Thursday, October 6, 2016

குமுதம், குங்குமம், விகடன் ஒரு பார்வை     எங்கள் பேப்பர்க்காரர் பேப்பரைத் தூக்கித் தூக்கித் தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்ததாலும், சில வார இதழ்களை போடாமல் விட்டு விட்டு, காசு வாங்கும்போது நான் போட்டேன் என்று சொன்னதாலும் நிறுத்தி விட்டேன்.  Image result for paper boy 

     இரண்டு மாதங்களாகிறது.  இவையெல்லாம் வாங்காதது
பெரிய நஷ்டமாய்த் தெரியவில்லை.  இணையத்தில் பார்த்து விட முடிகிறது என்பதும் ஒரு காரணம்.  சினிமா விகடன், கல்கி, துக்ளக் வாங்கி கொண்டிருந்தேன்.  தினமணி, இந்து வாங்கி கொண்டிருந்தேன்.  இப்போது தினசரிகளை இணையத்தில் பார்த்து விடுகிறேன்.   மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!


     இரண்டு மாதங்களாகி விட்டதால், சிகரெட்டை நிறுத்தியவன் மறுபடியும் ஒருமுறை முயற்சித்துப் பார்ப்பானே..   அது போல ஒருநாள் கடைக்குச் சென்று இந்து, தினமணி, தினமலர் பேப்பர் வாங்கி கொண்டு, குமுதம், குங்குமம், ஆனந்த விகடன், துக்ளக் வாங்கி கொண்டு வந்தேன்.


     குமுதம் வாங்கியதற்கு வேறொரு காரணமும் இருந்தது.  என் தங்கையின் இரண்டாவது பெண்ணின் புகைப்படம், சிறு பேட்டி அதில் வந்திருந்தது.


     பழைய முத்து காமிக்ஸ் புத்தகம் வாங்குவோம் பாருங்கள் அந்த சைஸில் இருக்கின்றன குமுதமும், குங்குமமும்!  பாக்கெட் நாவல் கூட கொஞ்சம் பெரிய சைஸாய் காட்சியளிக்கும்!  குமுதம் 20 ரூபாய்.   குங்குமம் 12 ரூபாய்.  விகடன் 25 ரூபாய்.


     குமுதத்தில் தீபாவளி சிறப்பிதழ் என்று 3  புத்தகங்களாம்.


 


 
     ஒரு குமுதத்தின் அட்டையில் "இதனுடன் இணைப்பு மெகா சைஸ்" என்று  அறிவிப்பு.  மெகா சைஸ் என்றால் என்ன?  ரெகுலர் ஆனந்த விகடன் அளவு!  அப்படியானால் குமுதம் சைஸ் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  
     சினிமாவையே பெரிதும் நம்பியிருக்கின்றன இவை மூன்றுமே.. குமுதத்தில் சாரு நிவேதிதா எழுத்து கண்ணில் பட்டது.   குங்குமத்தில் ஜெமோ!   
     குங்குமம், மற்றும் குமுதம் அட்டையாவது உள்புறம் மடிந்து படிப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.  விகடன் அட்டை வெளிப்புறமாக மூன்றாகப் பிரிந்து கடுப்பேற்றுகிறது.  கிழித்து எறிந்து விட்டுத்தான் படிக்க வேண்டும்! 
     விதி விலக்கில்லாமல் எல்லாப் பத்திரிகைகளும் வலைப் பக்கத்தை நம்பியிருக்கின்றன.  வண்டியும் ஒருநாள் ஓடத்தில்..... ! 
     ஒரு ஆச்சர்யம்!   அயன்புரம் த. சத்தியநாராயணன் இன்னும் சளைக்கவில்லை!   
     குமுதத்தில் இன்னும் அரசு பதில்கள் வருகிறது.  அரசு வுக்கு இப்போது என்ன விளக்கமோ!
     ஆனந்த விகடனில் இந்தப் பக்கங்களை நான் படிப்பதே இல்லை.     ஆனந்த விகடனை ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் வாங்கி விட்டார் என்று ஒரு வதந்தி இருந்தது.  மறுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

