புதன், 14 அக்டோபர், 2020

பெண் பார்க்கச் சென்ற அனுபவங்கள்!




நெல்லைத் தமிழன்: 

சமீபத்தில் "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே..." ஸ்லோகத்தை வீட்டில் சொன்னால் 100 முறை விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன், கோவிலில் சொன்னால் ஆயிரம் முறை .. .. என்றெல்லாம் படித்தேன். நாம் ஏன் இப்படி குறுக்கு வழியில் புண்ணியம் தேடிக்கொள்ளணும் என்று நினைக்கிறோம்? ராம நாமத்தின் உயர்வைச் சொல்வதற்கான ஒரு ஸ்லோகத்தை வைத்துக்கொண்டு, சஹஸ்ரநாமமே சொல்லவேண்டாம், இந்த இரண்டு வரிகளைச் சொன்னாலே போதும் என்கிற மாதிரி நம் மனம் ஏன் புரிந்துகொள்கிறது?

# ஒரு சிறு அளவேனும் ஆத்திக உணர்வு ஒரு பழக்கமாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் இந்த மாதிரியெல்லாம் சொல்லப் படுகிறது.

மேலும் பரமசிவன் இப்படி "ஶ்ரீராம ராம ராமேதி " சொன்னால் ஆயிரந் திருநாமமுரைத்த நற்பலன் என்று சொல்லியதால் அதற்கு ஒரு ஏற்றம் உண்டாகி விட்டது. 

நம்பிக்கை பாற்பட்ட விஷயங்கள் தர்க்கத்துக்கு ஏற்றதில்லை.

$ அந்த மாதிரி வேண்டுதல்கள் பலனும் பொன்னுக்கு பதில் பூ என்ற வகையில் இருந்தால் உங்களுக்கு சம்மதமா?

& உபநயனம் செய்து வைத்த பின் என் அப்பா கொஞ்ச நாளைக்கு சந்தியாவந்தனம் செய்யக் கற்றுக்கொடுத்தார், (இன்று - 14 th October என்  அப்பாவின் 113 ஆவது பிறந்தநாள் ) ஒரு மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் ஸந்த்யாவந்தனம் செய்தேன்.  தொலைவில் அமைந்திருந்த பள்ளிக்கூடம் (தொழில் கல்வி பள்ளி என்பதால்) காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்று மாலை ஐந்து மணிக்குத்தான் வீடு திரும்புவேன். எனவே தினமும், முடிந்த அளவு காயத்ரி ஜபம் மட்டும் சொல்லச்சொன்னார். கடந்த ஐம்பத்துநான்கு வருடங்களாக அதை மட்டும் விடாமல் செய்துவருகிறேன். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.  இது குறுக்கு வழி அல்ல; என்னால் இயன்ற ஒரே வழி! 

உங்களுக்கு ரொம்பப் பிடித்த பொழுது போக்கு எது?

# அவ்வப்போது வெவ்வேறு. காசில்லா சீட்டாட்டம் ஒரு சமயம்,  கர்நாடக இசை எப்போதும், ஷேர் மார்க்கெட் ஸ்டன்ட்டுகள், ஆன்மிக நூல், ஸ்டாண்ட் அப் காமெடி, கன்னடம் படிக்கக் கற்றல்.

$  பிடித்த பொழுபோக்கு  தூங்குவது ! 

& எங்கள் blog, மின்நிலா, facebook, whatsapp. TV news, amazon kindle, ஓய்வு எடுக்க நினைக்கும்போது (பெங்களூர் குளிரில்) நன்றாக போர்த்திக்கொண்டு படுத்துவிடுவது. (+ இந்த சீசனில் ஐ பி எல் கிரிக்கட் பார்ப்பது )

மனைவிக்குன்னு (ஒவ்வொருவருக்கும்) தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு என்பதை எத்தனை பேர் ஒத்துக்கொள்கிறோம்? அல்லது குடும்பமாக வாழும்போது தனிப்பட்ட ஸ்பேஸ் என்பதே அர்த்தமில்லாததா?

# எந்த சூழ்நிலையிலும் மனைவிக்கு என்று ஒரு பிரத்யேக இடம் கட்டாயம் இருக்கிறது. சில சமயம் மனைவியே அதை உணர்வதில்லை அல்லது இருப்பதாக எண்ணுவதில்லை என்பதே சோகம்.

& நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் அவர் எதிர்பார்ப்பதில்லை. எனக்கு வேண்டிய ஸ்பேசை அவரிடமிருந்து நான் யாசகமாகப் பெற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேன்! 

கொரோனாவால் ஏற்பட்ட நல்லது என்ன?

நாம் அலுவலகத்தில் தலை காட்டாமல் இருந்தாலும் அலுவல்கள் நடக்கும்
கடைசி மைலை நடத்திக் கொடுக்க ஆயிரக் கணக்கில் மக்கள். 

