வெள்ளி, 23 அக்டோபர், 2020

வெள்ளி வீடியோ : நெற்றியிலும் திலகமிட்டான் மீராவின் கண்ணன் - உன் நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்

படம் வெளியான ஆண்டு 1974.  சுஜாதா, ஜெய்கணேஷ், படாபட் ஜெயலக்ஷ்மி, ஆகியோருக்கு முதல் படம்.  திடீர் கன்னையா, ஸ்ரீப்ரியா ஆகியோருக்கு முதல் பேர் சொல்லும் படம்.

25 வாரங்கள் ஓடிய படம். 

அது வந்த நேரத்தில் மிகவும் பேசப்பட்ட படம்.  மணிரத்னம், பாக்யராஜ், கே எஸ் ரவிக்குமார் போன்றோர் இந்தப் படத்தை தாங்கள் மிகவும் ரசித்த படமாகக் குறிப்பிட்டிருக்கிறார்களாம்.  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படத்துக்குப் பின் பாலச்சந்தர் படங்களில் மிக ஆர்வமுடைய ரசிகர் ஆனதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன படம்?  அவள் ஒரு தொடர்கதை!



வழக்கம் போல பாலச்சந்தர் கவிதாவையும் - இந்தப் படத்தின் கதாநாயகியின் பெயர் - நிம்மதியாக வாழவிடவில்லை.  எதிர்மறை முடிவுதான்.  இந்தப் படத்தின் சில காட்சிகளின் சில மீள்களை பின்னர் பாலச்சந்தர் எடுத்த மனதில் உறுதி வேண்டும் படத்திலும் காணலாம்!

1971 இல் மலையாளத்தில் வெளியான எர்ணாகுளம் ஜங்க்ஷன் படத்தில் நடித்த சுஜாதாவை பாலச்சந்தர் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்தபோது அவர் மலையாள உச்சரிப்புடன் தமிழ் பேசியது பிடிக்காமல் "இன்று சென்று தமிழ்க்கற்று நாளை வா" என்று அனுப்ப, அப்புறம் ஒரு மாதத்தில் மீண்டும் அழைக்கப்பட்டு ஒப்பந்தம் ஆனாராம்.  சுஜாதாவின் முதல் தமிழ்ப்படம்.



பாலச்சந்தர் தாதா சாஹேப் வாழ்நாள் சாதனை விருது பெற்றவுடன் டைம்ஸ் ஆப் இந்தியா பாலச்சந்தரின் இந்தப் படத்தை ஒரு சிறந்த படமாக, ஒரு முத்திரைப் படமாகச் சொல்லி இருந்ததாம்.

இந்தப் படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு அம்சம் கதாநாயகியின் கோபமும், சுருக் சுருக் பேச்சுகளும்.  அத்தனையும் குடும்பத்தின் நன்மைக்குதான் என்னும்போது பெண்களின் ஆதரவு கிடைத்ததில் ஆச்சர்யமும் இல்லை.  

கவிதான்னா நெருப்பு!

இதே படத்தின் படாபட் ஜெயலக்ஷ்மி பாத்திரம் ஒரு தனிரகம்.  பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று தொடங்கி எம் ஜி சோமனால் தானும், தன் தாயும் ஏமாற்றப்பட்டோம் என்று அறியும்போது வரும் கழிவிரக்கம்.  கமலும், படாஃபட்டும் இணைந்து நடித்த ஒரே படமாக இருக்க வேண்டும் இது!

                            

இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையுமே சூப்பர்ஹிட் பாடல்கள்தான்.  அதில் 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடல் கேட்டு கேட்டு அலுக்கும் அளவுக்கு தொலைகாட்சி முதல், மற்ற நிகழ்ச்சிகளில் வரை போட்டு தாளித்து விட்டார்கள்.


பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசை.

நான் இத் திரைப்படத்தைத் தஞ்சையில் பார்த்தேன்.

