திங்கள், 10 பிப்ரவரி, 2025

"திங்க"க்கிழமை - : சாப்பிட்ட ஒரு நல்ல இடம் - நெல்லைத்தமிழன்

    

நாங்கள் சாப்பிட்ட ஒரு நல்ல இடம் அமுது உணவகம், திருவரங்கம் - நெல்லைத்தமிழன் 

திங்கள் கிழமையில் என்ன செய்முறை பதிவு மாத்திரம்தான் வரணுமா என்ன? நான் வருட ஆரம்ப திங்கள் கிழமையில் எப்போதுமே ஒரு இனிப்பு செய்முறையைத்தான் எதிர்பார்ப்பேன். சென் டிமென் டாக, வருடம் இனிப்புடன் தொடங்கட்டுமே என்று. இன்றைய பதிவில் நான் (ங்கள்) சமீபத்தில் ருசித்த ஒரு ரெஸ்டாரண்டைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். 

பொதுவாக திருவரங்கம் சென்றால், அங்கு உருப்படியான ரெஸ்டாரண்டுகள் கிடையாது. அது ஒரு டூரிஸ்ட் இடமாக மாறிப் பலப் பல வருடங்களாகிவிட்டன. எப்போதாவது நல்ல உணவகத்தைக் கண்டு அங்கு ஏதாவது சாப்பிட்டால் வயிறும் மனதும் நிறையும். திருச்சியில் அப்படி ஒரு தடவை அஸ்வின்ஸில் சாப்பிட்டிருக்கிறேன். இன்னொரு முறை திருவரங்கம் வந்தபோது, அருகில் இருக்கும் கோயில்களுக்குப் பிரயாணப்பட்டு, உறையூரில் மடப்பள்ளிஎன்ற ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கியிருக்கிறேன். அதே பயணத்தில் திருவரங்கத்தில் மடப்பள்ளி ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு, அவ்வளவு ருசியாக இல்லை என்பதையும் உணர்ந்தேன். அதனால் இந்த முறை திருவரங்கத்துக்குச் செல்வதற்கு முன்பாக அங்குள்ள உணவகங்களின் ரேட்டிங்கையும் பார்த்தேன். அப்போதுதான் உறையூர் மடப்பள்ளிஉணவகம் மூடப்பட்டுவிட்டது என்பதைக் கண்டு வருத்தமுற்றேன். இந்தத் தடவை நாங்கள் தங்கியது ஸ்ரீரங்கநாத நிலையம் என்ற இடத்தில். டிசம்பர் என்பதால், ஏசி இல்லாத அறையில் தங்கினோம். அங்கிருந்தவர், சிறிது தூரம் நடந்தால், அமுது உணவகம் என்று ஒன்று இருக்கிறது, ஆனால் அதில் மாலை 7 மணிக்கு மேல்தான் டிஃபன் கிடைக்கும், நல்ல ருசி என்றார். அதைப்பற்றித்தான் இந்த வாரம் எழுதுகிறேன். 

இந்த உணவகம், சாய்பாபா கோவிலுக்கு எதிர்வாக்கில் இருக்கிறது.

அன்றைக்கு நாங்கள் 5-6 கோயில்களுக்கு ரெட் டாக்சி எடுத்துச் சென்றிருந்தோம். இரவு 7 ½ மணிக்குத் திரும்பினோம்.  அன்றைக்கு மதியம், ஏற்கனவே நான் இணையத்தில் பார்த்திருந்த, 4.2 ரேட்டிங் உள்ள பை-பாஸ் சங்கீதாஸ் என்ற உணவகத்துக்குச் சென்றிருந்தோம். அதற்கு முன்பாக திருச்சி வலைப்பதிவர் (முன்னாள் வலைப்பதிவர்) வை.கோபாலகிருஷ்ணன் சாரிடம் பேசினேன். அவர் மதுரா ரெஸ்டாரண்டில் மதிய உணவு நல்லா இருக்கும் என்றார். ஆனால் அவரிடம் விளக்கமாகப் பேச முடியவில்லை. அவர் தன் மகன் குடும்பத்தை வரவேற்கும் பரபரப்பில் இருந்தார். ரெஸ்டாரண்ட் சொதப்பிவிட்டால் மனைவிக்குச் சரியாக வராதே என்று நினைத்து இணையத்தில் பார்த்திருந்தபடியே, காரை, சங்கீதாஸுக்கு விடச்சொன்னேன். அங்குதான் மதிய உணவு சாப்பிட்டோம். எங்கள் இருவருக்கும் திருப்தியில்லை. மனைவியோ, அந்த உணவு நன்றாகவே இல்லை என்று சொல்லிவிட்டார். 