     ஆனந்த விகடன் நான் வாங்கிய நேரம் தமயந்தியின் கதை வெளியாகி இருக்கிறது!  அவர் கதைகளில் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன்.  ஒரு கதையைப் படித்து, இங்கு பகிர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மிக யதேச்சையாக அவர் கண்ணிலேயே அது பட்டு அவர் இங்கு வந்து நன்றியும் சொல்லியிருந்தார் என்று நினைவு.

     பஞ்சு அருணாச்சலம் மறைந்து விட்டார்.  அவர் சொல்லிய விஷயங்கள் தொடராக இன்னும்... 

     குமுதத்தில் எம்ஜிஆர், சிவாஜி பற்றிய தொடர்கள்,  பகோபி தொடர்கதை, சுரேஷ் கண்ணனின் உலக சினிமா, கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா, பாலகுமாரனின் புதிய தொடர்.... இவற்றுடன் சரிதா நாயரின் சுயசரிதை வருகிறது.


     இந்த "மெகா சைஸ்" குமுதம்  சற்று சுவாரஸ்யம்தான்.
 


     குங்குமம் இதழில் ராஜேஷ்குமார் தொடர்கதை, ஈரோடு கதிர் தொடர்...     கல்கி 15 ரூபாய்.  ஆனால் அது கிடைக்கவில்லை.    இந்தப் பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் அது நிச்சயம் பெட்டர் பத்திரிக்கை.
     மறுபடியும் சொல்கிறேன்,  மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!


     பொதுவாக இந்தப் புத்தகங்களுக்கு அவைகளின் பழைய கவர்ச்சி போய்விட்டது.

45 comments:

ரிஷபன் said...

அவை வாசகர்களுக்கு இதுதான் பிடிக்கும் அல்லது நாம் கொடுப்பதைப் படித்தால் போதும் என்கிற மனோநிலைக்குப் போய் வெகு நாட்களாகி விட்டன. படிக்காவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான வாசகர்களும் வந்தாச்சு.

ரிஷபன் said...

அவை வாசகர்களுக்கு இதுதான் பிடிக்கும் அல்லது நாம் கொடுப்பதைப் படித்தால் போதும் என்கிற மனோநிலைக்குப் போய் வெகு நாட்களாகி விட்டன. படிக்காவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை என்கிற முடிவுக்கு பெரும்பாலான வாசகர்களும் வந்தாச்சு.

வெங்கட் நாகராஜ் said...

இவற்றை தொடர்ந்து படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. குறிப்பாக வாங்குவதே இல்லை. எப்போதாவது எங்காவது நூலகத்திலோ, நண்பர் வீட்டிலோ பார்க்கும்போது பக்கங்களைத் திருப்பவதோடு சரி! நிச்சயமாய் இழப்பொன்றுமில்லை!

பாரதி said...

சத்தியமாக, எந்த பத்திரிகையுமே மனதை ஈர்க்கவில்லை, முன்பு போல.

பாரதி said...

சத்தியமாக, எந்த பத்திரிகையுமே மனதை ஈர்க்கவில்லை, முன்பு போல.

Bagawanjee KA said...

எழுத்துச் சித்தர் எழுதும் இளமை துள்ளும் காதல் தொடர் எப்படியோ ?படத்தில் இளமை துள்ளத்தான் செய்கிறது :)

Madhavan Srinivasagopalan said...

இப்படி மொத்த புஸ்தகத்தையும் & போட்டோவும் இங்க பிரசுரம் பண்ணா, அவங்க பிசினெஸ் எப்படி சார் நடக்கும் ? #ச்சும்மா

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான கண்ணோட்டம்
இன்று
ஏடுகள் பெருகிக்கொண்டிருக்க
வாசகர் குறைந்து கொண்டிருக்கிறதே!

