வரலாற்றுச் சிறப்பு மிக்க தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
இந்தத் தொடருக்கு ஒரு பின்னூட்டத்தில் கோமதி அரசு மேடம், முன்பு தாராசுரம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, உள்ளே மழைத்தண்ணீரும் பாசியுமாக இருந்தது என்று சொல்லியிருந்தார். நாங்கள் 2018ல் சென்றிருந்தபோதும் அப்படித்தான் இருந்தது, பெரு மழை பெய்துமுடிந்திருந்ததால். தொல்லியல் துறை அப்படித் தண்ணீர் தேங்காமல் இருக்கும்படியான பராமரிப்புவேலைகளைச் செய்திருக்கணும், அதற்குப் பின்னால். அதனால்தான் தற்போது இன்னும் பொலிவுடன் இருக்கிறது என்று தோன்றுகிறது. அப்போது இரண்டு கோயில்களிலும் எடுத்த படங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
நந்தியும் ஏழிசைப் படிகளும் இருக்குமிடத்தில்
தண்ணீரும் பாசியுமாக
தெய்வநாயகி அம்மன் கோயிலின் உள்ளே
செல்லமுடியாததன் காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு மீதாக நடந்து செல்லப்
பாதை அமைத்திருந்தார்கள்.
நாம் இப்போது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அத்துடன் சிறிது சோழர் வரலாறும் அறிந்துகொள்வோம். சென்ற வாரம் நிறுத்தியிருந்த இடத்தை வைத்து நான் இந்த வாரம் இராஜராஜ சோழனைப் பற்றி எழுதப்போகிறேன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நாம் எடுப்பித்த பெருவுடையார் கோயிலைப் பற்றிய பகுதியின்போது நம்மைக் குறிப்பிட்டால் அதில் அர்த்தம் உள்ளது. நம் சோழவம்சத்திற்குப் பிறகு வந்த சாளுக்கிய சோழ மன்னர்கள் காலத்தில் எடுப்பித்த ஐராவதீஸ்வரர் கோயில் படங்களைப் பற்றிய பதிவில் நம் வரலாறா? என்று சோழர்களில் சிறந்த மன்னனான இராஜராஜ சோழன் எண்ணக்கூடும். அதனால் இப்போது எழுதவில்லை. அதற்குரிய சந்தர்ப்பம் வரும்.
இதற்கிடையில் சோழ மன்னர்களில் இராஜராஜ சோழன் மிகப் பெரியவனா இல்லை அவனது மகன் இராஜேந்திர சோழன் மிகப் பெரியவனா என்று யோசியுங்கள். அதற்கான விடைக்கோ இல்லை எண்ணப் பரிமாற்றத்திற்கோ நிச்சயம் இன்னும் 3 மாதங்களாவது இருக்கிறது.
ஒரு அரசன் பேரரசனாகத் திகழ வேண்டுமானால், அவன் ஆட்சியில், பாண்டியர் மற்றும் சேர அரசர்களை ஒடுக்கியிருக்கவேண்டும். வட புலத்தில் யாரும் வலுப்பெற்று விடாதவாறோ இல்லை வட புலத்தில் இருக்கும் அரசர்கள் தன்னைச் சார்ந்த அல்லது தன் உறவினராகவோ அமைத்திருக்கவேண்டும். இல்லாவிடில் வடபுலத்து இராட்டிரகூட, கங்க நாடு மற்றும் ஆந்திரப் பகுதிகளின் அரசர்களுடன் படையெடுப்புகள் நிகழ்த்தவேண்டியிருக்கும். வடபுலம் என்று சொல்லும்போது கொங்குப் பகுதியிலிருந்தும், தொண்டைமண்டலத்திலிருந்தும் தொடங்குகிறது. இன்றைக்கு நாம் கொங்குநாடு என்று நினைப்பது ஈரோடு கோயமுத்தூர் பகுதியை. ஆனால் கொங்குநாடு, கர்நாடகாவின் பகுதிகளிலும் பரவியிருந்தது. இதுபோல கங்கநாடு, இராட்டிரகூடம் போன்றவையும் தற்போதைய கர்நாடகாவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இருந்தன.