இந்த நோய் நமக்கு வராது என்பதோ வந்தால் மரணம் என்பதோ உண்மையல்ல.

நோய் வராமல் இருக்கப் பணக்கவசம் போதாது. மருத்துவ சேவையில் இருப்பவருக்கும்  குடும்பத்தாருக்கும் பாதிப்பு அதிகம்.

# கூட்டம் கூடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பாதிக்கும் மேலே வீட்டிலிருந்தபடி அலுவலக வேலை செய்ய இயலும்.
பள்ளி செல்லாமல் கற்க இயலும். 
பிறரை அநாவசியமாக நெருங்காதிருப்பது எளிது. இதெல்லாம் தெரியவந்தது.

& (தியேட்டர்களில் பார்க்கப்படும்)  சினிமா, சீரியல் என்ற பெயரில் வரும் குடும்ப உறவுகளைக் கெடுக்கும் அபத்தங்கள் எல்லாம் இன்றி மனிதர்கள் சந்தோஷமாக வாழ இயலும் என்னும் உண்மை. 

ஒருத்தருக்கு கதாசிரியர்கள் கதைகள் பத்தி பேசுவது பிடிக்குறது. சிலருக்கு உணவு. சிலருக்கு அரசியல். எல்லோருக்கும் பிடித்த டாபிக் எது?

# எதிரில் இல்லாத யார் தலையையாவது உருட்டுவது ?

& சுற்றி வளைத்துக்கொண்டு நீங்க எங்கே வருகிறீர்கள் என்று தெரிகிறது! நாராயண, நாராயண (நம் 'EB வாட்ஸ் அப்' குழு உறுப்பினர்கள் வரிசையாக வரவும்!) நாராயண, நாராயண! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

தங்கள் அனுபவங்களை பாடமாக படிப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள் எனலாமா?

# அனுபவங்களிலிருந்து பாடம் கற்பது அவ்வளவு எளிதில்லை. அதை சாதிக்க முடிந்த எல்லாரும் பாடங்களைப் பயன்படுத்துவதும் அதில் வெற்றி பெறுவதும் அதிகம் காணப்படுவதல்ல.

& உண்மைதான். அனுபவங்களிலிருந்து கிடைக்கின்ற பாடங்கள் என்றுமே மறக்காது. 

இதோடு எது வெற்றி? என்ற கேள்விக்கும் பதில் சொல்லி  விடுங்கள்.

# பலகாரத்தில் சிறந்தது இட்லியா தோசையா, நாட்டுக்குத் தேவை ஆணா பெண்ணா மாதிரியான கேள்விகள் சாலமன் சாரிடம்தான் எழுப்ப வேண்டும்.

& வெற்றி என்பது, நாமே முன்பு நிர்ணயித்துக்கொண்ட ஓர் இலக்கை அடைவதுதான். அந்த இலக்கை அடைந்தவுடன், மேலும் ஓர் இலக்கை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணிக்கவேண்டும். இலட்சியத்தை நோக்கி செல்லும் பயணம் என்பது முடியாத தொடர். In that race, there is no finish line. 

நீங்கள் பெண் பார்க்கச் சென்ற அனுவங்களை பகிர முடியுமா? எத்தனை பெண்களை பார்த்தீர்கள்? அப்போது அந்தப் பெண் என்ன பாடல் பாடினார்? அல்லது நீங்கள் பாடினீர்களா?

$  ஒரே ஒரு பெண் மட்டுமே. பாடினார். ஸ்ரீ ரகுகுல..
பின்னர் சுத்தானந்த பாரதியின் சொந்தக்காரர் என்று சொன்னதும், அவர் பாட்டு ஒன்று பாடேன் என்று என் பெற்றோர் கேட்டுக்கொண்டனர். 
சுத்தானந்த பாரதிக்கு இவ்வளவு தீர்க்க தரிசனமா என்று எல்லோரும் வியக்கும்படி  ஒரு பாட்டு பாடினார் - - - " சுப்ரமணியனை மறவாதிரு மனமே " என்று ! 

என் பாடல் திறன் பற்றி நான் ஏதும் சொல்லப்போக, காரொனா போல இருக்கு..ஒரு டெஸ்ட் எடுத்துடுங்க என்ற உபதேசம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ! 

# கேள்வி படித்த பின் நினைவு படுத்திச் சொல்கிறேன்.

மூன்று முறை பெண் பார்த்தல் நடந்தது.

1 பெண் அற்புதமாகப் பாடினார். பூர்வி கல்யாணி ராகத்தில் பாடல் நினைவில்லை. பொருந்தாத அம்சங்களால் அதோடு நின்று போனது.

