செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சிறு தொடர்கதை : மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 5/5 - அப்பாதுரை

 

மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 5

முன்கதை ஒன்று ---  இரண்டு  - மூன்று  - நான்கு 

    யாருக்கும் காத்திராதவர் போல் கதவைத் திறந்து அறையுள் நுழைந்தார் ஜெயமேரி. கண்காணி போல கதவைப் பிடித்தபடி நின்றார். அவருடைய வயதும் கதவின் உயரமும் பார்வைக்கு அவர் உயரத்தை இன்னும் குறைத்துக் காட்டின. ஏதோ குள்ளமுனி காவல் நிற்பது போல நின்றார். தன் பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்தார். புட்டியின் உள்ளே மஞ்சள் நிறத்தில் சற்றே குழைவாக இருந்த திரவத்திலிருந்து கொஞ்சம் எடுத்துத் தன் மோவாயில் தடவிக் கொண்டார். அனைவரும் உள்ளே வந்ததும் சட்டென்று கதவை அடைத்தார். திரவத்திலிருந்து கொஞ்சம் தாராளமாக எடுத்துக் கதவிடுக்குகளில் பூசினார். இன்னும் கொஞ்சம் எடுத்து மோனியின் கையில் கட்டியிருந்த கயிற்றில் தடவினார். "எங்கே உன் பெற்றோர்?" என்றார். முன்வந்த ஹரி மற்றும் ஸ்வேதா கைகளில் இருந்த கயிற்றிலும் தடவினார். தன் கைகளை சற்று இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்ந்த ஸ்வேதா ஜெயமேரியைப் பார்க்க, அவர் பேசாதே என்பது போல வாய்முன் விரல் வைத்துச் சுட்டினார். ரகுவின் கைகளிலும் தடவினார். மதன் கை நீட்ட "தேவையில்லை" என்று செபஸ்டியனிடம் சைகை செய்து புட்டியை மூடிப் பைக்குள் வைத்தார். "என்ன அது?" என்றான் மதன் விடாமல்.
     செபஸ்டியன் முன்வந்து "இனி ஜெயமேரி காணாமல் போன பிள்ளைகளுடன் மட்டுமே பேசுவார். ஏதாவது தெரியணும்னா என்னைக் கேளுங்க" என்றார். "அந்த புட்டியில் இருப்பது மஞ்சள் குங்குமம் பல்லிமுட்டைக்கரு மூன்றும் கலந்த திரவம். குட்டிச்சாத்தான் முனி இணையுலகுடன் உரையாட ஏதுவாக பல்லி முட்டைக்கரு. நம் கண்களிள் படாமல் நம்மைச் சுற்றி உலவும் சாத்தான்கள் முனிகளுடன் பல்லிகள் அவ்வப்போது பேசிக்கொண்டே இருக்கும். கௌலி வாக்குனு சொல்வாங்க. பல்லிமுட்டைக்கரு தடவிக்கிட்டதனால நம்மளை சாத்தான் முனிங்க அடையாளம் தெரிஞ்சுக்கும். மஞ்சள் குங்குமம் நம்ம பாதுகாப்புக்காக. இணையுலகம் போனதும் நம்மை மீண்டும் இங்கயே இழுத்து வர இந்த கயிறு பயன்படும். நம்மளை அடையாளம் காட்டி அதுங்க கூட உலாத்தவிட்டு அதே நேரம் நம்ம உலகோட இணைக்குது இந்தக் கயிறு. இணையுலகுல ஏதானும் ஆபத்துதுனா கயிறை இப்படி மேலே இழுக்கணும் என்று ஹரியின் கயிற்றை இழுத்துக் காட்டினார். "புரிஞ்சுதா பாப்பா?" என்று மோனியின் கையில் கட்டியிருந்த கயிற்றைச் சுட்டினார். 


"சின்னப் பெண்ணை ஏன் சார் பயமுறுத்துறீங்க?" என்றான் ரகு. "அடடா.. பயந்துட்டியாமா?" என்ற செபஸ்டியனைப் பார்த்துச் சிரித்து இல்லையென்று தலையசைத்தாள் மோனி. "அவளுக்கு விளையாட்டா இருக்கு செபஸ்டியன். எங்க நிலை?" என்றாள் ஸ்வேதா. ஒன்றுமே பேசாமல் இருந்த ஷோபாவையும் ஷைலஜாவையும் கவனித்த ஜெயமேரி தன் கைக்கடிக்காரத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டார். செபஸ்டியன் தொடர்ந்தார்.