இனி நாம் பார்க்கப்போவது, எதனால் அரசாட்சி விதி வசத்தால் பராந்தகச் சோழனுடைய இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனுக்கு வந்தது என்பதைத்தான். ஒரு அரசனுக்குப் பிறகு அவன் புதல்வன், அதற்கு அடுத்தது அவனது புதல்வன் என்று அரசுரிமை வந்திருந்தால் ஒரு தொடர்ச்சி இருந்திருக்கும், பெரும்பாலும் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் அரசனுக்கும் உறவினால் பிரச்சனை வராது. (ஆனால் வலிமையினால், புத்திசாலித்தனத்தால் பிரச்சனை வரும். அது பேரரசுக்கு நல்லதுதான். அரசனாயிருப்பவனுக்கு வலிமை, புத்திசாலித்தனம், தந்திரம், கொடூரத் தன்மை என்று எல்லாமே இருக்கவேண்டும். தேவையான சமயத்தில் அவை வெளிப்படவேண்டும். உதாரணத்திற்கு, முகலாயப் பேரரசில், ஷாஜஹானுக்கு நான்குபேர் மகன்களாக இருந்தாலும் காலம் ஔரங்கசீப்பைத்தான் பேரரசனாக்கிற்று. அதனால் முகலாயப் பேரரசு வளர்ந்தது வலிமை பெற்றது என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும்)
கண்டராதித்தனுக்கு நான்கு புதல்வர்கள் மற்றும் இரண்டு புதல்விகள். இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் மற்றும் அரிகுலகேசரி. இவர்களில் இராஜாதித்தன் மற்றும் அரிகுலகேசரி பட்டத்து அரசிக்கும் (இவர் சேரர் குலப் பெண்), அரிஞ்சயன் இன்னொரு சேரர் குல அரசகுமரிக்கும் பிறந்தவர்கள்.
வடபுறத்தில் இருந்து அரசனாக இருந்தவர்கள் இராட்டிரகூட மரபினர். இவர்களுள் இரண்டாம் கிருஷ்ணன் (இரண்டாம் கன்னர தேவன்… இப்போது புரிந்திருக்குமே இந்த அரசு கர்நாடக பகுதியில்-வடபுலத்தில் இருந்தது என்று. கன்னர-கருப்பு-கிருஷ்ண) அப்போது ஆட்சி புரிந்துவந்தான். அவனுடைய மகள் இளம் கோப்பிச்சியை முதலாம் ஆதித்த சோழனுக்குத் திருமணம் செய்வித்திருந்தான். ஆதித்த சோழன் காலத்தில் இராட்டிரகூடரும் சோழரும் திருமண உறவைக் கொண்டிருந்தனர். (நெருங்கிய உறவினர் என்று எடுத்துக்கொள்ளலாம்). பராந்தகச் சோழன் 905ல் பட்டத்திற்கு வருகிறான். 915ல் இரண்டாம் கிருஷ்ணன் இறக்கிறான். (உறவு முறையில் இரண்டாம் கிருஷ்ணன் பராந்தகனுக்கு சின்னப் பாட்டன்). இரண்டாம் கிருஷ்ணனுக்குப் பிறகு அவனது பெயரனான மூன்றாம் இந்திரன் பட்டத்திற்கு வருகிறான். (மூன்றாம் இந்திரனுக்கு ஒரு தம்பி உண்டு. அவன் பெயர் மூன்றாம் அமோகவர்ஷன்) அரசன் இந்திரனுக்கு கோவிந்தன் என்ற பெயருடைய மகன் இருந்தான். இவனை நான்காம் கோவிந்தன் என்று சரித்திரம் சொல்கிறது. இந்த கோவிந்தன் அழகில் மன்மதன். அவனை 918ல் அரசன் இந்திரன் இளவரசனாக்குகிறான். நம் பராந்தகசோழனும் (இவனை முதலாம் பராந்தகன் என்று வரலாறு சொல்கிறது) தன் மகள் வீரமாதேவியை மணம் செய்துகொடுத்து தன் மருமகனாக்கிக் கொள்கிறான். தன் தந்தை இறந்த பின்னர் 938ம் ஆண்டு வரையிலும் நான்காம் கோவிந்தன் குந்தள நாட்டை அரசாள்கிறான்.
அது சரி.. இந்த முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் என்றெல்லாம் எதற்காகப் பெயர் கொடுக்கிறார்கள்? வரலாறு என்பதே கல்வெட்டுகளையும், இலக்கியங்களையும் வைத்து அனுமானத்தையும் கொண்டு ஓரளவு சமைக்கப்படுவது. ஒரே பெயரில் பல அரசர்கள் இருக்கின்றனர், அதுவும் ஒரே வம்சத்தில். அவர்களை வேறுபடுத்திக் காண்பிக்க முதலாம், இரண்டாம் என்றெல்லாம் சொல்கின்றனர். இராஜராஜன், விஜயாலயன், இராஜேந்திரன், குலோத்துங்கன் என்ற பெயர்களில் பல மன்னர்கள் சோழ வம்சத்திலேயே (வரலாறு ஓரளவு சரியாகத் தெரியும் வம்சம்) இருக்கின்றார்கள். இதுபோலவே இராட்டிரகூட மன்னர்கள் வம்சத்திலும் பல கிருஷ்ணர்கள், கோவிந்தர்கள். சோழ அரச வம்சத்தில் (பிற்கால சோழர்கள்), இராஜகேசரி, பரகேசரி என்ற பட்டத்தையும் வைத்துக்கொண்டனர். ஒரு அரசன் இராஜகேசரி என்றால் அதற்கு அடுத்து பட்டத்திற்கு வருபவன் பரகேசரி. இரண்டு பட்டங்களையும் ஒரு அரசன் வைத்துக்கொண்டதில்லை. தெரிந்த கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், இலக்கியம் (இதில் பெரியபுராணம், திவ்யப்பிரபந்தம், குரு