செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

சிறுகதை : वह कौन है? - ஸ்ரீராம்

 நீண்டு நிமிர்ந்திருந்த அந்தத் தெருவின் கடைசியில் - அல்லது முதலில் என்றும் சொல்லலாம்.  அது நீங்கள் எந்தத் திசையிலிருந்து பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது - அவன் உதயமானான். 

அவனுக்கு முன்னால் ஓடிவந்த தெரு நாய் ஒன்று, இந்தத் தெரு திரும்பியதும் தயங்கி நின்று தெருவை ஒரு நீண்ட பார்வை பார்த்து விட்டு திரும்பி வேறு பாதைக்கு ஓடி விட்டது.

மதியம் இரண்டரை மணி இருக்கலாம்.  பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து வீட்டிலிருப்பவர்கள் மதிய உணவை முடித்து தொலைக்காட்சியின் அழுகைத் தொடர்களிலோ, அல்லது நித்திரையின் வசப்படும் நேரமாகவோ இருக்கலாம்.  
                                                                                    
அவன் கொஞ்சம் தயங்கி அந்தத் தெருவின் கடைசி வரை பார்வையை ஓட்டினான்.
 
'ஜில்லோ' என்றிருக்கும் இது போன்றதொரு தெருவை அவன் எதிர்பார்க்கவில்லையோ .என்னவோ..
 
இருபுறமும் அடர்த்தியாய் மரங்கள்.  இருபுறமும் சுற்றுச் சுவர்களுக்குள் அடங்கிய பெரிய பெரிய பங்களாக்கள்.  குப்பைகள் இல்லாத சாலை.  நடைபாதை ஒரே சீராக அமைக்கப்பட்டு அது அந்தத் தெருவுக்கு இருபுறமும் எல்லை வகுத்தது போலிருந்தது. 
திறந்திருந்த ஒரு பெருங்கதவின் வழியே  வந்தது ஒரு மூன்று சக்கர சைக்கிள்.  அதில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்க, வாசல் சிமெண்ட் சரிவில் வேகமாக இறங்கியது வண்டி.   வேகமாக அதை நோக்கி நடக்கத் தயாராகும் முன்பு, ஒரு நடுத்தர வயதுப் பெண் சட்டென வெளிப்பட்டு, ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சைக்கிளை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.  கதவு மூடிக் கொண்டது.

மறுபடியும் தெரு வெறிச் என்று ஆனது.  

ஆனால் ஒரு ஆள் கூட இல்லாத அந்தத் தெருவின் அமைதி அவனைத் தேக்கியிருக்கலாம்.  சாதாரணமாகக் கண்ணில் தென்படும் தெரு நாய் ஒன்று கூட கண்ணில் படவில்லை என்பதையும் கவனித்தான்.  அதே சமயம் ஒவ்வொரு வீட்டினுள்ளும் உயர் ரக நாய்கள் இருக்கலாம் என்பதற்கு சந்தேகம் ஏதும் இல்லாத வகையில் சில வீடுகளிலிருந்து அடர்குரலில் சில நாய்களில் குரல்கள் விட்டு விட்டு ஒலித்தன.

யாரும் இல்லை என்று அவன் நினைத்திருந்தது தவறு என்பதை அவன் சீக்கிரமே உணருவான்.  மேலேயிருந்து கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நான் சொல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் உங்கள் கற்பனையை ஒரு அறுபது அல்லது எழுபது வருடங்களுக்குச் செப்பனிட வேண்டும்!

