செவ்வாய், 10 நவம்பர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  மாய நோட்டு  4/4 - ஜீவி 

மாய நோட்டு 4/4
ஜீவி 


[ 4 ]
முந்தைய பகுதிகள் : ஒன்று  -----    இரண்டு   ------       மூன்று 

னிப்புகளோடு சேர்த்து என்னத்தைத் தடவித் தருகிறானோ தெரியலே,  முரளி ஸ்வீட் ஸ்டாலில் வழக்கம் போலவே  நெரிசல்.

அந்த ஜெகஞ்ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.  போனதடவை வந்த பொழுது எனக்கு சப்ளை செய்த பையன் அந்தக் கூட்டத்தில் என்னைப் பார்த்ததும்  அடையாளம் தெரிந்து கொண்டு புன்முறுவலுடன், "என்ன, ஐயா, வேணும்?" என்று பரிவுடன் கேட்டான். 

"காஜூ ரோல் தான்.." என்றேன்.  "அரைக்கிலோ கொடுத்துடு.." குனிந்து, கையுறை பூண்ட கையால்  எடை மிஷினில் காஜூவை எடுத்து வைத்துக் கொண்டே, "அப்புறம், ஐயா?"

"திரட்டிப்பால் இருக்கா?"

"ஓ.. " என்று  ஒரு டப்பாவை எடுத்து வைத்தான்.   "அரைக்கிலோ பேக்.." என்றான்.

 "அப்புறம் பேரிச்சை சத்து உருண்டை வைத்திருப்பீர்களே.." என்று நான் கேட்கும் போதே,  " இருக்கே.. எவ்வளவு ஐயா?"

"அதுவும் அரைக்கிலோ தான்.."

அதையும் எடை போட்டு பேக் செய்தான். "அப்புறம், ஐயா?"

'நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு..' என்று கடை மியூஸிக் ஸிஸ்டம் எதிலிருந்தோ மனசை கிறங்கடிக்கும் பாடல் வழிந்து கொண்டிருந்தது..   'அரை  கிலோ ஸ்பெஷல்  மைசூர் பாவும், அரைக்கிலோ ஸ்பெஷல் மிக்ஸரும்  சேர்த்துக்கோ.. இந்த இரண்டை மட்டும் தனிப்பையில் போட்டுத் தந்தடுப்பா.  ஒரு நண்பருக்குக் கொடுக்க வேண்டும்" என்றேன்.   திடீரென்று மனசில் உதித்த எண்ணமாய்  போகிற வழியில் ஞாபகமாக தனிப்பையை  அந்தப் பிச்சைக்காரரிடம் கொடுத்து விடும் என்று மனசில் தீர்மானம் உருபெற்றது.

"சரிங்க, ஐயா..  வேறே?.."

"இந்த மட்டும் போதும்.." என்று முடித்துக் கொண்டேன்.  பில் போட்டு  பையிலிட்டு,  என் கையிலும் பில்லின் பிரதி ஒன்றைக் கொடுத்தான். மொத்தம் ரூ.1400/-.

பணம் கொடுக்கக் கூட க்யூ தான்.  க்யூவில் என்னையும் இணைத்துக் கொண்டேன்.  எனக்கு முன்னால் இருப்பவர்கள் ஆறோ, ஏழோ.

போன தடவை  முரளி கடைக்கு வந்த பொழுது அந்த நெருப்பு   சுட்ட  நோட்டை எப்படியாவது  கைகழுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நோட்டோடு நோட்டாக அதையும் சேர்த்து எடுத்து  வந்தது  நினைவுக்கு வந்தது.   இப்போதோ 'அந்த' நோட்டு என் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்று பத்திரப்படுத்தி வைத்திருப்பதை நினைத்து  மனசில் இயல்பாக ஒரு புன்முறுவல் விகசித்தது.

டெலிவரி கவுண்ட்டரில்  பைகளைப் பெற்றுக்  கொள்ளும்  பொழுது  மைசூர்பா, மிக்ஸர் அடங்கிய சின்னப் பையை மட்டும்  தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

கடையை விட்டு வெளி வரும் பொழுது வெளிக்காற்று ஜில்லென்று சுகமாக  இருந்தது..   இதோ அடுத்த தெரு தான்.  அந்த நல்ல ஆத்மாவிற்காக நான் கொடுக்கவிருந்த பரிசு மனசுக்கு இதமாக இருந்தது.