பரம்பரை, கோயிலொழுகு போன்ற பலவும் உள்ளடக்கம்) போன்றவற்றை வைத்துக்கொண்டு இந்த அரசன் காலத்தில் இந்த இந்தப் போர்கள் நடந்தன, யார் யார் அவன் நண்பர்கள், அவனுக்கு அடுத்தது யார் பட்டத்துக்கு வந்தார்கள், அரசனின் மனைவிகள், பிள்ளைகள் என்றெல்லாம் வரலாற்றை எழுதுகிறார்கள். பிற்காலத்தைய சாளுக்கிய சோழர்களும் சோழ மரபின்படி இராஜகேசரி, பரகேசரி என்ற பெயர்களை அடுத்தடுத்து வைத்துக்கொள்கிறார்கள். (இதன்படி இரண்டு அடுத்தடுத்த அரசர்கள் இராஜகேசரி என்று கல்வெட்டுகள் சொன்னால், இடையில் ஒரு பரகேசர் இருந்திருக்கவேண்டும் அவன் மிகக் குறுகிய காலத்தில் மரணித்திருக்கவேண்டும் என்று அனுமானம் செய்கிறார்கள்)
இன்றைக்கு வரலாறு அதிகமாகிவிட்டதோ? மிகுதியை அடுத்த வாரம் பார்ப்போம். அப்போதுதான் ஏன் கண்டராதித்தன் அரசாட்சிக்கு வந்தான் என்பது தெரியவரும். இப்போது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சிற்பங்களைப் பார்ப்போம்
மூடப்பட்டிருந்த கதவுகளுக்கு இரண்டு கட்டுகளுக்குப் பின்னே ஐராவதீஸ்வரர். நீ எங்கிருந்து பார்த்தாலும் எனக்குத் தெரியும். அருகில் வந்தால்தான் என் கண்ணுக்கு நீ தெரிவாய் என்பதல்ல. உன்னைப் பார்த்தவுடன் உன் எண்ணம், உன் பழைய கருமங்கள், உன் விதி என்று எல்லாமே எனக்குத் தெரிகிறது என்று சொல்கிறாரோ?
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், நிலவு உலாவிய நீர்மலி வேணியன்.
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்ச் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.
கோவில் கட்டிடத்திற்கு வெளிப்பக்கத்தில் ஏன் வட்ட வட்டமாகக் கற்களை அமைத்திருக்கிறார்கள், முன்பு அங்கு விளக்கு வெளிச்சத்திற்காக ஏதேனும் இருந்ததா? இல்லை வேறு சிதிலங்களா? அது போன்று அடுத்த படத்தில் இருப்பதுபோல ஏன் தண்ணீர் தேங்கும்படியாக அடைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்? அவைகளில் ஏதேனும் முன்பு இருந்தனவா என்ற கேள்விகள் மனதில் எழுந்தன.
இன்றைக்கு படங்களும் வரலாறும்
அதிகமாகிவிட்டதோ?
அடுத்த
வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
சாதாரணமாக கோயில் அல்லது எந்த கட்டிடத்தை சுற்றியும் தண்ணீர் இருக்கும்போது படம் எடுத்தால் தண்ணீரில் உள்ள பிரதிபலிப்பும் சேர்ந்து படம் அழகாக வரும். ஆனால் இன்றைய படங்களில் பிரதிபலிப்பு இல்லாததால் ஒரு தனி சோபை இல்லை.
பதிலளிநீக்குசிற்பங்களும் கைகளால் தொட்டு தொட்டு வரும்போது அழியும் என்று சந்நிதியின் முன் துவாரபாலகர்கள் தூணில் உள்ளமிக சிறிய சித்திரங்கள் மாய்ந்திருப்பது காட்டுகிறது.
சித்திரங்கள் என்பதை சிற்பங்கள் என்று திருத்திக் கொள்ளவும்.
நீக்குவாங்க ஜெயகுமார் சார். நல்ல நீர் மற்றும் நல்ல வெயில் சமயத்தில் பிரதிபலிப்பு நன்றாகிருக்கும் . அங்கோ பாசி படர்ந்த நீர். அதனால் பிரதிபலிப்பு இல்லை,
நீக்குசிற்பங்களைத் தொடுவது அதனைச் சிதைக்காது. ஆனால் மிகச் சிறந்த சிற்பங்களைக் கையால் தட்டி அதனைச் சீர்குலைத்த பார்வையாளர்கள் உண்டு. சமீபத்தில் ஶ்ரீபெரும்பூதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் சென்றிருந்தேன். அங்கு படியேறுத் இடத்தில் மேற்படியில் இருபுறமும் யாளி மற்றும் அதன் கீழ் பாயும் குதிரையில் ஏறி அமர்ந்திருக்கும் வீரனின் அழகிய சிற்பம் இருந்தது. படி ஏறி வந்த மேதாட்டி (நல்ல தடியானெர்) அந்தக் குதிரையின் காலை வலுவாகப் பிடித்து தன் பெரும் உடம்பை அடுத்த படிக்கு ஏற்ற தம் கட்டினார். சிற்பங்களின் அருமை தெரியாத அவரை நினைத்தேன். இப்படிச் சில முறை செய்தால் குதிரையின் கால் உடைந்துவிடுமே என்று தோன்றியது.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகாலை பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குநிலவு உலாவிய நீர்மலி வேணியன்
பதிலளிநீக்கு-- என்று திருத்தி விடுங்கள்.
