சனி, 8 பிப்ரவரி, 2025

குப்பைக்குப் போய் திரும்பி வந்த நகை மற்றும் நான் படிச்ச கதை

 

திருச்சி: இரு ரயில் பயணியர் சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்தில், ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டதால், 10 லட்சம் ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் உரியவருக்கு கிடைத்தது.  சென்னையில் இருந்து திருச்சிக்கு, ஜன., 29ல் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி காசிநாதன் பயணித்தார். அவர், திருச்சி ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது, தன் சூட்கேசை யாரோ மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது.  அவர் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். துரிதமாக செயல்பட்ட போலீசார், காசிநாதன் வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பட்டியலை எடுத்து, ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு விசாரித்தனர்.  இதில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜகோபால், சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது. அவரை நேரில் வரவழைத்த போலீசார், இரு சூட்கேஸ்களையும் திறந்து, யாருடையது என உறுதி செய்தனர்.  பின், அவரவர் சூட்கேஸ்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதில், ராஜகோபால் சூட்கேசில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், பட்டுப்புடவைகள் இருந்தன. அவற்றை நேர்மையாக ஒப்படைத்த காசிநாதனை, ரயில்வே போலீசார் பாராட்டினர். துரித நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீசாரையும் அனைவரும் பாராட்டினர்.

=======================================================================================

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


'ரிஷப் பண்ட் அறக்கட்டளை' என்னும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்க உள்ளதாக பண்ட் அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


வெற்றியையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டப் பாடமாகும். தற்போது இதனை மக்களின் முகத்தில் கொண்டு வருவதே எனது இலக்கு. திருப்பி கொடுப்பதைப் பற்றி நான் நிறைய சிந்தித்தேன். அதைச் செய்வதற்கு இதுவே சரியான நேரம். என்னுடைய வணிக வருமானத்தில் 10 சதவீத தொகையை ரிஷப் பண்ட் அறக்கட்டளைக்கு அர்ப்பணிக்கிறேன். இது என்னுடைய கனவு திட்டம்" என்று கூறினார்.

==============================================================================================================

 

நான் (JKC) படிச்ச கதை


கொசு செய்த கொலை

 கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

ஆசிரியர் இலங்கைத் தமிழர். யாழ்ப்பாணம் நல்லூர் பிறந்த ஊர். பிறந்த வருடம் 1939. இறந்தது 2022. அவருடைய வாக்குகளில் இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) தொலை தொடர்பு ஸ்தாபனத்தில் சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி.ஓய்வு பெற்றவன்.”

“குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவர். இவரது படைப்புகள் சிலவற்றை https://freetamilebooks.com/ தளத்தில் இருந்து பெறலாம். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அவரைப்பற்றி மேலும் அறிய குலேந்திரன் சொடுக்கவும்.

கதையின்சுட்டி >>>கொசுக்கொலை <<<<

முன்னுரை

போன். குலேந்திரன் நிறைய எழுதியிருக்கிறார். சுஜாதாவைப் பின்பற்றி சில பல science fiction கதைகளும் எழுதியிருக்கிறார். அத்தகைய கதை ஒன்று தான் “கொசு செய்த கொலை”. சின்ன உதாரணம: 5 வருடங்களுக்கு முன் விளையாட்டு விமான பொம்மைகள்  (drones) போர்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைத்திருப்போமா? இன்று அது மிக முக்கிய ஆயுதம். அது போல் கொசுவும் கொலை செய்யுமா என்பவர்களுக்கு விடை இந்த கதை. தலைப்பினால் கவரப்பட்டு தான் இக்கதையை எடுத்தேன், இங்கே  பகிர்கிறேன்.