     "இணையுலகை தெரிஞ்சிக்கிட்டோமுனா இதில் பயப்பட எதுவுமில்லை. இறந்து போன அத்தனை உயிருமே மோட்சமோ ஸ்வர்கமோ நரகமோ கிடைச்சு போறதல்லே. சில மத சித்தாந்தப்படி இன்னொரு பிறவியும் எடுக்கறதில்லே. சில மத சித்தாந்தப்படி இன்னொரு வருகைக்காகவும் காத்திருப்பதில்லே. அப்படி இடைல சிக்கிட்டிருக்குற ஆன்மாங்க என்ன செய்யும்? உலாத்தும். இடைல சில ஆன்மாக்கள் சாத்தான் முனிகளோட ஆட்டம் போடும். சில அமைதியா இருக்கும். ஆனா தினம் அபராகண காலத்துல மட்டுமே இந்த பிதிருக்கள் என்கிற ஆன்மாக்கள் நடமாடும். இதுல சில ஆன்மாக்களோட தொடர்பு கொண்டா அதை வச்சு சாத்தான் முனிகளை தேடலாம். பிள்ளைங்களை அடையாளம் காணலாம். திருப்பிடலாம். எல்லா ஆன்மாக்களும் நாம கூப்பிட்டா வராது. சில பித்ரு ஆன்மாக்கள் நம்மை அடையாளம் கண்டும் சும்மா இருக்கும். சில பித்ரு ஆன்மாக்கள் வலி எடுத்தாப்புல நமக்கு உதவ வரும். இந்த ஹோட்டல் அறை ஒரு சுடுகாட்டின் மேலே கட்டினதுனு முன்னாலயே மேனேஜர் சொன்னாரில்லையா? அதுமில்லாம கொழும்பு ஹோட்டலும் சுடுகாடு தான். மேலும் இந்த இடங்கள் ஒரே நேர வலயத்துல இருக்குறதால அத்தனை பிதிருக்களும் சாத்தான் முனிகளும் நடமாடுறப்ப நாம தேடலாம். அந்த உலகுல கொழும்பு கதிர்காமம் கன்னியாகுமரி சென்னை கல்கத்தானு எதுவும் கிடையாது" என்றவர் ஸ்வேதாவிடம் "அம்மா நீங்க உள்ளே போறீங்க பாப்பாவோட... மனமார உங்க உறவுகளை எண்ணி வேண்டிக்குங்க. பலமா கூப்பிட்டு உதவச் சொல்லுங்க. இதுல நீங்க நம்பிக்கையோட இருக்கணும். மத்த பிள்ளைங்களை மோனி கூப்பிடும்" என்றார். மோனியிடம் "பாப்பா. நான் சொல்றதை நினைவு வச்சுக்கமா. நீ ஏதுக்கும் பயப்படாதே. உன் பின்னால உங்கம்மாவும் ஜெயமேரியும் இருப்பாங்க. இங்கே உங்கப்பா கூட ரகு அங்கிள் இருப்பாங்க. உள்ளே போனதும் நீ மோனாவையும் மனியையும் நல்லா உரக்கக் கூப்பிடு. அவங்களோட சேர்ந்துக்க வந்திருக்குறதா சொல்லு. சரியா? ஆனா அவங்களை உன் எதிரே வரச்சொல்லணும். இல்லேனா திரும்பிப் போயிடுறதா சும்மா சொல்லணும். அப்பதான் வெளில வந்து உன்னோட நேரில பேசுவாங்க. அப்படி எதிர்ல வந்ததும் கை கோர்த்து விளையாடலாம்னு சொல்லி உன் ரெண்டு கையால அவங்க ரெண்டு பேரைக் கோத்துக்க. மறந்துடாதே. மூணு பேரும் கை கோர்த்துட்டிருக்குறது முக்கியம். புரியுதா?" என்றார். ஸ்வேதாவின் கண்களில் நீர். மகளை அணைத்துக் கொண்டாள். உடன் அணைத்த ஷோபாவையும் ஷைலஜாவையும் பிடித்துக் கொண்டாள். மூவர் கண்களிலும் நீர். "பயம் வேண்டாம்" என்றார் செபஸ்டியன். அதற்குள் ஜெயமேரி அவசரம் என்று கைக்கடிக்காரத்தைச் சுட்டி சைகை காட்டினார். மணி ஒன்று பனிரெண்டு.
     செபஸ்டியன் அவசரமாக மெழுகு விளக்கொன்றை ஏற்றினார். ஜெயமேரி மெல்லிய குரலில் ஏதோ முனகுவது போலப் பாடத் தொடங்கினார். மெழுகு விளக்கு முன் நின்றார். வலது கையில் மோனியையும் இடது கையில் ஸ்வேதாவையும் பிடித்துக் கொண்டார். ஜெயமேரியின் குரலுக்கு இசைவது போல விளக்கு நன்றாக எரியத் தொடங்கியது. அறையில் முட்டைக்கரு வேகும் வாசம். "ஜெயமேரி விளைக்கைத் தாண்ட கால் வைப்பாங்க. நீங்க அவரோட சேர்ந்து தாண்டி அந்தப் பக்கம் போயிடணும். பயப்படாதீங்க" என்றார் செபஸ்டியன் மோனி ஸ்வேதாவிடம். பத்து நிமிடம் போல எதுவும் நிகழவில்லை. முனகல் பாட்டும் அதற்கேற்ப மெழுகு விளக்கொளியும் பலமாயின. திடீரென்று விளக்கு காற்றில் ஆடுவது போல படபடக்க அறை விளக்கொளி நிழல்கள் கூரையில் பரபரத்தன. நடனமாடின.


