திங்கள், 30 நவம்பர், 2020

"திங்க"க்கிழமை :  உப்பு தோசை, வெல்ல தோசை  - கீதா சாம்பசிவம் 

 

உப்பு தோசை

சின்ன வயசில் அம்மா, பெரியம்மா எல்லோரும் இந்த தோசை அடிக்கடி பண்ணுவாங்க. அநேகமா மாசத்துக்கு இரண்டு தரம் இந்த தோசைகள் இருக்கும்.  ஆனால் கோதுமையைத் தான் அரிசியோடு சேர்த்து ஊற வைத்து அரைப்பார்கள். இப்போ நான் கோதுமை வாங்குவதில்லை. மாவு மிஷினிலேயே கோதுமையைப் பார்த்து வாங்கி அங்கேயே அரைக்கக் கொடுத்து மாவாக வீட்டுக்குக் கொண்டு வரும் வசதி வட மாநிலம் மாதிரி இங்கேயும் வந்து விட்டது. ஆகவே கோதுமை வாங்கி வெயிலில் காய வைத்து மாவாக்கி என்பதெல்லாம் இப்போ இல்லை. கோதுமை ரவை வாங்குவேன். அவ்வப்போது உப்புமா கிளறலாம் என்பதோடு இம்மாதிரி தோசைகளும் வார்க்கலாம். அப்பம் பண்ணும்போது அரிசியோடு இதையும் சேர்த்து அரைத்து அப்பம் குத்தலாம். இப்போ அடிக்கடி இந்த தோசை பண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்றாலும் பகிரவில்லை.


இன்னிக்குப் பகிரணும்னு நினைத்துக் காலையில் அரைக்கப் போடும்போதே படங்கள் எடுத்து வைத்தேன். ஆனால் மாலை அரைக்கும்போது வேலை செய்யும் பெண் பால்காரர் என அடுத்தடுத்து வந்ததில் அரைக்கையில் படம் எடுக்க மறந்தே போச்சு! சரி தோசை வார்க்கையில் படம் எடுக்க நினைச்சால் அதுவும் மறந்துட்டேன். அவர் சாப்பிட்டு முடிச்சாச்சு. அப்போத் தான் நினைவு வந்தது. சரினு எனக்கு வார்த்துக் கொண்டிருந்த தோசைகளையும் மாவையும் படம் எடுத்துப் போட்டிருக்கேன். இதை முதலில் எங்கள் ப்ளாகின் "திங்கற" பதிவுக்குத் தான் அனுப்ப இருந்தேன். ஆனால் எல்லாப் படங்களும் எடுக்கலை. எடுத்த படங்களும் சுமார் ரகம் தான். அங்கே ஒவ்வொருத்தரும் எல்லா அளவுகள் படங்களோடு , ஒவ்வொரு நிலைக்கும் படங்களோடு பதிவு போடுகையில் நம்ம பதிவை அங்கே அனுப்ப வெட்கமா இருந்தது என்பதால் அனுப்பவில்லை. அதென்னமோ சமைக்கையில் படம் எடுக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை.உப்பு, புளி சரியா இருக்கணுமே, போட்டோமா, போடலையானு தான் கவனம் போகுது! :))) எல்லாவற்றிலும் ஒரே சமயம் கவனம் செலுத்தும் வயது தாண்டிட்டேனோ? சேச்சே! அதெல்லாம் இல்லை! என்ன வயசு ஆகிப் போச்சு! இன்னும் பிறக்கவே இல்லையே! இப்போ தோசை வார்ப்பது எப்படினு பார்க்கலாமா?

கோதுமை உப்பு தோசைக்குத் தேவையான பொருட்கள்: இருவருக்கு மட்டும்
பச்சரிசி அல்லது புழுங்கலரிசி அல்லது இரண்டும் கலந்து ஒரு கிண்ணம்,
கோதுமை ரவை ஒரு கிண்ணம். அரைக்கிண்ணம் துவரம்பருப்பு+ இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு+ ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு. உளுத்தம்பருப்புப் போடாமலும் பண்ணலாம். நன்றாகவே இருக்கும். வார்க்கவும் வரும்.

மிளகாய் வற்றல் நான்கு, பச்சை மிளகாய் ஒன்று, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தோசை வார்க்க நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். நான் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டேன்.