ஆசிரியரது 110 கதைகள் https://www.sirukathaigal.com/ தளத்தில் உள்ளன

கொசு செய்த கொலை

கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். துப்பறியும் சாம்பு என்ற பட்டப் பெயரால் பலரால் அழைக்கப்படும் அவர் மென் பொருள் துறையில் பட்டம் பெற்றும், ஆர்வம் காரணமாக போலீசில் சேர்ந்தார். அவரின் தொழில் நுட்ப அறிவை போலீஸ் பாவித்தது. பல கேசுகளை தன் மென் பொருள் அறிவைப் பாவித்து கண்டு பிடித்தவர் சாம்பு. அதில் ஓன்று தகவல் திருடன் தாமஸின் கேஸ். தாமஸ் பல வங்கிகளில் கொள்ளையடித்தவன்.

ஆனால் சில நாட்களாக தகவல் தேடல் என்ற Data Search பிரபல நிறுவனத்தின் பிரதான பரிபாலன அதிகாரி சுந்தரின் மரணம் சாம்புவுக்கு புதிராக இருந்தது.

தன் மேசையில் இருந்த லப் டாப் கம்பூட்டருக்கு முன் அமர்ந்து சுந்தர் கொலை கேசின் விபரத்தையும் அதோடு தொடர்பு உள்ள படங்களையும் பார்த்தார் சாம்பு. .என்ன சுந்தரின் அழகிய ஆபிஸ். பல தொழில் நுட்ப கருவிகளோடு காட்சி கொடுத்தது. ஆபிஸ் அறையின் ஒரத்தில் விசிறி போன்ற இலைகளோடு மரம் ஓன்று இருந்தது. அவரின் மேசையில் மூன்று குரங்குகளின் சிலை. அறையின் சுவரில் அழகிய இயற்கை காட்சியின் படம். அறையின் ஜன்னலைத் திறந்தால் வீசும் கடல் காற்றின் சுகம்,  நல்ல இடத்தில் தனது நிறுவனத்தின் மூன்று மாடி கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார். அவரின் நிறுவனத்தில் சுமார் இருநூறு பேர் வேலை செய்தார்கள். அவரின், பாதுகாப்பு உள்ள பிரத்தியேக அறையில் எப்படி அவர் கொலை செய்யப்பட்டார்? அவரின் அறைக்குள் வருவோர் போவோரை கவனிக்க ஒரு சிசிடிவி கமரா. துப்பாக்கி குண்டு காயங்களோ, வெட்டு காயங்களோ அவர் உடலில் இல்லை. இருதய பாதிப்பினால் சுந்தர் மரணிக்கவில்லை, டாக்டரின் பரிசோதனை அறிக்கை சொன்னது.

உடலில் சயனைட் விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் உண்டு என்று அறிக்கை சொன்னது. அப்போ அவர் விஷம் குடித்து இறந்தாரா? இருக்கவே இருக்காது. அது தற்கொலை அல்ல. ஒரு மணிக்கு முன் தனது செக்கரட்டரி ராதாவுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை தன் வாயால் சொல்லி, அதை தயாரித்து கொண்டு வரும்படி தனக்கு சொன்னதாக ராதா சாம்புவுக்கு சொன்னாள். ராதா கடிதத்தோடு சுந்தரின் அறைக்குள் வந்த போது அவர் மேசையில் தலையை வைத்தபடியே இறந்து கிடந்ததைக் கண்டதாக சொன்னாள். அவருக்கு முன் அவர் குடித்து முடிக்காத கோப்பி கப்பில் மேசையில் இருந்தது.

சுந்தரின் மரணத்தை பற்றி செய்தி போலீசுக்கு கிடைத்தவுடன் போலீஸ் கொமிசனர் உடனே சாம்புவை இன்ஸ்பெக்டர் ராஜனுடன் போய் விசாரிக்க அனுப்பினார்.

சுந்தரின் அறைக்குள் போன சாம்புவின் கழுகுக் கண்கள் எல்லாப் பொருட்களயும் ஊடுருவி பார்த்து. மேசையில் மிகுதி இருந்த கப் கோப்பியை பரிசோதனைக்கு அனுப்பினார். பரிசோதனை முடிவின் படி அந்தக் கோப்பியில் சயனைட் விஷம் கலந்து இருந்தாக ரிப்போர்ட் வந்தது.

