆனா அது முடிஞ்சிருந்தாலும் கவலை இல்லை.. "

" எப்போ முடிஞ்சது.. எந்தக் கணக்கில வர்றது.. அதுக்கும் அதிர்ஷ்டம் இல்லையா!.. "

" கௌரி நோன்பு.. ன்னு சொல்லுவாங்க.. பெண்களுக்கு ன்னே உருவானது.. நேத்து தீவாளியா... தீவாளிய மூனாவது வாரமா வச்சி விரதம் எடுக்கிறது சம்பிரதாயம்.. இன்னிக்கு அமாவாசை .. இதையும் கூட கணக்கா வச்சுக்கலாம்... நீ என்ன செய்றே.. "

 " சொல்லுங்கம்மா!..

" அமாவாசை திதி ராத்திரி ஏழு மணி வரைக்கும் தான்.. அதனால ஆறு மணிக்கெல்லாம் நல்ல விளக்கு ஏத்தி - பால் பழம் முடிஞ்சா கொஞ்சம் கேசரி  நைவேத்தியம் வச்சி -

' சாம்ப சதாசிவ சங்கர கௌரி
சங்கட நாசினி மங்கல கௌரி.. '

- ந்னு பிரார்த்தனை பண்ணி தீபம் காட்டும்மா..  நல்லது நிச்சயம் நடக்கும்.. "

கையில் இருந்த கைத்தலபேசியில் குறித்துக் கொண்டாள்..

" இந்த மாதிரி எத்தனை வாரம் மா?.. " 

" இன்னிக்கு ஒரு நாள் போதும்.. அதான் கை வசம் பௌர்ணமி கார்த்திகை எல்லாம் இருக்கே!.. "

இதற்கும் மெல்லிய சிரிப்பு..

" சரிங்கம்மா.. தேடி வந்ததுக்கு நல்ல சேதி சொல்லியிருக்கீங்க.. நான் மற்ற வேலைய கவனிக்கிறேன்.. இனிமே அடிக்கடி வந்து தொந்தரவு செய்வேன்.. பிரச்னை ஒன்னும் இல்லையே.. "

" இப்படி பேச்சு துணைக்கு ஆள் வேணுமே ன்னு தான் இருந்தேன்..  நல்லவேளையா நீ கிடைச்சிருக்கே!.. "

" சரிங்கம்மா.. "

" ஒரு நிமிஷம்..  குங்குமம் வச்சிக்கம்மா.. சரி உன் பேர் என்ன ன்னு கேட்கலையே!.."

" சுஹாசினி.."

***

60 கருத்துகள்:

  1. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நிறை நெஞ்சின் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. வாசித்தேன். சரளமாக எழுதியிருக்கிறீர்கள்.
    அதான் ஆரம்பித்து முடித்ததே தெரியவில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா அவர்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தொடர்ந்து மூன்று வாரங்களை அடுத்தும் எளியேனின் ஆக்கங்கள்..

    ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.. நன்றி..

    ஆர்வமூட்டும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. கதையைக் கதையாய்
    படிப்பது ஏனோ எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. எழுத்து, எழுதிய விதம், கதை சொல்லிய பாங்கு, எழுதியதில் பிடித்திருந்த விஷயங்கள் என்று கதையை விட்டு விலகாமல் வாசித்தது சம்பந்தப்பட்ட நேர்த்தியை பகிர்ந்து கொண்டால் இந்தப் பகுதி சிறக்கவும் எழுதியவருக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும். பல சிரமங்களுக்கிடையே
    தொடர்ந்து சுவை குன்றாமல் இந்தப் பகுதிக்கு எழுதி வருவது சந்தோஷமாய் இருக்கிறது தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பல சிரமங்களுக்கிடையே
      தொடர்ந்து சுவை குன்றாமல் இந்தப் பகுதிக்கு எழுதி வருவது சந்தோஷமாய் இருக்கிறது தம்பி.. ///

      மகிழ்ச்சி..
      நன்றி அண்ணா..