எல்லாவற்றையும் நன்கு களைந்து கலந்தே ஊற வைக்கலாம். ஊறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டுச் சுற்றிய பின்னர் ஊறிய தானிய வகைகளைப் போட்டு நன்கு அரைத்துக் கடைசியில் தேங்காய் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில் மாற்றி மிக்சி ஜாரையும் ஜலம் விட்டு அலம்பி மாவில் சேர்த்துக் கருகப்பிலை சேர்க்கவும். பின்னர் தோசைகளாக மெலிதாக வார்க்கலாம். கரைத்த தோசைக்குக் கரைக்கும் மாதிரியிலேயே கரைத்துக் கொண்டு வீசி ஊற்றி மெலிதாக வார்க்கலாம்.

அரிசி வகைகள் இரண்டு பாத்திரங்களில் பெரியதில் உப்பு தோசைக்கு, சின்னதில் வெல்ல தோசைக்கு





கோதுமை ரவை கொஞ்சம் தான் இருந்ததால் எல்லாவற்றையும் இரண்டிலுமாகப்  போட்டு விட்டேன்





அரிசியோடு கோதுமை ரவை





பருப்புக்கள் கலந்து  



வெல்ல தோசை :

வெல்ல தோசைக்குத் தேவையான பொருட்கள்: இரண்டு பேருக்கு
பச்சரிசி அல்லது புழுங்கலரிசி அல்லது இரண்டு கலந்து ஒரு கிண்ணம், ஒரு கிண்ணம் கோதுமை ரவை, அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு மட்டும். துவரம்பருப்பெல்லாம் போட்டால் தோசை ரொம்ப முறுகலாக விறைப்பாக ஆகிவிடும். உளுந்து சேர்த்தால் அது கொஞ்சம் பொத பொதவென இருக்கும். ஆகவே இவை போதும். தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், வெல்லம் தூளாக்கியது ஒரு சின்னக் கிண்ணம், ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

எல்லாவற்றையும் சேர்த்தே போட்டுக் களைந்து ஊற வைத்து மிக்சி ஜாரில் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். இறக்கும் முன்னர் வெல்லத் தூளைச் சேர்த்து விட்டு ஒரு சுற்றுச் சுற்றி விட்டு இறக்கிப் பாத்திரத்தில் மாற்றி ஜலத்தை அலம்பி விடவும். ஏலத் தூள் சேர்க்கவும். இதற்குத் தனி ஜார் வைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில் உப்பு தோசைக்கு அரைத்ததில் இதை அரைத்தால் பெருங்காய வாடை வரும். இது அரைத்ததில் அரைத்தால் ஏலக்காய் வாசனை உப்பு தோசையில் வரும்.

எல்லாம் படம் எடுத்திருக்கணும். தேங்காய்த் துருவி மேடையிலேயே வைச்சிருந்தேன். ஆனால் அரைக்கையில் மறந்துட்டேன்.




வெல்ல தோசை மாவு பக்கத்தில் தோசை வார்க்க நெய்

வெல்ல தோசை சிரிப்பது தெரிகிறதா? 

உப்பு தோசை மாவு, பக்கத்தில் தே.எண்ணெய்


உப்பு தோசை.   இதுக்குத் தொட்டுக்க என்னனு யோசிப்பீங்க. சாம்பார், வத்தக்குழம்பு, தேங்காய்ச் சட்னி, வெல்லம், வெண்ணெய்னு எதுவேணாத் தொட்டுக்கலாம்.

======





இங்கு கொடுக்கப்படும் மின்நிலா சுட்டிகளை அதிக அளவில் யாரும் பார்ப்பதில்லை, பயன்படுத்துவது இல்லை என்று நினைக்கிறேன். 

எனவே, இனிமேல், மின்நிலா இதழ்கள், PDF வடிவில், 

email மூலம் கேட்பவருக்கும், 
'மின்நிலா புத்தகங்கள்'   whatsapp  குழுவிலும், 
மின்நிலா facebook  குழுவிலும் மற்றும் 
'மின்நிலா வார இதழ்' என்னும் telegram  குழுவிலும் மட்டுமே பகிரப்படும். 

LINKS : 

gmail : engalblog@gmail.com ( send a mail to this id, if you want to get the pdf file through email.)

WhatsApp : https://chat.whatsapp.com/BmH70yzWRzTEuXW0Xeh1wh

facebook :  www.facebook.com/groups/3069843546440715


=============


59 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்விலும் பிரச்னைகள் நீங்கி அமைதி நிலவப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. இன்னிக்கு நான் தான் போணி போல! வெல்ல தோசையும், உப்பு தோசையும் இரண்டும் கொடுத்திருக்கேன். ஸ்ரீராம் உப்பு தோசை மட்டும் தலைப்பிலே கொடுத்திருக்கார். வெல்ல தோசை பிடிக்காதா? இஃகி,இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
  3. எல்லாருக்கும் காலை வணக்கம்..

