திங்கள், 26 செப்டம்பர், 2016

"திங்க" க் கிழமை 160926 :: சேவை (இடியாப்பம்) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.


     இன்றைய பதிவில் மறுபடியும் நெல்லளத் தமிழனின் ரெஸிப்பி ஒன்று.  

     எங்கள் வீட்டு சேவைநாழி காணாமல்போய் நீண்ட வருடங்களாகி விட்டது.  எங்கே போனது என்றே தெரியாது.  இந்த முறையில் செய்தும் பல வருடங்களாகின்றன.  நெல்லைத்தமிழன் சொல்வது போல ரொம்பப் பொறுமை வேண்டும்.  ஆனால், முறையானதும் சுவையானதும் இதுதான்.  இதையே முறுக்குப் பிழியும் அச்சில் கூட செய்து பார்த்ததுண்டு.  இப்போதெல்லாம் ரெடிமேட்தான்!  கீதா அக்காவுக்குத்தான் ரெடிமேட் பிடிக்காது!


=================================================================


அனேகமாக எல்லோருக்கும் பிடித்த, ஆனால் பெண்களின் கடும் உழைப்பைக் கோருகின்ற உணவு என்றால் சேவையைத் தாராளமாகச் சொல்லலாம். (அதனாலதான் அதுக்கு "சேவை"ன்னு பெயர் வந்ததோ நெல்லைத்தமிழன்?)

 





அதுவும் அந்தக் காலத்துக் கூட்டுக்குடும்பத்தில், ஏகப்பட்ட உறுப்பினர்களுக்கும் சேர்த்து, அதுவும் டயட் என்ற எண்ணமே இல்லாத காலத்தில், இயந்திர வசதி இல்லாத சமயத்தில், சேவை பிழிவது என்பது அதைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தைவிட இரண்டு மடங்குக்குக்கும் மேலானது. (இந்தக் காலத்துல ஏது கூட்டுக்குடும்பம்?   க(ந)ஷ்டமே அப்படி இருக்கும்போது நான்கைந்து பேர்களாகச் சேர்ந்து வேலையைப் பகிர்ந்து செய்தால் கஷ்டம் தெரியாது, இல்லையா?)
 





எனக்கு மிகவும் பிடித்த உணவு இது. (இந்த முறையில் செய்தால் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்!)  நாங்கள் செய்யும் விதத்தில், கடைசி 2-3 ஈடு குழக்கட்டைகள் கொஞ்சம் கடினமாகியிருக்கும். அப்போது அதை சேவை நாழியில் பிழிவது ரொம்பக் கஷ்டம்தான். 





நானே முழுவதுமாகச் சேவை செய்துபார்த்த பின்பு, இது ஒரு சொகுசு உணவல்ல.. செய்பவருக்குத் தரும் தண்டனை என்றே தோன்றியது. இப்போது பலவித வசதிகள் வந்துவிட்டன. சுலப முறைகளும் பல உண்டு.







நான் கேள்விப்பட்டவரை, அந்தக் காலத்தில், சேவை பண்ணினால், மோர்க்குழம்பு, அப்புறம், தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை(புளிச் சேவைச் செய்யலாம் - புளியோதரை பாணியில்.  தேங்காய் சேவையில் இனிப்பும் செய்யலாம், காரமும் செய்யலாம்)  மோர்க்குழம்புடன் சாப்பிட வெறும் சேவை ஆகிய மூன்றும் இருக்கும். சேவையில் ஒரே ஒரு ப்ராப்ளம் என்னவென்றால், சாப்பிடும்போது தலையணைக்குப் பஞ்சு அடைப்பதுபோல் நல்லா சாப்பிடலாம். 





அப்புறம் மிகுந்த தாகத்தில் தண்ணீர் குடிக்கும்போதுதான், முழு வயிறையும் சேவையால் நிரப்பிவிட்டோமே என்று தோன்றும். எங்க அம்மாவுக்கு சேவை ரொம்பப் பிடிக்கும். அவங்க திருனெல்வேலியில் இளம் வயதில் இருந்தபோது (1930களில்), கையினால் சேவை நாழி சுத்திக் கட்டுப்படியாகாது என்று சேவை நாழியிலேயே பெரிய மர உலக்கை நுழைக்கும் வழி இருக்குமாம். நாழியில், குழக்கட்டையைப் போட்டபின், அந்த உலக்கையின் ஒரு பகுதி சுவற்றில் பதித்து, இன்னொரு பகுதியில் குழந்தைகள் உட்கார்ந்தால், நாழியிலிருந்து சேவை வருமாம். (இது நான் பார்த்ததில்லை)
 






சில வருடங்களுக்கு முன்பு என் தாத்தா இருந்த அந்த வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சுவற்றில் பதித்த ஓட்டையைப் பார்த்து ஞாபகத்துக்குப் படமெடுத்து வந்தேன்.  இப்போ எப்படி சேவை பண்ணுவது (கஷ்டப்படறது) என்று பார்ப்போம்.





புழுங்கலரிசியை நன்கு ஊறவைக்கவும். (3 கப்). அதை மிக்சியில் மைய அரைக்கவும். இல்லாட்டா நாழித் துளைவழியா சுலபமா சேவை வராது.  அரைச்ச மாவை, அடுப்பில் பெரிய இலுப்புச்சட்டியில் போட்டு கிளற வேண்டும். அப்புறம், அதை கையளவு பெரிய குழக்கட்டைகளாகப் பண்ணி, இட்லி பாத்திரத்திலோ அல்லது சாதாரண பாத்திரத்திலோ, இட்லி வேகவைப்பது போன்று வேகவைக்கணும். சேவை நாழியை உபயோகப்படுத்தும் முன்பு நன்கு சுத்தம் செய்துவிட்டு, உள்ள கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொள்ளவும். 






