செவ்வாய், 23 ஜூன், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  அப்பனும் அம்மையும் - துரை செல்வராஜூ 

அப்பனும் அம்மையும்

துரை செல்வராஜூ 

===================

ஸ்ரீ காமாக்ஷி இல்லம்

மஞ்சளும் சிவப்புமாக பெயர்ப் பலகை...

ஆதரவற்ற முதியோரையும், அனாதையாக நிற்கும் பெண் பிள்ளைகளையும் ஆதரவுடன் அரவணைத்துக் கொண்டிருக்கும் அன்பு இல்லம்..

வாசலின் கம்பிக் கதவுகளுக்கு அந்தப் பக்கமாக பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்...

இவளைக் கண்டதும் - ''யாரம்மா பார்க்கணும்?... '' - என்றபடி புன்னகைத்தார்...

விவரம் சொன்னாள்...

'' ஓ!.. அவுங்களா!... இருங்க...  அம்மா...கிட்ட சொல்லிட்டு வர்றேன்... ''

எழுந்து அருகில் இருந்த அலுவலக அறைக்குள் நுழைந்தார்...

சில விநாடிகளில் மேற்பார்வையாளரான அந்த அம்மா தடிமனான கண்ணாடியுடன் வெளியே வந்தார்கள்...

'' அடையாள அட்டை கொண்டாந்திருக்கீங்களா?... ''

''இருக்கும்மா!...

அதை வாங்கிப் பார்த்தபடி கைக் கடிகாரத்தை நோக்கஅது 3: 25 என்று காட்டியது...

'' உள்ளே வந்து உக்காருங்க... வரச்சொல்றேன்!... '' - மீண்டும் அறைக்குள் சென்று விட்டார்..

வாசற் கதவின் திட்டி வாசலைத் திறந்து விட்டார் பெரியவர்...

புன்னகையுடன் உள்ளே நுழைந்த தங்கமணி கைப்பையில் இருந்து ரெண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக் கொடுத்தாள்...

'' சந்தோசம்... ம்மா!... '' - பெரியவரின் முகத்தில் புன்னகை...

அலுவலகப் பணியாளாரான இளம் பெண் - தான் எடுத்து வந்த கனத்த பேரேட்டில் விவரங்களை எழுதி தங்கமணியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டாள்...

அலுவலக அறையின் எதிர்ப்புறமாக பார்வையாளர் கூடம்...

விசாலமாக இருந்தது... வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த சுவர் முழுதும் மனதை இறை நெறியில் செலுத்தும்படியான தேவாரப் பாடல்கள் எழுதப்பட்டு கூடவே அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன...



ஆஞ்சநேயரைத் தழுவிக் கொண்டிருக்கும் ராமன்..  குசேலரை அணைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணன்..

                                   

சம்பந்தருக்கு ஞானப் பாலூட்டும் அம்பிகை... திருநாவுக்கரசருக்கு அன்னம் பாலிக்கும் சிவபிரான்..




ஔவையாருக்கு நாவற்பழம் உலுக்கி விடும் ஞானபண்டிதன்..  ஔவையாரைக் கயிலாயத்திற்கு ஏற்றி விடும் மகாகணபதி..

கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படிக்கு இருந்த - சித்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைச் சொல்லாமல் சொல்லிக்  கொண்டிருந்தன...

அந்தப் பக்கமாக புத்தம் புதிய மண் பானையும் எவர்சில்வர் குவளையும்..

ஒரு குவளை முகந்து குடித்தாள்.. புத்துணர்வு வந்த மாதிரி இருந்தது...

கூடத்திலிருந்து எவரும் சட்டென உள்ளே சென்று விடாதபடிக்கு இருந்த
சுழலும் கதவுக்கு அப்பால் -

அதோ... அக்கா தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்...

அக்கா - தங்கமணியின் பெரியம்மா மகள்...

நாற்பது வருசங்களுக்கு முன்னால் ஓகோ!.. - என்றில்லா விட்டாலும் நல்லபடியாக வாழ்ந்த குடும்பம்...

பதினெட்டு வயதில் கல்யாணம் ...

ஓராண்டைக் கடந்த நிலையில் என்ன என்று தெரியவில்லை..  வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவேயில்லை...

பதறிப் போன பெரியவர்கள் கண்ணீர் விட்டுக் கதறினார்கள்..  ஓடினார்கள்... ஊர் ஊராகச் சென்று தேடினார்கள்...

ஒரு தகவலும் தெரியாத நிலையில் - ஒருநாள் நள்ளிரவில் சாமக் கோடங்கி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் தேடும் படலத்தைக் கைவிட்டார்கள்...

மகளின் நிலை கண்டு துடித்த பெற்றோர் நொந்து அடுத்தடுத்து காலகதியடையவும் நிலைமை கேள்விக் குறியானது...