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்...    எஸ் ஜானகி குரலில் பாடல்... 

கவிதாவுக்கும் ஆசை இருக்கும், காதல் நெஞ்சம் இருக்கும், யாருக்கு புரியப்போகிறது என்னும் அர்த்தத்தில் வரும் பாடல்.  'என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்?  ஒவ்வொரு வரியிலும் அந்த கேரக்டரின் மனதை, ஏக்கத்தை பிரதிபலித்திருப்பார் கவியரசர்.  காதலன் இவளின் ஏதோ ஒரு பதிலில் வெறுத்துப்போய் "உன் மனசுல ஈரமே இல்லையா? " என்பது போல ஏதோ கேட்பான்.  அவனுக்கு பதிலாய் வரும் பாடல். 

பாலச்சந்தர் படங்களில் நிறைய பெண் குரல் பாடல்கள் வரும்.  அவை மற்ற பாடல்கள் போல அதிகம் கவனத்தைப் பெறாமல் ஏனோ பின் தங்கி இருந்தாலும் என் போன்ற ரசிகர்களின் மனங்களில் இவை இருக்கும்!

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு,கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி, யாருக்குத் தெரியும்

நெருப்பென்று சொன்னால், நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு, அணைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி, யாருக்குத் தெரியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி, யாருக்குத் தெரியும்

கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி, யாருக்குத் தெரியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி, யாருக்குத் தெரியும்  



அடுத்து பி. சுசீலா குரலில் ஒரு இனிய பாடல்.  இந்தப் படத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பதே தெரியாது என்று, சில வருடங்களுக்கு முன் இந்தப் பாடலை நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தபோது கீதா அக்கா சொல்லி இருந்தார்கள்!  



இந்தப் பாடலில் சுசீலாம்மா ஒவ்வொரு தடவையும் 'ஐந்து திங்கள்' என்று சொல்லும் அழகைப் பாருங்கள்.  ச்சே...  கேளுங்கள்!  பல வருடங்களாக தான் காதலித்தவன், தன்னை காதலித்தவன் திருமணத்துக்குத் தாமதமாகும் நிலையில் தனது தங்கை (விதவை)யை  விரும்புவது கண்டு அவளுக்கே அவனை மணமுடித்து வைத்து, அவள் கருவுற்றதும் பாடும் சந்தோஷப் பாடல்.  இதே காட்சி அமைப்பில் அவர்களை சீக்கிரமே தனியாகப் போகச் சொல்லும் இடமும் சுஜாதாவின் நடிப்பில் பாலச்சந்தரின் கைவண்ணத்தில் மிளிரும்!  சரணத்தில் ஒரு வார்த்தையில் கவியரசர் வெற்றிமகள் என்று ஸ்ரீப்ரியாவைக் குறிப்பிடுகிறார் போலும்!


                               

ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்!
அழகுமலர் அன்னையென ஆனாள்! ஆ...
ஆதரிப்பாள் தென்மதுரை மீனாள்"

"தேடுதடி என்விழிகள் செல்லக்கிளி ஒன்று-
சிந்தையிலே நான் வளர்த்த கன்று-
உன் வயிற்றில் பூத்ததடி இன்று"!

"மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு-
மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு-
அவள் மணவாளன் கதைகளையே பேசு"

வெற்றிமகள் கையிரண்டைப் பற்றிவிட்டான் திருடன்
நெற்றியிலும் திலகமிட்டான் மீராவின் கண்ணன் -உன்
நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்

"கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு-
கவிதையிலே நான்ரசித்தேன் கேட்டு-
அதைக்கண்ணெதிரே நீயெனக்குக் காட்டு"

அய்யனுடன் கோவில்கொண்டாள் திருமகளாம் தங்கை
அடிவாரம் தனிலிருந்தாள் அலர்மேலு மங்கை-அவன்
அன்புமட்டும் போதுமென்று நின்றுவிட்டாள் அங்கே  



=================================================================================

SPB 

காட்சிகளை விட்டு விடுங்கள் - அது ரசிக்கக் கூடியதாய் இருந்தாலும்!    இது  எஸ் பி பி போர்ஷன்.  