இனி போர் (war) ஆரம்பம். நாழிக்குக் கீழே தட்டை வைத்துவிட்டு, குக்கரிலிருந்து 2-3 குழக்கட்டைகளாகப் போட்டுப் பிழிய வேண்டியதுதான். கூட ஆள் இருந்தால், சேவை பிழியும்போது தட்டை நன்கு சுத்தினால் ஒரே இடத்தில் குவியாமல், பரந்து தட்டு நிறைய சேவை வரும். வீட்டுல 2-3 பேர் வேலை செய்ய இருந்தால், முதலிலேயே 2-3 குழக்கட்டைகளை நாம பிழிந்துவிட்டால், கொஞ்சம் ஆறிப்போய் கடைசி ஈடுகள் வரும்போது, மற்றவர் பாடு.





(இணையப் படமா?  நீங்கள் செய்யும்போது எடுத்ததா?  அழகாய் வந்திருக்கு நெல்லைத்தமிழன்!)


நான் பண்ணும்போது, குழம்பு பண்ணும் ஆசை போய்விட்டது. அதனால், இட்லி மிளகாய்ப்பொடியைக் கலந்து சேவையைச் சாப்பிட்டேன். என் பையனுக்கும் இட்லி மிளகாய்ப்பொடி சேவை ரொம்பப் பிடிக்கும். எனக்கு எப்போதும் சேவைக்கு, புளிசேரி என்று நாங்கள் சொல்லுகிற குழம்பு பிடிக்கும். அதைச் சிலர் சட்னி குழம்பு என்றும் குறிப்பிடுகிறார்கள்.  தேங்காய், 4 பச்சை மிளகாய், கொஞ்சம் ஜீரகம் (ஜீரகம் என் ஹஸ்பண்டின் வீட்டில் சேர்ப்பது) சேர்த்து நன்கு அரைத்து, மோரில் கலந்து, உப்பு போட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிப்பது..






சுலப முறைகள்:  இடியாப்பம் பொடி என்று கடையில் கிடைக்கிறது. ஜலத்தை பாத்திரத்தில் கொஞ்சம் கொதிக்கவைத்து (பாத்திரத்தின் உட்புறத்தில் ‘நிறைய பொரிகள் வந்தால் போதும்) அடுப்பை அணைத்துவிட்டு, இடியாப்பம் பொடியைப் போட்டுக் கலக்கவும். 






ஓரளவு கெட்டியான பதத்துக்கு வந்ததும், கை அச்சில் (இதுக்கென உள்ள அச்சு அல்லது ஓமப்பொடி அச்சும் உபயோகப்படுத்தலாம்) இடியாப்பம் தட்டுகளில் பிழியவும். 3-4 தட்டுகள் சேர்ந்து ஒரு Standபோல் எவர்சில்வரில் கடைகளில் கிடைக்கிறது. அப்புறம் இட்லி வேகவைப்பதுபோல் வேகவைத்து எடுத்துவிடவேண்டியதுதான்.  இதைவிட சுலபமான, புத்திசாலித்தனமான முறை இருக்கிறது. கடைகளில் டிரெடிஷனல் இடியாப்பம் விற்கிறார்களா என்று பார்த்து அதை வாங்கிவருவதுதான். மைலாப்பூர், மாம்பலம் பகுதியில் கிடைக்கிறது. மாம்பலத்துல ஒரு கடைல, மோர்க்குழம்பு, முள்ளங்கி சாம்பார், உப்புமா குழக்கட்டை, பொடி தடவின இட்லி எல்லாம் விற்கிறார்கள். வீட்டுப் பெண்களின் கஷ்டகாலம்லாம் போயே போயுந்தி.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


==============================================================================


 சூப்பர் நெல்லை!  பிரமாதம்.  நன்றி.

45 கருத்துகள்:

  1. எங்கள் ஊர்பகுதியில் (நெல்லை) அரிசியை கழுவு வெயிலில் உலர்த்தி அதன் பின் இடித்து வறுத்து வைத்து கொள்ளாவர்கள் அதன் பின் தேவையான சமயத்தில் நீரை சுட வைத்து மாவு பிசைந்து அதில் இடியாப்பம் செய்வார்கள் இது எங்கள் அம்மாவினால் மிக எளிதாக எந்த அவசர நேரத்திலும் செய்யும் உணவாக இருந்தது. நாங்கள் இடியாப்பத்திற்கு வாழைப்பழம் தேங்காய் பூ உகர் சேர்த்து பிசைந்து சாப்பிடுவோம் அல்லது மட்டன் குருமா ஊற்றி சாப்பிடுவது வழக்கம். அம்மா போனபின் அந்த உணவும் எங்களைவிட்டுப் போனது. ஆனால் அமெரிக்கா வந்த பின் அது ரெடிமேடாக கேரளாவில் இருந்து இங்கு இறக்குமதி ஆகிறது அது வீட்டில் செயவது போலவே இருக்கின்றது அதைதான் நான் இங்கு உபயோகிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நெல்லைத் தமிழனின் இடியாப்ப செய்முறை சூப்பர். அதை விடவும் அதன் முன்னுரை இடியாப்ப சிக்கல் எவ்வளவு பெரிய சிக்கல் என்று உணர்த்துகிறது. என்னுடைய இடியாப்ப ' சிக்கலை ' நகைச்சுவையாக இங்கே http://rajalakshmiparamasivam.blogspot.in/2013/03/blog-post.html சொல்லியிருக்கிறேன்.
    இடியாப்பப் பதிவிற்கு உங்களுக்கும் , நெல்லைத் தமிழநிற்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  3. உங்க 'சேவை'க்கு என் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  4. இடியப்ப சிக்கலும்.....,
    ருசியான பலகாரமும்.....

