செவ்வாய், 30 மார்ச், 2010

ஜே கே 04 - கற்றலும், கற்பித்தலும்.

(நான் கூறுவதை மக்களுக்கு எடுத்துச் செல்லலாம்.  அதை நீங்களோ யாருமோ விளக்க முற்பட வேண்டாம் என்பது ஜேகே சொன்னது.  அந்தப் பின்னணியில் நாம் கூடுமான வரையில் அவர் சொன்ன சிலவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்து தர முயல்வோம். புரிந்து கொள்ள சிரமம் என்று எண்ணப்படும் பகுதிகளை கொஞ்சம் வேறு மாதிரி சொல்ல முயற்சிப்போம். அதை தெளிவாக இது நான் உங்களுக்குச் சொல்வது என்று அறியப்படும் வகையில் குறிப்போம்.)

“(பள்ளி, கல்லூரிகளில்) கற்பிப்பவர் சற்றே பெருமிதத்துடன் தம் பணியைச் செய்கிறார். அதே சமயம் தன் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள என்ன செய்யலாம் என்ற முனைப்பும் அவரிடம் இருக்கிறது.  பள்ளி/கல்லூரி முடிந்து வெளிச் செல்லும் மாணவர்களுக்கு என்ன ஆகிறது என்று யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஆசிரியர் சில உத்திகளை, சில உண்மைகளைத் தருகிறார்.  புத்திசாலித்தனம் மிக்க மாணவர்கள் அதைக் கிரகித்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியர்களுக்கு நிரந்தரமான உத்தியோகம்வருவாய் இருக்கிறது.  குடும்பம், சௌகரியங்கள் எல்லாம் இருக்கின்றன. வெளிச்செல்லும் மாணவர்கள் வாழ்க்கையின் சவால்களை, பாதுகாப்பற்ற தன்மையை சமாளித்தாக வேண்டும்.  சிலர் புகழ், பொருள் சம்பாதித்துக் கொண்டு உயர் நிலைக்கு வருகிறார்கள்.  மற்றவர் யாவரும் போராடி, மணவாழ்வு வாழ்ந்து மக்களைப் பெற்று இறுதியில் மடிந்து போகிறார்கள்.  அரசு கெட்டிக்காரர்களை நிர்வாகத்துக்கும், வல்லுனர்களை செயல்பாட்டுக்கும் விரும்புகிறது.  அது போக இருக்கவே இருக்கிறது ராணுவம், கோயில் அமைப்புகள், வாணிபம்.  உலகெங்கிலும் எங்கு பார்த்தாலும் இதுதான் நிலவரம்."

“ ஒரு தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்ளவும், ஒரு வேலையை சம்பாதித்துக் கொள்ளவும் தான் நாம் நம் மூளையை விவரங்களாலும், அறிவினாலும் நிரப்பிக் கொள்கிறோம் இல்லையா?  இந்த உலகில் ஒரு தொழில் நுணுக்கம் கற்றவர் வாழ்க்கையை கொஞ்சம் சௌகரியமாக வாழ முடியும் என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால் வாழ்க்கையில் சவால்களை தொழில் நுட்பம் அறிந்த ஒருவர் அவ்வாறான நுட்பம் ஏதும் அறியாதவரை விட நன்றாக சமாளிக்க முடியுமா?  ஜீவனோபாயமான தொழில் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான். நுணுக்கமான, கண்ணுக்குப் புலப்படாத, மர்மம் நிறைந்த இன்னும் எவ்வளவோ வாழ்க்கையில் இருக்கிறது. வாழ்க்கையின் ஒரு அம்சத்துக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பேணி வளர்த்துக் கொண்டு, மற்ற ஒன்றை மறுப்பதோ, உதாசீனப் படுத்துவதோ ஏறுமாறான கோணல் வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.  நாளுக்கு நாள் குழப்பமும், மோதல்களும், துயரமும் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் பார்க்கிறோம்.  விதி விலக்காக வெகு சிலர் மனிதனால் ஆக்கப் படாத படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆனந்தம் மிக்கவர்களாக, மனம் படைக்கும் மாயங்களை சார்ந்திராதவர்களாக வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்."