    சூப்பர் கீதாக்கா....நல்லாத்தானே வந்திருக்கு படங்கள்!

    வெல்ல தோசை பிறந்த வீட்டில் அவ்வப்போது செய்ததுண்டு. அதுவும் என் அப்பாவின் அம்மா என் பாட்டி அடிக்கடி செய்வாங்க. இந்த வகை உப்பு தோசை என் மாமியாரிடம் கற்றது. உளுந்து போடாமல். நீங்க சொல்லிருக்காப்ல நன்றாக வார்க்க வரும்.

    என் அம்மா அப்புறம் மாமியார் இன்னொன்றும் செய்வாங்க. உளுந்தை ஊற வைத்து நன்றாக அரைத்து விட்டு அதில் கோதுமை ரவை அரைத்து அல்லது கோதுமை மாவைக் கலந்து வைத்து தோசை செய்வது. கோதுமை ரவை நல்ல ஃபைன் ரவை என்றால் ஒரு சுற்று சுற்றி உளுந்தில் கலந்து இட்லி என்று.

    அம்மா கருப்பு உளுந்து ஊறவைத்து செய்வாங்க. நானும் கருப்பு உளுந்து பயன்படுத்துகிறேன். இங்கும் கிடைக்கிறது. மாமியார் தோல் இல்லா வெள்ளை உளுந்து போட்டுச் செய்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா, உளுந்து ஊற வைச்சு அரைச்சு அதில் மைதாமாவு, கோதுமை மாவு, ரவை, கோதுமை ரவைனு எல்லாத்திலேயும் கலந்து நானும் பண்ணுவேன். அநேகமா என்னிடம் வறுத்து அரைத்த உளுத்த மாவு எப்போதும் கைவசம் இருக்கும் என்பதால் எல்லாக் கரைத்த தோசைகளுக்கும் இப்போல்லாம் இதைப் போட்டுக்கிறேன்.

      நீக்கு
  4. அதென்னமோ சமைக்கையில் படம் எடுக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை.உப்பு, புளி சரியா இருக்கணுமே, போட்டோமா, போடலையானு தான் கவனம் போகுது! :))) எல்லாவற்றிலும் ஒரே சமயம் கவனம் செலுத்தும் வயது தாண்டிட்டேனோ?//

    ஹா ஹா ஹா அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா. எனக்கும் கஷ்டம்தான்.

    அதுவும் கையில் எண்ணை, நெய் என்றிருந்தால் ஃபோட்டோ எடுப்பது மிகவும் கடினம். நாமே தானே ஃபோட்டோ எடுக்க வேண்டும்.

    நாம் செய்யும் போது யாரேனும் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுத்தால் எளிதுதான்.

    அதுவும் செய்யும் போது ஃபோட்டோ எடுத்துக் கொண்டே செய்தால் செய்து முடிக்கத் தாமதமாகி விடும் என்பதால் திங்க வுக்கு அனுப்ப என்றால் ரொம்ப ப்ளான் செய்து (எனக்கு ரொம்பவே ப்ளான் தேவைப்படும்!!!!!) செய்தால் தான் ஃபோட்டோ எடுக்க முடியும்.

    என் மகனும் எல்லாம் டாக்குமென்ட் செய் அளவுகள் உட்பட எதால் அளக்கிறேன் என்றேல்லாம் சொல்லியிருக்கறதுனால ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்தா திங்கவுக்கு அனுப்பறேன் அக்கா. சில சமயம் அப்படி ஃபோட்டோ எடுக்கறப்ப பதார்த்தம் ஓவராக வறுபடும் நிகழ்வும் உண்டு...ஹா ஹா ஹா ஹா..அல்லது தீஞ்சு போகும்...டக்குன்னு தீயை சிம் பண்ணனும்..இப்படி.

    என் உடன் பிறவா உடன் பிறப்புகள் எல்லாம் வீடியோ போடச் சொல்லுறாங்க. என்னால் அது முடியாது.

    இருந்தாலும் செய்யும் போது எடுத்து திங்கவுக்கு அனுப்ப ஆசை உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும், படங்கள் எடுத்தா நேரமாயிடும், பொருட்களின் ஸ்டேஜ் தவறும் அபாயம் நிறையவே உண்டு.

      நீக்கு
    2. படம் எடுக்கையில் சில சமயங்கள்/(பல சமயங்களிலும்) சொதப்பிடுவேன். அதனாலேயே அந்தக் குறிப்பைப் பகிராமல் போயிடும். படம் நல்லா வந்தால் தான் பகிர்கிறேன்.

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. நல்லதெல்லாம் மறந்து நாளாச்சு
      நானிலம் கெட்டுப் போயாச்சு..

