வியாழன், 27 அக்டோபர், 2016

சிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்


 

 
 
          தேனம்மை பரபரப்பான எழுத்தாளராகி விட்டார்.  நிறைய புத்தகங்கள் வரிசையாக வெளியிடுகிறார்.
     அதில் லேட்டஸ்ட் (சரிதானே தேனம்மை?  ஒருவேளை அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதா?) இந்த "சிவப்பு பட்டுக் கயிறு.
 
 
 
 


     இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன.  தினமணி கதிர், திண்ணை, தினமலர் பெண்கள் மலர், மேரிலேன்ட் எக்கோஸ், தினமலர் வாரமலர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம்,தென்றல் (அமெரிக்க தமிழ் மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளில் வெளியானவை.

     இதில் புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்பு பட்டுக் கயிறு கதை மனதை அசைத்து விட்டது.  ஏதோ தத்து கொடுப்பார்கள் எங்கள் இல்லங்களிலும்.  ஆனால் இந்த மாதிரி ஒரு உறவறுத்து இன்னொரு உறவுடன் சேரும் வேதனை படிக்கும்போது மனதில் பதிந்தது.  
 

     "பின்னால் இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான வாழ்வு முடிந்து விட்டது.  இனி அது வேறு வீட்டுப்பிள்ளை."

     மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பதை ரசிக்க முடிந்தது.
 

     "தாய் வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலவும் இருக்கிறது.  வீட்டின் கதவுகள், ரூம்கள், அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது"
 

     சூலம் கதை ஆரம்பக் காட்சிகளை ஒரு திரைப்படக் காட்சி போல வர்ணிக்கிறார்.   ஒரு டெலூசன் போல கதை முடிவு.  தற்கொலையா, தண்டனையா?  நாயகிக்கு விடுதலை!  அதையும் மனத்தளவில்தான் வைத்துக் கொள்ளவேண்டும்!
 

     கருணைக்கொலை என்பது ஆக்சிமோரானோ!  அதனால்தான் கருணையாய் ஒரு வாழ்வு என்று தலைப்பாக்கி ஒரு உண்மை சம்பவத்தில், இருநிலை விவாதமாய், கற்பனை உரையாடலைப் புகுத்தியிருக்கிறார்.
 
 
 
 
 

     கத்திக் கப்பல் ஒரு உணர்வுபூர்வமான கதை.  கணவன் தவறுசெய்து விடுவானோ என்று தோழியால் ஏற்படுத்தப்பட்ட பயம் -  அதனாலேயே அவனுக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று பதறி, அது இல்லை என்றானதும் அதனால் ஏற்படும் நிம்மதியும், பின்னர் மற்ற பாதிப்பாளர்கள் மேல் ஏற்படும் கரிசனமும்..

     பட்டாம் பூச்சிகளும் பூக்களும் கதையில் வர்ணனையில் விளையாடுகிறார்.  அதிலும் அந்த நடிகையின் மரணம் பற்றிய குறிப்புகளில் "மரண வர்ணனை!"    ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக்கவேண்டும்?  ஏதோ ஆறுதல்கள்..
 

     செம்மாதுளைச்சாறு ஏதாவது ஃபாண்டஸி வகைக் கதையா?  தில் சேர்த்தி என்றே தெரியவில்லை.  எதன் குறியீடு அது?
 

     ஒரு கருவின் கதறலாய் 'நான் மிஸ்டர் Y'.   ஒரு பிரச்சாரம் போல நிறைய விவரங்கள் தருகிறார் ஆசிரியர்.  பொதுவாக கதைகளில் சொல்லப்படும் விஷயங்களுக்காக நிறைய தேடி,  விஷங்கள் எடுத்துச் சேகரித்து வைத்துக் கொள்வார் போல...
 

     ஒருநாள் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்த ஒரு குட்டிப்பெண்ணின் உணர்வுகள் 'சொர்க்கத்தின் எல்லை நரகம்' சிறுகதையில்.  நிதர்சனங்கள்.
 

     'அப்பத்தா'.   மரணம் அறியாத சிறுபெண்ணின் பார்வையில் கதை விரிகிறது.  அப்படியே அறியாமல் இருந்து விட்டால்?  ம்ஹூம்...!
 

     எல்லோரும் நல்லவராக இருந்தால் எப்படி இருக்கும்?  விக்கிரமன் படம் போல இருக்கும்!  ரக்ஷா பந்தன் சிறுகதை போலவும் இருக்கும்!