      நீக்கு
  9. நல்ல அண்டைவீடு, நல்ல பழக்கங்கள், நல்ல உரையாடல் என்று சரளமாகச் செல்லும் கதைக்கு நல்ல ஓவியம். இருவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. திருமணமான பெண்ணுக்குத் தக்க துணையாக அம்மா போன்ற அயலார்கள் அமைந்தால் எவ்வளவு நேர்த்தியாக இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் கதை. வேறு இடங்களில் வேலை குடித்தனம், பெற்றோர் மற்றும் உற்றாரைவிட்டுத் தள்ளி இருக்கவேண்டிய நிர்பந்தம்... தொலைக்காட்சியில் பொழுதை வீண்டிப்பதைவிட நல்ல பெரியவர்களின் துணை எவ்வளவு சிறப்பு என்பதையும் கதையில் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருமணமான பெண்ணுக்குத் தக்க துணையாக அம்மா போன்ற அயலார்கள் அமைந்தால் .. ///
      எத்தனை பேருக்கு இந்த மாதிரி அமைகின்றது?..

      அமைந்தாலும் - விரும்புபவர் எத்தனை பேர்?..

      நெல்லை அவர்களது கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  11. நீங்கள் கதையை முடிக்கும் வரிகள் சுஜாதாவின் அந்தக் கதையை நினைவில் கொண்டுவந்தன.

    அதன் கடைசி வரிகள்:

    “உங்க பேர் கேட்டு வச்சுக்கலியே..?’

    “வரதராஜப் பெருமாள்” என்றார்.

    எந்தக் கதையில இது?

    ‘ சிவப்பு மாருதி’ . https://www.sirukathaigal.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி..

      அந்த அளவுக்கு சுஜாதா அவர்களது கதைகளைப் படித்ததில்லை..

      ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  12. வந்தது ஆரென்று கடைசியாக முகம் காட்டுவது,

    தன் பெயர் சொல்வது என்பதெல்லாம் ஆதி புராணங்கள்...

    இருட்டுக்குள் துணையாக வீடு வரை கொண்டு வந்து சேர்த்த பின் - யாரப்பா நீ?.. என்று கேட்க -

    நான் தானப்பா ஏரிக்கரை முனீஸ்வரன்!.. - என்று நிகழ்ந்த கிராமிய சம்பவங்கள் ஏராளம்..

    சுஜாதா அவர்களது கதைகளை விரும்பிப் படித்தது 80 களில் தான்..

    முதல் கதை எழுதப்பட்டது 72 ல்..

    அதெல்லாம் எங்கே போயிற்று?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவின் ’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’’ தொகுப்பில் சில சுவாரஸ்யமான, அழகான கதைகள். ஒன்றிரண்டு சற்றே ஆழமான வாசிப்பைக் கோருபவை. வாசித்திருக்கிறேன், பல வருடங்கள் முன்பு. புத்தகம் இருந்தது. இப்போது சாவகாசமாக உட்கார்ந்து தேடுகையில், காணவில்லை. ஆமா, எங்கேதான் போச்சு அப்ப வாங்கிப்போட்டதெல்லாம்?

      நீக்கு
  13. தனியான பொழுதுகளுக்குத் தக்கதொரு துணையாக வருபவள் - சுக ஆசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகை என்பதற்காக - சுஹாசினி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! நான் என் கருத்தில் கேட்டிருந்த கேள்விக்கு விடை இங்கே!!!! பார்த்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  14. துரை அண்ணா, கதையில் யதார்த்தமான உரையாடல்கள், டக் டக்கென்று அழகாகச் செல்கிறது கதையின் நடை. நன்றாக இருக்கிறது. கதையின் முடிவில் சுஹாசினி என்று சொல்வதற்கும் கதையில் சொல்வதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ துரை அண்ணா? இருக்கும் போல் தோன்றுகிறது ஆனால் எனக்கு அது என்ன என்று தெரியவில்லை.