கமல் எஸ் பி பி யிடம் சொன்னாராம்.  'உங்கள் குரல் எல்லோருக்கும் பொருந்தும்வண்ணமான ஒரு குரல்.  யாருக்கு குரல் கொடுத்தாலும் பொருந்தும்' என்று சொன்னதாய் எஸ் பி பி  திரு திருப்பூர் கிருஷ்ணனிடம் சொல்லி இருக்கிறார்.  அவர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.    உண்மைதான் என்று தோன்றுகிறது.

இந்தப் பாடலில் எஸ் பி பி  யின் குரல் எந்தப் பெண்ணையும் காதல் கொள்ள வைக்கும்.  

குழைய வேண்டிய இடத்தில் குழைந்து, உருக வேண்டிய இடத்தில் உருகி..

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ…

கூந்தல் வருடும் காற்று
அது நானாய் இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..

நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலநாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா  


                          

60 கருத்துகள்:

  1. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. 1974...

    கவியரசர் இந்த காலகட்டத்தில் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதத் தொடங்கி விட்டார் என்று நினைக்கின்றேன்..

    பாட்டுக்குப் பாட்டு தத்துவங்களைப் பதிந்து வைத்தார்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவை...

    ஆனால் இன்னும் அந்தத் திரைப் படத்தைப் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
  4. தென் மதுரை மீனாள்...

    கவியரசரின் மங்கலச் சொல்லாடல்களுள் ஒன்று!...

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அவள் ஒரு தொடர்கதை பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அந்த படமும்தான்.. திரு. கே. பி அவர்கள் "அரங்கேற்றம்" படத்தை எடுத்த பரிகாரத்திற்காக இந்த படத்தை இதில் வரும் கதாநாயகியை நெருப்பாக காட்டி எடுத்தார் எனவும் பத்திரிக்கைகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர் இயக்கிய அத்தனைப் படங்களும் எனக்கும் பிடிக்கும். விரும்பி பார்ப்பேன். திரையரங்கிற்கு சென்று பார்க்காவிடினும் தொ. காட்சியில் போடும் போது, நேரத்தை ஒதுக்கியாவது பார்த்து விடுவேன். இன்றைய அனைத்துப் பாடல்களும் அருமை. பிறகு ரசித்துக் கேட்கிறேன். அஜித் படப்பாடல் படம் என்னவென்று தெரியவில்லை பாடல் வரிகள் அடிக்கடி பாடலை கேட்டதை நினைவு படுத்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரங்கேற்றம்" படத்தை எடுத்த பரிகாரத்திற்காக இந்த படத்தை இதில் வரும் கதாநாயகியை நெருப்பாக காட்டி எடுத்தார் ///

      அபப்டியா?  இது செய்தி எனக்கு.  ஆனால் எந்தக் கதாநாயகியையும் அவர் நிம்மதியாகவோ சந்தோஷமாகவோ வாழ விட்டதில்லை!

      அஜித் படப்பாடல் எஸ் பி பி குரல் நன்றாய் இருக்கும்.  அப்புறம் கேளுங்க..

      நீக்கு
    2. இரு கோடுகள் சௌகார் ஜானகி. பாலச்சந்தர் படங்களில் பெண்களின் சோகம்.
      பாமா விஜயம் மட்டுமே சிரிக்க வைத்தது!

      நீக்கு
    3. சில படங்களைத் தவிர எல்லாள படங்களிலும் அப்படி!

      நீக்கு
    4. அந்த கால கட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள் நிலை சந்தோஷமாகவா இருந்தது?

      நீக்கு
    5. இந்த காலகட்டத்தில் கூட
      அன்றைய நிலை தானே!..

      அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வேதனைகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்...

      நீக்கு
  7. அன்பு ஸ்ரீராம், இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்.
    அனைவருக்கும் எல்லா நாட்களும்
    நல்ல நாளாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா..   வாங்க..   வணக்கம்.

      நீக்கு
    2. அனைவருக்கும் எல்லா நாட்களும்
      நல்ல நாளாக இருக்கட்டும்.
      ஆம், அதே.

      நீக்கு
  8. அவள் ஒரு தொடர்கதை. அப்போது பிரசித்தமாகப் பெயர் பெற்றது.

    பின்னாட்களில் சுஹாசினியும் இதே போல
    ஒரு படத்தில் நடித்த போது அலுப்பு வந்து விட்டது.

    எல்லாப் பாடல்களும் சிறப்பானவை தான் இந்தப் படத்தில். படாபட்
    பாடும் என்னடி உலகம் கூட நன்றாக இருக்கும்.

    என் மனம் என்ன வென்று யாருக்குத் தெரியும்
    ஒரு பெண்ணின் இயற்கையான குமுறல்.

    அதே போல ,இந்தப் பெண் ஏமாந்து விட்டதே
    என்ற வருத்தம் ,ஆடுமடி தொட்டில்''
    பாடலில் வரும்.
    நல்ல நடிப்பு.
    நல்ல பாடல்கள்.

    கவிதை வரிகள் அலாதி. கீழே தங்கிவிட்ட தாயாரைத் தன்னுடன் ஒப்பு
    நோக்கி ஆதரவு பெற்றாளோ. அதீத சோகம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பின்னாட்களில் சுஹாசினியும் இதே போல
      ஒரு படத்தில் நடித்த போது அலுப்பு வந்து விட்டது.//

      அதுதான் மனதில் உறுதி வேண்டும் படம்!    ஆனாலும் அதில் கொஞ்சம் கதை அமைப்பு வேறு மாதிரி அம்மா.   

      நீக்கு
    2. ரொம்ப ஆழ்ந்து கவனித்துள்ளீர்கள் படத்தையும், பாடல் காட்சியையும்!

      நீக்கு
    3. நன்றி மா. ஶ்ரீராம் கௌதமன் ஜி.

      நீக்கு
  9. அஜித் சிம்ரன்
    படம் பார்க்கவில்லை. இந்தப் பாடல் நினைவில் இருக்கிறது.

    காட்சியை விட்டு, நாம் பாலு சாரை ரசிக்க வேண்டும். அவ்வளவு
    நன்றாக இருக்கிறது.
    ஜகஜ்ஜால மன்னன்.
    மிக மிக இனிமை. தேர்ந்தெடுத்து
    பதிவு செய்திருக்கிறீர்கள் மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  10. இயல்பாகவே திரைப் பாடல்களில் கதையின் சூழலுக்கு ஏற்ப தத்துவார்த்தங்களைப் பொதிந்து வைப்பதில் கவியரசர் வல்லவர்...

    அந்நிறமை பின்னாட்களில் உச்சத்துக்குச் சென்றது என்றால் மிகையில்லை..

    திருமாலின் திருமார்பில்
    ஸ்ரீதேவி முகமே..
    தீபங்கள் ஆராதனை..
    ஊரெங்கும் பூவாசனை!...

    இந்த வரிகள் நினைவிலிருக்கின்றனவா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  திரிசூலம் பாடல்.   அந்தப் பாடலில் ஆரம்ப இசை முடிந்ததும் இசைக்கோர்வை மாறும்போது சிவாஜி நடக்க ஆரம்பிப்பார்.  அதை எல்லாம் ரசித்திருக்கிறேன்!

