வெள்ளி, 5 மார்ச், 2010

ஆட்டுக்கல் பகவதி கோவிலும், அனந்தபத்மநாப சுவாமியும்



ஆட்டுக்கல் பகவதி அம்மன்... ஆற்றுக்கால் பகவதி அம்மன்...முன்னது அவர்கள் எல்லாம் சொல்வதை வைத்து சொல்வது...பின்னது பேப்பரில் பார்த்தது. ஒரு பக்தரை ஆற்றைக் கடக்க உதவி செய்து பின்னர் கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்னதாகக் கூறுவார்கள்.

பெண்களின் சபரி மலை என்று சொல்கிறார்கள். மாலையிட்டு விரதமிருந்து கோவில் வருவார்களாம். கடந்த ஃபெப்ரவரி மாதம் இருபத்தெட்டாம் தேதி இந்தக் கோவிலில் நடந்த திருவிழா பார்த்திருக்கக் கூடும். ஆயிரக் கணக்கான மக்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்கள்.

ஒரு திருமணத்திற்காக அங்கு சென்று வந்த அனுபவம்  இதுவரை கண்ணில் படாத இந்த செய்தியை  இந்த முறை பார்க்க வைத்தது.

செய்திச் சேனலில் பார்த்த போது நடிகை அம்பிகாவும், பாடகர் யேசுதாசும் கண்ணில் பட்டார்கள். யேசுதாஸ் பத்மநாபசுவாமி கோவிலுக்குள் சென்று வழிபட விருப்பம் தெரிவித்தும் அவரை உள்ளே விடவில்லை என்பது நினைவிருக்கும். அவர் போகா விட்டால் என்ன, அவர் குரல் அந்த ஸ்வாமியையே உலுக்கி இருக்கும்.

கோவில் பார்க்க சிறிய இடமாகத்தான் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் விஸ்தீரணம் தெரிகிறது. திட்டி வாசல் போன்ற முதல் வாயிலை தாண்டியதும் சற்று தூரத்தில் கோவில் கோபுரமும் நுழை வாயிலும் கண்ணில் படுகின்றன. நம்பிக்கையாக செருப்பை வாசலிலேயே விட்டுச் செல்கிறார்கள். உள்ளே செருப்பு பாதுகாக்கும் இடமும் உண்டு. உள் நுழைந்து இடது புறம் திரும்பி பொங்கலிடும் மைதானம் செல்லும் வழியில் உள்ளது. அர்ச்சனைக்கும் இன்ன பிற விஷயங்களுக்கும் சீட்டு வாங்க கவுண்டர்கள். கோவில் நுழைவு வாயில் வலது புறம்.

கேரளப் பெண்கள் இங்கு திருமணம் செய்வதை விசேஷமாகக் கருதுகிறார்கள். திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்க வேண்டுமே..எனவே உள்ளே ஓர் எல்லை வரை காமிரா அனுமதிக்கப் படுகிறது.

ஆற்றுக்கால் பகவதி உள்ள உள்ளுக்கு கேமிரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. திருமணத்தை படம் எடுத்தாலும் அங்குள்ள சுவாமி விக்ரகங்களை படம் எடுக்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

உள்ளே குழந்தைகளுக்கு குருவாயூர் போல 'அன்னப்ரவசனம்' செய்கிறார்கள். துலாபாரத்தில் குழந்தையை இட்டு கடவுளுக்கு எடைக்கு எடை பழமோ, இனிப்போ தர, துலாபாரமும் உள்ளது.

நாகர் சன்னதி உள்ள இடத்தில் ஒரு நபர் கையில் ஒரு வாத்தியத்தை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டே என்னமோ பாடுவது போல் சொல்லிக் கொண்டே இருந்தார். பக்தர்கள் அவர் அருகில் போய் நட்சத்திரமோ ராசியோ சொல்லி, அவர் ஏதோ நீளமாக, ராகமாக சொல்லும் வரை அருகில் நின்று, கேட்டுவிட்டு, பணம் கொடுத்து வருகிறார்கள்.

அங்குள்ள கடவுளர்களின் பெயர்கள் மலையாளத்தில் மட்டுமே எழுதப் பட்டிருந்ததால் என்ன தெய்வம் என்றே தெரியாத நிலை.

வெடிப் பிரார்த்தனை என்று ஒன்று. சிறிய வெடி ஐந்து ருபாய், பெரிய வெடி பத்து ரூபாய். அருகில் போய் பணம் கொடுத்து, எந்த வகையில் எத்தனை என்று சொல்லி விட்டால் அங்குள்ளவர் மைக்கில் அறிவித்து விடுவார். நீங்கள் பிரார்த்தனை மனதுக்குள் செய்து கொள்ளும்போதே அங்கிருந்து வெடிச் சத்தம் எழுகிறது.