சொந்த பந்தங்கள் ஆதரவுக் கரம் நீட்டின... ஆனாலும்
யாரையும் அண்டியிருக்கக் கூடாது...சொந்தக் காலில் நிற்க வேண்டும்!..  - என்று மூண்டெழுந்த வைராக்கியம் மனதிலும் தோளிலும் ஆகி நிற்க - நாடார் மில்லில் தவிடு அள்ளிப் போடும் வேலை கிடைத்தது...

ஹல்லர் பெட்டியில் விழும் குறுநொய்யுடன் நாலணா கிடைக்கும்...  அதற்கு மேல் வாரச் சம்பளம் பதினைஞ்சு ரூபாய்...

''ரெண்டு வேளைக்கு இதுவே அதிகம்!.. '' - என்று ஒற்றைப் பனையாய் தனித்த தவ வாழ்வில் வயோதிகமும் வந்துற்றது...

அவ்வப்போது உடல் நலக்குறைவும் சேர்ந்து கொள்ள கூட இருந்து கவனித்துக் கொள்ளும்படிக்கு யாரும் அமையவில்லை..

அவரவர் வாழ்வே அவரவர்க்கு அவஸ்தையாகிப் போயிருக்கும் காலத்தில் இங்கு வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தானாகவே வந்து நின்றது..

காமாட்சி இல்லத்துக்கு வந்து ஆறு வருசம் ஆச்சு...

அவ்வப்போது தங்கமணியும் அவளது கணவன் குமரேசனும் பார்க்க வருவார்கள்...  பழங்கள் பலகாரங்கள் என்று கொண்டு வருவார்கள்..

தீபாவளி பொங்கல் என்று விசேச நாட்களில் வருந்தி அழைத்தாலும் கூட காமாட்சி இல்லத்தை விட்டு வெளியே வருவதில்லை...

இருந்தாலும் சேலை ரவிக்கை துண்டு போர்வை..ன்னு புதுசா வாங்கிக் கொடுத்துட்டு கால்..ல விழுந்து கும்பிட்டு விட்டுச் செல்வார்கள்...

அக்காவுக்கு இத்தனை வைராக்கியம் இருந்தாலும் மனசு மட்டும் பூ மாதிரி...

எல்லா நாளும் இங்கே மற்றவர்களுடன் '' உனக்கு நான் துணை.. எனக்கு நீ துணை!.. '' - என்று இருந்து விட்டு நல்ல நாள் பெரிய நாள் என்றால் மட்டும் சொந்தங்களத் தேடிப் போவது என்பதை விரும்புவதில்லை...

அந்த அளவுக்கு இரக்கப்படும் மனசு தங்கமணி வீட்டுக்குப் போவது என்பதை மட்டும் ஓரங்கட்டி வைப்பது ஏன் என்பது புரியாத புதிர்...

'' எனக்காவது நீங்க இருக்கீங்க!... ஆதரவு.. ன்னு யாருமே இல்லாத பெரியவங்களும்.. வயசுக்கு வந்த புள்ளைங்களும் இங்கே இருக்காங்க...  அவுங்க மனசெல்லாம் ஏங்கிடக்கூடாது தங்கமணி!... ''  - என்று புன்னகைத்துக் கொள்வார்... அவ்வளவுதான்...

அத்தகைய அக்கா இதோ அருகில்!...

மேலெல்லாம் நறுமணம்...

ஆதரவு இல்லத்தின் உள்ளேயே சிறு சிறு தொழிற் பிரிவுகள்...  அக்கா அதில் வாசனைத் திரவியங்கள் தூபப் பொடிகள் தயாரிக்கும் பிரிவில்
வேலை செய்கிறார்கள் போல இருக்கின்றது...

'' அக்கா!... '' - தழுதழுத்தபடி எழுந்தாள் தங்கமணி...

'' தங்கம்... நல்லாயிருக்கிறியா... குமரேசன் சௌக்கியமா... பவானி எப்படி இருக்கிறா?... ''  - என்றபடி முகத்தைத் துடைத்துக் கொள்வதாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அக்கா...

'' எல்லாரும் நல்லா இருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க?...  வர்ற மாசி பதினாலு பவானிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம்...  மாப்பிள்ளை பெரிய மார்க்கெட்..ல காய்கறிக் கடை வச்சிருக்கார்..  உங்க கொழுந்தனார் நேர்ல வந்து உங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும்..ன்னு இருந்தாங்க... ''

'' தை கடைசி வெள்ளி... குத்து விளக்கு பூஜை..ன்னு மதுர..யில இருந்து
ஆயிரத்தெட்டு குத்து விளக்குக்கு ஆர்டர் வந்ததும் அண்ணாச்சி இவங்களையே டெலிவரி கொடுக்கச் சொல்லி லாரியோட அனுப்பி வச்சிட்டாங்க... முதலாளி பேச்சை மீற முடியுமா... ''

'' அவங்களை அந்தப் பக்கம் அனுப்பி வச்சிட்டு நான் இங்கே கிளம்பி வந்திருக்கேன்... நேத்து தான் ஐயனாரு கோயிலுக்கும் முனீஸ்வரன் கோயிலுக்கும் பாக்கு வச்சோம்... உறவு முறையில உங்களுக்குத் தான் முதல் தாம்பூலம்!... ''.