    கதை எனக்குத் திருவனந்தபுரத்து நாட்களை நினைவுபடுத்தியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இளம்பெண்ணின் பெயர் சுஹாசினி..
      அவ்வளவு தான்..

      தனியான பொழுதுகளுக்குத் தக்கதொரு துணையாக வருபவள் - சுக ஆசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகை என்பதற்காக - சுஹாசினி!..

      சகோதரி அவர்களது கருத்திற்கும் வர்கைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் குடித்தனம் திருமணம் ஆன புதிது. அடுத்த வீட்டு மாமிக்குக் குழந்தைகள் கிடையாது. என்னைத் தன் மகளாகப் பாவித்து மாமாவும் மாமியும் அன்பு செலுத்தியவர்கள். மாமியும் கதையில் வரும் அம்மையைப் போன்றுதான். நிறைய நம்பிக்கைகள், விரதங்கள், பூஜைகள் செய்பவர். அறிவுரை தருபவர். இப்போது இருவருமே இறைவனிடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நிறைய நம்பிக்கைகள், விரதங்கள், பூஜைகள் செய்பவர். அறிவுரை தருபவர். இப்போது இருவருமே இறைவனிடம்.. ///

      மீள் வருகையும் விவரமும் நெகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  16. /// நிறைய நம்பிக்கைகள், விரதங்கள், பூஜைகள் செய்பவர். அறிவுரை தருபவர். இப்போது இருவருமே இறைவனிடம்.. ///

    மீள் வருகையும் விவரமும் நெகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  17. அளித்திருக்கிறது. வீட்டில் குடி வந்த ஆரம்பத்துடன் கதை நன்றாக செல்கிறது. காக்கா இரு பெண்களையும் இணைத்துக் கொண்டது . நட்புகள் தொடரட்டும். கதை இயல்பாக செல்கிறது அருமை.

    வண்ணப்படமும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காக்கா இரு பெண்களையும் இணைத்து விட்டது //.

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  18. கல்யாணம் ஆகி முதல் 3 வருஷங்கள் பெரியவங்க மாத்தி மாத்தி இருந்ததாலே இந்த மாதிரி எல்லாம் உணரவில்லை. காக்கைக்குச் சாதம் வைக்கும் நேரத்துக்குக் கரெக்டாக ஒரு காக்கை தினமும் தோய்க்கிற கல் மேல் உட்கார்ந்து கொண்டு கூப்பிடும். அக்கம்பக்கத்தினர் சொல்லுவாங்க, கீதா, உன்னோட காக்கைக்குப் பசி வந்தாச்சுனு. இப்போவும் காக்கைக்குச் சாதம் வைத்தாலும் காக்கையின் குரலே கேட்பதில்லை. எங்கே போச்சு எல்லாக் காக்கைகளும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஒரு காக்கை தினமும் தோய்க்கிற கல் மேல் உட்கார்ந்து கொண்டு கூப்பிடும்.///

      காக்கைகள் இப்போது சில மாதங்களாக வருகின்றன.

      சாலை ஓர மரங்கள் போய்ச் சேர்ந்து விட்ட நிலையில் இவை வெண்ணாற்றங்கரை மரங்களில் இருப்பவை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

      நீக்கு
  19. தம்பி இயல்பாக எளிமையாக ஒரு நிகழ்வைக் கதையாக்கி வெற்றியும் பெற்று விட்டார். கேஜிஜி அவர்களின் சித்திரமும் நன்று. இயல்பான பேச்சு வார்த்தை இக்காலத்திலும் இருக்கா? ஏனெனில் இங்கே வந்ததில் இருந்துஅக்கம்பக்கம் நான் தான் போய்ப் பேசுவேன். அவங்களா வந்து பேசுவது ரொம்பக் குறைவு. இது எனக்குச் சென்னை/அம்பத்தூர் நாட்களை நினைவூட்டுகிறது. அங்கெல்லாம் பக்கத்து வீட்டு சமையலில் குழம்போ, ரசமோ சிறப்பாகச் செய்தால் நம்மிடம் சொல்லி உனக்கும் தரேன், அதுக்குள்ளே சாப்பிட்டுடாதே என்பார்கள். :)))))) இங்கெல்லாம் அது நடக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இயல்பான பேச்சு வார்த்தை இக்காலத்திலும் இருக்கா?.. ///

      இல்லை என்று சொல்லி விட முடியாது.. இங்கும் பக்கத்தில் அன்புடன் பழகுகின்றார்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அக்கா..