அவன் அந்தக் கோடியில் உதயமானது முதலே பாண்டியனின் பார்வையில் அவன் இருந்தான்.  அவனது நடையின் தயக்கம் பாண்டியனை உஷார் படுத்தியது.  அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  ஆனால் பாண்டியன் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது வருபவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால் நன்றாக அடர்ந்திருந்த மரங்களின் அடர்வில் இருந்த ஒரு கூண்டுக்குள் எப்போதும் அமர்ந்திருக்கும் பாண்டியன், சோம்பல் முறித்தபடி அப்போதுதான் வெளியில் வந்து அங்கு இருந்த ஒரு மரத்தினடியில் நின்றிருந்தான்.  கையில் எடுத்த பீடியை பற்ற வைக்காமல் வாயில் வைத்த பீடியை எடுக்காமல், இடது கையில் உரசத் தயாராக தீப்பெட்டியும், வலது கையில் தீக்குச்சியுமாக நின்று இவனைப் பார்த்துக் கொண்டிருந்தான், மறைவாய் இருந்தபோதிலும் அந்த இடத்தின் அமைப்பினால் அந்தத் தெருவின் முழு அமைப்பையும் அங்கிருந்தே அவனால் பார்க்க முடிந்தது.  வருபவனால்தான் பாண்டியனைப் பார்க்க முடியாமல் மரம் மறைத்தது.  


பாண்டியன் - ஒரு செக்யூரிட்டி.

வருபவன் எதிரில் யாராவது வருகிறார்களா என்று தேடுகிறானா, அல்லது வரக்கூடாது என்கிற வேண்டுதலில் வருகிறானா என்று பாண்டியனுக்கு யோசனையாக இருந்தது.

அவன் கையில் ஒரு சிறு பை இருந்தது. 
 
ஒவ்வொரு வீட்டையும் அவன் அளவெடுத்துக் கொண்டே வருவது போலத் தோன்றியது.

நான்கைந்து வீடுகள் தள்ளி வந்த நிலையில் ஒரு வீட்டிலிருந்து கதவை ஒரு கையால் திறந்தபடி, தனது இரு சக்கர வாகனத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தாள் ஒரு பேரிளம்பெண்.  வண்டியை வெளியில் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டவள், கதவை மூடித் தாழிட்டாள். 

பாண்டியனின் உடலில் செல்கள் 'உஷார்... உஷார்' என்று செய்தியனுப்பின.  பீடியைப் பாக்கெட்டில் வைத்து, தீப்பெட்டியில் தீக்குச்சியை வைத்து அதையும் கால்சராய் பாக்கீட்டில் போட்டான்.

உள்ளே யாரிடமோ வேற்று மொழியில், - அநேகமாக மராத்தியாக இருக்கலாம் - ஏதோ சொல்லியபடி சாலையில் இறங்கியவள், பையுடன் வந்து கொண்டிருந்த புதியவனைக் கண்டு ஒரு நொடி, ஒரு நொடி மட்டும்தான், தயங்கியவள், இவனைப் பார்க்காதது போல வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறிப் போனாள்.

அவளைக் கண்டு அவன் நடை சற்றே தயங்கியிருந்தாலும், நிற்கவில்லை.  ஆனால் அவன் நடையில் ஏன் இந்தத் தயக்கம் என்றுதான் பாண்டியனுக்குப் புரியவில்லை.

பாண்டியனின் உடலும் இறுக்கத்திலிருந்து சற்று தளர்ந்திருந்தது.  ஆயினும் எச்சரிக்கையாய் வருபவனைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

சில வீடுகளின் கதவு அரைவாசி திறந்திருக்க,  பெரும்பாலான வீடுகளின் கதவுகள் மூடி இருந்தன.

கொஞ்சம் அருகில் வந்து விட்ட அவன் பார்வையில் இப்போது பாண்டியன் நின்றிருந்தது தெரிந்தது.  அந்த வீட்டை ஓரப் பார்வை பார்த்த அவன் இவனைக் கண்டதும் சற்றே தயங்கினான்.  அவன் முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது.

பின்னர் தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டவனாய், பாண்டியனை நோக்கி வந்தான்.  அருகில் வரும்போதே  கால்சராய்ப்  பைக்குள் கைவிட்டான்.

அவன் கை கால்சராய்ப் பாக்கெட்டுக்குள் சென்றதை பார்த்த பாண்டியன், எச்சரிக்கையாக இரண்டடி பின்னால் நகர்ந்து அதிலிருந்து என்ன எடுக்கப் போகிறான் என்று ஒரு வினாடி திகிலடைந்தான்.   ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான். 

"இன்னா வோணும் ஒனக்கு? இன்னாத்தப் பார்க்கறே நீயி?" என்றான் கரகரப்பாக, உரக்க.  

