செவ்வாய், 6 அக்டோபர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  ஞானம் - ஜீவி 

ஞானம் 
ஜீவி 


ன்று ஆபிஸில் இன்ஸ்பெக்க்ஷன்.

மேலதிகாரிகளின் குடைச்சலில் சுந்தரேசன் காலையிலிருந்தே குழம்பிப் போயிருந்தான். வீடு திரும்பியதும், அங்கிருந்த ரகளையில் பொறுமையையே இழந்து விட்டவன்,மனைவியைப் பார்த்துக் கர்ஜித்தான். "உனக்கு எத்தனை தடவை சொல்றது?.. ஏன் இப்படிஎதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணிண்டிருக்கே?.. அம்மாவின் வழக்கம் அதுவென்றால், அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதுதானே?"

"அதெப்படி விட்டு விடுவதாம்?" என்று அவன் மனைவி ராகினி அவனை நோக்கிச் சீறினாள். "ஊரிலில்லாத வழக்கமாக இருக்கிறது உங்கள் அம்மாவின் வழக்கம். அது தப்பு என்று தெரிந்தும் பேசாமல் இருந்தால், அம்மன் பூஜை செய்தும் என்ன பிரயோஜனம்?"

"இவள் சொல்லிக் கொடுத்துத்தான் இனிமேல் எனக்குப் பூஜை புனஸ்காரத்தைப் பத்தித் தெரியணுமாக்கும்?" என்று சமையலறை நிலைப்படிப் பக்கம் அவன் அம்மா முனகுவது இவனுக்கு இங்கே கேட்டது.

சுந்தரேசனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் அம்மா--மனைவி இரண்டு பேரையுமே சுட்டெரித்து விடுவது போல முறைத்தான். "ச்சே! உங்க ரெண்டு பேராலுமே என் நிம்மதி கெட்டுப் போயிடுத்து!" என்று ஆத்திரத்துடன் சட்டையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டினான்.

"என்னால் உன்னோட நிம்மதி கெட்டுப் போக வேண்டாமப்பா.. பேசாமல் அவள் சொல்வதையே சரியென்று..." அம்மாவை அதற்கு மேல் பேசவிடவில்லை அவன்."அம்மா, நீ பேசாம இருக்க மாட்டே?.." எந்று அவன் அலறியதும், வீடே நிசப்தமாகிவிட்டது.

அவன் மனைவி தோள்பட்டையில் அவனைப் பார்த்து இடித்துக் கொண்டு கிணற்றடிக்குப் போனாள். அம்மா சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

சுந்தரேசன் 'ஸ்ஸெ'ன்று சலித்துக் கொண்டே ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டான். ஃபேனை சுழலவிட்டான். பார்க்கப்போனால் ஒன்றுமில்லாத விஷயம்... அதுவா தன்னை உணர்ச்சி வசப்படுத்தி இப்படிக் கத்த வைத்தது என்பதை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அவன் வீட்டில் நவராத்திரி கொலு வைத்திருந்தார்கள்.

அதைப் பார்க்க அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் வந்து போன பின்பு தினமும் அம்மனுக்கு ஆரத்தி எடுப்பதா, இல்லை நவராத்திரி பூஜை நாட்களெல்லாம் தொடர்ச்சியாக நடந்து முடிந்த பிறகு கடைசி நாளில் ஒரே ஆரத்தியோடு முடித்துக் கொள்வதா என்பது பற்றி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு.

தினமும் ஆரத்தி எடுக்க வேண்டுமென்பது அவன் அம்மா கட்சி.

தினமும் ஆரத்தி கூடாது; அப்படிச் செய்தால் அம்மனை வீட்டை விட்டு அனுப்பி வைத்த மாதிரி ஆகிவிடும். ஆகையால் கடைசி நாளன்றுதான் ஆரத்தி என்பது அவன் மனைவி கருத்து.

சுந்தரேசனின் மனைவி வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவள். ஆகையால், உங்கள் பழக்கம், எங்கள் வழக்கம் என்று இவர்கள் இருவருமே உரசிக் கொள்வதற்கு தீர்ப்பு வழங்குவதற்குள் அன்றாடம் அவனுக்குப் போதும் போதுமென்று ஆகிவிடும்.

சுந்தரேசன் தலை நிமிர்ந்து வாசல் பக்கம் பார்த்தான்.

அவன் தந்தை பொடிடப்பாவைத் தட்டிக்கொண்டு பஞ்சாங்கத்தில் ஆழ்ந்திருந்தார்.தன் தாயும் மனைவியும் இப்படிக் கூச்சல் போடும் பொழுது எப்படி இவரால் இப்படி இதையெல்லாம் பற்றி எந்த அபிப்ராயமும் சொல்லாமல் மெளனமாக இருக்க முடிகிறது என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வயதான அவர் இந்த மாதிரி பழக்க வழக்க விவகாரங்களில் ஏதாவது சொன்னால் இவன் பாடு கொஞ்சம் இலகுவாக முடியும். பெரியவர், அவர் சொல்கிறாரே என்று அதையே தீர்ப்பாக வழங்கி விடலாம். ஆனால், அவர் இதெல்லாம் தனக்குச் சம்பந்தபபடாத விஷயம் மாதிரி மெளனமாக இருக்கிறாரே?..

சுந்தரேசன் சில வினாடிகள் ஆழ்ந்த சிந்தனையுடன் தன்னுடைய தந்தையை இங்கிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தான்.... இனிமேல், இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தன் தந்தையைப் போலவே தானும் பேசாமல் இருந்து விடுவது என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

அந்த சமயத்தில் தான் அவன் மகன் ரமேஷ் வெளியில் விளையாடி விட்டு உள்ளே நுழைந்தான். பின்னம் பக்கம் போய் கை கால் அலம்பிக் கொண்டு மூக்கைச் சிந்தினான்.

"என்னடா, சளி பிடித்திருக்கிறதா? இதற்குத்தான் நான் அடித்துக் கொள்கிறேன். பொழுது விடியறத்தையே நான் சமையல் பண்ணி வைப்பதில் ஒன்றும் குறைச்சல் காணோம்.  நீயானால், பாட்டி சொல்கிறாரே என்று ஸ்கூல் போகுமுன்பு பழைய சாதத்தை எடுத்து வைச்சிண்டு..."

"ஆஹா.. பெரிய கரிசனத்தைப் பாரு.. நாங்கள்லாம் அந்தக் காலத்தில் சாப்பிடாத பழையதா?.. அதான், ஒடம்புக்கு நல்லது. இந்த டானிக் தரித்திரங்களிலெல்லாம் என்ன இருக்குன்னு நெனைச்சிண்டிருக்கே?.." என்று அவன் அம்மா ஆரம்பிக்க...

"உங்க காலத்திலே வழியில்லாம நீங்க சாப்பிட்டீங்கன்னா.. அதுக்காக இவனும் சாப்பிடணும்னு என்ன தலையெழுத்து?.. பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திலே போய் ஒக்கார்ந்தா படிப்பா வரும்.. தூக்கம்தான் வரும்.." என்று இவன் மனைவி தொடர...

"என்ன சொன்னே?.. வழியில்லாம சாப்பிட்டோமா? யாரு அப்பிடின்னு உனக்குச் சொன்னா? உங்க மாமனாருக்கு நாலு வேலி நிலம்.. நாப்பது புளியமரம்.. யாரையும் எதிர்பார்க்க மாட்டாரே, தானே மாட்டைப் பூட்டி வண்டி கட்டி நெல் ஏத்திண்டு மில்லுக்கு அரைக்கப் போனார்னா.." என்று தாய் புலம்ப...

"பேசாமல் இருக்க மாட்டே அம்மா?" என்ற சுந்தரேசன் 'இனி இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் தலையிடக்கூடாது' என்று கொண்டிருந்த சங்கல்ப உறுதியெல்லாம் காற்றோடு பறக்கக் கத்த...

"உனக்கு என்னைத்தான் சொல்லத் தெரியும்.." என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்துக் கொண்டே அவன் அம்மா புழக்கடைப்பக்கம் போய்விட்டாள்.

தலைநிமிர்ந்து சுந்தரேசன் வாசல் பக்கம் நோட்டமிட்டான். அவன் தந்தை எந்த சலனமும் இல்லாமல் 'கல்கி' புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். தானும் இப்படியே இனி இருந்து விடுவது என்று பிரசவ வைராக்கியம் பூண்டான் சுந்தரேசன்.

ருபத்தைந்து ஆண்டுகள் ஓடிப்போனதேத் தெரியவில்லை. அதற்குள்தான் எத்தனை மாற்றங்கள்?

அப்பா, அதற்கடுத்து அம்மா என்று போய்ச் சேர்ந்தாச்சு.

மகன் ரமேஷூக்குக் கூட கல்யாணமாகிவிட்டது. தழையத் தழையப் பின்னிண்டு மருமகள்.