சுந்தருக்கு கோப்பி கொண்டு வந்து கொடுத்த பியோன் முத்துசாமி சுந்தரிடம் பல ஆண்டுகளாக வேலை செய்பவன். அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். அவன் தினமும் நான்கு தடவை கோப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. கோப்பியை தானே தயாரித்து கொண்டு வந்து சுந்தருக்கு முத்துசாமி கொடுப்பான்.

அன்று காலை சுந்தரை பிஸ்னஸ் விசயமாக சந்தித்த நால்வரிடமும் சாம்பு குறுக்கு விசாரணை செய்தார்

அதில் வெளிநாட்டு இருவரில் ஒருவர் அமெரிக்கர் ஆத்தர். மற்றவர் கனேடியன் ஹட்சன். அவர்கள் இருவரும் பிஸ்னஸ் விசயமாக இரு தடவைகள் சுந்தரை வந்து சந்தித்தாக ராதா சாம்புவுக்கு சொன்னாள். மற்றவர்கள் இருவரில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த மின் பொருள் நிறுவனம் ஒன்றின் உதவி தலைவர், சுந்தரின் நண்பன் காந்தன். நான்காவது மனிதர் புது டெல்கி பாதுகாப்பு அமைச்சின் தொழில் நுட்ப பகுதியின் அதிகாரி மோகன் ராவ்.

இவர்களை குறுக்கு விசாரணையின் பின் அவர்கள் சுந்தரை சந்திக்க வந்தது பிஸ்னஸ் விசயமாக என்பதை அறிந்தார். அவர்களை சுந்தருக்கு ஏற்கனவே தெரியும் என்று ராதா சொன்னாள். அவர்களோடு சுந்தருக்கு ஏது வித பகையும் இல்லை என்பது விசாரணையின் போது சாம்புவுக்கு தெரியவந்தது

சுந்தரின் செக்கரட்டரி ராதா பல காலம் அவரிடம் வேலை செய்பவள். அதோடு அவரின் மனைவியின் சினேகிதி. நம்பிகையானவள். சுந்தருக்கு பண விசயத்திலோ குடும்பத்திலோ பிரச்சனைகள் இருக்கவில்லை. அவர் தற்கொலை செய்ய போதிய காரணம் இருக்கவில்லை. அதனால் சுந்தர் நிச்சயம் சொற்ப நேரத்தில் கொலை செய்யப்பட்டார். அவரை சந்தித்தவர்கள் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் அவரோடு பேசி இருப்பார்கள் என்று ராதா சொன்னாள்

****

சூடான ஆட்டுப் பால் கலந்த கோப்பியைக் கொன்டுவந்து மேசையில் வைத்தான் சாம்புவின் பியோன் மாரி. அதை எடுத்து ஒரு தடவை சுவைத்துவிட்டு தன் சிந்தனையை ஓடவிட்டார். அந்த சமயம் எங்கிருந்தோ ரீங்காரம் இட்டவாரே, சாம்புவின் தலையை சில தடவைகள் சுற்றி அவருக்கு எரிச்சலைக் கொடுத்தபின் அவரது காப்பியில் அவரோடு பங்கு கொள்ளும் நோக்கத்தோடு கோப்பையின் விளிம்பில் போய் அமர்ந்தது ஒரு கொசு.

சாம்புவுக்கு சொசுவைக் கண்டாலே வெறுப்பு. அதனால் அந்த கொசு தன் முன் கப்பில் இருந்த கோப்பியை சுவைக்க முன் அதை அடித்து கொன்று ஒரு திசு பேப்பரில் சுற்றி பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார்.

கொலைகளை கண்டுபிடிக்கும் தானே கோப்பியை பசியால் சுவைக்க வந்த அந்த கொசுவைக் கொலை செய்து விட்டோமே என்று அவர் மனம் சஞ்சலப்பட்டது. திடீர் என்று அவர் மனதில் ஓன்று தோன்றியது. ஏன் ஒரு கொசு சுந்தரை கொலை செய்திருக்கக் கூடாது? அதன் கூரிய ஊசி போன்ற அழகிய வாயால் விஷத்தை அவர் குடிக்க வைத்த கோப்பியில் கலந்து இருக்கக் கூடாது.? அவரின் மூளையில் பல தரப்பட்ட சிந்தனைகள். தோன்றின.