      நீக்கு
    2. எங்க வீட்டில், எனக்காக மாதம் ஒரு தடவை வெல்ல தோசை. எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோதுமை மா, ரவை, வெல்லம்... கொஞ்சம் மைதா

      நீக்கு
    3. எங்க வீட்டில் இப்படி மாவைக் கலந்து செய்யும் தோசைகளைக் கரைத்த தோசைப் பட்டியலில் வைப்பாங்க. அரைச்சுச் செய்தால் தான்!

      நீக்கு
  7. பதில்கள்
    1. டெலெக்ராம் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்துட்டு அங்க வாட்சப்போல க்ரூப் ஃபார்ம் பண்ணலாம்.

      நீக்கு
    2. அப்பாதுரைக்கே தெரியலைனதும் ஒரு ஆறுதல். நான் கேட்க நினைச்சு யாரானும் என்னடா இது க.கை.நா.வா இருக்காங்களேனு சொல்லப் போறாங்கனு கேட்காமல் 2 வாரங்களாக விட்டேன்.

      நீக்கு
    3. நான் கேட்டுவிடுகிறேன் - க.கை.நா.வா என்றால் என்ன? விம் பிளீஸ் !!

      நீக்கு
  8. ப்லாக்ல படிச்சுட்டு அதையே மின்நிலாவில யார் பார்ப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு முக்கியமான பாயின்ட். அதுனால ஸ்பெஷல் பகுதிகளும் படிக்க விட்டுப்போகுது.

      ப்ளாக்கில் சில சமயம் திரும்பப் படிப்பது பின்னூட்டங்களுக்காக. ஆனால் மின்னூலில் இடுகைகள் மட்டுமே, அதை ஏற்கனவே படித்துவிட்டோம் எனும்போது டவுன்லோட் செய்வதில்லை

      நீக்கு
  9. அது என்ன “திங்க”ற பதிவு? (ப்லாக் டச் வுட்டு போச்சு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Monday posts are dedicated to food / cooking . 'திங்க' கிழமை !!

      நீக்கு
    2. "திங்க"ற கிழமை அன்னிக்குத் "திங்க"ற பதிவா இருக்கும்.

      நீக்கு
  10. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    எல்லோரும் சௌக்கியமாக இருக்க
    இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  11. கீதாமா,
    நல்ல படங்களோடு வெளியிட்டிருக்கும் உப்பு, வெல்ல தோசை
    பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது.
    ஆதியோடு அந்தமாக எல்லாப் படங்களும் வந்திருக்கேமா.
    வெல்லத் தோசை எங்கள் வீட்டில் மிகப்
    பிடித்தது.

    வாரத்துக்கு ஒரு தடவை உப்பு தோசையும் உண்டு.
    நீங்கள் எடுத்திருக்கும் படம் சுசி ருசியாக வந்திருக்கிறது.

    சென்னையில் கோதுமை மெஷினில் அரைக்கக் கொடுக்கும் போதே
    கலந்து கொடுத்து விடுவோம். பிறகு
    தயிரில் கலந்து வார்க்க வேண்டியதுதான்.
    அம்மா சீரகம் தாளிப்பார்.
    நான் குழந்தைகளுக்காக வெங்காயம் சேர்ப்பேன்.
    ஆஜிப் பாட்டி நிறைய கொத்துமல்லி,
    பச்சை மிளகாய் சேர்ப்பார்.
    நல்லதொரு செய்முறைக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லி, மாவிலே கரைத்து வார்க்கையில் நானும் சீரகம், கடுகு, பச்சைமிளகாய் கருகப்பிலை, கொத்துமல்லி,(வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயம்) சேர்ப்பேன். இது அரைத்து வார்ப்பதால் சீரகமெல்லாம் போடலை.

      நீக்கு
  12. உப்பு தோசை ப்திவு நல்லா வந்த மாதிரி உப்பு தோசையும் நல்லா வந்துடணும் பகவானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்லமானும் வார்க்கக் கஷ்டமா இருக்கும். உப்பு தோசை நன்றாகவே வரும். மெலிதாக ஓரங்களில் முறுகலுடன் வரும்.

      நீக்கு
  13. வெல்ல தோசை பிறந்த வீட்டில் சாப்பிட்டது. உப்பு தோசை நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்ல தோசை எந்த வீட்டில் பிறந்தது?

      நீக்கு
    2. இரண்டுமே நன்றாக இருக்கும் பானுமதி!