    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  5. சேவை தயாரிப்புகளைப் படத்தில் பார்க்கவே நாவில் எச்சில் ஊறி ஒரே ஜொள்ளாகிப் போக வைத்து விட்டது, என்னை.

    ஏற்கனவே நீங்க ஒரு ஜொள்ளுப்பார்ட்டி தானே, என அங்கு நீங்கள் முணுமுணுப்பது என் காதிலும் விழத்தான் செய்கிறது. :)

    நல்ல என் பசி வேளையில் இந்தப் பதிவினைக்கொடுத்து ....... ஏங்க வைத்து விட்டீர்கள்.

    பதிவு கொடுத்து மகிழ்வித்துள்ள தங்கள் இருவரின் ‘சேவை’ க்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. இது போன்ற சேவை நாழியில் தான் என் மாமியார் வீட்டில் சேவை செய்வார்கள்.. ஆளுக்கு கொஞ்சம் பிழிவோம். புளிச்சேவை, எலுமிச்சை சேவை, தேங்காய்பூ, சீனி, நெய் போட்டு சேவை என்று இருக்கும்.
    எங்கள் அம்மா வீட்டில் மர உழக்கில் பிழிவார்கள். நான் மெஷினில் அரைத்து வைத்த மாவை வெந்நீர்விட்டு பிசைத்து சுட சுட பிழிவேன்., ஒவ்வொரு உழக்கிற்கு அவ்வப்போது வெந்நீர்விட்டு பிசைந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஆறி விட்டால் பிழிவது கஷ்டம்.

    இப்போது எல்லா கடைகளிலும் இடியாப்பம் விற்கிறார்கள் , அதனால் அதை வாங்கி சூடு செய்து கொண்டு நம் விருப்பபட்ட கலவைகளை கலந்து உண்ணலாம்.


    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. என்ன மதுரைத் தமிழன்.. மெதுவா எங்க பக்கத்தை (நெல்லையைச்) சொந்தம் கொண்டாடறீங்க.. நீங்க மதுரைப் பக்கம் அல்லவா? கேரளா இடியாப்பம் பச்சரிசியில் செய்வது. அது புழுங்கலரிசியில் செய்வதுபோல் வருவதில்லை. இங்கும் அது கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
  9. கீதா மேடம்.. இதைச் செய்துபார்த்தபின்புதான், உங்கள் செய்முறையைப் படிக்க நேர்ந்தது (1 1/2 ஆழாக்கு பச்சரிசி, 1 1/2 ஆழக்கு புழுங்கரிசி...) அதை அடுத்த முறை முயற்சிக்கப்போகிறேன். உங்கள் பின்னூட்டத்தைக் காத்திருந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. 'நன்றி ஸ்ரீராம். நீங்கள் அடைப்புக்குள் கொடுத்துள்ள கமென்டுகளை மிகவும் ரசித்தேன். அது இடுகையை இன்னும் சுவையாக்குகிறது. (நான்.. நானேதான் ஐயா அந்தப் படங்களை எடுத்தேன்.. மண்டபத்தில் இருந்த கூகிளாரிடமிருந்து இரவல் வாங்கிக்கொள்ளவில்லை ஐயா).

    நிறைய பேருக்கு, சுவரில் உள்ள துளைமூலம் எப்படி சேவை பிழிவார்கள் என்று புரியாது. அந்த காலத்தில் அது custom made சேவை நாழி. அதில் திருகுகள் இருக்காது. அழுத்தும் டைப். அதில், மேற்பாகத்தில், உலக்கையை நுழைக்கும் அளவு பெரிய ஓட்டை இருக்கும். முதலில் உலக்கையை நுழைத்து, பின்பு, கீழே குழக்கட்டையைப் போட்டபின், உலக்கையின் ஒரு பகுதி, சுவற்றில் உள்ள ஓட்டைக்குள் நுழைப்பார்கள். அதிலிருந்து சேவை நாழி 1 1/2 அடி தூரத்தில் இருக்கலாம். மறுபுறம், 3-4 அடிக்குமேல் தூரம் இருக்கும். கொழக்கட்டையை நாழியில் இட்டபின், மறுபுறத்தை அழுத்தினால், சேவை வந்துவிடும். குழந்தைகளாயிருந்தால், உட்கார்ந்தால், சேவை சுலபமாக வெளியே வந்துவிடும். செய்வது ஓரளவு சுலபம்.

    பதிலளிநீக்கு
  11. பகவான்'ஜி.. நன்றி.

    ராஜலக்ஷ்மி மேடம்.. உங்கள் இதுகை, அதுவும் படம் மிகவும் கவர்ந்தது. சேவை சமயத்தில் நம் காலை வாரிவிடும். நன்றாக வந்தால், சேவை காலியாகிவிடும். செய்பவர்களுக்கு இருக்காது. நன்றாக இல்லாவிட்டால், வரும் கமென்ட்களைச் சமாளிப்பது கஷ்டம்.

