புதன், 1 நவம்பர், 2023

லட்சுமணதாஸ் - நீ பாஸ் பாஸ் !

 

சென்ற வாரம் யாரும் எங்களைக் கேள்விகள் கேட்கவில்லை என்பதால், எங்கள் கேள்விகள் உங்களுக்கு : 

1) சமீபத்தில் நீங்கள் பார்த்த அரசியல் பிரமுகர் யார்? எங்கே, எப்போது? 

2) புளித்துப் போன தோசை மாவை எப்படிப் பயன்படுத்துவீர்கள்? 

3) சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த - மற்ற பதிவர்களின் பதிவு எது?

= = = = = = =

KGG பக்கம் : 

லட்சுமணதாஸ். 

JTS பள்ளியில் மூன்று வருடங்களும் என்னுடன் படித்த பையன்களில் ஒருவன். விசித்திரமான சில பழக்கங்கள் கொண்டவன். 

நான் எப்பொழுதும் கழுத்துப் பகுதியில் கிளாஸ் விண்டோ இருக்கின்ற பேனாவை ( camlin என்று ஞாபகம்) பயன்படுத்துவேன். இங்க் இருப்பு என்ன என்று அவ்வப்போது கண்காணிக்க வசதியாக இருக்கும். தினமும் காலையில் இங்க் இருக்கிறதா என்று பார்த்து, குறைவாக இருந்தால் டாப் அப் செய்துகொண்டு பள்ளிக்குக் கிளம்புவேன். 

லட்சுமணதாஸ் கொண்டு வரும் பேனாவில் அப்படி எதுவும் கண்ணாடி ஜன்னல் கிடையாது. வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது அவனுடைய பேனா சரியாக எழுதவில்லை என்றால், உடனடியாக அதன் கழுத்தைத் திருகி (கையால் கழற்ற வரவில்லை என்றால், பல்லால் கடித்துத் திருகித் திறப்பான்) பிறகு, வலது கையில் பேனாவின் அடிப்பகுதியைப் பிடித்து அப்படியே தன் இடது உள்ளங்கையைக் குவித்து வைத்து  சாய்த்து, எவ்வளவு இங்க் இருக்கிறது என்று பார்த்துக்கொள்வான். பிறகு அப்படி ஊற்றிய இங்கை திரும்ப லாகவமாக பேனாவுக்குள் ஊற்றி இடது கையை தலையில் தடவிக்கொள்வான். இடது கை, தலை முடி, சட்டைப் பை - எல்லா இடங்களிலும் இங்க் கறையுடன் வினோதமாகக் காட்சி அளிப்பான். 

அவன் வகுப்பு ஆசிரியரிடம் மாலை நேரங்களில் டியூஷன் எடுத்து படித்து வந்ததால், வகுப்பு ஆசிரியரின் பெட் ஆனான். கிளாஸ் டெஸ்ட், காலாண்டு, அரையாண்டு பரிட்சைகளில், ஃபிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களில் அவனுக்குத்தான் முதல் மதிப்பெண் எப்போதும் கிடைக்கும். இரண்டிலும் 80 க்கு மேலே மார்க் வாங்குவான் ( அல்லது ஆசிரியர் கொடுப்பார் ) ஆசிரியர் கொடுக்கும் நோட்ஸ் அப்படியே மனப்பாடம் செய்து வார்த்தை மாறாமல் எழுதி வைப்பான். மேலும் டியூஷன் மாணவன் என்பதால், என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதும் அவனுக்கு சூசகமாகத் தெரிவிக்கப்படும். அந்த ஆசிரியர் எப்போதும் எனக்கு 75% க்கு மேலே மதிப்பெண் போடமாட்டார். " சொந்தத்துல வண்டி ஓட்டறே - அதனால இதுக்கு மேலே உனக்கு மார்க் கிடைக்காது " என்பார். அதாவது - கேள்விகளுக்கு அவர் கொடுத்த நோட்ஸ் வார்த்தைகளை விட்டு நான் என் சொந்த வார்த்தைகளில் பதில் எழுதுவேன். அது அவருக்குப் பிடிக்காது. 

 லட்சுமணதாஸ் சொன்ன இன்னொரு சுவாரஸ்ய தகவல் : 

அவன் எட்டாம் வகுப்புப் படித்த கோ எஜுகேஷன் பள்ளியில், மாணவர்களிடையே ஒவ்வொருவரை ஒவ்வொரு துறைக்கு மந்திரியாக தேர்ந்தெடுப்பார்களாம். அதாவது சுற்றுச் சூழல் / சுகாதார மந்திரி, தோட்டத்துறை மந்திரி, கல்வி மந்திரி, பாதுகாப்பு மந்திரி என்று பல மந்திரிகள். எல்லோரும் பள்ளிக்கூட வளாகத்திற்குள் இருக்கின்ற சிற்சில விஷயங்களுக்கு மந்திரிகள். 