இபபொழுது உள்ரூமில் தலைக்கு மப்ளரைக் கட்டிக்கொண்டு, ஈஸிசேரில் சாய்ந்தபடி காப்பி வரட்டுமே என்று காத்திருக்கும் சுந்தரேசன். கையில் தன் தந்தையைப் போல் பொடி டப்பி இல்லை; கண் கண்ணாடிக் கூடு.. 'ஹிண்டு' வந்தவுடன் மேலோட்டமாகப் புரட்ட வேண்டும்; மத்தியானத்துக்கு மேலே டீடெய்லா, பக்கம் பக்கமா...  

பொழுது விடியறத்தேயே உள்ளே ஏதோ இரைச்சல்.

"நான் எது செஞ்சாலும், இது குத்தம் அது குத்தம்னு..ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிண்டிருக்கேள்? ..."

பெரியவர் சுந்தரேசன் காதைத் தீட்டிக்கொண்டார்.

அவர் மனைவியிடத்தில் மருமகள்.

"உன்னைக் குத்தம் சொல்லணும்னு தான் நான் காத்திண்டிருக்கேனாக்கும்?.. வேறு வேலை இல்லை பாரு, எனக்கு! பெரியவர்கள்னு ஒரு மட்டு மரியாதை கிடையாது.."

"நானும் பாக்கறேன்; நிறைய சமயங்களிலே நீங்க கூடத்தான்..."

"இப்போ என்ன நான் உன்னை மரியாதைக் குறைச்சலா பேசிட்டேன்?..   வாசல் தெளிச்சுக் கோலமிட்டு, சுவாமி விளக்கு ஏத்தாம, காப்பிக்கு காஸ்  அடுப்பைப் பத்த வைக்க என்ன அவசரம்னு கேட்டேன்?..  இது எனக்கு என் மாமியார் சொல்லிக் கொடுத்தது; ஆதி நாள்லேந்து இதுதான் இந்தக் குடும்பப் பழக்கம். இதைச் சொன்னதிலே உனக்கு என்ன மரியாதை போயிட்டது?.. சொல்லு."

"..................."

"தனக்கே தெரியலைன்னாலும், இன்னொருத்தரைக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்; ரெண்டும் இல்லேனா, இன்னொருத்தர் சொல்றதைக் கூட ஏத்துக்கலைனா?.. ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ. எல்லாருக்கும் ஆரம்பத்திலே சொல்றாளேன்னுதான் இருக்கும்..  ஆனா போகப்போக அனுபவத்லே உணர்ந்து தெரிஞ்சிக்கறச்சே, ஆரம்பத்லேயே கேட்டுக்காமப் போயிட்டோமேன்னு தோணும்."

"இப்போத் தான் பில்ட்டரை அலம்பி வைச்சேன். டிகாஷனுக்கு தண்ணியைச் சுட வைச்சிட்டு.."

"எழுந்தவுடனே முதல்லே செய்ய வேண்டியதைச் செஞ்சிட்டா, பின்னாடி இதெல்லாம் செஞ்சிக்கலாமில்லையா?.. நான் பொடி போட்டு, டிகாஷனை இறக்கி வைக்கிறேன்;  நீ கோலம் போட்டுட்டு வா. "

",,,,,,.........,"

"நான் சொல்றேங்கறத்துக்காக இல்லை.. இன்னிக்கு உனக்குன்னு தெரிஞ்சாத்தான், நாளைக்கு உனக்குன்னு வர்றப்போற, இந்த வீட்லே விளக்கேத்தி வைக்கப்போறவளுக்கும் சொல்றத்துக்குத் தெரியும். இந்த வழக்கமெல்லாம் திடீர்னு வந்திடாது; நாமளே செஞ்சு செஞ்சுத் தான், இதுக்கு அடுத்தது இதுன்னு ஒவ்வொண்ணா மனசிலே படியணும்.."

"சரிம்மா! நீ சொல்லிட்டே இல்லே.. இனிமே செய்வா.." என்று தன் மகன் ரமேஷ் பெண்டாட்டி மனம் வருந்திவிடப் போகிறாளே என்று மத்தியமாய் சொல்வது இங்கு சுந்தரேசனுக்குக் கேட்டது.

'தம் மகன் கோர்ட்டில் பந்து இருக்கிறது; அவனே விளையாடிக் கொள்ளட்டும்' என்று அவர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். 

அதுமட்டுமல்ல, அடிக்கடி நிகழும் இந்த வாக்கு வாதங்களுக்குக் காரணம் மாமியாருக்கும் மருமகளுக்குமான வெறுப்பில்லை என்பது அவருக்கு நிதர்சனமாகப் புரிகிறது. தன் கணவனுடனான வாழ்க்கையில் புக்ககத்துக்கு புகுந்த நேரத்திலிருந்து இன்று வரை தான் தெரிஞ்சிண்டதை, புரிஞ்சிண்டதை, அனுசரித்து போனதை   பாலபாடத்திலிருந்து   ஆரம்பித்து இவளுக்கும் சொல்லிவிட வேண்டுமென்கிற வேகம்.   எப்படியெல்லாம் இந்த குடும்ப நிர்வாகத்தைக் கட்டிக் காத்துப் பேணி வந்தோமோ, அதே முறைமையில் மருமகளும் செயல்பட்டு குடும்ப அபிமானம் காக்க வேண்டுமென்கிற அதீத பாசத்தை மனசு நிறையத் தேக்கி வைத்துக் கொண்டு மாமியார் மருமகளோடு யுத்தத்தைத் துவங்கியிருக்கிறாள் என்று அவருக்குப் புரிகிறது.

இந்த இவர்களது --  தங்கள் தங்கள் மாய 'சுயத்'தை குடும்ப பொதுநலனுக்காக பங்கிடுகின்ற சண்டையில்-- தான் நுழைந்து நியாயம் பேசுவது, இந்த துவந்த யுத்தத்தை மேலும் வளர்த்து விடச் செய்யுமே தவிர, யுத்தத்திற்கான் நிரந்தரத் தீர்வாக இது அமையாது என்று அவருக்குப் புரிகிறது; வற்றாத அன்பின் அடித்தளத்தில் தான் இந்த ஆக்கிரமிப்பு நிலை கொண்டுள்ளது என்பது புரிந்து, ஒருவொருக்கொருவர் இணக்கம் காட்டி நெகிழ்ந்து போவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்று தெளிந்து சுநதரேசன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்; தான் விலகி இருந்தாலே குடும்ப நிர்வகிப்பிலான விட்டுக்கொடுத்தலும், பெற்றுக் கொள்ளுதலுமான அந்த நெகிழ்வு இயல்பாக அவர்களுக்குள் வந்து விடும் என்கிற நாள்பட்ட சுயபுரிதலில் சும்மா இருந்தார்.

அத்தனை இறைச்சலுக்கு நடுவே, தன் தந்தை எப்படி அந்தக் காலத்தில் மெளனமாக இருந்தார் என்ற கலை, வயசாகி மட்டுமே கிடைக்கும் அனுபவ 'ஞானம்', இப்பொழுது சுந்தரேசனுக்குக் கைப்பட்டுவிட்டது.

79 கருத்துகள்:

  1. கண்ணுடீயர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும்
    இறைவன் அருள் மிகுந்திருக்க வேண்டும்.
    எல்ல்ரும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

  3. அருமையான கதை தந்திருக்கும் ஜீவி சாருக்கு
    வணக்கம்.
    ஆரம்பத்தில் குடும்பத்தில் ஏற்படும் இரைச்சல்
    போகப் போகும் அமைதி ஆவதையும் பார்த்திருக்கிறேன்.
    ஆனால் எங்கள் காலத்தில் மாமியாரை எதிர்த்துப்
    பேசும் வழக்கம் எல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுசாக வந்த மருமகளிடம் மாமியார்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். தன் குடும்பம், தன் மருமகள், பரம்பரை பழக்க வழக்கங்களை அவள் தெரிந்து கொண்டு இந்த குடும்பப் பெருமைகளை அவள் தனக்குப் பின் காப்பாற்ற வேண்டுமே என்ற அக்கறை என்று அன்புள்ளம் கொண்ட மாமியார்களிடம் கூட படிந்திருக்கிற நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைய பட்டியிடலாம். அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரே மகன் கொண்ட தாய்மார்கள் மாமியாராகும் பொழுது அவர்கள் மருமகளிடம் கொள்ளும் ஈடுபாடும், எதிர்பார்ப்பும் மேலும் எகிறும். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே சரிவர மருமகள் புரிந்து கொள்ளாமல் சொந்த ஈகோ பிரச்னைகளில் சிக்கும் பொழுது தான் பெரும்பாலும் அனர்த்தங்கள் ஆரம்பமாகின்றன. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அன்புக்கு அன்பு செய்யும் மருமகள்கள் அந்த வீட்டின் ராணியாகிறாள். விஷயம் ரொம்ப சிம்பிள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நன்மையாகவும், அருமையாகவும், சகஜமான சூழ்நிலையிலும் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.
    சில மாமியார்கள் ,தங்கள் மருமகளைத் திருத்துகிறேன்
    பேர்வழி என்று ஒரு வழி செய்து விடுவார்கள்.
    கடைசி காலத்தில் எல்லாம் மாறும்.

    இப்போதெல்லாம் காட்சிகள் மாறி விட்டன.