    உமையாள் மேடம்... 'நன்றி. நீங்களெல்லாம் சமையல் ஜாம்பவான்ஸ். நானெல்லாம் கத்துக்குட்டி

    பதிலளிநீக்கு
  12. வைகோ சார். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. சுருசியான உணவிற்கு ஜொள் விடாதவர்கள் யார்? உணவில் மகிழாதவர்கள் கொடுத்துவைக்காதவர்கள். (உணவு ஒன்றுதான் அனுபவித்துச் சாப்பிட்டு, போதும் என்ற நிலைக்கு நம்மைக் கொண்டுவரும் சக்தி படைத்தது. மற்ற எந்த புலனனுபவமும் நம்மைப் போதும் என்று எப்போதும் சொல்ல வைக்காது). உங்கள் வீட்டுப்பக்கத்தில் பஜ்ஜிக் கடை இருப்பதுபோல் சேவைக் கடை இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  13. கோமதி மேடம்.. சென்னையில் எல்லாக் கடைகளிலும் பிராண்ட் பெயரில் சேவை விற்கிறார்கள். அது எனக்குப் பிடிப்பதில்லை. (நான் அதை கேரளா டைப் என்று ஒதுக்கிவிடுவேன்). ஒரு பிராண்ட் நாங்கள் செய்வதுபோலே மைலாப்பூர், மாம்பலம், தி.நகர் கடைகளில் டிஸ்ட்ரிபியூட் செய்து விற்கிறார்கள் (வெறும் சேவை, தக்காளி, புளி, தேங்காய், எலுமிச்சை வகைகளில். ஒரு பாக்கட் 30 ரூ). அது எங்களுக்கு மிகவும் பிடித்தமானது.

    சேவைக்கு உரிய மரியாதை கொடுக்காதவர்கள்தான், சேவையில் மோரோ, தயிரோ விட்டுச் சாப்பிடுவார்கள் (மோர்சாதம் சாப்பிடுவது போலே.. என் பெண்ணும் அதில் அடக்கம் என்பதால், கோபப்பட இயலவில்லை)

    பதிலளிநீக்கு
  14. 'நெல்லைத் தமிழன் said...

    //வைகோ சார். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. ருசியான உணவிற்கு ஜொள் விடாதவர்கள் யார்? உணவில் மகிழாதவர்கள் கொடுத்துவைக்காதவர்கள். (உணவு ஒன்றுதான் அனுபவித்துச் சாப்பிட்டு, போதும் என்ற நிலைக்கு நம்மைக் கொண்டுவரும் சக்தி படைத்தது. மற்ற எந்த புலனனுபவமும் நம்மைப் போதும் என்று எப்போதும் சொல்ல வைக்காது).//

    உண்மைதான். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    //உங்கள் வீட்டுப்பக்கத்தில் பஜ்ஜிக் கடை இருப்பதுபோல் சேவைக் கடை இருக்கிறதா?//

    சேவைக் கடைகள் என் வீட்டருகில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை எங்கேயாவது இருந்தாலும் இருக்கலாம். இருப்பினும் நான் சேவையை நாடி அங்கெல்லாம் போவது இல்லை. வாங்குவதும் இல்லை. அதெல்லாம் ருசிப்படாது எனக்கு.

    என் பெரிய சம்மந்தி மாமி, நான் குடியிருக்கும் தெருவுக்கு இரண்டு தெருக்கள் தள்ளிதான் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் ரிச்சாக டேஸ்ட் ஆக சேவை செய்வார்கள். அவர்கள் செய்யும் சேவை எனக்குப் பிடிக்கும் என்று அவர்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

    அதனால் அவர்கள் வீட்டில், மாதம் ஒருமுறையாவது சேவை செய்யும் போதெல்லாம் எனக்காகக் கொடுத்தனுப்பி சம்பந்தி உபசாரமெல்லாம் செய்து விடுவார்கள்.

    அவர்களின் படம் இதோ இந்த என் பதிவின் இறுதியில் காட்டப்பட்டுள்ளது: http://gopu1949.blogspot.in/2015/01/19_4.html

    அவர்கள் வெளியூர் + வெளிநாடு போகும்போதெல்லாம், இங்கு எங்கள் தெருவில் உள்ள மற்றொரு ஐயர் மாமியிடம் நான் நேரில் சென்று சேவைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அவர்களும் மிக நன்றாக பலவித சேவைகள் செய்து, பெரிய பெரிய தூக்குகளில் கொடுத்தனுப்பி விடுவார்கள்.

    கொஞ்சம் காஸ்ட்லியாகத்தான் இருக்கும். இருப்பினும் நான் அதைப்பற்றியெல்லாம் கவலையே பட மாட்டேன். அட்வான்ஸ் ஆக ஆயிரம் ரூபாயாகக் கொடுத்துவிட்டு வந்து விடுவேன். அவர்களாகப் பார்த்து ஏதேனும் மீதிப்பணம் எனக்குத் தரலாம் அல்லது என்னிடமிருந்து மேலும் கொஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். ருசியாக சாப்பிடும் ஐட்டம்ஸ்களான இதிலெல்லாம் நான் எப்போதும் கணக்கே பார்க்க மாட்டேன்.

