செவ்வாய், 27 மார்ச், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : ஜனனி - ரிஷபன்- ஜனனி -
- ரிஷபன் -   


தொலைபேசி கூட இல்லாத நாட்கள் அவை.  ஒரு கார்ட் வரும். 'இந்த ஞாயிறு சந்திக்கலாமா'

பதில் கார்ட் போட்டு உறுதி செய்ய வேண்டும் உடனே.  நடுவில் விடுமுறை தினம் வந்து விட்டால் தகவல் போகாது. 

மூர்த்தியின் கார்டில் அதே போல் ஒற்றை வரி. 'சந்திக்கலாமா ?'

கூடவே ஒரு கார்ட்டூனும். அவனால் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

பின்னாளில் ஒரு முறை பத்திரத்தில் இதே போல் பின்பக்கம் கேலிச் சித்திரம் வரையப் போக.. பதிவு செய்யப் போனபோது..  சார்பதிவாளர் கண்டபடி வைதார்.  நல்லவேளை..  வாசலில் இருந்த டைப்பிஸ்ட் பத்திரமும் கொடுத்து..  டைப்பும் அவசரமாய் செய்து தந்தார்.

வாங்கி ஒளித்து வைத்திருந்த கார்டில் ' வா' என்று எழுதி.. அடையவளைந்தான் ஹெட் ஆபிஸ் வாசல் தபால் பெட்டியில் போட்டுத் திரும்பும் போது..

ஜனனியைப் பார்த்தேன்.

அவசரப்பட வேண்டாம்.  நாற்பது..  நாற்பத்தைந்து வயதிருக்கும் ஆண். லா.ச.ரா கதையில் பாதிக்கப்பட்டு தன் புனைபெயரை ஜனனி என்று வைத்துக் கொண்டார்.

என் கிறுக்கலில் ஏதோ ஒன்று அவருக்கு பிடித்துப் போனதில் வளரும் கலைஞராக அங்கீகரித்தார்.

" வணக்கம் ஸார்"

" ம்ம்" அவர் குரலில் அத்தனை சுரத்தில்லை

"மூர்த்தி இந்த வாரம் வரேன்னு சொல்லியிருக்கான் .. வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரவா"

போன தடவை இப்படி அழைத்துப் போய் சோறு தண்ணி மறந்து அரட்டை மாலை வரை நீடித்தது. ஜனனியின் பெண் மூவருக்கும் கொண்டு வந்து கொடுத்த ஃபில்டர் காபிதான் அன்றைய பகல் ஆகாரம்.

" தம்பி" என்றார் இறுக்கமாக.

" என்ன ஸார்"

" வீட்டுப்பக்கம் வரதா இருந்தா..  நீ மட்டும் வா..  என்னிக்கா இருந்தாலும்"

"ஸா..ர்"

போய்விட்டார். என்னாச்சு.. ஏன் இப்படிப் பேசி விட்டுப் போகிறார்.. குழம்பியது தான் மிச்சம்.

ஒரு வருடத்திற்கு மேலாகிறது அவர் அறிமுகம் கிட்டி. ஒரு இலக்கிய நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்தோம். என் கையில் இருந்த புத்தகத்தை வெகு நேரமாய்க் கவனித்திருந்தார். கடைசியில் கேட்டே விட்டார்.

' பார்க்கலாமா'

கொடுத்தேன். லைப்ரரி புத்தகம் தான். 

' இதைத்தான் ரொம்ப நாளா தேடிகிட்டிருந்தேன். '

' படிச்சுட்டு தாங்க' என்றேன் உடனே.

அது அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. வீட்டு விலாசம் சொன்னார். போனேன். அவருக்கு ஒரே பெண். மனைவி இல்லை. 

என்னைப் பார்த்ததும் ' அண்ணா' என்றாள். பெரியப்பா மகன் ஜாடையில் நானாம். சொன்னதும் இவரும் மறுபடி என்னை உற்றுப் பார்த்து..  அட.. ஆமா என்றார். என் மீதான ப்ரியம் இரட்டிப்பாகி விட்டது.