வல்லிசிம்ஹன் said...

அவ்வப் பொழுது தோன்றும் . வலை நண்பர்கள் சில பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மனசுக்கு ஆசை தோன்றும். விட்டுவிடுவேன். நஷ்டம் ஒன்றும் இல்லை.

'நெல்லைத் தமிழன் said...

'நான் விகடன், குமுதம், குங்குமம் போன்ற அனைத்துப்பத்திரிகைகளையும் நினைவு தெரிந்த காலம் முதல் படித்தவன். அதுலயும் 80கள்தான் பத்திரிகைகளின் பொற்காலம். அப்போ, தொடர்களும், கட்டுரைகளும் ரொம்ப நல்லாருக்கும். ஏகப்பட்டப் பத்திரிகைகள் தரத்தில் வந்துகொண்டிருந்தன (சாவி, இதயம், மயன், இதோட விகடன், கல்கி, குமுதம்...). எப்போயுமே 'குமுதம்' பெண்கள் பத்திரிகையாகப் பார்க்கப்படும்.(ஆனா படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கும்.. அதெல்லாம் அந்தக்காலமா? அல்லது அந்த வயசான்னு தெரியலை)

இப்போ எல்லோரும் எண்ணுவதுபோல் இந்தப் பத்திரிகைகளின் தரம் தாழ்ந்துவிட்டது. விகடன், எப்போ விகடன் டெலி விஸ்டாஸ் எடுக்க ஆரம்பிச்சதோ அப்போதே தரம் குறைந்துவிட்டது, காம்ப்ரமைஸ் ரொம்ப ஜாஸ்தியாகிடிச்சு. இப்போ அரசியல் சார்பும் ரொம்ப அதிகமாகிடிச்சு (அதே..அதே காரணம்தான்). விகடனில் நான் படிப்பது, திரைத்தொண்டர், இன்பாக்ஸ், வலை பாயுதே அப்புறம் ஜோக்ஸில் 2 பக்கத்துக்கு கலாய்த்துவரும் படத் தொடர். குமுதம், வாசகர்களின் அறிவு லெவலை ரொம்பத் தாழ்வாக நினைக்க ஆரம்பிச்சு வருடக்கணக்காகிறது. அதுல முன்ன சோவின் தொடர் கட்டுரை, இப்போ சாரு நிவேதிதாவின் கட்டுரை. இதை விட்டா, ஹன்ஸிகா படப்பிடிப்பு இடைவேளையில் அம்மா மடியில் படுத்துக்கொண்டுவிடுவார், திரிஷா 2 பட்டன் உள்ள சட்டைகளைத்தான் விரும்பி அணிகிறார் என்ற முக்கியமான தகவல். பத்தாதற்கு, விகடன் கிழக்குப் பக்க ஜால்ரான்னா குமுதம் மரத்துப்பக்க ஜால்ரா. கட்சி சார்பான கட்டுரைகளைவிட, குங்குமத்தில் நல்ல பகுதிகளும் இருக்கின்றன. கல்கி போட்டியைச் சமாளிக்க முடியாமல், நிறைய பணம் வருகிற மறைவான விளம்பரமான கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டாலும், கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஓகே.

நீங்கள் போட்டுள்ள, இதழ்களின் அட்டைப் படங்களே அதன் உள்ளடக்கத்தைச் சொல்லும்.

ஜீவி said...

// மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!..//

ஒரு தடவை கையைச் சுட்டுக் கொண்டது போதாதா?.. ஏன் இந்த விஷப்பரிட்சை?..

ஜீவி said...

பாலகுமாரன் எழுதுகிறாரே என்று இரண்டு இதழ்கள் படித்தேன். எப்படி எழுதிய 'மெர்குரிப்பூக்கள்' பாலகுமாரன்?.. இப்படியா போக வேண்டும்?.. இன்றைய தலைமுறையினருக்கு இப்படித் தான் எழுத வேண்டும் என்று இவர்களாகக் கற்பனைப் பண்ணிக் கொள்வதால் வந்த வினையா தெரியவில்லை.