 நூற்றுக்கணக்கான நிழல்கள் அறையுள் சேரத்தொடங்க செபஸ்டியன் "ஸ்வேதாம்மா.. உங்க இறந்த நெருங்கிய உறவுகளை நினைச்சு உரக்கக் கூப்பிடுங்க. அந்தப் பக்கம் போகத் தயாராகுங்க" என்றார். ஜெயமேரி ஹை ஜம்ப் தாண்டுவது போல விளக்கைத் தாண்ட செபஸ்டியன் கொஞ்சமும் தயங்காமல் ஸ்வேதாவையும் மோனியையும் தூக்கி ஏறிவது போல விளக்குக்கு அந்தப்பக்கம் ஏற்றிவிட்டார். சட்டென்று அறையில் அமைதி, பீதி. காரணம் ஜெயமேரி, ஸ்வேதா, மோனி மூவரையும் காணவில்லை. விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. திடீரென்று யாரும் எதிர்பாரா விதத்தில் செபஸ்டியனை தரையில் தள்ளிவிட்டு ஷோபாவும் சைலஜாவும் "மோனா மனி இதோ வரோம்" என்று கத்தியபடி விளக்கைத் தாண்டிக் குதித்தனர்.


 திடுக்கிட்டு அதிர்ந்த நண்பர்கள் மூவரும் குதிக்க முற்படும் பொழுது செபஸ்டியன் தடுத்து "போவாதீங்க. ஏற்கனவே ஷைலஜா ஷோபா ரெண்டு பேருக்கும் திரும்பி வர எந்த அடையாளமும் இல்லே. நீங்க வேறே போய் இன்னும் சிக்கலாக்கிடாதீங்க. பிளீஸ்" என்றபடி விளக்கை ஒரு அடி நகர்த்தி விட்டார். விளக்கு மெள்ள அடங்கிச் சுடர் விட்டது.
     திகைத்து நின்ற நண்பர்கள் ஆத்திரப்பட்டார்கள். "என்ன மடத்தனம்யா இது?" என்றான் ரகு. "எங்கே அவங்க?" என்றான் ஹரி. அமைதிப்படுத்தும் புன்னகையுடன் தொடர்ந்தார் செபஸ்டியன். "நம்மோட இங்கே தான் இருக்காங்க. இன்னொரு பரிமாணத்துல. அதனால நம்மால் பார்க்கவோ சாதாரணமா தொடர்பு கொள்ளவோ முடியலே. பண்பட்ட பதப்பட்ட மனதால தொடர்பு கொள்ள முடியும்" என்றார். "எதையும் நம்ப முடியலே. ஆனா அவங்களைக் காணோம்" என்றான் மதன். "வியர்ட்" என்றவன் தோளில் தட்டிய செபஸ்டியன் "ஏன் அப்படி சொல்றீங்க? கடவுள் நம்பிக்கை உண்டு தானே உங்களுக்கு? கடவுள் நம்மைப் பார்க்க முடியும்னும் எந்நேரமும் நம்மைக் கவனிக்கிறாருனும் நம்பறோம். ஆனா நாம கடவுளைப் பார்க்க முடியலே. சாத்தான் முனியுலகும் அப்படித்தானே? கடவுள் உலகம் போலவே இதுவும் இருக்கலாமே? இப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும். நான் சொன்னபடி நடக்கணும். இல்லைனா எல்லாருக்குமே ஆபத்தா போயிடும். இப்ப மோனி மத்த பாப்பாக்களைத் தேடிட்டிருப்பாங்க. ஷோபாவும் சைலஜாவும் தான் பிரச்சினை. அவங்க கைல கயிறு கிடையாது. அடையாளமோ பாதுகாப்போ இல்லாம அவங்க குதிச்சிருக்காங்க. ஆனா அதுவே அவங்களை அடையாளம் காட்டி ஜெயமேரி கண்களில் பட வாய்ப்பிருக்கு. ஏன்னா அவங்களும் பிள்ளைகளையும் பித்ரு உறவுகளையும் தான் அழைப்பாங்க. ஜெயமேரி கண்களில் பட்டால் நிச்சயம் திரும்பிவர வாய்ப்பிருக்கு. அப்படி கண்ணில் படாத போனா, என்னை மன்னிச்சிருங்க, அவங்க ரெண்டு பேரும் திரும்ப வாய்ப்பே இல்லை" என்றார். விளக்கை முன்னிருந்த இடத்தில் வைத்து "இன்னும் அரை மணியில் விளக்கை மறுபடி உயர்த்தி ஒளி பெருகச் செய்வேன். தயவு செய்து