இவ்வளவு அருகில் வந்தவனிடம் ஏன் இவ்வளவு உரக்கப் பேசுகிறோம் என்று பாண்டியனுக்கே தோன்றியது.  அவனுடைய அந்த ஒரு வினாடி பயம்தான் இந்த உரத்த குரலுக்கு காரணம் என்பது அவனுக்கும் புரிந்தது.
 
அவன் பதில் சொல்லாமல் இன்னும் பாண்டியனை நெருங்கி அருகில் வந்தான்.  அவன் கை மெல்ல பாக்கெட்டுக்குள் எதையோ கவனமாகத் தேடுவது தெரிந்தது.

பாண்டியனின் கண்கள் பாதி எச்சரிக்கை, பாதி ஆர்வத்துடன் கவனித்தவாறிருந்தன.

அவன் கை வெளியே வந்தபோது அவன் கையில் கசங்கலாக மடிக்கப்பட்ட ஒரு காகிதம் இருந்தது.

அதைக் கொண்டு வந்து பாண்டியன் கையில் தந்த அவன் 

" "भाई! आप कृपया मुझे बता सकते हैं कि  यह घ्र्र कहा है  ?   என்றான்.

அதை வாங்கிப் பார்த்த பாண்டியன் கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தையே உற்றுப் பார்த்தான்.  பின்னர் சொன்னான்.

"இன்னா கர்மம் எளுதி இருக்குன்னு தெர்ல...  எளுதப் படிக்கத் தெரிஞ்சாத்தானே...   ஆனா அண்டர்லைன்லாம் பண்ணியிருக்கானுவோ..  அதைப் பாத்தா..  ரொம்ப ஷ்ட்ராங்காச் சொல்லியிருக்காங்கன்னு தெரியுது" என்று பேப்பரை அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.

அவன் வைத்திருந்த பையை வாங்கிப் பார்த்து அதில் ஆயுதம் எதுவும் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டான்.

"நா கூர்க்காதான்.  ஆனா தமிளு..  நீ பேசற பாஸை தெர்ல..   ஜாவ்...  ஜாவ்..." 

56 கருத்துகள்:

  1. ​இல்லாத கற்பனை. உங்களுடைய தரத்துக்கு ஏற்ப இல்லை. "ஹிந்தி தெரியாது போடா" என்ற ஒரு வாக்கியம் மாத்திரம் கதையை உண்டாக்காது.
    இரண்டு: கூர்க்காக்கள் நேபால் வாசிகள். அவர்களுடைய மொழி நேபாளி.
    சென்னையில் வேண்டுமானால் வாட்ச்மென் எல்லோரும் கூர்க்கா என்று அடையாளம் செய்யப்படலாம். தற்போது கூர்க்காக்கள் காவல்காரர்களாக இல்லை.

    பொக்கிச ஒரு பக்க கதை ஒன்றை எடுத்து போட்டிருக்கலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்..   நன்றி, வெளிப்படையாக சொன்னதற்கு.

      ஃபுல்டாஸ் போட்டிருக்கிறீர்கள்.  இருங்கள் டிஃபன்ஸ் வைக்கிறேன்!

      ஒரே மாதிரி இருக்க வேண்டாமே என்றுதான் மாறுதலுக்கு...  மேலும் இங்கு அவ்வப்போது நானும், அடிக்கடி செல்வாண்ணாவும் மட்டுமே கதை தருகிறோம்.  வேறு யாரும் அனுப்புவதில்லை.  நீங்கள் கூட ஒரு கதை முயற்சிக்கலாம்.

      இது சும்மா த்ரில்லர் மாதிரி தொடங்கி, என்னவோ செய்யப்போகிறான், யார் அவன் என்பது போல வந்து அட்ரஸ் கேட்கிறான் என்பதோடு, அதைக் கையில்  வாங்கியவனுக்கு ஹிந்தி தெரியவில்லை, எதுவுமே படிக்கத்தெரியாது  என்பது சின்ன சப், மிகச்சிறிய புன்னகையை வரவழைக்கும் முயற்சி!  

