செவ்வாய், 19 ஜனவரி, 2010

பாட்டில் இட்லி !

ஏதோ ஒரு படத்துல (எதிரி?) மாதவன் (நம்ம maddy73 இல்லை) 'பாட்டில் மணி'யாக வந்து கலக்குவார். இன்றைய (நம்ம கலக்கல்) சமையல், பாட்டில் இட்லி.
                                     இது, நான், டாபர் ஹனி தேன் (காலி) பாட்டில் மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் துணையோடு வாரத்தில் நான்கு நாட்களாவது செய்து சாப்பிடும் காலை உணவு.
                     இட்லி மாவு செய்யும் முறை : (சீரியசாகத்தான் எழுதியுள்ளோம்)


ஒரு கப் முழு வெள்ளை உளுந்து, நான்கு (அதே) கப் வெள்ளைப் புழுங்கல் அரிசி. இவைகளைத் தனித் தனியே, சுத்தமான நீரில் ஊறவைக்கவும். அரிசியோடு இரண்டு ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைப்போரும் உண்டு. (நாங்க எப்பவுமே அப்பிடித்தான் - வெந்தயத்தைக் கொஞ்சம் தாராளமாகவே போடுவோம். - அதாவது நான்கு ஸ்பூன் அளவு)
இந்த தானியங்கள் யாவும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம்  ஊறுவது நல்லது.


'மிக்சி' அரவை வேண்டாம் - முடிந்தவரையிலும் தவிருங்கள். வெட் கிரைண்டர்தான் இட்லி மாவரைக்க ஏற்ற சாதனம். வேறு வழி இல்லை என்றால், (மட்டும்தான்) மிக்சி. 


முதலில் ஊறவைத்த அரிசி (வெந்தயக் கலவையை) கிரைண்டரிட்டு, பொறுமையாக, அதிகம் தண்ணி சேர்க்காமல், விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ஒரு சிலர், இட்லி மாவு அரைக்கும்போது, ஐஸ் கட்டிகள் போட்டு அரைப்போம் என்று சொன்னார்கள். மாவு அரைக்கும்போது அந்த மாவு சூடாகக் கூடாதாம். அப்பொழுதுதான் இட்லி மிருதுவாக இருக்கும் என்றார்கள். பிறகு ஊறிய உளுந்து அரைக்கப் படவேண்டும்.


அரிசி மாவையும், உளுந்து மாவையும், பிறகு ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்புப் போட்டு கலக்கி, ஒரு பாத்திரத்தில் அல்லது பல பாத்திரங்களில் - முக்கால் அளவுக்குக் கீழே வரும் வகையில் விட்டு, ஒரு இரவு முழுவதும் அப்படியே பாத்திரங்களை மூடி வைத்துவிட வேண்டும். சிலர் அரைத்த மாவை பாத்திரத்துடன், ஒரு குக்கருக்குள் வைத்து குக்கரை மூடி வைக்கலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால், மாவு பொங்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், மாவு பொங்கவேண்டும் என்பதற்காக, ஆப்ப சோடா போன்ற விஷ(ய)ங்களை தயவு செய்து இட்லி மாவில் சேர்க்காதீர்கள்.


இவ்வளவு கஷ்டங்கள் வேண்டாம் என்றால் - கடைகளில் விற்கின்ற அரைத்த மாவை வாங்கலாம். சில பிராண்டுகள் சுமாராக உள்ளன. சில பிரயோஜனம் இல்லை. சிலர் உப்பு சேர்த்து மாவு விற்கிறார்கள். சிலர் உப்பு இல்லாத மாவு விற்கிறார்கள். நான் பயன்படுத்திய அரைத்த மாவு பிராண்டுகளில், குரோம்பேட்டை கடையில் காலை மணி எட்டு நாற்பத்தைந்து மணிக்கு டான் என்று பிரெஷ் ஆக வரும் 'உதயம்' இட்லி மாவு நன்றாக இருந்தது. அதில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக, வெந்தயம் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலே கவரில் போட்டிருப்பார்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கலந்து விடுவேன்.