கையுடன் கொண்டு வந்திருந்த பையிலிருந்த பித்தளைத் தட்டை எடுத்து கல்யாண அழைப்பிதழுடன் தாம்பூலமும் பதினொரு ரூபாயும் வைத்து  பணிவுடன் நீட்டினாள் தங்கமணி...

'' தனிக்கட்டை.. எனக்கெதுக்கு இந்த மரியாதை எல்லாம்?.. '' - என்றபடி அழைப்பிதழையும் தாம்பூலத்தையும் எடுத்துக் கொண்டு பணத்தை தங்கமணியிடமே திருப்பிக் கொடுத்தார் அக்கா...

'' பவானி பெரிவளான சடங்குக்கும் நீங்க வரலை.. இப்போ நீங்க வந்தே தீரணும்...ன்னு பவானி ஒத்தக் கால்ல.. நிக்கிறா... பெரிய மனசு பண்ணனும்நீங்க!.. ''  - என்றபடி கும்பிட்டாள் தங்கமணி...

'' இங்கே வந்து சேர்ந்துக்கணும்..ன்னு நீங்களா விருப்பப்பட்டீங்க...  அந்த நேரத்துல உங்களத் தடுத்து ஆதரவு பண்ண எங்களுக்கும் முடியவில்லை...  இதெல்லாம் ஏதோ கிரக கோளாறு தான்... எதையும் பெருசா எடுத்துக்காம பவானி கல்யாணத்துக்கு நீங்க அவசியம் வந்து புள்ளைங்களுக்கு திருநீறு பூசி விடணும்... ''

தங்கமணியின் கண்களில் நீர் வழிந்தது...

'' அடடா... என்னது?... தங்கம்!...'' - அக்காவிடம் அதிர்ச்சி...

''உங்களை நீங்களே ஏங்..க்கா வருத்திக்கிறீங்க?... அடுத்தவங்க சந்தோஷம்..  அடுத்தவங்க சந்தோஷம்.. ந்னு ஆசைப்படுறது தான் உங்களோட சந்தோஷமா?.. ''

'' அது கற்பூரமாக் கரைஞ்சுதான் நாப்பது வருசமாச்சே தங்கம்!..  நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே.... நான் பவானி கல்யாணத்துக்கு கண்டிப்பா வர்றேன்...  கல்யாணத்துக்கு மூணு நாளைக்கு முன்னால இங்கே வந்து மனு எழுதிக் கொடு.. அனுப்பி வைப்பாங்க... ''

'' அக்கா... '' - என்று கட்டிக் கொண்டாள் தங்கமணி...

'' அப்புறம் இன்னொரு சேதி... ''

'' சொல்லுங்க அக்கா?... ''

'' இங்கே வயசானவங்களும் வயசுப் பிள்ளைங்களுமா நாப்பத்தைஞ்சு பேர் இருக்கிறோம்.... கல்யாணத்துக்கு அப்புறம் ஒருநாள் வந்து எல்லாருக்கும் மத்தியான சாப்பாடு செய்யணும்... ஏழைங்க மனசு நெறைஞ்சா எல்லாம் நல்லபடியா நடக்கும்!... ''

'' அப்படியே செய்றேங்..க்கா!.. '' - தங்கமணியின் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம்..

'' சரி ... நீ பொழுதோட கிளம்பு... இதை கைச்செலவுக்கு வச்சுக்க!... ''

- என்றபடி இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து பணச்சுருளை வெளியில் எடுத்தாள்...

'' இதெல்லாம் வேணாங்..கா!.. '' சட்டென மறுத்தாள் தங்கமணி...

