வியாழன், 5 நவம்பர், 2020

சரவணா ஸ்டோர்ஸில் சற்று நேரம்...

ஓடோனில், சோப் உள்ளிட்ட சில பொருட்கள்,  பெல்ட்,, தலையணை, சில உள்ளாடைகள், நாற்காலிகள், துணி காயப்போடும் ஸ்டான்ட், 

இப்படி சில தேவைகள் பட்டியல் போட்டுக்கொண்டு கொரோனா ஊரடங்குக காலத்தில் சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தோம்.  கையில் சானிடைசர் ஊற்றினார்கள்.  'துப்பாக்கி'யை நெற்றிக்கு நேராய்ப் பிடித்து அக்கறையுடன் பரிசோதித்தார்கள்.



பட்டியலைப் பார்த்தால், வாங்க வேண்டியது சில பொருட்கள்தான்.  ஆனால் அவற்றை வாங்க பட்ட பாடு...  அத்தியாவசிய தேவைகள் என்று சிலவற்றை வாங்கச் செல்லும்போது அப்படியே சேர்த்து அதனோடு கூட என்று சில  பொருட்கள்...  எப்படியும் அவ்வளவு தூரம் போறோம்...  அப்படியே வாங்கிடுவோம்... மறுபடி மறுபடி அலையவேண்டாம் என்ற நினைப்பில்.


எதிரில் மோதுவது போல வரும் பொதுஜனத்திலிருந்து ஒதுங்கி ஒதுங்கி நடந்து,  நாம் வாங்க வேண்டிய பொருட்கள், எடுக்க வேண்டிய இடத்தில ஆட்கள் நின்றிருந்தால் அவர்கள் நகரக்காத்திருந்து...   

நாம் காத்திருப்போம், ஆனால் தொடர்ந்து வரும் மற்ற மக்கள் அபப்டிக் காத்திராமல் அங்கு நிற்போருடனேயே கலந்து பார்த்துப் பொறுக்குவார்கள்.  காத்திருக்கும் நாம் காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!



அங்கு அவற்றை ஒழுங்குபடுத்தவும் ஆட்கள் இல்லை.  பாதி ஆட்களை வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள் போலும்.  வேலை செய்பவர்கள் குறைவாகவே இருந்தார்கள்.  மக்கள் வெள்ளமும் முன்போல் இல்லை எனினும் அதிகமாகவே இருந்தனர்.  அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் மாஸ்க்கைக் கழற்றி விட்டு நின்று மூச்சு வாங்க, கடைக்காரப்பெண் அவரை மாஸ்க் அணியச்சொல்லி வலியுறுத்த, அவர் வயது, மூச்சு சிரமம் என்று அடம்பிடிக்க,  இப்படியும் சில காட்சிகள்.  குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருவோரைப் பார்க்க எரிச்சலாகக் கூட இருந்தது.  பொறுப்பில்லையா, அலட்சியமா?   அல்லது வேறு வழி இல்லையா?   ஏதோ ஒன்று.

நாம் போட்டிருக்கும் லிஸ்ட்டா?    குறைவு என்று பெயர்தான்.  ஆனால் அவற்றில் இரண்டை அண்டர்கிரௌண்டில் வாங்க வேண்டும்.  இரண்டை மூன்றாவது மாடியில் வாங்கவேண்டும்.  இன்னும் இரண்டை ஐந்தாவதில்.  ஒன்றை ஆறாவதில்...   ஆறாவது மாடி சென்றதும் அங்கிருந்த பெண் சொன்னார்...  "இப்போது அது ஏழாவது மாடியில் இருக்கு அப்பா..."

ஷ்...  அப்பா...   மறுபடி அந்தக் கோடி நடந்து ஏறவேண்டும்!

ஒரு தளத்தில் வாங்கிய பொருட்களை முன்னர் அந்ததந்த தளத்திலேயே பில் போட்டுக்கொள்ள முடிந்தது.  இப்போது அவற்றை ஒன்று விட்டு ஒரு தளமாக மாற்றி இருப்பதில் ஒரு சிரமம்.  

அது மட்டுமா, லிஃப்டில் ஏற காத்திருப்பதும் கஷ்டம்.  அதில் ஏழெட்டு பேராவது இருந்தாலே, கூடப் போவதிலும் பயம்!  என்ன ஒரு மாற்றம் கொண்டு வந்தாய் இறைவா?!!  

நகரும் படிக்கட்டுகள் ஒரு பக்கம் இருக்கும்.  இன்னொரு மூலையில் பொருள் வாங்கி கொண்டு அதன் அருகில் இருக்கும் ஏறும் படிக்கட்டுகளை நாடினால், அங்கிருக்கும் பணியாளர், "மேல க்ளோஸ் பண்ணியிருக்காங்க...   இப்படி நேரா அந்தக் கடைசி போனீங்கன்னா எஸ்கலேட்டர் இருக்கும்...   அதுல போங்க.."  என்பார்.    ஏறிவந்த எங்களுக்குத் தெரியாதா?  ஏழு பொருள்கள் வாங்க எவ்வளவு நடப்பது?   நவீனம் என்கிற பெயரில் இதெல்லாம் மஹா சள்ளை!

பெரும்பாலான இடங்களில் ஆட்கள் கிடையாது.  ஒரு பிளாஸ்டிக் வாளியையும், இன்னொரு ஏதோ ஒரு பொருளையும் எடுத்துக் கொண்டு பில் போடுமிடம் வந்தால் அவற்றை எடுத்துத் தனியே வைத்து விட்டு "அந்த செக்ஷனுக்கெல்லாம்  சர்விஸ் கிடையாது ஸார்"  என்கிறார் அங்கிருந்த இளைஞர். 

"ஏன்பா...   கைல ஸ்கேனர் வச்சிருக்கே...   அதால பார்த்தால் விலை தெரியப்போகுது...  பணம் கொடுத்துட்டு நான் எடுத்துட்டு போகப்போறேன்.  இதில் என்ன சிரமம்?"

நிமிர்ந்து பார்த்து விட்டு அந்தப் பொருட்களை எடுத்து மேஜைக்கு அடியில் போட்டுக்கொண்டார் அந்த இளைஞர்!  அவர் கஷ்டம் அவருக்கு...  எவ்வளவு பேருக்கு பதில் சொல்வார் அவரும்!

எனக்கு முன் இருந்த பெண்மணி கையில் வைத்திருந்த லிஸ்ட் பார்த்தால் எனக்கு தலை சுற்றியது.   நாடார் கடையில் போடும் பில் போல நீளமாக இருந்தது.  மொத்த தேவைகளையும் இங்கேதான் வாங்கி இருப்பார் போலும்.  அவருக்கு பில் போடவே அவ்வளவு நேரம்...   போட்ட பில்லை ஒருவர் அடுத்து நின்று செக் செய்வார்...   அதற்கு மறுபடி அதைவிட நேரம்...  அவர் பின்னால் நின்றவர்கள் பொறுமை இழந்து போயிருப்பர்கள்.

பில்லை வாங்கி செக் செய்த பெண் மாஸ்க் அணியாமல் கழுத்தில் தொங்க விட்டிருக்க, "ப்ளீஸ்...   மாஸ்க்கை மாட்டும்மா...   எனக்கு ரெண்டு நாளாய் இருமலா இருக்கு"  என்றதும் உடனடியாக சூப்பர்ஃபாஸ்ட்டில் மாஸ்க் அணிந்தாள்!