    அனுபவ பூர்வமாகக் கதை கொண்டு செல்லப்
    பட்டிருக்கிறது. பேசும் வசனங்கள் யதார்த்தமாக
    இருக்கிறது.
    அப்பாவுக்கு கல்கி,
    மகனுக்கு ஹிண்டு:)
    இப்போதாக இருந்தால் இணையமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதாயிருந்தால் நியூஸ் பேப்பர் என்று எடுத்துக் கொண்டால் டைம்ஸ் ஆஃப் இண்டியாவாக இருக்கலாம். :))

      நீக்கு
  6. மாமியார், மருமகள் பிரச்னையை எடுத்துக்கொண்டு கதை எழுதப்போவதாக ஜீவி சார் சொன்னது இதைத் தானா? இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அதோடு இது நகரங்களில் வாழும்/வாழ்ந்த மாமியார், மருமகள் போல! அப்படி இருந்தாலும் இப்படி இரைந்தெல்லாம் பேசவே முடியாது! எதுவானாலும் மாமியார் சொன்னால் பதில் பேசமுடியாது. அப்படியே செய்து கொண்டு போகவேண்டும். இப்படி மாமனார்,கணவனுக்கெதிரே வாக்குவாதமே பண்ண முடியாது. நமக்குப் பிடிக்காத விஷயமானாலும் மாமியார் சொன்னால் சொன்னது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அதோடு இது நகரங்களில் வாழும்/வாழ்ந்த மாமியார், மருமகள் போல!.. //

      மாமியார்கள் எந்த லோகத்தில் வாழ்ந்தாலும் மாமியார்களே. அதே மாதிரி மருமகள்களும். இந்த புரிதல் இல்லாத நேரத்துத்தான் இரண்டு பக்கமும் மன வருத்தங்கள் நேருகின்றன.

      நீக்கு
  7. அதோடு இம்மாதிரி விஷயங்களில் கணவன் குடும்ப வழக்கம் எதுவோ அதைத் தான் அனுசரிப்பது வழக்கம். இதிலே மாவட்டப் பழக்கம்னு எதுவும் வர முடியாது. மேலும் நவராத்திரியில் ஒன்பது நாட்களும் தினம் தினம் இரவு சுமார் எட்டரை/ஒன்பது மணி அளவில் ஆரத்தி எடுப்பது அநேகமாக எல்லோர் வீடுகளிலும் (மாவட்ட வித்தியாசம் இல்லாமல்) உள்ள வழக்கம். இன்னும் மேலே சொல்லுவதெனில் எங்க மாமியார் சாயங்காலம் சுண்டல்/நிவேதனம் பண்ணும்போதே வெற்றிலை, பாக்குடன் ஆரத்தியையும் கரைத்து வைத்து விடுவார். அதே பழக்கம் இப்போது என்னிடமும். அதே ஹூஸ்டனில் ஆரத்தி எடுப்பதில்லை. அதற்காக வாக்குவாதமெல்லாம் செய்வதும் இல்லை. கால, தேச, வர்த்தமானங்களை ஒட்டிய வழக்கங்கள். சின்ன விஷயம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷயம் தெரிந்த மாமியார்கள் தன் காரியம் ஆனால் சரி என்று போய் விடுகிறார்கள். எதிலும் தலையிட்டுக்கிறதில்லை. இன்னொன்று. தன் குடும்பம், மகன் குடும்பம் என்று தனித்தனியாக பார்க்கும் பார்வைத் தெளிவை இக்காலத்திற்கு ஏற்றபடி வாழப் பல மாமியார்கள் பழகிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளூரிலேயே மகன் வேறு இடத்தில், தான் வேறு இடத்தில் என்று வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். வயசானாலும் அந்த அளவுக்கு தான், தன் மனைவி, தன் சந்தோஷம் என்று வாழ்க்கை போய் விட்டது.

      சிலருக்கு என்ன வயசானாலும் இன்னொருவருக்கு dependent ஆக இருக்கப் பிடிக்காது. சிலருக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ்வதே சங்கடமான விஷயம். இப்படி மனிதர்களில் மனசில் ஆயிரம் கோணல்கள்..

      அந்த மாமியார் பாவம், பூஜை--புனஸ்காரங்களில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர்கள் போலிருக்கு. எக்கேடு கெட்டாலும் அதிகாலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டுத் தான் அந்த நாளைத் துவங்க வேண்டும் என்ற 'நல்லது--கெட்டது' சமாச்சாரங்களில் அதிகம் நம்பிக்கைக் கொண்டவர் போலிருக்கு. ஒட்டு மொத்த குடும்ப நன்மைக்கானது அது என்ற பழக்க தோஷத்தால் மனசில் படிந்த நம்பிக்கை. அதனால் தான் ஒரு வாய் காப்பி கிடைக்காட்டாலும் போகிறது, வீட்டு வாசலுக்குக் கோலம் போட்ட பிறகு தான் மற்றதெல்லாம் என்பதில் குறியாய் இருக்கிறார் போலிருக்கிறது. அதனால் அதான் அந்தம்மாவுக்குப் பெரிய விஷயமாக இருக்கிறது.. 'ஏன் இப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் 'என்னப்பா செய்யறது? என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை' என்று தான் சொல்லத் தெரியும் அவர்களுக்கு. ரொம்பத் துருவிக் கேட்டால், அதிகாலை வீட்டு வாசலுக்குக் கோலம் போடுவதில் இருக்கும் மனச்சாந்தி பற்றி ஆயிரம் சொல்வார்கள். அந்தக்காலத்து மனுஷி; பாவம்.. பொறுத்துப் போங்கள்.

      நீக்கு
    2. அவ்வளவு ஈடுபாடு கொண்ட மாமியார், தானே வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு வாக்குவாதத்தைத் தவிர்த்திருக்கலாம். மருமகளிடம் நிதானமாக இனி நீ காலை வாசல் தெளித்துக் கோலம் போட்டு விடு! இதை வீட்டுக்கு வந்த மருமகளான நீ செய்தால் அதுக்குத் தனி கௌரவம் எனச் சொல்லிக் கொடுக்கலாம். கத்த வேண்டாமே! அவங்களை மாற்றிக்காமலே இதைச் செய்திருக்கலாம். சின்ன விஷயம்! காலை வாசல் தெளிக்கும் வழக்கமே கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டு வருது! முன்னெல்லாம் வீட்டை விட்டு மனிதர்கள் கிளம்பிவிட்டால் அதன் பின்னர் தண்ணீர் தெளித்துக் கோலம் போடக் கூடாது! அச்சானியமாக நினைப்பார்கள். இப்போல்லாம் சாவகாசமாகக் கணவனை, குழந்தைகளை அனுப்பி வைச்சுட்டு நிதானமாக வாசலில் கோலம் போடுபவர்களைத் தான் பார்க்க முடிகிறது. இந்த மட்டும் கோலம் போடுகிறார்களே எனத் திருப்தி அடைய வேண்டி இருக்கிறது. இதிலே நான் பொறுத்துப் போவதில் எதுவும் இல்லை. அந்த மாமியார் தான் பொறுத்துப் போயிருக்கணும்.

      நீக்கு
    3. //அவ்வளவு ஈடுபாடு கொண்ட மாமியார், தானே வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு வாக்குவாதத்தைத் தவிர்த்திருக்கலாம்.//

      பக்கத்து வீட்டில் கோலம் போட வந்த இளம் பெண், "என்ன மாமி? உங்க மாட்டுப்பெண் ஆத்தில் இல்லையா?" என்று தான் கேட்பாள்.

      'அவ்வளவு ஈடுபாடு' என்பது குடும்ப நலனில். மருமகள் தான் இளையவளய் வீட்டின் முதல் பெண். அவள் தான் கோலம் போட வேண்டும், அவள் தான் சுவாமி விளக்கு ஏற்ற வேண்டும்; அத்தனை புண்ணியமும் அவளுக்கும் அவள் வழிவழி வரப்போகிற குடும்பத்திற்குத் தான் என்ற பெரும் கனவு.

      இதை எத்தனை தரம் வலியுறுத்திச் சொன்னாலும் ஏறுமாறாகத் தான் புரிந்து கொள்ள வேண்டுமா"..

