சாதனைப் பெண்
பூமி இழந்திடேல்
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
“நான் ஜூனியர் தேஜ் என்ற பெயரில்
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
ஆத்ம திருப்திக்கு எழுதுகிறேன். எழுத்துலகில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்க ஆசை.
வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி 60 வயது பூர்த்தியாகி 125 ஆண்டுகள்
பழமை வாய்ந்த சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராகவும்,
எம் பள்ளியின் முன்னாள் மாணவரான உலக நூலகத்
தந்தை அரங்கநாதன் அவர்களின் நினைவாக உள்ள நூலகப் பொறுப்பாளராகவும் இருந்து பணிஓய்வு
பெற்ற பிறகு முழு வீச்சில் என் இலக்கியப் பணியைத் தொடரத் திட்டமிட்டுள்ளேன்.”
(பணி
நீட்டிப்பில் 31 மே 2023 ல் ஓய்வு)
என்றும் அன்புடன், ஜூனியர் தேஜ்.
இயற்பெயர் வரதராஜன். வசிப்பது 11-B32
திருமஞ்சன வீதி. சீர்காழி 609 110.
மின்னஞ்சல் மற்றும் ப்ளாக்: varadhushakespeare@gmail.com
https://junior-tej.blogspot.com
முன்னுரை
மக்கள் வாழும் நாட்கள் அதிகரிக்க, மற்றும் வாழ்க்கைத் தரம் உயர, சமூகத்தில் பொருளாதாரப் பரவல் என்ற ஒன்று அத்தியாவசியம் என்பது உண்மை. இந்த பரவல் அதிகரிக்க வேண்டுமென்பதற்கு கிராம பொருளாதார முறை போதுமானதல்ல. ஆகவே தொழிற்புரட்சி காரணமாக பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.. அதன் காரணமாக வேலை வாய்ப்புகளும், பணப்புழக்கமும், கூடுதலாக பணச் சுழற்சியும் பொருளாதாரத்தை பெரிது படுத்தின. ஆனால் இந்த தொழிற்சாலைகள் அமைய நிலமும் தேவையாக இருந்தது. விவசாயம், தொழிற்சாலை என்று இரண்டுக்கும் நிலம் தேவை என்ற உண்மை அன்று தொட்டு இன்று வரை நிலத்தின் உபயோகம் விவசாயமா, பொருள் உற்பத்தியா என்ற கேள்விக்குறியாய் நிற்கிறது.
ஒரு தொழிற்சாலை தொடங்கவிருக்கும் ஒரு முதலாளி தொழிற்சாலை அமைக்க வேண்டிய நிலத்திற்காக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்கிறார். நிலம் கொள்முதல் முதல் தொழிற்சாலை அமைவது வரை உள்ள காரியங்கள் பலவும் கிராமத்து மக்கள், தொழிலதிபர், ஆகியோர் கலந்து பேசி நன்மை தீமைகள் பற்றி விவாதிக்கின்றனர்.. அது தான் இந்த கதையின் சாராம்சம்.
ஏழாவது மனிதன் என்று ஒரு பரிசு பெற்ற திரைப்படம் (1982) வெளிவந்தது. ரகுவரன் அறிமுகமான படம். ஒரு கிராமத்தில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் பெருகியது. கூடவே நோய்களும். ஆராய்ந்ததில் தொழிற்சாலையின் மாசு நோய்களை உண்டாக்குகிறது என்ற உண்மை புலப்படுகிறது. இந்த உண்மையின் அடிப்படையில் நிர்வாகத்தைத் தட்டிக்கேட்க ஒரு ஏழாவது மனிதன் முன் வருகிறான். அதுதான் திரைப்படக் கதை.
அதே போன்று தான் இந்த கதையும். ஒரே ஒரு வித்தியாசம். முடிவு மட்டும் இரண்டிற்கும் வெவ்வேறு. மேலும் பின் வரும் கதையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்பே அப்பிரச்சினைகள் பற்றி விவாதித்து ஒரு முடிவு செய்கின்றனர். அம்முடிவு என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதை 1999இல் கல்கி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கதை. தலைப்பு மட்டும் சரியில்லை. “படிக்காத பெரியவரும் படித்த தொழிலதிபரும்” என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.
பூமி இழந்திடேல்
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று.