குறிப்பிட்ட அந்த இடத்தில்  அந்தப் பிச்சைக்காரரைக் காணோம்.  பின்புலமாய் இருந்த  அந்த டீக்கடையின் பின் பக்கத்தில் சுவரை  இடித்து ஏதோ கட்டுமான வேலை நடந்து  கொண்டிருந்தது.

டீக்கடைக்காரரிடம்  விவரம் கேட்கலாம் என்று கடையை நெருங்கும் பொழுது,  "என்னடா, எப்படியிருக்கே? " என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.   பாலா!. .  உள்ளூரில் தான் இருக்கிறான் என்று பேரு.  பார்த்து எவ்வளவு நாளாச்சு?..

"டீ  போடச் சொல்லட்டுமா?"  என்றான், நான் அருகில் வந்ததும்.

"சொல்லேன்.." என்றேன்.

இரண்டு பேரும் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம்.   "ஜங்ஷனில் தானே இருக்கே?" என்றேன்.

"ஆமாம்.  முன்பெல்லாம் டவுனுக்கு அடிக்கடி வருவேன். அதனால் அப்பப்போ பார்த்துக் கொண்டோம்.  இப்போ வந்ததே இதுக்காகத் தான்." என்று அந்த டீக்கடையின்  கட்டுமானப் பணிகளைச் சுட்டிக் காட்டினான்.

"என்ன சொல்றே?,,  எனக்குப் புரியலே.." என்றேன்.

"இந்த டீக்கடையை பின்பக்கம் நீட்டி, ஒரு சின்ன ஹோட்டல் போல ஆக்கப் போகிறார்கள்.  இந்தக் கட்டுமான பணிக்கு நான் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறேன்.   மேற்பார்வையிடுவதற்காகத் தான் வந்தேன்.." என்றான்.

"அப்படியா?  ரொம்ப சந்தோஷம்.." என்றேன்.  "சில நாட்களுக்கு முன் கூட நான் இந்தப் பக்கம் வந்தேன்..  அப்போ.." என்று  நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி ஓரிடத்தைக் காட்டி, "அந்த இடத்லே பிச்சைக்காரன் ஒருத்தன் துண்டை விரித்து உட்கார்ந்திருந்தான்.. இப்போ என்னவோ அவனைக் காணோம்.." என்றேன்.

"ஓ!  அப்போ அந்தப் பிச்சைக்காரனை நீ பார்த்து இருக்கே, இல்லியா?"  என்று ஏதோ யோசனையுடன் இழுத்தான்.

"ஆமாம்.  பார்த்திருக்கிறேன்.  அவனை உனக்குத் தெரியுமா?" என்றேன்.  அவனுக்காகத் தான் கையில்  ஸ்வீட் பையைச் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லவில்லை.

"அந்தப் பிச்சைக்காரன் தான் நான் சொல்லப் போற விஷயத்துக்கு ஹீரோ..  அதை அப்புறம் சொல்றேன்.. நீ சொல்ல வந்ததைச் சொல்லு.." என்றான்.

"அன்னிக்கு அவன் என்னிடம் ஏதாவது தர்மம் பண்ணக் கேட்ட பொழுது  பத்து ரூபாய் கொடுத்தேன்.  அதைக் கொடுத்து இதே டீக்கடையில் என் முன்னால் டீ வாங்கிச் சாப்பிட்டான்..  இப்போ டீ ஆற்றித் தருகிறரே, இவர் இல்லை, அன்னிக்கு....  தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு வேறு ஒருவரைப் பார்த்ததாக ஞாபகம்.." என்றேன்.

"இவர் அவரோட  மைத்துனர்..  அதை விட்டுத் தள்ளு..  நான் இப்போ சொல்லப்போறதைக் கேட்டா இன்னும் உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.." என்றான் பாலா.

"சுவாரஸ்யமா இருக்கே..,  சொல்லு.." என்றேன்.  அவன் சொல்லப் போறதை ஓரளவு என்னாலும் யூகிக்கற மாதிரி இருந்தாலும்,  என் யூகம் சரியான்னு தெரிஞ்சிக்கற ஆர்வத்தில்  கேட்டேன்.