“ நீங்களும் நானும், காலத்தின் பிடியில் சிக்குறாது, அடிப்படையில் களிப்புடன், ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கும் திறன் கொண்டவர்கள் தான்.  படைப்பாற்றல் மிகுந்த ஆனந்தக் களிப்பென்பது வெகு சிலருக்காக மட்டும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒன்றல்ல.  பின் அதை ஏன் பெரும்பாலானவர்கள் அறிவதில்லை? சூழ்நிலைகளையும் விபத்துக்களையும் மீறி ஆற்றல் மிக்க ‘ஒன்றுடன்’ இசைந்திருப்பது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் கைவரப் பட்டதாகத் தெரிகிறது?  ஏன் மற்றவர்கள் சூழ் நிலைக்கும் விபத்துக்கும் ஆளாகி அழிகிறார்கள்?  அறிவுச் சேமிப்புக்கு அப்பால், சிலர் மட்டும்தான் யாராலும், எதனாலும் அளிக்கப் பட முடியாத ‘அந்த ஒன்றுக்காக’ கதவைத் திறந்து வைக்கிறார்கள்.  மற்ற பலரும் அதிகாரவர்க்கத்தினாலும், தேடி அலையும் தொழில் நுட்பங்களினாலும் அடிபட்டு மிதி பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்.  ஏன் இப்படி?  மனம் எதையோ தேடி அலைந்து பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று திண்டாடுகிறது.  இன்னும் பெரியதும் ஆழமானதுமான மற்ற பலவற்றை அது கண்டுகொள்வதில்லை.  காரணம் மனம் எப்போதும் முன்பே பரிசீலிக்கப் பட்டு நல்லதென கண்டறியப் பட்ட எதனாலும் பாதுகாப்பை உணர்கிறது.  அதனால்தான் எப்போதும் கல்வி, கற்றுக்கொள்தல், தொழில் நுட்பம் என்று மேலும் மேலும் முனைந்து தேடிப்பெறுவதில் ஆர்வம் மிகக் கொள்வதுடன், அதைத் தாண்டிச் செல்லாதிருப்பதற்கு நொண்டிச் சாக்குகளைத் தேடிக் கொள்கிறது."

”கல்வி எனும் மாசு படிவதற்கு முன்னால், பல குழந்தைகள் ‘அந்த அறிந்திராத ஒன்றுடன் ‘ தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பல வழிகளிலும் அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.  ஆனால் விரைவிலேயே, சுற்றுச் சூழ் நிலை அவர்களை வெகுவாக ஆட்கொள்கிறது.  அவர்கள் தம் ஒளியை இழக்கிறார்கள்.  எந்த நூலிலும் எந்தப் பள்ளியிலும் காண முடியாத ஒரு அழகை அவர்கள் இழக்கிறார்கள்.  ஏன் இப்படி?  வாழ்க்கையின் சவால்கள் அவர்கள் சக்திக்கு மீறியதாக இருக்கின்றன என்று சொல்லாதீர்கள்.  உண்மை நிலையை அவர்கள் எதிர் கொண்டாக வேண்டித்தான் இருக்கிறது என்று சொல்லாதீர்கள்.  அவர்கள் பூர்வ ஜன்ம கர்மம் அல்லது முந்தையோர் வினை என்று சொல்லாதீர்கள்.  இதெல்லாம் சுத்த அபத்தம்.  படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது எல்லாருக்கும் பொது.  அது கடைச் சரக்காக விற்கப் படுவதல்ல. அதற்கு மார்க்கெட் மதிப்பு ஏதும் இல்லை.  மிக அதிக விலை தருபவருக்கு விற்பனை செய்யக் கூடிய சரக்கு இல்லை அது.  ஆனாலும் அது எல்லாரும் பெறக் கூடியதே."

”படைப்பாற்றல் மிக்க மகிழ்வு என்பது அடையக் கூடியதா?  அதாவது மனம் ஆனந்தத்தில் ஊற்றுக் கண்ணை அடைய இயலுமா?  வாழ்க்கையின் நெருக்கடிகளையும் அறிவுத் திணிப்புகளையும் மீறி திறந்த மனத்தை உடைய பாங்கு இருக்க முடியுமா?  கற்பிப்பவர் இந்த உண்மைகளைக் கற்கிறவராக மாறினால் இது சாத்தியம் தான்.  கற்பிப்பவர் தானே இந்த படைப்பாற்றல் மிக்க ஆனந்தத்தில் திளைப்பவராக இருப்பின் அது சாத்தியம்.  எனவே நமது பிரச்சினை குழந்தை அல்ல. அதற்குக் கற்றுக் கொடுப்பவரும், அதனுடைய பெற்றோரும்தான்.  இந்த ஆனந்தத்தின் உயர் நிலையை நாம் அறிந்திராத வரையில், கல்வியும் கற்பித்தலும் ஒரு நச்சு வளையமாகவே இருக்கும்.  ஆனந்தத்தின் ஊற்றுக் கண்ணை தொடர்பு கொண்டிருத்தல் என்பது சமயத்தின் உச்ச கட்டமாக இருக்கும்.  ஆனால் அதை அறிய, நீங்கள் உங்கள் தொழிலுக்கு எவ்வளவு கவனத்தைச் செலவிடுகிறீர்களோ அதே அளவு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.  ஆசிரியரின் பணி என்பது சாதாரண சம்பாத்திய சாமர்த்தியம் அல்ல.  அழகையும் ஆனந்தத்தையும் அறிவித்தலாகும்.  அதை சாதனையாக / வெற்றியாக கணக்கிட முடியாது." 