'' இது இங்கே வேலை செய்றதுக்காக அவுங்க கொடுத்திருக்கிற சம்பளம்...  நான் வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறேன்... ''

'' இருக்கட்டுங்..க்கா!.. இந்தப் பணத்தை இங்கே இருக்கிற வயசுப் புள்ளைங்க தேவைக்கு ஆகட்டும்..ன்னு இங்கேயே கொடுத்துடுங்க அக்கா!... ''

'' தங்கம்... அஞ்சாறு வருசமா எனக்குக் கிடைச்ச சம்பளத்தையெல்லாம் மூணு பங்கா பிரிச்சு புள்ளைங்க படிப்புச் செலவுக்கும் வயசானவங்க வைத்திய செலவுக்கும்.. ன்னு கொடுத்துக்கிட்டு தான் இருக்கேன்... இது பவானிக்கு..ன்னு நான் சேர்த்து வைச்சது... ''

'' எம் மனசுல பட்டதை நான் சொல்றேன்...  இந்தப் பணத்தையும் அவுங்களுக்கே கொடுத்துடுங்க...  புண்னியத்தோட புண்ணியமா இருக்கும்!... ''

'' உங்களக் காரணப் பிறவி.. ன்னும் உங்களோட அறுபதாவது வயசுல தான் பிரிஞ்சு போன மாமா திரும்பி வருவார்..ன்னும் சாமக் கோடாங்கி வாக்கு சொன்னதா சொன்னாங்களே... ''

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்ட தங்கமணி தொடர்ந்தாள்...

'' அது சாமி சத்தியமா நடந்தே தீரும்!... ''

'' அந்தப் பெரிய வீடும் கடையும் வாடகைக்கு விட்டு அதை அப்படியே பேங்குல போட்டு வச்சிருக்கோம்... நல்ல காலம் திரும்பி வந்ததும் மாமாவும் நீங்களும் இந்த மாதிரி தர்மம் பண்ண மாட்டீங்களா!...  அப்பனும் ஆத்தாளுமா நாலு பேருக்கு ஆதரவு காட்ட மாட்டீங்களா!... ''

மீண்டும் விம்மி அழுதாள் தங்கமணி...

'' என் ராசாத்தி!... ''

கண்ணீர் வழிய தங்கமணியைத் தழுவிக் கொண்டாள் அக்கா...


*****
அதே நேரத்தில் மேலெல்லாம் நீர் வழிய கங்கை நதிக்குள்ளிருந்து  எழுந்தது ஒரு ஆத்மா..

தோளில் புரண்டு கிடந்த ஜடாமுடியை உதறிவிட்டு முடிந்து கொண்டது..

'ஹரஹர மகாதேவ்!..' என்றபடி விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு நீருக்கு மேலே ஏழாவது படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைத் தூக்கிக் கொண்டது...

அந்தக் குழந்தை சில வருடங்களுக்கு முன் இயற்கைச் சீற்றத்தில் பெற்றோரை இழந்து நிற்க - காலம் தன் கருணையை இந்த ஆத்மாவின் மூலமாகக் காட்டியது...

அந்தக் கருணை மேலும் கனிந்து நின்றதனால் இளங்குழந்தைக்கு இனிமேல் ஒரு தாய் வேண்டுமே என்ற ஆதங்கம் மேலிட அன்பு மகளைத் தோளில் அணைத்துக் கொண்டு கூட்டத்துள் கலந்து தென் திசைக் காவிரியை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது..


=======

59 கருத்துகள்:

  1. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தவோ சால்பு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயத்ததோ ...

      குறள் 987:
      இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
      என்ன பயத்ததோ சால்பு.

      மு.வரதராசன் விளக்கம்:
      துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண வரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அன்பின் கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  5. தத்துவமான படங்களை கதையின் ஊடாக இணைத்து மேலும் அழகுறச் செய்தவர் தமக்கு அன்பின் வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணாவுக்கே பெருமை.

      நீக்கு
    2. துரை சார் கதை என்றால், படங்கள் சேர்க்க நிறைய scope இருக்கும். கவிதை போன்ற கதை முடிவுக்கு பாராட்டுகள்.

      நீக்கு
  6. நல்லதொரு பொன்மொழியையும், தேவாரத் திருப் பாடலையும் இணைத்து மனம் மகிழச் செய்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்தும் இனிமை. அறம் தழைத்து நோய் உலகை விட்டு அகலட்டும்.

      நீக்கு
    2. Let noble thoughts come to us from every direction.
      'Aano bhadra krtavo yantu vishwatah' (meaning: Let noble thoughts come to me from all directions). This is a Vedic mantra ( Rig_Veda 1.89. 1)

      நீக்கு
  7. அன்பின் அனைவருக்கும் வணக்கம்.
    அன்பு துரையின் கதையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
    அதே நடந்தது. இனிய காலை வணக்கம் மா.

    அன்னை காமாக்ஷி அன்பு காட்டிவிட்டாள். அறுபது வயதானாலும் கணவரை மீட்டெடுத்துக் கொடுத்து விட்டாள்.

    எத்தனை அருமை.!!!!
    இந்தப் பொறுமைக்கும் தவத்துக்கும் நல்ல பலன் கிடைக்கிறதே.
    இதுதான் இறை சொல்லும் வழி.