      நீக்கு
  20. அருமையான கதை.

    கதைக்கு பொருத்தமாக சாரின் ஓவியம் அருமை.

    //சரிங்கம்மா.. தேடி வந்ததுக்கு நல்ல சேதி சொல்லியிருக்கீங்க.. நான் மற்ற வேலைய கவனிக்கிறேன்.. இனிமே அடிக்கடி வந்து தொந்தரவு செய்வேன்.. பிரச்னை ஒன்னும் இல்லையே.. "

    " இப்படி பேச்சு துணைக்கு ஆள் வேணுமே ன்னு தான் இருந்தேன்.. நல்லவேளையா நீ கிடைச்சிருக்கே!.. "//
    இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் அன்பாய் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். நட்பு தொடர வாழ்த்துகள்.

    புதிதாக வந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு யோசனை சொல்லி கொடுத்து அந்த பெண்ணின் கவலையை போக்கியது அருமை.
    அம்மா போன்று நல்ல வார்த்தை சொல்ல சுஹாசினிக்கு கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// புதிதாக வந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு யோசனை சொல்லி கொடுத்து அந்த பெண்ணின் கவலையை போக்கியது அருமை. ///

      தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. கௌ அண்ணா சொல்ல விட்டுப் போச்சு. படம் பொருத்தம்.

    அந்தப் பொண்ணு கூப்பிடறது கா கா கா....மரத்துல ரெண்டு காக்கா இருக்காப்ல போட்டிருக்கலாமோ!! உக்காந்துட்டு வராம இருக்காப்லயும்...கதைல அந்த அம்மா சொல்றாங்களே உள்ள போ வந்து சாப்பிடும்னு!!!

    ஆனா தரையில் நாய்க்குட்டியா கௌ அண்ணா!!!! சும்மா உங்கள கலாய்த்தல்தான்...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சாரின் நினைவு தினம் அன்று( 23ம் தேதி) காக்கைக்கு சாதம் வைக்கும் பால்கனி கதவு திறக்க முடியவில்லை. காலை திறந்து பார்த்து விட்டு முடியாமல் வளாக அலுவலகத்தில் யாராவது அனுப்புங்கள். என்று கேட்டுகொண்டு கோவிலுக்கு போய் விட்டேன். மதியம் சமைத்து விட்டு காகத்திற்கு வைக்க வேண்டுமே என்று நினைத்த போது உதவியாள் வந்து ஒரு உதை விட்டார். கதவு திறந்து கொண்டது. என் மனக்குறையும் நீங்கியது.

    தினமும் காகத்திற்கு வைக்காமல் உண்ண மாட்டேன். தினம் காகம், புறா, குயில், தவிட்டுக்குருவிகள், மைனா என்று வந்து உண்ணும். காகம் போல குயிலும் வந்து விட்டேன் என்று குரல் கொடுத்து உண்ணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காகம் போல குயிலும் வந்து விட்டேன் என்று குரல் கொடுத்து உண்ணும்.//

      தங்களது மீள் வருகையும் மேல் விவரங்களும் நெகிழ்ச்சி..

      நீக்கு
  23. யதார்த்தமான நடை சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  24. யதார்த்தமான நடை சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    பதிலளிநீக்கு
  25. சுஹாசினி பெயரில் சூட்சுமமா? புரியவில்லையே?
    கதை இயல்பாகப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிக்குத் துனையாகும் அம்பிகையின் பெயர்களில் ஒன்று சுஹாசினி..

      அவ்வளவு தான்..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!