திங்கள், 5 அக்டோபர், 2020

சாபுதானா வடை :: பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

 

 சாபுதானா வடை 


தேவையான பொருள்கள்: 

ஜவ்வரிசி                    -  1 கப் 
பச்சை மிளகாய்     -  4 
உருளைக்கிழங்கு -   2
நிலக் கடலை           -   3 அல்லது 4 தேக்கரண்டி 
சோள மாவு             -  1 டீ ஸ்பூன் 
உப்பு                          -  3/4 டீ ஸ்பூன் 
பொரிப்பதற்கு எண்ணெய் 

ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, வடிய வைக்கவும்.  பிறகு ஒரு துணியில் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஈரம் இருக்காது. ஈரம் இருக்கவே கூடாது, ஈரம் இருந்தால் நாம் வடையாக தட்டி போடும் பொழுது வெடிக்கும். 

ஊறவைத்து, வடிகட்டிய ஜவ்வரிசி ரெடியாகி விட்டதா? அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதோடு வேக வைத்து தோல் உரிக்கப்பட்ட உருளைக் கிழங்கை உதிர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலையை லேசாக வறுத்து (தோல் நீக்குவதும், அப்படியே போடுவதும் அவரவர் விருப்பம்) மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். 




ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, பொடி செய்த கடலை, பொடியாக அரியப்பட்ட பச்சை மிளகாய், இவைகளோடு தேவையென்றால் ஒரு டீ ஸ்பூன் சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, வடைகளாக தட்டி, எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். 

தக்காளி கெட்சப்போடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டு விடுங்கள். எளிய மாலை நேரே சிற்றுண்டி. 

===



===

72 கருத்துகள்:

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம். அனைவரும் நலமோடு இருக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு பானு வெங்கடேஸ் வரனின் சாபிதானா வடை சிறப்பு.. எல்லோருக்கும் பிடித்தது. அருமையான வடை. அதுவும் முத்து கோர்த்தது போல ஜவ்வரசி மின்ன பொரித்தெடுக்கும் போது மிக அருமையாக இருக்கும். படங்களும் செய்முறையும் அழகாகக் கொடுத்திருக்கிறார் மனம் நிறை வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லி அக்கா. //முத்து கோர்த்தது போல ஜவ்வரசி மின்ன பொரித்தெடுக்கும் போது மிக அருமையாக இருக்கும். // ஆமாம். நான் செய்ததில் அப்படி வரவில்லை. உ.கி. ,சோள மாவு எல்லாம் போட்டதில் ஜவ்வரிசி தெரியவில்லை என்று நினைக்கிறேன். அடுத்த முறை அவைகளை கொஞ்சம் குறைக்கப் பார்க்கிறேன்.  

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். லோகா சமஸ்தோ சுகினோ பவந்து!

    பதிலளிநீக்கு
  6. சாபுதானா வடை அடிக்கடி பண்ணுவதில்லை. கொஞ்சம் வயிறு கனமாக இருக்கும். ஆகவே எப்போதாவது பண்ணுவது உண்டு. அடிக்கடி பண்ணுவது சாபுதானா கிச்சடிதான். அதுவும் வயிற்றில் கொஞ்சம் போட்டாலே போதும், நிறைந்துவிடும். தாலிபீத் பண்ணினாலும் அப்படித்தான். பாதியே போதும்னு ஆயிடும். ஆனால் எப்போப் பண்ணினாலும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் ஊற வைப்பதில்லை. மாலை வடை செய்வதெனில் காலையே ஊற வைத்துவிடுவேன். அதே போல் கிச்சடி செய்வதானாலும் காலை செய்வதெனில் முதல்நாள் மாலையே! ஜவ்வரிசியும் மாவு ஜவ்வரிசிதான். மற்றபடி இது பல வருடங்களாகத் தெரிந்த செய்முறை தான். பானுமதி செய்திருப்பதும் நன்றாக உள்ளது. வடை பார்க்கவே அழகாய் இருக்கிறது. இஞ்சி, பச்சைமிளகாய் கடிபடுவது பிடிக்கலைனால் மிக்சி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாகத் தட்டியோ அல்லது விழுதாக அரைத்தோ சேர்க்கலாம். நான் பெரும்பாலும் விழுதாகவே சேர்த்துவிடுவேன். கருகப்பிலை, கொத்துமல்லியும் சேர்ப்பது உண்டு.