கிராம முக்கியஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்கி நிலம் கேட்டபோது, ஊர் கூடி முடிவு செய்து, பல பேருக்கு வேலை வாய்ப்பைத் தரும் பெரிய தொழிற்சாலை தொடங்குவதை வரவேற்று நியாயமான விலையில் நிலம் தர முன் வந்தனர்.
தேவைக்கு மேல் ஒரு பங்கு அதிகமாகவே நிலங்களை வாங்கி வளைத்துப்போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது.
மொத்த நிலத்தையும் சர்வே செய்து, அயல் நாட்டுப் பொறியாளர்களையும் வரவழைத்து கம்பெனி நிர்மானிக்கப் ‘பிளான்’ போடப்பட்டு முறைப்படி ‘அப்ரூவல்’ வாங்கியாகிவிட்டது.
இன்னும் இரண்டு நாட்களில் அடிக்கல் நாட்டு விழா.
ஆயத்தப் பணிகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கப் போன சோப்ரா, இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை.
“ஏழைகள் வாழ்வைக் கெடுக்காதே… எங்கள் கிராமத்தை கெடுக்காதே… காற்றையும் நீரையும் கெடுக்காதே… எங்கள் உயிரைக் குலைக்காதே…” என்ற கோஷத்தை இந்த நேரத்தில் சோப்ரா நிச்சயமாக எதிர்பார்க்காததால் ஒரு நிலை குலைந்து தான் போனார். அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக்கொண்டார்.
“அடிக்கல் நாட்டறதை நிறுத்தக் காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா…?” கூட்டத்தை நோக்கி சோப்ரா கேட்க,
“… … … … …” கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம்.
ஓர் இளைஞன் முன் வந்து சோப்ராவிடம் பேசினான். “ஐ ஆம் சத்யம். நான் எம்.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி ” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.
“க்ளாட் டூ மீட் யூ மிஸ்டர் சத்யம். தொழிற்சாலை ஆரம்பிச்ச உடனே நம்ப தொழிற்சாலையிலேயே நீங்க கெமிஸ்ட் ஆயிடுங்க…”
“சாரி சார். வேலை கேட்டு இப்போ நாங்க உங்க முன்னால போராட்டம் நடத்தலை. இந்தக் கிராமத்துல இந்தச் சாயத் தொழிற்சாலை ஆரம்பிக்கறதை நாங்க விரும்பலை.”
“காரணம்…?”
“எங்க கிராமத்தை நாங்க பாதுகாக்க விரும்பறோம். தலைமுறை தலைமுறையா நாங்க சுவாசிக்கிற நல்ல காற்றையும் குடிக்கற நல்ல தண்ணியையும் வரப்போற சந்ததிகளும் அனுபவிக்கணும்னு ஆசைப்படறோம்.”
“ஓ கே..! இந்த இடத்தை இந்த நோக்கத்துக்காகத்தான் நான் வாங்கறேன்’னு ஊர் ஜனங்க முன்னே எடுத்துச் சொல்லிட்டு, ஊர் மக்கள் ஒத்துழைப்போடத்தானே வாங்கினேன்..? இப்போ சொல்ற கருத்தை அப்பவே நீங்க சொல்லியிருக்கலாமே…!”
“சாரி சார். நான் ‘நார்த்’ல ஒரு கம்பெனீல கெமிஸ்ட்டா இருக்கேன். லாங் லீவுல நேத்திக்குத்தான் இந்த ஊருக்கு வந்தேன். விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன். தொழிற்சாலை தொடங்கினா ஏற்படப்போற பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
“மிஸ்டர் சத்யம்… நீங்க ஒரு ‘லே மேனா’ இருந்தா உங்களுக்கு விளக்கலாம். நீங்களே ஒரு கெமிஸ்ட். உங்களுக்குப் பொல்யூஷன் கண்ட்ரோல் பத்தி நான் விளக்க வேண்டியதில்லை. இந்த கிராமத்துல எத்தனை பேருக்கு இந்தத் தொழிற்சாலை வேலை கொடுக்கும்னு நீங்க நினைச்சிப் பார்த்தீங்களா சத்யம்..?”
“சாரி சார். நோ காம்ப்ரமைஸ். இந்த கிராமத்துல தொழிற்சாலை தொடங்க நாங்க அனுமதிக்கப் போவதில்லை…” என்று உறுதியாகச் சொன்னான் சத்யம்.
சோப்ராவை மேலே பேச விடாமல் கையமர்த்தினான் சத்யம்.
