சனி, 13 மார்ச், 2010

ஜேகே 01


ஜே. கிருஷ்ணமூர்த்தி (இனி ஜேகே என்று குறிப்போம்.) பிறந்த தேதி அப்பா, அம்மா என்றெல்லாம் விபரங்கள் கொடுத்து நாம் கால விரயம் செய்ய வேண்டாம். எனினும் அவருடைய அன்னைக்கு தான் பெறப் போகும் பிள்ளை தெய்வீகமானது என்று முன்பே தெரிந்ததாகவும் அவர் பூஜை அறைக்கு முன்னால் பிள்ளைப் பேற்றை வைத்துக் கொண்டதாகவும் சொல்வர்.  அதை ஜேகே உறுதி செய்யாதது மட்டுமல்ல, அது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.  


உலக ஆசான் என அடையாளப் படுத்தப் பட்டு அவர் தயார் செய்யப் பட்ட பொழுது அவருடைய ஆரம்ப பேச்சுகள், 'நான் உங்களை தளைகளினின்றும் முற்றாக விடுவிப்பேன்' எனும் பாணியில் இருந்தன.  காலம் செல்லச் செல்ல தான் ஏதோ சாதிக்கப் பிறந்தவர் என்ற தொனி வரும்படி அவர் பேசுவது இல்லை.  


அவர் எந்த மொழியிலும் எந்த ஆன்மீக புத்தகங்களையும் படித்தது இல்லை என உறுதிபடச் சொல்லி இருக்கிறார்.  ஆனால் அவர் அளவளாவிய பன்மதப் பெரியோர்கள் நீங்கள் சொல்வது இதில் இருக்கிறது அதில் வருகிறது என்று சொல்லும் போது அதையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  


அவருக்கு வசதி வாய்ந்த பலரின் அறிமுகம் நட்பு பழக்கம் இருந்தது. அவை யாவற்றையும் தன் போக்கில் எடுத்துக் கொண்டதுடன், அதிக "நன்றி பாராட்டல்கள், விசெஷ முக்கியத்துவம் அளித்தல்" போன்ற எதையும் அவர் யாருக்கும் வழங்கியதில்லை. தான் ஏதோ உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவர் அடுத்தவர் தமக்கு இம்மாதிரி சேவை புரிய கடமைப் பட்டவர் எனும் மனப்பாங்கும் அவரிடம் இல்லை.  


முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு மிகச் சாதாரண நபருடனும் அன்னியோன்னியமாக மனப்பூர்வமாக முழு ஈடுபாடுடன் பேசும் இயல்பு அவரது தனித் தன்மையாக இருந்தது. இதனால் பலரும் அவருடைய காலத்தை வீணாக்குவதைத் தடுக்க, அவருடன் இருந்தவர்கள் அரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.  


அவரை ஒரு ஜீவன் முக்தர் என காஞ்சிப் பெரியவர் குறிப்பிட்டாராம்.  "ஏசு கிறிஸ்துவுடன் நேரடி சந்திப்பு நிகழந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்" என்று யாரோ இன்னொருவர் சொன்னதாகச் சொல்வர்.  அதிலிருந்து அவருடைய தோற்றம் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருவாறு நாம் ஊகிக்கலாம்.  


விஞ்ஞானிகள், சமய அறிஞர்கள், மனோதத்துவ வைத்தியர்கள் போன்ற பலருடனும் அவர் மிக விவரமாக உரையாடி இருக்கிறார்.  அவர்கள் யாவரும் அவருடைய அறிதலின் நேர்த்தியையும் ஆழத்தையும் வியந்து பார்த்தனர் என்பது ஆவணப் படுத்தப் பட்டு இருக்கிற உண்மை.  


நான் நினைக்கிறேன், நான் நம்புகிறேன்.  இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற பதப் பிரயோகங்கள் அவர் பேச்சில் காணப் படா. அதே போல் நான் உங்களுக்கு உதவுகிறேன் எனும் பாணியிலும் அவர் பேசியதில்லை.  


வாழ்வில் பௌதிக, லௌகிக தளங்கள் உள்ளன.  அவற்றில் எண்ணமும் லட்சியமும் ஆசையும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  மன அளவில் இவை உதவுவதில்லை.  எண்ணமே புரிதலுக்கும் உறவுக்கும் இடையூறாக இருக்கிறது. மாற்றம் நிகழ கால அவகாசம் தேவை யில்லை. சரியாகக் கேட்டலும், சரியாகப் பார்த்தலுமே சரியாக உணர்தலுக்கு முக்கியமான அடிப்படை.  நமது உறவுகள் நாம் நம்மைப் பற்றியும், நம்மவர், நம்மவர் அல்லாதவர் பற்றியும் நாம் செய்து வைத்துள்ள உருவகங்களின் அடிப்படையில் இருக்கின்றன.  உருவகங்கள் உறவுக்குத் தடையானவை. எதையும் பூரணமாக அனுபவித்தலும், எதையும் அது முடியும்போது மனதிலும் முடித்துவிடலும் ஏக்கத்துக்கும் துயருக்கும் வழி செய்யாதிருக்க வழிகளாகும்.  இதுதான் ஜேகே நமக்கு உரைத்ததன் சாராம்சம்.   