    பதிலளிநீக்கு
  7. இதைப் பார்த்துட்டு இன்னிக்கு ராத்திரிக்கு சாபுதானா கிச்சடிக்கு ஊறப் போடும் எண்ணம் வந்துவிட்டது. அப்ரூவல் வாங்கணும். பார்க்கலாம். :)))) பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   மத்தியானம் புறப்பட்டால் சாயங்காலத்துக்கு ஸ்ரீரங்கம் வந்து விடலாம்!

      நீக்கு
    2. நீங்களே அப்ரூவல் கேட்டு, நீங்களே அப்ரூவல் கொடுத்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் நன்று!

      நீக்கு
    3. குட்டிக்குஞ்சுலு வந்திருந்தது. ஓடிப் போய்விட்டது. எட்டரை மணி ஆகியும் இன்னமும் தூக்கம் வரவில்லை போல! கொட்டம் அடிக்கிறது. நான் மத்தியானமா வரேன். வீட்டு வேலைகளைப் பார்க்கணும். மின் நிலா பார்த்துட்டேன்.

      நீக்கு
    4. @KGG! grrrrrrrrrrrrrrrrrrrr. Our dictator approved! :))))))))

      நீக்கு
    5. வெறும் உப்புமாவை (அந்த பேரைச் சொன்னாலே எண்பது சதவிகிதம் குழந்தைகளுக்குப் பிடிக்காது. எனக்கே ஹோட்டலில் போய் உப்புமா வாங்கிச் சாப்பிடறாங்களே... மனைவிக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாதோன்னு நினைச்சுப்பேன்). பதவிசா கிச்சடின்னு சொல்ற தைரியம் திருவரங்கக்காரங்களுக்குத்தான் உண்டு ஹா ஹா)

      நீக்கு
    6. // பதவிசா கிச்சடின்னு சொல்ற தைரியம் திருவரங்கக்காரங்களுக்குத்தான் உண்டு// அதச் சொல்லுங்க தலைவரே!

      நீக்கு
    7. நெல்லை, இப்போல்லாம் ஓட்டல்களில் உப்புமாப் போடுவதில்லை. முன்னெல்லாம் காலை முதலில் தயாராவது/அதே போல் மாலை தயாராவது உப்புமாத் தான். இப்போதெல்லாம் அப்படி இல்லை. முதல்லே அதைத் தெரிஞ்சு வைச்சுக்குங்க.

      நீக்கு
    8. அப்புறமா உப்புமா எனில் வெறும் தாளிதத்தில் ரவையோ அரிசிக் குருணையோ, சேமியாவோ அல்லது வேறு உப்புமாப் பண்ணும் பொருட்களோ போட்டுச் செய்தால் தான் அது உப்புமா. ரவையோடு சேர்த்துக் காய்களைப் போட்டுக் கலந்து செய்வது ரவாக் கிச்சடி. அதே போல் அரிசிக்குருணையோடும் வெங்காயம், காய்கள், கீரை கூடப் போட்டுப் பண்ணலாம். அதுவும் கிச்சடி. சொல்லப் போனால் அரிசி+காய்கள் சேர்ந்த கலவைக்குத் தான் கிச்சடி என்றே பெயர். இங்கே சாபுதானா எனப்படும் ஜவ்வரிசியோடு உருளைக்கிழங்கும் சேர்க்கிறோம். வேர்க்கடலைப் பொடியும் சேர்க்கிறோம். ஆகவே இந்தக் கலவைக்குக் கிச்சடி என்றே பெயர் வரும். இதோடு சிலர் வெங்காயம், காய்கள் கூடச் சேர்க்கிறார்கள் இப்போதெல்லாம். ஆனால் ஒரிஜினலாக சாபுதானாவில் உருளைக்கிழங்கும், வேர்க்கடலைப் பொடியும் தான் முக்கியம்! மஹாராஷ்ட்ராவில் மளிகைக் கடைகளில் இந்த வேர்க்கடலைப் பொடி தயார் நிலையில் விற்பனைக்கு இருக்கும். அங்கே வேர்க்கடலையும் உ.கியும் இல்லாமல் எந்த உணவும் பண்ணுவது அரிது!