ஜெயகாந்தன் இன்றும் வாழ்கிறார். வேண்டுகிறவர்களுக்கு வேண்டியபடி எழுத கடைசி வரை காம்ப்ரமைஸ் பண்னிக் கொள்ளாது வாழ்ந்த ஜெயகாந்தன் இன்றும் மனசில் வாழ்கிறார்.

Thulasidharan V Thillaiakathu said...

அது ஒரு கனாக்காலம் என்பது போல்...இல்லை என்றால் பெரிசுகள்!!! (அப்போ நாம யாருனு கேட்கக் கூடாது!!) சொல்லுவார்களே இப்பல்லாம் என்ன தரம் இருக்கு... அந்தக் காலத்துல என்று சொல்லுவார்களே, அப்படித்தான் ஆகியிருக்கின்றன இதழ்கள் எல்லாம். வாசித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் வாங்கிப் பார்த்தோம் என்னதான் ஆகியிருக்கிறது என்று பார்க்க. என்னவொ ஸ்வாரஸ்யமாக இல்லை. எனவே இருவருமே விட்டுவிட்டோம். எங்கேனும் கண்ணில் பட்டால் புரட்டுவதோடு சரி. ஒவ்வொன்றின் அட்டைப் படமும் அது போல.

துளசி: எங்கள் பகுதியில் கிடைப்பதும் அரிது..தேடித் தேடிப் பார்க்க வேண்டும்..அலுப்பு

கீதா: நான் எப்போதேனும் பிரயாணத்தின் போது வாங்குவதுண்டு. ஆனால் போர். தலைவர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஆவியில் வந்த போது வாசித்தேன். எஸ் ரா கட்டுரைகள் ஆவியில் வந்த போது எப்போதேனும் ஆனால் ரெகுலராக இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாமல். வீட்டில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் த்ராஷ் ..!!!!!

Gomathirajaram Rajaram said...

Nice review

Gomathirajaram Rajaram said...

Nice review

G.M Balasubramaniam said...

இணையத்தில் பத்திரிகைகள் வாசிக்க முடியுமா தெரியாததால் கேட்கிறேன் பல விளம்பரங்கள் அஞ்சலில் வருகிறது பார்ப்பதே இல்லை

Saratha J said...

முன்புள்ள பத்திரிக்கையில் தொடர் கதை எல்லாம் நன்றாக இருக்கும். இப்போது அப்படி இல்லை.

KILLERGEE Devakottai said...

பத்திரிக்கை முன்பு போல் இல்லை நண்பரே பகுதிக்கு மேல் விளம்பரங்கள் பண விரயம்தான் ஆகவே இப்பொழுது மவுசு குறைந்து விட்டது உண்மையே...

ஞா. கலையரசி said...

சரியான அலசல். விகடன் கூட ரொம்பவும் தரம் தாழ்ந்து விட்டது. சினிமா, நடிகைகள் பற்றிய செய்திகள் தாம் பெரும்பாலும். நடையும் படு மோசம். தமிங்கிலீஷ் என்ற பெயரில் தமிழைக் கொலை செய்கிறார்கள். இதழ் வாங்கினால், பத்துநிமிடங்களுக்கு மேல் படிக்கவோ, பார்க்கவோ ஏதுமில்லை. இவற்றை வாங்குவதால் பலன் ஏதுமில்லை. பணம் தான் விரயம்.

ஸ்ரீராம். said...

நன்றி ரிஷபன் ஜி. பித்தம் தெளிய எதைத் தின்பது என்னும் நிலை போல!

ஸ்ரீராம். said...

உண்மைதான் வெங்கட். ஏதாவது விஷயம் இருந்தால்தானே இழக்க! :P

ஸ்ரீராம். said...