உதாரணமாக  சுற்றுச் சூழல் மந்திரி பள்ளிக்கூட வளாகத்திற்குள் உள்ள சுகாதார பாதிப்புகளை சரி செய்ய தகுந்த ஆசிரியர் மூலம் ஆவன  செய்யவேண்டும். தோட்டத்துறை மந்திரி பள்ளி வளாகத்தினுள் உள்ள செடி கொடிகளைப் பாதுகாக்க, அவற்றுக்கு நீரூற்றுவது, களை அகற்றல் போன்ற பணிகளை கண்காணிக்க. 

ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் சட்டசபைக் கூட்டம் நடக்குமாம். சபாநாயகர், ஒரு ஆசிரியர். மந்திரிகள் எல்லோரும் மாணவ, மாணவிகள். மற்ற மாணவர்கள் எல்லோரும் சட்டசபை உறுப்பினர்கள். 

தோட்டத்துறை மந்திரி, எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் மாணவி. எப்போதும் இரண்டாவது ரேங்க் வாங்கும் பையன் என்ன செய்வானாம் - லட்சுமணதாசிடம், காதோடு காதாக, " நீ தோட்டத்துறை மந்திரியிடம், 'சென்ற புதன் கிழமை அன்று பள்ளி கிழக்குப்பக்கச் சுவர் மூன்றாவது வரிசையில் நான்காவது செடியான செவ்வந்திச் செடி ஒடிந்து விழுந்திருந்ததே அதை ஏன் தோட்டத்துறை மந்திரி கவனத்தில் கொண்டு சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை?' என்று கேள்" என்று சொல்லுவான். 

லட்சுமணதாஸ் அவ்வாறு கேட்டவுடன், தோ து மந்திரி உடனே, " அது வியாழக்கிழமைக் காலையில் பார்த்து, சரி செய்துவிட்டோம். ஒடிந்து விழுந்திருந்த செடிக்கு பக்கத்தில் ஒரு சிறிய குச்சி நட்டு, செடியை அதோடு சேர்த்து இழுத்துக் கட்டினோம். " என்று சாதுரியமாகச் சொல்லுவாளாம். உடனே கேள்வி கேட்கச் சொன்ன அந்த இரண்டாவது ரேங்க் மாணவன் எழுந்து, " நம் பள்ளித் தோட்டத்தின் கிழக்குப் பக்கச்சுவர் மூன்றாவது வரிசையில் செவ்வந்திச் செடிகளே கிடையாது. அந்த வரிசையில் எல்லாமே ரோஜா மற்றும் தும்பைச் செடிகள்தான். அங்கு எந்தச் செடியும் ஒடிந்து விழவில்லை. இப்படி இருக்க - மந்திரி ஏன் சட்டசபையில் பொய் சொல்கிறார்? எல்லா கேள்விகளுக்கும் இப்படித்தான் பொய்யான பதில்கள் சொல்கிறாரா ? " என்று கேட்பானாம். 

அந்த மந்திரி - மாணவி கிட்டத்தட்ட அழும் நிலைக்குச் செல்வதைப் பார்த்து திருப்தி அடைவானாம் அந்த இரண்டாம் ரேங்க் மாணவன்! 

= = = = = =

அப்பாதுரை பக்கம் : 

வாயும் வயிறும்

வழக்கை விவரித்துக் கொண்டிருந்தார் வக்கீல் கோமோ.  திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் நீதிபதி ஸிமோனா. அவர் அவ்வப்போது கொறித்துக் கொண்டிருந்த சாக்லேட் வெண்ணை தடவி வறுத்த பாதாம்பருப்பு ஒரு காரணம் என்றாலும், திறந்த வாய் மூடாமல் அவர் கேட்டதற்கு முக்கிய காரணம் வழக்கின் விவரங்கள் தாம்.

"யுவர் ஆனர், இதோ குற்றம் சாட்டப்ப்ட்டிருக்கும் இருவரும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக என் கட்சிக்காரர் வீட்டில் இருந்து கொண்டு வாடகை பணமும் கொடுக்காமல், அதற்கு இணையாக ஏதாவது வீட்டு வேலையோ அல்லது தோட்ட வேலையோ எதுவும் செய்யாமல் விதவிதமான சாப்பாடு வேறு தினம் வற்புறுத்தி உண்டு வயதான என் கட்சிக்காரருக்குத்  தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்".