      நீக்கு
    4. உண்மையைச் சொல்லுவதெனில் எங்க வீட்டில் என் மாமியார் தான் வாசல் தெளித்துக் கோலம் போடுவார். என்னிடம் இருந்தவரை 2005 ஆம் ஆண்டு வரை! அவர் அதை விட்டுக் கொடுத்ததில்லை. தான் தான் செய்வார். நான் கோலம் என்னிக்காவது போட்டால் அக்கம்பக்கத்தினர் மாமியாருக்கு என்ன ஆச்சு என்று தான் கேட்பார்கள். இது ஒண்ணும் ஏறுமாறெல்லாம் இல்லை. நடப்பது/நடந்தது/இனியும் நடக்கப் போவது! அதிலும் கிராமத்தில் இருந்தவரையில் நான் வெளியே எட்டிக் கூடப்பார்க்க முடியாது/பார்த்ததில்லை. எதிர்த்த கொல்லைக்குப் போனால் கூடக் கடைசி நாத்தனார் துணையுடன் அவளுக்கு சௌகரியப்பட்டப்போத் தான் போகணும். அதிலும் தெருவில் யாரானும் இருந்தால் உடனே நான் உள்ளே வந்துடணும்! போகக் கூடாது. நாத்தனார் ஆத்துப் பெண் என்பதால் அவள் போவாள். இந்த மாதிரிப் புண்ணியம் பார்த்துக் கொண்டு கோலம் போடச் சொல்லுவது, விளக்கேற்றச் சொல்லுவது எல்லாம் எங்க வீடுகளில் நான் அதிகம் பார்த்ததில்லை. மாமியார் சொன்னால் தான் நான் ஸ்வாமிக்கு விளக்கே ஏற்றலாம். இல்லைனா சும்மா நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடணும். மருமகளை இளையவளாய் வீட்டின் முதல் பெண்ணாய் நினைப்பவர்கள் எல்லா மாமியார்களும் அல்ல! குதிரைக்குப் போட்ட பட்டை போல அதை விட்டுக் கண்களைத் திருப்பாமல் அதுக்குள்ளேயே பார்த்தால் இப்படித் தான் தெரியும்! என் கணவர் சாப்பிடும்போது கூட கிராமத்தில் இருந்தப்போவும் சரி/சென்னை வந்தப்புறமும் சரி, மாமியார் சொன்னால் தான் நான் சாப்பாடு போடமுடியும். அப்படியே போடவந்தாலும் என்னிடம் இருந்து பாத்திரத்தை வாங்கி என் கடைசி நாத்தனாரிடம் மாமியார் கொடுத்துவிட்டு அவரும் அங்கேயே இருந்து கொண்டு என்னை நீ அந்தப்பக்கம் போ! என்று சொல்லி விடுவார். இதை எழுத வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் ஏறுமாறாகப் புரிந்து கொண்டதாகச் சொன்னதால் எழுதும்படி நேர்ந்தது. மன்னிக்க வேண்டும்.

      நீக்கு
  8. என் புக்ககத்தில் முதல் முதல் வெளி மாவட்டம், அதுவும் மதுரையிலிருந்து வந்தது நான் தான். எங்கள் பக்கம் அமாவாசையானாலும் காலை வாசலில் கோலம் போடுவது உண்டு. வீட்டின் எந்த இடத்தில் தர்ப்பணம் செய்வார்களோ அங்கு மட்டும் கோலம் இருக்காது. அதே தஞ்சை ஜில்லா முழுக்க அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவது இல்லை. வந்த புதிதில் இது எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தாலும் இன்றளவும் நான் மாமியார் வீட்டுப் பழக்கத்தைத் தான் மேற்கொள்ளுகிறேன். இப்படிச் சில விஷயங்கள் உண்டு. குலதெய்வ வழிபாடு,பண்டிகைகளில் சமைப்பது என வித்தியாசங்கள் உண்டு. அவற்றை எல்லாம் மாமியார் செய்த பழக்கத்தின்படித் தான் செய்ய முடியும்/செய்ய வேண்டும். இதற்காகச் சத்தம் போட்டெல்லாம் வாக்குவாதம் செய்ய முடியாது. என் புக்ககத்தில் எதுவானாலும் சமையலறை, இரண்டாம்கட்டுத் தாழ்வாரம் இவைகளோடு பேச்சு, வார்த்தை முடிஞ்சுடும். மாமனார், கணவர் வரை போகாது! இந்த விஷயங்கள் எல்லாம் அவங்களுக்குத் தெரியவும் தெரியாது. இதைப் பற்றி அவங்களிடம் கலந்து பேசினதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் எங்கள் காலத்தில் மாமியாரை எதிர்த்துப்பேசும் வழக்கம் எல்லாம் இல்லை.// - வல்லி அக்கா.//என் புக்ககத்தில் எதுவானாலும் சமையலறை, இரண்டாம்கட்டுத் தாழ்வாரம் இவைகளோடு பேச்சு, வார்த்தை முடிஞ்சுடும். மாமனார், கணவர் வரை போகாது! இந்த விஷயங்கள் எல்லாம் அவங்களுக்குத் தெரியவும் தெரியாது. இதைப் பற்றி அவங்களிடம் கலந்து பேசினதும் இல்லை.//  - கீதா அக்கா.
      Gone are those days akkas.

      நீக்கு
    2. ஆமாம் பானு மா. எதையும் யோசித்துச் சொல்லணும் இல்லாவிட்டால் வாயே திறக்கக் கூடாது!,,,,

      நீக்கு
  9. ஜீவி சார் எடுத்துக்கொண்டுள்ள பிரச்னை எல்லாம் ஜூஜுபி! ஒண்ணுமே இல்லை. மாமியார், மருமகளிடம் இன்னும் ஆழமாக, மருமகள் வேதனைப்படும்படியான/காலமெல்லாம் நினைத்து வருந்தும்படியான பிரச்னைகள் உண்டு. இப்போவும் இருக்கின்றன. இப்போதும்/நேற்றுக் கூட ஒரு மாமியார் பற்றி நாங்க இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். இந்தக் கணினி யுகத்தில் கூட இப்படி ஒரு மாமியாரா என நினைத்து வருந்தினோம். ஆக இந்தச் சின்ன விஷயம், அம்மனுக்கு ஆரத்தி எடுப்பதா/வேண்டாமா என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. எடுத்தாலும் தப்பில்லை, எடுக்காவிட்டாலும் தப்பில்லை. அம்மன் கோவித்துக்கொள்ள மாட்டாள். அதையும் தாண்டிய விஷயங்கள் இருக்கின்றன. சிலவற்றைப் பொதுவெளியில் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயங்களைச் சொல்லி எல்லாரையும் ஏற்றுக் கொள்ளகிற மாதிரி வைப்பது என்பது சிறுகதை எழுது கலையின் ஆரம்பப் பாடம்.
      நமக்குத் தெரிந்த அயிரம் கொடுமைகள் இருக்கலாம்.. 'கிடைச்சதுடா சான்ஸ்' என்று எல்லாவற்றையும் வரிசைபடுத்தி ஒரே கதையில் ரொப்பக் கூடாது.

      மாமியார் சொன்னதை, தன் வாழ்க்கையிலேயே புரிந்து கொண்டு செயல்பட்ட, தனக்கு வாய்த்த மருமகளுக்கும் அதை போதிக்கிறா ஒரு நல்ல மருமகளின் கதை இது.

      சொல்லப் போனால் இது ஆண்மகன்களின் கோரிக்கையை முன் வைக்கிற கதை!

      மா.ம. சண்டை என்ற பெயரில் 'நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்காம, எங்களை மன நிம்மதியோட வாழ வைங்கப்பா'.. என்ற கோரிக்கையை முன் வைக்கும் கதை! சரியா?..

      நீக்கு
    2. மாமனார்களும் மருமகளைக் கொடுமைப் படுத்துவது உண்டே! இங்கே இல்லைனால் எங்கேயுமே இல்லைனு அர்த்தம் இல்லை. மனைவியோடு சேர்ந்து கொண்டு எசப்பாட்டுப் பாடுபவர்கள் உண்டு. இந்தக் கதை எளிமையான ஒரு சின்ன விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாமியாரும், மருமகளும் நல்லவர்களே என முடிக்கிறது! மற்றபடி கொடுமைகள் என்பது தனி ரகம். இது தனி ரகம்! இதெல்லாம் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்.

      நீக்கு
  10. ஆழமான பிரச்னை இல்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் கதை வெகு சரளமாகச் செல்கிறது. சம்பவங்கள் அனைத்தும் காட்சிகளாக வருகின்றன. இம்மாதிரிப் பேச்சு வார்த்தைகள் பிராமணக்குடும்பங்களில் சகஜம். பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனைக்கு இடையிலும் மனம் ரசித்ததில் நன்றி.

      நீக்கு
  11. கிராமத்தில் இருந்தவரையிலும் மளிகை சாமான்கள்/மளிகைப் பொருட்கள் அனைத்தும் மொத்தமாக வாங்கி விடுவதால் நான் சமைப்பது எனில் சாமான்கள் அன்றைய நாளைக்குத் தகுந்தாற்போல் மாமியார் தான் எடுத்துக் கொடுப்பார். நானாகப் போய் எடுத்துச் சமைக்க முடியாது. ஆனால் அதுவே பின்னாட்களில் அனைவரும் சென்னை வந்த பின்னர் மாசாந்திர மளிகை சாமான்கள் தான். இதிலும் மாமியார் நான் எடுத்துக் கொடுத்துத் தான் சமைக்கணும் என்றார். சரினு விட்டுட்டேன். ஆனால் சென்னை வாழ்க்கையில் காலை ஏழரைக்குள் சமையல், டிபன் எல்லாம் ஆகவேண்டிய நிர்ப்பந்தம். கிராமத்தில் மாதிரி நிதானமான பத்துமணிக்கு மேல் சமைப்பது என்பது இல்லை. ஆகவே மாமியாரால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தானாகவே அதை விட்டு விட்டார். இதில் நான் குறுக்கிட்டுச் சொல்லி இருந்தால் உரிமைப் பிரச்னையாக மாறி இருக்கலாம். ஆனால் என் தலையீடு இல்லாமலேயே பிள்ளைகள் அலுவலகம்/கல்லூரி செல்லும்நேரத்துக்குச் சமைக்கமுடியவில்லை என்பது புரிந்ததும் அவர் விலகிக் கொண்டார். இதில் எல்லாம் நாம் நேரிடையாகச் சொல்வதை விட அவங்களாகப் புரிஞ்சுக்கறது தான் சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ஏதோ பெரும் புயல் வீசப் போகிறது என்று பார்த்தால் ....