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்னிக்கு நீ கொடுத்த மாதிரியே அந்தப் பிச்சைக்காரனுக்கு யாரோ தர்மம் செய்திருக்கிறார்கள்.   அதுவும் நீ கொடுத்த மாதிரியே பத்து ரூபா தர்மம் போலிருக்கு.  அவன் கொடுத்ததை வாங்கி கல்லாப்பெட்டிலே போட்டு விட்டு டீ கொடுத்திருக்கிறார் இந்தக் கடைக்காரர்.  அந்த நோட்டு இவர்  கல்லாப்  பெட்டிலே போய்ச் சேர்ந்த நேரத்திலேந்து  இவர் டீக்கடைலே   கூட்டமான கூட்டம்  அம்முது..   அன்னிலேந்து கல்லாப் பெட்டிலே போட்ட அந்த பத்து  ரூபா நோட்டை இவர் எடுக்கறதே  இல்லை.  தவறி யாருக்கானும் கொடுத்துடக் கூடாதுன்னு அந்த நோட்டுக்கு ஒரு பிளாஸ்டிக் உறையும் போட்டு வைச்சிருக்கார்ன்னா, பாரேன்!..  தினமும் கொழிக்கற லாபத்திலே தான்  இந்தக் கடையையே இடிச்சுக் கட்டி  ஹோட்டலாக்கப் போறான்னா, பாத்துக்கோயேன்.." என்றான் பாலா.

'ஆக,  என் யூகமும் சரி தான்..  நான் வைச்சிருக்கும் நெருப்பு சுட்ட நோட்டுக்கும் இவன் சொல்றத்துக்கும் பொருந்தி வருகிறதே!" என்ற வியப்பில் "அதைச் சொல்லுப்பா.   அந்தப் பிச்சைக்காரர் என்ன ஆனார்ன்னு உனக்குத் தெரியுமா?'  என்று கேட்டேன். 

"இந்த டீக்கடைக்காரர் எங்க தெரு தான்..  நானும் அவர் கிட்டே அதைத் தான் கேட்டேன்.   அடுத்த நாளே அந்தப் பிச்சைக்காரர் அந்த இடத்திலே இல்லையாம்.   எங்கே போனார்ன்னு தெரிலே.  அவரைப் பிச்சைக்காரர்ன்னு  சொன்னாலே டீக்கடைக்காரருக்கு   ஏகப்பட்ட கோபம் வருது.  அவரைக் குறிப்பிட்டுப் பேசும்  போது  'எங்க சாமி' என்கிறார்.  அவர் மட்டும் திரும்பி  வந்தார்ன்னா,  இவங்க வீட்டோடு வைச்சிகிட்டு  அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்ய இந்தக் குடும்பமே தயாராயிருக்கு. தெரிஞ்சிக்கோ.." என்றான் பாலா.

பாலா சொல்றதைப் பார்த்தா நானும் இருக்கேனே என்று தான்  நினைக்கத் தோன்றியது.  பாலாவை வீட்டுக்குக் கூப்பிட்டேன்.  "இன்னைக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.     அதான் உன் வீடு தான் எனக்குத் தெரியுமே,  இன்னொரு நாளைக்கு போன்  பண்ணிட்டு வரேன்'ன்னு சொல்லிட்டான்.  மிக்ஸர்   பாக்கெட்டை மட்டும் எடுத்து 'குழந்தைகளுக்குக் கொடு'  என்று அவனிடம் தந்தேன்.  'எதுக்குடா,  இதெல்லாம்' என்றான்..   'குழந்தைகளுக்குத் தானே தர்றேன்.. வாங்கிக்கோடா'  என்றேன்.  ரொம்ப வற்புறுத்த வாங்கிக் கொண்டான்.

'நான் யூகித்தபடியே எல்லாம் நடக்கிறதே'  என்று நினைப்பு மனசு பூராவும் மண்டியது.   பிச்சைக்காரர் ரூபத்திலே ஒரு மகானின் ஆசி தான் நமக்குக் கிடைத்திருக்கிறது  என்று நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். 

உள்ளே நுழையும் போதே ஜானகி ஹாலில் இருப்பது தெரிந்தது.  டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். முரளி கடை ஸ்வீட் பையை அவள் மடியில் வைத்த போது,  "சொன்னபடியே வாங்கிண்டு வந்துட்டேளே.." என்று மலர்ந்தாள்.

கிணற்றடிக்குப் போய் கைகால் அலம்பிக் கொண்டு ஹாலுக்கு வந்தேன்.

"நான் கூட ஒண்ணு வாங்கி வைச்சிருக்கேன்,  பாருங்கோ.."  என்று சமையலறைப் பக்கம் என்னைக் கூட்டிப் போனாள்.ஒரு பெரிய எவர்சில்வர் அடுக்கில்  நீரில் அமுக்கப்பட்டிருந்த மாவடுகளைக் காட்டினாள்..  "கொள்ளை மலிவு..   ஒரேயடியா அஞ்சு கிலோ வாங்கிட்டேன்..  ஏன் அவ்வளவுன்னு கோவிச்சிக்காதீங்கோ.."  என்று விண்ணப்பம் வைத்தாள்.