      நீக்கு
  11. அவள் ஒரு தொடர்கதை மற்றும் அரங்கேற்றம் திரைப்படங்கள் நான் அதிக தடவை பார்த்தவையாகும். நான் ஒரு பாலசந்தர் ரசிகன். பள்ளி/கல்லூரி நாட்களில் திரையில் பாலசந்தர் படம் ஓடும்போது அதிகமாக சத்தம் போட்டு கைதட்டியுள்ளது இன்னும் நினைவில் உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமாக நான் ரசித்த படங்களில் ஒன்றினைப் பகிர்ந்த விதம் அருமை. சிகரம் தீட்டிய சித்திரங்கள் என்ற தலைப்பில், பாலசந்தரின் முதல் நினைவு நாளையொட்டி இந்து நாளிதழில் வெளியான என் கட்டுரையில் பாலசந்தரின் பல பரிமாணங்களை எழுதியிருந்தேன். அது இப்போது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவர் ஸார்...   நீங்கள் கேபி ரசிகர் என்பது நினைவில் இருக்கிறது.   அவர் உங்களுக்கு எழுதிய நன்றிக் கடிதத்தையும் உங்கள் தளத்தில் படித்த நினைவு இருக்கிறது.

      நீக்கு
  12. முதல்பாடல் அற்புதமான பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.  இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  13. எங்கள் இரண்டாவது அக்கா ரொம்ப கண்டிப்பு. நாங்ஙள் அவரை நடமாடும் நெருப்பு என்போம். இந்த படத்தின் பாதிப்பு. இந்த படத்தை முதலில் ஒரு முறை திருச்சியிலும்,இரண்டாவது முறை ஶ்ரீரங்கம் ரெங்கராஜாவில் சுஜாதாவிற்காக இரண்டாம் முறையும் பார்த்தேன். பல வருடங்ஙளுக்குப் பிறகு தொலைகாட்சியில் பார்த்த பொழுது,"எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும்" என்னும் துடிப்போடு கமலஹாசன் நடித்திருப்பதை உணர முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்காக்கள் தான் கண்டிப்பாய் இருந்து முன் உதாரணமாய்த் திகழ வேண்டும் என்று நினைப்பார்களோ!   வாங்க பானு அக்கா...   வணக்கம்.

      ஆனாலும் கமல் அதற்கு முன்னரே பல படங்களில் நடித்து விட்டார்.

      நீக்கு
    2. அவள் ஒரு தொடர்கதைக்கு முன் கமல் படங்களில் வந்து போயிருக்கலாம்  சாரி  நடித்திருக்கலாம், ஆனால் ஸ்டார் அந்தஸ்து வரவில்லை. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கும். தனக்கு நடிக்க வரும் என்று நிரூபிக்க முயலுவார். மீண்டும் கோகிலா, சாகர் என்னும் ஹிந்தி படம் எல்லாவற்றிலும் ஓவர் ஆக்டிங்த்தான். நாயகனுக்குப்  பிறகுதான்  அவருக்கு நடிப்பில் ஒரு கண்ட்ரோல் வந்தது. சலங்கை ஒலியில் கூட  சில இடங்களில் கொஞ்சம் செயற்கையாகவும், கொஞ்சம் சிவாஜியின் சாயலும் இருக்கும். 

      நீக்கு
  14. முதல் பாடலான, கண்ணிலே என்ன உண்டு. பாடல் முழுவதுமே மனப்பாடமாக எனக்குத் தெரிந்ததை இன்று அறிந்துகொண்டேன். ஹாஸ்டலில் நிறைய தடவை ஒலிபரப்பியிருப்பார்கள். இரண்டாவது பாடலை வெகு அபூர்வமாக ஒலிபரப்பியிருப்பார்கள்.

    முதல் பாடல் மிக அருமை. பெண்களின் துயரம் பெரிது. நன்றாக வெளிப்பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஜானகியம்மாவின் குரலில் வழிந்தோடும் துயரம்...  வாங்க நெல்லை...  வணக்கம்.

