ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 06 நெல்லைத்தமிழன்

 

சுந்தரச் சோழன் தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியதும், அவன் தலைமையில் வீரபாண்டியனை எதிர்த்துப் போர் புரிய பெரும் படை அனுப்பியதையும், ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைக் கொய்ததையும் சென்றவாரம் பார்த்தோம்.

சுந்தரச் சோழன் ஆரம்பகாலத்தில் வெற்றிகள் பெற்று சந்தோஷ வாழ்க்கை வாழ்ந்தபோதும் அவனது இறுதிக்காலம் அவலமாக மாறிவிட்டது. இளவரசுப் பட்டம் கட்டி 7ம் வருடத்தில், சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான்.  பிறகு இராஜராஜன் அரசனான பிறகு கொலைக்குக் காரணமான நான்கு பிராமணர்களும் தண்டிக்கப்பட்டனர். அவர்களில் இருவர், அரசாங்கத்தின் உயர் உத்தியோகத்தில் இருந்தவர்கள்.  ஏன் அந்தக் கொலை நடந்தது, எதனால் அரசாங்க உயர் அதிகாரிகள் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்தனர்? அந்தக் கொலைக்கும், அரசனாவதில் பெரு விருப்பம் கொண்டிருந்த உத்தமச் சோழனுக்கும் சம்பந்தம் இருந்ததா?,  இல்லை இராஜராஜன் தம்பி என்பதால் தன் ஆதிக்கத்தைச் செலுத்தலாம் அல்லது தனக்கு மிக விருப்பமான அருண்மொழி வர்மன் இளவரசனாகட்டும் என்பதற்காக சகோதரி குந்தவை செய்த சதியா, இல்லை தங்கள் மகளை மணம் புரிந்தவன்/புரியப்போகிறவன் ஆட்சி பீடத்திற்கு வரட்டும் என்பதற்காக நடந்த சதியா என்பதெல்லாம் பல நாவலாசிரியர்களுக்கான கரு. நமக்கல்ல.

பட்டத்து இளவரசன் இறந்த துக்கத்தில் சுந்தரச் சோழன் படுத்த படுக்கையாக இருந்து விரைவில் இறந்தான். அவன் தன் கடைசிக் காலத்தில் தான் பொன்வேய்ந்து கட்டிக்கொண்டிருந்த காஞ்சீபுரத்து மாளிகையில்தான் மறைந்தான். அதனால் சுந்தரச் சோழன், ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்என்று குறிப்பிடப்பட்டார். சுந்தரச் சோழன் இறந்ததும், அவனுடைய பட்ட த்து அரசியும்  ஆதித்தன், குந்தவை, இராசராசனின் அன்னையுமான வானவன் மாதேவி, உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்.

மதுராந்தகத் தேவருக்கு அரசுக்கட்டிலில் உரிமை இருந்ததாலும், தன்னை அன்போடு வளர்த்தவரும் தனக்கு மிகவும் பிரியமானவரான செம்பியன் மாதேவியின் மகன் மதுராந்தகத் தேவர் என்பதால், அவர் விரும்பும்வரை அவரே அரசனாக ஆளட்டும் என்று அருண்மொழித் தேவர் சொல்லிவிட்டார். அதனால் மதுராந்தகத் தேவர், உத்தமச் சோழன் என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார். இவர் ஆட்சிக்காலத்தில் ஒரு போரும் நடைபெறவில்லை.  இவரது ஆட்சிக்காலத்தில்தான் தங்க நாணயம் வெளியிடப்பட்டது. (கிடைத்ததிலேயே மிகப் பழமையானது இவர் ஆட்சிக்கால நாணயம்தான்)  நாட்டை அமைதியாகவும் செல்வச் செழிப்போடும் நடத்திய இந்த மன்னன் 16 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். அவனது மகனான  மதுராந்தகன் கண்டராதித்த சோழன், கோயில்களும் அற நிலையங்களும் நல்ல நிலையில் செயல்படுவதைக் கண்காணிக்கும் உயர் பதவியில் இருந்தான்.