வாங்க ஜீவி சார்... தவறுதலாக வந்திருந்ததா? எனக்கு மிகவும் பிடித்த பாடலாயிற்றே... தவறு வர வாய்ப்பு இல்லையே
நீக்குயாரோ (!) திருத்திட்டாங்க: அது வரைக்கும் சரி.
நீக்குசிவபெருமான் சேக்கிழாருக்கு 'உலகெலாம்' என்று முதலடி எடுத்துக் கொடுத்ததாகச் சொல்லப்படும் பெரிய புராணத்து இந்த ஆரம்பப் பாடலும் ---
கம்பர் இராமகாதையின் 'உலகம் யாவையும்'
என்று ஆரம்பிக்கும் முதல் பாடலும் எனக்கு ஏனோ இரட்டைக் குழந்தைகள் போல மனசுக்குத் தோன்றும், நெல்லை.
கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல்
நீக்குஉலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டுடையார் அவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
கம்பனுக்குத் தெரிந்திருக்காதா... பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்று. அவற்றை ஆக்கியும் காத்தும் அழித்தும் விளையாடும் அந்த இறைவனைச் சரண் அடைகிறோம் என்று எழுதுகிறான் (தொழுகிறேன் என்று எழுதவில்லை. ஏன் ஒரு உலகம் என்று எழுதாமல், பல உலகங்கள் என்று எழுதுகிறான் என்பதற்கும் பல விளக்கங்கள் உண்டு)
சேக்கிழாரோ, அந்த இறைவன், தில்லையம்பலத்தில் ஆடுகின்ற நடராஜப் பெருமானே என்கிறார். அவனை உணர்வது அறிது. அவன் சடையில் நிலவும், கங்கை நீரும் உலாவும். அளவிடமுடியாத பெரும் ஜோதி வடிவமானவன். அவனுடைய மென்மையான மலர்களையொத்த, சிலம்பு பூண்ட திருவடிகளை வாழ்த்தி வணங்குவோம் என்கிறார்.
இருவருமே திருவடி தொழலையே குறிப்பிடுவது சிறப்பு.
தலைவர் அன்னவர்க்கே..
நீக்குஇளமையிப் கல்! எவ்வளவு நிஜம்!
எந்தக் காலத்திலோ வாசித்தது. அப்படி அப்படியே மன்சில் பதிந்து நினைத்தவுடன் துள்ளிக் குதித்து நினைவில் நர்த்தனமிடுவது தான் அதிசயம்!
பாடலை நினைவிலிருந்து எழுதினேன். நீங்கள் 'தலைவர்' என்று குறிப்பிட்டதும்தான், அட டா... அந்த வார்த்தையை எப்படி மறந்துவிட்டேன் என்று யோசிக்கிறேன். 'விளையாட்டுடையார் அவர் தலைவர்' என்றல்லவா எழுதியிருக்கணும். உலகம், நிலை, அலகு என்று வரி ஆரம்பம் வரும்போது தலைவர் என்று வந்திருக்கணும். என் கவனக்குறைவு (இதையெல்லாம் நான் கவனிப்பேன்). நன்றி. நீங்களும் மிகவும் பெருமிதப்பட்டுக்கொள்ளலாம். எப்படி நினைவுச் சுவடுகளில் பாடல்கள் பதிந்திருக்கின்றன என்று.
நீக்குவழக்கம் போல படங்கள் அருமை அழகு
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
வாங்க துரை செல்வராஜு சார். நன்றி
நீக்குதங்களது பதிவினால் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் தரிசனமும் ஆயிற்று..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நெல்லை அவர்களுக்கு நன்றி
அடுத்து தெய்வநாயகி அம்மனையும் தரிசிக்கவேண்டாமா? விரைவில் அவரும் வருவார்
நீக்குநெல்லை படங்களும் வரலாறும் சூப்பர்.
