புதன், 28 அக்டோபர், 2009

மெய் சொல்லப் போறோம்

அக்டோபர் இருபத்தெட்டு முதல் நவம்பர் மூன்று வரை.
 • மேஷம்: இடுக்கண் வருங்கால் நகுக - நெற்றிச் சுருக்கம் இன்றி வெற்றி காணுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி வரும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்க பே ஸ்லிப் தவிர வேறு எங்கேயும் கையெழுத்துப் போடாதீங்க.
 • ரிஷபம் : தேக ஆரோக்கியம் நல்லா இருக்கும். நண்பர்கள் வட்டத்தின் விட்டத்தை அதிகப் படுத்திக்குங்க. ஆயுர் வேத டாக்டரா இருந்தா அத்தனைக்கும் ஆசைப் படுங்க.  
 • மிதுனம் : ஆராய்ச்சி செய்பவர்கள் அபிவிருத்தி அடைவீர்கள். அது எப்படிங்க - உங்களால மட்டும் வெளியே அமைதியாகவும், உள்ளே புயலோடும் இருக்க முடிகிறது? ஆர்வப் புயலைச் சொல்கிறேன். இந்த வாரம் வெறும் மஞ்சப் பை கூட தூக்காதீங்க - களைப்பாகிவிடுவீர்கள். அறிவுபூர்வமான பேச்சுகள் உங்களுக்குப் பிடிக்கும். நீண்ட தூரப் பயணம் - திட்டம் - இப்பவே ரெடி பண்ணி வெச்சிக்குங்க.
 • கடகம் : சில சினேகிதங்களை மறு பரிசீலனை பண்ணுங்க. மன்னியுங்க - மன்னிக்கப் படுவீங்க. உங்க மேல அன்பு காட்டறவங்களோட இன்னும் அதிக நேரம் செலவழியுங்க. சில்லரை யோகா ஏதாவது கத்துக்கிட்டா - நல்லது - பெரிய தொந்தரவுகள் வராம பாத்துக்கலாம்.
 • சிம்மம் : அண்ணே / யக்கோவ் - நானும் உங்க மாதிரிதான் - பல செயல்பாடுகளைத் தள்ளிப் போட்டு தள்ளிப்போட்டே - டென்சன் ஏத்திக் கொண்டுவிடுவேன். உதாரணம் - இந்த வார ராசி பலன். இப்போ வலையாபதி என் கழுத்து மேல ஏறி உக்காந்துகினு - எழுது எழுதுன்னு .... ஹூம் -- டி வி யில வானிலை முன்னறிவிப்பு பாத்திருக்கீங்கதானே - அதுல கூட துல்லியமா - வானிலை பத்திச் சொல்லிடுவாங்க - ஆனா உங்க மூட் பத்தி முன்னறிவிப்பு யாராவது சரியா சொன்னாங்கன்னா - அவங்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்! நண்பர்கள் உதவப் போறாங்க. 'இவன் தந்தை எந்நோற்றான்கொல்?' என்று எல்லோரும் வியக்கும்படி ஒரு செயல் செய்வீங்க.
 • கன்னி : சமாதான நடவடிக்கைகள் - சமயோஜிதமான நடவடிக்கைகள் எல்லாம் - உங்களை - நோபல் பரிசு ரேஞ்சுக்கு உயர்த்தும். அட ஏங்க இப்பிடி தொட்டாச் சுணங்கியா - இருக்கீங்க? சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க - 'தன் நெஞ்சறிய பொய்யற்க' - இத மனசுல வெச்சிகிட்டு, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' பாடுங்க.
 • துலாம் : வருமானத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப் படுதுங்கோ. தூள் கிளப்புங்கோ. 'அமைதியான நதியினிலே ஓடம் ஓட்டினீங்கன்னா - ஒரு பணப் பிரச்னையை சமாளிக்கலாம். நிறைய வரவேற்புகளும் - வாய்ப்புகளும் வரும். இந்த வாரம் சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அவ்வளவுதான் நான் சொல்லுவேன். பாக்கியை நீங்களே தெரிஞ்சிக்குங்க.
 • விருச்சிகம் : அதிர்ஷ்டம் - உங்க பக்கம். வியாபார, வர்த்தக நடவடிக்கைகளில் முழுக் கவனம் செலுத்துங்க. நீங்க போலீஸ் அதிகாரியா இருந்தா - என்றுமே நினைவில் நிற்பது போல ஒரு சம்பவம் ஏற்படும்.
 • தனுசு : கண்களால் எடை போடும் சாமர்த்தியம் - உங்களைப் போல யாருக்கும் வராதுங்க. நிறைய வெளிநாட்டுத் தோழர்கள் கிடைப்பாங்க. உங்க அளவுக்கு - நட்பை மதிப்பவர்கள் வேறு யாருமே கிடையாது. எந்த வாகனத்தில் சென்றாலும் ஹெல்மெட் முக்கியம். மறந்துடாதீங்க. உங்க தெருவில சின்ன அளவு கலாட்டா - ஒன்று உருவாகலாம். ஆமை ஓடு கொள்கையைப் பின்பற்றுங்க. ஒளிந்துகொள் - அல்லது ஓடு.
 • மகரம் : உங்க கனவுக் கண்ணன் / கன்னிக்காக கண்களைத் திறந்து வெச்சிக்குங்க. கண்ணடிக்கிறது எல்லாம் கெட்ட பழக்கம். நல்ல நடத்தையால மனசுல அடியுங்க. சொத்து சேரும். உங்க பேச்சு உங்களுக்கே - சாதகமாக அமையும். எங்கியாவது மேடைப் பேச்சு சந்தர்ப்பம் கெடச்சா - சும்மா புகுந்து விளையாடுங்க.
 • கும்பம் : அலுவலகத்தில் - அனல் வீசாதீர்கள். சாந்தி நிலவ வேண்டும். ஆத்ம சக்தி ஓங்க வேண்டும். எதையும் எளிதில், சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்க. கோபம் அந்த ஆற்றலை அழிக்காமப் பாத்துக்குங்க. விலை உயர்ந்த பொருள் ஒன்று வாங்குவீர்கள். அதனால உங்க பர்ஸ் எடை குறைந்து போகும். செல்லப் பிராணி எதையாவது வளர்க்கிறீர்கள் - என்றால் - அதுக்கு உங்க நேரம் அதிகமாக செலவாகும். மேல் / ஃபீ மேல் படிப்புப் படிக்க நினைப்பவர்கள் - திட்டம் ஒன்றை இந்த வாரமே போட்டு வையுங்க.
 • மீனம் : சிறிய வாய் - பெரிய பாதுகாப்பு! எங்கேயோ கேட்டாப்புல இருக்கு இல்ல? அது உங்களுக்குத் தான் - இந்த வாரம் முழுவதும்!! மனுஷன் சோம்பேறியா இருக்கலாம் - ஆனா - எப்போ - எவ்வளவு நிமிடங்களுக்கு -- என்பதில்தான் சிக்கல். இதோ எங்கள் ஃபார்முலா - ஒரு மணி நேரத்தில் - ஐந்து நிமிடங்கள் மட்டும் சோம்பேறியாக இருக்கலாம். ஆனா - அந்த நேரத்துல - சிந்திக்கக் கத்துக்குங்க. ஆசிரியர்கள் - இந்த வாரம் கலக்குவீங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!