    தங்கமணி அம்மாவும், அவர்கள் தங்கையும்
    செழித்து வாழட்டும்.
    துரையின் கதைகள் வழியே நம் உலகில்
    இல்லறம் நல்லறமாகிப்
    பொலியட்டும்.
    அன்பின் ஸ்ரீராமுக்கும், கௌதமன் ஜிக்கும் இனிய நன்னாளுக்கான
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான நெஞ்சம் நெகிழ்த்திய கதை. படிக்க ஆரம்பித்த உடனேயே முழுவதையும் வேறெங்கும் கவனம் செலுத்த விடாமல் படிக்க வைத்து விட்டது. தங்கணியின் அன்பும், அவர் அக்காவின் தவ வாழ்க்கையின் கருணையும் மனதை உருக்கி விட்டது. அன்பு மகவொன்றை கையில் கொடுத்து, இறுதியில் முடிவும் சுபமாக இருக்குமாறு செய்து விட்டாள் அன்னை விசாலாட்சி. மனம் நிறைந்த கதை. அன்பை உருக்கி வடிவமைத்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு நன்றிகள். அருமையான கதையை வெளியிட்டதோடு கூடவே ஆன்மிகமான படங்களையும். வாசகங்களையும் சேர்த்து தந்த எ. பி ஆசிர்யர்களின் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை. அந்தப் பெண் குழந்தைக்கு தாய் வேண்டும் என்பதற்காகவாது திரும்பி வரத் தோன்றிற்றே....

    சிறப்பாக எழுதி இருக்கும் துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மதுரையை மூடி விட்டார்கள். இங்கேயும் மூடச் சொல்லிக் கொண்டிருக்காங்க! நிலைமை எப்போச் சீராகுமோ என்னும் கவலை தான் ஓங்கி நிற்கிறது. உலகமே தடம் புரண்டு கொண்டிருக்கையில் எல்லாம் வல்ல ஈசன் தன் கண்களைச் சிறிதே திறந்து பார்த்துக் கடைக்கண் பார்வையால் நம்மை எல்லாம் ரக்ஷிக்கவேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் அறியாமையால் அலட்சியத்தால் இப்போ புயல்போல அங்கு பரவுது. முதல்வரே, இனி இறைவன்தான் வழிகாட்டணும் என்று சொல்லும் நிலைமை.

      விரைவில் சரியாகணும். மாணவர்களின் படிப்பையும் எதிர்காலத்தையும் கடுமையாக அசைத்துப் பார்க்கிறது இந்தப் பிரச்சனை.

      நீக்கு
    2. எல்லாம் சீராகும் காலம் வந்துவிட்டது.

      நீக்கு
  12. வித்தியாசமான கதைக்கரு. நெஞ்சைத்தொட்டுச் செல்கிறது. ஏன் பிரிந்தார் என்ற காரணமே இல்லாமல் பிரிந்தவர் ஓர் அழகான இளவயதுச் சுமையையும் தூக்கிக் கொண்டு தேடி வருவது என்பது மிகப் புதிய கோணம். வைரம் தனியாகவும் ஜொலிக்கும். பாறைகளிலும் தான் வைரம் என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கும். தீட்டத்தீட்ட இன்னும் அதிகமாய் ஜொலிக்கும். தங்கத்தில் பதித்தால் இன்னமும் அழகு கூடும். அது போல் துரையின் கதைகளும். எந்தக் கதைக்களமாக இருந்தாலும் தன் முத்திரையைப் பதித்துவிடுவார். மென்மையான வாக்கியங்களும் மென்மையான நடையும் அதிகம் வர்ணனைகள் இல்லாத் தெளிவான எழுத்தும் தனி முத்திரையை இந்தக் கதையில் பதித்துவிட்டன. வாழ்த்துகள், பாராட்டுகள் துரை.

    பதிலளிநீக்கு
  13. பொருத்தமான இடங்களில் அழகான பொன்மொழிகளையும் தேவையான படங்களையும் இணைத்த எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர் திரு கௌதமனுக்கு நன்றியும் பாராட்டுகளும். நேற்று ஸ்ரீராமையும் பார்க்க முடியலை. கௌதமன் சாரையும் பார்க்க முடியலை. இன்னிக்கு ஸ்ரீராம் மட்டுமானும் வந்துட்டாரே. அப்பாடானு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் 'சிரி'ப்பார், சிலர் மகிழ்வார், நான் சிரித்துக்கொண்டே மகிழ்கின்றேன்! நன்றி.

      நீக்கு
  14. சிறப்பான கதை. கதைக்களம் வித்தியாசம்.

    அன்பு வழியும் கதை மாந்தர்கள்.

    என்னுடன் பிஜி படித்த நண்பனின் திருமணத்தின்போது அவனுடைய மனைவிக்கு திருநீறு பூசியது நினைவுக்கு வந்தது. நாடார் திருமணம் அப்போது எனக்குப் புதுசு.