ஓரமாக நின்றிருந்த ஒரு சூப்பர்வைசர் பெண்ணும் மாஸ்க் அணியவில்லை.  மறுபடி என்ன சொல்லி இவரை அணிய வைக்க?  அவரைத் தாண்டி நடக்காமல் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பின்வாங்கி வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்வது போல பார்த்ததும், அவர் புரிந்துகொண்ட கழுத்தில் தொங்க விட்டிருந்த மாஸ்க்கை முகத்தில் மாட்டினார்!

கடைசியில் நாற்காலி, துணி காயப்போடும் ஸ்டான்ட் போன்றவற்றை பார்த்து மட்டும் வந்தோம்.  திருப்தியாக இல்லை.   இங்கு நான் பார்த்து வைத்த பிளாஸ்டிக் நாற்காலி 619 ரூபாய்.   அதே தரத்தில் உள்ள நாற்காலிகள் வெளியில் கடைகளில் 1500 ரூபாய்!  கலர் பிடிக்காததால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டோம்.  அப்போது நேராய் ஒன்பதாவது மாடிக்கு மட்டும் வந்து செல்லவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம்!

சமீபத்தில் பழைய பட்டிமன்றம் ஒன்று கேட்டேன்.  சனி ஞாயிறுகளில் பழைய பட்டி மன்ற ஒலிப்பதிவுகளை சன்டிவி போட்டுக் கொண்டிருக்கிறது.  



அதில் தீபாவளி கொண்டாடியது அந்தக் காலம் மகிழ்ச்சியா, இந்தக் காலம் மகிழ்ச்சியா என்று தலைப்பு.   இந்தக் காலம்தான் என்று தீர்ப்பு சொன்னார் நடுவர் சா பா.

அதுபோல,  எல்லாப் பொருட்களும் ஒரே இடத்தில வாங்கலாம்தான்...   ஆனால் எவ்வளவு அலைச்சல்...    பத்து பொருட்கள் வாங்க நான்கு மாடி மாற்றி மாற்றி ஏறி இறங்கி, அவற்றை பில் போட தளம் மாற்றி ஏறி, அல்லது இறங்கி, அதை அங்கங்கே காப்பாற்றி வைத்துவிட்டு, அதற்கு டோக்கன் வாங்கிக்கொண்டு, அடுத்த தளம் சென்று, வீட்டுக்கு கிளம்பும்போது மறக்காமல் எந்தெந்த தளத்தில் என்னென்ன வைத்தோம் என்று டோக்கன் வைத்து வாங்கிக்கொண்டு...   அருகிலேயே இருக்கும் மாடிப்படி அடைத்திருந்தால் மறுகோடிக்கு எஸ்கலேட்டர் நோக்கி நடந்து...   போதும்டா சாமி!

  இதற்கே இரண்டு மணிநேரம் ஆனது.  


===============================================================================================

சில வருடங்களுக்கு முன் கடற்கரை தாண்டி செல்லவேண்டி வந்த ஒரு ஆகஸ்ட் மாதத்தில் அங்கு இருந்த காந்தி சிலையை புகைப்படம் எடுத்தேன்.  அதைச் சும்மா வெளியிடாமல் நாலுவரி எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டேன்...  அது...



காந்தியும் நின்று பார்க்கிறார் 
கடற்கரையில் 
காற்றுதான் வரவில்லை..

கடற்கரையிலேயே
காற்றுக்குப் பஞ்சமா? 

ஆகஸ்ட் மாதத்திலும் 
ஐயகோ இப்படி ஒரு வெப்பமா?

இது என்ன சென்னையா? இல்லை
எரிகின்ற எண்ணெயா?

உடை குறைத்தும் உடல் குளிரவில்லை 

வெக்கையோ தாளவில்லை
வேர்வையும்தான் குறையவில்லை

என்னையும்தான் கொண்டுபோய் 
ஏஸி ரூமில் வைத்திடுங்கள்
எளவு..  வெறுக்க வைக்கிறது 
வெயிலும் வெக்கையும்...

===============================================================================================

ஒரு திருக்குறளும் அதற்கான உரைகளும்...

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"

மண் வேறு மணல் வேறு. மண் கேணி நிலையாக இருக்கும். ஆனால் மணற்கேணி அடிக்கடி சரியும். அதன் பயனாகிய நீரை அடைய விரும்பினால் அடிக்கடித் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அது போல ஒருவர் கற்கக் கற்க அறிவு பெருகும். பெற்ற அறிவை நிலை நிறுத்த வேண்டுமானால் திரும்பத் திரும்பக் கற்க வேண்டும்.

இதைச் சொன்னவர் முன்னாள் தலைமை நீதிபதி திரு மு மு இஸ்மாயில் அவர்கள்.

மற்றவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? இதோ...

திரு மு.வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

திரு மு.கருணாநிதி உரை:
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

திரு சாலமன் பாப்பையா உரை:
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

திரு.பரிமேலழகர் உரை:
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் – மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் – அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் ‘கேணி’ என்றது, அதற்கண் நீரை. ‘அளவிற்றாக’ என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் ‘உண்மை அறிவே மிகும்’ (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)

சுஜாதாவின் உரை:

மணல் கிணற்றில் தோண்டிய அளவுக்குத்தான் நீர் ஊறும். அதுபோல் படித்த அளவுக்குத்தான் அறிவு பெருகும்.  

=========================================================================================================

தினமலரில் படித்து நெகிழ்ந்த செய்தி ஒன்று.  அதற்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பை ஈற்றடியாய்க் கொண்டு ஒரு நான்கு வரிக் கவிதை எழுத முடியுமா?  அந்தத் தலைப்பைத் தொட்டால் செய்திக்குச் செல்லலாம்!


அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜா பசு மாடுகள் வளர்த்து வந்தார். அவற்றுடன் பாலமேடு மஞ்சமலை கோயில் காளை பழகி வந்தது.



ஊரடங்கால் வருமானமின்றி தவித்த ராஜா, பசு ஒன்றை வாடிப்பட்டியைச் சேர்ந்தவருக்கு விற்றார். நேற்று மினி சரக்கு வாகனத்தில் பசுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது கோயில் காளை தடுத்து பாசப்போராட்டம் நடத்தியது. அருகில் இருந்தவர்கள் விரட்டியும் ஒரு கி.மீ., வரை வாகனத்தை காளை பின்தொடர்ந்து ஓடி ஏமாற்றத்துடன் திரும்பியது.

================================================================================================


முன்ஜாக்கிரதை முத்தண்ணா!  அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் வியர்வையையும், உடல் நடுக்கத்தையும் கவனியுங்கள்!  சப்போர்ட்டுக்கு தூண் வேறு!


இவர் சந்தேக பதி!


==============================================================================================

144 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். அனைவரும் நலமோடு இருக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...     காலை வணக்கம்.  பிரார்த்திப்போம் இணைந்து.