பதிலளிநீக்குஇந்த கங்க மன்னர்கள், இப்ப உள்ள ஒடிசா பகுதியிலும் இருந்திருக்காங்க. இங்க இருக்கற பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் இது பற்றிய விவரங்கள் முதலில் கட்டப்பட்ட கோவிலின் எக்ஸ்டென்ஷனாக அதன் பின் சோழ அரசர் நிர்மாணம் செய்த தகவல்கள் கோவிலின் உள்ளே (கோவிலின் விதானம் மிகத் தழைவு) அதில் தூண்களில் உண்டு என்று தெரிந்தும் எடுக்க முடியவில்லை. சன்னதி அருகில் இருப்பதாலும்...மிகச் சிறிய கோவில் ஆனால் சமீபத்தில் வெளிப்புறம் எல்லாம் பெரிதாகக் கட்டி தமிழ்நாட்டு பாணியில்தான் கோபுரம் ஒவ்வொன்றாக ஒவ்வொரு காலகட்டத்தில் எழுப்பியிருக்காங்க. இப்ப புதியதாய் வடக்கில். இந்த வரலாறு இணையத்தில் வாசித்து போய்ப் பார்க்கலாம் என்று
முதலில் சென்ற போது கட்டுமானப் பணிகள் நடந்ததால் நந்தி மண்டபம் எல்லாம் கயிற்றினால் கட்டி போக முடியாதபடி இருந்தன. வெளியில் எடுத்துவிட்டேன்.
இரண்டாம் முறை போறப்ப பணிகள் அந்த இடங்களில் எல்லாம் முடிந்திருந்தது. சரி மண்டபம் ஏறி எடுக்கலாம் என்று எடுப்பதைப் பார்த்ததும் உள்ளிருந்து அர்ச்சகர் ஓடி வந்து பேடா பேடா னு சொல்லி சித்ரகலுனு அலிசி அலிசினு சொல்லி அவர் கண்ணு முன்ன அழிச்சதுக்கு அப்புறம் தான் விட்டார்.
அதுக்குள்ள நம்ம வீட்டாளு என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார். ஒரு டிசிப்ளின் இல்லை உனக்கு....படம் எடுத்துப் போடலைனா இப்ப என்ன குடிமுழுகிப் போச்சுன்னு....இத்தனைக்கும் நான் வெளியில் தெரிந்ததைத்தான் எடுத்தேன் சாமிய கூட எடுக்கலை.
அப்புறம் அந்த அர்ச்சகரிடம் கேட்டேன் வெளிப்புறம் கோபுரம் அதெல்லாம் எடுக்கலாம்தானேன்னு....
ம்ம்ம்ம்ம் நு பதில் வந்தது
ஆனா இணையத்தில் உட்புறம் எல்லாம் எடுத்த படங்கள் இருக்கு....
படம் எடுக்கவும் மச்சம் வேணும் போல!!!!!!!
கீதா
வாங்க கீதா ரங்கன்(க்கா). பல கோயில்கள்ல படங்களெல்லாம் இணையத்துல இருக்கிறது. ஆனாலும் நாம் படம் எடுக்க ஆரம்பித்தால் கோயில் புனிதம் கெட்டுவிடும்னு சொல்லிடறாங்க. மூலவர் மற்றும் சன்னிதியை எடுக்கக்கூடாது என்பதில் அர்த்தம் இருக்கிறது. (அதுவும் தவிர நீங்க கேமரா ஆங்கிள், ஃபோகஸ் பண்ணி எடுக்கறதுக்குள்ள அவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ? ஹா ஹா ஹா)
நீக்குஎனக்கு இந்த மாதிரிச் சொல்லுபவர்களை (படங்கள் எடுக்கக்கூடாது, அழியுங்கள் என்று சொல்பவர்களை) பிடிப்பதில்லை. ஆளுக்கேற்றபடி ஆடுபவர்கள் இவர்கள்
அந்த வட்ட வடிவங்கள் - இப்ப கொரோனா காலத்துல வரிசைல நிற்க வட்டம் போட்டிருந்தாங்களே அப்படி இருக்கு. ஒரு வேளை அப்பவும் இப்படி வரிசைல நின்னு கோயிலுக்குள்ள போக வைத்திருப்பாங்களோ...ஹிஹிஹி
பதிலளிநீக்குசைட்ல ஒட்டை வேற இருக்கு பாருங்க தண்ணி போறதுக்கு. பக்கத்துல ஒரு அடி பெஞ்ச் போல ஒன்று இருக்கே? அது பின்னாடி வந்ததா இருக்குமோ? இந்த வட்டம் கூட? இல்லைனா ஏதோ அங்கு விளக்குத் தூண் எழுப்ப அப்படி வைச்சிருப்பாங்களோ என்றும் தோன்றியது.
அடுத்த படத்தில் தண்ணீர் தேங்குவது கல்லிற்கு நல்லதோ? இன்னும் வலுப்பெறும்? நாம ஒரு பில்டிங்க் கட்டு வரப்ப தண்ணி விட்டு விட்டு பண்ணுவோமே அப்படி?
கீதா
அங்கே விளக்குத்தூண்கள் இருந்திருக்கலாம். அவை பழுதுபட்டு நீக்கப்பட்டிருக்கலாம்.