    சரளமாகச் சென்று நிறைவடைகின்றது...

    கோலம் போடுவது.. குத்து விளக்கு ஏற்றுவது எல்லாம் குடும்பத்தின் பாரம்பரியமானவை...

    மூத்தோர் வகுத்த வழியே தான் செல்ல வேண்டும்...

    மாமியார் போய்ச் சேர்ந்த பிறகு வேண்டுமானால் மருமகள் புதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.. இப்படியே மாற்றி மாற்றி கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், துரை, நவராத்திரியில் ஆரத்தி எடுப்பதும், வாசல் தெளித்துக் கோலம் போடுவதும் காலம் காலமாய்ப் பெண்கள் செய்து வரும் ஒன்று. பிறந்த வீடுகளிலேயே உள்ள பழக்கங்கள். அந்த மருமகள் அன்னிக்கு டிகாக்‌ஷன் இறங்க நேரம் ஆவதால் இறக்கிவிட்டுப் போக நினைத்திருக்கலாம். அல்லது மாமியார் தான் செய்யட்டுமே, நாம் அடுக்களையைக் கவனிப்போம் என்றிருக்கலாம். மாமியாரே மருமகளிடம் இதுக்காகக் கத்தாமல் தானே செய்திருக்கலாம். இதெல்லாம் வெகு சாதாரணமான விஷயங்கள். தினசரி கட்டாயமான வேலைகள்!

      நீக்கு
    2. துரை சார்.. சில பெண்களுக்கு பிறந்த வீட்டுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாத நிலை. அதன் அடுத்த நிலை, 'நான் ஏன் அதை மாத்திக்கணும்?' அதற்கு அடுத்த நிலை, 'என்னை கேக்கிறீங்களே, அவங்களை மாத்திக்கச் சொல்றது தானே?' என்று மாமியாரை நோக்கி விரலை நீட்டுகிற நிலை. அதற்கும் அடுத்த நிலை, 'தனிக் குடித்தனம் போகலாம்ன்னு தினம் தினம் இதுக்குத் தான் இவர் கிட்டே அடிச்சிக்கிறேன்...'

      பெரும்பாலும் வலர்ப்பு தான் அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

      நீக்கு
  13. ஒரே அளவு பருப்பு ஒரே அளவு தண்ணீர் காய்கறிகள் - இப்படி வைத்துக் கொண்டு மாமியாரும் மருமகளும் நாத்தனாரும் தனித்தனியாக சாம்பார் செய்தாலும்

    அவை அத்தனையும் ஒரே சுவையாக இருக்காதே!... காரணம் -

    சாம்பார் வைக்கும்போது அவரவருக்கும் இருக்கும் மனோபாவம்...

    அதன் பெயர் தான் கைராசி.. கைப்பக்குவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகளிர் பக்கமும் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்றளவுக்கு இது உண்மை.

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. திருவையாறு வழியே ஓடுற காவேரித் தண்ணி கும்பகோணத்துல ஒரு மாதிரியா இருக்கும்.. மயிலாடுதுறையில வேற மாதிரி இருக்கும்...

    மாமியாரை அனுசரித்துச் செல்வது தான் மருமகளுக்கு அழகு...

    நவீன படிப்புகள் இவற்றைச் சொல்லித் தராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருவையாறு வழியே ஓடுற காவேரித் தண்ணி கும்பகோணத்துல ஒரு மாதிரியா இருக்கும்.. மயிலாடுதுறையில வேற மாதிரி இருக்கும்...//

      ஆஹா.. எவ்வலவு உண்மை?..

      'அவளை நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போகக் கூடாதா?" என்று மருமகளின் தாயார் தன் சம்பந்தியை கேட்கும் நிலை தான் இன்றைக்கு..

      'திருமணத்திற்கு ஒரு பெண் தயார் நிலையில் இருக்கிறாளா?' என்ற கேள்விக்கான அளவுகோல்களே மாறிப்போன காலம் இது.

      நீக்கு
  16. சாதாரணமாக எல்லா வீடுகளிலும் நடக்கும்  ஒரு சின்ன நிகழ்சியைக்  கொண்டு ஒரு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். ஆசிரியர். வெகு இயல்பான நடையில் நேர்த்தியான படைப்பு. ஆசிரியருக்கும், எ.பி.க்கும் நன்றி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பாவெ. மனசில் பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.

      இது ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுகதை.

      நீக்கு
  17. யதார்த்தமான மா.ம. பிரச்சனைகள்.

    //பிரசவ வைராக்கியம் பூண்டான் சுந்தரேசன்//

    ரசிக்க வைத்த வார்த்தை பிரயோகம் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹா.. பிசுபிசுத்துப் போவதற்கு பிரசித்திப் பெற்ற வைராக்கியம் இல்லையா, அது?..
      மாமியார் - மருமகள் உறவை ஆண்கள் பார்வையில் பார்த்த கதை இதுன்னு தனியாச் சொல்லணும் போல இருக்கு. இவங்க உரசலில் மாட்டிக் கொண்டு விழிப்பது ஆண்கள் தான் என்று எந்தக் காலத்திலும் இவர்கள் புரிந்து கொண்டதில்லை.. இதுவே எந்த ஜென்மத்திலோ விளைந்த ஆண்களுக்கான சாபமும் கூட. :))

      நீக்கு
    2. முக்கால் வாசி ஆண்களுக்குத் தங்கள் வீட்டு வழக்கம் என்னனே தெரியறதில்லை. ஆகவே அவங்க இம்மாதிரிச் சச்சரவுகளில் தலையிட்டால் கஷ்டம் தான்! சும்மாவானும் பேசாம இருங்களேன் இருவரும்! என ஒரு பொதுக் கூச்சல் போடலாம். பெண்கள் தான் குடும்ப வழக்கத்தை நுணுக்கமாகக் கவனிப்பார்கள்.

      நீக்கு
    3. ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி. ஒரு பக்கம் பெற்ற தாய்; மறு பக்கம் மனைவி. இந்த இரண்டு பேரும் இரட்டை மாடுகளாய் ஒத்துழைத்தால் தான் வீட்டில் சந்தோஷம் தவழும்.

      இந்த விஷயத்தை இந்த இரண்டு சாராரையும் விட மேலாகப் புரிந்து கொண்டிருக்கும் நுணுக்கம் கொண்டிருப்பவர்கள் தான் ஆண்கள்.

      அவன் பெண்டாட்டி தாசனாகவும் இருக்க வேண்டும், பெண்டாட்டி தாசன் என்று பிறர் சொல்லி விடாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற நிலை.

      வயது மூத்த பெற்றோர்களுக்கு எந்த அவமதிப்பும் நிகழ்ந்து அவர்கள் கண் கலங்கக் கூடாது என்று பாசத்தில் துடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சமும் அவனதே.

      இதைத் தான் நிம்மதியான குடும்ப வாழ்க்கை என்று அவன் நினைக்கிறான்.
      நுணுக்கமாக கவனித்து நீதி வழங்குவதில்லை அவன் வேலை. 'சரி..சரி.. விட்டுத்தள்ளுங்கள்.. ஒண்ணுமில்லாத விஷயத்திற்குப் போய்.. " என்று எதையாவது சொல்லி அந்த நேரத்திற்கு போக்குக் காட்டி இரண்டு பக்கத்தையும் சரி செய்ய வேண்டும். அந்தக் கணம் அவன் நினைப்பது அவ்வளவு தான்.

      மனைவி முகம் சிணுங்கினால், அது எங்கே பிரதிபலிக்கும் என்று நன்றாக அவனுக்குத் தெரியும்.

      கண் முன்னால் பெற்ற தாயை மனைவி சாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட எங்கேயாவது ஒழிந்து போகலாம் என்று நெஞ்சம் வேகும்.

      வயது வந்த இந்த இரண்டு பேரையும் அடக்கி ஆளமுடியாத கையாலாகத்தனம்
      மனசை வாட்டும்.

      இதையெல்லாம் பற்றி லவலேசமும் கருத்தில் கொள்ளாதவர்களாய் எந்த உயர்ந்த நோக்கமும் இல்லாமல் ஈகோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்களால் தான் இந்த மா.ம. பிரச்னைகள் தலை தூக்குகின்றன.

      பெண்கள் மனம் ஒப்பி ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தாலே இதற்கு ஒரு முடிவு காணலாம்.

      ஆனால் இந்தக் கதை நீங்கள் நினைக்கிற மாதிரியான மா.ம. கதையல்ல.