      கூர்க்கா யார், அவன் பேசும் மொழி என்ன என்றெல்லாம் படிக்காத பாண்டியனுக்கு தெரியுமா என்ன?!!

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா நீங்க சொல்லிருக்கறது சரிதான்.....ஆனா பொதுவாகவே இப்ப செக்யூரிட்டியாக இருப்பவங்களையும் கூர்கான்னு சொல்வது வழக்கில் ஆகிவிட்டது.

      ஸ்ரீராம், நிஜமா நான் அனுப்பறதே இல்லை. ஸாரி சொன்னாக் கூடத் தப்புதான். ஆனா எனக்கு மனம் ஒத்துழைக்க மறுக்குது. நான் இருப்பதை எழுதி முடிக்க நினைக்கற போது எல்லாம் ஏதாச்சும் ஒரு வேலை வந்து தடையாகிவிடுகிறது. கொஞ்சம் தனிப்பட்ட வாசிப்பு, ப்ளாக், அப்புறம் என் உடல்நிலையில் கவனம் இப்படி ஓடிவிடுகிறது ஒரு நாள்.....

      கீதா

      நீக்கு
    3. புரிகிறது...

      ரெண்டு மூணு கதை சீக்கிரம் எழுதி அனுப்புங்க.. ரெடி ஒன்,, டூ.. த்ரீ....

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது.அந்த சாலையின் அமைதியில் ஏதோ சம்பவம் நடக்கப் போகிறதோ என்ற திகிலை வரிக்கு வரி உண்டாக்கியது நல்ல கற்பனை மிகுந்த வரிகள். பொருத்தமான அந்த மரங்கள் அடர்ந்த படத்தையும் ரசித்தேன்.

    கடைசியில் அவன் என்ன சொல்கிறான் என்பது எனக்கும் புரியவில்லை. தனக்கும் வேலை ஏதாவது வேண்டுமென கேட்பதற்காக சிபாரிசு கடிதத்துடன் வந்துள்ளான் என நினைக்கிறேன். அது அந்த ஹிந்தி எழுத படிக்க தெரியாத வாட்ச்மேனுக்கு புரியவில்லை.

    மொழிகள் பலதும் தெரியாவிடில் கஸ்டந்தான் என்பதை கதை உணர்த்துகிறது.

    கதையில் நாயகனின் நடையோடு பீதியை ஏற்படுத்தியவாறு தந்து எழுதிய தங்களது எழுத்து நடையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. அந்தத் திகில், அந்த சஸ்பென்ஸ்தான் வேணும்!

      நீக்கு
  4. கதையின் நடை, ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க வைத்து, சப் என்று முடிந்துவிட்டது.

    சப்பை மேட்டர் சிறுகதைனு சொல்லிடலாம், ஆனால் என்ன ஆகும் என்று கடைசி பத்திவரை யோசிக்க வைத்தது.

    அது சரி.. தில்லியிலும் பாஜக ஆட்சிக்கு வந்தபின் எபியில் இந்தி வருகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை குமுதம் பாணி ஒரு பக்க கதை மாடல் என்று கூட சொல்லலாம். பயங்கர பில்டப், சப் இப்படி...!

      நன்றி நெல்லை.

      //தில்லியிலும் பாஜக ஆட்சிக்கு வந்தபின் எபியில் இந்தி வருகிறதோ?//

      என்ன.. தில்லியில் பாஜக ஆட்சியா? ஆம் ஆத்மி என்ன ஆச்சு?

      நீக்கு
    2. நல்ல வேளை.. பாஜகவா? அப்படீன்னாக்க? காங்கிரஸ் தோத்துடுச்சா என்றெல்லாம் கேட்கவில்லை.

      குமுத்த்தில் நிறைய இந்த மாதிரி கதைகள் படித்திருக்கிறேன். நானும் எழுதணும்னு பார்க்கிறேன்.. வணங்கமாட்டேன் என்கிறது

      நீக்கு
    3. இரண்டு பூர்வாஞ்சல் வாசிகள் டில்லி MLA ஆகியிருக்கிறார்கள். (BJP)

      நீக்கு
    4. // நானும் எழுதணும்னு பார்க்கிறேன்.. வணங்கமாட்டேன் என்கிறது //

      இதை.. இதை.. இதைத்தான் எதிர்பார்த்தேன். எழுதுங்க... அட்லீஸ்ட் அதாவது இந்தக் அக்கதையின் வெற்றியாக இருக்கட்டும், இல்லை JKC ஸார்?