2. பெண் பாடவராது என ஒப்புக் கொண்ட கேஸ். அப்பா இல்லாத பெண். பிள்ளையின் அப்பா, பெண்ணின் பெரியப்பா இடையே புரிதல் இல்லை. 

3. பெண் நன்றாகப் பாடுவார் என்று திருமணத்துக்குப் பின் தெரிந்தது.

& நான் பார்க்கச் சென்ற (ஒரே) பெண், என்னுடைய அத்தையின் பேத்தி. ஆனால் அவளை அது வரை பார்த்ததில்லை. அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்ததில்லை. அவள் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மதுரை, கோவை. இரண்டுமே நான் அதுவரை செல்லாத ஊர்கள். சொந்தம் என்பதால், அவர்கள்  எல்லோரும் குரோம்பேட்டையில், அருகில் இருந்த என் அக்கா வீட்டிற்கு வந்திருந்தனர். சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் - அவர்கள் வீட்டு சார்பில்  என் அக்கா செய்திருந்தார்! சென்றது முதல், பெண் வாயைத் திறந்து ஒன்றுமே பேசவில்லை. (ஹூம் - இப்போ எல்லாம் அப்படி இல்லையே ! சிவாஜி குரலில் படிக்கவும்) யாரோ #?  'பாட்டுப் பாடத் தெரியுமா' என்று கேட்டவுடன், அவள் "பாட்டெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கற்றுக்கொண்டு பாடுகிறேன்" என்றாள்! அந்த 'எம் ஆர் ராதா' குரலைக் கேட்டதுமே நாங்க எல்லோரும் கப் சிப் (அதாவது காபி 'கப்'பை  'சிப்' பண்ண ஆரம்பித்துவிட்டோம்!) 
ஆனால் - இப்போ, என்னை விட நல்ல குரல்  அவளுக்குத்தான்! 

===============

மின்நிலா எல்லோரும் படிச்சாச்சா ? 
சென்ற திங்கள் பதிவில் இருக்கு சுட்டி,
சற்று எல்லோரும் பாருங்க அதைத் தட்டி!

இங்கேயும் கொடுக்கிறேன் மீண்டும் 
ஒரு சுட்டி >>>> (மின்நிலா 021) 

மின் நிலா தீபாவளி மலர் வெளியிடுவோமா? 
அதில் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? 
மின்நிலாவுக்கான உங்கள் படைப்புகளை 
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 

நன்றி. 

==== 

மேலும் ஒரு வேண்டுகோள். 

சமையல் குறிப்புகள் இன்னும் மூன்று வாரங்களுக்குத்தான் கைவசம் உள்ளன. (நவம்பர் இரண்டு வரை) எனவே, 

வழக்கமாக ரெஸிப்பிகளை அனுப்பும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக நவராத்திரி சுண்டல் முதல், சுகியன் வரை, தீபாவளி லேகியம் முதல், லேட்டஸ்ட் ஸ்வீட் வரை எல்லாவற்றையும் எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்! 

===== 

115 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌதமன் ஜி.
    அனைவருக்கும் என்றும் இறைவன் துண
    இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. டைப்போ எரர் வந்ததால் அகற்றினேன்.

    நான் கேட்ட கேள்வியும் வரவில்லை
    பதிலும் இல்லை.
    இப்பொழுதும் கேட்கிறேன்:)
    மறதி என்பது வியாதியா?

    அசிரத்தையா?

    முக்கியமானது இல்லை என்று மறப்பதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுப்போச்சு போல...    அடுத்த வாரம் பதில் போட்டுடலாம்மா...

      நீக்கு
    2. அட ! ஆமாம் - மறதியோ !! அடுத்த வாரம் பதில் சொல்கிறோம்!

      நீக்கு
    3. //அசிரத்தையா?// - வல்லிம்மா... அவங்க அப்புறம் பதில் சொல்லட்டும். என் மனைவி என்னிடம் சொல்வது, 'நான் எதையும் உள் வாங்கி கேட்டுக்கொள்வதில்லை. அதனால்தான் மறதி வருகிறது' என்கிறாள். எனக்கு யாருடைய முகமும் நினைவுக்கு சட்னு வருவதில்லை. (ரொம்ப ரொம்ப வருஷமாகவே). இவங்களைப் பார்த்திருக்கோம், எங்க என்பது தெரியாது, ஆனால் அவங்க என்னிடம் ரொம்ப சகஜமாகப் பேசுவாங்க. Face recognition பண்ணும் பகுதியில் ஏதோ குறை போலிருக்கு. ஹாஹா.

      நீக்கு
    4. //தமன்னா ?// - அதிலும் கேஜிஜி சார் தேர்ந்தெடுக்கும் தமன்னா படங்கள் - சுத்தம்.

      அது இருக்கட்டும். அந்தக் கட்சிலேர்ந்து ராஜினாமா பண்ணியாச்சு.