இட்லி தயாரிப்பில் இதுவரை நாம் பார்த்ததுதான் சற்றுக் கடினமான, சமாச்சாரங்கள்.  இனி இரண்டு நிமிட இட்லி தயாரிப்பு - இதோ :


நம்முடைய ஆஸ்தான டாபர் ஹனி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடியை கழற்றிவிடுங்கள். ஒரு கரண்டி இட்லி மாவை அதனுள் ஊற்றுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று , நறுக்கிய சாம்பார் வெங்காயம் இரண்டு , அரை பச்சைமிளகாய் - நறுக்கியது, இஞ்சி ஒரு துண்டு, பச்சைப் பட்டாணி பதினான்கு , நிலக்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் (அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டை மட்டும்) மாவின் மேல் போடுங்கள். அப்புறம் இன்னும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். ஒரு ஸ்பூனால் இந்த மாவுக் கலவையை நன்றாகக் கலக்கவும். எல்லாமாகச் சேர்ந்து பாட்டிலின் பாதி அளவுக்குக் கீழே இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம்.


இந்த பாட்டில் மாவை அப்படியே மைக்ரோ வேவ் ஓவனுக்குள் வைத்து, (பாட்டிலுக்கு மூடி போடக்கூடாது) அறுநூறு வாட் பவரில் இரண்டு நிமிடங்கள் ஓவனை இயக்கவும். ஓவனை ஆப் செய்யுமுன், பாட்டில் இட்லியின் மேல் பகுதி வெந்திருக்கிறதா - அல்லது ஈர மாவாக இருக்கிறதா என்பது, பார்த்தாலே தெரியும்.  மேல்பகுதி வேகாமல் இருந்தால், மேலும் அரை நிமிட நேரம் ஓவனில் வைத்து ஓட்டவும். பிறகு ஓவனை 'ஆப்' செய்து, பாட்டிலை வெளியே எடுத்து, மூடி போட்டு, ஐந்து நிமிடங்கள் ஆறவிடவும்.


அதற்கப்புறம்? ஒரு ஸ்பூன் கொண்டு பாட்டிலிலிருந்து அப்படியே - பாட்டில் இட்லியை சாப்பிட்டு மகிழுங்கள்.    

15 கருத்துகள்:

  1. நன்றி, நன்றி, நன்றி.. இட்லி செய்முறைக்கும், அதற்கும் மேலாக, என்னை (ஓர் பிளாக்கராக மதித்து) முதல் வரியிலேயே விளம்பரம் செய்ததற்கும்.

    பதிலளிநீக்கு
  2. உண்மையா சந்தோஷம்.நன்றி ஸ்ரீராம் குழுவுக்கு.எனக்குத் தோசை அரைச்சு வச்சு சுடத் தெரியும்.இட்லி சரிவாறதில்ல.இந்த முறைப்படி செய்து பாத்திட்டுச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  3. //நன்றி ஸ்ரீராம் குழுவுக்கு.எனக்குத் தோசை அரைச்சு வச்சு சுடத் தெரியும்.இட்லி சரிவாறதில்ல.இந்த முறைப்படி செய்து பாத்திட்டுச் சொல்றேன்.//

    ஐயோ ஹேமா, இது "ஸ்ரீராம்" கொடுத்த டிப்ஸ் என்றால் - கொஞ்சம் யோசியுங்கள் ! நள மகராஜா ஆம்பிளை என்றாலும் எல்லா கல்யாண மற்றும் விழாக்களில் ஆண்கள் தான் சமையல்காரர்களாக இருந்தாலும் ! நாராயணா நாராயணா !!

    நான் இட்லி சுட்ட கதை தான் ஆகும் ! இட்லியோ, தோசையோ - மாவு பதம் சரியில்லை என்றால் ! சதாம் ஹுசைனின் ஸ்கட் மிசைல் போல் தான் இருக்கும் !

    இந்த ஐயப்ப சீசனில் பலர் எங்கள் பல்லை இட்லி சுட்டு தருகின்றேன் என்று பேஜார் பண்ணிவிட்டார்கள் !