"என்ன சாப்பாடு விதம் விதமாக?" என்று ஏதோ நினைவில் கேட்ட நீதிபதி சட்டென்று சுதாரித்தார்.   "ப்ரொஸீட்" என்பதற்கு பதிலாக  "ப்ரொசீதரெ" என்றார். அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது இது இத்தாலியின் பாரி மாகாண நீதிமன்ற வழக்கு, இரண்டாவது அங்கே யாருக்குமே ஆங்கிலம் தெரியாது. வக்கீல் கோமோ தொடர்ந்தார்.  "நீதிபதி அவர்களே, இந்த இருவரையும் உடனே வீட்டிலிருந்து விரட்ட உத்தரவு கொடுத்து, இருபது வருட வாடகை, சாப்பாட்டுக்கான செலவு இரண்டையும் குறைந்தபட்ச அபராதமாக விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்".

எதிர்தரப்பு வக்கீல் ஜியோவானியை பார்த்தார் ஸிமோனா. 

"கனம் நீதிபதி அவர்களே. என் கட்சிக்காரரான இருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை.  குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என் கட்சிக்காரர்கள் இருவரும் இருபத்து மூன்று வருடங்களாக எதிர்கட்சிக்காரர் வீட்டில் தங்கி உண்டு வாடகை தராமல் வாழ்ந்தது உண்மை.  ஆனால் அது அவர்கள் உரிமை. இருவரும் எதிர்கட்சிக்காரரின் பிள்ளைகள். பிரதி எதிர்பாராமல் பிள்ளைகளைப் பேணுவது பெற்றோர் கடமையென்று இத்தாலிய சட்டப்பிரிவில் திட்டமாகச் சொல்லியிருக்கிறது" என்றார். நாலைந்து சட்டப்பிரிவுகளை எடுத்து விட்டார். ஒரு பிஸ்காடியைக் கடித்து மென்றார். 

"நன்றாக இருக்கிறதா?" என்ற நீதிபதி மறுபடி சுதாரித்து வக்கீல் கோமோவைப் பார்த்தார். 

"யுவர் ஆனரே" என்றார் கோமோ.  "எதிர்தரப்பு வக்கீல் மொறுமொறு பிஸ்காடியை கடித்து மெல்லும் சுவாரசியத்தில் தன் கட்சிக்காரரின் வயதுகளைக் குறிப்பிட மறந்துவிட்டார்.  அவர்கள் இருவரும் என் கடசிக்காரரின் பிள்ளைகள் தான் ஆனால் ஒருவருக்கு வயது நாற்பத்து ஒன்று, மற்றவருக்கு வயது நாற்பத்தாறு.  இந்தியா போன்ற நாடுகளில் இவர்களை தடிக்கடாமாடுகள் என்று அழைக்கும் வழக்கம் உண்டு ஆனரே" என்றார்.  "முப்பது வயதுக்கு மேல் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியதில்லை என்று சட்டமே சொல்லியிருக்கிறது".

"எந்த சட்டம்?" என்றார் நீதிபதி.

"நம்ம இத்தாலிய சட்டம் தான் ஆனரே.. குடும்ப உரிமைப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகள் 17, 18..."

"எனக்குத் தெரியும்.. உங்களுக்கு தெரியுமானு சோதிச்சுப் பார்த்தேன் சும்மா" என்ற நீதிபதி ஸிமோனா, ஒரு சாக்லெட்டை நாசூக்காக வாயில் அடக்கினார்.  "என்ன ஜியோவானி? உங்கள் கட்சிக்காரர்கள் அத்துமீறி தங்கியிருப்பது உண்மையென்று ஒப்புக் கொள்கிறார்களா?" என்றார்.

"இல்லை. பிள்ளைகளுக்குத் தேவையான காலம் வரை பெற்றோர் பராமரிப்பு தரவேண்டும் என்று இத்தாலிய குடும்ப உரிமைச் சட்டம் பிரிவு 16ல் தெளிவாகச் சொல்லியிருக்கிறது யுவர் ஆனரே. என் கட்சிக்காரர்கள் தங்களுக்கு பெற்றோர் பராமரிப்பு இன்னும் சில காலம் தேவை என்று நம்புகிறார்கள்.  இந்த சட்டப்பிரிவு பற்றி எதிர்கட்சி வக்கீல் படிக்கவில்லை போல யுவர் ஆனர்".

நீதிபதி ஸிமோனா வாயில் விரலை வைத்தபடி வக்கீல் கோமோவைப் பார்த்தார். 

வக்கீல் கோமோ, "உண்மை தான் யுவர் ஆனரே.  ஆனால் சட்டப்பிரிவு 16ல் தொடங்கும் குடும்ப உரிமையை 17, 18, 19 பிரிவுகள் வரம்பு மற்றும் உதாரணங்களோடு ஆண் பெண் பிள்ளைகள் இருவருக்குமான உரிமைகளை விளக்குகின்றன ஆனரே" என்றார். "குடும்ப உரிமை சட்டப் பிரிவுகள் 16, 17, 18, 19" எல்லாம் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும் யுவர் ஆனர்".