      நீக்கு
    5. அப்போ அனு கட்சியில சேர்ந்துடுங்க - மாநில துணைத் தலைவர் நீங்கதான்!

      நீக்கு
  4. நெல்லைத்தமிழன், பானு வெங்கடேஸ்வரன் கேள்விகளும் அவற்றுக்கான
    பதில்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கௌதமன் ஜி, முரளிமா.
      எப்ப பார்த்தாலும் அட்டென்ஷன்லயே
      நிற்பது சிரமம்.
      கொஞ்ச நேரத்துக்கு மேல் நான் எங்கேயோ போய் விடுகிறேன்.

      மகள் கூட பக்கத்தில் வந்து இப்ப சொல்றதை ஞாபகத்தில் வச்சிக்கொன்னு
      கேலி செய்வாள்.
      முகங்கள் மறப்பதுதான் சோகம்.

      நீக்கு
  5. வழக்கமாக ரெஸிப்பிகளை அனுப்பும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக நவ////////////////Ahhhaa escape.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பிரார்த்தனைகள். இறங்கும் தொற்று முழுக்க முழுக்க இறங்கி எல்லோர் மனதிலும் வயிற்றிலும் பாலை வார்க்கட்டும். பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. எபியில் ஸ்லாட் இல்லையேனு தான் என்னோட பல சமையல் குறிப்புக்களையும் முகநூல், என்னோட வலைப்பக்கங்கள்னு போட்டுக் கொண்டேன். இரண்டு, மூன்று படங்களோடு வெளியிடாமல் இருக்குனு நினைப்பு. பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து அனுப்புங்கள்!

      நீக்கு
    2. திப்பிசம் கூடாது என்று கண்டிஷன்லாம் அவர்ட்ட போட்டுடாதீங்க. அப்புறம் எதுவும் தேறாது.

      நீக்கு
    3. நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  8. மின் நிலா செம்பருத்தி மிக அழகு. அதே போல
    Trick shots superb.
    பிடித்த பண்டிகை பற்றி எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  9. நெல்லையும் பானுமதியும் இன்னிக்கு ஒட்டு மொத்தக் குத்தகை போல! சுவாரசியமான கேள்வி பதில்கள். நம்மவர் பெண் பார்த்ததும் என்னை மட்டும் தான்! பெண் பார்த்து 22 நாட்களிலே கல்யாணமும் ஆகி விட்டது. எல்லாம் என்னோட "கீதா கல்யாணமே வைபோகமே!" மின்னூலில் விபரமாக எழுதி இருக்கேன். :)) ஹிஹி, சான்ஸ் கிடைச்சா விளம்பரம் செய்யாமா இருப்போமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நினைவில் இருக்கு. நடக்கணும் என்று விதி இருந்தால் அது சட்னு நடந்துடும் என்பதற்கு உங்கள் கல்யாணம் ஒரு உதாரணம். ரொம்ப ரசனையாக எழுதியிருந்தீங்க.

      நீக்கு
    2. ரசிச்சதுக்கு நன்னி நெல்லை.

      நீக்கு
  10. பெண் பார்த்தல் சம்பவங்கள் சுவை.
    எம் ஆர் ராதா குரல் சுசீலாமா மாதிரி
    ஆகிவிட்டதா.

    பதிலளிநீக்கு
  11. அன்பு முரளிமா,
    என்னைப் பொறுத்தவரையில்
    சங்கடம் ,சவால் இல்லாத சம்பாஷணை பிடித்திருக்கிறது.
    அதில் அரட்டை ஓகே.
    எழுத்தாளர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் ஆக
    இருந்தால் ஒன்றிரண்டு பதில் சொல்லலாம்.
    உணவு எல்லோருக்கும் பிடித்தது.

    அரசியல் வம்பு வேண்டாம்.வீண் கோபத்துக்கு
    வித்திடும் விவாதம்.

    அறிவு சார்ந்த வேறு என்ன டாபிக் இருக்கிறது.

    கார்த்திக் சொல்லும் கணினி செய்திகள் புரிந்தால்
    படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்த கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் வல்லிம்மா. வெறும்ன நகைச்சுவையோடு அல்லது சங்கடம் தராத உரையாடல்கள் எப்போதும் மகிழ்ச்சி தரும். 'உங்களுக்கு போளி பிடிக்காதா..அது பிடிக்காத ஆளும் உலகத்தில் உண்டா... கொஞ்சம் கூட ரசனையே இல்லையே' என்று சண்டைக்கு வந்தால், 'ஆளை விடுங்கடா சாமிகளா' என்று வராமலேயே இருக்கத் தோணிவிடும்.

      நீக்கு
    3. அதேதான் முரளி மா.
      எங்கேயோ இருக்கோம் எதற்காக விவாதம் ?