சத்யம் அவ்வாறு கூறியதும் “தொடங்காதே… தொடங்காதே… சாயச்சாலை தொடங்காதே…! கெடுக்காதே… கெடுக்காதே… மண்ணையும் நீரையும் கெடுக்காதே…!” என்று கூட்டம் முழங்கியது.
அதற்கு மேல் சோப்ரா எதுவும் பேசவில்லை. ‘ஜீப்’பில் ஏறித் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த லாரிகளும் வேன்களும் திரும்பின.
சோப்ராவுக்கு எதிர்ப்போ ஏமாற்றமோ புதிதல்ல. அடுத்து ஆக வேண்டியதைப் பற்றி யோசிக்கலானார் சோப்ரா.
தன் அலுவலகம் வந்தவுடன் உடனடியாகத் தொலைப் பேசினார். அமைச்சர் திறப்பு விழாவிற்கு வருவதாக இருந்த திட்டத்தை ரத்து செய்தார்.
“தம்பி சத்யம் மட்டும் இந்தச் சமயத்துல வந்து நமக்குச் சொல்லலைன்னா நம்ம கிராமமே வீணாயிருக்கும்…!”
“சத்தியம் தம்பியால நம்ம கிராமமே ஒரு பெரிய கண்டத்துலேர்ந்து தப்பிச்சிது…!”
“நம்ம கிராமமே முன்னேற முட்டுக்கட்டை போட்டுட்டானே பாவிப் பய…!”
“அவனுக்கென்ன… வடக்கே போயி மாசம் பத்தாயிரத்துக்கு மேலே சம்பாரிக்கறான். இந்தக் கம்பெனி ஆரம்பிச்சி நாலு பேர் நல்லா இருந்துட்டா அவனை யாரும் மதிக்கமாட்டாங்க பாரு… அதான் இப்படிக் கிருத்துருவம் பண்ணிட்டான்…!”
“டிகிரி, டிப்ளமான்னு படிச்சி வேலை கிடைக்காம சுத்திக்கிட்டிருந்த நமக்கு ஏதோ வழி பொறக்கும்னு கனாக் கண்டுக்கிட்டிருந்த நேரத்துல் இப்படி திடீர்னு வந்தவன் கெடுத்துப்புட்டானே..”
“ஏழெட்டு வருசமா இந்த ஊர்ப் பக்கமே தலை வெச்சிப் படுக்காதவன் திடீர்னு ஊருக்குள்ளே நுழைஞ்சதுமே நினைச்சேன். நினைச்ச மாதிரியே குடி கெடுத்துட்டான்.”
“இவனும் இந்த மாதிரி கம்பெனிலதானே வேலை பாக்கறான். அந்த ஊர்ல மட்டும் ஊரைச் சுத்தி இருக்கற இடம் நாசமானாப் பரவாயில்லையாமா…?”
“எப்படியாவது கம்பெனி ஆரம்பிக்க வெச்சிடணும்டா… அதுக்கு என்னடா வழி..?”
“ஊர் ஜனங்கள்ல முக்கால்வாசிப் பேரு அந்த சத்யம் பயப் பக்கம் சப்போர்ட்டா இருக்காங்க. முதலில் ஊர் ஜனங்களை எப்படியாவது ‘காம்ப்ரமைஸ் பண்ணணும்மா…”
இப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் ஊரில் பேச்சுக்கள். சுற்று வட்டாரம் முழுவதும் பரவலாய்ப் பேசப்பட்டன.
அன்று சலசலத்துப் பாயும் ஆற்றங்கரைத் திடலில் சத்யத்தின் தலைமையில் ஊர்க் கூட்டம் கூடியது.
“கம்பெனி தொடங்கக் கூடாதுன்னு நாம போராட்டம் நடத்தின பிறகு ஒரு மாசமா அது அமுங்கிக் கிடக்குது. திட்டத்தைக் கை விட்டுட்டாங்கன்னு நினைச்சி நாம சும்மா இருந்துட முடியாது. திடீர்னு ஒரு நாள் அரசியல்வாதிகளை துணைக்கு வெச்சிக்கிட்ட நம்மைப் போல கிராம மக்களை வாய் அடைச்சிட்டு சாயத் தொழிற்சாலையைத் தொடங்கிடுவாங்க. புலி பதுங்குதுன்னா அது பாயறதுக்குத்தான் தன்னை ஆயத்தப்படுத்திக்குதுன்னு நாம புரிஞ்சிக்கணும். எந்தத் தடை வந்தாலும் நம்ம கிராமத்துக்காக, நம்ம ஊர் நலனுக்காக, இப்போ பார்க்கறோமே சலசலத்து ஓடற ஆறு, அந்த ஆற்றின் தூய்மையைக் காப்பாத்தறதுக்காக, இப்போ நாம சுவாசிக்கற காத்தை அடுத்தடுத்து வரப்போற சந்ததிகளும் சுவாகிக்கணும்ங்கறதுக்காக நாம எதிர்த்து நின்னுப் போராடணும். நம்ம உயிரைக் கொடுக்கவும் தயாரா இருக்கணும். செய்வீர்களா?” என்ற சத்யம் முழங்க
“போராடுவோம்… போராடுவோம்…” என்று கூட்டம் முழங்கியது.