'நான் எதுக்குக் கோவிச்சிக்கறேன்?..  நீ செய்யறது எதுவுமே எனக்குப் பிடிச்சுத் தான் இருக்கும்ன்னு உனக்குத் தான் தெரியுமே!"

"தெரியும் தான்..  இருந்தாலும் நீங்கள் வீட்டிலில்லாத போது காசு எடுத்து எதுவும் வாங்கினது இல்லைங்கறதாலே ஒரு  பயம்..   அதான்.." என்றாள்.

அவள் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த பயபாவம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

"பூக்காரி வந்திருந்தா..  உங்ககிட்டே வாங்கி வைச்சிருந்தேன்,  இல்லையா?..  அந்த இருநூறு ரூபாயைப் பூக்காரிக்குக் கொடுத்துட்டேன்.."

"ம்....."

"மாவடுக்கு கொடுக்க வேண்டிய காசுக்கு என்ன செஞ்சேன்னு நீங்க கேக்கலியே!.."  என்றாள்.

"ஆமாம்லே..  என்ன செஞ்சே?"

"வடுவுக்கு ஐநூறு ஆச்சு.     பீரோவைத் திறந்து காசு டப்பாலே இருந்து எடுத்துக் கொடுத்தேன்.."  என்றாள்..

"அதான் வேணும்..  இதெல்லாம் நீயும் தெரிஞ்சிக்க வேண்டியது தானே!" என்று பாராட்டுகிற தோரணையில் சொன்னவனுக்கு  சட்டென்று உறுத்தியது.  அதை நிச்சயம் பண்ணிக் கொள்ள வேண்டிய அவசரத்தில் எழுந்திருந்தேன்.

பீரோவைத் திறந்து பிளாஸ்டிக் டப்பா எடுத்து  நோட்டுக் கற்றைக்குள் ஆராய்ந்தேன்..

அந்த நெருப்பு சுட்ட ஐநூறைக் காணோம்.

"ஜானு..   இங்கே வா..  இந்த டப்பாலேந்து தானே எடுத்துக் கொடுத்தே?.." என்று படபடத்தேன்.

ஜானு உள்ளே வந்து தான் எடுத்துக் கொடுத்ததை நிச்சயம் பண்ணினாள்.  ஒரு நோட்டிலே ஏதோ கறுப்பா அழுக்கு போல இருந்தது..  அதையே செலவழிச்சுடலாம்ன்னு தள்ளி விட்டுட்டேன்.. "  என்று புன்னகைத்தாள்.

ஜானுவை கொஞ்சமே கோபித்தாலும் அவள் நொருங்கிப் போய் விடுவாள்.  அவ்வளவு மென்மையான மனசு..  அதனால் தேள் கொட்டிய திருடன் போல பேசாமலிருந்தேன்.

"ஏன்னா?.. ஏதாவது தப்பு செஞ்சுட்டேனா?"  என்று என் பக்கத்தில் நெருங்கி வந்து முகம் தூக்கி என்னைப்  பார்த்து அவள் கேட்ட போதே லேசா கண்கள் கலங்கியது மாதிரி இருந்தது.

"சேச்சே..  அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜானு.." என்று அவள் தோள்   தொட்டு ஆசுவாசப்படுத்திய பொழுது,  ஜானுவுக்காக எதையும் இழக்கலாம் என்று தீர்மானம் கொண்ட மனசு தன்னையே இழந்து போனது.

[ நிறைந்தது ]

41 கருத்துகள்:

  1. காலை வணக்கம். இன்று என்ன யாரையும் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார் பதிவு என்பதால் out of syllabus பரிமாற்றங்களுக்கு ஒரு தயக்கம்.

      நீக்கு
    2. ஹ்ஹஹஹ்ஹா.. ஆனாலும் குறும்பு
      உங்களுக்கு. அதுக்கே பழக்கப்பட்டுப் போன கைகளை இப்படியா கட்டிப் போடுவது?

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் நல்லனவாகவும் மன ஆரோக்கியம் , உடல் ஆரோக்கியம் அவற்றைப் பாதுகாத்து கவனமுடன் இருக்கும்படியும் அமையப் பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் இனிமையும், மகிழ்ச்சியும் சேரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தொற்றெல்லாம் விலகி
    அனைவரும் நலம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  6. பேரீச்சம்பழ உருண்டையாக தித்தித்து கரைந்து போனதோ அந்த ராசியான நோட்டு..