      நீக்கு
    9. गीता साम्भसिवम மேடம்... இங்க, காராபாத் என்று உப்புமாவையும், கேசரி பாத் என்று கேசரியின் ஒரு வெர்ஷனையும், செளசெள பாத் என்று சொன்னால் ஒரு தட்டில் கொஞ்சம் உப்புமாவும் கொஞ்சம் கேசரியும் தருவாங்க. இது இல்லாத ஹோட்டலே இங்கு கிடையாது. சென்னைலயும் ஹோட்டல்ல உப்புமா உண்டு (அது சரி...த்ரேதாயுகத்துல ஹோட்டலுக்குப் போனவங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும், அவங்கதான் கேடரர் கிட்டத்தானே சமீப வருடங்களில் வாங்கிக்கறாங்க ன்னு கேட்டீங்கன்னா, உங்களுக்கு கீசா மேடத்தை நல்லாவே தெரியும்னு அர்த்தம், அவங்க இடுகைகளை ரெகுலரா படிக்கிறீங்கன்னு அர்த்தம்)

      நான் சாபுதானா வடை செய்யும்போது, இருக்கும் வேர்க்கடலையை வறுத்து தோலி எடுத்து என்றெல்லாம் மெனெக்கிடலை. இங்க அவ்வப்போது ஹால்திராம்ஸ் உப்பு போட்ட வேர்க்கடலை பாக்கெட் (தொலி இல்லாதது) வாங்கி வைத்திருப்பேன். அதைத்தான் கொஞ்சம் உபயோகித்தேன்.

      அரிசி-காய்கள் சேர்ந்த கலவை - ஹோட்டல்ல அப்படீல்லாம் மெனெக்கிடுவதில்லை. கொஞ்சம் கேரட் சீவுவாங்க. கொஞ்சம் தக்காளி பார்க்கலாம் அவ்ளோதான்.

      நீக்கு
    10. Geetha Sambasivam தான் போடணும். நீங்க Sambhasivam போட்டிருக்கீங்க! தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை.

      நீங்க சொன்ன காராபாத், சௌசௌபாத், கேசரி பாத் எல்லாமும் மல்லேஸ்வரத்தில் ஒரு முறை தங்கினப்போ ஓட்டல்களில் பார்த்திருக்கேன். மங்களூரிலேயும் பார்த்தேன். சென்னை ஓட்டல்களில் உப்புமா ஆர்டரின் பேரில் தான் இப்போல்லாம் பண்ணறாங்க. முன்பு போல் ட்ரேக்களில் நிறைந்து காண முடியாது. அரிசி+காய்கள் சேர்ந்த கலவை சாதாரண ஓட்டல்களில் எல்லாம் பார்க்க முடியாது. அதோடு கிச்சடியில் அதிகம் தக்காளி சேர்க்க மாட்டாங்க. கிச்சடி பெயரே வடக்கே இருந்து வந்தது. தமிழ் ஸ்வீகரித்துக் கொண்டு விட்டது. ஓட்டல்களில் கிச்சடி மெனுவில் பார்ப்பதே கஷ்டம்!

      நீக்கு
    11. //இதைப் பார்த்துட்டு இன்னிக்கு ராத்திரிக்கு சாபுதானா கிச்சடிக்கு ஊறப் போடும் எண்ணம் வந்துவிட்டது. // அட! நான் கூட ஒருத்தரை மோட்டிவேட் பண்ணியிருக்கிறேன்..! 