      தனக்கு வாய்த்த இந்த மருமகளை பிற்காலத்திற்கான தன் பிரதிநிதியாய் அவள் நினைக்கிறாள். தனக்கு வாய்த்த மாமியாரும் இதே மாதிரியான பயிற்சியில் தான் தன்னையும் பயிற்றுவித்திருக்கிறாள் என்று புரிதலில் விளைவாகவே தன் மருமகளுக்கு அதே மாதிரியான பயிற்சிகளை அறிமுகப்படுத்துகிறாள். அவள் நோக்கம் உயரியது. அதனால் அவள் மருமகளும் தெளிவாக அதைப் புரிந்து கொண்டு மருமகளுக்கு நல்லுபதேசம் பண்ணும் அடுத்த தலைமுறை மாமியாராய் திகழ்வாள்.

      அன்பும், கண்டிப்பும் இருந்தால் தான் தர்மத்தைக் காப்பாற்ற முடியும் என்று இந்து தர்ம சாஸ்திரம் அரசனுக்கும், ஆசிரியருக்கும் உபதேசிக்கிறது.

      மருமகள்கள் தங்களுக்கு அமையும் நல்ல மாமியார்களை வாழ்க்கைக் கல்விக்கான ஆசிரியர்களாக நினைத்தால் குடும்பம் தழைத்தோங்கும்.

      இதுவே இந்தக் கதையின் மூலமாக நான் சொல்ல விழைந்தது.

      நீக்கு
  18. பதில்கள்
    1. அனுபவ ஞானம்? எழுத்தாளன் பார்த்தது, கேட்டது, அறிந்தது எல்லாமே அவனுக்கான ஞானம் தான்!..

      நன்றி, கரந்தையாரே!

      நீக்கு
  19. //ஜீவி சார் எடுத்துக்கொண்டுள்ள பிரச்னை எல்லாம் ஜூஜுபி! ஒண்ணுமே இல்லை. மாமியார், மருமகளிடம் இன்னும் ஆழமாக, மருமகள் வேதனைப்படும்படியான/காலமெல்லாம் நினைத்து வருந்தும்படியான பிரச்னைகள் உண்டு.// 
    @ Geetha akka இங்கே ஜீ.வி. சார், குடும்பத்தில் நிகழும் சின்ன கருத்து வேற்றுமைகளை மட்டுமே குறி வைத்திருக்கிறார்.   பிரச்சனையை விட, அதற்கு காரணம், அது எப்படி களையப்பட வேண்டும் என்பதில்தான் கருத்து செலுத்தியிருப்பதாக நினைக்கிறேன். கதையின்  இறுதியில்  அதை தெளிவாக சொல்லியும் இருக்கிறார். பெரிய பிரச்சனைகளை பேசத் துவங்கினால் அது எங்கேயோ இழுத்துக் கொண்டு போய் விடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் பானுமதி! ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. சமையலில் பிரச்னை, வாக்குவாதம் எனில் ஒத்துக்கலாம். சிரிப்புத் தான் வந்தது எனக்கு இதைப் படித்ததும்! :))))))))) புக்ககத்துப் பழக்கம் தானே முன்னாடி வந்தாகணும்! :)))))

      நீக்கு
    2. பா.வெ.. சில நாட்களுக்கு முன் 'திருமண் இடும் பழக்கம் உள்ளவர் என்றால் அந்த மாப்பிள்ளை வேண்டாம்' என்ற மாதிரி நெல்லை ஒரு தகவலை வெளிப்படுத்தியிருந்தார் இல்லையா?..

      அந்த வெளிப்பாட்டுக்கான வித்து தான் இந்தக் கதையில் இருக்கிறது.

      'திருமண் இடும் பழக்கம்' என்றவுடனேயே பெண் வீட்டார் பையன் வீட்டார் எப்படி இருப்பார்கள் என்று தீர்மானித்து விடுகிறார்கள்! அந்த மாதிரியான ஆசாரங்கள் நம் பெண்ணுக்குப் பொருந்தி வராது என்பது அவர்களது தீர்மானமான முடிவு. பின் என்னத்தைச் சொல்வது?..

      வைதீகம், ஆசாரம், மடி - விழுப்பு, ஈரப்புடவையை கொடியில் உலர்த்தி கைபடாமலே கோலால் எடுப்பது என்று வரிசையாக.. இதெல்லாம் என் பெண்ணுக்கு சாத்தியமே படாது என்ற ஒதுங்கல் தான் இது!

      கோலம் போடத் தெரியாத, பூத் தொடுக்கத் தெரியாத, காஸ் அடுப்பு பற்ற வைக்கத் தெரியாத, துவரம் பருப்பு--கடலை பருப்புக்கு வித்தியாசம் தெரியாத நிறைய தெரியாதவைகள் கொண்ட தொகுப்பு தன் பெண் என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் தான் இந்த முடிவுகள்..

      கீதாம்மா நினைக்கிற மாதிரி இதெல்லாம் சின்ன விஷயங்கள் அல்ல.

      பெரிய விஷயங்களைச் சொல்லி பயமுறுத்தலுக்கும் அவசியமில்லை.

      இந்தக் கதையை பொருத்த மட்டில் மாமியாரும், நல்லவரே! மருமகளும் நல்லவரே!..

      அதனால் தான் கதையை இவ்வளவு ஈஸியாக ஒரு புரிதலுக்கு உட்படுத்தி முடிக்க முடிந்தது!..


      நீக்கு
    3. நீங்கள் சொன்ன கோலம் போடத்தெரியாத, பூத்தொடுக்கத் தெரியாத, அடுப்புப் பற்ற வைக்கத் தெரியாத, பருப்பு வகைகளுக்கு வித்தியாசம் தெரியாததோடு சாப்பாடு பரிமாறத் தெரியாத பெண்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பல பெற்றோர்களும் வீட்டு விசேஷங்களில் அவங்க பெண்களைப் பரிமாறச் சொல்லிப் பழக்குவதில்லை. அந்தப் பெண்களும் முன் வருவதில்லை. இலையில் சாப்பிட்டால் இலையை எடுக்கத் தெரியாது! சமைத்து மேஜையில் வரிசையாக வைத்துத் தட்டுக்களை வைத்து அவரவர் எடுத்துப் போட்டுக்கொண்டு (அதுவும் எச்சில் கையுடன்) சாப்பிடும் பஃபே முறைதான் தினசரி வாழ்க்கையிலும்!

      நீக்கு
    4. அதான் மாமியார் எதற்கு இருக்கிறார்?.. அவர் இலையை எடுத்தால் என்ன குடியா முழுகிப் போய் விடும்?.. என்று நல்லவேளை ஏனோ சொல்லவில்லை.

      நீக்கு
    5. அப்படிச் சொல்பவர்கள்/சொன்னவர்கள் உண்டு! இருக்கிறார்கள்.

      நீக்கு
  20. அருமையான கதை ஐயா...
    நகரத்து மாமியார் மருமகள் சண்டை பெரும்பாலும் சாமி கும்பிட, கோலம் போடுவதில்தான் வரும் போல... :)

    கிராமங்களில் சும்மா அடித்து ஆடுவார்கள்.

    சிறப்பு... அருமை.

    பதிலளிநீக்கு
  21. கரெக்ட்! டி.டி. எக்காலத்தும் அதற்கான ஞானம் கிடைத்து விடாத தொடர்கதை தான்!
    அந்த ஞானமே ஒரு மாயை தான்!

    ஞானம் கிடைக்கிற மாதிரி தோற்றம் கொடுக்கலாமே தவிர, மா.ம. உறவுகளின் உரசல் என்றும் தொடர்கதை தான்! ஏனென்றால் இதைத் தீர்மானிப்பது முற்றிலும் ஆண்கள் சம்பந்தப்படாத விஷயம்!

    சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் -- மாமன் மகளை, அத்தை மகனை மாலையிடும் பாக்கியம் பெற்றவர்கள் --வேண்டுமானால் உறவுக்குள் உறவு என்று ஒருவேளை சமாளித்துக் கடைத்தேறலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா...
      உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா...

      அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா...

      அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா...

      நீக்கு
    2. அபுரி, டி.டி.

      அத்தனை மகளென்றாலும் இந்தப் பிரச்னை இருந்து தான் தீருமோ?..

      நீக்கு
  22. @ பரிவை

    கதைக்காக ஏதோ ஒரு நிகழ்வு!.. பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தினர் மனப்புழுக்கத்திலேயே காலம் தள்ளி விடுவர்! இருக்கவே இருக்கு, 'எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ' என்ற தன்னளவில் சுருங்கிப் போதல்!

    வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  23. ஞானம் வர எலும்புத்தோலை உரித்துப் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  24. ஹஹ்ஹஹா.. மனம் அலைச்சல் படாமல் நிம்மதி கிடைத்தாலே ஞானம் பெற்ற மாதிரி தான்! என்ன சொல்றீங்க>,,

    பதிலளிநீக்கு
  25. அன்பின் ஜீவி அண்ணா..