உத்தமச் சோழன் 985ல் இயற்கையாக மறைந்ததும், பட்டத்து இளவரசனாக இருந்த அருண்மொழித் தேவன், ராஜகேசரி இராஜராஜன் என்ற பெயருடன் அரியணை ஏறினான்.

சோழச் சக்கரவர்த்திகள் என்ற வரிசையில் மூன்று பேர்கள் என்னைக் கவர்கின்றனர், அவர்கள் கட்டுவித்த கோயில்களால்.

ராஜராஜ சோழன், ராஜராஜேச்வரம் என்ற பெரிய கோயிலை சோழப்பேரரசின் தலைநகரமான தஞ்சையில் கட்டுவித்தான். அவனுக்குப் பிறகு வந்த அவனது மகன் ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அங்கு கங்கைகொண்ட சோழீச்வரம் என்ற கோயிலை நிர்மாணித்தான். அது தஞ்சைப் பெரிய கோயில் மாதிரியை வைத்து உருவாக்கப்பட்டது.  

அதற்குப் பிறகு, 8 தலைமுறை கழித்து சாளுக்கியச் சோழர்கள் மரபில் வந்த இரண்டாம் இராஜராஜன், பழையாறையில் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டுவித்தான்.  இது கட்டப்பட்ட காலத்தில் ராஜராஜேச்வரமுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது.  அது அமைந்திருந்த பகுதி, ராஜராஜேச்வரம் என்று அழைக்கப்பட்டது. அந்தப் பெயர்தான் மருவி, தாராசுரமாக தற்போது மாறிவிட்டது. தாராசுரம் தனி ஊராக இப்போது இருந்தாலும், அது சோழர்கள் அரண்மனை இருந்த பழையாறை நகரின் ஒரு பகுதிதான்.

அந்தக் கோவிலின் சிற்பங்கள், புகைப்படங்களைத்தான் நாம் சில வாரங்களாக இந்தப் பகுதியில் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

மண்டபத்தின் இன்னொரு பகுதி. 





 ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.   இந்த மண்டபம் பல நுணுக்கமான சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது.  பல சிற்பங்களும் சில செண்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களைத்தான் இனி நாம் காணப்போகிறோம்  மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் மிகச் சிறிய அளவில் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். எப்படி இவ்வளவு நுணுக்கமாக சிற்பிகளால் செதுக்க முடிந்தது, அதற்குரிய ஆதரவும் பொருளுதவியும் அரசாங்கத்திடமிருந்து வந்திருந்தால் அன்றி இது சாத்தியமற்றது.

பேரரசர்கள் போரில் வெற்றி பெற்றதோ இல்லை பெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்ததோ இல்லை பெரும் நிலப்பரப்பை ஆண்டதோ அவர்களைக் காலம் காலமாக நினைவுகொள்ளப் போதுமானதில்லை. எப்போது அவர்கள், கலைப்படைப்பை உருவாக்கும் காரணிகளாக அமைகிறார்களோ அப்போதுதான் அவர்களைக் காலம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் நினைவில்கொள்கிறது. இதனால்தான் பேரரசர்கள் கலைப்படைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

மகாமண்டபத்தின் தூண்களில் இருக்கும் மிக அழகிய சிற்பங்கள்


ஒவ்வொரு சிற்பமும் ஒரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதனைப் புரிந்துகொள்ளும் அளவு எனக்கு அந்தக் கதைகள் நிகழ்வுகள் தெரியாது

இடது பக்கம் ராமாயண நிகழ்வு. வலது பக்கம் நிச்சயம் மரங்களின் கிளையில் கிருஷ்ணர் இருக்கவேண்டும்.





இடது பக்க சிவபுராண நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா?