      நீக்கு
    3. வெல்ல தோசையுடன் தேன்பாகு என்று ஒரு அமிர்தம்.. கரும்பு சாகுபடி முடிந்த கையோடு பெரிய அடுக்குகளில் தேன்பாகு என்று கொண்டு தருவார்கள்.. ஹ்ம்ம்..

      நீக்கு
    4. //இறக்கும் முன்னர் வெல்லத் தூளைச் சேர்த்து விட்டு

      huh?

      நீக்கு
  14. நான் எதை எங்கள் ப்ளாகிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை படம் எடுத்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  15. இந்த மெதட்டில் உப்பு தோசை வெல்ல தோசை ரெசிப்பி எங்குமே பார்த்ததில்லை. அதுக்கே தாங்ஸ்

    இன்றைக்கே செய்யமுடியுமா என்று பார்க்கிறேன். அல்லது கிச்சன் என் வசம் வரும்போது செய்யணும்.

    கிண்ணம், சின்னக் கிண்ணம் அளவுகள்தான் குழப்புது. இருந்தாலும் செய்துவிடுகிறேன். கோதுமை ரவைக்குப் பதில் கோதுமையையே போடலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெ.த. இதான் பாரம்பரியம்னு சொல்றது. இன்னும் சொல்லப் போனால் அம்மாவெல்லாம் கோதுமையையே ஊற வைச்சு அரைச்சுத் தான் அம்மா, பெரியம்மா எல்லாம் வார்ப்பாங்க.

      நீக்கு
  16. ரொம்ப பசியோட இருந்திருப்பீர்கள் போலிருக்கு. வார்த்த தோசைகள் படம் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சொல்லி இருக்கேனே. ஆரம்பத்தில் படம் எடுக்க நினைவில்லை என. நான் எனக்கு வார்க்கையில் எடுத்த படங்கள். அதான் தோசை சிரிப்பாய்ச் சிரிச்சது.

      நீக்கு
  17. தோசைகள் நன்றாகவே சிரிக்கின்றன. எனக்குத்தான் இஃகி இஃகி என்று காதில் விழுந்தது. ஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே? நான் அரைச்சு தோசை பண்ணினால் இஃகி,இஃகி,இஃகினு தான் தனித்தமிழில் சிரிக்கும். :))))

      நீக்கு
  18. தோசைகள் நன்றாகத்தான் இருக்கிறது.

    //இன்னும் பிறக்கவே இல்லையே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    பதிலளிநீக்கு
  19. உப்பு தோசை என்று படித்தவுடன் பயந்துபோனேன்! உப்புச் சீடை, வெல்லச் சீடை போன்ற சொற்கள் என்று தெரிந்த பிறகுதான் ஆறுதல் அடைந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் உப்புப் போட்டுத்தானே ஆகணும்! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  20. இன்னிக்கு அவ்வளவா போணி ஆகலை போல! ஹாஹாஹாஹா! வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கங்கட்டிக்கு வேணும். (இது எனக்கு நானே சொல்லிண்டேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலைல வெல்லத் தோசைலாம் எப்படி போணியாகும்? எல்லாம் சாதம் சாம்பார், சாத்துமது கரேமது சாப்பிட்டுட்டு, மெதுவாக சாயந்திரமா வெல்லதோசை சாப்பிட வருவாங்க.

      By the by வெங்கலக்கட்டிக்கு வேணும் (வெங்கங்கட்டின்னு எழுதியிருக்கீங்க. சரி சரி..வயசாயிடுச்சு. கண்ணுல திரை விழுது போலிருக்கு. ஹாஹா)

      நீக்கு
    2. கீ போர்டில் "ல" அழுத்திப் போட வேண்டி இருக்கு. அதில் சரியா விழலை போல! ஆனாலும் கண்ணில் பிரச்னை என்னமோ இருக்கத்தான் செய்கிறது. எழுத்துக்களைப் பூச்சி பறக்கிறாப்போல் தோன்றி மறைக்கிறது. தட்டச்சும்போது பழக்கத்தினால் சரியான எழுத்து உள்ள "கீ"யை அழுத்தினாலும் சில எழுத்துக்களுக்கு அழுத்தி அடிக்கணும். அதில் "ல"வும் ஒன்று.

      நீக்கு
    3. நீங்க குழந்தைனு சொல்றதுனால கலாய்ச்சேன்... மற்றபடி தவறா எடுத்துக்காதீங்க. Sorry.. நிஜமாவே உங்களுக்கு கண்ணுல இப்போ புதுசா பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு

      நீக்கு
  21. உப்பு தோசை,இனிப்பு தோசை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. உப்பு தோசை, வெல்ல தோசை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. வெல்ல தோசை தெரியும், உப்புதோசை புதிதாய் அறிகிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!