"19ல் என்ன போட்டிருக்கிறது?" என்றார் ஜியோவானி.

"சுபம்"னு போட்டிருக்கு என்றார் கோமோ.

சிரித்தார் ஸிமோனா. எடுத்தார் சுத்தியலை. போட்டார் மேஜையில் ஒரு போடு. "இரண்டு பிள்ளைகளும் வெட்கமில்லாமல் பெற்றோர் வீட்டில் காலம் காலமாக உட்கார்ந்தது போதாதென்று வீட்டு வேலை செய்யாமல் வாடகை தராமல் விதவிதமான சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிட்டுத் தொந்தரவு கொடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். பத்து வருட அபராதமாக வருடத்துக்கு தலா பத்தாயிரம் லிரா விதிக்கிறேன். அபராதத்துடன் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தலா ஆறு மாதம் பெற்றோர் வீட்டுத் தோட்ட வேலை செய்யுமாறு உத்தரவிடுகிறேன்" என்றார் நீதிபதி ஸிமோனா.

"என் கட்சிக்காரர்கள் உங்கள் தீர்ப்பை அப்பீல் செய்வார்கள் யுவர் ஆனர்" என்றார் ஜியோவானி.  அவர் கட்சிக்காரர் இருவரும் துடித்துக் குதித்தனர். "ஆமாம் சித்த்த்தீ.. விடமாட்டோம்.. உன் அக்காவுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லிட்டல்ல? விட மாட்டோம்".

"டேய்.. சித்தி கித்தியெல்லாம் கோர்ட்டுக்கு வெளில" என்றபடி அகன்றார் நீதிபதி ஸிமோனா.

= = = = = = =

80 கருத்துகள்:

  1. அரசியல் பிரமுகரா? அண்ணாமலையின் நடைப்பயணத்துக்குச் செல்ல ஆசை.

    சில பல மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் எஸ் வி சேகர் டிராமாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே அதிமுக பிரமுகர் புகழேந்தியைப் பார்த்தேன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அம்மா இல்லாதப்போ இப்படிப் பிரிந்து அதுமுகவை அழிக்கப் பார்க்கிறீர்களே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. தோசை மாவு புளித்துவிட்டால் (கொஞ்சம்தான் இருக்கும்), கோதுமை மாவு கலந்து கரைத்த மா தோசை மாதிரி வார்த்துச் சாப்பிட எனக்குப் பிடிக்கும். மி.பொடி அல்லது கெட்டித் தயிர் சூப்பர் காம்பினேஷன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிம்பிள். ஒரு முழுக்கரண்டி நெய்யை ஒரு அடி கனமான வாணலியில் ஊற்றிக் கொண்டு அதை அடுப்பில் வைத்துச் சூடு பண்ணவும். கடுகு, உ.ப.க.ப. தேவையானால் மு.ப. பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயப் பொடி எல்லாம் போட்டு அந்த நெய்யில் தாளித்துக் கொண்டு அதிலேயே ஒரு கிண்ணம் ரவை அல்லது புளித்த மாவின் தேவைக்கேற்ப ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். சிவக்க வறுபட்டதும் புளித்த மாவில் சேர்த்துக் கொண்டு தேவையான உப்புச் சேர்த்து விட்டு நன்கு கலக்கவும். கொத்துமல்லித் தழை சேர்க்கவும். ஒரு அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடரை அந்த மாவில் போட்டுக் கலந்து வைக்கவும். சுமார் அரை மணி கழித்து இட்லிப்பானையில் நீர் விட்டுக் கொதிக்க வைத்து இட்லித் தட்டுகளில் உங்கள் வழக்கப்படி துணி போட்டோ அல்லது எண்ணெய் தடவியோ வைத்துக் கொண்டு ரவை சேர்த்த புளித்த மாவுக் கலவையை அதில் விட்டு இட்லிகளாக வார்க்கவும். தொட்டுக்கத் தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, புளி, உப்பு சேர்த்த சட்னி அல்லது ஏதேனும் கொத்சு. கத்திரிக்காய், வெங்காயக் கொத்சும் நல்லா இருக்கும். சின்ன வெங்காயச் சட்னியும் நல்லா இருக்கும்.

      நீக்கு
    2. வாயால வடை சுடுவது பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் வாயால புளிச்ச இட்லி சுடுவதை தற்போது தான் பார்க்கிறேன். இப்படி சொன்னதை கொஞ்சம் படம்களுடன் ஒரு திங்கட் கிழமை பதிவாக்கியிருக்கலாம்.