அரை அடிக்கும் குறைவான இடத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்

இந்த மண்டபத்திலேயே நூற்றுக்கும் அதிகமான சிற்பங்கள் உள்ளன. ஆனால் மண்டபத்தின் பல பகுதிகளில் வெளிச்சம் இல்லாததால், பலவற்றைப் படம் பிடிக்க முடியவில்லை. அடுத்த வாரமும் இந்த மண்டபத்தில்தானே இருக்கப்போகிறோம். மற்ற சிற்பங்களையும் அடுத்த வாரம் காணலாமா?

 (தொடரும்) 

43 கருத்துகள்:

  1. எந்த ஆட்சியிலும் அக்காலமானாலும் சரி இக்கால அரசியல் ஆனாலும்.சரி இப்படி அரசியல் கொலைகள் நடப்பது சகஜம் ..மர்மங்கள் உட்பட ..அப்பவும் நிஜ குற்றவாளி வெளியில் வரவில்லை....இப்பவும் அப்படித்தான்.... என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. நலமா? இன்று அதிகாலையிலேயே வந்ததன் மூலம், ஞாயிறா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோம் என நினைக்கலை போலிருக்கு. ஒருவேளை ஆண்களுக்குத்தான் அந்த வாய்ப்பு உண்டோ?

      நீக்கு
    2. நிஜ குற்றவாளிகள் எந்தக் காலத்திலும் பிடிபடுவார்கள் ஆட்சியாளர்கள் தொடர்பு இல்லையென்றால்.தொடர்பு இருந்தால் இளிச்சவாயர்இள் மாட்டுவார்கள்

      நீக்கு
  2. கலைப்படைப்பு அரசர்களை ஆண்டாண்டுகாலமாக நினைவு கொள்ள வைக்கும் சரிதான் நெல்லை... பல்லவர்கள்,..சோழர்கள் ஹோ ய்சாளர்கள்....ஆனா கலிங்கத்து பரணி? என்னவோ டக்கென்று நினைவுக்கு வந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி புரியலை. சோழ அரசன் ஆண்ட காலத்தில் கலிங்கத்துப் பரணி இயற்றப்பட்டது. அதனால் அதில் அரசன் மற்றும் போர் குறிப்புகள் உண்டு.

      உங்களுக்குத் தெரியுமா? திவ்ய பிரபந்தம், சங்க இலக்கியங்கள், தேவாரம் திருவாசகம் போன்ற சமய நூல்களும் ஒரு அரசன் காலம் நிகழ்வுகளை அறிவதில் உதவுகின்றன. குழப்பவும் செய்யும்.

      குழப்புவதற்கு உதாரணம் இராமானுசர் காலம். பயணம் என்பதால் விரிவாக எழுதவில்லை

      நீக்கு
  3. சிற்ப படங்கள் எல்லாம் அட்டகாசம் நெல்லை சின்ன.இடத்துக்குள்ள இவ்வளவு நுணுக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். அனைவரும் நலமா பிரச்சனை இல்லாமல் இருந்துவிட்டால் அவனுக்கு எப்படி பொழுதுபோகும்?

      நீக்கு
    2. அது சரி.? பொழுது போவதற்காக இந்த பிரச்சனையை துவக்கியவனுக்கு பிறகுதான் புரிந்திருக்கும்.

      "ஆயிரம் உறவுகளுடன் இருக்கும் நமக்கே ஏகப்பட்ட பிரச்சனைகளை தினமும் எதிர்கொள்ள காத்திருக்கும் போது, பொழுதை போக்க புதிய பிரச்சனைகளுக்காக வேறு "இவர்களை" படைத்து தினம் தினம் "இவர்கள்" புலம்பல்கள், பிரார்த்தனைகள் என தினசரி கேட்க வேண்டியுள்ளதே என அலுத்துப் கொள்வான்."

      நீக்கு
    3. பிரச்சனை ஏற்பட நெருங்கிய உறவுகள் பத்துபேர் போதாதா

      நீக்கு
    4. நான் கூறியது இறைவனுக்குள்ள ஆயிரம் உறவுகள். .