நீக்குதண்ணீர் தேங்குவதற்காக அவை அமைக்கப்பட்டதுபோல எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை விழாக்காலத்தில் சிவிகை வைப்பதற்கான இடமா? இல்லை வாகனங்களை வைக்கும் இடமா என்று தெரியவில்லை.
எப்போதாவது ஏதாவது புத்தகம் படிக்கும்போது பிடிபடும்.
தாராசுரம் போனதில்லை. ஆனால் வெளியில் பார்க்கறப்ப, சைடில் படிகளுடன் இருப்பது போன்று தஞ்சை கோவிலிலும் உண்டு. பிராகாரம் பெரிசா இருக்கும் அழகா அது போலவே கிட்டத்தட்ட இதிலும் இருக்கு,
பதிலளிநீக்குவெளியில் பார்த்ததும் டக்கென்று தஞ்சை கோயில் நினைவுக்கு வந்தது.
படங்கள் செமையா இருக்கு
கீதா
தஞ்சை கோயில் முற்றிலும் வேறுபட்டது. இங்கு பிராகாரமும் ரொம்பவே பெரிதாக இல்லை. தஞ்சை பிராகாரம் மிகவும் பெரியது என்பதால்தான் பிற்காலத்தில் அங்கு பல கோயில்கள் (பிள்ளையார், முருகன், கருவூரார், அம்பாள் போன்று) எழுப்பப்பட்டிருக்கின்றன. நன்றி.
நீக்குவரலாறுகள் அறிந்தோம்.
பதிலளிநீக்குகோவில் சிற்பங்களுடன் ஐராவதீஸ்வரரையும் வணங்கிக்கொண்டோம்.
வாங்க மாதேவி அவர்கள். நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்கு//இந்தத் தொடருக்கு ஒரு பின்னூட்டத்தில் கோமதி அரசு மேடம், முன்பு தாராசுரம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, உள்ளே மழைத்தண்ணீரும் பாசியுமாக இருந்தது என்று சொல்லியிருந்தார். //
பதிலளிநீக்குஇவ்வளவு மோசமாக தண்ணீர் தேங்கவில்லை இது அதிகமாக இருக்கிறது.
//தெய்வநாயகி அம்மன் கோயிலின் உள்ளே செல்லமுடியாததன் காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு மீதாக நடந்து செல்லப் பாதை அமைத்திருந்தார்கள்.//
இந்த பாதை பயத்தை அளிக்கிறதே! நாங்கள் போன போது கீழே சிறு சிறு கற்களை போட்டு இருந்தார்கள் அதில் காலை சரியாக வைத்து கவன்மாக போக வேண்டி இருந்தது, சில இடங்களில் அதுவும் இல்லை, மருமகள் தன் சூடிதாரை கீழே சுருட்டி வைத்துக் கொண்டு நடந்தாள், நான் புடவை நனையாமல் நடக்க சிரம பட்டேன். கவின் கீழே தண்ணீரில் நடந்து வருவேன் என்று அடம் பிடித்து வந்தான் அவனை பார்த்து கொண்டு கவனமாக நடக்க வேண்டி இருந்தது.
மகன் தான் படங்கள் எடுத்து இருந்தான் காமிராவில் .
அப்போது எல்லாம் தட்டினால் சங்கீத ஸ்வரங்கள் ஒலிக்கும் படிகளுக்கு வேலி அமைக்கவில்லை.
நம் பார்வையாளர்கள் அவர்கள் வேலையைக் காண்பித்து சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் படிகளைச் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக வேலி போட்டிருக்கிறார்கள். (ஏற்கனவே பல இடங்களில் சிற்பங்களின் பகுதிகள் பார்வையாளர்களால் உடைந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்).
நீக்குஅப்போது ஒருவேளை பெருமழை பெய்து அதனால் நீர் தேங்கி பாசி படிந்திருந்திருக்கலாம். இந்தப் பாலம் பயமுறுத்துவதாக இல்லை. தண்ணீரில் நடப்பதற்குத் தயங்கியிருப்பேன், வழுக்கிவிடும் என்பதால்.
கி.பி 11 ஆம் நூற்றாண்டு ஆண்ட தலைகாட்டு மேலை கங்கர்கள் காலத்தில் முதலாம் பராந்தகர், இராஜ மல்லர் என்று எல்லாம் பேர் இருக்கிறது.
பதிலளிநீக்கு//இவர்களில் இராஜாதித்தன் மற்றும் அரிகுலகேசரி பட்டத்து அரசிக்கும் (இவர் சேரர் குலப் பெண்), அரிஞ்சயன் இன்னொரு சேரர் குல அரசகுமரிக்கும் பிறந்தவர்கள்.
ஆதித்த சோழன் காலத்தில் இராட்டிரகூடரும் சோழரும் திருமண உறவைக் கொண்டிருந்தனர்.//
அந்தக்காலத்தில் போரில் உதவிசெய்ய இரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த நாட்டு பெண்களை திருமணம் முடித்து கொள்வதும், தங்கள் இராஜ்ஜீயத்தை விரிவு படுத்த அடுத்த நாட்டு பெண்ணை மணம் முடிப்பது என்றும் நடந்து இருக்கிறது.