      நீக்கு
    5. ​நெல்லை சார் ஒரு layout and photo expert.

      நீக்கு
    6. கதை எழுத மாட்டார், முடியாது என்கிறீர்களா?

      நீக்கு
    7. சவாலை சந்திப்பார், நெல்லை. அவர் சகல கலா வல்ல சோழன்.

      நீக்கு
    8. இந்தக் கதையில் வரும் பாண்டியனா!

      நீக்கு
    9. இல்லை.. அவர் திருநெல்வேலிப் பாண்டியன்!

      ரவிதாசன் மாதிரி அவரை எப்படி சோழன் ஆக்குகிறீர்கள்?

      நீக்கு
    10. ஜெ கே அண்ணா,

      நெல்லை நல்லா கதை எழுதுவார்.

      ஸ்ரீராம், நெல்லை சொல்லிருப்பது போல் எனக்கு நிறைய மண்டைக்குள்ள மோதுது. ஆனா மனம் எழுத வணங்க மாட்டேங்குது.

      ஒவ்வொரு நாளும் நினைச்சு நினைச்சு அப்படியே போகுது.

      கீதா

      நீக்கு
    11. என்னையும் செல்வாண்ணாவையும் தவிர வேற யார் இங்கே வர்றீங்க.. சொல்லுங்க... சமீபத்துல பானு அக்கா ஒருவாட்டி வந்தாங்க...

      நீக்கு
  5. ​எடுத்துப் போடும் கதைகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. சின்ன புராணக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், முல்லா கதைகள், ஜென் கதைகள், பீர்பால் கதைகள், குறள் நெறிக்கதைகள் என்று வாரம் ஒன்று போடலாம். இல்லாவிடில் குமுதத்தில் வந்த ஒரு பக்க கதைகள் போன்றவற்றை போடலாம்.

    புராணக் கதைகளில் பல ஆஞ்சி கதைகளும் அறியப்படாதவை. ஆஞ்சி பழம் என்று சூரியனை பிடித்தது போன்ற கதைகள், ஒரு ஆஞ்சி சிரிஸ் ஆரம்பியுங்களேன்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அம்புலிமாமா மாதிரி ஆகிவிடும்! தெனாலி, முல்லா, ஜென் எல்லாமும் அவ்வண்ணமே.. நீங்கள் படித்துப் படித்து அலுத்துப் போனவையாய் இருக்கும்.

      என் எண்ணம், யாரும் அதிகம் படிக்கப் படாத சிறுகதையாயிருக்க வேண்டும்.

      குமுதத்தின் கோபாலி கதையை போடலாம் என்று நினைத்தேன். அப்புறம் வேண்டாம் என்று விட்டு விட்டேன்!!! ஹிஹிஹி...


      அதுசரி, நீங்கள் கூட ஒரு சிறுகதை எழுதலாம் என்று கேட்டேனே...

      நீக்கு
  6. ஸ்ரீராம், கதை எழுதிய விதம் நல்லாருக்கு. ஒரு சஸ்பென்ஸோடு ஒவ்வொரு வரியிலும் எதையோ எதிர்பார்த்து, இந்த சீட் நுனியில் உட்கார்ந்து நகம் கடித்துன்னு ......நகர்ந்து நகர்த்திச் செல்லும் நல்ல நடை. அந்த ஆள் நல்லாவே நடை போட்டிருக்கிறான்.

    சரி கடைசில ஸ்ரீராம், அட்ரஸ் கேட்பதாக முடித்துவிடுவாரோ, அப்படி இல்லமால் இருந்தா நல்லாருக்குமோ என்று பாதிக்கு மேல அந்த யூகம் எழுத் தொடங்கி, கடைசில என் யூகம் மேச் ஆகிடுச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இதுவும் ஒரு உத்திதான், கதை எழுதுவதில். வாசகரைக் கட்டிப் போட்டுக் கடைசில இம்புட்டுத்தானான்னு தன்னையே 'பல்பு வாங்கிக்கினியா' ன்னு ஒரு சின்ன சிரிப்பு ஹிஹிஹின்னு!!! ஸ்டைல் கதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சொன்னேனே... இது குமுதம் ஒரு பக்க பாணி!