    மேலே எனது கருத்துரை ஒன்றிற்கு

    // பெரும்பாலும் வளர்ப்பு தான் அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது..//

    என்று பதில் கூறியிருக்கின்றீர்கள்... எனது கருத்து தங்களைக் கவர்ந்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தம்பி துரையின் மகிழ்ச்சி என்னிலும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. நன்றி.

      நீக்கு
  26. ஜெயகாந்தன் அவர்களின் யுகசந்தி ஞாபகம் வந்து போகிறது...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சார், இங்கு தங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். நலம் தானே?

      யுகசந்தி என்றதும் கெளரி பாட்டி நினைவலைகள் நெஞ்சில் மோதின.

      இந்தக் கதையின் மாமியாரும் கிட்டத்தட்ட முப்பது வருட காலத்திற்கு முந்திய மாமியார். இவர் இன்றைய மாமியாரும் அல்லர். அதனால் தான் இன்றைய மாமியார்களை வைத்துக் குழப்பிக் கொள்ளாமலும் வாசிப்பு அனுபவத்தை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. தங்களின் என் நினைவுகளைக் கிளறிய பின்னூட்டத்திற்கு நன்றி, ரமணி சார்.

      நீக்கு
  27. வணக்கம் ஜீவி சகோதரரே

    அருமையான கதையை தந்திருக்கிறீர்கள். காலங்கள் வேறுபட்டாலும், இந்த மாமியார், மருமகள் பிரச்சனை என்னவோ தீரவில்லைதான். மருமகள் தான் மாமியாரிடம் பட்ட இந்த மாதிரி சிரமங்களை (புத்திமதிகளை தினம் ஒருவரிடமிருந்து ஒவ்வொரு மாதிரியாக பெறுவது அந்த காலத்திலிருந்தே அனைவருக்கும் ஒரு சிரமந்தானே..) திருப்பி தன் மருமகளுக்கு தரக்கூடாது என்றுதான் மருமகளாக இருக்கும் போது நினைக்கிறாள். ஆனால். மாமியார் ஸ்தானம் வந்த பின் அந்த நிலைபாடு மறந்து போகிறது. கால்ங்களின் வித்தியாசபடி, அவள் செய்யும் வேறு வேறு செயல்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறாள். மேலும் தான் மாமியாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டதாய் ஒரு இனம் புரியாத கர்வம் வேறு அவள் பேச்சுக்கு உறுதுணையாய் வந்து ஒட்டிக் கொள்கிறது. இது இயற்கையாகவே மாமியார் எனும் மனுஷிக்குள் புகுந்து விடும் குணம் கொண்டவை போலும்.

    இதில் வீட்டு ஆண்கள் தங்கள் கதைப்படி தலையிடாமல் இருந்தால் இந்தப் பிரச்சனைகள் பெரிதாக வளராமல் கட்டுக்குள் அடங்கி விடும். . ஏனெனில்,அவன்தான் வாழ்வியல் போர் என்ற தீக்கங்குகளை விசிறி தூண்டி விடும் கைவிசிறியை போன்றவன்.இரு பெண்களுமே வளர்த்த/வாழும் முறைகளுக்காக அவன் அன்பை முற்றிலும் இழந்து விடகூடாது என எதிர்பார்ப்பவர்கள். அவன் தன்நிலை உணர்ந்து இருவரிடமும் சமாதானமாக பேசி தன் அன்பு இருவருக்கும் பொதுவாக என்றைக்கும் இருக்கும் என்பதை உணர்த்தி விட்டால், போரின் காரணங்கள் மழை நீரில் நனைந்த தீபாவளி வெடியாக பிசுபிசுத்துப் விடும். ஒரு நல்ல குடும்பத்தின் பெருமை இந்த மூவரின் கையிலும் உள்ளது. உங்கள் கதையும் அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்துகிறது.

    இப்போது நாகரீகங்களினால் பழைய சம்பிரதாயங்களை கொஞ்சம் (நிறையவே) அனைவரும் மறக்க ஆரம்பித்து விட்டனர். இந்த சலசலப்பிற்கு தனியான வாழ்க்கை எவ்வளவோ மேல் என்ற எண்ணத்தில், தாங்கள் கருத்தில் சொன்ன மாதிரி, சுயநலங்களின் தாக்கத்தினால், குடும்பங்கள் பிரிந்து வாழும் சுகம் காண ஆரம்பித்து விட்டன. ஒன்றும் சொல்வதற்கில்லை.

    கதையின் முடிவு நன்றாக உள்ளது. இதுவே ஒரு நல்ல குடும்பத்திற்கு அழகு. நல்ல கருத்துள்ள ஒரு கதையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இந்தக் கதையை வாசித்து பகிர்ந்து கொண்ட நல்லெண்ணங்களுக்கு நன்றி, சகோ.

      //ஆனால். மாமியார் ஸ்தானம் வந்த பின் அந்த நிலைபாடு மறந்து போகிறது//

      இந்த இடத்தில் தான் ஒரு சின்ன ஆனால் ஆழ்ந்த திருத்தம், சகோ.

      மாமியார் ஸ்தானம் என்பது நல்ல மாமியார்களுக்கு ஒரு ஆசிரிய மனப்பான்மையைக் கொடுக்கிறது. அந்த குடும்ப பழக்க வழக்களில் மருமகளை ஒரு மாணாக்கனாய் வரித்து பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். பயிற்சிகளில் ஆசிரியர்களுக்கே உரிய கடுமை அவ்வப்போது தலையெடுக்கலாம். ஆனால் நல்ல மருமகளாய் வாய்க்கிற மாணாக்கர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பப்பாங்கும் தழைத்தோங்கும்.

      இது பற்றி மேலே கீதாம்மாவிற்கு நான் போட்டிருக்கிற பின்னூட்ட மறுமொழியை வாசிக்க வேண்டுகிறேன், சகோ.

      பா.வெ.! மிகச் சிறப்பாக அந்த மாமியார் பாத்திரத்தின் வார்ப்பை எடுத்துரைத்த தாங்களும் மேலே கீதாம்மாவுக்கு மறுமொழியாய் நான் குறிப்பிட்டிருப்பதை வாசித்து விட வேண்டுகிறென். நன்றி.

      நீக்கு
    2. 'ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி..' என்று எனது அந்த மறுமொழி ஆரம்பிக்கும். தங்கள் தகவலுக்காக்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் சொல்படி வாசித்தேன் சகோதரரே. தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான். மாமியார் நமக்கு நல்ல ஆசானாக இருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டது ஒரு காலம். இது அந்த காலத்திற்கு எல்லோருக்குமே உடன்பாடாக ஏன் இருவருக்குமே இசைவாகவே இருந்தது. (நான் சொல்லும் அந்த காலம் எனக்கும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு.அப்போது ஆண்களும், தன் மனைவியைப்பற்றி அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள்.) அதன் பின் படிப்படியாக நாகரீகங்கள் வளர வளர மாமியாரின் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுப்பது போல் பேசுவதும், அவர்களைப் பற்றி தன் பிறந்த வீட்டு உறவுகளுக்கு எதிரில் ஒரு மாதிரி பேசுவதும். அது போலவே மருமகளை தன் வீட்டு உறவுகளுக்கு முன் அவள் மனம் புண்படும்படி குறை கண்டு பேசுவதும், என்றெல்லாம் ஒரு வித போர் மனப்பான்மைகள் துவங்கி விட்டன. பிறகு தான் பள்ளியில் கற்று பெற்று வரும் பட்டங்களின் நிறைவால், தன் அடிப்படை வாழ்க்கை கல்வி (தன் அம்மா வீட்டில் கற்று வந்த பழக்க வழக்கங்கள்) போதுமென்ற எண்ணங்களில்,ஆசானாக வேறு யாரையும் ஏற்று போரிட இயலாமல் தனிக் குடித்தனங்கள் உண்டாகத் தொடங்கி விட்டன. ஒருவருக்கொருவர் அனுசரிக்க போராட்டங்கள்தான் முதல் படியாய் இருந்தது. அதை இன்முகங்களுடன் கடந்து வந்த மா.மருமகள்களும் இருந்தார்கள். முதல் படியிலேயே போரிட்டு இரண்டாம் படிக்கு ஏறாதவர்களும் எப்படியோ ஒருவரையொருவர் குறைகளைச் சொல்லிக் கொண்டே வாழ்ந்தார்கள். இந்த போர் கொடூரங்களின் உச்சமாக மருமகள் பற்ற வைக்கும் போது மட்டும் ஸ்டவ்கள் வெடித்தன. அதுபோல் வயதானவர்களுக்கு என்றே முதியோர் இல்லங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. பின்பு அவையெல்லாம் நடைமுறையில், போரடித்துப் போனதில் அயல்நாட்டு மோகங்கள் வந்து குவிந்தன. இப்படியாக மா. ம பிரச்சனைகள் இன்னமும் தலைத் தூக்கியபடிதான் இருக்கின்றன. இதற்கு இருவருமே ஒருவக்கொருவர் விட்டுத்தரும் குணாதிசயங்களோடு இறைவன் அருளால் அமைந்து விட்டால், அந்த குடும்பம் தெய்வ சன்னிதானத்திற்கு ஒப்பானது. அப்படிபட்டவர்களும் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை மனம் குளிர நன்றியோடு போற்றுவோம். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன். தவறாக ஏதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. அருமையாக உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள், சகோ.

