ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 05 நெல்லைத்தமிழன்

 


சென்றவாரம், முதலாம் பராந்தகச் சோழனுக்குப் பிறகு அவனது மூத்த மகன் இராஜாதித்தன் தக்கோலப் போரில் இறந்ததால், இளைய மகன் கண்டராதித்தன் அரசு பட்ட த்திற்கு வந்தது பற்றிப் படித்தோம்.

இவன் சிவநேசச் செல்வன். தில்லையம்பதியிடம் மனதைச் செலுத்தியிருந்தாலும் மற்றச் சமயங்களை வெறுத்தவனில்லை. தான் அமைத்த கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்தில் (நான்கு வேதங்களில் புலமை உள்ள அந்தணர்களுக்காக அமைக்கப்பட்ட கிராமம்), திருமாலுக்கு ஒரு கோவில் எடுப்பித்தான். தென்னார்காடு மாவட்டத்தில் பள்ளிச்சந்தல் என்ற ஊரில் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்ற சமணர் கோவிலையும் எடுப்பித்தான். கண்டராதித்தனின் மூத்த மனைவி நாராயணி, அவன் பட்டத்திற்கு வருவதற்கு முன்னரே மறைந்துவிட்டாள்இளைய மனைவி, மழவராயர் குலத்தைச் சார்ந்த செம்பியன் மாதேவி. இவர்களுக்கு நெடுங்காலம் குழந்தை இல்லாமல், இறுதியில் ஒரு தவமைந்தன் பிறந்தான். அவனுக்கு மதுராந்தகன் மற்றும் உத்தமச் சோழன் என்ற பெயர்கள் உண்டு. மகன் சிறு குழந்தை என்பதால், தான் பட்டத்துக்கு வந்தவுடன், தன் தம்பியான அரிஞ்சயனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான் கண்டராதித்த சோழன் (954ல்)

இப்போது சோழர்கள் தலைமுறையை ஒரு முறை பார்த்துவிடலாம். இல்லையென்றால் யார் யாருக்கு மகன், யாருக்கு அப்பா என்பதே நமக்குக் குழப்பமாகிவிடும்.

கண்டராதித்த சோழன் மறைந்ததும் அரிஞ்சய சோழன் பரகேசரி என்ற பெயருடன் அரசனானான்ஆட்சிக்கு வந்ததும், வாணர் குலத்துடன் பெண் கொடுத்து உறவினனாக்கி, இராட்டிரகூடருக்கு எதிராகப் போர் புரிந்தான். இதன் மூலம் இழந்த இடங்களைத் திரும்பப் பெறமுடியும் என்ற எண்ணம்தான். ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே வட ஆற்காடு பகுதியில் ஆற்றூரில் இறந்தான். இவனை ஆற்றூர் துஞ்சிய தேவர்என்று கல்வெட்டுகள் குறிக்கும். பிற்காலச் சோழர்களில் மிகக் குறுகிய காலம் அரசனாக இருந்தவன் இவன்.

அரிஞ்சயன் காலத்திற்குப் பிறகு, இராஜகேசரி என்ற பட்டத்துடன் இரண்டாம் பராந்தகன் முடிசூட்டிக்கொண்டான். இவன் மிக அழகிய உருவம் கொண்டிருந்ததால், சுந்தரச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.

சுந்தரச் சோழன் பட்டத்திற்கு வந்தபோது பாண்டிய நாட்டை இராஜசிம்ம பாண்டியன் மகனான வீரபாண்டியன் அரசாண்டு கொண்டிருந்தான்சுந்தரச் சோழன் பட்டத்திற்கு வரும் முன்னரே வீரபாண்டியன் ஒரு போரில் சோழர்குல இளவரசன் ஒருவனைக் கொன்றிருந்தான். அதனால் சோழன் தலைகொண்ட அரசன் வீரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான் (கல்வெட்டுகளில்). சுந்தரச் சோழர் ஆட்சிக்கு வந்த பிறகு சேவூர் என்ற இடத்தில் பாண்டியனுடன் பொருது அவனைத் தோற்றோடச் செய்தார். தோற்ற வீரபாண்டியன் ஒளிந்துகொண்டான். இந்த சேவூர் போர் 962ல் நடந்திருக்கலாம்இந்தப் போரில் ஈழ மன்னன்  தன் பெரும்படையை பாண்டியனுக்கு உதவ அனுப்பியிருந்ததால் கோபம் கொண்ட சுந்தரச் சோழன், போரின் முடிவுக்குப் பிறகு சோழப் படைத்தலைவனுடன் பெரும் படையை ஈழத்துக்குப் போர் புரிய அனுப்பினான். அந்தப் போரில் சோழர் படை வெற்றிபெறவில்லை.   ஒளிந்துகொண்ட வீரபாண்டியன், பிறகு மீண்டு வந்து மதுரையை ஆண்டான். இது அவனது 18, 19ம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பாண்டிய நாட்டைத் தன் வசப்படுத்தவேண்டும் என்று நினைத்த சுந்தரச் சோழன், தன் மகனான இரண்டாம் ஆதித்த கரிகாலன் தலைமையில் படையை அனுப்பினான் வயதில் மிக இளையவனான ஆதித்த கரிகாலன் பெரும் போர் புரிந்து வீரபாண்டியனை போரில் கொன்றான்அதனால் கல்வெட்டுகளில் அவன், ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி வர்மன்என்று குறிப்பிடப்படுகிறான்

சுந்தரச் சோழன் 962ல், தன் மகனான ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். அதன் பிறகுதான் அவன் தலைமையில் வீரபாண்டியனுடன் பொருத பெரும் படை சென்றது.