செருப்பு வைக்கும் இடத்தில் கோவிலின் மாடல் வைத்திருந்தாலும் அவ்வளவு தெளிவாக இல்லை. வெளியே வந்து பார்க்கும் போது மக்கள் பொங்கலிட கூடும் பெரிய மைதானம் தெரிகிறது.

பத்மநாபசுவாமி கோவில் அருகில் கூட கேமிரா கொண்டு போக அனுமதி இல்லை. வெளியிலேயே சட்டை, பொருள்கள், வைத்து விடச் சொல்லுகிறார்கள். கையில் காசு எடுத்துக் கொள்ளக் கூட தோன்றாமல் உள்ளே போய் விட்டோம்.

தமிழ்நாட்டு கோபுரங்களிளுருந்து சற்றே வித்யாசமான கோபுரம். நீண்ட விசாலமான பிரகாரங்கள். மிக அமைதியான கோவில். ரொம்பக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டதும் கூட என்று சொன்னார்கள்.

உள்ளே அர்ச்சனை செய்பவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறைதான் வெளியே வருவார்களாம்.ஷிஃப்ட் போல. அடுத்த ஆறு மாதத்துக்கு அடுத்த செட். உண்மையோ அல்லது பொய்யோ..?

அனந்தபத்மநாப சுவாமி மூன்று பாகமாக பிரிந்து தெரிந்தார். அவர் முகம் எத்தனை முயன்றும் பிடிபடவில்லை. நல்ல மனங்களுக்குதான் பிடிப்படுமாம். என்னைத் தவிர எல்லோருக்கும் தெரிந்தார்.

ஒவ்வொரு சன்னதியிலும் ஒரே அமைதி. கிருஷ்ணர், பிள்ளையார், இன்னும் ஏதோ கடவுள்...எங்கும் மின் விளக்குகள் இல்லை. காற்றாடிகள் இல்லை. கிருஷ்ணர் சன்னதியில் மூலவருக்கும் பக்தர்களுக்கும் நடுவில் ஒரு பள்ளம் போன்ற இடத்தில் பட்டர் அல்லது அர்ச்சகர் உட்கார்ந்து கொண்டு அசைவு அதிகம் காட்டாமல் ஒரு விசிறியால் மெல்ல விசிறிக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த போது எவ்வளவு நேரம் இவர்களால் இப்படியே உட்கார்ந்திருக்க முடியும் என்று தோன்றியது.

பிள்ளையார் சன்னதியில் சிறிய படல் அடைப்புக்குள் பிள்ளையார். சுற்றிலும் நிறைய இடம். பக்தர்கள் வந்து போவதில் அடைசல் ஏதும் கிடையாது. பேச்சு சத்தமும் கிடையாது. அவ்வளவு அமைதியில் யாருக்கும் பேசத் தோன்றாது என்று நினைக்கிறேன்.

வெளியில் சில பட்டர்கள் உட்கார்ந்துகொண்டு சந்தனம், குங்குமம் கலந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உருட்டி பக்தர்கள் உள்ளங்கையில் எறிந்து கொண்டிருந்தார்கள்.

கோவிலின் பிரம்மாண்டமும், பழமையும் கண்ணைக் கட்டி நிறுத்தின. புகைப் படம் எடுக்க முடியாத வருத்தம் மேலெழுந்தது.

வெளியில் கடையில் சாயா குடித்து, செல்லைக் கையில் எடுத்து கோவிலை நோக்கி ஃபோகஸ் செய்து... பெரிய மீசையுடன் அருகில் நெருங்கியவரைக் கண்டதும் பேசுவது போல பாவ்லா காட்டி, 'பழ பொரி'  (பழ பொரி என்பது நேந்திரம் பழம் எடுத்து அளவாகச் சீவி ஏதோ மாவில் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தது) டேஸ்ட் பார்த்துக் கிளம்பினோம்.

12 கருத்துகள்:

  1. கோவிலுக்கு சென்று வந்த திருப்தி.. நன்றி நண்பா..