      அற்ப விஷயங்களுக்காக யாரையும் நோக வைக்க வேண்டாம்.

      நீக்கு
  12. கொரோனாவால் ஏற்பட்ட நல்லது என்ன?////////////

    இங்கே சொல்லப்பட்ட எல்லா நன்மைகளும் நிஜம்.
    ஆனால் இவ்வளவு நடந்தும் உணராமல்
    கூட்டம் போடும் மக்களின் நிலை
    இங்கே பரிதாபம்.
    தினம் ''மத்யமர்'' குழுவில் பார்க்கும் பாதிப்பும்
    பரிதாபம்.


    இதற்குப் பின் குழந்தைகள்,

    பெரியவர்களின் மன நலம் சிறிது சிதைக்கப் படுவதும்
    நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. குடும்பத்து சேதிகளைப் பேசியதைப் போல் இன்றைய பதிவு...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. அடேங்கப்பா... எப்படி எல்லாம் கேள்விகள்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம். பதில்கள் ஸ்வாரஸ்யம். நெ.த.யின் முதல் கேள்விக்கு எல்லா பதில்களும் நன்றாக இருந்தாலும் & யின் பதில் மிகவும் பிடித்தது. அவர் தந்தையாரை நினைவு கூர நேர்ந்தது ஒரு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. யூ ட்யூபி்ல் செளமியாவின் கச்சேரி கெட்ட பொழுது அவர், "யாரோ இவர் யாரோ,என்ன பேரோ.." பாடலைப் பாடினார். எங்கள் பெரிய மாமா பெண் பார்க்கச் சென்ற பொழுது அந்நாளைய அந்தப் பெண் "யாரோ இவர் யாரோ.." பாடலைத்தான் பாடினாராம். அது நினைவுக்கு வந்ததால் எழுந்த கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான், ரா ரா ராஜீவ லோசன பாடினேன். (நமக்குத்தான் சங்கீதம் வராது, ஆனால் பாட வரும். வார்த்தை உச்சரிப்பு நல்லா இருக்குன்னு சொன்னாங்க. தாளம் - திருகுதாளம்தான்)

      நீக்கு
  17. என்னைப் பெண் பார்க்க வந்த பொழுது நான்,"எனக்கு பாடத் தெரியாது" என்றதும்,என் பெரிய நாத்தனார், "படிக்கலையா?" என்று கேட்டார். இப்பொழுதுதானே பி.காம். படித்திருப்பதாக சொன்னோம், இப்படி கேட்கிறாரே?"என்று நான் முழிக்க, அவர்,"பாட்டு படிக்கலையா?" என்றார். ஓஹோ!இது பாலகாட்டு பாஷை என்று நான் புரிந்து கொண்டேன்.
    என் மகளை பெண் பார்க்க வந்த என் மாப்பிள்ளை,சாய் பஜன் ஒன்று பாட, அதற்கு என் மகள் கீ போர்ட் வாசித்தாள். முறையாக சங்கீதம் பயின்ற என் மாப்பிள்ளை மிக நன்றாக பாடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்துவைத்த குடும்பம். வாழ்க வளமுடன்!

      நீக்கு
    2. ஆமா இல்ல! எங்க ஊர்ப்பக்கமும் பாட்டுப் படி என்றோ, பாட்டுச் சொல்லு என்றோ தான் சொல்வார்கள். பாட்டுப்பாடு என்பதையே அதிகம் கேட்டதில்லை. கல்யாணம் ஆகி வந்து தான் பல புதிய சொற்கள் கற்றுக் கொண்டேன். பாட்டுக் "கத்தி"ண்டேன். என்றோ "கத்தி"க்கோ என்றோ "கத்தி"க்கலையா என்றோ கேட்பார்கள்.. நான் திரு திரு! அதே போல் பங்டு என்பார்கள், பள்டம் என்பார்கள். இதெல்லாம் பின்னாட்களில் "பங்கீடு" எனவும், "பள்ளிக்கூடம்" எனவும் புரிந்து கொண்டேன். பரவாக்கரை ஊர்ப் பெயரையே "பராரை" என்று சொல்ல நான் ஊர்ப் பெயரே அதானாக்கும் நினைச்சிருக்கப் பின் சில ஆண்டுகள் கழிச்சுத் தான் ஊர்ப் பெயர் "பரவாக்கரை" என்று புரிந்தது. கும்பகோணம் எப்போவுமே "கும்மாணம்" அல்லது "கும்மோணம்" தான்!

      நீக்கு
    3. //பரவாக்கரை ஊர்ப் பெயரையே "பராரை" என்று சொல்ல//

      கொஞ்ச காலம் நான் வத்திராயிருப்பு என்கிற ஊரில் வேலை பார்த்தேன்.  அந்த ஊர்ப்பெயரை வத்ராப் அல்லது வத்றாப் என்றுதான் சொல்வார்கள்.  பஸ் போர்டிலும் அப்படியே எழுதி இருக்கும்.