இந்தப்பக்கம் நில்லுங்க. ரகு சார்.. நீங்க கவனமா இருக்கணும். விளக்கு நல்லா எறியுறப்ப நீங்க அதுக்கு நேர் எதிரே, ஜெயமேரி நின்ன இடத்துல நிக்கணும். அந்த உலகுல சுபம் அல்லது ஆபத்து என்று எந்த நிலை வந்தாலும் உங்க கைல இருக்குற கயிறு துடிக்கும். உங்களை உள்ளே இழுக்கும். ஆனா நீங்க அவங்களை இழுக்கணும். ரகுவை விடாமல் நீங்க ரெண்டு பேரும் பிடிக்கணும். நானும் கை கொடுப்பேன். அதற்குத்தான் ஆண்களை இங்கே விட்டது" என்றார் செபஸ்டியன்.
         மோனி அழைத்து வெகு நேரமாகியும் யாரும் வரவில்லை. ஸ்வேதா பலமாகக் கூவி அழைத்தாள். எங்கே பார்த்தாலும் உருவமில்லாத உருவங்கள். அவர்களைத் தொட்டுச் சென்றன. திடீரென்று ஒரு சிரிப்பொலி கேட்டது. பெண்ணின் உரத்த சிரிப்பொலி. ஜெயமேரி உரக்க "யார் நீ?" என்றார். "எங்கள் பிள்ளைகளை திருப்பி விடு" என்றார் கடுமையான குரலில். பெண்ணின் குரல் அடங்கிப் பணிவுடன் "எம்பேரு மோகி. மன்னிக்கணும். திருப்பணுமா? இதோ திருப்பிடறேன்" என்றது. சட்டென்று மோனியின் கழுத்தை முழுதுமாகத் திருப்பி வெகு பலமாகச் சிரித்தது. ஸ்வேதா அலறினாள். ஜெயமேரி "பயப்படாதீங்க. அது என்ன செய்தாலும் பயப்படாதீங்க" என்றார். ஜெயமேரி தொடர்ந்து உரத்த குரலில் "நீ ஒரு புழக்கடை முனியாக இருந்தால் என்னிடம் விளையாடிப் பார். எங்கள் பிள்ளைகள் இந்த உலகில் இருக்க முடியாது. உன்னால் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். என்னிடம் வா பார்ப்போம்" என்று தன் கையிலிருந்த புட்டியை எடுத்தார். "இதிலிருந்து ஒரு சொட்டு விழுந்தாலும் உன் உலகம் அழிஞ்சிரும்" என்று மிரட்டினார். மோனி பலமாகக் கூப்பிட்டாள். "இந்தா.. சாத்தான்கள் எனக்குத் தேவையில்லை" என்றபடி மனிஷாவையும் மோனாவையும் மோனியிடம் தள்ளியது பெண்குரல். "அவங்களைப் பிடிச்சுக்க" என்றாள் ஸ்வேதா. ஜெயமேரி சொன்னபடி மோனாவையும் மனிஷாவையும் கைக்கொருவராகப் பிடித்துக்கொண்டாள் மோனி. மறுபடி உரக்கச் சிரித்த பெண்குரல் "என்கிட்ட முனிகள் வந்தாச்சு. அது போதும்" என்று வீறிட்டு அலறியது. ஸ்வேதா நடுங்கினாள். கணத்தில் ஷோபாவும் ஷைலஜாவும் தெரிந்தார்கள். அடுத்த கணம் அவர்களை சகட்டு மேனிக்கு உருட்டிய பெண்குரல் அடக்கத்துடன் "இவங்களை நானே வச்சுக்கறேனே? பிள்ளைங்களை நீ எடுத்துட்டு போ" என்றது. மீண்டும் ஷோபாவையும் ஷைலஜாவையும் ஸ்வேதாவின் கண் முன்னே ஆடவைத்தது. சட்டென்று அவர்கள் கீழே விழுவது போல தோன்ற ஸ்வேதா அவர்களைப் பிடித்துக் கொண்டாள். "நல்லது" என்றார் ஜெயமேரி. "நான் இந்த திரவத்தை அவர்கள் மேல் தெளித்ததால் தற்காலிகமாக நம்முலக அடையாளம் கிடைத்தது. சரியான நேரத்தில் பிடித்துக் கொண்டாய்" என்றார். அருகே வந்த பெண்குரல் ஓலமிட்டு ஜெயமேரியை வேகமாகச் சுற்றி சுற்றி வந்தது. "போ ஸ்வேதா. போ மோனி. கைக்கயிற்றை இழுத்து அவர்களுக்கு செய்தி கொடுங்க. என்னைப் பற்றிக் கவலைப் படாதே. போ போ" என்றார். மோனியும் ஸ்வேதாவும் படபடத்து எவரையும் கைவிடாமல் கைக்கயிற்றை வாயால் இழுத்தனர்.