பெண்ணின் விருப்பத்தை கேட்பது இல்லை போலும்.
இதைவிட ஒன்றைப் படித்தேன். (இந்தப் பகுதிக்காக வரலாறு எழுதிக்கொண்டு வரும்போது). முதலாம் குலோத்துங்கச் சோழன், தன் மகளை, ஈழத்து அரசன் வீரபாகுவிற்குக் கட்டிக்கொடுத்தான் என்று. பாருங்க.. சம்பந்தமே இல்லாத புது மொழி இருக்கும் வேற்று நாட்டுக்கு அந்தப் பெண் (சுத்தமல்லி ஆழ்வார் என்ற பெயர் பெற்றவர்) எப்படிப் போயிருப்பாள் வாழ்ந்திருப்பாள் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமும் வருத்தமுமாக இருக்கிறது.
நீக்குஇங்கு, வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களை மணந்துகொண்டு, அதனால் வாரிசுகளும் வேற்று மதத்தைக் கொண்டிருக்கும், தானும் வேற்று மதத்திற்கு மாற நேரும் அவலத்தைப் பற்றியும் எழுத நினைக்கிறேன். ரொம்ப விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் தவிர்க்கிறேன்.
நீக்குவரலாறும், படங்களும் அருமை.
பதிலளிநீக்கு//கோவில் கட்டிடத்திற்கு வெளிப்பக்கத்தில் ஏன் வட்ட வட்டமாகக் கற்களை அமைத்திருக்கிறார்கள், முன்பு அங்கு விளக்கு வெளிச்சத்திற்காக ஏதேனும் இருந்ததா? இல்லை வேறு சிதிலங்களா?//
வட்ட வட்டமாகக் இருக்கும் கற்கள் ஓக்கம் சின்ன திட்டில் நந்திகள் இருக்கிறது. சில கோயில்களில் கோபுரத்தை சுற்றி பலி பீடங்கள் இருக்கும் அதில் பிரசாத சாதம் வைப்பார்கள் உச்சிகால பூஜையின் போது . பலிபீடம் அமைக்க அந்த வட்டங்களை அடையாள குறியீடாக அமைத்து இருந்து இருப்பார்களோ , அப்புறம் முடியவில்லையோ என்று நினைப்பு எனக்கு. சரியா என்று தெரியவில்லை.
பலிபீடம் ஒரு பகுதிக்கு ஒன்றுதான் இருக்கும். இங்கு பல வட்டங்கள் இருப்பதால் பலிபீடமாக இருந்திருக்காது என்று தோன்றுகிறாது. அதுவும்தவிர, பலிபீடம் என்பது கோயிலுக்கு அவசியமான ஒன்று. அது இல்லாமல் ஆகமக் கோயில்கள் இருப்பதில்லை.
நீக்குடெல்லி குருவாயூர் கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றி பலிபீடங்கள் இருக்கிறது. நான் பார்த்த வைக்கம் மாகாதேவர் கோயிலிலும் பார்த்தேன், அதற்கு தங்க கலர் கவசம் வேறு போட்டு இருக்கும்.
நீக்குhttps://mathysblog.blogspot.com/2024/02/blog-post.html
கொடி மரத்தை சுற்றி கோயிலில் மூலவரை சுற்றியும் , (உட்பிரகார படங்கள் பாருங்கள்) தள்ளி தள்ளி நிரைய பலிபீடங்கள் இருக்கும். வெளியேவும் இருக்கும். (மூலவர் கதவுக்கு நேரே வெளியே)
பெரும்பாலான கோயிலில் கொடிமரத்துக்கு முன்னே ஒரு பலிபீடம் மட்டும் இருக்கும், சுவாமி முன், அம்மன் சன்னதி முன் மட்டும்.
பலி பீடம் என்பது அந்த அந்த தேவதைகளுக்கான, கடவுளுக்கான படையலை அளிப்பது. காலப்போக்கில் அது சிறிது சாதம்+தண்ணீர் என்று ஆகிவிட்டது. ஒரு கோஷ்டத்தில் இருக்கும் தெய்வ உருவுக்கு ஏற்றபடி பலிபீடம் உண்டு. அதாவது கோவிலின் முன், மூலவருக்காக ஒரு பலி பீடம். சுற்றுச் சுவற்றில் பல தெய்வ உருக்கள் இருந்தால் (வழிபடத்தக்க), அவற்றின் எதிரில் சிறிய அளவில் பலிபீடம் இருக்கும்.
நீக்குஇவை இல்லாமலேயே நான் பல பலிபீடங்களை, மூலவரின் கர்பக்ரஹத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக கேரளக் கோயில்களில். ஒவ்வொன்றையும் பித்தளை கவசத்தினால் அமைத்திருப்பார்கள். நிச்சயம் பகிர்கிறேன். அது மலையாள தாந்திரீக பூஜையின் ஒரு அங்கம் என்று நினைத்தேன். தமிழக பாணி கோயில்களில் அப்படிப் பார்த்ததில்லை.