      நீக்கு
    2. ஓஹோ குமுதம் பாணியா...

      மேல இன்னும் போகலை...பார்க்கிறேன்

      கீதா

      நீக்கு
  8. // பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து// பாதி வீடுகள்(!) அந்த ஊரில் உள்ளனவா! (ஸ்ரீ கோபிக்கக் கூடாது! )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் இருந்தால் முழு வீடு. அதாவது முழுமை பெற்ற வீடு. பாதிபேர் ஆபீஸ் சென்று விட்டால் பாதி வீடுதான்!

      எப்படி.. சமாளித்து விட்டேனா?!

      நீக்கு
  9. // 'ஜில்லோ' என்றிருக்கும் இது போன்றதொரு தெருவை // ஜில்லோ என்றால் என்ன? அருஞ்சொற்பொருள் கூறவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மெட்றாஸ் பாஷை. யாருமே இல்லாமல் வெறிச்சுனு இருப்பது என்று சொல்லலாம். ஜீவி ஸார் வராத குறையை கேஜிஜி தீர்த்து வைக்கிறார்!!!

      நீக்கு
    2. நான் நிறைய மரங்கள் அடர்ந்து "ஜில்லோ" "ஜில்லென இருப்பதால் அப்படியாக்கும் என நினைத்தேன். (படமும் அதை அப்படித்தான் காட்டுகிறது.) இது மெட்ராஸ் பாஷை என இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.:))

      நீக்கு
    3. அச்சச்சோ...   அர்த்தமே மாறி விடுகிறதே....

      நீக்கு
  10. சற்று தூரம் நடந்து வந்த அந்த ஆள், தன்னுடைய மொபைலை எடுத்து ஒரு எண்ணுக்கு ஃபோன் செய்தான். " சார் - அந்த பெண் கடத்தல் கேஸில், ஃபோன் உரையாடல்களில் பதிவாகியிருந்த ஒரு குரல் யாருடையது என்று கண்டுபிடித்துவிட்டேன். நான் இப்போ இருக்கின்ற இடத்தின் லைவ் லொகேஷன் லிங்க் அனுப்புகிறேன். உடனே இங்கே ஆட்களை அனுப்பி, காக்கி உடை அணிந்து இருக்கும் ஆளைப் பிடித்து ஸ்டேஷன்க்கு கொண்டுபோய் முட்டிக்கு முட்டி தட்டி, ஒரு மாவுக்கட்டுப் போட்டீங்கன்னா - அவனிடமிருந்து பல தகவல்களை வாங்கி, குற்றவாளியைக் கைது பண்ணிவிடலாம்! "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மட்டுமல்ல, இன்னும் வேறு பல விதங்களிலும் இதை முடிக்கலாம்.

      நீக்கு
    2. கௌ அண்ணா, ஆஹா! நல்லாருக்கே. நான் கிட்டத்தட்ட இதே போல கருத்தைக் கொடுக்க வந்தேன்.

      அவன் அந்த செக்யூரிட்டி ஆளிடம் பேசும் போது அவன் கண்டு பிடிப்பதாக 'அந்தக் குட்டிப் பெண்ணின் கேஸில் நாம தேடும் நபர்களில் ஒருத்தன் இங்க இருக்கான்னு, இவன தூக்கினா இன்னும் எத்தனை பேர்ன்றது தெரிஞ்சுரும்" னு......அவன்கிட்ட அட்ரஸ் காட்டிக் கேட்டதும் தள்ளி வந்து டிபார்ட்மெண்டிற்கு அனுப்புவதாக.