    அதே நேரம் எங்கள் வீட்டில் உள்ள என் மனைவி + என் மருமகள்கள் போன்றோரையும், இடுப்பொடிய சேவை செய்யச்சொல்லித் தொந்தரவும் கொடுக்க மாட்டேன். :)

    பதிலளிநீக்கு
  15. புழுங்கலரிசியை அரைச்சும் பச்சரிசி மாவிலும் கூடச் சேவை செய்யலாம், எங்க மாமியார் வீட்டில் புழுங்கலரிசிச் சேவை மிருதுவாக இருக்காது என்று ஓர் எண்ணம். ஆனால் பச்சரிசி நல்ல அரிசியாக இருந்தால் தான் நல்லா வரும். புழுங்கலரிசி அப்படி இல்லை. புழுங்கலரிசியை அரைச்சுக் கிளறிய பின்னர் உருட்டி மூடி போட்டு வேகவைக்காமல் ஜலத்தைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு மேலே மிதந்து வரும்போது எடுத்துப் பிழிந்தால் கடைசி வரை சேவை மாவு வீணாகாமல் எல்லாத்தையும் பிழியலாம். கடைசி இரண்டு கொழுக்கட்டை பிழிய முடியலையேனு வருந்த வேண்டாம். எல்லாவற்றையும் விட சுலபமான முறை புழுங்கலரிசியைக் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து அரைத்த பின்னர் அரை உப்புப் போட்டுக் கலந்து கொண்டு தேவையான அளவுக்கு நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு இட்லிகளாக ஊற்றி விட்டு வேக வைத்து எடுத்தால் சேவைநாழியில் போட்டுப் பிழிந்து விடலாம். இம்முறையில் பிழிந்த சேவையை மீண்டும் வேக வைக்கவேண்டாம். இட்லியாக வேக வைப்பதே போதும்.

    பதிலளிநீக்கு
  16. நினைச்சால் சேவை செய்வதால் இந்த திடீர்த் தயாரிப்புக்கெல்லாம் போகறதே இல்லை. எப்போவானும் ஒரு முறை அல்லது இரு முறை(?) இடியாப்ப மாவில் பண்ணிப் பார்த்தது உண்டு! :) அதுவும் ஒரு தரம் மாவு சரியில்லாமல் சேவை சரியா வரலை. அதன் பின்னர் அதைப் புளி உப்புமாவாகப் பண்ணினேன். :)

    பதிலளிநீக்கு
  17. http://geetha-sambasivam.blogspot.in/2012/09/blog-post_6315.html

    இந்தச் சுட்டியில் என்னோட செய்முறைப் பட விளக்கங்களுடன் பார்க்கலாம். :)

    பதிலளிநீக்கு
  18. நெல்லைத்தமிழன் இதேதான் இன்றும் நான் செய்துவருகின்றேன். எங்கள் வீட்டிலும் சுவற்றில் பதித்தபடி உண்டு. பின்னர் இரும்பில் நாழியானது. எனக்கு என் அம்மா சீரோடு கொடுத்த நாழி இன்றும் உண்டு. அதில் தான் செய்து வருகிறேன். எங்கள் வீட்டில் டொப்பி அரி என்று நம்மூர் பக்கம் சொல்லுவார்களே புழுங்கல் அரிசி கை முறுக்கு கூட அதில் தான் செய்வார்களே அந்த அரிசியில் சேவை செய்வது வழக்கம். கிடைக்கவில்லை என்றால் மற்ற புழுங்களரிசியில். கொழுக்கட்டை செய்து செய்வதுதான் எனக்கும் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருப்பதால் நான் இப்போதும் அப்படியேதான் செய்கிறேன். இதைக் குறித்து செய் முறை இல்லை என்றாலும் எங்கள் வீட்டில் இதைச் செய்யும் நாள் எப்படி இருக்கும் என்று எங்கள் தளம் ஆரம்பித்த புதிதில் பதிவு எழுதியிருக்கிறேன். மீள் பதிவாய் போடுகின்றேன்....எங்கள் வீட்டில் கொழுக்கட்டை பிடித்து தண்ணீரில் போட்டு வேக வைப்பார்கள் முதலில் எல்லாம் அப்புறம் தான் இட்லி தட்டு இல்லை என்றால் பெரிய வட்டையில் வைத்து ஆவியில் வேக வைத்துச் செய்வார்கள்.

    உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். சேவை மாஜிக் என்று ப்ரெஷர் குக்கர் போன்று வெயிட் போடும் இடத்தில் ஒரு பாத்திரம் வைத்து குக்கருக்குள் அரைத்த மாவை விட்டு வைத்துவிட்டால் சிறிது நேரத்தில் மேலுள்ள பாத்திரத்தில் சேவையாகவே வந்து விடும். 8,9 வருடங்களுக்கு இதன் விலை 4000 அல்லது 5000 என்று இருந்த நினைவு. கோயம்புத்தூரில்தான் இதன் தயாரிப்பு nuham தயாரிப்பு இதோ இந்த லிங்க் பாருங்கள். https://www.youtube.com/watch?v=JmpXccokvuY இப்போதும் இது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஃபெயிலுவரா சக்ஸசா என்று தெரியவில்லை.....

    எங்கள் வீட்டில் சேவை மோர்க்குழம்பு, பப்படம் தான். இல்லை என்றால் வற்றல் வடாம். தேங்காய்ப்பால் வித் வெல்லம். இருக்கும். எப்போதேனும் தான் கலந்த சேவை.