     பிள்ளைக்கறி.  ஆண் மிருகங்கள் பற்றிய கதை.  சில பெண்கள் தங்கள் சிறுவயதில் இப்படிப்பட்ட ஆண் மிருகங்களைச் சந்தித்திருக்கலாம்.  வயதானதையே பாதுகாப்பாய் வைத்துக் கொண்டு 'கைபோடும்' ஆண்கள்.  அதை அந்தப் பாட்டிக்கு மிக லேட்டாகவே புரிய வைக்கிறாள் அந்தப் பேத்தி.  அவர்களாலேயே உதவிகள் தேவைப்படும் சமயங்கள் எனபதால் அவற்றைக் கண்டும் காணாமல் கடக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள்...
 

     எரு முட்டை .   'அடப்பாவமே' என்று மனம் சொன்னாலும், ஏற்க முடியவில்லை.  'அவன்' இவ்வளவு நல்லவனாகவும் இருக்கக் கூடாது!
 
 
 
 

     'நந்தினி' கூட ஒருவகைப் பிரச்சாரக் கதைதான்.  கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் அறிவுரை, கொஞ்சம் பிரச்சாரம்!  ஆனாலும் அதிலும் சுவாரஸ்யம் கலந்து தந்திருக்கிறார்.  மீண்டும் நிறைய விவரங்கள் - இந்த முறை எய்ட்ஸ் பற்றி.

     கல்யாண முருங்கை.  எதிர்பார்த்த திருப்பங்கள் வந்தாலும் காலம் கடந்த ஞானோதயம்? 

     "குடும்ப வன்கொடுமைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது.  கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதில்லை.  "ஆண் மட்டும்தான் வன்கொடுமை செய்வான்"  எனச் சட்டமும் முடிவெடுக்கிறது"  என்கிறார் பெண் எழுத்தாளரான தேனம்மை.

     "புன்னகையை இழக்கும் மனிதர்கள் பாதி மரித்து விடுகிறார்கள்." - உண்மை.

     'ஸ்ட்ரோக்' -  மறுபடியும் ஒரு காலம் கடந்த ஞானோதயம்!  எதிர்பாலின அன்பை புரிந்து கொள்ளும் வயது!  அது புரிந்து கொள்ப்படும்போதோ..  அந்தோ..  கதாசிரியை பாலச்சந்தர் ஆகி விடுகிறார்!!!
 
 
 
 

சிவப்புப் பட்டுக் கயிறு 

103 பக்கங்கள் டிஸ்கவரி புக் பேலஸ்,

80 ரூபாய்.

21 கருத்துகள்:

  1. வாசிக்கத் தூண்டும் விமர்சனம்
    அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. 'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!!

    பதிலளிநீக்கு
  3. 'விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!!

    பதிலளிநீக்கு
  4. வாசிக்கத் தூண்டுகிறது. முன்னமே வைகோ சாரின் நெடிய ஆழ்ந்த விமரிசனத்தைப் படித்துவிட்டேன். உங்கள் பாரவையிலும் புத்தகத்தின் மதிப்பைத் தெரிந்துகொண்டேன். விரைவில் வாங்கவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள், உங்களுக்கும் தேனம்மைக்கும்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான அசத்தலான விமர்சனம்.

    அழகுக்கு அழகு சேர்க்கும் மூன்று முத்தான புதிய படங்கள். :)))

    நான் ஒருவித உரிமையுடன் அவற்றை என் ’பதிவர் போட்டோ வங்கி’க்காகத் திருடிக்கொண்டும் விட்டேன். :)))))

    மிகச்சிறந்த, மிகப்பிரபலமான, நூல் ஆசிரியர் அவர்களுக்கும், மதிப்புரையாளரான தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. தேனம்மையின் சிவப்புப் பட்டு கயிறு நூல் விமர்சனம் அருமை.
    வை.கோ சாரும் அழகாய் விமர்சனம் செய்து இருந்தார்.
    உங்களுக்கும், தேனமைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. #ஓய்வில்லாத உழைப்பில் ஒருநாள் ஓய்வு இப்படியா கிடைக்கவேண்டும்?#
    நடிகை பற்றி கண்ணதாசன் சொன்னது ,சகோ தேனம்மை மறக்கவில்லை போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  9. படிக்க ஆவலைத் தூண்டும் மதிப்பீடு. பாராட்டுகள். தம5

    பதிலளிநீக்கு
  10. விமர்சனம் நூலை வாங்கும் ஆவலைத் தூண்டுகின்றது வாழ்த்துகள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. குறிப்பிட்டிருக்கும் சில கதைகளை வாசித்திருக்கிறேன். நூலை முழுதாக வாசிக்கத் தூண்டுகிறது தங்களது அருமையான விமர்சனம்.