    ஆனாலும் மனசுக்குள் கலவரம் - பழகிய ஒன்று விட்டு விலகிச் செல்வது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க. தம்பி. நாலுவார பழக்கம் இல்லையா?.. நாலு வாரமும் நம் வாசிப்பில் கூடவே வந்த நோட்டு. அதான் அந்த ஆதங்கம்.

      கதைகளுக்கு என்றுமே முடிவில்லை. எழுதிக் கொண்டே இருக்கும் வரை நீண்டு கொண்டே தான் இருக்கும். இந்தக் கதையும் அப்படித்தான். சில கதைகளை எழுத ஆரம்பித்து விட்டால் அதை நிறைவு செய்யவே மனம் வராது. சிறு பொறியாகத் தோன்றும் சிறுகதைச் சிந்தனை குறுநாவலாகவும், தொடர்கதை யாகவும் நீளும் ரகசியமும் இது தான்.

      இந்தக் கதையோ எந்த பத்திரிகைக்காகவோ எந்தக் காலத்திலோ எழுதியதில்லை. எங்கள் பிளாக்குடன் கொண்ட நட்புக்காக இந்தப் பகுதிக்காகவே எழுதிய எனது சமீபத்திய எழுத்து இது. . இந்தக் கதைக்காக நான்கு வாரங்களுகளை ஒதுக்கித் தந்த அவர்கள் விசால மனசுக்காகவும் நட்புக்காகவும் நன்றி.

      அந்த மாய நோட்டு இந்தக் கதைக்காக இந்த இடத்தில் பிரிந்தாலும் அந்த மாவடு விற்றப் பெண் பெற்ற அனுபவங்களிலிருந்து தொடர்ந்தால் மீண்டும் நம் பழக்கத்திற்கு அந்த நோட்டைக் கொண்டு வந்து விடலாம்.

      எழுதிக் கொண்டே வரும் பொழுது இந்த அளவில் நிறைவு செய்து விட்டால் நன்றாக இருக்கும் கதையெழுதும் அனுபவத்தில் தோன்றும். அந்த மனக்குரலை ஏற்றுக் கொண்டால் வாசிப்பவருக்கும் பெரும்பாலும் பிடித்து விடும். அந்த மனக்குரலே இங்கும் செயல்பட்டிருக்கு. சில கதைகள் 'ஏன் இப்படி அப்ரப்ட்டாக நிறுத்தி விட்டார்? இதற்கு மேல் என்ன ஆயிற்று' என்று வாசக மனசிலும் வினையாற்றும். வாசிப்பில் கதையுடன் ஒன்றிப் போகும் பேறு இது.

      தொடர்ந்து வாசித்து வந்து கருத்திட்டதிற்கு நன்றி, தம்பி.

      நீக்கு
  7. இதெல்லாம் ஜீவி அண்ணா அவர்களுக்கே உரித்தான நடை...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எழுத்தாற்றல் மட்டும் என்னவாம்?.. சொல்ல வந்ததை படம் பிடித்தது போல எழுத்தில் கொண்டு வரும் சிறப்பு பெற்றது உங்களது.

      நன்றி, தம்பி.

      நீக்கு
  8. ஜீவி சாரின் கதை இனிமையாக முடிந்தது.
    முயற்சி செய்யாமல் வந்து சேர்ந்த விதத்திலியே
    கறை நோட்டு சென்று விட்டது.

    நடுவில் அதிர்ஷ்டம் கொண்டு வருவது போல் வந்துவிட்டு
    ஓடியே போய் விட்டது. அதற்குள்
    எத்தனை பாடங்கள்.
    பத்துரூபாய் நற்காலத்தைக் காட்டியது.
    அது டீக்கடைக்காரருக்கு அடித்த லக்கி ப்ரைஸ்.

    இங்கு செலவு வைத்துவிட்டு ,சந்தோஷத்தைக்
    கொடுத்து விட்டு மாவடுக்காரியிடம்
    விடை பெற்றுவிட்டது.
    நிறைவான கதை. நன்றியும் வாழ்த்துகளும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. இந்த நோட்டும் தானும் அந்த ஜி. விஸ்வத்திடம் ஒட்டிக் கொண்டிருந்தவரை நிறைய செல்வத்தை ஷேர் மார்க்கெட்டை சாக்காகக் கொண்டு சேர்த்து விட்டுத் தான் சென்றது, இல்லையா?..