    இன்று எங்கள் வீட்டில் சேவை செய்ய உங்கள் சேவை தேவை ஹிஹீஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  19. மதுரைத் தமிழன் நீங்கள் சொல்லியிருக்கும் பக்குவம் நாங்களும் அதே இடியாப்பத்திற்கான பக்குவம். இப்போதும் இதே பாணியில்தான் நான் பெரும்பாலும் மாவை செய்து வைத்துக் கொள்வது வழக்கம். அவசரத்திற்குக் கைவசம் இல்லை என்றால்தான் ரெடிமேட் மாவு. வ்றுத்து வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை என்றால் சிலர் அந்த மாவை வேட்டில் வைத்து எடுத்து நிழலில் காய வைத்து எடுத்து வைத்து விடுவார்கள் அந்த மாவு இடியாப்பம் செய்ய சூப்பராக வரும். கலரும் வெள்ளை வெளேரென்று ...ஒரு சுற்று சுற்றிப் பிழிந்து விட்டு இடையில் தேங்காய் பூ சர்க்கரை கலந்து தூவி விட்டு மீண்டும் ஒரு சுற்று அதில் மேல் பிழிந்து ஆவியில் வேக வைப்பதுண்டு. இடியாப்பம், சேவை எங்கள் வீட்டில் என் மகன் இங்கு இருந்தவரை அடிக்கடி செய்தது. இப்போதும் மாதத்தில் இரு பதார்த்தமும் ஒரு முறையேனும் செய்துவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. எங்கள் வீட்டில் இடியாப்பத்திற்குச் இலங்கை சொதி செய்வதுண்டு. அருமையான ரெசிப்பி. இலங்கையில் இடியாப்பம் சொதி ரொம்பப் பிரபலம். தேங்காய்ப்பாலில் செய்வது.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. எங்கள் வீட்டில் இடியாப்பம் குருமா செய்வதுண்டு எப்போதேனும். வருடத்தில் ஒரு முறையாக இருக்கும். சேவை செய்வதில்லை.சேவை, இடியாப்பம் சொதி எல்லாம் கீதாவின் வீட்டில் தான் சாப்பிட்டதுண்டு.

    பதிலளிநீக்கு
  22. கீதாக்கா சொல்லியிருப்பது போல்தான் தண்ணீரில் கொழுக்கட்டைகளைப் போட்டுத்த்தான் செய்வார்கள் எங்கள் வீட்டில்..நான் பாத்திரத்தை கடைசிக் கொழுக்கட்டையை வெளியில் எடுக்கும் முன் வரை அடுப்பில் தான் வைத்திருப்பேன். கடைசி இரண்டு அல்லது மூன்றுகொழுக்கட்டைகள் வரை அடுப்பு சிம்மில் இருக்கும். அப்போது பிழிவது சுலபமாக இருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  23. சிறந்த செய்முறை வழிகாட்டல்

    பதிலளிநீக்கு

  24. நெல்லைத்தமிழன் என் உடம்பில் ஒடுவது நெல்லை ரத்தம் (பிறந்தது செங்கோட்டையில்) ஆனால் மதுரையில் வளர்ந்தததால் மதுரைக்குசும்பு ஜாஸ்தி உண்டு.. செங்கோட்டை சுதந்திரத்திற்கு முன்பு கேரளா வ் அசம் இருந்ததால் கேரளா வாடையும் உண்டு. கடைசியில் சென்னையில் வேலைபார்த்ததால் லூசுத்தனமும் என்னிடம் ஒட்டிக் கொண்டது. ஆக இந்த மதுரைத்தமிழன் எல்லாப் பகுதிகளுக்கும் சொந்தக்காரன் ஆவான்

    பதிலளிநீக்கு
  25. கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் சென்னை வந்திருந்த போது உங்கள் வீட்டிற்கு ஒரு நடை வந்து இருப்பேனே சரி சரி அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் அதற்கு முன்னால் மட்டன் குருமா செய்யும் முறையை கற்று வைத்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  26. செய்முறை படங்கள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  27. கிண்டிய மாவை சேவையாகப் பிழிந்து விட்டு இட்லி வேக வைப்பது போல் செய்து எடுக்கலாம் அவ்வளவு சிரமம் இருக்காது. பாலக்காடு கல்பாத்தியில் சின்ன வயசில் சேவைக் கடைக்குச் சென்று வாங்கி வந்ததுண்டு. எலுமிச்சை சேவை தேங்காய் சேவை எல்லாம் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  28. என் சிறிய வயதில் அம்மாவுக்கு சேவை நாழியில் செய்ய உதவியதுண்டு. இப்போது நான் கடைப்பிடிக்கும் வழிமுறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எண்ணை, உப்பு போட்டு, தேவையான அரிசி மாவில் விட்டுக் கிண்டி (not guindy) வைத்துக் கொண்டு, சிறிது நேரம் பொறுத்து, கை பொறுக்கும் சூட்டில், கட்டி யில்லாமல், சேவை மாவை உருண்டைகளாக்குவேன். பின்னர் சேவை ஸ்டாண்டில் அல்லது இட்லித் தட்டு உபயோகித்து, ஓமப்பொடி அச்சில் மாவைப் பிழிந்து 7, 8 நிமிடம் வேக வைத்தால் சுவையான சேவை அல்லது இடியாப்பம் ரெடி!! என் பசங்களுக்கு பிடித்த ரெசிபி!

    பதிலளிநீக்கு
  29. உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழைத்துச் சென்றது..மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று மாலை மூன்று மணியளவில் இந்த சேவைக் கல்யாணம் ஆரம்பிக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை அம்மா வாணலியில் கிளறி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வைப்பார். அதற்குள் வாணலியில் ஒட்டிக் கொள்ளும் காந்தலுக்கு நாப்க்கள் அடித்துக் கொள்வோம். சூடான கொழுக்கட்டைகளை சேவை நாழியில் போட அப்பா பிழிவார். நான் நாழி நகராமல் இருக்க பிடித்துக் கொள்வேன்.தட்டு நிரம்பியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடுவதும் என் வேலை. பின்பு அதை தேங்காய், எலுமிச்சை மற்றும் வெறும் சேவையாக வைப்பார் அம்மா. இரவு முதல் இரண்டையும் காலி செய்து விட்டு வெறும் சேவையில் நானும் தம்பியும் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம்.