    துரை செல்வராஜு சாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீடுகளில் இந்தத் திருநீறு பூசும் வழக்கம் உடல்நிலை சரியில்லாதப்போவும், வெளி ஊருக்குப் போகும்போதும் தேர்வுகள், முக்கியமான பேட்டிகள் என்று செல்லும்போதும் திருநீறு பெரியவர்கள் தங்கள் கரங்களால் பூசிவிடுவார்கள். என் அம்மா சொல்லுவார், எங்கள் தாத்தா (அப்பாவின் அப்பா)கனவில் வந்து திருநீறு பூசினால் குடும்பத்தில் பிரச்னைகள் தீரும் எனத் தன் அனுபவம் என்பார்.

      நீக்கு
  15. //முகத்தைத் துடைத்துக் கொள்வதாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அக்கா//

    உணர்வைத் தொட்ட வார்த்தைகள் அருமை ஜி நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  16. பொதுவாக அன்பு இல்லத்தில் பார்க்க செல்பவர்கள் ஆருதல் சொல்வார்கள். இங்கே, இல்லத்தில் இருப்பவர், பார்க்க வந்துள்ளவரிடம் ஆருதல் சொல்லும் துரை செல்வராஜூ அவர்களின் கதை சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. நன்றி.

    பொதுவாக அன்பு இல்லத்தில் பார்க்க செல்பவர்கள் ஆருதல் சொல்வார்கள். இங்கே, இல்லத்தில் இருப்பவர், பார்க்க வந்துள்ளவரிடம் ஆருதல் சொல்லும் துரை செல்வராஜூ அவர்களின் கதை சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அஒனைவருக்கும் காலை வணக்கங்கள். துரை சார், ஒவ்வொரு முறையும் உங்கள் இன்றையக் கதை முந்தையக் கதையைத் தோர்க்கடிக்கிண்றது. ஸூபர் சார். நல்லெண்ணம் கொண்டவர்கள் தாமதமானாலும் நல்லதையே சந்திப்பார்கள் என்பதை மிக அழகாக வெளிக் கொணர்ந்திருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. அசத்திய கதாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கதை துரை அண்ணா. அவர் ஒரு வருடத்தில் பிரிந்து சென்றார் என்றதுமே தோன்றியது அவர் எங்கோ ஆன்மீகத் தேடலில் சென்றிருக்கிறார் என்பது புரிந்தது. ஒரு சிலர் இப்படிச் சென்றதுண்டு. சொல்லிச் செல்லாமலும் இருக்க நேர்ந்தது உண்டு.

    கதையில் அப்படிச் சென்றவர் எப்படியோ அக்குழந்தையின் ரூபத்தில் தாய் வேண்டும் என்று உணர்ந்திட அவர் மனது மீண்டும் வீடு நோக்கி வரத் தோன்றியதே.
    \முடிவு நல்ல முடிவு. வித்தியாசமான கதை.

    அக்காவும் சாமக்கோடங்கி சொல்லியிருந்த நம்பிக்கையில் தவம் போன்று வாழ்க்கையைக் கடத்தியிருக்கிறார்.

    இல்லத்து நிகழ்வுகள், உரையாடல்கள் மனதை நெகிழச் செய்தது.

    பாராட்டுகள் வாழ்த்துகள். துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இப்படிப் பிரிந்த ஒரு கணவரைப் பின்னர் நல்லதொரு சாமியாராக மனைவி கண்டதாகவும் அறிந்த நினைவு.

    எங்கள் சுற்றத்திலும் ஒருவர் திருமணத்திற்குப் பின் பிரிந்து சென்றவர் அவரும் இப்படி வடக்கே சென்று சாமியாராகி பின்னர் வீடு திரும்பவே இல்லை. அங்கேயே மரித்தும் விட்டார் என்று அப்புறம் செய்தி வந்தது. அவர் மனைவியோ தன் ஒரே குழந்தையுடன் தனியாகவே வாழ்ந்து நல்ல வேலை தேடிக் கொண்டு தன்னை பல நல்ல செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

    மற்றொரு சுற்றம் திருமணத்திற்கு முன்னரே வீட்டை விட்டுப் பிரிந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை ஆனால் கேள்விப்பட்டதில் அவரும் ஆன்மீகத் தேடலில் ஒரு குரு பெற்று அப்படியே அதே வழியில் சென்று அவரும் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணத்துக்குப்பின் பிரிந்து சென்று சாமியாராகிவிட்டார் - அடப்பாவமே... பசங்களை வளர்த்து ஆளாக்குவது கடமை இல்லையா? தான் சாமியாராகி நலன் பெற்றால் போதுமா?

