திங்கள், 1 மார்ச், 2010

தந்தி - முந்தியா பிந்தியா?

இந்த நூற்றாண்டில் இணையமும் எஸ் எம் எஸ் ஸும் படுத்தும் பாடும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளும் உங்கள் எல்லோருக்குமே தெரியும்.

சென்ற (இருபதாம்) நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் - முதல் ஐம்பது வருடங்களுக்கும் குறைவில்லாமல், உலகையே ஆட்டிப்படைத்த ஒரு விஷயம் தந்தி. சாமுவேல் மோர்ஸ் என்னும் ஒரு மகா மனிதர் தந்தி முறைக்கு கோட் (code) உருவாக்கி பெரும் அளவில் உதவி புரிந்தார்.

அதே கால கட்டத்தில் நம் ஊர்களில், தந்தி என்கிற சொல்லே பெறுபவர்களுக்கு பீதியைக் கிளப்பும் - சிலர் தந்தி வந்திருக்கு என்றாலே - வயதான உறவினர்களை ஒவ்வொருவராக மனக்கண்ணில் பார்த்து  அவர்களை சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ மானசீகமாக அனுப்பி, அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

நம்ம ஊருலத்தான் இப்படி - ஆனா - மேற்கத்திய நாடுகளில் - அப்படி இல்லை - அவங்களுக்கு தந்தி முறை தகவல் பரிமாற்றங்கள் மிகவும் பிடித்த விஷயம். அந்த கால கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.
*****
அவர் பெயர் பிரவுன். அவருக்கு விற்பனையாளர் வேலை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே சுதந்திர மனிதராக ஊர் ஊராக சுற்றி விற்பனையாளர் வேலையை இரசித்துச் செய்து வந்தார். அவருடைய வீட்டில், அவர் வளர்த்தது, ஒரு செல்லப் (பிராணி) பூனை. வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு வேலைக்காரர். அவர் பெயர் பச்சை. (Green). பிரவுன், தன்னுடைய வெள்ளைப் பூனைக்கு, பிங்கி என்று பெயர் வைத்திருந்தார். அவருக்கு, பூனை பிங்கியின் மீது கொள்ளைப் பிரியம். பிரவுன் வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில் / வாரங்களில் / மாதங்களில், பிரவுனின் அம்மா திருமதி வைலட் அவர்கள்தான் பிங்கியைப் பார்த்துக்கொள்வார். 

பிரவுனுக்கு வீட்டுத்  தகவல்களை - அடிக்கடி தந்தி மூலம் பச்சை தெரியப்படுத்துவார். ஒருமுறை,பிரவுன் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு பச்சையிடமிருந்து, ஒரு தந்தி வந்தது.
"பிங்கி இறந்துவிட்டது. உடனே வரவும்."

அதிர்ந்துபோய் விட்டார் பிரவுன். செல்லப் பிராணியின் திடீர் மரணத்தினால் தாளமுடியாத சோகத்தில் ஆழ்ந்தார் அவர். உடனே கிளம்பி ஊர் வந்து சேர்ந்தார். துக்கத்துடன் பச்சையிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.

பச்சை கூறினார்: "பிங்கி நேற்று சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்து வீட்டின் கூரை மீது ஏறி உட்கார்ந்துகொண்டது.. நாங்க எவ்வளவோ முயற்சி செய்தும் - அதைக் கீழே இறக்கிவிட முடியவில்லை. அப்புறம் அது கிட்டத்தட்ட பத்து மணிநேரம் அங்கேயே இருந்தது. அப்புறம் பக்கத்து வீட்டு நாய் இதைப் பார்த்து - பலமாகக் குரைத்தது. உடனே பிங்கி பயந்துபோய் - பக்கத்தில் உள்ள கிணற்றுக்குள் நேரே பாய்ந்துவிட்டது. கிணற்றுச் சுவற்றில் அடிபட்டு, தண்ணீரில் விழுந்து உயிரை விட்டு விட்டது." இதை விலாவாரியாகச் சொன்னார், பச்சை.

சோகத்தில் இருந்து மீண்ட பிறகு, பிரவுன் வேறொரு செல்லப் பூனையை வாங்கிவந்தார். இந்தப் பூனைக்கு மஞ்சளழகி என்று பெயர் வைத்தார். அப்புறம் - பச்சையைக் கூப்பிட்டு, கூறினார், " பச்சை, நான் சொல்வதை கவனமாகக் கேள். தந்தி அடிக்கும் பொழுது திடீர் என்று அதிர்ச்சி வரும்படி - மரணச் செய்திகளை - தந்தியில் அனுப்பாதே. உதாரணத்திற்கு, பிங்கி இறந்து விட்டதல்லவா, நீ என்ன செய்திருக்க வேண்டும் என்றால் - இதை பல தந்திகளாகப் பிரித்து - அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, இந்த மாதிரி அனுப்பியிருந்தால், நான் அதிர்ச்சி அடையாமல் - ஒரு வழியாக - பக்குவப்பட்டிருப்பேன்."