உங்களுக்கு இன்னொரு உதாரணம் (நீங்க பல சிவன் கோயில்களில் பார்த்திருக்கலாம்). கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூலவர் சன்னிதியைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரில் பல தெய்வ உருவங்கள் உண்டு (உதாரணமா நாலைந்து நரசிம்ஹர் உருவங்கள், எண்ணை பூசப்பட்டு, வஸ்திரம் சார்த்தப்பட்டு இருக்கும்). ஆனால் அவற்றிர்க்கு பலிபீடம் கிடையாது. அவைகள் சுற்றுச் சுவர்களில் அமைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர வழிபாட்டு சன்னிதிகள் கிடையாது என்பதுதான் காரணம் (என்று நினைக்கிறேன்). அதே சமயம், அங்கு பல சன்னிதிகள் உண்டு (பாதாள வெங்கடேசர், மேட்டு வெங்கடேசர் என்பது போன்று). அவர்களுக்கு பலிபீடம் உண்டா என்பது சட் என்று நினைவுக்கு வரவில்லை. நன்றி உங்கள் கருத்திற்கு
நீக்குஐராவதீஸ்வரர் (மூலவர் படம்) படம் மிக அருமை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்கு//மூடப்பட்டிருந்த கதவுகளுக்கு இரண்டு கட்டுகளுக்குப் பின்னே ஐராவதீஸ்வரர். நீ எங்கிருந்து பார்த்தாலும் எனக்குத் தெரியும். அருகில் வந்தால்தான் என் கண்ணுக்கு நீ தெரிவாய் என்பதல்ல. உன்னைப் பார்த்தவுடன் உன் எண்ணம், உன் பழைய கருமங்கள், உன் விதி என்று எல்லாமே எனக்குத் தெரிகிறது என்று சொல்கிறாரோ?//
ஆமாம், அவருக்கு எல்லாம் தெரியும், நம்மை கடவுள் கவனித்து கொண்டே தானே இருக்கிறார்.
நாம் எல்லோரும் கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் பக்தி உணர்வு, இறை உணர்வு அனைவருக்கும் ஒன்றாகவா இருக்கிறது? நான் என்னைப் பற்றி நினைக்கும்போது பக்தி உணர்வே இல்லாமல் இருக்கிறேனே என்று நினைத்துக்கொள்வேன் (பல நேரங்களில்). இறைவனுக்குத் தெரியும், இந்தப் பாத்திரத்தில் எவ்வளவு ஓட்டைகள் இருக்கின்றன என்று. அதனால்தான் அவன் வழங்குவது பலருக்கும் பல அளவுகளில் போய்ச்சேருகிறது. மிக்க நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோவில் தரிசன பகுதியான ஞாயிறு பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் தெளிவாக உள்ளது. எனக்கு அன்று வர இயலவில்லை. இன்று முழுவதையும் படித்து ரசித்தேன்.
அரசர்களின் வரலாறு நன்றாக உள்ளது. அப்போதே நாடு விட்டு நாடு பெண் எடுக்கும் வழக்கம் வந்ததினால், அந்த நாடு நட்புறவாக அமைந்து விடுகிறது. அதனால் அந்த நாட்டின் அரசர் மற்ற அண்டை நாடுகளுடன் போர் செய்யும் காலங்களில் பெரும் படைகளை திரட்டி ச் செல்ல அவருக்கு வாய்ப்புகள், வசதிகள் கிடைத்து விடுகின்றன இல்லையா..! அந்த பின்ணனியை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். மற்றொரு தடவை படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். எனக்கும் சரித்திர கதைகள் படிக்க மிக விருப்பம். ஆனால், இந்த முதலாம், இரண்டாம் என்ற பெயர்கள் குழப்பி விடும். அப்போது சரித்திர பாட பகுதிகள், பள்ளிப்பருவத்தில் 10,11ம் வகுப்புகளில் நன்றாக நினைவில் தங்கியது.(எந்த கவலைகளும் இல்லாத வயது.)
தாங்கள் பகிர்ந்த படங்களின் மூலமாக இன்று ஐராவதீஸ்வரரை தரிசித்துக் கொண்டேன். எல்லா படங்களுமே அருமை. ஒவ்வொரு சிற்பங்களும் அழகாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். இப்போல்லாம் வார இறுதிகளில் பயணம் மற்றும் வேறு வேலைகள் வந்துவிடுகின்றனவா? நலம்தானே
நீக்குஇப்பிடி நாடு விட்டுப் பெண் எடுப்பது கொடுப்பது என்றிருப்பதால் நாங்கள் ப்யூர் தமிழர்கள் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கா
சிவ சிவா ... படங்களை ரசித்து செய்திகளுடன் தொடர்கிறேன்
பதிலளிநீக்கு