      நீங்கள் சொல்கிற மாதிரி அந்த டீக்கடைக்காரரும் கொடுத்து வைத்தவர் தான். அந்த நோட்டின் அருமையை அவர் எந்த சுய சோதனையும் இல்லாமல் டக்கென்று புரிந்து கொண்டது தான் ஆச்சரியம். பல சமயங்களில் நமக்குப் பரிசு கொடுக்கிற மாதிரி இறைவன் நம்முள் செயல்படும் நேர்த்தி இது. உழலும் வாழ்க்கைப் போக்கின் நெருக்கடிக்களுக்கு இடையேயும் சோர்ந்து விடாமல் செயல்படும் நம் நல்ல எண்ணங்களுக்கான பரிசு இது போலும். இறைவனின் திருவிளையாடல்கள் நம் சிற்றறிவுக்கு எட்டாதது. கடவுள் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். இங்கே தான்யா இருக்கிறான் என்று அறிவதற்கான சுய புரிதலுக்கும் அவன் அருளே வேண்டியிருப்பதை என்னென்பது?..

      அந்த மாவடு விற்ற பெண்ணிடம் அது போய்ச் சேர்ந்ததையும் இப்படித் தான் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

      தொடர்ந்து வாசித்து வந்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  9. அந்த மாவடுவிற்றவருக்கு அதிர்ஷ்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க, ஜிஎம்பீ ஐயா,

      வல்லி சிம்ஹன் அவர்களுக்கான என் பதிலையும் சிரமம் பார்க்காமல் ஒரு தடவை வாசித்து விடுங்கள்.

      அதிர்ஷ்டம் என்றா நினைக்கிறீர்கள்?.. அதிர்ஷ்டம் என்று எதுவுமே இல்லை.
      நம் அன்றாட செயல்பாடுகளுக்கான பரிசு என்பதே என் எண்ணம். பலாபலன் என்று இதைத் தான் பெரியோர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் என்பது திண்ணம்.

      எது யாருக்கு எந்த நேரத்தில் கிடைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அது கிடைப்பது இறை அருளால் நிகழ்வாகிறது என்றே நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  10. அந்த ரூபாய் நோட்டு சுற்றிய சுற்று. சென்ற இடம். தொடர்ந்து வாசித்தேன். முழுமையாக ரசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, முனைவர் ஐயா.

      எல்லாம் இறை அருளின் திருவிளையாடல்கள்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக முடிந்துள்ளது. பாராட்டுக்கள். செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மி ஒரிடத்தில் என்றுமே நிரந்தரமாக வாசம் செய்வதில்லை. செல்வம், செல்வம் சம்பந்தமுள்ள ராசிகளுடன் அவள் சுழலும் தன்மையானவள் என்பதை கதை வலியுறுத்துகிறது. உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் அம்சந்தானே..! இந்தக்கதையிலும், அவள் மூலமாக தன் நாடகத்தை அரங்கேற்றி, ஒவ்வொரு மனித குலத்திற்கென்று அமைக்கப்பட்ட விதியுடன் இணைந்து செய்ல்படுவதுதானே தெய்வங்களின் ஆசிகளும் , அனுக்கிரஹங்களும்..என்பதை உணர்த்தியுள்ளாள். அதை ஜானு மூலமாக அன்னை மஹாலக்ஷ்மி எவ்வித தடங்கலுமின்றி நடத்தி காட்டியிருப்பதை, கதை நாயகரும் உணர்ந்து கொண்டு இறுதியில் உணர்ச்சிவசப்படாமல், அவருடைய இயல்பான சாந்தத்துடன் விட்டு தந்திருப்பதாக முடித்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.. !

    ஜீவி சகோதரரின் இந்தக் கதை வித்தியாசமான பாணியில் நன்றாக உள்ளது. ஒரு ஐநூறு ரூயாய் நோட்டுடன் நம்மையும், அது என்னவாயிற்றோ என்ற பரபரப்புடன் நான்கு வாரங்களாக ஸ்வாரஸ்யத்துடன் இயங்க வைத்த ஒரு சிறப்பான கதையை தந்த ஜீவி சகோதரருக்கு பாராட்டுக்கள். அவர் அற்புதமான எழுத்து லாவகத்திற்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு இயல்பாக கதை நிறைவுறும் இடத்தைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
      இது உங்கள் வாசிப்பு ரசனையின் உயர்வான வெளிப்பாடு.

      சக்தியின் மூலமாக நடத்திக் காட்டியிருப்பது என்ற தாங்கள் சொல்லியிருப்பது உணர்வு பூர்வமானது. அதை அதே அர்த்தத்தில் உணர்கிறேன்.