நன்றி பாரதி.. முன்பு பெரிய எழுத்தாளர்கள், அழகிய தொடர்கதைகள் எல்லாம் இருந்தன. இப்போதோ?

ஸ்ரீராம். said...

வாங்க பகவான் ஜி. ஜீவி ஸார் சொல்லியிருப்பது போல பழைய பாலகுமாரனாக இல்லை அவர்.

ஸ்ரீராம். said...

வாங்க மாதவன்! மொத்த புத்தகமுமே இவ்வளவுதான் என்று நினைத்து விட்டீர்களா! இன்னும் நான்கைந்து பக்கங்கள் இருக்கும்!!!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் JYK லிங்கம்.

ஸ்ரீராம். said...

நன்றி வல்லிம்மா. ஆமாம் 12-10, 16 இதழில் கூட கே ஜி ஜவர்லால் எழுதியிருக்கிறார். அந்தப் படமும் கூட மேலே இணைக்கப்பட்டுள்ள படங்களில் ஒன்றாய் இருக்கிறது பாருங்கள்.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லைத்தமிழன்.. இந்தப் புத்தகங்களில் நீங்கள் நிறையவே வாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது! மயன் என்றொரு பத்திரிகையா? கேள்விப்பட்டதில்லை.

ஸ்ரீராம். said...

வாங்க ஜீவி ஸார்..

//ஒரு தடவை கையைச் சுட்டுக் கொண்டது போதாதா?.. ஏன் இந்த விஷப்பரிட்சை?..//

மற்றப் பத்திரிகைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கவும், இன்னொரு பதிவு தேத்தவும்தான்!!!!

ஸ்ரீராம். said...

வாங்க துளஸிஜி / கீதா

எல்லோருக்கும் அதே ஆதங்கம்தான். ஏற்கெனவே வாட்ஸாப்பில் ஒரே விஷயமே மீண்டும் மீண்டும் க்ரூப் க்ரூப்பாக வலம் வந்து கொண்டிருக்கும். அதே இழவை மறுபடியும் இவர்கள் எடுத்துப்போட்டு பக்கங்களை நிரப்புகிறார்கள்! தலையெழுத்து.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதிராஜாராம் ராஜாராம்.

ஸ்ரீராம். said...

செய்தித்தாள்களை படிக்க முடியும் ஜி எம் பி ஸார். பத்திரிகைகளை ஓரளவு படிக்கலாம். முழுவதும் படிக்கப் பணம் கட்டவேண்டும்.

ஸ்ரீராம். said...

வாங்க சாரதா... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தேவன், கல்கி, ராகிர, புனிதன், எஸ் ஏ பி, பி எஸ் ராமையா, அரூரா என்று அந்தப் பட்டாளம் மறுபடி வருமா?

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

வாங்க சகோதரி கலையரசி, விகடனில் மற்றப் பத்திரிகைகளை விட அதிகம் சினிமாச் செய்திகள். நான் அந்த விகடனையே சினிமா விகடன் என்றுதான் அழைப்பேன்.

mohamed althaf said...

thanks

mohamed althaf said...

thanks to the info
http://tamilitwep.blogspot.com/

'நெல்லைத் தமிழன் said...

மயன் பத்திரிகை, 79களில் இதயம் பேசுகிறது மணியனால் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியைத் துணையாக்க் கொண்டு இளைஞர் முன்னேற்றத்திற்காக அவர்களுக்குத் தன்னம்பிக்கை வரும் வித்த்தில் ஆசிரியர் மணியனின் இரண்டாம் எழுத்தை எடுத்து மயன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. நாங்களும் கொஞ்சம் படிச்சோம். சாவி குமுதம் விகடன் (அதுவும் சுஜாதா கதை, ஜெ ஓவியம்) ஈர்த்த அளவுக்கு மயன் இல்லை. அது தாக்குப்பிடிக்க இயலவில்லை

சிகரம் பாரதி said...