      ஸ்ரீவில்லிபுத்தூரை சில்ட்டூர் என்பார்கள்.  நல்லவேளை, பஸ் போர்டில் அபப்டி எழுதி இருக்க மாட்டார்கள்!

      நீக்கு
    4. //பல புதிய சொற்கள் கற்றுக் கொண்டேன். பாட்டுக் "கத்தி"ண்டேன். என்றோ "கத்தி"க்கோ என்றோ "கத்தி"க்கலையா என்றோ கேட்பார்கள்.. //

      மதுரைப்பக்கம் நிறைய புது வார்த்தைகள் உலவும்.  டர் ஆயிட்டான், ஆட்டையை போட்டான், என்று சென்னை போலவே நிறைய வார்த்தைகள் உருமாறி இருக்கும்!

      நீக்கு
    5. ஆமாம், இந்தத் தட்டு, தாம்பாளம் இரண்டும் மதுரையிலே சொல்லுவது சாப்பிடும் தட்டு, பித்தளைத்தாம்பாளம் என. ஆன என் புக்ககத்தில் நேர் மாறாகச் சாப்பிடும் தட்டைக் கூடத் தாம்பாளம் என்பார்கள். தாம்பாளத்தை அலம்பிப் போடுனு சொன்னப்போத் திகைச்சுப் போயிட்டேன். அப்புறமாத் தான் சாப்பிடும் தட்டைத் தாம்பாளம்னே சொல்வாங்கனு புரிஞ்சது. இப்போ எல்லோரையுமே தட்டுனு சொல்ல வைச்சுட்டோமே! :)))))) அதே போல் வட்டை, தம்பளர். மதுரையில் இன்னமும் வட்டை அல்லது வட்டா தான். ஆனால் இங்கே டபரா, தம்பளர். டபரா என்ற சொல்லே அங்கெல்லாம் ஓட்டலில் தான் சொல்வார்கள். வீடுகளில் வட்டை, தான். பாத்திரங்களை நாங்க பாத்திரம் என்போம். மாமியார் வீட்டில் "ஏனம்" என்பார்கள். இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய

      நீக்கு
  18. ஒரு சிறு அளவேனும் ஆத்திக உணர்வு ஒரு பழக்கமாக இருப்பது பல விதங்களிலும் நல்லது.

    பதிலளிநீக்கு
  19. இருவருடைய கேள்வி-பதில்களும் மிகவும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  20. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    மின் நிலா - தீபாவளி மலர் - ஆஹா. வாழ்த்துகள்.

    ’திங்க’ கிழமைக்கு பதிவுகள் - எப்போதும் எழுதுபவர்கள் விரைவில் மேடைக்கு வரவும்! :) மற்றவர்கள் படிக்க வரலாம்!

    பதிலளிநீக்கு
  21. மாலை மயங்கும்போது/அல்லது அதிகாலை எடுத்ததா? செம்பருத்திச் செடி?

    பதிலளிநீக்கு
  22. நன்றாக இருக்கிறது மின் நிலா. பண்டிகைகள் எல்லாமே பிடிக்கும். கொண்டாட எல்லாமுமே அழகு, வசதி! நவராத்திரி மட்டும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து வருவதால் கொஞ்சம் களைத்துவிடும். பின்னர் சரியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. விவரமாக எழுதி அனுப்புங்கள்!

      நீக்கு
    2. //விவரமாக எழுதி அனுப்புங்கள்!// - போச்சுடா... அடுத்து 9 வாரங்களும் திங்கக் கிழமை, சுண்டல் பதிவுகள்தானா?

      நீக்கு
    3. நெல்லை நீங்க ஸ்வீட் செய்வது பற்றி எழுதுங்க.

      நீக்கு
    4. நான் எழுதப்போறதை இப்போதே சொல்லிடறேன். ஸ்வீட் இல்லை. என் பெண் ஓரிரண்டு ஸ்வீட்ஸ் பண்ணினா. படங்கள்லாம் எடுத்த மாதிரி தெரியலை. ஆனா அவ கொஞ்சம்கூட சாப்பிடலை (வெயிட் போட்டுடுமாம்). ஆனா உறவினர்கள் வீட்டில் அவற்றிர்க்கு மிகுந்த வரவேற்பு. இந்த வாரத்தில் நான் செய்ததை எழுதிடறேன். இல்லைனா, பா.வெ. மேடம், சாதம் பண்ணறதைக்கூட எனக்கு விட்டுவைக்க மாட்டாங்க.

      நீக்கு
    5. //நான் எழுதப்போறதை இப்போதே சொல்லிடறேன். //

      எங்கே?!!

