வியாழன், 25 மார்ச், 2010

நேற்று ராத்திரி? வள்.. வள்!




இரவு இரண்டு மணிக்கு மேல் நிறைய நாய்கள் வீட்டு வாசலில் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்து கொண்டேன். சற்று உற்றுக் கவனித்ததில், பஜனை கூடங்களில் கேட்கும் நாமாவளி போல முதலில் ஒரு ஒற்றைக் குரல், பின் ஒரு கோரஸ் என்று படு சுவாரசியமாக இருந்தாலும், தெருவில் நின்று கொண்டிருந்த அனைத்து நாய்களும் ஒரே திசையில் பார்த்துக் குறைப்பது கண்டு, காரணம் கண்டறியக் கீழே வந்தேன். எல்லா முகங்களும் வீட்டுக் காரின் எஞ்சின் பகுதியை நோக்கியே இருந்ததனால் டார்ச் ஸ்க்ரூ டிரைவர் இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு சற்று அருகே சென்றேன். 

ஒரு குட்டி நாயின் முனகல் குரல் கேட்க, உடனே கேட்டுக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒரு கோரஸ்.  சற்று நேரத்தில் கார் அருகேயிருந்து வந்து கொண்டிருந்த ஓசை அடங்கிப் போனதும் கூட்டம் கலைந்தது. ஆனால் என் குழப்பம் தீரவில்லை.  குட்டி நாய் காருக்கடியில் உயிருடன் இருக்கிறதா இல்லையா - நாம் இப்பொழுது என்ன செய்யலாம், ப்ளூ க்ராஸ் காரர்கள் எந்த நிலைமையிலும் இருக்கும் பிராணிகளுக்கு உதவுவார்களா என்றெல்லாம் விஷயம் தெரிந்தவர்களை, காலையில் கூப்பிட்டு யோசனை கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்ப சென்றுத் தூங்கி விட்டேன்.

காலையில் காப்பி சாப்பிட்ட பின் தான் இரவு நடந்த நாய்கள்  ரகளை நினைவுக்கு வர, ஓடிப் போய்ப் பார்த்தேன்.  ஒன்றும் காணப்படவில்லை. எதற்கும் நன்றாகப் பார்த்து விடலாம்; அத்தனை நாய்கள் ஒரே நேரத்தில் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று காரைத் திறந்தவன், சிரித்தேன் சிரித்தேன், சிரித்துக் கொண்டே மேலே வந்தேன்.  "ஏங்க?  காலையிலிருந்து பவர் இல்லை, மிக்சி போடமுடியவில்லை, என்று புலம்பிக் கொண்டே இருக்கிறேன், உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா ?" என்ற குரல் கேட்டது [வழக்கம் போல்]

"நேற்று நாய்களெல்லாம் அவ்வளவு சப்தம் போட்டது ஏன் என்று தெரிந்து விட்டது. அதனால் தான் அப்படி சிரித்தேன்.." என்றதும் "ஆமாம் ரொம்ப முக்கியம்..... சரி சரி சொல்லுங்கள் அதையும் தான் கேட்போமே - கரண்ட் வரும் வரை உங்கள் ஜோக்கை விட்டா எங்களுக்கு வேறென்ன வழி? " என்றாள். 

"பீச்சுக்குப் போய் விட்டு வரும் போது அர்ஜுன் அவனுடைய நாய் பொம்மையைக் காரிலேயே வைத்து விட்டு வந்து விட்டான் போலிருக்கு. சுவிட்சையும் ஆன் பண்ணியே வச்சுட்டு வந்துட்டான்.  பெரிய சப்தம் எது கேட்டாலும் குரல் கொடுக்கும் வகையில் ஒரு சர்க்யூட் அதில் இருக்கிறது.  பின் என்ன? எதோ ஒரு தெரு நாய் குரலுக்கு இது பதில் சொல்ல இதற்கு அது பதில் சொல்ல ஒரு போட்டி ஆரம்பித்து அதில் பல வல்லுனர்கள் கலந்து கொள்ள - மாநாடு சீரும் சிறப்புமாக நடை பெற்றிருக்கிறது" என்றேன்.

"பின் நீங்கள் இறங்கிப் போனதும், எப்படி எல்லாம் அமைதி ஆனது?".   'ஆஹா, சுற்றி வந்து கடைசியில் நம்முடைய உரத்த குரலுக்கு சுட்டி வந்து இறங்குகிறது பார்த்தாயா?'  என்றெண்ணி பதில் சொல்லாமல், கீழே இறங்கிப் போய், நாய் பொம்மையை எடுத்து வந்து அதன் முன் கையைத் தட்டியதும் விளங்கியது, அமைதி மர்மம்!  நாய் ஒரு முறை தீனமாகக் குரைத்து விட்டு அமைதியானது.  பின் என்ன செய்தாலும் நோ ரியாக்ஷன்.  பாட்டரியில் உயிர் இல்லை!    

14 கருத்துகள்:

  1. சுஜாதா கதை மாதிரி இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா ஒரு நல்ல சிறுகதை கிடைத்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. =)). ஆமாம். ஒரு நல்ல சிறுகதை போச்சு. ஆனாலும் சுவாரசியம்:))

    பதிலளிநீக்கு
  3. தெரு நாய்களெல்லாம் "பாசக்கார பசங்க" போலிருக்கு. interesting incident. --கீதா

    பதிலளிநீக்கு
  4. :-)) ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல சுவாரஸ்யமா இருக்கு; அப்படியே இன்னுங்கொஞ்சம் இழுத்து, ஒரு மர்மக் கதையா ஆக்கிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா இருக்கு .நல்ல வேலை சத்தம் கேட்டால் அழும் பொம்மையை வைத்துவிட்டு வரவில்லையே .

    பதிலளிநீக்கு
  7. // geetha santhanam said...

    தெரு நாய்களெல்லாம் "பாசக்கார பசங்க"//

    LOL, apt one.

    பதிலளிநீக்கு
  8. சுஜாதா கதை என்ற ஈக்வேஷன் ஏன் வருகிறது? குலைக்கும் நாய் பொம்மை ஒரு எலக்ட்ட்ரானிக் விஷயம் என்பதாலா? கதையா நிகழ்வா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு நிகழ்ச்சியில் புதுமையும் சொல்லியிருக்கும் நேர்த்தியும் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு. ஆனா ஒரு சின்ன சந்தேகம், நிஜமா கேக்கறேங்க, கிண்டல் எல்லாம் இல்லை, கார் கதவெல்லாம் ஜன்னல் உட்பட மூடி இருக்கும்போது, இந்த பொம்மை நாய் குரைக்கற சத்தத்தை, வெளியே இருந்து அதுவும் கேட்டை தாண்டி தெருவிலிருந்து கேக்க முடியுமா??

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!