புதன், 17 மார்ச், 2010

ஜே கே 02.

ஜேகே சிந்தனைகளை அறிந்து கொள்ள சில அடிப்படை விளக்கங்களை நாம் குறித்துக் கொண்டாக வேண்டும்.  பல சமயங்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யும் போது சங்கடங்கள் நிறையவே ஏற்படுகின்றன.  உதாரணமாக கண்டிஷனிங் என்ற பதத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆந்திராவில் இருக்கும் நபர் காரம் அதிகமாக விரும்புகிறார். தமிழ் நாட்டாருக்கு காரம் அவ்வளவு பிடித்தம் இல்லை.  குஜராத்தில் இருப்பவர் ஸ்வீட் மிக அதிகம் சாப்பிட விழைகிறார். எல்லாருக்கும் உடம்பு மனித உடம்பு தான் சுவை அறியும் நாக்கு ஒரே மாதிரிதான்.  பின் ஏன் இந்த பிடிக்கும்-பிடிக்காது மனப் பான்மை?  அதற்குக் காரணம் என்னவோ அதுவே கண்டிஷனிங்.  சூழ் நிலை ஏற்படுத்தும் விளைவு. இதை, 'பதப் படுத்துதல்' என்னும் சொல் கொண்டு குறிக்கலாம்.  ஆனால் பதப் படுத்துதல் என்பது ஒரு பொருளை விரும்பத்தக்க முறையில் மாற்றுவது என்று கொள்ளப் படுகிறது. நாம் சொல்லும் பொருள் அதுவல்ல.சூழ் நிலையின் தாக்கம் அவ்வளவுதான்.  தாக்கம் என்று சொல்ல வந்தால் வன்முறை கலந்த நடவடிக்கை என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. 
 
கண்டிஷனிங் நல்லதல்ல என்றோ நல்லது - தவிர்க்க முடியாதது என்றோ சொல்வதற்கில்லை.  கண்டிஷனிங் இருக்கிறது.  அவ்வளவுதான்.
 
மற்றுமொரு முக்கியமான விஷயம் பிஸிகல்/மெட்டீரியல் மட்டத்துக்கும், சைகலாஜிகல் மட்டத்துக்கும் இடையே ஆனது.  அதாவது பௌதிக அளவிலும், மனப் பாங்கிலும்.  
 
மீண்டும் கண்டிஷனிங் பக்கம் வருவோம்.  பௌதிக மட்டத்தில் கண்டிஷனிங் கட்டுப் பாட்டுக்கு உட் படுத்தப் படக் கூடியது.  உதாரணமாக கோடையில் ஏ.ஸி வைத்துக் கொள்வது.  ஆனால் தவிர்க்கப் பட இயலாதது.  தட்ப வெப்ப நிலை என்று ஒன்று ஏதோ ஒரு அளவில் இருந்து கொண்டுதான் இருக்கும் அல்லவா? எனவே பௌதிக நிலையில் அறிவு விளைவைக் கட்டுப் படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவுக்கு அடிப்படை நினைவு, எண்ணங்கள், கற்றல், உற்று நோக்குதல், திட்டமிடல், செயலாக்கம் ஆகியன. இங்கு லட்சியம் அல்லது குறிக்கோள் என்பது விரும்பத் தக்கது. இவை யாவும் அளவிடக் கூடியவை.  அளவிடக் கூடிய எதுவானாலும் அது ஒரு வரம்புக்கு உட்பட்டது.
 
மனிதர்களை தட்ப வெப்பம் மட்டும் அல்ல இன்னும் எவ்வளவோ கட்டுப் படுத்துகின்றன. பதப் படுத்துகின்றன.  பெற்றோர், ஆசிரியர், கல்வி, அரசு, பொழுது போக்கு சாதனங்கள், பத்திரிகைகள், சினிமா இப்படியாக எவ்வளவோ. அவ்வாறே குடும்பம், பண வசதி, நெருங்கியவர்களின் மனப் பாங்கு, சம்பந்தப்பட்ட நபரின் ஆசைகள், வெறுப்புக்கள் ஆகியவையும் மாற்றங்களை உண்டாக்குகின்றன.
 
எனவே எந்த ஒரு சவாலுக்கும், சிக்கலுக்கும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் எடுக்கும் நடவடிக்கை எதுவானாலும் அது என் மனப் பாங்கினைச் சார்ந்திருக்கும்.  என் மனப் பாங்கோ எனில், பல விஷயங்களால் பதப் படுத்த்ப் பட்டு, மாற்றங்களுக்கு உள்ளானதாக இருக்கிறது.  அதே போல் என் சிக்கலில், சங்கடத்தில் அல்லது சந்தோஷத்தில் பங்கு பெறுகின்ற அடுத்தவர் அதே போல் கண்டிஷனிங் ஆன ஒரு நபர்தான். அவருடைய நடவடிக்கைகள் யாவும் அவருடைய கண்டிஷனிங் நிர்ணயம் செய்யும் பாணியில்தான் இருக்கும்.
 