      நீக்கு
  15. பாடல்கள் எலலாம்நானும் ரசித்தவை பின்னூட்டங்கள் பார்க்கும்போது எழுதியவர்க; பலரு ம் திரைப் படங்களில் பி எச் டி பெறு ம ளவுக்கு ரசித்தவர்கள் அவர்கள் முன் நானெல்லாம் ஜுஜுபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...    ஹா...   ஹா...   நாம் ரசிக்கும் விஷங்களை படிக்கும்போது அவை நினைவில் நிற்கின்றன.  நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  16. இந்தப் படத்தை எல்லா பத்திரிகைகளும் ஆஹா!ஓஹோ வென்று புகழ்ந்து தள்ள,துக்ளக்கில் மட்டும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். அந்த படத்தில் ஜெய் கணேஷின் மகனாக வரும் சிறுவன் தந்தை முகத்தில் காறி உமிழ்வதைப் போன்ற காட்சியையும், ஃப்டாஃபட் ஜெயலட்சுமியின் பாத்திர படைப்பையும் வண்மையிக கண்டித்திருந்தார்கள்.அதற்கு பாலசந்தர் கோபமாக பதிலளிக்க, இவர்கள் மீண்டும் பதில் சொல்ல, பாலசந்தர் மீண்டும் தன் பதிலில் "சோ"வை இழுக்க(பத்தாம்பசலி என்று குறிப்பிட்டிருந்தார்), உடனே சோ, "சினிமா விமர்சனத்தை நான் எழுதுவது கிடையாது, அப்படியிருக்க, தேவையில்லாமல் என்னை இழுத்திருக்கிறார்,அதனால் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது" என்று தொடங்கி, பத்தாம்பசலி என்று திரைப்படம் எடு்த்தவர் என்னை பத்தாம்பசலி என்று கூறுவதா? என்று கேட்டிருந்தார்.
    பி.கு.1: இவை போன்றவை கிடைத்தால் பொக்கிஷம் பகுதியில் பகிருங்கள்.
    பீ.கு.2: அப்போது துக்ளக்கில் திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியது பின்னாளில் இயக்குனரான மகேந்திரனாம். துக்ளக் திரை விமர்சனங்களில் சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குனரிடமிருந்து பதில் பெற்று பிரசுரிப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துக்ளக்கில் சினிமா விமர்சனங்களை போஸ்ட்மார்ட்டம் என்கிற தலைப்பில் பிரசுரிப்பார்கள்.  எழுதுபவர் பெயர் டாக்டர் என்றுதான் இருக்கும்!

      துக்ளக் பொக்கிஷங்கள் சில இருக்கின்றன.  பல இங்கு பிரசுரிக்க முடியாது.  சில பகிரலாம்.  குறிப்பாக ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் துர்வாசருக்கும் நடந்த சண்டை!

      நீக்கு
  17. இன்று மத்யமரின் zoluவில் எங்கள் வீட்டு கொலு பார்க்க எல்லோரையும் அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  19. நிறைய பழைய நினைவலைகளை திரும்பக்கொண்டு வந்து விட்டீர்கள்!
    திருமணமான புதிதில் அன்றைய பாம்பேயில் அரோரா தியேட்டரில் பார்த்து ரசித்த படம் இது. மகாராஷ்ட்ராவில் மொழி தெரியாத இடத்தில் இருந்த அன்றைய‌ நாட்களில் நம் தமிழ்ப்படமான இது அப்படி ரசிக்க வைத்தது.
    நிறைய கமெண்ட்ஸ் வாங்கிய படமிது. நறுக்கென்ற வசனங்களுக்காகவே இப்படி ஒரு படம் என்பது போல இருக்கும். கதாநாயகி சுஜாதாவை எல்லோராலும் ரசித்து விட முடியாது.

    மீண்டும் எஸ்.பி.பி பாடலை ஒரு முறை ரசித்தேன். மனதில் கனத்தோடு தான்.