      எதையும் ஆழ்ந்து வாசித்து ரசிக்கும் தங்களுக்கு
      மிக்க நன்றி, சகோ.
      ஜீவி

      நீக்கு
  12. நம் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தி்ல் செல்லாத ஒரு நோட்டை எப்படியாவது தள்ளி விட முயன்றிருப்போம். ஜீ.வி.சார் அதை ஒரு ஸ்வாரஸ்யமான கதையாக்கி விட்டது அருமை.
    துவக்க நிலை எழுத்தாளர்கள் ஒரு சிறிய சம்பவத்தை எப்படி சுவாரஸ்யமான கதையாக்குவது என்பதற்கு இந்த கதையை ஒரு கையேடாகக் கொள்ளலாம். பாராட்டுகளும்,நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையேடு?.. 'இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லியோ?' என்று கீதாம்மா நினைப்பாங்களோ?.. அதை நெ.த. வழி மொழிவாரோ? தெரிலே.

      மனசில் பட்டதை எப்பொழுதும் தயங்காமல் சொல்வதற்கு நன்றி பா.வெ.

      நீக்கு
  13. மாவடு விற்பவர் வாழ்க்கையில் வசந்தம் வரும். ஆனால் அவர் அந்த நோட்டை செலவழிக்காமல் இருக்க வேண்டும்.

    ரூபாய் நோட்டின் பயணம் நிறைய விஷயங்களை சொன்னது.

    பழைய பாடல் நினைவுக்கு வருது "ஓரிடம்தனிலே நிலையில்லா உலகினலே உருண்டோடிடும் உருவமான பொருளே!"

    பிச்சைக்காரர் சித்தர் போலும் அவர் கை பட்ட காசு மற்றவர்களை உயர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் அவர் அந்த நோட்டை செலவழிக்காமல் இருக்க வேண்டும்.//

      எஸ். இதான் முக்கியமான பாயிண்ட். எப்பொழுது அந்த நோட்டு போய்ச் சேருவதற்கு அடுத்த இடம் அதுதானென்று இறை அருள் வழி நடத்தி விட்டதோ அப்பொழுதே அந்தப் போய்ச் சேர்ந்தவருக்கான கொடுப்பினை புரிந்து விட்டது.
      எத்தனை காலம் அபரிடம் அது இருக்குமோ அதுவும் இறைவனின் சித்தமே.
      என்ன நினைக்கிறீர்கள், கோமதிம்மா?..

      //ஆனால் அவர் அந்த நோட்டை செலவழிக்காமல் இருக்க வேண்டும்.//

      திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் என்று ஒரு சித்தர் இருந்தார்.
      உங்களுக்கும் அந்த மஹானைப் பற்றித் தெரிந்திருக்கலாம். அவர் நம்மிடையே வாழ்ந்த வரலாற்றின் நினைவலைகளில் இந்த பாத்திரம் உருவாயிற்று.

      தங்கள் பாரட்டிற்கும் வாழ்த்துக்கும் நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
  15. மாய நோட்டு இப்ப மாவடுக்காரரிடம்!! மாந்தோப்பு வாங்கிவிடுவார் இன்னும் சில நாட்களில் என்று சொல்லலாமோ!!

    சின்ன நிகழ்வு. அதைச் சுற்றிய சுவாரசியமான கதை. நன்றாகச் சென்று முடிவும் நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவடு விற்ற அந்தப் பெண்ணே அடுத்த நாள் வந்து "ஏம்மா நீங்க தானே இந்த செல்லாத நோட்டைக் கொடுத்தது?" என்று ஜானு வீட்டிற்கே வந்து திருப்பி விடுவாரோ?

      அப்படி நடந்தால் விஸ்வத்தின் முகம் கோடி சூரிய பிரகாசத்தில் தான் பாளபளக்கும்.

      கதைகளுக்கு முடிவுகளே இல்லை. கற்பனை வசப்பட்டு விட்டால் எப்படி வேண்டுமானாலும் கோட்டை கட்டும்.

      வாசித்து ரசித்தமைக்கு நன்றி, சகோ.

      நீக்கு
  16. பதில்கள்
    1. யூகங்கள் எழுதும் கதைகளுக்கேற்ப பின்னப்படுவது தான்.

      என் யூகமும் சரியானதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி தான், டி.டி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. சாதாரண எளிய மக்களுக்கு நல்லது நடந்தால் என்றுமே நமக்கு மகிழ்ச்சி தான். இல்லையா, தேவகோட்டையாரே!