      கீதா

      நீக்கு
    3. // இது மட்டுமல்ல, இன்னும் வேறு பல விதங்களிலும் இதை முடிக்கலாம். //

      'என்ன செக்யுரிட்டியோ... மாங்காய் மடையன்... பையை வாங்கிப் பார்க்கிறான்.. அவ்வளவு வெளிப்படையாகவா எடுத்து வருவோம்? இவனை ஏமாற்றுவது ரொம்ப ஈஸி'.. இவனை மாதிரி ஆளுங்கதான் நமக்கும் வேணும் என்று ஹிந்தியில் எண்ணியபடியே இடுப்பில் இருந்த பிச்சுவா, முதுகில் இருந்த அரிவாள், பேண்ட் பாக்கெட்டில் இருந்த எந்த பூட்டையும் திறக்கும் சாவிக்கொத்துகளை தொட்டுப் பார்த்தபடி நடந்தான் அவன்.

      "சரியான ஏரியாடா மச்சி... நம்ம ராஜஸ்தான் தோஸ்த்துக்கெல்லாம் சொல்லி வரவழைச்சுட வேண்டியதுதான்!"

      அவன் நடையில் லேசான துள்ளல் தெரிந்தது இப்போது.

      நீக்கு
    4. ஆகா... இந்தக்கதை ரொம்பவே நன்றாக உள்ளது. இப்படி கூட எழுதியிருக்கலாம் .

      நீக்கு
    5. இன்னும் விதம் விதமாக ரகம்ரகமாக எழுத வாய்ப்புகள் இருக்கின்றன கமலா அக்கா.

      நீக்கு
  11. ஸ்ரீராம், 'ஜில்லோ' ன்னா யாருமில்லாத வெறிச்சுன்னு இருக்கும் தெரு அல்லது இடத்திற்கு உங்களின் சொல்லா!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாமுங்கோ.. காலகாலமாக மெட்றாஸில் வழங்கி வரும் சொல்.

      நீக்கு
    2. ஓ அப்படியா!! நமக்குச்சென்னை பாஷை இந்த அளவுக்குத் தெரியலீங்கோ!

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. ஜிலோன்னு - இதை சுஜாதா அடிக்கடி உபயோகிப்பார்

    பதிலளிநீக்கு
  14. கதை அமைதித் தெருவில் நடந்து செல்கிறது படிக்கும்போது எதுவோ நடக்கப்போவது போல் இருந்தது.....
    இறுதியில்விரைவாக முடிந்து விட்டது போல் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்க கதைதானே.. அவ்வளவுதான்... வளர்க்க நினைத்தால் விதம் விதமாக வளர்க்கலாம். நன்றி மாதேவி.

      நீக்கு
  15. கதை நன்றாக இருக்கிறது. திகில் காட்சியை பார்ப்பது போல இருந்தது.

    //இருபுறமும் அடர்த்தியாய் மரங்கள். இருபுறமும் சுற்றுச் சுவர்களுக்குள் அடங்கிய பெரிய பெரிய பங்களாக்கள். குப்பைகள் இல்லாத சாலை. நடைபாதை ஒரே சீராக அமைக்கப்பட்டு அது அந்தத் தெருவுக்கு இருபுறமும் எல்லை வகுத்தது போலிருந்தது. //

    இரு புறமும் மரங்கள் ஆளே அரவம் இல்லாத தெரு, பார்க்கவே பயமாக இருக்கிறது. அவன் கையில் பை இல்லையே!

    கால்சராய்ப் பாக்கெட்டுக்குள் இருந்து தான் கசங்கிய மடிக்கப்பட்ட காகிதம் இருக்கிறது.

    //அவன் வைத்திருந்த பையை வாங்கிப் பார்த்து அதில் ஆயுதம் எதுவும் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டான்.//

    பாண்டியனின் வினாடிக்கு வினாடி பயம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. பெரிதாக ஏதோ நடக்க போவதை போல உணர்வை தருகிறது.

    வந்தவன் ஒவ்வொரு வீடாக பார்த்து கொண்டு வந்தது முகவரியை காட்டி கேட்கத்தான் என்று தெரிகிறது.