      'இப்படியாக இருந்தால் எப்படி நன்றாக இருக்கும்?' என்பது பொதுவாக கதைகளுக்கான இயல்பான வழிகாட்டல் தான். ஆனால் நடைமுறை என்பது வேறாக இருக்கும் பொழுது, கதைகள் நாளாவட்டத்தில் தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்பதே உண்மை. அதாவது வழி வழி வரும் நம் பண்பாட்டு வழிகாட்டல்கள் தோற்கின்றன. அதன் தோல்விக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை.

      நம் இதிகாச புராண வேத வழிகாட்டல் மேன்மைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
      அவற்றை மனப்பூர்வமாக நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்ற நிதர்சனம்
      அந்த மேன்மைகளை செருப்புக் காலால் தேய்த்து மிதித்துப் புறந்தள்ளி விட்டது.

      பாக்குவெட்டி இடுக்குக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் பெண்கள் அவர்கள் அந்த நேரத்து மாமியாரும் இருந்தாலும் சரி மருமகளாய் இருந்தாலும் சரி பரிதாபத்திற்குரியவர்களே. இந்த பரிதாபத்தில் யாரும் நேர் x எதிர் இல்லை.
      இருவரும் பெண்கள் என்ற அம்சத்தில் ஒரு சாராரே.

      மாமியார்களும் மருமகள்களும் அந்தந்த நேரத்து தம் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் நேர்ந்து விடாமலேயே சாதுர்யமாகவோ அல்லது தங்கள் இயல்பான நடவடிக்கைகளாலோ அதைக் கடந்து வந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

      பெண்களுக்கு துவிஜ வாழ்க்கை அமைப்பு என்பது இறைவனால் சந்ததி விருத்திக்காக தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஒரு வீட்டில் வளர்ந்து இன்னொரு வீட்டில் வாழ்க்கைப்பட்டு வாழ்க்கைப்பட்ட இடத்தையே தன் அதற்கு மேலான வாழ்க்கைக்கான களமாகக் கொள்ள வேண்டும் என்ற வாழ நேர்ந்த வாழ்க்கையின் விதியாக (சட்டமாக) நிர்ணயிக்கப்பட்டு விட்டது. சொல்லப் போனால் இதுவே இயற்கை நியதி.

      'நீ எப்படி நடந்து கொண்டாயோ, அப்படியே உனக்கும் நிகழும்' என்பது இறைவன் வகுத்த நீதி. இந்த ஜென்மத்தில் தப்பித்தாலும் அடுத்த ஜென்ம நம்பிக்கையை மனத்தில் விதித்திருக்கும் இந்திய தர்ம சாஸ்திர விதிகளின் மேலான நம்பிக்கைகள் தாம் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

      சகிப்பு மனப்பான்மையோடு நமக்கு நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை நிலைகளைக் கடப்போம். இந்த அளவே இந்த நேரத்தில் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
      நல்லபடி இந்த நிகழ் வாழ்க்கையை கடக்க நம்முள் இருந்து நம் இறைவன் வழி காட்டட்டும். தங்கள் முதிர்ச்சியான கருத்துப் பகிர்வுக்கு நன்றி, சகோ.
      மனம் நிறைந்த மரியாதையுடன்,
      ஜீவி

      நீக்கு
    5. வணக்கம் சகோதரரே

      /அதாவது வழி வழி வரும் நம் பண்பாட்டு வழிகாட்டல்கள் தோற்கின்றன. அதன் தோல்விக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை./

      /'நீ எப்படி நடந்து கொண்டாயோ, அப்படியே உனக்கும் நிகழும்' என்பது இறைவன் வகுத்த நீதி. இந்த ஜென்மத்தில் தப்பித்தாலும் அடுத்த ஜென்ம நம்பிக்கையை மனத்தில் விதித்திருக்கும் இந்திய தர்ம சாஸ்திர விதிகளின் மேலான நம்பிக்கைகள் தாம் நமக்கு வழிகாட்ட வேண்டும்./

      /சகிப்பு மனப்பான்மையோடு நமக்கு நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை நிலைகளைக் கடப்போம். இந்த அளவே இந்த நேரத்தில் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.நல்லபடி இந்த நிகழ் வாழ்க்கையை கடக்க நம்முள் இருந்து நம் இறைவன் வழி காட்டட்டும்/

      ஆகா . தங்களது அருமையான பதில் கருத்துக்கள் கண்டு மெய் சிலிர்த்து விட்டேன். சிறப்பான கோணத்தில் வாழ்க்கையின் உறவு நிலைகளை, வாழும் வாழ்வியல் முறைகளை அலசி பதிலுரைகள் வழங்கும் தங்களது திறமைக்கு முன் நான் மிக மிக சாதரணமானவள். உங்களது பதில்களை, மனதில் உதிக்கும் கருத்துக்களை நான் என்றும் பணிவுடன் ஏற்கிறேன். கற்கிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  28. பதில்கள்
    1. வணக்கம் சகோதரி.

      ஏதோ எனக்குள் தோன்றிய கருத்தை ஏற்றதற்கு மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    2. இருவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி. மாமியார்களின் கபடில்லாத அன்பைப் புரிந்து கொண்டிருக்கும் மருமகள்கள் மனசில் வேற்றுமையான எண்ணங்கள் தோன்றவே தோன்றாது என்பது இன்னொரு பக்க உண்மை.

      மிஞ்சி மிஞ்சிப் போனால் இவர் யார்?.. தன் அன்பான (அப்பாவியான) கணவனின் தாய் அல்லவோ?' -- என்று ஆழ்ந்து உணர்ந்தால் போதும்.
      அத்தனை ஈகோக்களும் பஸ்பமாகும்.

      தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் தன் கணவனின் வழியாக மாமியார் அல்லது மாமனார் ஜாடையிலேயே அமைவதை எப்படித் தவிர்க்க முடியும்?

      ஒரே ஒரு நிமிடம் மனசார நினைத்துப் பார்த்தால் போதும்.

      நீக்கு
  29. //ஒருவொருக்கொருவர் இணக்கம் காட்டி நெகிழ்ந்து போவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்று தெளிந்து சுநதரேசன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்; தான் விலகி இருந்தாலே குடும்ப நிர்வகிப்பிலான விட்டுக்கொடுத்தலும், பெற்றுக் கொள்ளுதலுமான அந்த நெகிழ்வு இயல்பாக அவர்களுக்குள் வந்து விடும் என்கிற நாள்பட்ட சுயபுரிதலில் சும்மா இருந்தார்.//

    அத்தனை இறைச்சலுக்கு நடுவே, தன் தந்தை எப்படி அந்தக் காலத்தில் மெளனமாக இருந்தார் என்ற கலை, வயசாகி மட்டுமே கிடைக்கும் அனுபவ 'ஞானம்', இப்பொழுது சுந்தரேசனுக்குக் கைப்பட்டுவிட்டது.//

    சுந்தேரேசன் அவர்களுக்கு ஞானம் கைவரபெற்று விட்டதை ரசித்தேன்.

    அந்தக்காலத்தில் வயது ஆகி விட்டால் "கிருஷ்ணா ராமா," என்றும் "சிவ சிவா" என்றும் பேசாமல் நடப்பதை பார்த்து கொண்டு இருக்க சொன்னார்கள் போலும். அதுதான் ஞானம் கிடைக்கவழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, கோமதிம்மா.

      வயதாக வயதாக ஒரு கனிந்த நிலையை அடைகிறோம் என்பது உண்மை தான்.

      நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அந்த வயதில் ஒருவித தண்டனை தான். அந்தத் தண்டனையை கூடிய மட்டில் அவர்களுக்கு நாம் அளித்து விடாமல் இருப்பதே பிறவி எடுத்த பெரும் பயன்.

      அவர்கள் ஆசி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை. நெருப்பாற்றையும் நீந்திக் கடக்கலாம்.

      நன்றி.

      நீக்கு
  30. சும்மா இருப்பது சுகம் - குறிப்பாக ஆண்கள் - தனது அம்மாவும் மனைவியும் சண்டை போடும்போது! :) பல வீடுகளில் இன்றைக்கும் இந்தப் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

    கதைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. அப்படியிருப்பத்தை விட பேசாமல் 'விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட' என்று சந்நியாசம் வான்கிக் கொண்டு போகலாம்.

    'தமிழை அவமதிப்பவரை தாய் தடுத்தாலும் விடேன்' என்று சூளுரைக்கும் போது தாய் தான் முன்னிலைப்படுத்தப் படுகிறார். இன்னொருவர் தன் மனைவியேயானாலும் தாயைப் பழிப்பத்தை எந்த ஆண்மகனாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தான் துடிக்காவிட்டாலும் தன் சதை துடிக்கும் என்பது போல ஒன்று.

    இதனால் தான் மா.ம. பிரச்சனையே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    கருத்திட்டமைக்கு நன்றி வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!