ஒவ்வொரு ஞாயிறும் கட்டாயம் எங்கள் சந்திப்பு உண்டு.  ஒரு காபி நிச்சயம். ஆனால் இன்றைய அவரது முகம்.. இதுவே முதல் முறை இப்படி நான் அவரைப் பார்ப்பது.

ஞாயிறு ஒன்பது மணிக்கே மூர்த்தி வந்து விட்டான். வந்தது முதல் ஒரே பரபரப்பு அவனிடம். 

" காபி குடிக்கிறியா" என்றேன்.

" ஜனனி வீட்டுல குடிச்சுக்கலாம்"

அவர் வீட்டுலயா.. 

"வ.. ந்து..  அவர் ஊர்ல இல்ல.. வீடு பூட்டியிருக்கு"

" என்ன உளர்றே... எதிர்ல பார்த்தேன் "

" ஊருக்குப் போய்கிட்டு இருக்காரோ என்னவோ.. நேத்தே சொன்னாரே"

" வேட்டி துண்டோட யார்டா ஊருக்குப் போவாங்க .."

" இல்லடா.. அவர் வீட்டுல ஏதோ பிரச்னை.. பதட்டமா இருந்தாரே.. இன்னிக்கு யாரையும் பார்க்க முடியாதுன்னு சொன்னாரே"

"ஓ.." என்றான் அதிருப்தியாய். வந்தபோது இருந்த உற்சாகம் வடிந்து விட்டது.

" சரி.. வா.. லைப்ரரிக்குப் போலாம்" என்றேன்.

அரை மனதாய்க் கிளம்பினான். பஸ் ஸ்டாப் அருகில் தான் லைப்ரரி. எதிரில் வந்த பேருந்தைப் பார்த்ததும் .. "எனக்கு ஒரு அவசர வேலை இருக்குடா" என்று சொல்லித் தாவி ஏறி டாட்டா காட்டினான்.

இரண்டு நாட்கள் கழித்து..  ஜனனி வீட்டைக் கடந்து போனேன். திண்ணையில் இருந்தார்.

" என்ன தம்பி.. நிக்காம போறீங்க"

" கவனிக்கல " என்றேன் பொய்யாய்.

" இந்த மாசம் கதை படிச்சீங்களா. "

மாத இதழைப் பிரித்துக் காட்டினார்.  என் மனம் மாறி விட்டது. பூரிப்பானேன்.

" யப்பா.. என்ன எழுத்து.. செம்பருத்திப்பூ இருட்டுல ஜ்வாலை ஆடினமாதிரின்னு சொல்லியிருந்தாரே.. "

பேச்சு வளர்ந்து கொண்டே போனது. ஜனனியின் பெண் காபி கொண்டு வந்தாள்.

" எடுத்துக்குங்க" என்றார். 

"ஒண்ணும் வருத்தம் இல்லீல்ல..  அந்தத் தம்பியைக் கூட்டிகிட்டு வராதீங்கன்னு சொன்னதுல "

" ம்ஹும்.. ஆனா வந்து.. அது ஏன்னுதான் புரியல"

" போவுது விடுங்க.. போன வாரம்.. ஜ்வாலா வாங்கினேன்..  நான் படிச்சுட்டேன்.. நீங்க படிச்சுட்டு தாங்க ..."

பெண்ணை அழைத்து புத்தகத்தைக் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்தவளின் கையில் இரண்டு புத்தகங்கள். இன்னொன்று அவள் பாடப் புத்தகம். 

வாங்கி என்னிடம் கொடுத்தார். 

" அவசரம் இல்ல.. நிதானமாப் படிச்சுட்டு கொடுங்க"

கிளம்பும்போது.. அவள் பாடப் புத்தக பின்னட்டை கண்ணில் பட்டது.

கேலிச்சித்திரம் !