      Jayakumar

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம் நம்பிக்கை வரலை இல்லையா? ஒரு முறை நீங்களே செய்து பார்க்கவும்,. நம்பிக்கை வரும். இப்போக் கொஞ்ச நாட்களாக நாங்க இரவில் மோர் சாதம் மட்டும் சாப்பிடுவதால் அரையல், கரையல் இல்லை. அப்படி அரைக்கும்போது மிஞ்சும் மாவில் அல்லது இதற்கென மாவை எடுத்துக் கொண்டு பண்ணிக் காட்டுகிறேன். ஆனால் எப்போனு எல்லாம் சொல்ல முடியாது. இந்த முறையில் ரவா இட்லி எங்க வீட்டில் என் மன்னி, தம்பி மனைவி ஆகியோரும் பண்ணுவாங்க.

      நீக்கு
  3. சமீபத்தில் ரசித்துப் படித்தது அப்பாதுரை தளத்தில் வயதான காதல் தம்பதியினர், உணவு செய்துபோட்டு அமெரிக்காவில் சர்வைவ் ஆகும் கதை. மிக நன்றாக இருந்தது.

    இதை நம்பி அப்பாதுரை தளத்துக்குக் கதைப் பதிவுகள் வாசிக்கச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. தொடர் கதையாக இருந்தால் கடைசிப் பகுதி இருக்கிறதா எனப் பாருங்கள். அந்தப் பதிவின் கடைசியில் கதை முடிகிறதா எனப் பாருங்கள். பிறகு வாசிக்க ஆரம்பியுங்கள். கதை முடிவு இருந்தால் ரசிக்கலாம். இல்லையென்றால், நல்லா எழுதும் இவருக்கு கதையை முடிக்கத் தெரியலையே, வாசகர் கர்ர்ர்ர்ர்க்குப் பயப்படுகிறாரோ என மனதுக்குள் கோப்ப்படலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இயல்பு, தொடர் கதையோ இல்லை சீசன் என்று போட்டு பல எபிசோடுகள் வரும் சீரியலோ... இரண்டு பகுதி படித்த/பார்த்த பிறகு முடிவுப் பகுதியைப் படித்து/பார்த்த பிறகுதான் தொடர்வேன்.

      நீக்கு
    2. அதனாலதான் தொடர்கதை என்று வந்தால் படிப்பதில்லை. முடிந்த பிறகுதான் படிப்பேன். படித்த பிறகு, டூ லேட் என்பதால் பின்னூட்டமிடுவதில்லை.

      நீக்கு
    3. அப்பாதுரை மேடைக்கு அழைக்கப்படுகிறார்!

      நீக்கு
  4. 40 வயதுக்கு மேலும் பெற்றோர் பராமரிப்பில்.... ம்ம் இதற்குப் பெயர் தண்டச் சோறா இல்லை இன்வெஸ்ட்மென்டா இல்லை பிற்காலத்தில் பார்த்துக்குவாங்க என்ற கேம்பிளிங்கா?

    பதிலளிநீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. 1) நான் அரசியல்வாதிகளை பார்ப்பது இல்லை.

    2) இதற்கும், எனக்கும் வெகுதூரம்.

    3) கவிஞர் நாகேந்திர பாரதி அவர்கள் எழுதிய கவிதை.

    பதிலளிநீக்கு
  7. /// யாரும் எங்களைக் கேள்விகள் கேட்கவில்லை என்பதால், ///

    அந்த அளவுக்கு இப்போது சூழ்நிலை நஹி..

    பதிலளிநீக்கு
  8. குடும்பப் பிரிவு 16,17,18...

    19 சுபம்..

    அடடா..

    அப்பாதுரை ஐயா அவர்களது பக்கம அருமை..

    பதிலளிநீக்கு
  9. 19..

    வெம்பி விடாத விடலைப் பருவத்தின் நிறைவு!..

    பதிலளிநீக்கு
  10. /// தோட்டத்துறை மந்திரி, எட்டாம் வகுப்பில் ///

    இந்த மாதிரியான இடியாப்ப சிக்கலில் நானும் சிக்கிக் கொண்டதுண்டு..

    பசுமை நிறைந்த நினைவுகள்..

    பதிலளிநீக்கு
  11. சமீபத்தில் அரசியல்வாதிகளை பார்கவில்லை.
    தோசைமாவு அளவாக செய்வதால் தீர்ந்து விடும்.

    என் பார்வையில் திரு.துரை செல்வராஜ் கதைகள் பிடிக்கும். Kgg, அப்பாத்துரை அவர்கள் பக்கம் ரசனை. நெல்லைத்தமிழன் கோவில் சுற்றுலா சிறப்பு ஸ்ரீராம் பக்கங்கள் காத்திரமானது.