    பதிலளிநீக்கு
  4. இட்லி வெந்துவிட்டதா என்று பார்க்க ஸ்பூனின் கைப்பிடி பகுதியை அல்லது ஒரு கத்தியை செருகிப் பார்க்க வேண்டும். ரொம்ப நேரம் வைத்தால் இட்லி ரப்பர் பந்து மாதிரி ஆகிவிடும். ஒரு மாறுதலுக்கு அடைமாவை இதே போல இட்லியாக ஊற்றிப் பார்க்கலாம். இட்லி மாவுடன் கணிசமான அளவு தோசை மிளகாய்ப் பொடி மற்றும் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் கலக்கலாம். மீசை முறுக்கும் ஆந்திர வாடுகள் என்னைப் போல ஆவகாய் ஊறுகாய் விழுதை கலக்கலாம். டாபர் ஹனி பாட்டிலுக்கு பதிலாக வட்ட வடிவமான டப்பர் வேர் டிபன் பாக்ஸ் இன்னும் சிறப்பு. காரணம் இட்லியை கத்தி கொண்டு அழகிய மைசூர் பாகு கட்டிகள் போல வெட்டி அவற்றை முள் கரண்டி கொண்டு குத்தி சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  5. அது என்ன டாபர் ஹனி பாட்டிலுக்கு அளவுக்கு மீறி விளம்பரம் கொடுக்கிறது போல தெரிகிறதே? விசேஷ காரணம் ஏதும் இருக்குமா?

    பதிலளிநீக்கு
  6. பாட்டில் இட்லி என்றதும் இட்லி பற்றி ஏதோ வழக்கமான வெண்பாப் பாட்டுதான் என்று எண்ணிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. இது "இனிப்பு இட்லி" செய்முறைன்னு வச்சுக்கலாமா. (ஹனி பாட்டில்ல செய்ரோம்ல )

    பதிலளிநீக்கு
  8. அகல உழுவதை ஆழ உழு என்று படித்திருப்பீர்கள். இங்கே ஆழ ஊற்றுவதை அகலமாக ஊற்று என்று கொண்டால், வேகாத பகுதிகளே இரா. ஒன்றுக்கு நான்கு என்னும் விகிதத்தை ஒன்றுக்கு மூன்று என்று புழுங்கலரிசி போட்ட பின், ஒரு பங்கு பச்சரிசியோ அல்லது அவலோ போடுவதுண்டு. உப்பு போடாத மாவு சீக்கிரம் புளிக்காது. குளிர் பிரதேசங்களில் வசிப்போர், அரைத்து வைத்த மாவில் உப்பிடுவதுடன், ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, அதற்குள் மாவுப் பாத்திரத்தை இறக்கி ஒரு இரண்டு மணிக் கூறு வைத்திருந்தால், மாவு சற்றே புளிக்கும். மங்களூர் சுற்றுப் பகுதிகளில் பலா இலைகளில் தொன்னை செய்து அதில் மாவு ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். இட்டிலிக்கு வாசனை கூடுகிறது என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. மைக்ரோ வேவ் ஒவன் இல்லாதவங்க இட்லியே சாப்பிட முடியாதா

    பதிலளிநீக்கு
  10. நன்றி சொல்கிறோம், மாதவன், அண்ணாமலையான், ஹேமா ஆகியோருக்கு.
    சாய்ராம் கோபாலன் சொல்லுவது சரிதான். மாவு பதம் சரியாக இருப்பதற்குத்தான் - மாவு தயாரிக்கும் முறையையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறோம்.
    சைவக்கொத்துப்பரோட்டா - சொல்வதுபோல இது ஸ்வீட் இட்லி இல்லை, ஸ்வீட் வாசனை இட்லி.
    (தேன் வாசனை வரும் - தேன் பாட்டிலை சரியாகக் கழுவவில்லை என்றால்!)
    தமிளுதயம் (ஐயோ எங்கியோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு?) மைக்ரோ வேவ் இல்லாதவர்களும் இட்லி சாப்பிடலாம் - சாப்பிட வாய் இருந்தாலே போதும்(!). நாங்க சொல்லியிருக்கிறது - இரண்டு நிமிடங்களில் எப்படி இட்லி தயாரிப்பது என்பதைத்தான்.
    மத்தபடி - மக்கள், குக்கரிலோ அல்லது இட்லி பானை உபயோகப் படுத்தியோ - கால் மணி / அரை மணி நேர இட்லிகள் செய்து சாப்பிடுவதில் எங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை!

    பதிலளிநீக்கு
  11. அடுத்த பதவில ஊத்தாப்பம் எப்படிச்செய்யிறது எண்டு எழுதுவிங்க போல இருக்கு இப்பவே பளகிவைச்சிருந்தா பின்னுக்கு உதவும்

    பதிலளிநீக்கு
  12. உங்க ரெசிபிய படிச்சத விட சிரிச்சதுதான் அதிகம்!!

    பதிலளிநீக்கு
  13. உங்க ரெசிபிய படிச்சத விட சிரிச்சதுதான் அதிகம்!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!