செவ்வாய், 27 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...012

பாடம் பன்னிரண்டு:
குரு கடல் மணலில் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ஒருவர், அவர் அருகே வந்து, "சுவாமி - எனக்கு ஞானம் வேண்டும்" என்றார்.
குரு : "என்றைக்கு? எப்பொழுது?"
அவர் : "இன்றைக்கு  - இப்பொழுதே!"
குருவைச் சுற்றியுள்ள சீடர்கள் சிரித்தார்கள்; குரு சிரிக்கவில்லை.
ஆனால் அவரைப் பார்த்துக் கூறினார்:
குரு : "இங்கு என்னவெல்லாம் இருக்கிறது?"
அவர் : "கடல், மணல்."
குரு : "அப்புறம்?"
அவர் : "மணலில் கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள்."
குரு : "நல்லது - இந்த மணலில் தேடி, நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வா".
அவர் செல்கிறார். கையில் கிடைத்த கூழாங்கல் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறார். நல்லதாக ஒன்று! எடுத்துக் கொண்டு வருகையில், கையில் இருப்பதைவிட இன்னும் ஒன்று மணலில் நல்லதாக இருந்தால் அதை எடுத்துக் கொண்டு பழையதை வீசி விட்டு வருகிறார். இப்படியே அவர் தேடித் தேடி, பார்த்துப்  பார்த்து - இறுதியில் அவர் கையில் இருப்பதைக் கொண்டு வந்து குருவிடம் கொடுக்கிறார். குரு அதை கைகளில் வாங்காமல் கேட்கிறார்,- "நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வந்தாயா?"
"ஆமாம்"
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
"குருவே - நான் உங்களுக்காகக் கஷ்டப்பட்டு ...."
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
"உங்களுக்கு இது வேண்டாமா - குருவே?"
"நான் சொன்னது என்ன ?"
"இந்த மணலில் தேடி, நல்ல கூழாங்கல் ஒன்று கொண்டு வா"
" அதை செய்துவிட்டாய் அல்லவா?"
"ஆமாம்"
"இப்பொழுது அதை கடலில் வீசி எறி"
வந்தவர் - அந்த கூழாங்கல்லை தலை சுற்றி கடலில் வீசி எறிகிறார்.
குரு : "உட்கார்"
அவர் உட்காருகிறார்.
குரு : "கண்களை மூடு."
அவர் மூடிக் கொள்கிறார்.
குரு : "நீ இந்தக் கடற்கரைக்கு இன்று வந்ததிலிருந்து, இந்தக் கணம் வரை நடந்ததை ஒவ்வொன்றாக நிதானமாக யோசித்துப் பார்."
அரை மணி நேரம் கழித்து அவர் கண்ணைத் திறந்து பார்த்தபொழுது - குருவும் சிஷ்யர்களும் அங்கு இல்லை. அவர் தேடவும் இல்லை.
இரண்டு கிலோ மீட்டர் தள்ளி - குரு சிஷ்யர்களிடம் கூறிக் கொண்டிருந்தார்.
" அவர் இங்கு வந்தார் என்றால் - வரவில்லை என்று அர்த்தம்; வரவில்லை என்றால் வந்துவிட்டது என்று அர்த்தம்"
(தொடரும்)

5 கருத்துகள்:

  1. இந்தக் கதைல இருந்து என்ன சொல்றீங்கன்னு புரில எனக்கு ஸ்ரீராம்.

    எனக்கு அதுக்கு முதல்ல அந்தப் புதிருக்கு விடை சொல்லுங்க.
    ம்ம்ம்...!

    பதிலளிநீக்கு
  2. @ஹேமா if he follows the Guru, the he doesn't get the wisdom, ekse he got it...

    பதிலளிநீக்கு
  3. ஞானம் என்பது வெளியே தேடி சென்றோ, பிறரிடம் இருந்தோ பெறுவது அல்ல. அது நம்மை பற்றி நாமே அறிந்து கொண்டு, நமக்குள்ளிருந்தே தேடி பெற வேண்டிய ஒன்று.
    இந்த கதையில் அந்த மனிதர் எவ்வளவு தேடியும் 'இதுதான் எல்லாவற்றையும் விட சிறந்த கல்' என்று முடிவு செய்து, அவரால் ஒன்றை கொண்டு வர முடியவில்லை. அவ்வளவு நேரம் தேடி ஓரளவு சிறந்தது என்று எண்ணி கொண்டு வந்த கல்லும் அவரிடம் இல்லை. இறுதியில் அவர் பெற்றது என்று ஒன்றும் இல்லை. ஆனால் இழந்தது அவருடைய கடின உழைப்பையும், பொன்னான நேரத்தையும். எதை பெறுவதற்காக தேடி அலைகிறோம்? அப்படி தேடி பெறுவது நம்மிடமே நிலைத்து இருக்குமா? பின் எதற்காக தேடி செல்ல வேண்டும்? இதை உணர்ந்து எதையும் நாடாத, தேடி செல்லாத மனப் பக்குவத்தை பெறுவதே ஞானம்.

    எனக்கு இந்த கதையிலிருந்து இதான் புரிஞ்சுது. சரியா ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!