60 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஹை! ரிஷபன் அண்ணாவின் கதை...வாசிக்கிறேன்...இன்று 7 மணிக்கு ஒரு பிறந்தநாள் விழா...ஒருவயது பூர்த்தி...போகணும்...கிளம்ப்க்கிட்டுருக்கேன்..ஸோ வந்து நிதானமா வாசிக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ரிஷபன் ஸார். உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சிலருக்கு சில பழக்கங்கள் கடைசிவரை நிற்காது போல...

  பதிலளிநீக்கு
 5. "ஒண்ணும் வருத்தம் இல்லீல்ல.. அந்தத் தம்பியைக் கூட்டிகிட்டு வராதீங்கன்னு சொன்னதுல "
  ம்ஹும்.. ஆனா வந்து.. அது ஏன்னுதான் புரியல"//

  நிறைவு பகுதியில் வந்த கேலிச்சித்திரம் சொல்லாமல் சொல்லிவிட்டது.
  இப்போது புரிந்து இருக்கும்.

  அருமையான கதை.

  பதிலளிநீக்கு
 6. சொல்லாமல் சொல்வதில்தான் ரசம் அதிகம். ரசித்தேன் கேலி சித்திரத்தை.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம்.

  ரிஷபன் ஜியின் கதை - அவரது பாணியில்.... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. ஏதும் அசம்பாவிதம் நடந்திடுமோ எனப் பயந்துகொண்டே படிச்சுக்கொண்டு வந்தேன்.. மிக அருமை. ஆரம்பம் முதல் முடிவுவரை அனைத்து உரையாடல்களும் சுவாரஷ்யம்.

  பதிலளிநீக்கு
 9. ’சுருக்’ கதை புனைவதில் ரிஷபன் வல்லவர் எனத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 10. நறுக்கென்று புரிய வைத்துவிட்டார் ரிஷபன் அண்ணா கடைசியில் அந்தக் கேலிச்சித்திரத்தைக் காட்டி..ரொம்ப ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. ம்ம்ம்ம் கேலிச் சித்திரம்! ரசிக்கும் மனோநிலையில் "ஜனனி" இல்லை! :) அருமையான கதை! எப்போதும் போல் ரிஷபன் அவர்களின் பஞ்ச்! :)))) சொல்லாமல் சொல்லும் திறமை!

  பதிலளிநீக்கு
 12. ஸ்கூல் / காலேஜ் படிச்ச காலத்துல எக்ஸாம்-ஆன்சர் பேப்பர்கள்ல என்னென்ன கேலிக் சித்திரம்லாம் வரைஞ்சாரோ..!

  பதிலளிநீக்கு
 13. //ஸ்கூல் / காலேஜ் படிச்ச காலத்துல எக்ஸாம்-ஆன்சர் பேப்பர்கள்ல என்னென்ன கேலிக் சித்திரம்லாம் வரைஞ்சாரோ..!// துப்பறியும் சாம்பு கதை நினைவில் வந்தது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா.. அது தெரியவில்லை.
   து. சா.. அருமையான கதையாச்சே

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  கதை அருமை. வார்த்தைகள் அளந்து விறுவிறுப்பாகச் சென்றது. சூப்பர். கதை எழுதிய ரிஷபன் சார் அவர்களுக்கும், பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. ரிஷபன் நல்ல எழுத்தாளர் அவர் கதைபற்றி கருத்துக் கூற முடிவதில்லை இருந்தாலும் லசரா வின் தாக்கமோ கொஞ்சம் அப்ஸ்ட்ராக்டாக இருப்பதுபோல் தெரிந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதிப்பில்லாமல் இருக்க முடியாது தானே.. என்ன முயற்சித்தாலும்.
   நன்றி

   நீக்கு
 16. சில சமயம் 'இதுதான்' என்று தெளிவாக புரிந்துகொள்ளமுடிவதில்லை. இது கதாசிரியரின் விருப்பமா அல்லது பலமாதிரி புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறாரா?