    சிரித்து படிக்க ......
    யாரு ?......கிலர்ஜி.

    பதிலளிநீக்கு
  12. // என் பார்வையில் திரு.துரை செல்வராஜ் கதைகள் பிடிக்கும்.. ///

    ஆகா.. மிக்க மகிழ்ச்சி..
    நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  13. //புளித்துப் போன தோசை மாவை எப்படிப் பயன்படுத்துவீர்கள்? //

    குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் முன்பு போல மாவு புளித்து போவது இல்லை. இருந்தாலும் கடைசி(அடிமாவு) மாவில் பீட் ரூட் , காரட் , பச்சை மிளகாய், வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி தோசை செய்தால் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எல்லாம் பிங்க் தோசை என்று பிரியமாக சாப்பிடுவார்கள்.

    அடிமாவை வெங்காயம் , பச்சைமிளகாய் தேங்காய் பல், கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு பணியாரம் செய்யலாம்.

    முன்பு மைதா, வெள்ளை ரவை, கொஞ்சம் பச்சை அரிசி மாவு கலந்து ரவா தோசை செய்வேன். கோதுமை, மாவு, ராகி மாவு வெங்காயம் கலந்து தோசை செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ரவா தோசை நானும் பண்ணுவேன். மாவு இருக்கும் அளவைப் பொறுத்து ஊற வைத்த துபருப்போடு கோதுமை மாவைச் சேர்த்து அரைத்துப் புளித்த மாவில் கலந்து வெங்காயம் போட்டும் தோசை வார்க்கலாம். நான் பெரும்பாலும் பண்ணுவது ரவா இட்லி தான்.

      நீக்கு
    2. மாவு இன்னும் வைச்சுக்கணும்னால் அரைக்கிண்ணம் புழுங்கல் அரிசி+அரைக்கிண்ணம் பச்சரிசி+அரைக்கிண்ணம் உ.பருப்பு, கொஞ்சம் வெந்தயம் ஊற வைச்சு நன்கு அரைச்சு அந்தப் புளிச்ச மாவோடு சேர்த்து உப்புத் தேவையானதைப் போட்டுக் கலந்து இட்லிகளாகவோ, தோசைகளாகவோ பண்ணலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் அநேகமாகப் புளிச்ச மாவை வாங்கிப்பதே இல்லை. ஆகவே நாமே யோசிச்சு ஏதேனும் பண்ணித் தீர்த்துடலாம். இந்த மாவோடு பருப்புக் கலவையைச் சேர்த்துச் சீராளமாகவும் பண்ணலாம். இஃகி,இஃகி,இஃகி,

      நீக்கு
  14. சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த - மற்ற பதிவர்களின் பதிவு எது?//

    நான் பின் தொடர்பவர்கள் எல்லாம் ரசித்து படிப்பது போல பதிவு போடுபவர்கள்தான். சமீபத்தில் என்றால் நேற்று சகோ துரை செல்வராஜூ கதை மனதை தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நேற்று சகோ துரை செல்வராஜூ கதை மனதை தொட்டது.///

      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. KGG சார் பள்ளிக்கால நினைவுகளில் பகிர்ந்த

    லட்சுமணதாஸ் போல குரூப் லீடர் ஒருத்தி இருந்தாள் வகுப்பு ஆசிரியரிடம் நல்ல பேர் வாங்க சக மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வார். மாணவிகள் அந்த ஆசிரியருக்கு கடுவன் பூனை என்று பேர் கொடுத்து இருந்தார்கள்.


    அப்பாதுரை சார் பக்கத்தில் உள்ள தலைப்பு

    "தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு" என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது. நல்லதீர்ப்பை வழங்கி இருக்கிறார் நீதிபதி.

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரையின் கதை புதுமையாக இருக்கு. நாற்பது வயதுக்குப் பின்னும் பெற்றோர் பராமரிப்பா?

    நான் எல்லாப் பதிவுகளையுமே ரசித்துத் தான் படிக்கிறேன். இல்லாட்டிப் படிக்கப் பிடிக்காதே! அரசியல் வியாதிகள் யாரையும் பார்த்து வியாதியை வரவழைச்சுக்கலை.

    பதிலளிநீக்கு
  17. துரையின் இன்றைய பதிவுக்கு மதியத்துக்கு மேலிருந்து போக முடியலை. பாதுகாப்பு இல்லை எனவும் யாரோ உளவு பார்ப்பதாகவும் சொல்லுகிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திறந்துடுச்சே! போய்ப் பார்த்துப் படித்துக் கருத்தும் சொல்லிட்டேன்.