    இப்போ concord, anil போன்ற ரெடிமேட் சேவைகள் தான். கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடியவிட்டால் தாளிப்பு சேர்த்துக் கொள்வேன்..ஆனால் அந்த சுவைக்கு ஈடாகாது.

    பதிலளிநீக்கு
  30. உங்கள் செய்முறையும், படங்களும் என் சிறுவயதுக்கு அழைத்துச் சென்றது..மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று மாலை மூன்று மணியளவில் இந்த சேவைக் கல்யாணம் ஆரம்பிக்கும். அரைத்த புழுங்கலரிசி மாவை அம்மா வாணலியில் கிளறி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வைப்பார். அதற்குள் வாணலியில் ஒட்டிக் கொள்ளும் காந்தலுக்கு நாப்க்கள் அடித்துக் கொள்வோம். சூடான கொழுக்கட்டைகளை சேவை நாழியில் போட அப்பா பிழிவார். நான் நாழி நகராமல் இருக்க பிடித்துக் கொள்வேன்.தட்டு நிரம்பியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடுவதும் என் வேலை. பின்பு அதை தேங்காய், எலுமிச்சை மற்றும் வெறும் சேவையாக வைப்பார் அம்மா. இரவு முதல் இரண்டையும் காலி செய்து விட்டு வெறும் சேவையில் நானும் தம்பியும் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம்.

    இப்போ concord, anil போன்ற ரெடிமேட் சேவைகள் தான். கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடியவிட்டால் தாளிப்பு சேர்த்துக் கொள்வேன்..ஆனால் அந்த சுவைக்கு ஈடாகாது.

    பதிலளிநீக்கு
  31. நான்தான் கடைசியில் வருகிறேன் போல இருக்கு. நானும் புழுங்கலரிசி சேவை என்று என் சொல்லுகிறேன் ப்ளாகில் டிபன் வகைகள் என்பதில் எழுதி இருக்கிறேன். ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஆனால் புழுங்கலரிசியை ஊறவைத்து அரைத்ததை இட்டிலிதட்டில் இட்டிலிகளாகவே வார்த்து நேராக அச்சில் போட்டுப் பிழிய வேண்டியதுதான். இட்டிலிக்கு வெயிட் வால்வ் போட மாட்டோம். இதற்கு வெயிட் வால்வ் போட்டு இரண்டு விஸில் வரும்வரை வைத்து எடுத்து, ஆவி போனவுடன் பிழிய வேண்டியதுதான். மாவை அரைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொண்டு, வேண்டும் அளவிற்கும் பிழிந்து கொள்ளலாம். பிழியும் அச்சும்,முறையும் ,படமும் என்னுடையது போலவே உள்ளது. எங்கள் அம்மா காலத்தில் மாவு இடித்துக் கிளறி, அதை உருண்டைகளாகப் பிடித்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து, எடுத்து எடுத்துப் பிழிவார்கள். ஜலம் அதிகமாகிவிட்டால் சேவை சாதித்துவிடும். இங்கெல்லாம் ரெடிமேட் மாவே கிடைக்கிறது. இப்போது சேவையில் நமக்கு விருப்பமான எவ்வளவோ ருசிகளைக் கூட்டலாம். எங்களம்மா சேவையில் எக்ஸ்பர்ட். பச்சரிசி சேவையைவிட புழுங்கலரிசி சேவைதான் ருசி. உங்கள் சேவையை வரவேற்கிறேன். அன்புடன் காமாட்சி.

    பதிலளிநீக்கு
  32. எங்க மாமியார் வீட்டில் ஒரு முறை செய்தார்கள் ரொம்ப கஷ்டம்தான்! ரெண்டு மூனு பேர் ஒத்தாசை இல்லாம செய்வது ரொம்ப கஷ்டம்! எங்க வீட்டுல சேவையெல்லாம் எப்போதாவதுதான்! அதுவும் ரெடிமேட் சேவை! நன்றி!

    பதிலளிநீக்கு
  33. சேவை நாழி - பிழிவதற்கு முன்னரே ஒரு முறை சாப்பிட வேண்டும்! :) இப்போதெல்லாம் கான்கார்டு, அணில் சேவை தான்!

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. மதுரைத் தமிழன் ("AvarkaL UnmaikaL") சொல்லிய முறையில்தான் தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இடியாப்பம் செய்வோம். இடியாப்பம் மீதி இருந்தால், அதை சேவை போல தாளித்து செய்யும் இடியாப்பப் பிரியாணியும் மிகவும் பிரசித்தம் முஸ்லிம்களிடையே.

    பதிலளிநீக்கு
  37. //கீதா எங்க அம்மா செய்யும் முறையில் நீங்கள் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் சென்னை வந்திருந்த போது உங்கள் வீட்டிற்கு ஒரு நடை வந்து இருப்பேனே சரி சரி அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் அதற்கு முன்னால் மட்டன் குருமா செய்யும் முறையை கற்று வைத்து கொள்ளுங்கள்// குசும்பு ஓவர்தான் உங்களுக்கு...நீங்க பரம ரகசியமாகச் சென்னை வந்து சென்றால் யாருக்குத் தெரியும்...பரவால்ல மாறு வேஷத்துல வந்தாலும் சரி... உங்களை யாரு வரக்கூடாது என்று சொன்னது மதுர....வாங்க வாங்க எங்க வீட்டுக்கு..செய்து தருவேன். .இந்த திங்க க்ரூப் எல்லாமே இங்க ஒரு சந்திப்பு நிகழ்த்திடுவோம்...பயப்படாதீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கிறது மதுரைத் தமிழன் அப்படிய்னு யாருக்கும் சொல்ல மாட்டேன் ஹிஹிஹிஹி