      நீக்கு
  2. ஏழு பொருட்கள் வாங்க இத்தனை பாடா!,,! மிக மிகப் பொறுமை வேண்டும். அதறகுப் பிறகு எல்லாமே ஆன்லைனில் வாங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருமல் என்று சொன்னதும். அந்தப் பெண்கள் கவசம் அணிந்ததே சிரிப்பு வந்தது. அப்போதுதான் அவர்களுக்கு. நிலைமையின் தீவிரம் புரிகிறதோ!

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வியாழன் கதம்பம் ரசித்தேன்

    காந்தி கவிதை நன்று. சென்னையில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் வந்தபோது, அடடா சென்னை வேர்வையை மிஸ் பண்ணுகிறோமே என்று தோன்றியது. பெங்களூருக்கு வந்த பிறகு வேர்வை வந்த மாதிரியே தெரியலை, பல நேரங்களில் வெக்கையாக இருந்த போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...    ரசித்ததற்கு நன்றி.

      வேர்வையை மிஸ் செய்தீர்களா?  சில சமயம்  சிரமங்களையும் பழக்க தோஷத்தால் ரசிக்கிறோம் இல்லை?!

      நீக்கு
    2. //வேர்வையை மிஸ் செய்தீர்களா? // - இல்லையா பின்னே... உடல் நலம் சீராக இருக்கணும்னா வேர்வை வரணும் இல்லையா? இங்க நடந்தாலும், வேர்வை வருவதே அபூர்வமாக இருக்கு. அங்கல்லாம், 1 மணி நேரம் நடந்தால் வேர்வை வரும்.

      இருந்தாலும் இந்த ஊர் 'குளுகுளுன்னு' இருக்கு.

      நீக்கு
  4. ஏஸி ரூமில் வைத்திடுங்கள்
    எளவு.. வெறுக்க வைக்கிறது
    வெயிலும் வெக்கையும்.////.. அழகான. கவிதை. வெய்யில். உங்கள் வரிகள்ில் சுடுகிறது..

    பதிலளிநீக்கு
  5. ஹைபர் மார்க்கெட் என்பது பொதுவா பரந்து விரிந்திருந்தால்தான் நல்லது. பலப்பல மாடிகளாக இருந்தால் உபயோகமில்லை. பெரும் தொல்லை. அதுக்கு பத்து வெவ்வேறு கடைகளுக்குச் சென்றுவிடலாம்

    சமீபத்தில் முறுக்கு போன்றவற்றிர்க்கு அச்சுகள், நாழி தேடிக்கொண்டிருந்த போது, க்ரோம்பேட் சரவணா ஸ்டோர்ஸ் போகலாமா என நினைத்தேன். மக்கள் கூட்டத்தை நினைத்து அங்கே செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நான்கைந்து நாட்களுக்குமுன் தீபாவளிக்கு சாஸ்திரத்துக்கு துணிகள் எடுத்தோம்.  அதை பெரிய கடைகளைத் தவிர்த்து சிறிய கடை ஒன்றில் முடித்து விட்டோம்.

      நீக்கு
  6. மணற்கேணி. அர்த்தம் மாறுபடவில்லை. வார்ததைகள் மாறுகின்றன. சுஜாதா சாரின் சுருக் அர்த்தம் அழகு.

    பதிலளிநீக்கு
  7. அலங்காநல்லூர் ராஜா காளையின் காதல் அருமை. திரு. ராசநாராயணன் ஐயா அவர்களின் கட்டுரை ஒன்று நினைவிக்கு. வந்தது. கோவில் காளைகள் பல கன்றுகளுக்கு தந்தைகளாகும். முறையைச்சொல்லி இருப்பார்.

    இந்தப் பசுவும். அந்த வகையில் உறவாகி இருக்கும். பாவம் ராஜா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கூட ஏதோ படித்த ஞாபகம் இருக்கிறது.    பாவம் காளை!

      நீக்கு
  8. காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இரண்டாம் சுற்று ஆரம்பிக்காமல் இதே போல் நிலைமை நீடித்து அனைவரும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. ஹையோ, சாமான்கள் வாங்குவதே ஒரு பெரிய விஷயம் என்னைப் பொறுத்தமட்டில். சின்ன வயசில் இருந்தே என்னமோ தெரியலை. இம்மாதிரிப் பொருட்கள் வாங்கக் கடைகள் செல்வது பிடிக்காது. அலுப்பாய் வரும். நான் ஒரு நாற்காலியைப் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாய் உட்கார்ந்துடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கடுப்பாய் இருக்கும்.  ஆனால் சின்ன வயதில் நாடார் கடையில் கூட்டத்தோடு நின்று பெரிய லிஸ்ட் வாங்கி செக் செய்து சைக்கிளில் எடுத்து வந்தது நான்தான்.  இப்போதெல்லாம் நைஸாக கழண்டுப்பேன்!

      நீக்கு
  10. அதிலும் சரவணா ஸ்டோர்ஸ்! கடவுளே! ஒரே ஒரு முறை 20 வருஷங்கள் முன்னர் என் அண்ணா, மன்னியுடன் போனேன். அங்கிருந்து மளிகை சாமான்கள் அம்பத்தூருக்கு வாங்கிச் செல்வார்கள். தெரியாத்தனமாய் மாட்டிக் கொண்டேன். போதும், போதும்னு ஆகி விட்டது. அதே போல் இங்கே சாரதாஸுக்கும் மாமாவின் வற்புறுத்தலால் ஒரு முறை போயிட்டுப் போதும், போதும்னு ஆகிவிட்டது. நவராத்திரி, தீபாவளி சமயம் அங்கே கோயிலில் கம்பி கட்டி வரிசைப்படுத்தி விடுவதைப் போல் 2,3 வரிசைகள் கயிறு/கம்பி கட்டி உள்ளே விடுவார்கள். அந்தக் கூட்டத்தில் எல்லாம் போவதே இல்லை. என்ன துணி எடுத்தோம்னே தெரியாமல் வேறே ஏதானும் வந்து சேரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா காலம் என்று கூட்டம் கம்மி.  ஆனால் அலைய விட்டார்கள்.  இப்போது தீபாவளிக்கு மறுபடி கூட்டம் வருகிறது!

      நீக்கு
  11. முன் ஜாக்கிரதை முத்தண்ணா! எவ்வளவு நாட்களாச்சு பா்த்து. நடுங்கிக் கொண்டே ஸ்டில் மேல் நிற்கும் அழகு ஆஹாஹா :) அதைவிட சுவாரஸ் யம் இஞ்சின் சத்தம். நனி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...  மதனின் தொடர் கேரக்டர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் முஜாமு தான்!

      நீக்கு
    2. பல இடங்களில் கீழே, மேலே முஜாமு எனப் பார்த்ததால் மனம், ’முன் ஜாமீன் முனுசாமி’யோ.. என்றது..!

      நீக்கு
  12. அதோடு வாடிக்கையாளரிடம் கடை விற்பனையாளர்கள் காட்டும் அலட்சியம். வாம்மா, போம்மா எனப் பேசுவார்கள். ஒரெ ஒரு முறை கூட்டத்தில் போயிட்டுக் கடைசியில் எதுவும் எடுக்காமல் வந்தோம். சென்னையில் இருந்தவரை நான் போவது நல்லியில் பருத்தித்துணிப் பகுதி! இல்லை எனில் ரத்தன் பஜார் ஹான்ட்லூம் ஹவுஸ். நிதானமாகப் பார்த்துத் தேர்வு செய்யலாம். இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் கைத்தறிகள் கிடைக்கும். இங்கே தான் கத்வால் பட்டு வாங்கி இருக்கேன். கல்கத்தாப் பருத்திப் புடைவைகள் நிறைய வாங்கி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ எல்லாம் சின்னப்பெண்கள், பையன்கள் இருக்கிறார்கள்.  கொஞ்சம் பரவாயில்லை.