      நீக்கு
  23. என்னை முதன்முதலில் பெண் பார்க்க வந்ததும் அவரே, அவர் முதன்முதலில் பெண் பார்க்கச் சென்றதும் நானே...:) அமைந்து விட்டது..நானாவது அவர் புகைப்படத்தை ஒரு வாரம் முன்பு பார்த்தேன்...:) அவர் நேரே பெண் பார்த்த போது தான்...:) நிச்சயத்தை முடிவு செய்த பின்பு தான் பெண் பார்க்கும் படலமே...:) கழுதையோ, குதிரையோ முதலில் பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையால் என் திருமணம் நிகழ்ந்தது...:) முகநூலில் கெளதமன் சாரின் அனுபவத்தை ரசித்ததால் இங்கும் பகிர்ந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஆதி! நம்மவருக்கு அதே கொ"ல்"கை தான். என் மாமனார் இயன்றவரை மாற்றப்பார்த்தார். இந்தப் பெண் இல்லைனால் கல்யாணமே வேண்டாம். வேறே பெண்ணெல்லாம் பார்க்க மாட்டேன்னு சொன்னாராம்! :)))))))

      நீக்கு
    2. அடடே...   வாங்க திருமதி வெங்கட்...   உங்கள் வரவு தொடர் வருகையாகுக...!

      நீக்கு
    3. // இந்தப் பெண் இல்லைனால் கல்யாணமே வேண்டாம். வேறே பெண்ணெல்லாம் பார்க்க மாட்டேன்னு சொன்னாராம்!// இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் !!

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேஜிஜி! நிஜம்மாவே அப்படித் தான் சொல்லி இருக்கார். இப்போக் கூட நான் சமயத்தில், கிண்டல் பண்ணுவேன். என்ன இருந்தாலும் உங்க அத்தை பெண்ணைப் பண்ணிண்டிருந்திருக்கலாம்னு சொல்வேன்! அதுக்கு அவர், "நான் கல்யாணமே பண்ணிண்டிருக்க மாட்டேன்!" என்பார்.

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மையைச் சொன்னாக் கூட நம்பறதில்லை! நேரம்!

      நீக்கு
    6. //..இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் !//

      இதில் ‘கொஞ்சம்’, ‘தான்’ ஆகியவற்றை நீக்கிவிடலாம்...

      நீக்கு
    7. உண்மைக்குக் காலம் இல்லை போல!

      நீக்கு
  24. பெண் பார்த்த அனுபவம்...ஹாஹாஹா.

    பெற்றோர் பார்த்துவிட்டு போட்டோ அனுப்பி, மற்றதெல்லாம் சொல்லிவிட்டு, உனக்கு ஓகேன்னா, ஃபேக்ஸில் (எழுத்தில்) அனுப்பு, அவர் குடும்ப நண்பர், அதனால் உன்னுடைய சம்மதம் எழுத்தில் இருக்கணும், commit பண்ணினப்பறம் வேற யோசனை வரக்கூடாது என்பது என் அப்பாவின் எண்ணம். எனக்கோ, கல்யாணம் லேட்டாகிறதே என்ற எண்ணம். நேரே திருமணத்துக்குத்தான் வருவதாக ஏற்பாடு. அப்புறம் பெண் சொன்னதன் பேரில், நிச்சயதார்த்தத்துக்கு வந்தேன். மாமனார் என் ப்ரொஃபசர்தான். தெரிந்தவங்க (ஆனால் அவர் பெண்களைப் பார்த்ததே இல்லை).

    நிச்சயதார்த்தத்துக்கு ஒரு தடவை, பிறகு மூணு மாசம் கழித்து கல்யாணத்துக்கு ஒரு முறை என்று துபாயிலிருந்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா பாருங்க...சின்ன வயசிலிருந்து எனக்கு காதல் திருமணம்தான் நடக்கணும் என்று எண்ணம். ப்ராப்தம் இல்லை. என்னத்தைச் சொல்ல? ஹாஹா

      நீக்கு
    2. //சின்ன வயசிலிருந்து எனக்கு காதல் திருமணம்தான் நடக்கணும் என்று எண்ணம்//

      என் பையன் அப்படி சொல்லிதான் காலம் கடத்தறான் இப்போ!

      நீக்கு
    3. எங்க அண்ணன், 'ஏய்... எங்கள்ட சொல்ற மாதிரி லவ் கிவ் பண்னா வீட்ல சேத்த மாட்டோம்' னு சொல்வான். காதல் திருமணம்லாம் ஜாதகத்துல இருக்கணும். பேசாம அதை முதலில் ஜோசியர்ட்ட செக் பண்ணிக்கோங்க. அப்புறம் தன்னால வழிக்கு வருவான்.