உடனே திரும்பவும் சுந்தரின் ஆபிஸ் அறைக்கு ராஜனுடன் போய் இருவரும் மேசைக்கு பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியை ஆராய்ந்தார்கள்.  அரை வாசி கடித்த ஆப்பிலும். சில சிகரெட் துண்டுகளும் கிழிந்த பேப்பர்களோடு, மடித்த திசு காகிதம் ஓன்று இருந்தது. அந்த காகிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது அதுக்குள் ஒரு கொசு கிடந்தது. அது உண்மை கொசு போல் சாம்புவுக்கு தெரியவில்லை. கையில் எடுத்து பார்த்தார். அந்த கொசு உருவத்தில் சற்று பெரிதாக மிகவும் கூரிய ஊசி போன்ற வாயைக் கொண்டதாக இருந்தது. இது நிட்சயம் மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோட் கொசு என்ற முடிவுக்கு சாம்பு வர அதிக நேரம் எடுக்கவில்லை. அறையில் இருந்த கமராவில் பதிவாகி இருந்த படத்தை பார்த்தபோது அதிலொரு கை ஒரு சிறு பொருளை மேசையில் இருந்த சுந்தரின் குடும்ப படத்துக்குப் பின்னால் வைப்பது மட்டும் தெரிந்து அந்த கைகளை மட்டுமே காண முடிந்தது, அக்கை வெள்ளை நிறக் கைகள் இல்லை அந்த பொருளை வைத்தவர் முகம் படத்தில் தெரியவில்லை.

சாம்பு திசு பேப்பரில் இருந்து எடுத்த ரோபோட் கொசுவை பரிசோதித்தார். தனக்குள் சிரித்தார்.

“ஏன் சேர் சிரிக்கிறீர்கள்”?

“ராஜன் சுந்தரை கொலை செய்தவன் சரியான புத்திசாலி".

“எதைக் கொண்டு சொல்லுகிறீர்கள்”?

“இந்த கொசு போன்ற உருவத்தை பார் இது ஒரு மின் பொருளின் மூலம் இயங்கும் ரோபோட் கொசு. இதை ரிமோட்டில் இயக்கலாம். இந்த கொசுவை உருவாக்கியவன் தொழில் நுட்பம் தெரிந்த நவீன மின் பொருள் அறிவு உள்ள ஒருவன்"

“இந்த கொசு போன்ற பொருளை வைத்து எப்படி கொலை செய்து இருக்க முடியும் சேர்”?

“இது தான் சூத்திரம். இந்த ரிமோட் கொன்றோல் கோசுக்குள் ஒரு மின் பொருள் ப்ரோகிராமே உண்டு. கொசுவை வெளியில் இருந்து இயக்கி நினைத்ததை செய்விக்க முடியும். இந்த கொசுக்குள் சயனைட் விஷம் இருக்கிறது. இந்த கொசு, இட்ட கட்டளைப் படி கோப்பியில் விஷத்தை கக்கி இருக்கிறது, சுந்தர் இது நிஜ கொசு என்று நினைத்து தன் கையால் அடித்து கொன்று விட்டதாக எண்ணி திசு பேப்பரில் மடித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டிருக்கிறார். அதற்கு முன் கொசு கண்சிமிட்டும் நேரத்தில் கோப்பியில் சுந்தருக்கு தெரியாமல் விஷத்தை கலந்து விட்டது. அதன் பின்னரே சுந்தர் அதை அடித்து எறிந்து இருக்குறார். கொசு விஷத்தை கக்கும் போது அவர் காணாமல் இருந்திருக்கலாம் . அதன் பின் நடந்த முடிவு தெரிந்ததே” சாம்பு சொன்னார்.