இனி வரும் நாட்களில், அவருடைய உரை அல்லது நூல் அல்லது சம்பாஷணையிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்து சிலவற்றைக் காண்போம்.  அவை ஒரே புத்தகம், தலைப்பு என்று இராமல் இப்படி அப்படி மாறி மாறி வரும்.  அதனால் வாசக அலுப்பு ஏற்படாமலிருக்கும் என்று நம்புவோம்.   


அடையாளங்கள், விக்கிரகங்கள், புனித நூல்கள், மந்திரம், தந்திர தாயத்துகள் இப்படியாக பல நம்பிக்கைகள் நம்மை ஆட்கொண்டு நம்மை பெரிதும் உருவாக்கியிருக்கின்றன. இவற்றின் அடிப்படைகளையே வினவும் ஒரு புரட்சி மனப் பாங்கு நமக்கு எளிதில் ஒப்புக் கொள்ள இயலாததாக இருக்கக் கூடும்.  எனினும் எப்பொருள் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது என்று புறப்பட்டால் எப்பொருளும் எவரெவர் வாய்ப்பட்டதாயினும் உண்மையை நமக்கு விளக்கும் எனும்போது சுய நலமோ வசூல் குறிக்கோளோ அற்ற கிருஷ்ணமூர்த்தி என்னதான் சொல்கிறார் என்று கவனத்தைச் செலுத்தி கேட்பதில் தீங்கு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. பார்ப்போம். 
போதுமா முன்னுரை? அடுத்த பதிவு ஒரு வாரத்தில்.  

9 கருத்துகள்:

 1. அடையாளங்கள், விக்கிரகங்கள், புனித நூல்கள், மந்திரம், தந்திர தாயத்துகள் இப்படியாக பல நம்பிக்கைகள் நம்மை ஆட்கொண்டு நம்மை பெரிதும் உருவாக்கியிருக்கின்றன.

  .........நம்பிக்கையே வாழ்க்கையோ?

  பதிலளிநீக்கு
 2. ஆஹா..! நெம்ப ஆழமாச்சே.. தொடருங்க.. ஆர்வமாயிருக்கிறேன்.:)

  பதிலளிநீக்கு
 3. நல்ல தகவல் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. உண்மை என்பது பாதைகளற்ற பரப்பு என்பார் ஜேகே! பாதையை நீங்களே தான் தேடி உருவாக்கிக் கொண்டாகவேண்டும், வேறு எவருடைய உதாரணமும் வழிகாட்டுதலும் பயன்படாது என்ற மாதிரி அர்த்தம் செய்து கொள்ளலாம்.

  ரமண மகரிஷியாவது, நான் யார் என்ற ஒரு விசாரத்தை வைத்துக் கொண்டே உள்ளே தேடு என்று ஒரு நூல் எடுத்துக் கொடுத்தார், ஜேகே அந்த ஒரு நூலைக் கூட எடுத்துத் தர முனையவில்லை.

  ஜேகே உரைகள், கேட்பதற்குமட்டுமல்ல, கேட்ட பிறகு நிதானமாக உள்வாங்கிக் கொண்டு யோசிக்கச் சிறந்த உபாயம்!

  பதிலளிநீக்கு
 5. புது தகவல்கள் ஸ்ரீராம்.. தொடருங்கள்..

  பதிலளிநீக்கு
 6. நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க. ரெம்ப நன்றி.

  அப்புறம்... மீனாட்சி அவர்களின் பின்னூட்டத்தை வாசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. //எண்ணமே புரிதலுக்கும் உறவுக்கும் இடையூறாக இருக்கிறது. //

  சாராம்சமாக தந்திருப்பது நன்று. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 8. 'மாற்றம் நிகழ கால அவகாசம் தேவை யில்லை.'
  'எதையும் பூரணமாக அனுபவித்தலும், எதையும் அது முடியும்போது மனதிலும் முடித்துவிடலும் ஏக்கத்துக்கும் துயருக்கும் வழி செய்யாதிருக்க வழிகளாகும்.'
  மனதில் பதித்துக்கொண்டு கடைபிடிக்க வேண்டிய வரிகள்.
  நல்லா தொடங்கி இருக்கீங்க. மேலும் தொடருங்கள்.

  'தமிழ் உதயம்' உங்கள் பெயர் ரமேஷ் என்று தெரிந்து கொண்டேன். நன்றி ரமேஷ்! எனக்கு google account தொடங்க எண்ணமே வந்ததில்லை. இப்பொழுது பின்னூட்டங்கள் எழுதுவதற்காகவே தொடங்க வேண்டும் போல இருக்கே!

  பதிலளிநீக்கு
 9. எண்ணமே புரிதலுக்கும் உறவுக்கும் இடையூறாக இருக்கிறது. மாற்றம் நிகழ கால அவகாசம் தேவை யில்லை. சரியாகக் கேட்டலும், சரியாகப் பார்த்தலுமே சரியாக உணர்தலுக்கு முக்கியமான அடிப்படை.//

  ஜே கேயைப் பற்றி இன்னும் அறிய ஆவலாக இருக்கிறேன் எங்கள் ப்ளாக்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!