      நீக்கு
  5. அந்தக் கோவிலில் இருக்கும் நுணுக்கமான எல்லா சிற்பங்களையும் பதிவில் கொண்டுவரவேண்டுமென்றால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வந்தால் கூட போதாது!  நிறைய நுணுக்கமான சிற்பங்களை அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள்.

    //இடது பக்க சிவபுராண நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா? //

    ஹிஹிஹி...   கீதா அக்கா வந்து சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். ஒவ்வொரு முறையும் சில சிற்பங்கள் என்னை மிகவும் கவரும்.

      சில பல கோயில்களின் சிற்பச் சிறப்பால் நிறைய பதிவுகளில் வெளியாகிறது. அயர்ச்சி இல்லாமல் இருக்க வேறு தொடரும் ஆரம்பிக்க இருக்கிறேன்

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஐராவதீஸ்வரர் கோவில், படங்கள், சிற்பங்கள் என பதிவு அருமை.

    சோழர்களின் கதை ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. நான் பொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகத்தை முழுமையாக பார்க்கவில்லை. கடைசியில் ஆதித்த சோழரின் கொலைக்கு யார் காரணம் என்பதை நாவலாசிரியர்களிடம் விட்டு விட்டீர்கள். அப்போது நாட்டு மன்னர்களுடையே பகையும், போரும், உடன் பிறப்புகளாக இருந்ததென்னவோ உண்மை.. ஆனால், அதையும் மீறி அவர்களை கலையார்வம் நமக்கு இப்படி அருமையான கோவில்களை தந்திருக்கிறது. அதற்கு அவர்களுக்கு நாம் கடமைபட்டுள்ளோம்.

    ராஜ கம்பீரின் திருமண்டபம் பெயருக்கேற்றபடி கம்பீரமாக விஸ்தாரமாக உள்ளது. அந்த பெரிய மண்டபமும், தூண்களின் சிற்பங்களும், அருமை. எத்தனை நுணுக்கமான சிற்பங்கள் என வியக்க வைக்கிறது.

    இதை செதுக்கியவர்கள் முழுமூச்சுடன் அமர்ந்து வேறெதிலும் கவனமின்றி பணியாற்றி இருப்பார்கள் இல்லையா? உளியும், அவர்கள் கற்பனையும் இணைந்து கற்களில் தன் சிற்பக் கலையை பதித்திருப்பதை காண நமக்கு இரு கண்கள் போதாது. மிகவும் ரசித்தேன்.

    ஒவ்வொரு முத்திரையுடன் நடனமாடும் பெண்களும், நடனம் புரியும் நடராஜர் சிற்பமும் மிக அழகாக உள்ளது. ஒவ்வொரு சிற்பங்களையும் ஊன்றி பார்த்தால் அது சம்பந்தபட்ட புராண கதைகள் நம்முள் எழுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. .இன்னும் சிலவற்றை பெரிதாக்கி கலை கண்களோடு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர்கள் கதை சுவாரசியம் தான். ஆனால் அரசனாகவோ இல்லை இளவரசனாக இருப்பது சுவாரசியமா?

      ஆதித்த சோழன் நாட்டிற்குள்ளேயே நெருங்கியவர்களால் கொல்லப்பட்டிருக்கிறான். நீங்களும் யோசித்து கற்பனை செய்து கதை படைக்கலாமே

      நீக்கு
    2. ஆகா..! கதை என்றதும் நினைவுக்கு வருகிறது. நீங்கள் நான் ஏற்கனவே படைத்த ஒரு கதையை படிக்க வரவில்லையே... நீ.. ள. ம். என்றதால் வந்த அலர்ஜியோ.. ஹா ஹா ஹா.