      நீக்கு
    2. சில சமயங்களில் ப்ளாகர் பிரச்சினை கொடுக்கிறது.

      நீக்கு
  18. ​புளிச்ச மாவு என்றவுடன் ஒரு பிரபல எழுத்தாளரின் அனுபவம் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  19. ஓட்டல் தொழில் பிராமணர்கள் கைகளில் மட்டும் இருந்தது உண்மையா? {எனக்குத் தெரிந்து அப்படிப் பார்த்தது இல்லை. சின்ன வயசிலேயே பிராமணர் அல்லாதோரின் ஓட்டல்களையும் பார்த்திருக்கேன்.} Next Wednesday question

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறத்தியாருக்கு உணவு வழங்குதல் என்பது தொன்மையானது..

      உனவகம் என்பது தொழில் என்று ஆனதும் பணம் படைத்த வேறு சிலரும் இதில் ஈடுபட்டனர்..

      எனினும் நேர்மையும் நியாயமும் நிறைந்தே இருந்தது..

      இன்றைக்கு மாதிரி முகமூடித்தனம் இல்லை..

      நீக்கு
  20. ஓட்டல் நடத்திப் பிரபலமானவர்கள், பணம் சேர்த்தவர்கள் உண்டா? கொஞ்ச நாட்கள் ஓட்டல்கள் ஓடும். பின்னர் பெரும்பாலும் டல் அடிக்கும் இல்லையா?
    சென்னையில் எந்த ஓட்டலில் சாப்பாடு/டிஃபன் நன்றாக இருக்கும்?

    நக்ஷத்திர உணவு விடுதிகளுக்குப் போயிருக்கீங்களா? அங்கே உள்ள உணவின் தரத்துக்கும் சாதாரண ஓட்டல்களின் உணவுத் தரத்துக்கும் வேறுபாடு கண்டது உண்டா?

    ஓட்டலுக்குப் போனால் நீங்கள் முதலில் எதை ஆர்டர் செய்வீர்கள்? அல்லது பெரும்பாலும் இட்லி, வடை, சட்னி, சாம்பார் தானா?

    அடையார் ஆனந்த பவன் ஓட்டலில் சாப்பிட்டது உண்டா? இப்போ எல்லோரும் அங்கே போகக் கூடாது எனச் சொல்லுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

    பதிலளிநீக்கு
  21. பாம்பு பல்லி எதை வேணுமாலும் ஆக்கிப் போடு..
    விரும்பியவர் சாப்டுட்டு போகட்டும்..

    ஒரே உணவகத்தில் சைவம் அசைவம் என்பது அராஜகம்..

    புரிந்து கொண்டால் நல்லது..

    கும்பகோணத்தில் சில உணவகங்கள் திருவிழாக் காலத்தில் சைவ உணவகமாக மாறிக் கொள்வது தெரியுமா?..

    பதிலளிநீக்கு
  22. சில ஊர்களில் நேரிடையாகவே பீப் பிரியாணி விற்கப்படுகின்றது..

    இன்னும் சில ஊர்களில் ஒன்றுக்கு ஒன்று என்று இலவச பிரியாணி கொடுக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு

  23. இந்து குடும்பங்களின் அனைத்து சுப காரியங்களுக்கும் பிரியாணி என்றே விளம்பரங்கள்..

    எந்தெந்த ஊர்களில் என்று இங்கே சொல்ல இயலாது..

    பதிலளிநீக்கு
  24. 1 . அப்பீட்டு

    2. நிறைய செய்வதுண்டு. இங்கு எழுதினா பெரிய பதிவாகிடும்!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. கௌ அண்ணா உங்கள் பள்ளி அனுபவங்கள் சுவாரச்Yிம்

    எங்கள் பள்ளியிலும் இப்படி மந்திரி என்றெல்லாம் சொல்லாமல் லீடர்/தலைவர் என்ற பெயரில் செய்ததுண்டு. குறிப்பாகப் பள்ளி வளாகம் சுத்தமாக இருக்கான்னு கண் காணிக்கும் பொறுப்பு. எல்லா வகுப்புகளிலும் சாக்பீஸ் எல்லாம் இருக்கா என்ற கண்காணிப்பு அது வேறு ஒருவர், எல்லா வகுப்பு லீடர்களும் ஒழுங்கா இருக்காங்களான்னு!!!, விளையாட்டு ரூமில் எல்லாம் ஒழுங்கா இருக்கா என்று செக் செய்வது, நூலகப் பொறுப்பு என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சில பள்ளிகளில் மாணவர் மன்றம், மந்திரி சபை என்றெல்லாம் அந்த 1960 காலங்களில் வைத்திருந்தது மிகவும் உபயோகமாக இருந்தது.