      வாசித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  18. இன்னும் பல குடும்பங்களுக்கு நல்லதைக்கொடுக்க அந்த நோட்டு பயணித்துக் கொண்டே இருக்குமோ? கைராசிக்கு ஒரு அற்புத நிகழ்வு. அற்புதம்.அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனுஷ ரூபத்தில் மனிதச் செயல்களில் இறைவன் உறைந்திருக்கிறனா என்று யோசித்தாலே அந்த நினைப்பே நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள பெரிதும் துணையாக இருக்கும். இல்லையா, காமாட்சி அம்மா?

      தாங்கள் இந்தக் கதையை வாசித்து கருத்துச் சொன்னமைக்கு ரொம்பவும் நன்றிம்மா.

      நீக்கு
  19. எல்லாப்பகுதிகளையும் வாசித்துவிட்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ஜீவி சார். ஒரு செல்லா நோட்டை வைத்து அழகான கதை எழுதியுள்ளீர்கள். மாயநோட்டின் சுவாசியமான பயணத்தை ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நாள். காலை பத்து பத்தரை இருக்கும்.

      வாசலில் யாரோ "அம்மா.." என்று கூப்பிடும் குரல் கேட்டது. ஜானு அடுக்களையில் இருந்தாள். அநேகமாக அவளுக்குக் கேட்டிருக்காது. ஹாலில் எக்னாமிக் டைமிஸ்ஸில் மூழ்கியிருந்த எனக்கு நன்றாகக் கேட்டது.

      வாசலுக்கு விரைந்தேன்.

      மாவடுக் கூடையுடன் ஒரு பெண் நின்றிருப்பதைப் பார்த்ததுமே விஷயம் என்னவென்று புரிந்து விட்டது. அந்த நோட்டைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று மனத்தில் தளும்பி வழியும் ஆர்வம் பொங்கியது.

      "அம்மா நேத்திக்கு எங்கிட்டே மாவடு வாங்கினாங்க. அவங்க கைராசி இந்த தெரு திரும்பலே.. கூடையே காலியாகி அத்தனையும் வித்துப் போச்சுங்க..
      அதான் இதைக் கொடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்.."

      அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் பை. என்னவாக இருக்கும்?..

      "இதுலே இரண்டு கிலோ வடு இருக்கு, சாமி.. அம்மா கிட்டே கொடுத்திடுங்க.. எனக்குக் கொடுக்கணும்ன்னு தோணித்து. அதான் வந்தேன். இதுக்கு காசு கொடுக்க வேண்டாம்.." என்றாள்.

      "அப்படியா?.." என்று பையை வாங்கிக் கொண்டேன்.

      அந்த நோட்டைப் பற்றிக் கேட்க வேண்டும். ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. "நல்ல லாபம்ன்னு சொல்லு.." என்று எதையாவது சொல்வாள் என்று எதிர்பார்த்துக் கேட்டேன்.

      "வந்த லாபத்திலே இரண்டு ஐநூறு நோட்டை எடுத்து சாமி உண்டியல்லே போட்டு வைச்சிருக்கேன். பாக்கி காசிலே தான் இன்னிக்கு வடு வாங்கியாந்து இருக்கேன். அம்மா அஞ்சு கிலோ வாங்கியிருக்காங்க.. அது செலவாகட்டும். அடுத்த வாரம் வரேன்னுட்டு அம்மா கிட்டே சொல்லிடுங்க.. வரேன், சாமி.."

      கூடையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் கிளம்பிய ஜோரிலேயே அவள் மன சந்தோஷம் வெளிப்பட்டது.

      சின்ன அளவில் இருந்தாலும் அதனால் கிடைக்கும் சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்கும் மன முதிர்ச்சி வேண்டித்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்..

      பயிலப் பயில இன்னும் இன்னும் என்று நல்ல வாழ்க்கை அமைப்புக்கான பாடம் இருந்து கொண்டே இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம். என்ன சொல்றீங்க?..

      ============================================================================

      கதைகளுக்கு இதான் முடிவு என்று எதுவுமே கிடையாது, துளசிஜி. இந்தக் கதைகள் எழுத எழுத தன்னை எழுதிக் கொண்டே தான் இருக்கிறது என்பதே அனுபவமாக இருக்கிறது..

      நீக்கு
  20. நோட்டின் கதை சுவாரசியம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க மாதேவி. உங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்ததில் எனக்கும் சந்தோஷம் தான்.
    அதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றி சொன்னதற்கு நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  22. நன்றி, கரந்தையாரே!
    விறுவிறுப்பு என்ற வார்த்தையிலேயே.ஒரு விறுவிறுப்பு இருக்கு. கவனிச்சீங்களா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!