      நீக்கு
    4. ஜோசியர் உங்களுக்கு காதல் திருமணம் ராசி இல்லை என்று சொன்ன பிறகுதான் இந்தக் கூத்து!

      நீக்கு
  25. //எதிரில் இல்லாத யார் தலையையாவது உருட்டுவது ?// - இது ரசனைக்குறைவான விஷயம்னு நினைக்கிறேன். இருக்கறவங்களைக் கலாய்த்தாலாவது அர்த்தம் இருக்கு. ஆனா சினிமா காசிப் இதெல்லாம் அனைவரும் விரும்பிக் கேட்பதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. கொரோனால ஏற்பட்ட மிகப் பெரிய கெடுதல், பசங்களுக்குத்தான். அவங்க படிப்பு இந்த வருடம் ரொம்பவே மோசமாகிவிட்டது. காலேஜ், ஸ்கூல், ஆபீஸ்னு போகவேண்டியவங்க வீட்டில் இருப்பது பரிதாபமாக இருக்கிறது. அந்த ரிதம் போயிடுச்சுன்னா அப்புறம் மீண்டும் ரிதம் வருவதற்கு ரொம்ப நாட்களாகும், அவங்க படிப்பும் ரொம்பவே கெட்டுப்போயிருக்கும் (கூடவே டிசிப்ளினும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் பள்ளிக்கூடம் திறந்த மூன்று மாதங்களில் சரியாகிவிடும். பல குழந்தைகள் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் கற்று வருகிறார்கள்.

      நீக்கு
  27. //கன்னடம் படிக்கக் கற்றல்.// - இவர் எங்கே தாமசம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ ಶ್ರೀಮಾನ್!

      நீக்கு
    2. ಎನಕ್ಕು ಮತ್ತುಮ್ ಎಜ಼ುಥಥ್ ಥೆರಿಯಾಥಾ? ವಾನುಮ್ ಒಜ಼ುನ್ಗ್ಕಾ ಕನ್ನತಮ್ ಕಥ್ಥುಕ್ಕೊಳ್ಳಣುಮ್ ಎನ್ಱು ಪಾರ್ಕ್ಕಿಱೇನ್.

      நீக்கு
    3. ನಿಮಗೆಲ್ಲ ಯಶಸ್ಸು ತಂದುಹಾರೈಸಲಿ ಎಂದು ಹಾರೈಸುತ್ತೇವೆ

      நீக்கு
    4. கன்னடப் புலவர்கள் ரெண்டுபேர் திடீரென எப்படிப் ப்ரத்யட்சமானார்கள் இங்கே ! தீபாவளி மலர்ல கன்னடத்துக் கவிதகளை எழுதி வைங்க.. யார் கேக்கப்போறாங்க அல்லது படிக்கப்போறாங்க!

      நீக்கு
  28. ஆஹா, பல வருஷம் முன்ன இந்த பெண் பார்த்தல் கதையை என்னோட Blogல தொடர்பதிவா ஆரம்பிச்சு வெச்சு, "பத்த வெச்சுட்டியே அப்பாவி தங்கம்"னு  பலரும் செல்லமா திட்டின நினைவுகள் வந்துடுச்சு கௌதமன் சார். Feeling   Nostalgic

    எனக்கும் இவர் உறவு தான். சூப்பர் பிளாஷ்பேக். நிறைய பழைய நினைவுகளை கிளப்பி விட்டுடீங்க சார் :)

    பதிலளிநீக்கு
  29. கேள்விகளும், பதில்களும் மிக நன்றாக இருந்தது.
    சில பதில்கள் நகைச்சுவையாக சிரிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. என் கண்மணி பாடலின் மேற்தகவல்கள் ஸ்வாரஸ்யம். ஶ்ரீராம் சொல்லியிருப்பது போல அந்தக் காலத்தில்,வானொலியில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல்களுள் இதுவும் ஒன்று. அதுவும் ஞாயிறு என்றால் காலையில் சிலோன் ரேடியோவில் ஒரு முறை, விவிதபாரதியில் ஒருமுறை, திருச்சி ரேடியோவில் ஒரு முறை, சென்னை ரேடியோவில் ஒரு முறை என்று மாற்றி மாற்றி கேட்டிருக்கிறோம். "வீணை பேசும்..", "செல்லப்பிள்ளை சரவணன்.." போன்ற பாடல்களும் அந்த லிஸ்டில் உண்டு. ஒரே பாடலை எத்தனை முறை கேட்பீர்கள்? என்று வீட்டு பெரியவர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சந்தோஷமான அனுபவங்கள்தான்! எங்கள் வீட்டு ரேடியோவிலும் நாங்க திருப்பித் திருப்பி, tuning switch (எங்களைப் போல) லூஸ் ஆயிடுச்சு!!

      நீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!