சுந்தரச் சோழன் ஆட்சிக் காலத்தில் மக்கள் செழிப்புற்று வாழ்ந்தனர். நாடும் அமைதியாக இருந்ததுசுந்தரச் சோழன் ஆட்சி புரிந்துவந்த  இடம் பழையாறை. அங்குதான் சோழர் அரண்மனை இருந்ததுஇந்த பழையாறை என்பது, தற்போது ஒரு சிற்றூராக உள்ளது. அதனைச் சுற்றியுள்ள முழையூர், பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம், சோழன் மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், …. தாராசுரம், நாதன் கோவில் என்று அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம் போன்ற பல சிற்றூர்களை உள்ளடக்கிய பெரு நகரமாக இருந்ததுபழையாறை மாநகரம், 7ம் நூற்றாண்டில் பழையாறை எனவும், 8ம் நூற்றாண்டில் நந்திபுரம் என்றும், 9,10 நூற்றாண்டுகளில் பழையாறை நந்திபுரம் எனவும், 11ம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும் 12ம் நூற்றாண்டில் இராசராசபுரம் எனவும் வழங்கப்பட்டுவந்ததை கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் அறியலாம்.

வரலாறு ரொம்பவே அதிகமாகிவிட்டதோஇதற்குப் பின் வரும் வரலாறுகள் உங்களில் பலருக்குத் தெரிந்ததுதான்.

அதைப் பார்ப்பதற்கு முன்பு, தாராசுரம் கோவிலின் படங்களைப் பார்த்துவிடலாம்.







ஒரு பக்கம் குதிரை தேரை இழுப்பதுபோல இருக்கிறது.

இன்னொரு பக்கம் யானை இழுக்கும் தேர். 

உடைக்கப்பட்ட சிற்பங்களை மீட்டெடுத்திருக்கிறார்களோ?


கோவில் உள்ளிருந்து மதிலின் தோற்றம். சிறிது சிறிது இடைவெளியில் நந்திதேவர் சிற்பங்கள்.



அழகிய பெண் சிற்பங்கள். 

நடனமாடும் மங்கைகள்



மூன்று வாரங்களாக தாராசுரம் கோவிலின் முன் பகுதியையே பார்த்துக்-கொண்டிருக்கிறோம். ஏன் இந்தக் கோவில், யுனெஸ்கோவால் பாரம்பர்யக் கட்டிடக் கலை என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறதுகாரணத்தைப் புரிந்துகொள்ள கோவிலின் எல்லாப் பகுதிகளையும் காணவேண்டாமா? எத்தனை வாரங்கள் ஆனால்தான் என்ன?

 (தொடரும்) 

7 கருத்துகள்:

  1. ​ஜோக்குகள் தாம் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்று கூறுவது போல் உண்மையிலயே பெரிய வரலாறு பாடமாக அமைந்து விட்டது இன்றைய பதிவு. விவரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும் தெரிவித்திருக்கலாம்.

    படங்கள் சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகளை எடுத்துக்காட்டுவது சிறப்பு. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்... எனக்குமே தோன்றியது ரொம்ப அதிகமாக வரலாறை விவரித்துவிட்டோமோ என்று. சோழர் வரலாறு பற்றி பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் அனுமானங்களும் உண்டு. நன்றி

      நீக்கு
  2. சுந்தரச்சோழர் என்றாலே அவரும் இளையவராக, இளைஞனாக இளமை பலத்துடன் இருந்திருப்பார் என்கிற எண்ணமே மனதில் வரமாட்டேன் என்கிறது பாருங்கள்.  படுக்கையில் இருக்கும் வயதான நோயாளியாகத்தான் மனதில் உருவம் தோன்றுகிறது.  

    நம் மனதில் முதலில் ஏற்பட்ட பிம்பங்கள் மாறுவதில்லை என்பதற்கு இது சாட்சி.  அதனால்தான் இன்று கூட நேரு, சாஸ்திரி பற்றி பேசினால் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது!!

    பதிலளிநீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சோழர்களின் வரலாறு படிக்க வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி தெளிவாக சொல்வதற்கும் ஒரு திறமை வேண்டும். அது தங்களிடம் நிறையவே உள்ளது. பாராட்டுக்கள்.

    தாராசுரம் கோவில் படங்கள் எப்போதும் போல் தங்கள் கைவண்ணத்தில் அழகு. இன்னும் ஒவ்வொன்றையும் பெரிதாக்கி பார்க்கவில்லை. பிறகு பார்த்து ரசித்து விட்டு வருகிறேன். மீண்டும் ஒரு முறை வரலாற்று பாடத்தையும் கவனமாக படித்து விட்டு படங்களையும், சிற்பங்களையும் ரசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பு..
    வரலாற்றை மீண்டும் படித்தேன்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!