“சேர் இந்த கொசுவுக்குள் என்ன இருகிறது என்று பார்ப்போமா”?

“அதை தொடாதே ராஜன். அதுக்குள் இன்னும் கொஞ்சம் சயனைட் விஷம் இருக்கலாம். இதை போலீஸ் பரிசோதனை சாலைக்கு எடுத்து சென்று உள்ளே இருக்கும் மின் பொருள் ப்ரோகிராமை கண்டு பிடிக்கிறேன்”

“சேர் கொலையை செய்தவன் படு கில்லாடி”

“சிசிடிவி படத்தின் படி கொலை செய்தவன் கைகள் ஒரு வெளிநாடு வெள்ளையன் கைகள் இல்லை. இது நம் நாட்டு ஒருவனின் கை. அந்த கையில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்தியா ராஜன்"

“ஒம் சேர். ஆறு விரல்கள் கொண்ட மென்பொருள் ப்ரோகிராமிங் தெரிந்த ஒருவன் தான் கொலைகாரன்."

அதுவே என் முடிவும் ராஜன். அதுவும் மென் பொருள் அறிவில் திறமை உள்ள ஒருவன் இது பிஸ்னஸ் போட்டி காரணமாக பொறாமையினால் நடந்தகொலை" சாம்பு சொன்னார்.

அந்த சமயம் ராதா அறைக்குள் வந்தாள்:

“ராதா கொலை நடந்த அன்று சுந்தரை சந்திக்க வந்த இரு ஆசியர்களில் எவருக்காவது ஒரு கையில் ஆறு விரல்கள் உண்டா ? சற்று சிந்தித்து சொல்லு."

"தெரியும் சார் சுந்தர் சாரின் நண்பர் காந்தன். அவரின் ஒரு கையில் ஆறு விரல்கள. அவருக்கும் சுந்தருக்கும் படிப்பில் எபோதும் போட்டி என்று சுந்தர் எனக்கு சொன்னது நினைவு இருக்கு. அவரும் சுந்தரைப் போல் மென் பொருள் துறையில் மிகவும் திறமைசாலி பெங்களூரில் உள்ள இன்போ சொப்ட் ( Info Soft) தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி தலைவர். அவர் பெயர் காந்தன். அவரின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பதை நான் கண்டேன் அவர் சுந்தரோடு ஒன்றாக படித்தவர். நண்பர் என்று எனக்குத் தெரியும்.  அந்த கொம்பனியும் எங்கள் கொம்பனியோடு கனடாவில் ஒரு பெரிய கொம்பனிக்கு மென்பொருள் ஓன்று தயாரிக்க போட்டி இட்டு வெற்றி பெறவில்லை. எங்களுக்கு அந்த புரோஜக்ட் கிடைத்ததுக்கு சுந்தருக்கு வாழ்த்து தெரிவிக்க அன்று வந்தார்” என்றாள் ராதா,

“ராதா தகவலுக்கு நன்றி. நான் சுந்தரை கொலை செய்தவரை கண்டு பிடித்து விட்டேன். இந்த கொலைக்கு முக்கிய காரணம் பிசினஸ்சில் ஏற்பட்ட போட்டியும், பொறாமையும்.  தனது மென் பொருள் அறிவைப் பாவித்து இந்த கொலையை செய்திருக்கிறார் காந்தன்.” என்றார் சாம்பு

“என்னால் நம்ப முடியவில்லை சேர்” என்றாள் ராதா.

பின்னுரை

கதை நடக்கக்கூடிய ஒன்று என்றாலும் சில சந்தேகத்துக்குரிய சந்தேகங்கள் எனக்குத் தோன்றியது, அவற்றை பின்னூட்டத்தில் கூறுகிறேன்.

மேலே உள்ள கொசு படத்தைப் பார்த்தீர்களா? இந்தக் கதை அந்த ஆங்கில புத்தகத்தின் தழுவல் என்று தோன்றுகிறது.

 

9 கருத்துகள்:


  1. நான் சந்தேகத்துக்குரிய சந்தேகம் என்று பின்னுரையில் குறிப்பிட்டதின் விளக்கம்.