  1. கேலிச் சித்திரம் - இது ஒருவேளை ஜனனியின் முகம் மாதிரி வரைந்து அவரைப் புண்படுத்தியதா? எனக்கு அப்படித் தோன்றவில்லை.
  2. இலக்கியம் பேச வந்துவிட்டு, அவரின் பெண்ணைப் பார்க்கத் தொடங்கிவிட்டதுதான் ஜனனி, மூர்த்திக்குத் தடா போட்டதன் காரணம். இதைத்தான் நான் புரிந்துகொண்டேன்.

  கதாசிரியர் விளக்கம் சொன்னால் தேவலை. (போன முறை எழுதிய கதைக்கும் எனக்கு இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்னு தோணித்து)

  வெறும் கான்வர்சேஷனில் கதை செல்வதை மிகவும் ரசித்தேன். சிறிய விஷயங்களையும் எடுத்துக்கொண்டு கதை புனைந்துவிடுகிறார் ரிஷபன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலருடன் பழக நேர்ந்ததும் பெண்ணைக் கொடுத்து உறவாக்கிக் கொள்வார்கள்.
   சிலரை நட்பின் எல்லையிலேயே வைத்திருக்க முயல்வார்கள்.
   அவரவர் விருப்பத்தில். இல்லையா..

   ஜனனி சொல்லாததை ஆசிரியர் எப்படிச் சொல்ல. நானும் உங்களைப் போலவே தான் நினைத்துக் கொண்டேன்

   நீக்கு
 17. கேலிச்சித்திரம்..

  கதையின் கடைசி வரி இதுதான் ஆனாலும் புதிய கதையைத் தொடங்கி வைப்பதுவும் அதுவே...

  திரு.ரிஷபன் அவர்களின்
  கைவண்ணமே தனி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கதைகள் எல்லாமே முற்றுப் பெறுவதில்லை எப்போதும்.
   ரயில் பயணம் போல ஒரு விதத்தில். இடைப்பட்ட நிலையங்களில் ஏறி இறங்கும் மனிதர்கள் போல. முழுமையான கதை என்று ஏதுமில்லை. நன்றி

   நீக்கு
 18. //இலக்கியம் பேச வந்துவிட்டு, அவரின் பெண்ணைப் பார்க்கத் தொடங்கிவிட்டதுதான் ஜனனி, மூர்த்திக்குத் தடா போட்டதன் காரணம். இதைத்தான் நான் புரிந்துகொண்டேன்.// நானும்! :) அதான் ஜனனியை கேலிச்சித்திரமாக வரைந்ததை/அல்லது அவர் பெண்ணை(?) ஜனனியால் ரசிக்க முடியலை என்று தோன்றியது!

  பதிலளிநீக்கு
 19. து.சா.வில் ஒரு கலெக்டரின் வழக்கு சம்பந்தமான கவர்களில் கிளி மூக்கு வரைவார் சாம்பு. அதன் மூலம் கலெக்டரே உண்மையான குற்றவாளி எனத் தெரியவரும். அதான் நினைவில் வந்தது. :)))

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு நேர்ந்த அனுபவம் நினைவுக்கு வந்தது. நான் வேலை பார்க்க ஆரம்பித்த புதிதில், அது ஒரு குடியிருப்புகள், ஃபேக்டரி என்று முழுவதும் ஒரே காம்பவுன்டில் இருக்கும் கம்பெனி (பல ஹெக்டேர்கள்). வேறொரு துறை மேனேஜர் என்னிடம் வந்து, கம்ப்யூட்டர் சம்பந்தமான 3 பக்க கேள்வித்தாளைக் கொடுத்துவிட்டு விடை என்ன எழுதறதுன்னு எழுதிக் கொடுக்கச் சொன்னார். அவருடைய பெண்ணிடம், விளக்கம் சொல்லாமல் எழுதுவதில் பிரயோசனம் இல்லை, அப்போதுதான் ஒரு கேள்விக்கு பலவிதமாக விடைகளை அப்ரோச் செய்யலாம் என்பதைச் சொல்லிக்கொடுக்க இயலும் என்று சொன்னேன். அதற்கு அவர், அப்படீன்னா எழுதித்தரவேண்டாம் என்று சொல்லி கேள்வித் தாளை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அவருடைய சென்சிடிவிடி அப்போது எனக்கு அவ்வளவு ஆச்சர்யமா இருந்தது. எனக்கு ஃபேக்டரில, இவன் எந்தப் பெண்ணிடமும் பேசமாட்டான், அப்படியே பேசணும் என்றால், மூன்றாவது மனுஷன் கண்டிப்பா அங்க இருந்தால்தான் பேசுவேன் என்பான், என்ற இமேஜ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவர் பழக்கம்.
   ஏதேனும் ஒரு காரணம் உள்ளோட்டமாய்