அப்போதுதான் சத்தியத்தின் முன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் எழுந்தார்.
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கணும்..” என்று கேட்டுக் கொண்டான் சத்யம். ஊர் அமைதி காத்து ‘சத்யத்திற்கு’க் கட்டுப்பட்டது.
எழுந்து நின்ற எழுபது வயதைத் தாண்டிய அமாவாசைக் கிழவர் சத்தியமூர்த்தியை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.
“சத்யம் தம்பி… எனக்கு சில சந்தேகங்க இருக்கு, அதான் கேக்லாமுன்னு…”
“கேளுங்க பெரியவரே… கேளுங்க…”
“தம்பி, நான் படிக்காதவன். நான் கேக்கற கேள்வில ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கணும். நான் கேட்க வர்றது என்னன்னா… ஊர் உலகத்துல எத்தனையோ இடங்கள்ல எத்தனை யெத்தனையோ இடங்கள்ல இதுபோல தொழிற்சாலைங்க இருக்குது. அந்த ஊருங்க எல்லாத்துலயும் காத்து கெட்டுப்போய் தண்ணி கெட்டுப் போய் ஜனங்க வாழ முடியாமத்தான் இருக்குதா…?”
“பெருசு, முக்கால் வாசி இடங்கள் இந்த மாதிரி ஆபத்தான நிலைலதான் தத்தளிச்சிட்டுக்கிட்டிருக்கு…”
“முக்கால் வாசி ஊருங்க அப்படியிருக்கங்கிறியே… அப்போ கால்வாசி ஊர்கள் அப்படி இல்லேங்கறியா தம்பி…”
“ஆமாம். அந்த கால் வாசி இடங்கள்ல மக்கள் விழிப்புணர்வோட இருக்கறதுனால ஊர் காக்கப்படுது. கம்பெனியைத் தொடங்க விடாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம் பெருசு.”
“அப்போ கம்பெனியும் நடத்தி ஊர் நாசமாகாமல் இருக்க வழி இருக்குன்னு சொல்லு…”
“இருக்கு. தொழிற்சாலைல இருந்து வர்ற கழிவு நீரை அப்படியே ஆத்துல கலக்காம அதை சுத்தம் பண்ணி விட்டாக்கா, ஆற்று நீர் கெடாம இருக்கும். ஆனா ‘ஈ டீ பீ’ ன்னு சொல்ற சுத்தம் செய்யற வேலையை பொதுவா கம்பெனி செய்யறதேயில்லை.”
நிறைய நிறைய விஷயங்கள் சொன்னான் சத்யம். ஊர் மக்கள் வாய் பிளந்துகொண்டு கேட்டனர்.
படிப்பறிவில்லாத அமாவாசைக் கிழவருக்கு சத்யம் சொன்னதில் பல புரியாவிட்டாலும் சில விஷயங்கள் மட்டும் ஆணித்தரமாகப் புரிந்தன.
‘காற்றும், நீரும், நிலமும் மாசுபடாமல் கம்பெனியை நடத்த முடியும்…’ என்ற விஷயம் அவரினுள் தன்னம்பிக்கையை விதைத்தது.
தொழிற்சாலை தொடங்குவது தடைபட்டபோது அது தற்காலிகத் தடையாகத்தான் இருக்கும் என நினைத்தார் சோப்ரா. ஆனால் ஆற்றங்கரைத் திடலில் சத்யத்தின் தலைமையில் கூட்டம் நடந்ததைத் பற்றிக் கேள்விப்ட்ட சோப்ரா, ‘இந்தக் சிக்கலை விளக்கி தொழிற்சாலையைத் தொடங்க சத்யத்தை ‘கன்வின்ஸ்’ செய்வது ஒன்றே வழி எனப் பட்டது சோப்ராவிற்கு.