    சந்தேகம் இரண்டு வகை. நியாயமானவை, மற்றும் நியாயமற்றவை. எனக்கு ஏற்பட்ட சந்தேகம் நியாயமானதா அல்லாததா என்பதே சந்தேகம் என்பதால் அந்த சந்தேகத்தை சந்தேகத்திற்குரிய சந்தேகம் என்று குறிப்பிட்டேன். சரி சந்தேகம் என்ன என்று பார்ப்போம்.

    குற்றம் நடந்ததும், குற்ற விசாரணை நடப்பதுவும் சென்னையில். கதை ஏன் இலங்கைத் தமிழில்?
    சுந்தர் அறையில் குப்பைத்தொட்டி 3 நாட்களாகவா காலி செய்யப்படாமல் இருந்தது?
    சாம்பு அவருடைய அறையில் லேப்டாப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இரண்டாவ்து இயந்திர கொசு எப்படி அங்கே வந்தது? எதற்காக வந்தது ?.
    கொசு ஆளை விட்டு காபி கோப்பையை தேர்ந்தெடுப்பது எப்படி? IOT மூலமா? IOT பற்றி ஆசிரியருக்கு முன்பே தெரியுமா? சாதாரண ரிமோட் கொன்றோல் போறாது, அவை infra red கதிர்கள் மூலம் இயங்குபவை.

    குண்டக்க மன்டக்க பதில்கள்.

    கதை இலங்கைப் பத்திரிக்கையில் வெளி வந்தது. ஆகவே அப்படி அமைந்தது.
    Crime சீன் என்ற முறையில் சுந்தரின் அறை seal செய்யப்பட்டிருக்கலாம்.
    சாம்பு காந்தனை விசாரணைக்காக அவருடைய அலுவலகத்திற்கு விளித்திருந்தார் அல்லவா. அப்போது காந்தன் இயந்திரக் கொசுவை அங்கு வைத்திருக்கலாம்.
    நான்காவது கேள்விக்கு பதில் கேள்வியிலேயே இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பே ரிமோட் கண்ட்ரோல் விளையாட்டு ஹெலிகொப்டர் இல் பையன் விளையாடியது தெரியாதா`? 2.4 Gz பப்ளிக் wifi. கல்யாண போட்டோவையே drone கேமரா மூலம் எடுக்கிறாங்களாம். பின்னே இந்த கொசு கண்ட்ரோல் எல்லாம் ஜூ ஜூ பி.
    IOT : internet of things.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தர் அறையில் குப்பைத்தொட்டி 3 நாட்களாகவா காலி செய்யப்படாமல் இருந்தது?//

      நீங்களே கீழ பதில் சொல்லிட்டீங்க. ஆனா முதல் நாள் ஆராயும் போது அதைக் கூட பார்த்திருக்க மாட்டாங்களா? டைம், நாள் எல்லாம் எதுவும் விவரமாக இல்லை. இது ஒரு திரில்லருக்கு மிக முக்கியம். Forensic தடவியல் நிபுணர் வந்திருக்கமாட்டாங்களா? முதல் நாளே!!!

      //சுந்தரின் அறைக்குள் போன சாம்புவின் கழுகுக் கண்கள் எல்லாப் பொருட்களயும் ஊடுருவி பார்த்து. மேசையில் மிகுதி இருந்த கப் கோப்பியை பரிசோதனைக்கு அனுப்பினார்.//

      குப்பைத் தொட்டியை கழுகுக் கண்கள் பார்க்கவில்லை!

      கதையில் நிறைய அறிவியல், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் உள்ளன. இன்னும் விரிவாக அழகாக எழுதியிருக்கலாம். கொசு காபிக்குப் போவதை விட அவரைக் கடித்தாலே போதுமே!!!!

      கீதா

      நீக்கு
  2. தமிழ்நாட்டைக் குறித்த ஒரு கீழ் மன நிலை ஒரு சில கேரளத்தாருக்கு உண்டு. மகேஷ் தமிழர் என்பது மனதை மகிழ்ச்சிப்படுத்தியது.