      நீக்கு
    12. இது என்ன இந்த மாதிரி க்ரெடிட் எடுத்துக்கறாங்க. நான் அருமையான பாயசம் இடுகை போட்டால், ரொம்ப நல்லா இருக்கு இந்த அரிசிப் பாயசம், இன்று இரவு நான் சாதம் உபயோகித்து தயிர் சாதம் பண்ணிச் சாப்பிடப் போகிறேன் என்றால் அதற்கு, நான் மோடிவேட் பண்ணினேன் என்று சொல்லமுடியுமா? (எனக்கு நேரம் கிடைத்தால் வம்பு வளர்ப்பதே வேலையாகிவிட்டது)

      நீக்கு
    13. // நான் அருமையான பாயசம் இடுகை போட்டால், ரொம்ப நல்லா இருக்கு இந்த அரிசிப் பாயசம், இன்று இரவு நான் சாதம் உபயோகித்து தயிர் சாதம் பண்ணிச் சாப்பிடப் போகிறேன் என்றால் அதற்கு, நான் மோடிவேட் பண்ணினேன் என்று சொல்லமுடியுமா?// நெனச்சேன்!

      நீக்கு
  8. அணைவருக்கும் காலை வணக்கம்.
    சாபுதானா வடை பற்றி படிக்கும்போதே நாவு கற்பனையால் ஊருகிறது.
    மிக்க நன்றி பாணு மேடம்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம். சாபுதானா வடையை சூடாக சாப்பிட்டு விடுங்கள் என்று சொன்னதால் சூடு ஆறுவதற்குள் போட்டு விட்டீர்களோ? ஹா ஹா! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பராத்தா பண்ணி படங்கள் எடுத்து வைத்திருந்தேன். பா.வெ இங்க எழுதிட்டாங்க. அருமையா சாபுதானா வடைகள் பண்ணி படங்கள் எடுத்திருந்தேன். இங்க பா வெ எழுதிட்டாங்க.

      யாரோ உளவாளிகள் நடமாடறாங்களோ?

      நீக்கு
    2. தலைவரே... பழமொழியை மாத்தாதீங்க. Great Men think alike (அதுக்காக, பெண்கள் think பண்ணவே மாட்டாங்க, அவங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று அர்த்தம் பண்ணிக்காதீங்க. ஏன்னா நான் மேல் ஷாவனிஸ்ட் இல்லை. ஹாஹா)

      நீக்கு
    3. As per " idioms.thefreedictionary.com " what I have written is the correct form.

      நீக்கு
  10. எளிய செய்முறை..
    இந்த வடை எப்போதோ ஒருமுறை சாப்பிட்டதாக நினைவு...

    சுவையே வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. வடை கடையை நோக்கி போக வைக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தேவகோட்டையில் கிடைக்குமா? கிடைத்தால் விடாதீர்கள். 

      நீக்கு
  12. சுவையான குறிப்பு. சாபுதானா அதிகம் பயன்படுத்தப்படுவது மஹாராஷ்டிராவில். இங்கே தில்லி பக்கங்களில் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. சுவையான, சுலபமான குறிப்பு. இங்கே கிடைத்தால் செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சாபுதானா குஜராத், மஹாராஷ்டிரா ஸ்பெஷல். 

      நீக்கு
  13. இந்த வடைக்குத் தொட்டுக்கப் பண்ணுவது பற்றி பானுமதி சொல்லலைனாலும் சொல்லுவது நம் கடமை, உரிமை,எருமை! சேச்சே, திடீர்னு அதிரடி நினைவு. இதுக்குப் பெரும்பாலும் கடைகளில் புளிச்சட்னியும், பச்சைச் சட்னியும் கொடுக்கிறாங்க. ஆனால் மஹாராஷ்ட்ராவில் இதுக்குனு தனியாச் சட்னி பண்ணுவாங்க. பச்சைக் கொத்துமல்லி+பச்சை மிளகாய்+வறுத்த வேர்க்கடலை+இஞ்சி+உப்பு+பெருங்காயம் வைத்துக் காரசாரமாகச் சட்னி செய்வார்கள். இதோட பெயரை மறந்துட்டேன். நினைவு வந்தால் சொல்றேன். வெறும் பச்சைக்கொத்துமல்லிச் சட்னியும் நல்லா இருக்கும். ஆனால் தேங்காய்ச் சட்னி, தயிர் இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வெங்கட் சொல்வார்.