      நீக்கு
  7. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். பச்சைப்பட்டுடுத்திய அம்மன் பதிவு சிலிர்க்க வைத்தது

      நீக்கு
    2. வாங்க துரை செல்வராஜு சார். பச்சைப்பட்டுடுத்திய அம்மன் பதிவு சிலிர்க்க வைத்தது

      நீக்கு
    3. தங்கள் அன்பின் .
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      அன்பின் நெல்லை அவர்களுக்கு
      நன்றி

      நீக்கு
  8. சிறப்பான பதிவு..

    //இடது பக்க சிவபுராண நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா? //

    நேரில் பார்த்தால் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்...

    எனது பார்வைக்கு இப்படங்களில் தெளிவாக விளங்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை அதனைமாத்திரம் பெரிதுபடுத்தி வெளியிடுகிறேன்

      நீக்கு
  9. குவைத்தில் இருந்து திரும்பியதும் இந்த இந்த கோயிகளைத் தரிசிக்க வேண்டும் என்று இருந்தேன்...

    ஊழ்வினையால் உடல் நலிவு.. திருப்பட்டூர் மட்டுமே தரிசனம்...

    அதில் இந்த ஐராவதேஸ்வரர் கோயிலும் ஒன்று.. இத்தனைக்கும் மிக அருகில்...

    இன்னும் தரிசிக்கவில்லை என்பதே வருத்தம்..

    காலம் கூடி வேண்டும் எதற்கும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் ஐராவதீஸ்வரரையும் அம்மனையும் தரிசிக்கும் வாய்ப்பு வரும் துரை செல்வராஜு சார்

      நீக்கு
  10. மகாபலிபுரம், தஞ்சை, பேலூர், சரவணபென்குல இடங்களின் கலை நுட்பங்களை கண்டு வியந்து பார்த்திருக்கிறோம்.

    தாராசுரம் கலை நுட்பங்கள் எல்லாவற்றையும் உங்களின் படங்கள் விளக்கங்கள் மூலம் கண்டு மகிழ்கிறோம்.இவற்றை பார்க்கும் போது நேரே காணமுடியவில்லையே என்ற ஏக்கம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். பேளூர் சிற்பங்கள் பற்றியும் பின்னர் எழுத நினைத்திருக்கிறேன். தாராசுரம் மட்டுமல்ல, பிறகு வரப்போகும் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றவையும் மிக அழகு

      நீக்கு
  11. சிவபுராணம் கதை சிற்ப படத்தைப் பார்த்த எனது ஊகம் தான் இது :)
    ஒருபெண் இருபுறமும் தீ எரிய நிற்பதும் லிங்கத்தை பூசை செய்வதும் காணப்படுகிறது.
    இது பார்வதிதேவியாக இருக்கலாம் .

    கயிலாயகத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவ பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாக மூடியதால் உலகமே இருளில் மூழ்கியதாம் அந்த தவறிற்காக அன்னையை பூலோகம் சென்று தவம் செய்யும் படி கூறினார் சிவ பெருமான். பூலோகம் வந்த அன்னையும் மாங்காடு தலத்தில் தீ மூட்டு, தவம் செய்தாள். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவன், காஞ்சிபுரத்தில் வந்து தன்னை அடையும் படி கூறிய புராணக்கதை இதற்குப் பொருந்தி வருமா ? தெரியாது இது எனது மனதில் எழுந்த கேள்விதான் நன்கு தெரிந்தவர்கள் இதன் பதிலை கூறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மாதேவி. எனக்கு நிச்சயமாக இதுதான் என்று தெரியவில்லை. கோமதி அரசு மேடத்திற்குத் தெரிந்திருக்கும்

      நீக்கு
  12. இடது பக்க சிவபுராண நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா?//

    பார்வதி தேவியின் தபஸ் காட்சி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

      நீக்கு
  13. தவம் செய்து சிவனை வழிபட்டு சிவனை அடையும் காட்சி.
    நிறைய கோயில்களில் பார்வதியின் தபஸ் காட்ட்சி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...  உங்களை மறந்துட்டேன் பாருங்க...