      நீக்கு
  21. //வாசற் கதவின் திட்டி வாசலைத் திறந்து விட்டார் பெரியவர்..//

    //ஒற்றைப் பனையாய் தவித்த தவ வாழ்வு..//

    //தோளில் புரண்டு கிடந்த ஜடாமுடியை உதறிவிட்டு முடிந்து கொண்டது..//

    கதை நடத்தலில் நட்சத்திரமாய் மினுக்கிய வரிகள். இந்த இந்த இடங்களில் மண்டகப்படி மாதிரி ஒரு வினாடி வாசிப்பை நிறுத்திய பிறகு தான் மேற்கொண்டு கதையைத் தொடர மனசுக்கு அனுமதி கிடைத்தது.

    அன்பு உள்ளங்களுக்கே வாய்த்த இயல்பான அரவணைப்பு தான் கதையின் ஜீவநாடி.
    சொந்தங்கள், பந்தங்கள் என்று ஒரு வட்டத்திற்குள் சிறைப்படுத்திக் கொள்ளாமல் மனம் நெகிழ்ந்த இடங்களிலெல்லாம் அன்பின் வீச்சு படிந்து வாழ நேர்ந்த வாழ்க்கையின் வெம்மைகளை ஜீரணித்து குளுமையை கொடையாகத் தருவது தான் கதைக்கான செய்தி.

    நல்ல கதைகள், கவிதைகள் சமூகத்திற்கான செய்திகளை இப்படித்தான் தன்னுள் பொதித்து வெளிபடுத்துகின்றன. எழுதும் எழுத்திற்கு நல்லதொரு நோக்கம் இருப்பதாலேயே ஆகச்சிறந்த இப்படியான ஆக்கங்களுக்கான படைப்பாளிகளை நம் மனசில் போற்றிக் கொண்டாடுகிறோம். மனம் கனிந்த வாழ்த்துக்கள், துரை ஐயா,

    பதிலளிநீக்கு
  22. இதை ஒரு வகையில் நல்லது அப்பெண்கள் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு என்று சொல்லிடலாம். அதுவும் அண்ணாவின் எழுத்து நடை அப்படியானது. நானும் இதனை ஆன்மீக நோக்கில் பார்த்தாலும்.....

    யதார்த்தத்தில் அப் பெண் எத்தனைக் கஷ்டங்கள்பட்டிருப்பாள், அதுவும் குழந்தையும் இருந்தால் அப்பெண் அக்குழந்தையுடன் தனியாக வாழ எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பாள் என்றும் எனக்குத் தோன்றும். அவள் மனதில் எத்தனை வேதனைகள். அவள் பெற்றோர் அவளை நன்றாக இருப்பாள் என்று திருமணம் செய்து கொடுக்க இப்படியானால் அப்பெற்றோருக்கும் எத்தனை வேதனைகள். திருமணம் என்பது அதுவும் பெண்ணின் திருமணம் என்பது எளிதல்லவே. எத்தனை செலவுகள், எத்தனை மன வேதனைகள் சுற்றத்திற்கு. அப்பெண்ணும் எத்தனையோ கனவுகளுடன் அடி எடுத்து வைத்திருப்பாள். என் சுற்றத்தில் திருமணத்திற்கு முன் சென்ற ஆண் பற்றி எனக்கு எதுவும் தோன்றியதில்லை. அது அவர் மனம். ஆனால் திருமணத்திற்குப் பின் சென்ற ஆண் பற்றிக் கேட்ட போது அதுவும் அந்த ஆண் தான் என் சுற்றம், பெண் வீட்டிற்கு வந்த மருமகள்....எனக்கு அப்பெண்மணியை நினைத்து மனம் வேதனை அடைந்தது என்றே சொல்வேன். இதெல்லாம் நடந்து பல வருடங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னானது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. //ஒற்றைப் பனையாய் தவித்த தவ வாழ்வு//

    //தோளில் புரண்டு கிடந்த ஜடாமுடியை உதறிவிட்டு முடிந்து கொண்டது//

    இந்த வரிகளை வாசித்த போதுதான் எனக்கு என் சுற்றத்து நிகழ்வு நினைவுக்கு வந்தது. திரும்பி வருவான் தன் கணவர் என்ற நம்பிக்கையோடு கடத்திய நாட்கள். நிறைய சொல்லலாம் நான் ஒரு பெண்ணாக.

    துரை அண்ணா உங்களின் எழுத்து நடைதான் இக்கதையைத் தாங்கி நிற்கிறது என்பேன். அல்லாமல் கொஞ்சம் உரையாடல்கள் மாறி இருந்தாலும் இது வேறு வகையாகச் சென்றிருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம்..

    இணைய இணைப்பு கேடு அடைந்து விட்ட்து...
    நிலைமை சீராவது எப்போது என்று தெரிய வில்லை..