     "என்னய்யா இது? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறே?" என்றான் ரகு கோபமாக. "நாம நாலு பேரும் இங்கே இருக்கோம். அவங்க என்ன நிலமைல இருக்காங்களோ? உனக்கு இதில அனுபவம் இருக்குனு சொன்னியே?" என்று ரகு எரிச்சலுற, செபஸ்டியன் அமைதிப்படுத்தினார். "ரகு, கவலைப்படாதீங்க. எனக்கும் ஜெயமேரிக்கும் அனுபவம் உண்டு. ஜெயமேரியே முனியால கடத்தப்பட்டு மீட்கப் பட்டவங்க தான். என் அப்பாவின் கடைசி தங்கை அவர். நான் பிறந்த பின் பிறந்தவங்க என் அத்தை. சின்ன வயசுல இது போல சிக்கி மீட்குறப்ப சரியான நேரத்துல கயிறிழுக்க மறந்த என் அப்பாவின் தவறினால அறைகுறையா இணையுலக தொடர்போடவே வாழுறாங்க. இந்த உலகத்துலயும் ஒட்ட முடியாம ஒரு வாழ்க்கை. அதான் அவங்க பாக்குறதுக்கு குள்ளமா என்னைவிட வயசா தெரியறாங்க. இந்த உலகத்துல வாழுற ஒரு அசல் ஆனால் நல்ல குட்டிச்சாத்தான் அவர்" என்றார். "ஐம் சாரி" என்ற ரகுவைத் தட்டிக் கொடுத்து "இட்ஸ் ஓகே. நம்ம விஷயத்துக்கு வருவோம். நான் சொல்றதை கவனமா கேளுங்க. இன்னும் ஒரு நிமிஷத்துல நான் விளக்கு ஏத்துவேன். முன் போலவே நிழல்கள் ஆடத் தொடங்கியதும் எந்த நேரமும் உங்க கைக்கயிறு இறுகும். உடனே நீங்க செயல்ல இறங்கணும் கைக்கயிறு இழுபடற கணத்துல தயங்காம நீங்க இறுக்கப் பிடிச்சு இழுக்கணும். அவங்க இதே விளக்கொளி வழியா திரும்ப வந்து விழுவாங்க" என்றார். ஹரியும் மதனும் விழிக்க, "தவறே செய்யாதீங்க" என்று அவர்களைப் பார்த்துச் சிரித்தார் செபஸ்டியன். "பி ஸ்டராங்".
     விளக்கேற்றிய செபஸ்டியன் ரகுவை விளக்கெதிரே நிறுத்தினார். ரகுவின் பின்னே ஹரி அவன் பின்னே மதன் என்று நிறுத்தினார். "கவனமா கேளுங்க. ஜெயமேரி கண்டிப்பா அத்தனை பேரையும் திருப்பிடுவாங்க. நீங்க உடனே ஒரு நொடி கூடத் தயங்காம இங்கிருந்து ஒண்ணா வெளியேறிடணும். எங்களைப் பத்திக் கவலைப் படாதீங்க. யு நீட் டூ கோ. ஒண்ணா எங்கேயாவது ஹோட்டலுக்கு வெளியே போயிடுங்க. திரும்பிப் பாக்காம ஓடச் சொல்வாங்களே அதுபோல ஒடுங்க" என்றார். அவர் சொல்லி முடிக்கவும் விளக்கொளி பெருகிப் படர்ந்து முன் போலவே நிழல்களாடின. ஹரியின் கைக்கயிறு இழுபட்டது. "டேய் ரகு" என்று அவன் கத்தவும் ரகுவின் கைக்கயிறு இழுபட்டது. "நம்பிக்கை வை" என்று உரக்கக் கூவிய ரகு தன் கைகளை இழுத்தான். ஆனால் அவனே விளக்கில் விழப்போனான். ஹரி ரகுவை பிடித்திழுக்க மதனும் செபஸ்டியனும் சேர்ந்து கொண்டனர். சில கணங்களில் பிள்ளைகள் வந்து விழுந்தனர். "மதன்.. அவங்களை இழுத்துட்டு ஓடுங்க" என்றார் செபஸ்டியன் அவசரமாக. மதன் மூன்று பிள்ளைகளுடன் வெளியே ஓடினான். அடுத்த சில கணங்களில் ஒவ்வொருவராக மனைவிமார் வந்து விழுந்தனர். 