      நீக்கு
    2. பல கோயில்களில் கூர்ந்து கவனித்ததில்லை. இனிமேல் அதனைக் குறிப்பாகப் பார்க்கிறேன்.

      நீக்கு
  14. https://mathysblog.blogspot.com/2012/08/6.html

    கௌரிகுண்டத்திற்குத் தென்புறம் கௌரி கோயில் உள்ளது.
    கெளரி தவம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. அநேகதங்காவதம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலம் இதுதான் என்று கருதப்படுகிறது.
    (திருக்கயிலாயத்தின் கிழக்கு பரிக்கிரமத்தில் அமைந்துள்ள கெளரிகுண்டமே அநேகதங்காவதம் என்றும் சிலர் கூறுவார்கள்)

    //சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
    ஆல முண்டபெரு மான்றன் அநேகதங் காவதம்
    நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
    கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே//

    என்று திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகிறார்

    இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துளளார். 1 அடி உயரம். இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. அதில் கோமுகி உள்ளது.
    சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் அம்பாள் ஒற்றைக் காலில் தபசு செய்யும் காட்சி அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் பார்த்தேன் கோமதி அரசு மேடம்... முக்கியமான தலங்களுக்கெல்லாம் சென்றுவந்திருக்கிறீர்கள் (சிரமம் பார்க்காமல்). அவற்றை நான் காண எனக்கு விதி இருக்கிறதா என்று தெரியவில்லை. திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில்,

      முற்ற மூத்துக் கோல் துணையா, முன்னடி நோக்கி வளைந்து
      இற்ற காலால் தள்ளி, மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
      பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி, பெரு முலையூடு வயிறை
      வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

      என்கிறார். வயசானப்பறம் இந்த மாதிரித் தலங்களுக்குப் போகமுடியாது. உடனே செல் என்கிறார். பார்ப்போம்

      நீக்கு
  15. வரலாறு அருமை. ராஜராஜேச்வரம் தாராசுரமாக மாறிய விவரம் அருமை.
    ஒவ்வொரு தூண் சிற்பங்களும் ஒவ்வொரு கதை சொல்கிறது.
    மன்மதன் சிவனின் தியானத்தை மலர் அம்பால் கலைப்பது, கார்த்திகை பெண்கள் தட்சிணாமூர்த்தியிடம் அஷ்டமா சித்திகளை கேட்பது சிவபெருமான் வழங்குவது, இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம்... ஏகப்பட்ட சிற்பங்கள் உண்டு. நிறைய நேரம் செலவழித்து, நிறைய புராணங்களைப் படித்தவர்களுடன் போனால் இன்னமுமே கண்டு அனுபவிக்க முடியும்

      நீக்கு
  16. அடுத்த வாரமும் மண்டப சிற்பங்களை காண வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. சகோதரி குந்தவை செய்த சதியா, இல்லை தங்கள் மகளை மணம் புரிந்தவன்/புரியப்போகிறவன் ஆட்சி பீடத்திற்கு வரட்டும் என்பதற்காக நடந்த சதியா என்பதெல்லாம் பல நாவலாசிரியர்களுக்கான கரு. நமக்கல்ல.//

    ஆமாம், நாவலாசிரியர்களுக்கான கரு தான்.
    பொன்னியின் செல்வன் படம் கே டிவியில் ஓடி கொண்டு இருக்கிறது.ஆதித்த கரிகாலன் கடம்பூர் கோட்டை வந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அப்போ எழுதியிருந்த மாதிரி, திரும்ப அந்தப் படத்தைக் காணும்போது பல குறைகள் தென்படுகின்றன. பொன்னியின் செல்வன் போன்ற நாவலை, ஒரு சீரீஸ் ஆக 120-150 எபிசோடுகள் எடுத்தால்தான் நன்றாகக் காண்பிக்க இயலும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!