      நீக்கு
  13. மு.ஜா.மு.வை மறக்க முடியுமா?

    காந்திக்குக் கடற்கரை வெட்டவெளி என்பதால் வெயில் தெரிகிறது. இங்கே மழை போக்குக் காட்டிக் கொண்டே இருக்கு. பெய்யறதே இல்லை. சென்னையில் வெளுத்து வாங்குது போல! இங்கே வியர்வை வெள்ளம் தான்! காலை பத்து மணிக்கு முன்னால் சூரியன் வரதில்லை! அதுக்கப்புறமா வெயில் பிச்சுக்கும். திடீர்னு தூக்கிவாரிப் போடும்படி ஓர் இடி, மின்னல்! அம்புடுதேன்! மழை ஓடியே போயிடும் வேறே எங்காவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நான் கணினியில் உட்கார்ந்திருக்கும் இடம் காற்றே இல்லாத இடம்.   ஒரு Tower Fan,  pedestal Fan இருந்தும் கூட றீண்டுமே ரிப்பர் ஆகிவிட்டதால் வியர்வை வெள்ளம்!

      நீக்கு
    2. கீசா மேடத்துக்கு நிறைய தடவை சொல்லியாச்சு. கடைகள்ல சிப்ஸ், வடகம் வாங்குவதை விட்டுவிட்டு, நீங்க போடுங்க. மாடில காயப்போடப் போனீங்கன்னா, உங்க ராசிக்கு மழை பிச்சிக்கும். எல்லோருக்கும் நல்லதுதானே. என்ன சொல்றீங்க?

      நீக்கு
    3. மழை எப்போது பெய்யும் என்று தெரியாமல் பெய்கிறது.  நேற்று காலை சென்னையில் நல்ல மழை!

      நீக்கு
    4. நெல்லை, நான் இப்போது தான் சுண்டைக்காய், மணத்தக்காளி, மோர்மிளகாய் (சின்னச் சின்ன நாட்டு மிளகாயில்) போட்டுக் காய வைச்சு எடுத்து வைச்சுட்டேன். அதுவரைக்கும் போட்டுக் கொண்டிருந்த தூற்றல் இப்போ சுத்தமா நின்னே போச்சு! மறுபடி மழையை வர வைக்க என்ன செய்யலாம்னு யோசிச்சிங்க்! :))))))

      நீக்கு
  14. காளைமாடு ஜோடியோடு கூடியதாகவேத் தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாய்த் தெரியலை.

    ஸ்ரீராமின் கவிதை நன்று. ஒரு சின்னக் கருக் கிடைச்சால் கூடக் கவிதை எழுதும் உங்களை எல்லாம் பார்த்தால் கொஞ்சம் இல்லை நிறையவே பொறாமையாக இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  இது தொலைக்காட்சியில் வேறு காட்டினார்களா?  நான் பார்க்கவில்லை.  நான் செய்தித்தாளின் லிங்க்கும் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்!

      கவிதை என்று அதை ஒத்துக்கொண்டதற்கும், பாராட்டியதற்கும் நன்றி.

      நீக்கு
    2. காளை மாட்டுக்கவிதைகளை எதிர்பார்க்கிறேன். அநேகமாக துரை, மாலா மாதவன் ஆகியவர்கள் எழுதலாம்.

      நீக்கு
    3. மாலா மாதவன் பிளாக் எல்லாம் படிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    ந்லம் வாழ்க என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  16. நல்ல வேளை...
    சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான
    சள்ளை எல்லாம் நமக்கு இல்லை....

    பதிலளிநீக்கு
  17. மு ஜா மு...

    மதனின் சித்திரச் சிரிப்புகள் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டன...

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. ஸ்டோர்ஸ் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடம்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. சரவணா ஸ்டோர் அனுபவங்கள் நன்றாக உள்ளது. நான் சென்னையிலிருந்த போது சரவணா ஸ்டோர் சென்றதில்லை. அது எப்போது எந்த வருடம் ஆரம்பித்தது? என் மகன் கண்டிப்பாக (சென்னையில் வேலை பார்த்த போது) அங்கு விஜயம் செய்யாமல் இருக்க மாட்டார். இங்குள்ள பெரிய மால்களில் குழந்தைகளுடன் எப்போதாவது ஏறி இறங்கும் போதே எனக்கு கடுப்பாக வரும். கடைசியில் ஏதோ ஒன்றை வாங்குவதற்காக இவ்வளவு அலைச்சலா எனத் தோன்றும்.

    கவிதை நன்றாக உள்ளது. கடற்கரையில் காற்றில்லா இடமாக பார்த்து அவரை இருத்தி விட்டார்களோ ? வரிகளை மிகவும் ரசித்தேன்.

    காந்தியும் திருநெல்வேலி பாஷையில் "எளவை" சொல்லியிருக்கிறார். அங்கு யதார்த்தமாக ஒருவரிடம் ஒரு சில வரிகள் பேசும் போது பத்து "எளவையாவது" சந்திப்போம் .ஹா.ஹா.

    இங்கு (பெங்களூரில்) நெல்லைத் தமிழர் சொல்வது போல் சென்னை, திருமங்கலம் வேர்வையை மிஸ் செய்கிறோம். ஆனாலும் இப்போது சற்று வெக்கையாக உள்ளது எப்போதும் நவம்பரில் வரும் குளிர் மிஸ்ஸிங். டிசம்பருக்காக அதுவும் காத்திருக்கிறது என்னவோ.. நானும் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரவணா ஸ்டோர் செல்லாதவரும் இருக்க முடியுமா?  ஆ...!

      கவிதையை ரசித்ததற்கு நன்றி.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. நான் அங்கு சென்றதில்லை. செல்லவும் விருப்பம் இருந்ததில்லை. கூட்டம் அதிகமா இருந்தால் நாம பொறுமையா எதையும் பார்த்து எடுக்க முடியாது. வாங்குனா வாங்கு இல்லைனா இடத்தைக் காலி பண்ணு என்ற ஆட்டிடியூட் அங்க வேலை பார்க்கறவங்க கிட்ட இருக்கும். சில கடைகள்லதான் (ரத்னா ஸ்டோர்ஸ், தங்கபாண்டி போன்று) பொறுமையா பாத்திரங்கள் போன்றவை செலெக்ட் செய்ய முடியும்.

      நீக்கு
    3. சரவணாவிலும் முடியும்.  ஆனாலும் கூட்டம், தள்ளுமுள்ளு...   பில் செலுத்த நேரமாதல் போன்றவை வெறுத்துப்போக வைக்கும்.

      நீக்கு
  21. நாற்காலி, து.உ.ஸ்டாண்ட் இவற்றை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்ற கேள்வி எழுந்தது :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களே வண்டியில் ஏற்றி அனுப்பி விடுவார்கள்.