    தேனம்மைக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. கோபு சாரின் விமர்சனத்தில் ஏற்கெனவே இக்கதைகள் பற்றிப் படித்திருக்கிறேன். உங்கள் விமர்சனமும் வாசிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது. நூலாசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாசிக்கத்தூண்டுகிற விமர்சனம்,,,/

    பதிலளிநீக்கு
  14. வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.... இம்முறை வரும்போது புத்தகம் வாங்க நினைத்திருந்தேன். பணிகளுக்குக் கிடையே வெளியே செல்ல இயலவில்லை. அடுத்த முறை தான் வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. அடடா. இது எப்போ !!!!!!!!!!! கடவுளே.. எப்பிடிப் பார்க்காம விட்டேன் ! நன்றி ஸ்ரீராம் !!!

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஜெயக்குமார் சகோ !

    ///விமர்சன'த்தைப் படிக்கும்போதே விமர்சகர் கதைமாந்தர்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது....!!! /// சரியா சொன்னீங்க பாரதி. நன்றி :)

    நன்றி நெல்லைத் தமிழன். :)

    நன்றி கீதா மேம்

    நன்றி விஜிகே சார். //மிகச்சிறந்த, மிகப்பிரபலமான, நூல் ஆசிரியர் அவர்களுக்கும், மதிப்புரையாளரான தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள்.//அஹா ! என்ன தவம் செய்தேன். ! தன்யளானேன்.! தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள். !

    பதிலளிநீக்கு
  17. நன்றி கோமதி மேம்

    நன்றி பகவான் ஜி அதை ஸ்ரீராம் சொல்லி இருக்கார் :)

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  18. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி கலையரசி மேம்

    நன்றி விமலன்

    நன்றி வெங்கட் சகோ !

    பதிலளிநீக்கு
  19. தீபாவளிப் பரிசாக இவ்விமர்சனத்தைப் போட்டிருக்கீங்க. அதன் பின் இரு முறை வந்திருக்கேன். ஆனா இதைப் பார்கலை ஸ்ரீராம். வீட்டில் அநேக வேலைகள், பயணம், ஏதேதோ எழுத்து படிப்பு. இதைப் பார்க்காததுக்கு மன்னிக்க. :) மிக அருமையான விமர்சனத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஸ்ரீராம். !

    ஒவ்வொரு கதைக்கும் சிறுகுறிப்பா சுருக் நறுக் விமர்சனம் அருமை. :)

    செம்மாதுளைச்சாறு கதை ஒவ்வொரு பெண்ணின் பிரியத்தையும் பற்றியது. அதைத் தாங்கமுடியாதவர்களிடம் சமர்ப்பிக்கச் செல்வது போல. ( என் கணவர் வங்கி மேனேஜர் :) திரும்ப தானே அவ்வன்பைக் கம்பீரத்துடன் சுமந்து கொள்வது போல . அநேகமாக மனைவிகளின் அன்பை, காதலை கணவர்களால் முழுமையாக ரிசீவ் பண்ண முடிவதில்லை என்பது என் அப்சர்வேஷன். என் அப்சர்வேஷன் மட்டுமே :) எனக்கு திஜாராவின் ஒரு கதையில் வரும் வரி பிடிக்கும். /// பாரு மல்லி மல்லீஈ ந்னு அதைக் கத்திக் கத்திப் பயமுறுத்துறான். இல்லாட்டி அதை ஒரு பொம்மனாட்டி கையில குடுத்துட்டு ஓடிப்போய் தெருவோரம் இதன் வாடை தாங்கம ஒரு பீடியப் பிடிச்சிக்கிட்டு நிப்பான் // என ஒரு பூக்காரனைப் பற்றி ஒருபெண் சொல்வதாக வரும். நாம் கவிழ்க்கும் அன்பு தாங்கமுடியாததாக இருக்குதோ என்ற ஆழ்மனத் தேடல்கள் உண்டு. அதுவே அக்கதை.

    பதிலளிநீக்கு
  20. மிஸ்டர் ஒய் , நந்தினி ..ஹிஹி பிரச்சாரமேதான். :) கண்டுபிடிச்சிட்டீங்க. எல்லாக் கதைக்குமே விவரங்கள் சேகரிச்சு வைச்சுக்குவேன் :) குடும்ப வன்கொடுமைச் சட்டத்தின் கொடுமை, காலங்கடந்த ஞானோதயம் அல்லது தைரியம் .. எல்லாமே சொல்ல நினைத்ததுதான். இத்தனை வருடம் கழித்துத்தான் தைரியம் வந்திருக்கு. :) மீண்டும் நன்றி ஸ்ரீராம் மிக அழகான விமர்சனத்துக்கு. எனக்கு மெயிலில் தெரிவித்து இருக்கலாமே. :) நன்றி. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!