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  38. புழுங்கலரிசியை அரைச்சும் பச்சரிசி மாவிலும் கூடச் சேவை செய்யலாம், எங்க மாமியார் வீட்டில் புழுங்கலரிசிச் சேவை மிருதுவாக இருக்காது என்று ஓர் எண்ணம். ஆனால் பச்சரிசி நல்ல அரிசியாக இருந்தால் தான் நல்லா வரும். புழுங்கலரிசி அப்படி இல்லை. புழுங்கலரிசியை அரைச்சுக் கிளறிய பின்னர் உருட்டி மூடி போட்டு வேகவைக்காமல் ஜலத்தைக் கொதிக்க வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு மேலே மிதந்து வரும்போது எடுத்துப் பிழிந்தால் கடைசி வரை சேவை மாவு வீணாகாமல் எல்லாத்தையும் பிழியலாம்.......இதுதான் எங்கள் வீட்டு முறை. நானும் சேவை நாழியில் உட்கார்ந்திருக்கிறேன் . ஆறு வயதில்.
    மாவு சரியான பதத்தில் இருந்தால் சேவை சுலபமாக வந்து விடும்.
    சேவைக்குத் தொட்டுக் கொள்ள அம்மா செய்யும் மோர்க்குழம்புதான் வேணும்.
    அதில் தேங்காயெண்ணையும் விட்டால், கவளம் கவளமாக உள்ளே தள்ளிவிடுவோம்.
    மிக மிக நன்றி நெல்லைத்தமிழன். நன்றாக ருசித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  39. கீதா மேடம் - உங்கள் செய்முறையை, நான் சேவை பண்ணி, படங்கள் எடுத்தபின்பு பார்த்தேன் (1 1/2 ஆழாக்கு பச்சரிசி, 1 1/2 ஆழாக்கு புழுங்கரிசி.. என்று ஞாபகம்). அடுத்த முறை, உங்கள் மெதடில் செய்துபார்ப்பேன்.

    தில்லையகத்து கீதா - உங்கள் வீட்டிலும் சுவரில் பதித்த குழி உண்டு என்று சொல்லியிருப்பது, ஒருவேளை, இது அந்தக் காலத்தில் திருவனந்தபுரத்தில் இந்த மெதட் இருந்ததோ என்று எண்ண வைக்கிறது. என் அப்பா மற்றும் அம்மா பெற்றோர்(கள்) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். தண்ணீரில் கொழுக்கட்டையைப் போட்டுக் கொதிக்கவைப்பது நல்ல மெதட் என்று தோன்றுகிறது. (நாங்கள் பண்ணும்போது, கடைசி 3-4 குழக்கட்டைகள் கொஞ்சம் கெட்டியாகிவிடும். பிழிவது மிகவும் கடினம்.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் - செல்லாது.. செல்லாது (நாட்டாமை படத் தீர்ப்பு போல் படித்துக்கொள்ளுங்கள்). எப்போ நீங்க புகுந்த வீட்டின் (மதுரை) பெயரை வைத்துக்கொண்டீர்களோ அப்போதே ரத்தம் மாறிவிட்டது.

    ஜீவலிங்கம், ஜி.எம்.பி ஐயா (நாங்களும் பாலக்காடு சென்றிருந்தபோது அங்கிருந்த ஹரி ஹர புத்திரர்(?) ஹோட்டலில் சேவை சாப்பிட எண்ணினோம். நடக்கவில்லை), கில்லர்ஜி (அபுதாபி வாசம் ஆரம்பிச்சாச்சா?) - பின்னூட்டத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  41. மிடில்கிளாஸ்மாதவி, புலவர் அவர்களுக்கும், ஹுசைனம்மா அவர்களுக்கும் நன்றி.

    திருமதி வெங்கட்.. நாழி நகராமல் இருக்கப் பிடித்துக்கொள்வேன் என்று சொல்லியது, நாங்கள், பசங்களோடு சேவை பிழிவதை நினைவுபடுத்தியது. ஒருத்தர் சேவை விழும் தட்டைச் சுற்ற, ஒருவர் பிடித்துக்கொள்ள (பெரும்பாலும் நான்), ஹஸ்பண்ட் கொழக்கட்டையைப் போட, பொண்ணோ பையனோ சுற்றுவார்கள். நன்றி

    காமாட்சி மேடம் - இட்லியாக வார்த்து சேவை பண்ண அடுத்தமுறை முயற்சிக்கிறேன். எனக்கு சேவை என்பது (எங்க அம்மாவுக்கும்) ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    தளிர், வெங்கட்ஜி - ரெடிமேட் சேவையைவிட, நம்ம பண்ணுவது நன்றாக இருக்கும். அதுக்காகக் கஷ்டப்பட்டு, பண்ணினவங்களுக்கு முடியாம, இரவுச் சாப்பாடைத் தியாகம் பண்ணுவது கஷ்டம்தான்.

    வல்லிமேடம் - உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    'நிறைய 'சேவை' ரசிகர்கள் இருப்பதை எண்ணி, 'நான் மட்டும் தனியல்ல' என்ற எண்ணம் வருகிறது. அதுவும், புளிசேரி அல்லது மோர்க்குழம்போடு சேவை சாப்பிட நிறையபேர் ஆதரவு தெரிவித்திருப்பது ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!