      நீக்கு
  22. இது என்ன சென்னையா, இல்லை எரிகின்ற எண்ணையா? -- பிடித்த வரி.
    என்னையும் தான் +++ ஏஸி ரூமில் வைத்திடுங்கள் -- பிடிக்காத வரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடியற்காலையில் மனதில் பட்டதை உடன் சொல்ல முடியவில்லை..

      ஜீவி அண்ணா அவர்கள் சொல்லி விட்டார்கள்..

      நன்றி..

      நீக்கு
    2. புரிகிறது தம்பி. உடனே அந்த வரிகளை நீக்கி விட்டு வேறு வரிகளை இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டுமென்று ஸ்ரீராமிடம் மனம் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறது.

      நீக்கு
    3. ஏனென்றுதான் புரியவில்லை!!!!!

      நீக்கு
    4. கண்ணதாசனிடமிருந்து கவிஞரகள் கற்க வேண்டிய பாடம் இது.
      கவியரசர் மறந்தும் இப்படி எழுதத் துணியார்.

      நீக்கு
    5. இப்பொழுது புரிகிறதா பாருங்கள்.
      அந்த வரிகள் மஹாத்மா சொல்வதில்லை.

      நீக்கு
    6. மஹாத்மா கவிதையும் எழுதுவதில்லை!   இதில் உணர்ச்சி வசப்பட எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

      மஹாத்மா தமிழிலும் எழுதமாட்டார்!

      நீக்கு
    7. //மஹாத்மா தமிழிலும் எழுத மாட்டார்...//
      தெரியும்.

      நீக்கு
    8. //காந்தியம் நின்று பார்க்கிறார் //

      இது யார் சொல்வது?

      ஸ்ரீராம் சொல்பது.

      //என்னையும் தான்.. ஏஸி..//

      இது யார் சொல்வது?

      இதுவும். ஸ்ரீராம் சொல்வது தான்.

      அப்போ அந்த என்னை என்பது யாரைக் குறிக்கிறது?

      இப்போ புரியும். அதுக்காகத் தான் மாத்தச் சொன்னேன்.

      நீக்கு
    9. அத்தனை பேரும் கவிதை நன்றாக இருக்கிறது என்று பராட்டி விட்டார்கள். இப்போ என்ன செய்யறது?

      முதல் வரியை மாத்திட்டாப் போச்சு.

      எப்படி? இப்படி:

      நான் நின்று நடந்து பார்க்கிறேன்

      (இது தான் முதல் வரி)

      இப்போ முழுக் கவிதையையும் படித்துப் பாருங்கள்.

      அற்புதமாய் பொருந்தி வரும்.

      நீக்கு
    10. அமங்கலமான சொற்கள், வரிகள் தான் எழுதும் கவிதையில் வந்து விடாதபடி பார்த்துக் கொள்வது கண்ணதாசனின் வழக்கம்.

      நீக்கு
    11. முதல் வரியை மாற்றாமல் இருந்தால் அந்த என்னை என்பது ஸ்ரீராமைக் குறில்கும் என்பதால் தான் இத்தனை மனச் சங்கடங்களும்.

      நீக்கு
    12. சரிதான்..    கடைசியில் 'என்கிறார் காந்தி' என்று சேர்த்து விட வேண்டியதுதான்!!

      நீக்கு
  23. காலம் மாறிப் போயிருக்கு. பார்த்தது, கேட்டது, அனுபவித்தது என்று பல வகைகளில் அறிவு தன்னை புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கிறது. புதுபித்துக் கொள்ளத அறிவு பாசி படிந்த குளம் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை என்றாலும் நன்றி.  

      நீக்கு
    2. கலைஞரும் சுஜாதாவும் படிக்கப் படிக்கத் தான் அறிவு பெருகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்பவோ படிப்பதைத் தாண்டி வேறு வேது வகைகளும் அறிவு செழுமை பெறக் காரணிககாக இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறேன்

      நீக்கு
  24. காளைக்கும் வருமாம் காதல் -- யார் கவிதை சிறப்பு என்று பார்க்க ஒரு சான்ஸ். :))

    பதிலளிநீக்கு
  25. நாங்கள் கடந்த 6 மாதங்களில் வெளியில் சென்றது ஒரு தடவை தான். அதுவும் ரேஷன் கடைக்கு. (ரேஷன் வாங்கவில்லை எனில் கார்ட் கான்சல்). மற்றபடி வேண்டிய பால் மற்றும் சோப் போன்ற பொருட்களை பக்கத்துக் கடையில் வாங்கிக்கொள்கிறோம். காய்கறி மற்றும் மளிகை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். கரண்ட் தண்ணீர் வரிகள் ஆன்லைனில் கட்டப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள் அதிகம் தேவைப்படவில்லை. அதனால் ATM போகவில்லை. 

    ஆக கொரானாவினால் எங்கும் நடக்காமல் இருந்ததால் தற்போது கொஞ்சம் தூரம் நடக்கவே கால் வலி. 
    கவிதை கில்லெர்ஜீ எழுதியது போல் உள்ளது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி அலைச்சல் இல்லாதிருத்தல் நல்ல விஷயம்தான்.   பண விஷயங்கள் இங்கும் 99% ஆன்லைன்தான்.

      நீக்கு
  26. பெரிய மால்களில் ஷாப்பிங் செய்வது கொஞ்சம் கடுப்புதான். 2000க்  குப்  பிறகு  மஸ்கெட்டில் லூலு ஹைப்பர் மார்க்கெட் வந்து சிறிய சூப்பர்  மார்கெட்டுகளையும்,  மலையாளிகள் வைத்திருந்த குட்டி, குட்டி  கடைகளையும் கபளீகரம் செய்த பிறகு ஒரு பால் பாக்கெட் வாங்க வேண்டுமென்றால் கூட லூலுவிற்குச் சென்று, கால் கடுக்க  நடந்து  ஷாப்பிங் செய்து, பில் போட  அங்கு வரிசையில் நின்று,  (என்னதான்  எக்ஸ்பிரஸ் கவுண்டர் இருந்தாலும் அங்கும் வரிசை கட்டி நிற்பார்கள்)  அந்த ஓமானிப் பெண் தடவித் தடவி பில் போடும் வரை பொறுமை காத்து..... போதுமடா சாமி என்றாகும்.  சரவணாவின் கும்பலைப் பார்த்தாலே  உள்ளே நுழையத் தோன்றாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய மால்கள் எல்லாமே ஒரே மாதிரி சிரமங்களைத் தருகின்றன.

      நீக்கு
  27. முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டை  வால் ரெங்குடு போன்ற மதனின்  படைப்புகளை  அவ்வப்பொழுது நினைவூட்டும் உங்களுக்கு நன்றி.  மு.ஜா.மு.  முழுவதும் கற்பனை என்று கூறிவிட முடியாது, அப்படி சிலரை நிஜ வாழ்க்கையிலும் சந்தித்திருக்கிறேன். இந்த கொரோனா காலத்தில் அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று மதன் கார்ட்டூன் போடவில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...   அல்லது அவர் எங்காவது வெளியிட்டு, நாம் பார்க்கவில்லை!

      நீக்கு
  28. அண்ணல் காந்தியின் அலுப்பு புரிகிறது!