”நிதரிசனத்தின் ஒளியும் அது விளைவிக்கும் ஆனந்தமும் மனம் தன்முனைப்புப் பெறும் போது அழிந்து போகின்றன.  தன்னைப் பற்றி அறிதல் விவேகத்தின் தொடக்கமாகும்.  தன்னைப் பற்றிய அறிதல் இல்லாதபோது கற்றல் என்பது அறியாமைக்கும், கலகத்துக்கும், துயருக்கும் வழிசெய்கிறது.” 

11 கருத்துகள்:

 1. ////தன்னைப் பற்றி அறிதல் விவேகத்தின் தொடக்கமாகும். தன்னைப் பற்றிய அறிதல் இல்லாதபோது கற்றல் என்பது அறியாமைக்கும், கலகத்துக்கும், துயருக்கும் வழிசெய்கிறது.”////

  ...... நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு வரிகளிலும், மறைமுகமாய் வாழ்க்கையை குறித்த மறுபக்கத்தை அறிய முடிகிறது.

  பதிலளிநீக்கு
 3. சுவராசிமாய் இருக்கிறது,
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமை! எல்லோரும் இதை படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவர் கருத்துக்கள் எல்லாமே மனதை தொடும் பொன் மொழிகளாக இருக்கின்றது. இதில் உண்மை இருந்தும் சில விஷயங்களை நடை முறைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். ஒரு புரட்சிதான் செய்யவேண்டும், ஏனென்றால் மதம் சார்ந்த நம் சமுதாயத்தின் அடிப்படை விதிகளை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது.

  //தன்னைப் பற்றிய அறிதல் இல்லாதபோது கற்றல் என்பது அறியாமைக்கும், கலகத்துக்கும், துயருக்கும் வழிசெய்கிறது.//
  முற்றிலும் உண்மை. படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் என்னும் நடத்தையில் உள்ள எவ்வளவு பேரை பார்க்கிறோம்.

  மிக்க நன்றி! தொடருங்கள்.......

  பதிலளிநீக்கு
 5. முத்துவேல் அவர்களின் வினாவிற்கு, விரைவில், வேறொரு பதிவில், ஜே கே அவர்கள் தன்னைப் பற்றி தான் அறியும் வகையாக கூறியிருப்பதை, பதிவிடுவோம் என்பதை உறுதி கூறுகிறோம்.

  பதிலளிநீக்கு
 6. //புரிந்து கொள்ள சிரமம் என்று எண்ணப்படும் பகுதிகளை கொஞ்சம் வேறு மாதிரி சொல்ல முயற்சிப்போம்//

  சுத்தமா என்னைமாதிரி மகா மண்டுக்களுக்கு கொஞ்சம் நாள் "எங்கள் ப்ளாக்" லீவு கிடைக்குமா ? ஏன் என்றால் நான் படிக்காமல் எஸ்கேப் செய்தாலும் என் பெண்டாட்டி படித்து விட்டு "நான் யார், நீ யார்" அல்லது "என்னை தெரியுமா - உன்னை தெரியுமா" என்று பாடாய் (பாடல்) பாடும் நிலைக்கு கொண்டு வந்து வைத்து விட்டீர்கள் !

  பதிலளிநீக்கு
 7. //கல்வி எனும் மாசு படிவதற்கு முன்னால், பல குழந்தைகள் ‘அந்த அறிந்திராத ஒன்றுடன் ‘ தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதைப் பல வழிகளிலும் அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள். ஆனால் விரைவிலேயே, சுற்றுச் சூழ் நிலை அவர்களை வெகுவாக ஆட்கொள்கிறது. அவர்கள் தம் ஒளியை இழக்கிறார்கள். எந்த நூலிலும் எந்தப் பள்ளியிலும் காண முடியாத ஒரு அழகை அவர்கள் இழக்கிறார்கள். //
  ஆசிரியர்களும் பெற்றோரும் படிக்க வேண்டிய வரிகள். நம் கல்வி முறை இப்படி இருந்தால் ஆசிரியர்களால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும் கொஞ்சமாவது முயற்சி செய்யலாம்.--கீதா

  பதிலளிநீக்கு
 8. கல்வியே மாசு என்று கூறித் தப்பித்துப் போவது ஜே கே போன்றோருக்கு முடியலாம். நம் போன்ற சாமானியருக்கு ?

  பதிலளிநீக்கு
 9. //அரசு கெட்டிக்காரர்களை நிர்வாகத்துக்கும், வல்லுனர்களை செயல்பாட்டுக்கும் விரும்புகிறது. //

  very utopian assumption this is.

  பதிலளிநீக்கு
 10. சூழ்நிலைகளையும் விபத்துக்களையும் மீறி ஆற்றல் மிக்க ‘ஒன்றுடன்’ இசைந்திருப்பது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் கைவரப் பட்டதாகத் தெரிகிறது? //

  எண்ணம் போல் வாழ்வு என்பது எவ்வளவு உண்மை இங்கு

  நல்ல பகிர்வு நன்றி ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!