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பதிவு. இவர்களுடைய மொழி எவ்வளவு முயற்சித்தாலும் எனக்கு பிடிபடமாட்டேன் என்கிறது. அது, அந்த ஆற்றுக்கால் என்ற சொல்லில் ட் மற்றும் ற் றிற்கு இடைப்பட்ட ஒரு ஒலி! ஒரு சாஃப்ட் ட. அப்புறம் அந்த நாகர் சன்னிதியில் கேட்ட ஒலியின் தனித்துவத்தை பற்றி உங்கள் கருத்தை பதிக்க மறந்தீர்களோ? குருவாயூர் மம்மியூர் மஹாதேவர் கோவிலில் இந்த ஒலியைக்கேட்க நேர்ந்தது. ரொம்ப வித்தியாசமாக இருந்தது.எப்படி இன்னும் ரஹ்மானின் கவனத்திலிருந்து இந்த நாதம் தப்பியது என்றே தோன்றியது. மிக நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நான் சென்று பார்த்து வந்த நினைவு வருகிறது. சின்ன காமிரா என்பதால் பத்மனாப ஸ்வாமி கோயிலுக்குள் கொண்டு சென்றேன். ஒரு சிறு மூலையில் ஒரு படம் பிடித்தேன். முக்கியமான இடமாக இருந்தால் மாட்டிக் கொண்டிருப்பேன்.

    ஆற்றிங்கல் பகவதி என்று சொல்லும் ஓசையில் நீங்கள் விளக்கும் இந்தக் கோயிலைக் குறிப்பிட்டார்கள். வெடி வேண்டுதல் செய்து ஒரு திருப்திப் பட்டுக் கொண்டு திரும்பினோம்.

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  4. கோவில பத்தி அழகா எழுதி இருக்கீங்க. 'வெடி பிரார்த்தனை' இது வரை கேள்வி படாத ஒன்று. மூல சன்னதி படம் அழகா இருக்கு, மலையாள ஸ்டைல் விளக்கோட. 'கோபுர தரிசனம்' கோடி புண்ணியம்னு சொல்லறாங்களே அது நிஜம்னா, இன்னிக்கு உங்க புண்ணியத்துல, மேனி நுடங்காம, எனக்கும் ஒரு கோடி புண்ணியம் கிடைச்சாச்சு!

    பதிலளிநீக்கு
  5. வெடி வழிபாடு என்று தெரிவிக்கும் பலகையை முழுவதும் காட்டியிருக்கலாமே?

    ஆற்றுக்கல் என்னு மலையாளத்தில் எழுதியால், ஆட்டுக்கல் என்றும் படிக்கலாம் என்கிறார் கேரளாகாரர்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல தரிசனம். மனம் அமைதியாகிறது உங்கள் படைப்பை படிக்கும் போது...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு எங்கள் ப்ளாக் ரொம்ப அமைதியாக உணர்ந்தேன்

    பதிலளிநீக்கு
  8. ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா கின்னசிலும் இடம் பிடித்துள்ளது. ஒரே நாளில் மிக அதிக அளவில் பெண்கள் கூடும் கோவில் என்ற பெருமைக்காக இந்த சாதனை. "ஆற்றுக்கால்" என்பதுதான் சரியான உச்சரிப்பு.

    பதிலளிநீக்கு
  9. நன்றி திவ்யாஹரி.

    நன்றி அநந்யா மஹாதேவன்..இதைப் பற்றி நானும் எழுத எண்ணியிருந்தேன்..ழ வும் இல்லாமல் ட வும் இல்லாத இடைப் பட்ட ஒலி.

    நன்றி ராமன்,
    இப்போது வாசலிலேயே மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்து, மேலும் இராணு மூன்று நபர்கள் நின்று செல் உட்பட எல்லாவற்றையும் வெளியே வைத்துச் செல்ல வற்புறுத்துகிறார்கள்.

    நன்றி மீனாக்ஷி.

    நன்றி அனானி.

    நன்றி Madurai Saravanan.

    நன்றி நீச்சல்காரன்.

    நன்றி தேனம்மை.

    மிக்க நன்றி kavisiva.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு. இதை நான் மிஸ் பன்னிட்டேன். இன்றக்கு தான் இங்கு முதல் தடவையா வந்திருக்கேன். நல்ல பதிவு எங்க ஊர் கோவில் பற்றி எழுதியிருக்கிங்க. பாராட்டுக்கள். எங்க ஊர் பத்மநாபஸ்வாமி கோவில் என்றக்குமே எப்பவுமெ தனி மவுசு தான். அந்த சுத்தம். அந்து பவித்தமான் புனிதமால் அம்பலம் எவிடேயும் கானன் பற்றில்லா.
    நிங்களுக்கு டைம் உள்ள்போல் இவிடேயும் வரு. வளரே நன்னி.

    பதிலளிநீக்கு
  11. விஜி வாங்க, வாங்க! உங்க
    ஒரு பிளாகுல சமையல் குறிப்புகள் - படிக்கும்போதே - அதைச் செய்து சாப்பிடவேண்டும் போல - மனது குதிக்கின்றது. இன்னொன்றில் படைப்பாற்றல் பூத்துக் குலுங்கும் பதிவுகள். அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!