"ஓடுங்க ஓடுங்க" என்றார் செபஸ்டியன். ஹரி மூவரையும் இழுத்துக் கொண்டு அறையைத் தாண்டி ஓடினான். "ஜெயமேரி?" என்று தயங்கிய ரகுவை விளக்கிலிருந்து தள்ளிய செபஸ்டியன் "அவங்க முனி கிட்டே சிக்கியிருக்காங்க. நான் போய் மீட்டு வரணும். இது வழக்கமா நடக்கும். வாழ்த்துக்கள் உங்க எல்லோருக்கும். உடனே இடத்தை விட்டுக் கிளம்புங்க" என்று விளக்கைத் தாண்டிக் குதித்தார் செபஸ்டியன். "வாடா" என்று கூவிக்கொண்டிருந்த ஹரியிடம் சேர்ந்து கொண்டான் ரகு. வெளியே மூன்று குடும்பங்களும் அணைத்துக் கொண்டன.
     அன்று இரவே ஊருக்குக் கிளம்பினர். வக்கீல் மூலமாக போலீசுடன் தொடர்பு கொண்டு வழக்கை முடித்தனர். அந்த ரிஸார்ட் பக்கமே தலை வைக்கவில்லை. செபஸ்டியன் ஜெயமேரி பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. கேட்கவும் இல்லை. பல வாரங்களுக்குப் பிறகு ரகுவுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தில் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த முகவரிக்கு ஒரு பெரிய தொகையை அனுப்பினார்கள் நண்பர்கள்.
     தினைந்து வருடங்களுக்குப் பிறகு.
     மோனா, மோனிகா, மனிஷா மூவரும் ஒரு பள்ளிக்கூட வாசலில் இருந்த பாரில் மோகிடோ அருந்திக் கொண்டிருந்தார்கள். "பள்ளிக்கூட வாசலில் கள்ளுக்கடை வச்சிருக்கான பாரேன்" என்றாள் மோனி. "டீ.. நம்ம திட்டம் என்னாச்சு? இந்த வாரம் போயே ஆகணும்" என்றாள் மனிஷா. "கொழும்பு போக அனுமதிக்கவே மாட்டாங்க" என்றாள் மோனா. "அதனால தானே கோவா போறதா டிக்கெட் காட்டி ஏமாத்தறோம்?" என்றாள் மோனி. "இதோ பாருங்கடி. நாம வேறே அவங்க வேறே. இனி நம்ம அடையாளப்படி வாழ வேண்டாமா?" என்றாள் மனிஷா. "ரைட்" என்று இருவரிடமும் உயரே கை தட்டினாள் மோனி. எதிரே பள்ளிக்கூடம் விட்டு ஐந்திலிருந்து பத்து வயது சிறுபிள்ளைகள் வெளிவந்தனர். அவர்களைச் சுட்டிய மனிஷாவும் மோனாவும் "அங்க பாருடி.. குட்டி குட்டியா.. டோன்ட் தெ லுக் டிலிஷஸ்? அப்படியே வாய்ல போட்டு லபக்குனு முழுங்கிடணும் போல இல்லே?" என்றாள். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பார்வையில் பல அர்த்தங்கள் இருந்தன. கையிலிருந்த கோப்பையை உயர்த்தி "டு மோகி" என்றனர்.