    அனைவர்து கருத்துரைகளாலும் மனம் நெகிழ்ந்து இருக்கிறேன்..

    விரைவில் வருகிறேன்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  25. வேறொரு இணைப்பில் இருந்து
    இந்த கருத்து..

    பதிலளிநீக்கு
  26. கதை சொல்லிய விதம் நம் கண் முன் காண்பதுபோல். இது போன்ற சூழலில் வாழ்பவர்களை எண்ண வைத்த கதை. நல்ல ஒரு முடிவு. ஒரு குழந்தை பிரிந்தவர்களை சேர்த்து வைக்கிறது.

    எழுத்து வழக்கம் போல் அருமை. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. துரை சாருக்கே உறிய மென்மையான நடையில் மற்றொரு கதை. கணவனும்,மனைவியும் பிரிந்து வாழ்ந்தாலும் அவரவர் வழியில் இறை தேடலை நடத்தியிருக்கிறார்கள். சிறிய கதையாயினும், அக்காவின் கம்பீரம் உயர்ந்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  28. இதுவரையிலும் அன்பின் கருத்துரைகளினால் மனதை நனைத்த அனைவருக்கும் நன்றி...

    மீண்டும் வேறொரு செல்போனின் இணையத்தைச் சற்றே வாங்கி அதன் வழியாகத் தங்களை எல்லாம் சந்திக்கின்றேன்..

    எனது இணைய இணைப்பு சரியாக சில நாட்கள் ஆகலாம்...

    எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    விரைவில் சந்திக்கிறேன்... வணக்கம்...

    பதிலளிநீக்கு
  29. மிக அருமையான கதை.

    '// அந்தப் பெரிய வீடும் கடையும் வாடகைக்கு விட்டு அதை அப்படியே பேங்குல போட்டு வச்சிருக்கோம்... நல்ல காலம் திரும்பி வந்ததும் மாமாவும் நீங்களும் இந்த மாதிரி தர்மம் பண்ண மாட்டீங்களா!... அப்பனும் ஆத்தாளுமா நாலு பேருக்கு ஆதரவு காட்ட மாட்டீங்களா!... ''//

    வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்காமல் நாடார் மில்லில் வேலைபார்த்து காலம் தள்ளி இருக்கிறார்.

    காமாட்சி இல்லத்தில் வேலைபார்த்த காசில் அனைவருக்கும் உதவி வருகிறார்.
    கோடங்கி சொன்னது போல் காரணப்பிறவிதான். தனக்கு என்று வாழாமல் பிறருக்கு உழைத்து கொடுத்து இருக்கிறார்.

    60 வயதுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயாகி வளர்க்கும் பொறுப்பு தேடிவருகிறது.
    அவர் பிறவி காரணபிறவிதான் என்று சொல்கிறது.

    இனி அந்த குழந்தைக்கு தாய் அன்பு, தந்தையின் அன்பும் கிடைக்க போகிறது.

    அன்பு உள்ளங்கள் நிறைந்த நெகிழவான கதை.


    பதிலளிநீக்கு
  30. பொன்மொழி, தேவாரப்பாடல், படங்கள் எல்லாம் கதைக்கு மேலும் மெருகு சேர்த்தன.

    கல்யாணம் ஆகி வள்ளலார் போல் பிரிந்து போனது மனதுக்கு வருத்தம் தான்.

    கதை பல வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று தெரிகிறது ,அப்போது அந்த பெண்ணை ஊர் எப்படி நடத்தி இருக்கும், பெற்றோர் மனம் எப்படி தவித்து இருக்கும்!
    கவலையில் பெற்றோர்களும் இறைவனடி சேர்ந்து,ஆதரவற்ற நிலை பிற்ருக்கு பாரமாய் இருக்க கூடாது என்ற வைராக்கியம் .

    அக்கா மனதில் உயர்ந்து நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
  31. அழகான கதை! அதிலும் அருமையான முடிவு!!

    பதிலளிநீக்கு
  32. பதில்கள்
    1. அதற்குள்ளாகவா? இன்னும் 42 நிமிடங்கள் இருக்கிறதே..்்்்!!

      நீக்கு
  33. துரை செல்வராஜுவின் கதை நன்றாக இருக்கிறாது என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வது போலாகும்

    பதிலளிநீக்கு
  34. கதை படிச்சுக் கருத்துச் சொல்லோணும் என விட்டிருந்தேன், இன்று எப்படியும் சொல்லிடோணும் எனப் படிச்சு முடிச்சேன் ஒரே மூச்சில்..

    ஹா ஹா ஹா இம்முறையும் வித்தியாசமான ஒரு கற்பனையில் எழுதி அசத்திட்டீங்க துரை அண்ணன்... முடிவில் ருவிஸ்ட் போல இருக்கே எனக் குழம்பித் தெளிஞ்சிட்டேன்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!