வார இதழ்கள் எல்லாம் வணிக மயமாகி விட்டன. விளம்பரத்தையும் சினிமாக் கட்டுரைகளையும் நம்பி இருக்கின்றன. வாசகர்கள் நாம் தான் பாவம்!

Geetha Sambasivam said...

இந்தப் புத்தகங்கள் எல்லாம் இன்னமும் விற்பனையில் சாதனைகள் படைக்கின்றனவா? வாராந்தரி, மாதாந்தரி படித்தே பல வருடங்கள் ஆகின்றன. இப்போதைக்கு தீபம், பக்தி, சக்தி விகடன் ஆகியவை மட்டும் வாங்குகிறார். துக்ளக் எப்போதுமே உண்டு. மற்றவை புத்தகங்களாகவே தெரிவதில்லை. எங்கானும் பார்த்தால் கூட எடுத்துப் படிக்கத் தோன்றுவதில்லை!

Bhanumathy Venkateswaran said...

ஒரு காலத்தில் விகடன், குமுதம், கல்கி,துக்ளக்,ம.மலர் என்று பல பத்திரிகைகள் வாங்கிக் கொண்டிருந்தேன். பிறகு நேர பற்றாக்குறையால் ஒவ்வொன்றாக கழித்து
இப்போது ம.மலர்,குமுதம் சினேகிதி இரண்டு மட்டும் வாங்குகிறேன். அவ்வப்பொழுது ஜன்னல் வாங்குவதண்டு. பொதுவாக பத்திரிகைகள் தங்கள் அடையாளத்தை இழந்து ஒரே மாதிரியாகி விட்டன.

Bhanumathy Venkateswaran said...

ஒரு காலத்தில் விகடன், குமுதம், கல்கி,துக்ளக்,ம.மலர் என்று பல பத்திரிகைகள் வாங்கிக் கொண்டிருந்தேன். பிறகு நேர பற்றாக்குறையால் ஒவ்வொன்றாக கழித்து
இப்போது ம.மலர்,குமுதம் சினேகிதி இரண்டு மட்டும் வாங்குகிறேன். அவ்வப்பொழுது ஜன்னல் வாங்குவதண்டு. பொதுவாக பத்திரிகைகள் தங்கள் அடையாளத்தை இழந்து ஒரே மாதிரியாகி விட்டன.

பரிவை சே.குமார் said...

சரியான புத்தக அலசல்...
வார இதழ்கள் எல்லாமே சினிமாவை நம்பியே பொழப்பை ஓட்டுகின்றன....

Nat Chander said...

ofcourse all journals have lost their charm originality.. novelty etc
however in ananda vikatans STAR STORY natchattira kkathai.... the ananda vikatan group releases EXCELLENT STORIES still

‘தளிர்’ சுரேஷ் said...

சினிமா இணையம் இரண்டை நம்பியே பத்திரிக்கைகள் தற்போது இயங்குவதாக தோன்றுகிறது! கதை, கவிதை ஜோக்ஸ்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை! தற்போதைய கல்கியில் சினிமா செய்திகள் குறைவு! ஆனால் மெலிந்து விட்டது! பகிர்வுக்கு நன்றி!

Ranjani Narayanan said...

ஒருகாலத்தில் எல்லாப் பத்திரிக்கைகளும் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது எதுவும் வாங்குவதில்லை. சென்னை வந்துவிட்டுத் திரும்பும்போது ரயிலில் படிக்க என்று சில வாரப் பத்திரிக்கைகள் வாங்குவேன். ஆனந்த விகடன் தரமிழந்துவிட்டதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். சாவியின் தொடர்கள்,மணியனின் இதயம் பேசுகிறது பரணீதரனின் யாத்திரைக் கட்டுரைகள் என்று எப்படியிருந்த புத்தகம் அது!
கல்கி சற்று பரவாயில்லை போலிருக்கிறது. குமுதம் என்றைக்குமே அதே தரம் தான். இப்போதும் ஒன்றும் மாற்றமில்லை.

நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!