தந்தி ஒன்று : "பிங்கி கூரை மீது ஏறிவிட்டது."
தந்தி இரண்டு :"எவ்வளவோ முயற்சி செய்தும் பிங்கியை கீழே இறக்க முடியவில்லை."
தந்தி மூன்று: "பிங்கி எதுவும் சாப்பிடவில்லை."
தந்தி நான்கு :" பிங்கி பக்கத்து வீட்டு நாய் - குரைத்ததால், பயந்துபோய் விட்டது.."
தந்தி ஐந்து: " பிங்கி பயந்து கிணற்றில் குதித்துவிட்டது."
தந்தி ஆறு : "பிங்கி இறந்துவிட்டது. எங்களால் காப்பாற்றமுடியவில்லை."

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியூர்ப் பயணம் போய்விட்டார், பிரவுன். இரண்டு வாரங்கள் கழித்து பிரவுனுக்கு, ஒரு தந்தி வந்தது. பச்சைதான் அனுப்பி இருந்தார்.

"உங்க அம்மா திருமதி வயலட் கூரை மீது ஏறி இருக்கிறார்."

17 கருத்துகள்:

 1. கட்டி சமத்த்தத்த்த்து வேலைக்காரன்!:)

  பதிலளிநீக்கு
 2. வெவரமான வேலைக்காரன் தான்.. ஹா..ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
 3. கடைசி வரி வாசிச்சு சிரிப்பு அடக்க முடில.என்னதான் ஆச்சோ அந்த அம்மாவுக்கு !

  பதிலளிநீக்கு
 4. Sow Susila matured என்பதை How Susila என்று தந்தி அடித்ததாக ஒரு புராதன ஜோக் நினைவுக்கு வருகிறது. அதே போல என் சக தொழிலாளி ஒருவருக்கு “அப்பா இறந்து போனார்” என்று தந்தி வந்து அவர் அலறிப் புடைத்துக் கொண்டு அழுதவாறே மனைவி மக்களுடன் ஊர் செல்ல, தந்தி கொடுத்தவரின் அப்பா, ஒரு வெகு தூரத்து உறவினர் இறந்திருக்கக் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார்!!! நான் தூரத்தில் ஒரு அத்வானத்தில் வேலை பார்த்துவந்த சமயம் “ Father Not serious. Dont Start " என்று தந்தி வந்து, குழம்பிப் போனேன். தந்தி கிடைத்த அன்று மாலை அப்பாவுக்கு உடல் நிலை கொஞ்சம் கவலைக்கிடம், புறப்பட்டு வா என்று எக்ஸ்பிரஸ் டெலிவரி லெட்டர் கிடைத்து ஒரு மாதிரியாக விஷயம் புரிந்தது. அப்போதெல்லாம் செல் போன் இல்லாதது அனைவருக்கும் தெரியும். சாதா போன் கூட டிரங்க் கால் போட்டு கை கட்டிக் கொண்டு பல மணி நேரம் காத்துக் கிடந்தால்தான் தொடர்பு கொள்ள இயலும் என்பது ஒரு சோகம். இப்போது நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் இந்தத் துறையில் பிரமிக்க வைக்கக் கூடியது தான்.

  பதிலளிநீக்கு
 5. ஹ ஹ ஹா மிக அருமை.எப்படி யோசிக்கிறீங்க?

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா ஹ .. செம கலக்கல் கலக்கல் .. சிரிப்பு அடக்கமுடியல

  பதிலளிநீக்கு
 7. ஹாஹாஹா நல்ல காமெடி, வயிறு குலுங்கச் சிரித்தேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. கூரை மேல் இருக்கும் அவங்கள கிழே இறக்கி விடவும் :))

  பதிலளிநீக்கு
 9. பெயர்களைப் பார்த்தால், மூலக்கதை ஆங்கிலத்தில் இருப்பதாகத் தெரிகிறது.. எங்கேந்து சார் சுட்டீங்க..?

  பதிலளிநீக்கு
 10. மாதவன் கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க! இது இத்தாலிக்குக் கிழக்கே எல்பாசன் என்கிற நகரில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தேழில் நடந்த உண்மைச் சம்பவம். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

  பதிலளிநீக்கு
 11. கவனம் உங்க வீட்டுக்கும் கூரை இருக்குதானே  நல்ல ஜோக்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!