   நீக்கு
 22. உறவினர் ஒருவரின் வீட்டிற்கு யதேச்சையாக செல்வது உண்டு. அவரின் மகள் என்னிடம் அன்பாகவம் உபசரணையாகவும் பேசுவாள். ஒரு நாள் நண்பர் ஒருவரையும் அழைத்து கொண்டு சென்றேன். என்ன நடந்ததென்று தெரியாது. மறுதடவை செல்லும்போது, உறவினர் மகள், பாராமுகமாய் இருந்தாள். உறவினர் என்னிடம் பேசி வழியனுப்பி வைத்தார். என்ன நடந்ததென்று நண்பரும் சொல்லவில்லை. அது நினைவுக்கு வந்த து. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹப்பா.. இப்போது தான் நிம்மதி.
   சில விஷயங்களில் போட்டு உடைத்தால் சரிவராது.
   இது தப்பு இது சரி என்று தீர்மானிப்பதில் அவரவர் உரிமையே

   நீக்கு
 23. ஒருகாலத்தில் வயதுப்பெண்கள் வீட்டிலிருந்தால் , வாலிபப்பருவ ஆண்கள் உறவுக்காரர்களே ஆனாலும் அவர்கள் வீட்டிற்கு வருவதையே விரும்பாத அப்பா,அம்மாக்களும் இருந்தார்கள். கேலிச்சித்திரம் அணைபோட வைத்துவிட்டது. ஜனனி ஸரியான அப்பா. அழகிய கதை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 24. என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்கள் எழுதிய கதை என்றதும் ஓடோடி வந்தேன்.

  முதல் எழு பத்திகளில் (பத்தி என்றும் சொல்ல முடியாத ஏழே எழு வரிகளில்) எனக்குள் சுமார் ஏழு காதல் கதைகளைக் கற்பனை செய்ய வைத்து, பின் என்னை ஏமாற்றியது ....... அந்த எட்டாம் பத்தி (Paragraph).

  ஓவியர் கோபுலுவின் கேலிச் சித்திரங்களில் விஷயம் ஏதும் விளக்கப்பட்டிருக்காது. நாமே அதனைப் பார்ப்போம் ..... உடனே புன்னகைப்போம். :)

  அது போலவே திரு. ரிஷபன் ஸாரின் எழுத்துக்களும்/கதைகளும், சும்மா தந்தியில் உள்ள வரிகள் போல, மிகச் சுருக்கமாகத் தட்டப்பட்டு போய்க்கொண்டே இருக்கும்.

  சொல்லாத சொல்லுக்கு ......
  விலையேதும் இல்லை .......
  விலையேதும் இல்லை!

  என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  அன்புடன்
  வீ...........ஜீ

  பதிலளிநீக்கு
 25. ரிஷபன் ஜி யின் பன்ச் பிரமாதம்.
  அம்மா இல்லாத பெண்ணை,ஒரு அப்பா எப்படிக் காப்பாற்றுவது என்பதே
  பெரிய சிரமம். கேள்விக்குறியான கேலிச்சித்திரம். தொடர்ந்ததோ முடிந்ததோ.

  பதிலளிநீக்கு
 26. கேலிச்சித்திரம். நச்சென்ற முடிவு. வாழ்த்துகள். கதாசிரியருக்கும், பகிர்ந்த உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 27. நன்று...மிக எளிய கதை....

  சிறு நிகழ்வுகளும் கதைகளாகும் மாயம் இங்கு...அருமை

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!