    முதல் செய்தியில் நேர்மையாக ஒப்படைத்த காசிநாதன் அவர்களையும் பாராட்டுவோம்.

    இரண்டுமே ஒரே போன்ற நேர்மையைச் சொல்லும் நேர்மறைச் செய்திகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ரிஷப் பண்ட் ற்கும் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கதை ஓகே. பெரிய அளவிலான துப்பறியும் என்பது இல்லை. கொசு ரோபோ.....இது சில வருடங்களுக்கு முன்னால் கொசுவை ஒழிக்க முடியாதுன்னு அதை விரட்ட ஒரு கொசு போன்ற ரோபோ பறக்க விடலாம் கொசுவர்த்தி போல வைப்ரேஷன்ல அது அப்சார்ப் பண்ணிக்கறதா... அப்படி இப்படினு ஏஐ காரங்க யோசிச்சாங்க....அது அப்புறம் என்னாச்சுன்னு தெரியலை. கூடவே எங்க வீட்டுல இப்படி கொசுவினால் கொலை கூட செய்ய முடியும்...ஏஐ வந்தான்னு....சொல்லி வேண்டாம் அந்த ப்ராஜெக்ட் னு பேச்சுவார்த்தைல முடிஞ்சு போச்சு. தெரியல அப்புறம் என்னாச்சுன்னு.

    கதைல சில லூப் ஹோல்ஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதாசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அந்த நடையிலேயே எழுதியிருக்கிறார் கதை நடக்கும் இடம் சென்னை என்றாலும்....பரவாயில்லை. இப்ப நாம கோயம்புத்தூர்ல, நாரோயில்ல, இல்லைனா திருனெல்வேலில நடக்கறத அந்த வட்டார வழக்கில் எழுதாமல் சில சமயம் நார்மல் நடையில் எழுதுவதுண்டே அப்படி எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் நடந்த ஒன்றை அவர் தன் மொழியில் விவரிப்பதாக.

    சிசிடிவி கமரா//

    இதை கடைசியில் கவனிக்கிறார்கள்.

    சென்னையில் ஆட்டுப்பாலில் காபியா?!!

    அந்த அறையை அன்றே அலசி ஆராய்ந்திருக்க வேண்டாமோ?

    //உடனே திரும்பவும் சுந்தரின் ஆபிஸ் அறைக்கு ராஜனுடன் போய் இருவரும் மேசைக்கு பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியை ஆராய்ந்தார்கள்.//

    லேட்!

    அந்த மூன்றுபேர் வந்தார்கள் என்றதுமே சிசிடிவி கேமராவை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்க வேண்டும்.

    இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம். திரில்லர் என்றால் ஒவ்வொரு செகண்டும் திக் திக் என்று இருக்க வேண்டும் நம் எதிர்பார்ப்பைத் தூண்ட வேண்டும்.

    அந்த மூவரில் ஒருவர்தான் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.

    ஜெ கே அண்ணா தன் உரையில் சொல்லிருப்பது போல் அந்த ஆங்கிலப் புத்தகம் வாசித்து தோன்றிய ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம். அது பரவாயில்லை

    ஆனால் த்ரில்லர் மொறு மொறுவென்று இல்லாமல் சப்பென்று நமுத்துப் போன பட்டாசு அப்பளம் போல இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இன்னும் கொஞ்சம் அறிவியலை அப்டேட் செய்து (அதான் இணையத்தில் நிறைய கொட்டிக் கிடக்கிறதே) எழுதியிருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜெ கே அண்ணா சொல்லிருக்காப்ல 'கதை நடக்க கூடிய ஒன்றுதான்' . ஆனால் அதை சரியா திட்டமிடலைனா சொதப்பும் ப்ளான்!! இப்படி கதை போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பாஸிடிவ் செய்திகள் அனைத்து நல்ல மனிதர்களை பற்றி சொல்கிறது. வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!