‘சத்யத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் வருவதற்கு முரண்டு பிடிக்கலாம். விவரமாய் புள்ளி விவரங்களைக் குறித்து சத்யத்தின் பார்வைக்கு அனுப்பினால் என்ன…?’ என்று தோன்ற உடனடியாக அதைச் செயல்படுத்தினார் சோப்ரா.
சோப்ரா அனுப்பிய பல புள்ளி விவரங்கள் சத்யத்திற்கு ஓரளவு திருப்தி அளித்தாலும் தனி ஒருவனாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில், “ஊர் கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
அன்று கிராமமே விழாக் கோலம் பூண்டது.
பேண்டும் சூட்டுமாய் பலப் பல ஆபீசர்கள்.
எதிர்ப்பை உமிழும் கிராமத்து ஜனங்கள்.
சோப்ரா எளிமையாகவும் பொறுமையாகவும் பல விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். “இந்த ஊர் காத்தையும், நீரையும் மாசுபடாமல் காப்பது தன் கடமை என சூளுரைத்தார். சுத்திகரிப்பு ப்ளாண்ட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசினார்.
அப்பொழுதுதான் அமாவாசைக் கிழவர் எழுந்தார். “ எனக்கொரு சந்தேகம், கேக்கலாமுங்களா..?”
“ஓ… ! கேளுங்க…” என்றார் சோப்ரா.
இந்தக் கிழவர் என்னதான் கேட்கப் போகிறார் என்பதைக் கேட்க ஊர்க்கூட்டம் வாய்ப் பொத்தி, காது தீட்டிக் காத்திருந்தது.
“ஐயா நீங்க காத்தையும், தண்ணியையும் கெடுக்காம கம்பெனி நடத்துவோம்னு சொல்றீங்க. அது, இது இது இப்படிச் செய்வோம்னு பட்டியல் போடுறீங்க. அதோட இந்த ஊர்ச் சத்யத்துக்கு கம்பெனி நிர்வாகத்தைப் பாக்கற அதிகாரத்தையும் கொடுக்கறதாச் சொல்றீங்க.. அதெல்லாம் உங்க நேர்மையைக் காட்டுது. நான் கேட்க நினைச்சது என்னன்னா…ஒவ்வொரு நாளும் இந்த சுத்திகரிப்பு வேலைக்கு எவ்வளவு செலவு செய்வீங்கனு சொல்ல முடியுமா..?”
கோப்பைப் புரட்டிய சோப்ரா, “ஒரு நாளைக்கு உத்தேசமா இருபதனாயிரம் ரூபாய் ஆகும் பெரியவரே…” என்றார் சோப்ரா.
“அந்தச் செலவு கம்பெனியைப் பொருத்தவரை லாபமா..? நட்டமா..?”
சோப்ரா வியந்தார். ‘சத்யம், கிராம மக்களை நன்றாகத்தான் விழிப்புணர்வூட்டியிருக்கிறான்.’ என நினைத்துக் கொண்டார்.
அமாவசைச் கிழவரே தொடர்ந்தார். “ நீங்க சுத்திகரிப்புக்காக செய்யற செலவு கம்பெனியைப் பொறுத்தவரை நட்டம்தான். அந்தச் செலவு செய்வதை ஒருநாள் நிறுத்திக்கிட்டாக்கூட கம்பெனிக்கு இருபதினாயிரம் ரூபாய் லாபம், அப்படித்தானே…?”
“பெரியவரே.. இப்படிச் சுத்தம் செய்யாம ஆத்துல கலந்தா சுற்றுச் சூழல் அதிகாரிகள் வந்து கம்பெனியை மூடி சீல் வெச்சிட்டுப் போயிடுவாக்க அய்யா…”
“ஒரு நாளைக்கு இருபதினாயிரம்னா… மாசத்துக்கு கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் இதுக்காக செலவு பண்ணப் போறீங்க. இந்த ஆறு லட்சத்துல ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ நீங்க அந்த அதிகாரிங்களுக்குக் கொடுத்தாக்கூட உங்களுக்கு நாலு லட்சம் லாபம்தானுங்களே…அதனால…”
“அதனால தொழிற்சாலை தொடங்க வேண்டாம்னு சொல்றீங்களா பெரியவரே..”