இதை நன்றாக, முழுதாக உணரும்போது என்ன நடக்கிறது?  என் எதிரில் இருப்பவருக்கு இந்த  உணர்தலை நான் ஏற்படுத்த முடியாது.  உணர்தல் என்னளவினதுதான். என்னால் என் கண்டிஷனிங்கிலிருந்து வெளிப் பட்டு செயல் பட முடியுமா?  அவ்வாறு செயல் படுவது எப்படி? அப்போது என்ன ஆகும்?
 
ஜேகேயின் தனித் தன்மை அவர் கேள்வி கேட்பதுடன் நின்று விடுவது தான்.  அவர் சொல்வது: பிரச்சினையை முழுதுமாகப் புரிந்து கொள்ளுங்கள்.  அதை ஒரு வைரமணியைப் பார்ப்பது போல் தீர்க்கமாக, அபிப்பிராயங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஒளிவு மறைவு ஏதும் இன்றி, நாலா பக்கங்களிலிருந்தும் முழுதுமாகப் பாருங்கள்.  அப்போது அதன் முழுப் பரிமாணமும் வெளிப் படுவதுடன், அதற்கான தீர்வும் காணப் படும். 
 
நம்மால் இப்படிப் பார்க்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? ஏன் பார்க்க முடிய வில்லை என்பதை நமது பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டியது தான்.

20 கருத்துகள்:

 1. ஒரே விஷயத்திற்கு ஒருவர் 'இதுக்குப் போய் அலட்டிக்கலாமா' என்று கூலாக இருப்பதும் ஒருவர் 'வாழ்க்கையே முடிந்து போனது' என்று பதறுவதும் இந்த பதப்படுத்துதலால் தானோ?! . --கீதா

  பதிலளிநீக்கு
 2. கண்டிசனிங் பற்றிக் கூறி இருப்பது அருமை. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 3. கண்டிசனிங் பற்றி எடுத்து கூறியிருப்பது அருமை ஸ்ரீராம்.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொருவர் கோணதிலும் பார்த்தால் அவர்கள் செய்வது சரிதான்

  பதிலளிநீக்கு
 5. மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

  நல்ல பகிர்வு நண்பரே .

  மீண்டும் வருவான் பனித்துளி !

  பதிலளிநீக்கு
 6. பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் சக்தி எமக்கிருந்தால், ஜே கே, அல்லது வேறு குரு என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தேடிப் போகாமலே பிரச்சனைகளைத் தீர்த்துவிடமுடியுமே! நம்மில் பலருக்கு பிரச்சனைகள் இருப்பதாகவே தெரிவதில்லை - அப்படியே தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இருப்பதில்லை. இவை இரண்டும் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு நீங்களே குரு - தீர்வு உங்கள் கையில் - நண்பர்களின் உதவி அதிக பலம்.

  பதிலளிநீக்கு
 7. உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றொரு பாட்டு உண்டு - உன்னை அறிந்தால் உலகத்தையே ஆளலாமே!

  பதிலளிநீக்கு
 8. பக்குவப் படல், பக்குவப் படுத்துதல் என்ற வார்த்தை தமிழிலேயே எளிதில் கண்டிஷனிங் என்ற வார்த்தையை புரிந்துகொள்கிற மாதிரி இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 9. மனோ பக்குவம் அல்லது மனநிலை அல்லது மனோபாவம் என்பது எதுவாவது - 'கண்டிஷனிங்' என்பதை தமிழில் விளக்க பயன்படுமா?

  பதிலளிநீக்கு
 10. கிருஷ்,
  ‘பதப் படுத்துதல்’ என்று சொல்லும் போது பதம் என்பது விரும்பத் தக்க மாற்றம் எனப் பொருள் படுகிறது அல்லவா? பதப் படுத்தப் பட்டது நெடு நாள் வரும், பதப் படுத்தப் பட்டது சுவையானது என்பது போல!அதே போல பக்குவம் என்பது கூட விரும்பத் தக்க வகையில் என்று பொருள் படும். எனவே தான் சரியான சொல்லுக்குத் திண்டாடுதல் உண்டாகிறது!

  பதிலளிநீக்கு
 11. //ஒவ்வொருவர் கோணதிலும் பார்த்தால் அவர்கள் செய்வது சரிதான்
  //
  தேனம்மை சொல்வது . . .

  ஒவ்வொருவர் கோணத்திலும் பார்த்தால் அவர் வரை சரி என்பது சரிதான். ஆனால் பார்ப்பவரை மீறி, இருபக்கமும் சாராமல் இருந்து, இது சரி இது சரியல்ல என்று ஒருவர் அறுதியிட்டுச் சொல்ல இயலுமா? சரியான மன நிலை கொண்டு, விருப்பு வெறுப்பு அற்ற ஒரு மனிதர் என்ன செய்கிறாரோ அது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்கிறார் ஜேகே.