    பதிலளிநீக்கு
  29. கவிதை நன்றாக இருக்கிறது. சென்னையில் என்ன தொந்திரவு என்றால் வியர்வையோடு பிசுபிசுப்பு! திருச்சியில் வெய்யில்  அதிகம் இருந்தாலும் ஒட்டாது. முன்பெல்லாம் பெங்களூரிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருபவர்கள் "ஆ! சூடு! சூடு! எப்படித்தான் இந்த ஊரில் இருக்கிறீர்களோ? என்றெல்லாம் கூறும் பொழுது ஓவராக  சீன் போடுகிறார்களே என்று தோன்றும். இப்போது இந்த இதமான  குளிருக்கு உடல் பழகிவிட்ட பிறகு சென்னைக்கு  சென்றால் எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. பழசை மறந்துவிடக் கூடாதே என்று வாயை மூடிக் கொள்கிறேன்.  ஆனாலும் புழுக்கமோ, வியர்வையோ, that's Chennai, I love Chennai! (FM radio போலச்  சொல்கிறேனோ?)
    'காளைக்கும் காதல் வரும்..'  கவிதைகளுக்காக காத்திருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே காத்திருந்தால், யார்தான் எழுதப் போகிறார்கள்?!!

      இப்பவும் பெங்களுருவில் குளுகுளு என்றுதான் இருக்கிறதா?

      நீக்கு
  30. 'காளைக்கும் காதல் வரும்..'  கவிதைகளுக்காக  காத்திருக்கிறேன். தொட்டனைத்தூரும் மணற்கேணிக்கு டி.டி. என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  31. நாயுடு ஹால் திருச்சிக்குப் போனாலே நான் அலுத்துப் போய் உட்கார்ந்துப்பேன். முன்னெல்லாம் சென்னையில் இருந்தவரை பெண், பிள்ளை இந்தியா வந்தால் தி.நகர், ஸ்பென்ஸர்க்குப் போகும்படி இருக்கும். நாங்க கீழேயே ஒரு பக்கம் உட்கார்ந்துப்போம். அவங்க தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு வருவாங்க. எனக்கெல்லாம் இப்படி ஏறி ஏறி இறங்கி எதையும் வாங்கப் பிடிக்காது. எனக்கு ஒத்து வருபவை மூலையில் இருக்கும் நாடார் கடைகள், காதி க்ராஃப்ட், கோ ஆப்டெக்ஸ், ஹான்ட்லூம் ஹவுஸ் போன்றவையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாயுடு ஹால், சரவணா ஸ்டோர், ரிலையன்ஸ், ரத்னா ஸ்டோர், போன்ற எல்லா இடங்களுமே ஒரே மாதிரிதான்!

      நீக்கு
  32. இந்த நாற்காலிகள் எல்லாம் ப்ளாஸ்டிக் எனில் மடக்க முடியாது. துணி உலர்த்தும் ஸ்டான்ட் கொலுப்படி மாதிரிப் பகுதி பகுதியாக் கிடைக்கும். வாங்கிக் கோர்த்துக்கலாம். நாற்காலிகளை வாங்கினால் அவங்க கொண்டு வந்து கொடுப்பாங்களா? இங்கே நாங்க வாங்கும் ஃபர்னிசர் கடையில் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பாங்க. சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான கடையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தும் இம்மாதிரிச் செயல்கள் இருக்கும் என்று தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு ஒரு ராசி...  எவ்வளவு நாற்காலிகள் வாங்கினாலும் உடைந்து விடுகின்றன.  மடக்கு நாற்காலி என்றால் இன்னும் சுத்தம்!

      நீக்கு
    2. அடடே! உடைஞ்சா போகிறது? உங்க வீட்டில் யாரும் என்னை மாதிரி இருக்க மாட்டாங்க! எங்க வீட்டிலேயே நாற்காலிகள் பத்து வருஷங்களுக்கும் மேல் (சென்னையிலிருந்து கொண்டு வந்தவை உட்பட) இருக்கின்றனவே! என்ன செய்வீங்க? தூக்கிப் போட்டு விளையாடிப்பீங்களோ? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  33. பிறருக்கு எப்படியோ நான் எபியில் வியாழனை ரசிப்பவன்ஜனரஞ்சகமாக இருக்கும் ஏன் சரவணா ஸ்டோர்ஸ் என்று புரிய வில்லை போய் வரும் இடமென்றால்எதெது எங்கு கிடைக்கும் என்று தெரியும் தானே காந்தி கவிதை ரசித்தேன்எழுதுபவர் ஸ்ரீ தானேஅவர் மனதில் பட்டதைத்தானே எழுத முடியும் இன்னொருவராக இருப்பது போலித்தனமாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகப் புரிந்து, சரியாகச் சொன்னீர்கள் ஜி எம் பி ஸார்!  வியாழனை ரசிப்பதாகச் சொன்னதில் தன்யனானேன்.  நன்றி.  சரவணா ஸ்டோர்ஸ் கொஞ்சம் பேமஸ்...   அதுதான்!

      நீக்கு
    2. ஜீவி ஸார் மறைபொருளாகச் சொன்னதை புரியாததால் அப்புறம்  உடைத்துச் சொன்னால்தான் புரிகிறது!

      நீக்கு
  34. குறளைச் சீண்டியிருக்கிறீர்கள் வியாழனில்! ’திரு’க்குறளானதால், கூடவே உரையாசிரியர்கள் பெயர்கள் முன் மரியாதையாக ‘திரு’! நன்று.. நன்று. ஆனால் சுஜாதா என்கிற பெயரின் முன் ‘திரு’ வரவில்லையே? சுஜாதா அவ்வளவு இளப்பமாப் போய்ட்டார் இல்லையா..!

    சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு காலகட்டத்தில் இப்படி ஓவராக மணலைத் தோண்டித் தோண்டிப் பார்த்தவர்கள், தண்ணீர் கிடைக்கவில்லையே.. ஆனால் மணல் ஏகமாகக் குவிந்துவிட்டதே என்கிற சமூகக் கவலையில், கரிசனத்தில், மணலை லாரி லாரியாக ஏற்றி அனுப்பிவிட்டார்களோ? அவர்கள் ‘கற்ற’ விஷயங்கள் அவர்களுக்குத் துணைவந்திருக்கும்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குறளைச் சீண்டியிருக்கிறீர்கள்//

      கொஞ்சம் அபாயம்தான்!!


      //’திரு’க்குறளானதால், கூடவே உரையாசிரியர்கள் பெயர்கள் முன் மரியாதையாக ‘திரு’! //

      மதுரையில் ஒரு தொண்ட குண்டனிடம் வாங்கிய அடி இன்னமும் பிடரியில் குறுகுறுக்கிறது.  இம்மாதிரி ஜென்மங்கள் எல்லாம் சட்டென உணர்ச்சி வசபப்டுபவர்கள்.  ஜாக்கிரதையாக இருப்பது நல்லதல்லவா?!  சுஜாதா எழுதி எழுதி பழகி விட்டது!  அதுதான்.

      //என்கிற சமூகக் கவலையில், கரிசனத்தில்,//

      மணற்கொள்ளைக்குப் புது விளக்கம்...    ரசித்தேன்.

      நீக்கு
  35. ஸ்டோர்ஸ் அனுபவத்தில், உடனடியாக மாஸ்க் அணிய வைக்க ஒரு வழி கிடைத்தது...!