“ஐயா நான் படிக்காதவன். கை நாட்டு. எங்களைப் போல உள்ளவங்களுக்கெல்லாம் தெரிஞ்சது இந்த ஊர் மண்ணும், காத்தும், தண்ணியும்தான். இதுங்களை மாசுபடாம பாதுகாக்க மனுசனோட சுயநலம் ஒண்ணுதான் வழின்னு எனக்குத் தோணுது.”
“நீங்க என்னதான் சொல்ல வரீங்க பெரியவரே?”
“ஐயா, நீங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு கம்பெனி நடத்துவேன்’னு சொன்னீங்க. இந்த ஊர் சத்யத்தையே ஆலை நிர்வாகத்தை கவனிக்கச் சொல்றதா சொல்றீங்க. நீங்களும் சத்யமும் இருக்கற வரைக்கும் மட்டும் தான் இந்தக் கம்பெனி நடக்கப் போவதில்லை. உங்களுக்குப் பிறகும் கம்பெனி நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். உங்களுக்குப் பிறகு நிர்வாகத்துககு வரவங்க உங்களைப் போலவே நேர்மையானவங்களா இருப்பாங்கங்கறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு…?”
“ … … … … …”
“அதனால, நான் சொல்றபடி அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு கம்பெனியை தாராளமாத் தொடங்கி நடத்தலாம்…” என்ற அமாவசைக் கிழவரின் யோசனை என்னவாக இருக்கம் என்பதை அறிய சோப்ரா முதல், ஊர்கூட்டம் வரை காது தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தது.
“ஐயா, நீங்க கம்பெனி கட்டறதுக்குத் தேவையான இடத்தைப் போல இரண்டு மடங்கு நிலங்களை வளைச்சிப் போட்டிருக்கீங்கல்ல. கம்பெனி இடம் போக மீதி இடத்துல கம்பெனீல வேலை செய்யப்போற அத்தனை ஊழியர்களுக்கும் முதல்ல குடியிருப்பு கட்டுங்க…”
“குடியிருப்பு கட்டறதுனால…”
“குடியிருப்பு கட்டுறது முக்கியமில்லை. எல்லா ஊழியர்களும் கண்டிப்பாக அந்த குடியிருப்புலதான் குடும்பத்தோட தங்கியாகணும்னு கண்டிஷன் போட்டுடுங்க. அதோட முக்கியமா ஒண்ணு செய்யணும். அந்தக் குடியிருப்புல தங்கறவங்களுக்கு இந்த ஊர் ஆத்துத் தண்ணியைத் தவிர வேற தண்ணி வசதியே செய்து தரப்படாதுன்னு கண்டிஷன் போட்டுட்டா, பொதுநலம் கருதலேன்னாலும் சுயநலத்துக்காகவாவது ஆத்துத் தண்ணியைக் கெடுக்காம காலம் முழுக்க கம்பெனி நல்லா நடக்கும். ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிப்புட்டேன். நீங்க முடிவு பண்ணிக்கங்க…” என்று சொல்லிவிட்டு கிழவர் அமர, சோப்ரா அமாவாசைக் கிழவர் பாதம் தொட்டு வணங்கினார்.
முந்நூறு குடும்பங்கள் குடியிருக்கும் அளவிற்கு குடியிருப்புகள் கட்ட அடுத்த வாரம் அடிக்கல் நாட்டப்படும் என அறிவித்தார்.
அதோடு ஊர்ப் பெரியவர் அமாவசைக் கிழவர்தான் வந்து திறப்பு விழா செய்யவேண்டும் என்ற போது அமாவசைக் கிழவரின் கண்கள் இரண்டு நிலவுகளைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
– 17.10.1999 கல்கி போட்டியில் பரிசு பெற்ற கதை
பின்னுரை
ஏழாவது மனிதன் திரைப்படத்தின் முடிவு சரியில்லை தான். அதில் முடிவு மக்கள் தொழிற்சாலையை ஏற்று எடுப்பதாக முடிகிறது. இதனால் மாசு பிரச்சினை தீரப் போவதில்லை. அதே போன்று இக்கதையில் பெரியவர் கூறும் ஆற்று நீரை குடிநீராக்கும் தீர்வும் சரியில்லை. தொழிற்சாலை நிரந்தரமல்ல. திருப்பூரில் நடமாடும் சாயப் பட்டறைகளை வைத்து நொய்யல் ஆற்றை மாசு படுத்தவில்லையா என்பது போன்ற கேள்வி எழுகிறது. மேலும் உள்ளூர் தொழிற்சாலை மாசு படுத்தாவிடினும் மற்ற ஊர்கள் ஆற்றை மாசு படுத்துவதை இவர்கள் தடுக்க முடியுமா. சுத்தம் செய்யாத ஆற்று நீரை தொழிலாளர்கள் பயன் படுத்த முடியாது. ஆக இரன்டு தீர்வுகளும் பிரச்சினைக்கு நல்ல தீர்வுகள் அல்ல. இந்த கருத்துக்கு வர உரிய காரணங்கள் கீழே.