அதனால் இரவு உணவு சொதப்பக்கூடாது என்று நினைத்தேன். மனைவியோ, மதியம் சாப்பிட்டதே சரியாக இல்லை. பழம் மாத்திரம் போதும் என்றார். சும்மாதான் போய்ப் பார்க்கலாமே என்று இந்த அமுது உணவகத்திற்கு நடந்து சென்றோம்.  தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 300-400 மீட்டர் தொலைவு.

உணவகத்தின் வெளியே இரு பெஞ்சில், ஐந்தாறு பேர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அவ்வளவு கூட்டம் போலிருக்கு என்று நினைத்து நானும் ஒரு நிமிடம் நின்றேன். அதைப் பார்த்து பெஞ்சில் இருந்த ஒரு புண்ணியவான், நாங்கள் எல்லாம் பார்சலுக்காக க் காத்திருக்கிறோம். இங்கேயே உணவு உண்ண உள்ளே சென்று ஆர்டர் செய்துகொள்ளலாம் என்றார். 

உணவகத்தில் இருந்தவர் (ஓனராக இருக்கலாம்), என்னைப் பார்த்து, என்ன தேவையோ அதனை ஆர்டர் செய்து பணத்தைக் கொடுத்து, பில்லை அந்த அந்த கவுண்டர்களில் கொடுத்து உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார்.  அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு, உணவைப் பெற்றுக்கொள்ளணும். சாப்பிட்ட பிறகு தட்டை அதற்கான இடத்தில் போட்டால் போதும். சுமார் 70 பேர் அமரும்படியான பலவித மேசைகள் இருந்தன

சட்னி சாம்பார் கவுண்டர்வித வித ருசியான தொடுகைகள். 

சப்பாத்தி கவுண்டர்

குழிப்பணியாரக் கவுண்டர்

மனைவியிடம் அவளுக்குத் தேவையானது என்ன என்று கேட்டேன் (இது ஒரு கதை. நான் எப்போதுமே அவள் இதையெல்லாம் சாப்பிட்டுப் பார்க்கட்டுமே என்று நல்லவற்றை ஆர்டர் செய்வேன். இதுதான் என் வழக்கம். சில வருடங்களுக்கு முன்பு என் பெண், அம்மாவுக்குத் தேவையானதை அம்மாவே ஆர்டர் செய்யட்டுமே, எதுக்கு நீங்களே யோசித்து ஆர்டர் பண்ணறீங்க? என்று இந்த வழக்கத்திற்குத் தடா போட்டுவிட்டாள். அதனால் எப்போதும் அவளைக் கேட்டுத்தான் அவளுக்கு ஆர்டர் செய்வேன். நீங்களே ஏதேனும் ஆர்டர் செய்யுங்கள் என்று சொன்னால், ஆவி பறந்தால் இட்லியையும், அதில் சந்தேகம் இருந்தால் சாதா தோசையையும் ஆர்டர் செய்வேன் அவளுக்கு). அன்று அவள் உணவகத்தின் ஸ்பெஷலாகப் போட்டிருந்த கறுப்பு கவுனி ஆப்பம் ஆர்டர் செய்தாள். நான் ரவாதோசை ஆர்டர் செய்தேன். பிறகு சப்பாத்தி/குருமாவும் ஆர்டர் செய்தேன். முதலில் சப்பாத்தி/குருமா பில்லைக் கொடுத்த பிறகுதான் நமக்கானதைத் தயார் செய்கிறார்கள். கவுண்டரில் நின்று அதனை வாங்கிக்கொண்டேன். அதற்குள் அவளுடைய கறுப்பு கவுனி ஆப்பமும் தயாரானது.  நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவர் ஆனியன் ஊத்தாப்பம் எடுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்தவுடன் எனக்கு ஆனியன் ஊத்தாப்பம் சாப்பிடலாம் என்று தோன்றியது. தோசை கவுண்டருக்குச் சென்று, எனக்கு ரவா தோசைக்குப் பதிலாக ஆனியன் ஊத்தாப்பம் தரமுடியுமா என்று கேட்டேன். முதல் முதலாக வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்ட அவர், அவ்வாறே ஆனியன் ஊத்தாப்பம் தயார் செய்து தந்தார். எனக்காகச் செய்திருந்த ரவா தோசையை இன்னொருவருக்குக் கொடுத்தார் (அவ்வளவு கூட்டம்). 