    //அவளைக் கண்டு அவன் நடை சற்றே தயங்கியிருந்தாலும், நிற்கவில்லை. ஆனால் அவன் நடையில் ஏன் இந்தத் தயக்கம் என்றுதான் பாண்டியனுக்குப் புரியவில்லை.//

    முதலில் அவளிடம் முகவரி கேட்கலாம் என்று நடை சற்றே தயங்கி நின்றதும் அவள் புரியாத வேற்று மொழி பேசியதும் வேண்டாம் முடிவு செய்ததும் பாண்டியனுக்கு புரியவில்லை.

    படிக்கும் போது இந்தி மொழி படிக்க முடியவில்லை என்று இந்தி மொழி படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

    இந்தி படம், இந்தி பாடல்கள் கேட்பதால் இந்தி தெரியும் என்று நினைத்து விட்டீர்களோ எங்களுக்கும். நான் படிக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டம் வந்து எனக்கு இந்தி பாடம் கற்பிக்க படவில்லை.

    //மதியம் இரண்டரை மணி இருக்கலாம். பாதி வீடுகளில் அலுவலகத்துச் சென்றிருக்கக் கூடியவர்களைத் தவிர்த்து வீட்டிலிருப்பவர்கள் மதிய உணவை முடித்து தொலைக்காட்சியின் அழுகைத் தொடர்களிலோ, அல்லது நித்திரையின் வசப்படும் நேரமாகவோ இருக்கலாம். //

    நல்ல அவதானிப்பு

    இப்போது எந்த சாலையும் இப்படி வெறிச் என்று இருப்பது இல்லை, துணி அயர்ன் செய்து தருபவர் ஒருவர் இருக்கிறார்.

    கதை நன்றாக இருக்கிறது. சில சினிமா காட்சிகள் சீட் நூனியில் அமர வைக்கும் என்பது போல இருந்தது கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவன் கையில் பை இல்லையே! //

      சமயங்களில் இந்த மாதிரி ஓரளவுக்கு பொருத்தமாக படம் கொண்டு வருவதற்கே பாடுபட வேண்டி இருக்கிறது கோமதி அக்கா.  சமயங்களில் நன்றாக வரும்.  சமயங்களில் வந்தவற்றில் சுமாராக இருப்பதைத் தேர்ந்தெடுக்கிறேன்.

      //இந்தி மொழி படிக்க ஆரம்பித்து விட்டீர்களா?//

      நான் வேலை கிடைக்கும் முன்பு ஹிந்தி மத்யமா பாஸ் செய்தேன்.  அடுத்த பரீட்சைக்குள் எனக்கும் ஹிந்தி வாத்யாருக்கும் சண்டை ஆகி விட்டது!  எனவே தொடரவில்லை. 

      எனது ஹிந்திப் பாடம்  DD  இராமாயண, மகாபாரத ''ஆயுஷ்மான் பவ'' விலிருந்து தொடங்கியது!  ஹிந்திப் படங்கள், ஹிந்திப்பாடல்கள் சிறு வயதிலிருந்தே பழக்கம்!

      // இப்போது எந்த சாலையும் இப்படி வெறிச் என்று இருப்பது இல்லை, துணி அயர்ன் செய்து தருபவர் ஒருவர் இருக்கிறார்.//

      எல்லா தெருக்களிலும் அவர் இருப்பதில்லை.  அப்படி இருந்தாலும் பாதகமில்லை.  தனிமை தனிமைதான்!

      இப்போதும் சென்னையில் வி ஐ பிக்கள் வசிக்கும் சாலைகள் இப்படி இருக்கின்றன கோமதி அக்கா.  குறிப்பாக அமைச்சர்கள் வீடுகள்.  அதை மனதில் வைத்து எழுதியதுதான்.

      பாராட்டுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  16. //இப்போதும் சென்னையில் வி ஐ பிக்கள் வசிக்கும் சாலைகள் இப்படி இருக்கின்றன கோமதி அக்கா. குறிப்பாக அமைச்சர்கள் வீடுகள். அதை மனதில் வைத்து எழுதியதுதான்.//

    ஆமாம், அவர்கள் இருக்கும் ஏரியாக்கள், பெரிய மனிதர்கள் இருக்கும் ஏரியாக்கள் எல்லாம் இப்படி வெறிச் என்று தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!