    காந்தி கவிதை அருமை...

    சிறப்பான குறள் - இதே அதிகாரத்தின் கடைசி குறளுக்கு முந்தின குறள் மேலும் சிறப்பு சேர்க்கும் :
    (ஓ காளைக்கு காதல்...! - அதற்காக இந்தக் குறள் சொல்லவில்லை என்று அறிவது உடம்பிற்கும் நல்லது)

    தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //(ஓ காளைக்கு காதல்...! - அதற்காக இந்தக் குறள் சொல்லவில்லை என்று அறிவது உடம்பிற்கும் நல்லது)//

      :-)

      நன்றி DD.

      நீக்கு
  36. நாம் காத்திருப்போம், ஆனால் தொடர்ந்து வரும் மற்ற மக்கள் அபப்டிக் காத்திராமல் அங்கு நிற்போருடனேயே கலந்து பார்த்துப் பொறுக்குவார்கள். காத்திருக்கும் நாம் காத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!//

    ஸ்ரீராம் அதை ஏன் கேக்கறீங்க...ஹையோ இங்கும் அதேதான். நான் காத்திருப்பேன் காத்திருப்பேன்...கடைசில திரும்பியே வீட்டுக்கு வந்துருவேன் வேறு கடையில் பார்க்கலாம் என்று நான் சொன்னது காய், மளிகைக் கடை.

    நீங்க சரவணாலருந்து அப்படி போக முடியுமா?!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க சரவணாலருந்து அப்படி போக முடியுமா?!!!! ஹா ஹா ஹா//என்னைப் போல் பொறுமையில்லா ஜன்மங்கள் ஓடிடும்! நானும்! எதுவுமே வாங்கத் தோணாது.

      நீக்கு
    2. சரவணாலயும் எடுத்ததைத் திருப்பிப் போட்டுவிட்டு, கையைத் துடைத்துக் கொண்டு வந்துவிடலாம்!

      நீக்கு
  37. இப்போது அது ஏழாவது மாடியில் இருக்கு அப்பா..."//

    அட! ஒரு பொண்ணு/மகள் கிடைச்சிட்டா போல!!!!!! ரொம்பச் சின்னப் பொண்ணோ?! இல்ல.... உங்க வயச கரெக்ட்டா கணிச்சிருக்கு!!!! அண்ணான்னு சொல்...லா....ம...!! ஹா ஹா ஹா ஹா!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, காலம்பரவே கவனிச்சுட்டுச் சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. நீங்க சொல்லிட்டீங்க! கன்னாபின்னாவென்று ஆதரிச்சுடறேன்.

      நீக்கு
    2. இருக்குப்பா...   என்று சொன்னது டைப்பும்போது  தனித்தனியாகப் பிரிந்து வந்து விட்டது!

      நீக்கு
    3. //ஹாஹாஹா, காலம்பரவே கவனிச்சுட்டுச் சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. நீங்க சொல்லிட்டீங்க! கன்னாபின்னாவென்று ஆதரிச்சுடறேன்.//

      கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க், தலையில் வெள்ளை band ...   அந்த வெள்ளை band அப்படிச் சொல்ல வைத்தது போலும்!  அந்தப் பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும்!

      நீக்கு
  38. பாசம் என்பது எல்லா உயிர்களுக்கும் இயல்பானதே...

    பதிலளிநீக்கு
  39. விலை குறைச்சல், விளம்பர மோகம், ஒரே இடத்தில் எல்லாமும் வாங்கிடலாம்ன்னு சரவணா ஸ்டோர் மாதிரியான இடங்களுக்கு போனால் அலைச்சலே அதிகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அருகில் வேறு கடைகளும் இல்லை.  அதுவும் சிரமம்.  நன்றி ராஜி.

      நீக்கு
  40. "ப்ளீஸ்... மாஸ்க்கை மாட்டும்மா... எனக்கு ரெண்டு நாளாய் இருமலா இருக்கு" என்றதும் உடனடியாக சூப்பர்ஃபாஸ்ட்டில் மாஸ்க் அணிந்தாள்!//

    ஹா ஹா ஹா ஹா தெக்கினிக்கி!

    ஓரமாக நின்றிருந்த ஒரு சூப்பர்வைசர் பெண்ணும் மாஸ்க் அணியவில்லை. மறுபடி என்ன சொல்லி இவரை அணிய வைக்க? அவரைத் தாண்டி நடக்காமல் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பின்வாங்கி வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்வது போல பார்த்ததும், அவர் புரிந்துகொண்ட கழுத்தில் தொங்க விட்டிருந்த மாஸ்க்கை முகத்தில் மாட்டினார்!//

    சும்மானாலும் லொக்கு லொக்குன்னு லைட்டா இருமிருக்கலாமோ!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதையும் செய்தேனே...!

      நீக்கு
  41. சரவணா ஸ்டோர்ஸ் அலுப்பு தரும் சில சமயம். நீங்கள் சொல்லிருப்பதுதான் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாடி அல்லது ஒன்று விட்டு ஒன்று என்று... இருந்தாலும் விலை குறைவு என்பதால் அங்கு வாங்குவதுண்டு.

    நிறைய மாற்றங்கள் செஞ்சுருக்காங்க போலத் தெரியுது..நீங்க சொல்லிருப்பதைப் பார்க்கும் போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆள் பற்றாக்குறை.   அதுதான் காரணம்.  பாதிபேர் லீவு.

      நீக்கு
  42. ச ஸ் பத்தி கடைசி பாராவை அப்படியே டிட்டோ செய்து ஹைஃபைவ் சொல்லிடறேன். எனக்கும் அலுப்பு தரும் ஒன்று. எப்பவாச்சும் தான் போவது. நேரம் இருக்க வேண்டும் அங்கு செல்ல..

    கீதா

    பதிலளிநீக்கு
  43. Bhanumathy Venkateswaran ← அம்மாவுக்கு நன்றியைக் கூறிக் கொண்டு :

    13 வரைவு பதிவுகளில் (தமிழில் : Draft Posts) உள்ளவற்றை script அலங்காரங்கள் நீக்கி தொகுத்தவை :

    // 396.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

    மூன்றுவகையான கேணிகள் : அவை மணற்கேணி, நிலக்கேணி(கிணறு), பாறைக்கேணி(சுனை)

    மணற்கேணி = ஊற்று; மக்கள் மணற் படுகையைத் தோண்டித் தோண்டி உருவாக்குவது மணற்கேணி; மணலும் நீரும் காதலாகி மயங்கிக் கிடக்கும் இடத்தில், மணலை அகழ்ந்து அகற்றிக் குழியாக்கினால், அக்குழியில் நீர் சுரந்து நிரம்பி நிற்கும்; தோண்டி எடுக்கும் அளவு நீர் நிறையும்; தோண்டி ஆழமாய் எடுக்க எடுக்க நீர் ஊற்று அதிகமாகும்; ஆழத்தின் அளவிற்கேற்ப நீர் குவியும்; கேணியில் உள்ள நீர் பெற மணலைத் தோண்ட வேண்டும்...! அனைத்து மக்களுக்கும் (சிந்திக்க: பிறப்பொக்கும்) அறிவும் இயல்பாக அமைந்துள்ளது; ஆயினும் கற்க வேண்டும் (என்ன ஒய்... cut... செத்த பின் நாலு பேர் cut... நாங்க நாலு வர்ண கலர் cut...) ; ஆனால் கற்றால்தான் மேலும் அறிவு வெளிப்படும்; எவ்வளவு ஆழம் கேணியைத் தோண்டுகிறோமோ அந்த அளவு நீர் கிடைக்கும்; அது போலவே எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு பெருகும்... எப்படி மனமே...?