      நீக்கு
  26. அப்பாதுரை ஜியின் பக்கம் வாசித்து சிரித்துவிட்டேன். சிரிப்பு திருடன் மாதிரி சிரிப்பு கோர்ட்!!! பின்ன எதிர்தரப்பு வக்கீலும் நீதிபதியும் வாய்க்கும் வயிற்றுக்கும் வேலை கொடுத்துக்கிட்டே!!!! தின்னு கொண்டே....கடைசில அந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் சித்தி!!! ஹாஹாஹா....சித்தீயீயiiீயீ ந்னு ஒரு ஷணம் ஆடிப்போய்ட்டேன்!!! ஆஆஆ அங்கும் இந்த சீரியலான்னு நினைச்சுப்புட்டேன்!!!! நீதிபதி அவங்க சித்தி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நான் சந்தித்த அரசியல்வாதி மாஃபா பாண்டியராஜன். ஆனால் சமீபத்தில் அல்ல, 2019 மத்யமர் இரண்டாவது ஆண்டு விழாவின் பொழுது. முதல் நாள் மத்யமர் விழாவில் பார்த்தேன். அடுத்த நாள் ஆன்மீக பொருள்காட்சியில் நான் மாதா அமிர்தானந்தமயி ஸ்டாலில் வாலண்டியராக பணியாற்றினேன். அங்கும் மாஃபா பாண்டியராஜன் வந்திருந்தார். அந்த ஸ்டாலில் ஏதோ வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் சென்றார். என் அக்கா பெண் அவரிடம்,"ஸார், நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு பணத்தை வாங்கி விட்டாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகள் வழி - தனி வழி! தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  28. முன்பெல்லாம் புளித்த தோசை மாவோடு,கோதுமை மாவு, மாதா மாவு, ரவை எல்லாம் சேர்த்து, இஞ்சி,ப.மிளகாய்,கருவேப்பிலை எல்லாம் போட்டு கரைத்த தோசையாக செய்வேன். இப்போது பேத்திக்கு குழிப்பணியாரம் பிடிப்பதால் குழிப்பணியாரம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழிப் பணியாரம் செய்முறையை - திங்கட்கிழமை பதிவாக எழுதி அனுப்பவும். நன்றி.

      நீக்கு
  29. மற்ற பதிவர்களின் படைப்புகளை படிப்பது வெகுவாக குறைந்து விட்டது. கௌதமன் அவர்களின் பால்ய நினைவுகள் ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன. பதிவுலகில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.. எல்லோரும் ஹி ஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! தன்யனானேன் ! நன்றி. (ஒருவேளை ஐஸாக இருக்குமோ!)

      நீக்கு
  30. 1) சமீபத்தில் நீங்கள் பார்த்த அரசியல் பிரமுகர் யார்? எங்கே, எப்போது?

    உள்ளூர் பிரமுகரா, வெளியூர் பிரமுகரான?

    நம்ம ஊர் - அப் - கம்மிங் விஜய் (சரிதானே)

    வெளியூர் - ஜோ பைடன்

    இருவரையும் தொலைக்காட்சியில் தான்.

    2) புளித்துப் போன தோசை மாவை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

    அதற்குத்தான் ஊத்தாப்பம் என்றொதொரு அறிய கண்டுபிடிப்பு இருக்கே.

    3) சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த - மற்ற பதிவர்களின் பதிவு எது?

    a திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களது ஓடத்துறைத் தெரு.

    b எங்கள் blog ல் - மெதுவாய் பையை தோளில் மாட்டி.. மெட்ரோ ரயிலில் இடம்பிடித்து... and .லட்சுமணதாஸ் - நீ பாஸ் பாஸ் !

    பதிலளிநீக்கு
  31. 1) சமீபத்தில் நீங்கள் பார்த்த அரசியல் பிரமுகர் யார்? எங்கே, எப்போது?

    உள்ளூர் பிரமுகரா, வெளியூர் பிரமுகரான?

    நம்ம ஊர் - அப் - கம்மிங் விஜய் (சரிதானே)

    வெளியூர் - ஜோ பைடன்

    இருவரையும் தொலைக்காட்சியில் தான்.

    2) புளித்துப் போன தோசை மாவை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

    அதற்குத்தான் ஊத்தாப்பம் என்றொதொரு அறிய கண்டுபிடிப்பு இருக்கே.

    3) சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த - மற்ற பதிவர்களின் பதிவு எது?

    a திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களது ஓடத்துறைத் தெரு.

    b எங்கள் blog ல் - மெதுவாய் பையை தோளில் மாட்டி.. மெட்ரோ ரயிலில் இடம்பிடித்து... and .லட்சுமணதாஸ் - நீ பாஸ் பாஸ் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!