      நீக்கு
    2. எல்லாமே பச்சைதான். வேர்க்கடலை மட்டுந்தான் வறுத்தது. இந்த வேர்கடலை சட்னி இந்த வடைக்கு கண்டிப்பாக ருசியாகத்தான் இருக்கும். நன்றி சகோதரி.

      நீக்கு
    3. ஒருத்தங்க சொன்னாங்கன்னு நான், கெட்டித் தயிர்ல ஜீனியை நன்றாகக் கலந்து தொட்டுக்க வைத்தேன். பசங்க, இதுக்கு லஸ்ஸியா என்று முறைத்துவிட்டு கெட்சப் தொட்டுக்கிட்டாங்க

      நீக்கு
    4. @நெல்லை, ஹையோ, ஹையோ! உங்க ரசனை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. தேங்காய் சட்னி, தயிர் எல்லாம் ரூல்டு அவுட். எங்க வீட்டில் கெச்சப் மதி!

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கப் பதிவில் சாபுதானா வடைகள் கண்ணுக்கு நிறைவாக மிக அழகாக உள்ளது.சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் தன் செய்முறைகளுடன், படங்களும் போட்டு அமர்க்களமான ஒரு பதிவை தந்திருக்கிறார். பாராட்டுக்கள். நான் இதுவரை ஜவ்வரிசியில் இதுபோல் செய்ததில்லை. நேரம் கிடைக்கும் போது ஒரு தடவை செய்து பார்க்கிறேன்.குறிப்புகளை தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி.பகிர்ந்தற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்க கமலா. நான் சோளமாவோ, கடலை மாவோ சேர்த்ததில்லை.வேர்க்கடலைப் பொடி ஜவ்வரிசியின் அளவுக்குத் தக்கபடி எடுத்துக்கொண்டால் எண்ணெயும் குடிக்காது! வடை தட்டவும் நன்றாக வரும்.

      நீக்கு
    2. நன்றி கமலா. செய்து பாருங்கள். 

      நீக்கு
  15. நான் பஹ்ரைன்ல ரெகுலரா உபி வாலா கடைகளில் வாங்கிச் சாப்பிடுவேன். ரொம்ப எண்ணெய் என்று மனசில் தோன்றும். ஆனா ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டல்களில் எண்ணெய்தான் மேலிட்டுக் கொண்டு இருக்கும். அம்பேரிக்காவில் ஹூஸ்டனின் அனைத்து ஓட்டல்களிலும் சாபுதானா வடை கிடைக்கும்.

      நீக்கு
  16. சாபுதானா வடை செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது.
    ஒருமுறை செய்து இருக்கிறேன். சோளமாவு கலக்காமல் செய்தேன்.

    உங்கள் குறிப்பை படித்தவுடன் மீண்டும் செய்து பார்க்க ஆவல் வந்து விட்டது. ஜவ்வரிசி இருக்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், செய்து பாருங்கள். எங்க வீட்டில் இன்று சாபுதானா கிச்சடிதான் ராத்திரிக்கு! :)

      நீக்கு
    2. வெரி குட்! செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள். நன்றி. 

      நீக்கு
  17. எளிதாக உள்ளது... செய்திட வேண்டியது தான்... நன்றி...

    பதிலளிநீக்கு
  18. ஆஹா! எத்தனை பேருக்கு தூண்டு கோலாக இருந்திருக்கிறது இந்தப் பதிவு! மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.  

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!