[முற்றும்] (ஸ்.. அப்பாடி)

32 கருத்துகள்:

  1. ஆஹா... அமானுஷ்ய கதையை அப்பாதுரை முழுமையாக முடித்துவிட்டாரே.

    இந்த மாதிரி கதைகளில் லாஜிக், நம்பகத் தன்மை என்று எதையும் எதிர்பார்க்கக்கூடாது. படிக்கும்போது அடுத்தது என்ன என்று எதிர்பார்க்கும்படியாக சுவாரசியமாகச் செல்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    அந்த அளவில் இந்தத் தொடர் நன்றாகச் சென்றது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. படிச்சதே பெரிய விஷயம்.

      நீக்கு
    2. இந்த மாதிரி கதைகளில் லாஜிக்--க்கு என்ன குறைச்சல் நெல்லை?
      (இந்தக் கதை கூட)

      நீக்கு
  2. அமானுஷ்யம் அளவு கடந்து விட்டது. முடிந்தபின் அப்பா-டா என்று ஒரு ஆசுவாசம். கடைசியில் ஒரு சுபம்.
    கதையில் கரு என்று ஒன்றும் இல்லை. மீட்டா படங்கள் நன்றாக உள்ளன.

    சாதாரணமாக ஒரு கதையை வாசித்து முடித்தபின் கதைக்கு ஏற்ப எனக்கு ஒரு reaction வரும்.... வியப்பு, சந்தோசம், துக்கம், அனுதாபம் என்று ஏதாவது ஒன்று ஒரு நிமிடம் வந்து போகும். இந்த கதை முடிந்த reaction தான் "அப்பாடா".

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி.. இன்னொருவருக்கும் இதே உஸ் அப்பாடா feeling! (முதலெழுத்து ஸ்ரீ கடைசி எழுத்து ம்)

      நீக்கு
    2. அமானுஷ்யம் என்பது நீங்களாகக் கொடுக்கும் பெயர்.

      அமானுஷ்யத்திற்கு அர்த்தம் யாரே அறிவார்?

      நீக்கு
  3. ஆஹா! இந்த மூணும் அதுங்களா!!!! அதுங்க கதைய தொடரும் போல ஆனா அப்பாதுரைஜி அதை எழுத்துல கொண்டு வருவாரான்னு கேட்டா "ஸ்பாஆஆஆஅ ஆளைவிடுங்கப்பா நானே செபாஸ்டியனையும் ஜெயமேரியையும் தேடிட்டிருக்கேன் அவங்களை கொண்டாரணுமே!! ன்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கதையின் இந்த இறுதிப் பகுதிய வாசித்தப்ப என் மகனின் நண்பருடன் நான்.... 13 வருஷம் இருக்கும் அப்ப நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது நினைவுக்கு வந்துச்சு.

    நம்ம வீட்டுல பசங்க எல்லாம் கூடி ஒரு ஆங்கிலப் படம் பேய்ப்படம் பார்த்திருந்தாங்க. நான் அப்பப்ப கிச்சன்லருந்து வந்து பார்த்துட்டு - அத்தனைக்கும் சமைக்கணுமே - போறப்ப, அவர் கேட்டார், என்னம்மா பேய் னா பயமான்னு...."அட நீங்க வேற, நான் நம்பினாத்தானே" ன்னு சொன்னதும், "ப்ரேயர் பண்ணறீங்க கடவுள் நம்பிக்கை இருக்குன்றீங்க...அப்ப பேயையும் நம்பணும். இப்ப பாருங்க நான் கடவுல் நம்பிக்கை இல்லாதவன், அதனால பேயையும் நம்பாதவன்...ஆனா நீங்க கடவுள் நம்பிக்கைன்னு பாசிட்டிவ்ன்னு சொல்வீங்க அப்ப பாசிட்டிவ் நா நெகட்டிவ் இருக்கனுமில்ல?" என்றார்.