இதற்குத் தொட்டுக்கொள்வதற்கு தனி கவுண்டர். அங்கு 8 வகையான சட்னி சாம்பார்கள் வைத்திருந்தார்கள். நான் இட்லி மிளகாய்ப்பொடியும் சாம்பாரும் வாங்கிக்கொண்டேன்.  மனைவியோ கறுப்பு கவுனி ஆப்பம் ரொம்பவே சூப்பராக இருந்தது என்றார்.  கிளம்பலாம் என்று நினைத்தபோது, இட்லி/காஃபி கவுண்டரில் அப்போதுதான் வேகவைத்திருந்த இட்லிகளை எடுத்தார்கள். நல்லா சூடா இருக்கவும், அதில் நான்கை வாங்கிக்கொண்டு மனைவிக்கு இரண்டைக் கொடுத்தேன். உணவின் ருசியில் மயங்கி இரண்டு காஃபியையும் வாங்கி அருந்தினேன். 

அன்றைக்குத்தான் இரவு 7 மணிக்கு மேல், நான் இவ்வளவு சாப்பிட்ட து. கடந்த மூன்று மாதங்களாகவே டயட் டயட் என்று மிக க் குறைவாகச் சாப்பிட்டு, சுமார் பத்து கிலோ எடையைக் குறைத்திருந்தேன்.  (இந்த டயட் பற்றி இன்னொரு வாரத்தில் எழுதுகிறேன்)

தோசை கவுண்டர்




அங்கு வரும் கஸ்டமர்களையே அவர்களால் முழுமையாக கவனிக்க இயலாதவாறு அவ்வளவு கூட்டம். இதற்கிடையில் பார்சல் வாங்க வரும் கூட்டம் வேறு. அதனால் பல நாட்களில் இரவு 8 ½ க்கு மேல் சாம்பார் தீர்ந்துவிடுமாம். சமீபத்தில்தான் ஆரம்பித்திருப்பதால் இன்னமும் கொஞ்சம் ஆர்கனைஸ்டாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

நீங்கள் திருவரங்கம் சென்றால், இரவு உணவுக்கு (டிஃபன்) இந்த உணவகத்துக்குச் செல்ல மறக்காதீர்கள். Value for money. நல்ல ருசியான உணவு.

 

எங்கள் குலதெய்வம் திருப்பதி ஸ்ரீநிவாசன் அருளால், அனைவருக்கும் இது சிறப்பான ஆங்கிலப் புத்தாண்டாக இருக்கட்டும்.  (இந்த திங்கட்கிழமை பதிவுகள் ரொம்ப மாதங்கள் கழித்து நான் எழுதுகிறேன். சோம்பல் ஒரு பெரிய காரணம் என்றாலும், வருட ஆரம்பத்தில் வந்த திங்கட் கிழமைக்கு ஒரு இனிப்பு செய்முறை போடவில்லையே என்ற எண்ணம்தான் காரணம். அதனால்தான் நான் எடுத்து வைத்திருந்த படங்களை தூசு தட்டி (எல்லாம் சில மாதங்களுக்கு முன் எடுக்க ஆரம்பித்தது) பதிவைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். இனி ஸ்ரீராம் பாடு.