    உனது விளக்கமெல்லாம் சரி தான்... |அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு| என்று அருளுடைமையில் சொன்ன ஐயனே, நன்றியில்செல்வம் அதிகாரத்தில் சொன்னது : |அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று| இதே அதே போல் நீ சொன்ன குறளுக்கு இன்னொரு குறள் : | 373.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்| இப்போ எப்படி வசதி...? சில அந்நியர்களால் வந்ததினால், இன்றைக்குச் சொல்வது போல், "என்ன சொல்லி முட்டுக் கொடுக்கப் போகிறாய்...? ஏன்டா டேய்; என்னடா நிலக்கேணி, பாறைக்கேணி விளக்கமெல்லாம்...? //

    பதிலளிநீக்கு
  44. காந்ந்தி சிலக்கான கவிதை செம ஸ்ரீராம். மிகவும் ரசித்தேன் அதுவும் கடைசில சொன்னீங்க பாருங்க!!! ஹா ஹா செம..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ரசனையோ போங்க.. கொஞ்சம் ஆழந்து படித்து தவறுகளைத் திருத்தக் கூடாதா?

      நீக்கு
    2. ஹா..  ஹா...  ஹா...    அது காந்தி சொல்வது என்று புரிந்து கொண்டால் கவலை இல்லை.  வேறுமாதிரி மனதில் தோன்றினால் இடறுகிறது!  

      நீக்கு
  45. அழகான திருக்குறள். பூட்டனாரும் நன்றாகச் சொல்லியிருக்கிறார் இப்ப இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார் என்று யோசிக்கிறேன்..

    படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.//

    படிக்கப் படிக்க டிகிரிதான் பெயருக்குப் பின்னால் பெருகுது பெரும்பாலார்க்கு. அறிவு பெருகியதாகத் தெரியவில்லை...

    அதே போல படிக்க படிக்க சில சமயம் மூளை ஒரு வரம்பைத் தாண்டி இசகுபிசகாகவும் போகும்...ஹையோ ஸ்ரீராம் இது குறளுக்கும் வள்ளுவருக்குமான கருத்தில்லை. இந்த வரிக்கு நான் சும்மா காண்பதை வைத்துச் சொல்லுவது.

    அவர் சொன்ன அறிவு என்பது வேறாச்சே.

    கீதா

    பதிலளிநீக்கு
  46. சுஜாதாவின் உரை நல்லாருக்கு...வித்தியாசமாக..

    தினமலர் செய்தி வாசித்த நினைவு இருக்கிறது ஸ்ரீராம்.

    காளைக்கும் வருமாம் காதல்// அட தலைப்பு செம...கவிதையா?!!! ஆ ஆ ஆ கமல் நினைவு வந்திருச்சே

    என் காதலைச் சொல்ல நினைச்ச போது
    உனை எங்கிட்டருந்து பிரிச்சுக் கூட்டிப் போகுக் வேளையில் கவிதை கொட்டுது
    உன்னைக் காக்க வருகையில் துக்கம் அடைக்குது.
    மனிதர்க்கு மட்டும்தான் வருமா காதல்?
    இந்தக் காளைக்கும் வரும் காதல்!
    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல! மனிதக் காதல் அல்ல...அல்ல..
    அதையும் தாண்டி புனிதமானது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  47. மதன் தமிழின் ஸ்டார் கார்ட்டூனிஸ்ட். ’சைலண்ட்டான’ ரசிகர் பட்டாளம் அதிகம்- யாரும் பேசுவதில்லை பெரிதாக எனினும். சமூக வகைமையில் கருத்தாக்கங்களும் அதற்கேற்ற கேலிச்சித்திரங்கள் வரையும் திறனும் கூடி வருதல் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. மதன் ஒரு கலைஞன். இப்போது என்னதான் செய்துகொண்டிருக்கிறார் அந்த மனுஷன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் யு டியூபில் இருந்தார்.   அப்புறம் கொஞ்ச நாள் தினமணியில் கூட இருந்தார்.  ஏதோ ஒரு திரைப்பட விபத்தில் அவரது மருமகன் (என்று நினைக்கிறேன்)  அகால மரணம் அடைந்தபின் அவரைப் பற்றி செய்தி இல்லை.

      நீக்கு
  48. இரு கார்ட்டூனும் ஹா ஹா ..

    ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  49. ஆம் ..ஏதோ வாங்கப் போய் வேறு ஏதேதோ வாங்கி வருவதும்..பின் செக்ஷன் செக்னாய் செக்குமாடாய்ச் சுழல்வதும்..அது என் போன்ற அந்தக் காவத்து ஆட்களுக்கு சொள்ளைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரமணி ஸார்...   பழங்காலத்தை நினைத்து மனம் ஏங்குதே!

      நீக்கு
  50. அடுத்த பகுதிக்கான குறள் பரிந்துரை:

    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

    பதிலளிநீக்கு
  51. ஜோக்ஸ் கலக்கல். காந்தி தாத்தா கவிதை நன்றாக இருக்கிறது .
    தற்போது புடவை கடை ஒன்றுக்கும் செல்வதில்லை. மகள் வேலைக்கு போடுவதற்கு ஆன் லைனில் வாங்கினாள்.

    பதிலளிநீக்கு
  52. தீபாவளி என்றால் அக்கால தீபாவளிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வோட்டும் அதற்குதான் நண்பர் கறந்து ஜெயக்குமார் ஸார்.

      நீக்கு
  53. வந்தாலும் வந்தது கொரோனா...!! நம்மை இயல்பாக வாழ விடாமல் கழுத்தறுப்பாக...!! அலுப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  54. மதுரை சரவணா ஸ்டோர்ஸ் பார்க்கவில்லையே என்று பார்க்கலாம் என்று போய் விட்டு கஷ்டப்பட்டோம். நமக்கு வேண்டியதை குறித்து கொண்டு கீழே அது எந்த தளத்தில் இருக்கிறது என்று ஒரு கையேடு கொடுத்தார்கள்., சொல்லவவும் செய்தார்கள். அங்கு மட்டும் போய் விட்டு வந்து விட்டோம். பில் போடவே காத்து இருக்க வேண்டி இருக்கே!
    லிப்டில் போகாமல் எஸ்கலேட்டரில் போவதே இந்த மாதிரி நேரத்தில் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே நுழையும்போதே நாம் தேடித் செல்லும் பொருள் எந்த தளத்தில் இருக்கிறது என்று கேட்டால் அங்கு வேலை செய்யும் அனைவருமே சொல்வார்கள்தான்!   நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  55. உங்கள் கவிதைநன்றாக இருக்கிறது. குறளும் அதற்கு உரைகளும் நன்றாக இருக்கிறது.
    காளையின் பாசம் தினமலரில் படித்தேன் .

    முன்ஜாக்கிரதை முத்தண்ணா சிரிப்பு நன்றாக இருக்கிறது.



    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!