ஊர் பெயர் சொல்ல இயலாத இரண்டு பெண்மணிகளை என்னைக் கவர்ந்தவர்களாக அறிவிப்பதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. இவர்கள் இருவரில் எவரும் எனக்கு உறவல்ல. ஆனால் அவர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன். இந்த சாதனையாளர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளலாமே.
முதல் நபர் ஒரு தென் தமிழ் நாட்டு கிராமத்தில் பிறந்த அந்தணர். அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு சித்தி சீரியல் சித்தியாக கொடுமைப் படுத்தத் தொடங்கிய போது முடியும் வரை பொறுத்துக் கொண்டார். ஆனால் சித்தி அசல் சினிமா சித்தியாக இந்த இளம் பெண்ணை 'கெட்ட வழிகளில்' செலுத்த முற்பட்ட போது வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. கல்வியறிவு அதிகம் பெறாத இந்த இளம் பெண் எல்லாரும் சொல்வது போல் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்துப் பெருக்கி வாழ முடியும் என்று நம்பினார். நடக்க வில்லை. எல்லா இடங்களிலும் கொஞ்சம் அழகாக இருந்த அவரை பல விதமான ஆபத்துக்கள் துரத்தின. வேறு வழியின்றி ஒரு நாடகக் கம்பெனியில் துணை நடிகை ஆனார். நாடகம் என்றால் என்ன என்பதே அப்போதுதான் தெரியும். அப்படி இப்படி அலைந்து திரிந்து திருச்சிக்கு வந்த போது நாடகம் பார்க்க வந்த ஒருவர் அவரை விரும்பி அவருக்கு வாழ்வளிக்க முன்வந்தார். அதை ஏற்க முடியாமல் இவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நம்பினால் நம்புங்கள், இவரை 'தூக்கிக் கொண்டு போய்' பெண்டாள ஒரு பெரிய மனிதர் திட்டம் தீட்டி அதை நாடகக் கம்பெனி நல்ல மனிதர் ஒருவர் இவரிடம் சொல்ல, இவர் தன்னை விரும்பியவரைத் தொடர்பு கொண்டு தனக்கு நேர இருந்த ஆபத்தை அவரிடம் சொன்னார். அந்த நபர் ஒரே நாளில் அந்தப் பெண்ணை நண்பர்கள் வீட்டில் குடியமர்த்தி உரிய நோட்டீசுகள் கொடுத்து அவரை பதிவுத் திருமணமும் செய்து கொண்டார்.
ஒருவழியாக தன் வாழ்வு விளக்கம் பெற்றது என்று நிம்மதியாக புது வாழ்வைத் தொடங்கினார் இவர். எல்லாருக்கும் உதவி செய்வதும் இன்முகம் காட்டி உபசரிப்பதும் அவருடைய இயல்பு. அதைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு முட்டாள், அவரிடம் ' ஆசை வார்த்தைகள் ' பேச முயல, மீண்டும் ஒரு சிக்கல் அவருக்கு நேர்ந்தது. கணவரிடம் தைரியமாக விஷயத்தைச் சொல்லி, அந்த ஆளுக்கு வலை வைத்துப் பிடித்து செமத்தியாக உதைத்து அனுப்பினார் இந்தப் பெண்!! கொஞ்சம் பார்க்க நன்றாக இருக்கும் பலவீனமான பெண்ணுக்கு வாழ்வில் எத்தனை சோதனைகள்!. அடுத்து அவரது வயதுக்கு வந்த மைத்துனரே அவரிடம் முறை தவறி நடக்க முயல மீண்டும் வீட்டில் புயல். ஒருவாறாக மைத்துனனை மணம் செய்வித்து அனுப்பிய பின் வாழ்க்கை நல்ல முறையில் திரும்பியது.
இடையில் இவருக்கு காச நோய் வந்து வைத்தியம் செய்து கொண்டு அந்தக் கால மருத்துவ ஆலோசனைப் படி ஈரல், மட்டன், முட்டை எல்லாம் சாப்பிடப் பழகிக் கொண்டார். மேலும் அவரது கணவர் ஒரு அசைவப் பிரியர்.ஒரு பெரிய செலவாளி. எனவே இவரது சமையல் திறன் இவருக்குக் கை கொடுத்தது. பணம் கொடுத்து சாப்பிடும் சிலருக்கு கணவரின் அனுமதியுடன் சமைத்துப் போட்டு நிர்வாக சிக்கல்களைச் சமாளித்தார் மீண்டும் ஒரு சோகம். கணவர் அகால மரணம் எய்தினார். மகன் தூர தேசத்தில் உத்தியோகம் பார்க்க, மகள் மணமுடித்து சிறப்பாக வாழ, தான் அவர்களுடன் சென்றால் தன் துரதிருஷ்டம் அங்கும் துரத்தும் என்று பயந்து அவர் சொந்தமாக ஒரு உணவகம் நடத்தி பல பேருக்கு அன்னமிடும் கைங்கரியம் செய்து வரத் தொடங்கி, பிள்ளைகளுடன் நல்ல உறவோடு நலமாக இருக்கிறார்.
மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும். ஆனால், தலைவலியும் ஜுரமும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். கல்விப் பின்பலம் இல்லாத மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கையை சமாளித்து வெற்றி காண்பது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல. இப்போது எண்பது வயதுக்கும் மேலாக இருக்கும் இவருக்கு. இன்னும் உணவகம் நடத்துகிறாரா என்று தெரியவில்லை. தன்னம்பிக்கையும் சாதுரியமும் விடா முயற்சியும் கொண்ட இந்த சாதாரணப் பெண் ஒரு அசாதாரண சாதனையாளர் என்றே எனக்குத் தோன்றுகிறது.
கடைசியில் ஒரு வார்த்தை. இது கற்பனை கலக்காத உண்மை. ஒரு சிறு குறிப்பு கொடுத்தாலும், அது விரும்பத் தக்கதல்ல. எத்தனை பேர் இந்த மாதிரி வாழ்க்கையில் சவால்களை வெற்றி கொண்டு வெளியில் தெரியாமல் வாழ்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரையும் நினைவு கூர்ந்து அவர்களது பெருமையைப் போற்றியாக வேண்டும்.
என்னைக் கவர்ந்த இருவர் என்றல்லவா சொன்னேன்! இன்னுமொரு சாதனையாளர் இருக்கிறார். அவரைப் பற்றிய விபரம் நீங்கள் விரும்பினால் பிறிதொரு சமயம்.
ராமன்.
சாதனைதான்.
பதிலளிநீக்குஅந்த இன்னொருவர் பற்றியும் எழுதுங்களேன்.
பதிலளிநீக்குசைவகொத்துப்பரோட்டா - அந்த இன்னொருவர்தாங்க இவர் !!
பதிலளிநீக்கு//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும். //
பதிலளிநீக்குஇல்லை, ஒவ்வொரு சூழலையும் கற்பனை செய்து பார்க்கும்போது, எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார் என்று தெரிகீறது!!
சார் வாங்க பேர் என்ன சார்...
பதிலளிநீக்குசாதிச்சவங்க போரையும் போட்டிருந்தீங்கன்னா எங்கள மாதிரி
விளக்கெண்ணைகளும் தெரிஞ்சுக்குவோம்
உங்களைக் கவர்ந்த பத்துப் பேர்...தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குமேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும்.
பதிலளிநீக்குநிச்சயம் மிக பெரிய சாதனை தான். பார்வையாளனாக, விமர்சகனாக நின்று பார்த்தால் எல்லாமே சாதாரணம் தான். அனுபவிப்பவர்களுக்கு தான் வேதனை தெரியும். அவர்களுக்கு தான் சாதனையும் புரியும்
"சாதனைப் பெண்." . ஒருவரைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அந்த மற்றொருவர் யார் !
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி
உங்களை கவர்ந்த ஆண்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போறீங்க ?
பதிலளிநீக்குமீண்டும் வருவான் பனித்துளி !
இந்த பெண்மணியோட வாழ்கை பெருமிதப் பட வேண்டிய ஒரு சாதனைதான்! தகுந்த நேரத்துல இவருக்கு வாழ்வளித்து, எல்லா நிலையிலும் இவருக்கு உறுதுணையா இருந்து, உதவிய இவருடைய கணவரையும் மனதார பாராட்டறேன்.
பதிலளிநீக்குசாதனைதான். வேதனையே வாழ்க்கை என்று இருந்து விடாமல் சாதித்து இருக்கிறாரே........
பதிலளிநீக்குபதிவு அருமை.
பெயர் வேண்டாம்....அடுத்த சாதனை பெண்மனி பற்றியும் எழுதவும்....நன்றி
பதிலளிநீக்கு//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும்.//
பதிலளிநீக்குஎன்ன இப்படி சொல்லிட்டீங்க?
//கல்விப் பின்பலம் இல்லாத மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கையை சமாளித்து வெற்றி காண்பது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல.//
இதுதான் மிகச்சரி.
// தன்னம்பிக்கையும் சாதுரியமும் விடா முயற்சியும் கொண்ட இந்த சாதாரணப் பெண் ஒரு அசாதாரண சாதனையாளர் என்றே எனக்குத் தோன்றுகிறது.//
எங்களுக்கும். பகிர்வுக்கு நன்றி.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட சாதனையாளருக்கு வாழ்த்து..
பதிலளிநீக்கு80 வயதில் தனிமையா...
பாராட்ட வேண்டும் ராமன்...