    பதிலளிநீக்கு
  20. இந்தப் படம் திரை அரங்கிலும் பார்த்திருக்கேன். எங்கேனு நினைவில் இல்லை. பின்னர் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கேன். அந்தப் பூச்சூடல் பாட்டைத் தான் கேட்டதில்லைனு நினைக்கிறேன். அஜித், சிம்ரன் படம் "அவள் வருவாளா?" படமோ? படம் பார்த்த நினைவில் இல்லை பாடல்கள் எல்லாம் கேட்டிருக்கேன். எனக்கு சுஜாதா எடுத்த முடிவு/அல்லது பாலசந்தரால் கொடுக்கப்பட்ட முடிவு பிடிக்காது. தன் அலுவலக மேலதிகாரியைத் தானே கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தை முன்னேற்றி இருக்கலாமே அந்தக் கதாநாயகி! அடுத்த தங்கையை அதுவும் சின்னப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கணும்னு இல்லை. அவரோ இவள் மேல் பித்தாக இருந்திருக்கார். தன் குடும்பத்தை நல்லபடி கொண்டு வந்திருக்கலாம் கல்யாணம் செய்து கொண்டே! படத்தைப் பார்த்ததும் திரை அரங்கிலேயே இதை வாய்விட்டுக் கூட அக்கம்பக்கத்தினர் முறைத்த முறைப்பும், நம்ம ரங்க்ஸுக்கு பயம் வந்து என்னைத் தரதரனு இழுத்துட்டுப் போயிட்டார். புன்னகை படத்திலும் எரிச்சலூட்டும் ஒரு பாட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
  21. பிரபல நாவலாசிரியரான பிவிஆரின் ஒரு குறுநாவல்/நாவல் அங்கே இங்கே மாற்றிக் கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்தது "அவள் ஒரு தொடர்கதை!" அப்போவே பேசப்பட்டது. எங்கே! "கல்லுக்குள் ஈரம்" "ஹே ராம்!" ஆக மாறினதையே யாரும் ஒத்துக்கலையே!

    பதிலளிநீக்கு
  22. பாலசந்தர் அபிமானிகள் என்னை அடிக்க வரதுக்குள்ளே நான் ஓடிடறேன்.

    பதிலளிநீக்கு
  23. அவள் ஒரு தொடர்கதை. இதைப்பற்றிப் பேசுவதும், இனிப்பேசப்போவதும் தொடரும் கதை.

    பாலச்சந்தர் தன் படத்தை ஒரு சர்ச்சைப் பொருளாக்குவதற்காக, பெண் பாத்திரங்களை இப்படியும் அப்படியுமாகச் சித்திரவதை செய்து, நோகவைத்து, வீட்டைவிட்டு ஓடவைத்து, தற்கொலை செய்ய வைத்து.. தான் பெரிய்ய ’சிந்திக்கும் இயக்குனர்’ எனக் காட்டிக்கொள்ள முயன்றாரா..தெரியவில்லை. ஆனால் சிறந்த இந்திய டைரக்டர்கள் வரிசையில் கோடியில் நிற்கவும் அவருக்கு இடமில்லை. சாரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன் ஏகாந்தன் அவர்களே!

      நீக்கு
  24. //அடுத்த தங்கையை அதுவும் சின்னப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கணும்னு இல்லை.// இந்தப் படம் வந்த பொழுது நான் பள்ளி மாணவிதான், ஆனாலும் எனக்கும் அப்போதே இது தோன்றியது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ, நான் வாய்விட்டுச் சொல்லிட்டு! அடி வாங்காத குறை தான். :))))))

      நீக்கு
    2. கொடுமை. கன்னாபின்னா என்று ஆதரிக்கிறேன்.

      நீக்கு
  25. ஐந்து திங்கள் பாடலில் இத்தனை நுணுக்கங்களா?
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  26. அனைத்தும் அருமையான பாடல்கள் கேட்டு ரசித்தேன்.
    விவரங்களை படித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!