இக்கதையை வாசிக்கும்போது தோன்றிய சம்பவங்கள்.
1. டாட்டா கம்பெனி தென் தமிழகத்தில் தேரி மணலில் டைட்டானியம் உள்ளதை கண்டுபிடித்து டைட்டானியம் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முன்வந்தது. நிலங்களை வாங்கியது. அச்சமயம் வேறு ஒரு அரசியல் பிரமுகர் மணலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார். அவரால் மக்கள் தூண்டப்பட்டு தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்தனர். எதிர்ப்பு கூடியதால் திட்டத்தைக் கை விட வேண்டியதாயிற்று.
2. கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து இடிந்த கரை மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள். அணு உலைகள் 2க்கு பதில் ஆறாகியது. அங்கு வேலை செய்பவர்கள் வளாகத்திலேயே குடி இருக்கிறார்கள். கடல்நீரை சுத்திகரித்து பயன் படுத்துகிறார்கள். போராட்டம் பாழ்.
3. ஸ்டெர்லைட் காப்பர் மாசு சுத்திகரிக்கும் அமைப்பையும் ஏற்படுத்தி விட்டு பெரியவர் சொன்னது போல் அதை பயன் படுத்தாமல் காற்றை மாசு படுத்தினார்கள். விளைவு துப்பாக்கிசூடு, தொழிற்சாலை மூடப்பட்டது. பலர் வேலை இழந்தனர்.
105 நாடுகளின் தேசிய கீதம் பாடும் பெண் குழந்தைக்கு வாழ்த்துகள். இக்காணொளி பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநகைகள் மீட்டெடுத்த போலீஸாருக்கு ப் பாராட்டுகள் வாழ்த்துகள்.
நல்ல விஷயங்கள் நிறைய நடக்கட்டும்
கீதா
கதைக்கரு நன்று நல்ல கரு. ஆனால் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. கொஞ்சம் செய்தி எழுதியது போல இருக்கு.
பதிலளிநீக்குகீதா
எனவே மனதில் ஒட்டவில்லை. இப்படியான செய்திகள் நிறைய பார்க்கிறோம்.
பதிலளிநீக்குமுடிவு பாசிட்டிவாக முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் முடிப்பது போல இருக்கிறது. ஆனால் எல்லோரும் இப்படியான தீர்வு எதிர்பார்க்கும் மனதிலேனும் கனவு காணபது உண்டுதான். தொழில் வளர்ச்சியைத் தடுக்க முடியாது அதனால் விளையும் பாதகங்களை எப்படி சமாளிக்கலாம் என்ற தீர்வு.
யதார்த்தத்தில் ஜெ கே அண்ணா சொல்லியிருப்பது போல் தான் நடக்கின்றன.
திருப்பூர் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு பற்றி நான் பதிவில் சொல்லியிருந்த நினைவு.
தீர்வுகள் யோசிக்கும் போது முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படு வாய்ப்புண்டு எனவே அவர்கள் செயலில் காட்டுவதில்லை என்பதே யதார்த்தம்.
கீதா
கீதாவின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்கு195 நாடுகளின் தேசிய கீதம் பாடும் மாணவி ....அடேங்கப்பா.!....வியக்க வைக்கிறார். நகையை மீட்ட பொலிசாருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதையின் முடிவுத் தீர்வு கதைக்கு ஒத்துவரும் மக்கள் வாழ்க்கைக்கு கேள்விக் குறிதான்.
முதல் காணொளி எனக்கும் வந்தது. கொஞ்சம் பார்த்தேன். நகை மீட்டுத்தந்த விஷயம் நல்லது. சம்பந்தப்பட்ட காவல்துறை நண்பர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குகதை படித்தேன். சில விஷயங்கள் கதையில் சொன்னது போல நடப்பதில்லை.