    ஆமாம் பிரபஞ்ச சக்தில பாசிட்டிவ் நெகட்டிவ் உண்டுதானே!

    நம்ம மனசுலயும் இருக்கே பாசிட்டிவ் நெகட்டிவ்...ஸோ நம்ம மனசுல பாசிட்டிவ் சக்திய கூட்டறதுக்குத்தானே முயற்சி செய்யறோம் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி அப்படின்னு வைச்சுக்கங்க...நெகட்டிவ் எனர்ஜி கூடும் போது இப்படி வைச்சுக்கலாம்னு ....அப்படி உரையாடல் போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. energy நம்மை சுற்றி இருக்கின்றன என்று தீவிரமாக நம்புமளவுக்கு என் வாழ்வின் சமீபத்திய அனுபவங்கள் என்னைத் தாக்கியுள்ளன.

      நீக்கு
    2. //energy நம்மை சுற்றி இருக்கின்றன என்று தீவிரமாக நம்புமளவுக்கு என் வாழ்வின் சமீபத்திய அனுபவங்கள் என்னைத் தாக்கியுள்ளன.//

      என்ன தேவர்கள் உங்கள் கண்களுக்கு புலப்பட ஆரம்பித்து விட்டார்களா? தைவாதர்சனத்தை சொல்கிறேன்.
      Jayakumar

      நீக்கு
    3. Energy -- சயின்ஸ் விஷயம் அல்லவோ, ஜெஸி ஸார்?

      ஸ்ரீஹரிகோட்டாக் காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள். இல்லையா,?

      நீக்கு
    4. higgs boson வேணும்னா சயன்ஸ் விஷயம். நான் குறிப்பிட்ட energy வட்டங்கள் மெய்ஞான விஷயம் :-)

      நீக்கு
  5. அந்த 15 வருடங்களுக்கு பின்னால் விஷயம் தான் நெஜமாலுமே திகிலூட்டக் கூடியது. எழுதினீங்கன்னா
    இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடும்.
    அதிலாவது தரையில் கால்கள் ஊனாத சமாச்சாரங்களை உலாவ விடுங்கள்.

    விரைவில் எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  6. இந்த மாதிரி கதைகளில்
    கடைசி அத்தியாயம் தான்
    பேஜாரு.

    கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயம் வரை வாசிக்கறவங்களுக்கு இஷ்டப்படி போக்குக் காட்டி ஜாலியா எழுதித் தள்ளலாம்.

    எவ்வளவுக்கு எவ்வளவு போக்குக் காட்டறமோ அவ்வளவுக்கு அதிமாகவே கடைசி அத்தியாயத்தில் பொறுப்பு கூடி வேலை வாங்கிடும்.

    அப்படியும் "அது என்னாச்சு" ன்னு கேக்கற கில்லாடி வாசகர் உண்டு.

    அப்புறம் ஹி..ஹி..ன்னு
    சமாளிக்கறதும் நடக்கறது உண்டு. வேறே என்ன செய்யறது, ஜி.

    பதிலளிநீக்கு
  7. கடைசியில வைத்த ட்விஸ்ட் - :) அடுத்த தொடருக்கான முடிச்சு?

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பல காரணங்களால் இத் தொடர் கதையை முதலில் இருவாரம் படிக்க இயலாமல் போய் விட்டது. அதனால், கதையை முதலிலிருந்து கோர்வையாக படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து படித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து வரைந்தவர்க்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //புட்டியில் இருப்பது மஞ்சள் குங்குமம் பல்லிமுட்டைக்கரு மூன்றும் கலந்த திரவம். குட்டிச்சாத்தான் முனி இணையுலகுடன் உரையாட ஏதுவாக பல்லி முட்டைக்கரு//

    கேட்கவே பயமாக இருக்கே!
    கதைக்கு பொருத்தமான படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!