  பதிலளிநீக்கு
 12. ஜேகேயின் தனித் தன்மை அவர் கேள்வி கேட்பதுடன் நின்று விடுவது தான். அவர் சொல்வது: பிரச்சினையை முழுதுமாகப் புரிந்து கொள்ளுங்கள். அதை ஒரு வைரமணியைப் பார்ப்பது போல் தீர்க்கமாக, அபிப்பிராயங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஒளிவு மறைவு ஏதும் இன்றி, நாலா பக்கங்களிலிருந்தும் முழுதுமாகப் பாருங்கள். அப்போது அதன் முழுப் பரிமாணமும் வெளிப் படுவதுடன், அதற்கான தீர்வும் காணப் படும்.  இது தான் வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும்.

  பதிலளிநீக்கு
 13. //நம்மால் இப்படிப் பார்க்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? ஏன் பார்க்க முடிய வில்லை என்பதை நமது பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டியது தான்.//
  நம்மால இப்படி பார்க்க முடியவில்லை என்பதே நம்ம மனசு பக்குவ படாததாலதானே! அப்போ, இந்த பக்குவ படாத மனதால 'ஏன் இப்படி பார்க்க முடியவில்லை' என்ற பிரச்சனையை மட்டும் எப்படி பாக்க முடியும்?

  பதிலளிநீக்கு
 14. >ஜேகேயின் தனித் தன்மை அவர் கேள்வி கேட்பதுடன் நின்று விடுவது தான்.

  தருமியும் அப்படித்தான் என்று நாகேஷ் சொல்லிப் பார்த்திருக்கிறேன்.

  சாக்ரேட்ஸ், ப்ளேடோ போன்றவர்கள் கேள்வியை முதலில் கேட்டு வைப்பார்களாம். பதில் கிடைக்கிறதோ இல்லையோ ஆய்வுக்கான முத்தாய்ப்பாக, சிந்தனைத் தூண்டலாக இருக்கட்டுமே என்று அவர்கள் கேட்டு வைத்த கேள்விகளே பல பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. பின்னாளில் அவர்கள் கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்லியுமிருக்கிறார்கள்.

  ஆழ்ந்த கேள்விகள் பல சமயம் தொலைநோக்குச் சிந்தனையின் அடையாளமாக இருந்திருக்கின்றன. கேலிலியோ ஒரு உதாரணம். சமீபத்தில் பில் கேட்ஸ் கூட 'வில் தேர் எவர் பி எ நீட் ஃபொர் மோர் தான் ஒன் கிகாபைட் ஒஃப் மெமரி?' என்று கேட்டு விட்டு நாலு வருடம் கழித்து கெக்கே பிக்கே என்றது நினைவுக்கு வருகிறது.

  நான் சொல்றதுக்கு முன்னாலே க்ருஷ்ணமூர்த்தியும் ராமனும் சொல்லிட்டாங்க. பக்குவம், பதம் ரெண்டுமே கண்டிசனிங்குக்கு தமிழ். 'பதம்' பொதுவாக 'tangible' 'பக்குவம்' பொதுவாக 'intangible'.

  tangibleக்கு என்ன தமிழ்? நானும் கேள்வி கேட்டாச்சுங்க.

  candor aside, inquisitive and probing minds often are characteristics of intellectuals. ஜேகே அந்தவகை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜேகேயின் contribution என்ன என்று எவருமே எடுத்துச் சொன்னதாக நினைவில்லை. நீங்கள் சொல்வீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. மனிதர்களை தட்ப வெப்பம் மட்டும் அல்ல இன்னும் எவ்வளவோ கட்டுப் படுத்துகின்றன. பதப் படுத்துகின்றன.


  ............பக்குவப்படுத்துகின்றன.
  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 16. கந்திஷனிங்கிற்கு அருமையான விரிவான விளக்கங்கள்..

  பதிலளிநீக்கு
 17. பக்குவப்படல்

  நல்ல பகிர்வு நண்பரே

  பதிலளிநீக்கு
 18. பதப் படுத்துதல் என்பது மனிதர்களுக்கு, மனம் சார்ந்த, அறிவு சார்ந்தவைகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை.

  அதே நேரம் பக்குவம் என்ற வார்த்தை அஃறிணை ஈறாக எல்லாவற்றிற்கும் பொதுவான் பயன்பாடு சொல்லாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. மிகச் சரியா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணமுர்த்தி!
  'பக்குவம்' அஃறிணை ஈறாக எல்லாத்துக்குமே வரது.
  'பக்குவமா எடுத்து சொல்லு'! 'பக்குவமா ஆக்கி வை'!

  அப்பாதுரை said... //tangibleக்கு என்ன தமிழ்?//
  மதிப்புடன் உணரக்கூடியது. ஆனா ஆங்கிலத்துல இருக்கற நிறைய வார்த்தைக்கு, தமிழ்ல ஒரே வார்த்தைல அர்த்தம் சொல்ல முடியல.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!