37 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. ​புத்தாண்டு பதிவு வெளியிடப்பட்டது பிப்ரவரி 10இல் !!.

    ஹோட்டல் தாற்காலிக கட்டடத்தில் செயல்படுவதாக தோன்றுகிறது. ஹோட்டலின் சிறப்பு அம்சம் கேள்விப்பட்டிராத தோசை வகைகள்.

    ஹோட்டல் கூட்டத்தைத் தாங்க முடியவில்லை என்று தோன்றுகிறது. டோக்கன் சிஸ்டம் எனக்கு காலேஜ் ஹவுஸ் மதுரையை நினைவூட்டியது. விலையைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே? கவுனி ஆப்பம் என்ன விலை?

    இந்த ஹோட்டலில் கவுண்டர்கள் மட்டும் தான் வேலை செய்கிறார்களா? தோசை கவுண்டர், சப்பாத்தி கவுண்டர் என்று நிறைய கவுண்டர்கள்!! (கடி நல்லாருக்கா?).

    வேலை செய்யம் பெண்கள் எல்லோரும் வேர்வையில் குளித்து இருக்கிறார்கள்.

    சமையல் ஸ்பெசலிஸ்ட் கீதா மேடத்தை போய் பார்த்தீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.

      யாத்திரை செல்வதற்கு முந்தைய தினம் அது. எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. 8 1/2 மணிக்குமேல் கூப்பிட்டுவிட்டுப் போயிருந்திருக்கலாம். ஆனால் காலை மூன்று மணிக்குள் எழுந்து குளித்துத் தயாராகி ஐந்து மணிக்கு யாத்திரைக் குழுவினருடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்பதால் சீக்கிரம் தூங்கச் சென்றுவிட்டோம்.

      தமிழ் எழுத்துரு. ன்ட என்னு எழுதும்போது (மடிக்கணிணியில்) ண்ட என்று மாற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் சரி செய்யச் சோம்பல். அது தட்டச்சு செய்யும் வேகத்தைக் குறைத்துவிடுகிறது.

      விலை எல்லாமே சாதாரணம்தான், தோசை 60-70 ரூபாய், சப்பாத்தி 50 ரூபாய் போன்று.

      மதுரை காலேஜ் ஹவுஸை எனக்கு நினைவுபடுத்திவிட்டீர்களே. 1985ல் அங்கு சாப்பிட்ட பட்டர் நான் (7ரூ என நினைவு. இரண்டு சாப்பிடுவேன்) என்னால் மறக்கமுடியாது. அதுபோல இரயில் நிலையம் வெளியே இருக்கும் கற்பகம். அங்கு ரவா தோசை, மசாலா பால். சுவர்கம்தான்.

      ஹோட்டல் நல்ல இடத்தில், வீட்டை மாற்றியமைத்துச் செயல்படுகிறது.

      ரொம்ப மாதங்களாகவே சோம்பலினால் தி பதிவு எழுதி அனுப்பவில்லை. ஞாயிறு பதிவு தயாரிக்கவே நேரம் சரியா இருந்தது. அப்புறம் கடகடவென ஐந்து பதிவுகள் தயார் செய்து அனுப்புவதற்கு முன்னால் ஶ்ரீராம், மார்ச் வரை பதிவுகள் இருக்கு என்றதும் மறுபடி சோம்பேறித்தனம். பிறகுதான் அனுப்பினேன்.

      நீக்கு
    2. @நெல்லை, நம்ம வீட்டிலே இருந்து நடந்து போகும் தூரம் தான். ஆனால் நீங்க வந்ததையும் சொல்லலை. வரவும் இல்லை. சும்மா ஒரு எட்டு வ்ந்து பார்த்திருக்கலாம்.

      நீக்கு
    3. தங்கியிருந்த இடமும் 800 மீட்டர்கள்தாம் உங்கள் வீட்டிலிருந்து (அல்லது அதைவிடச் சிறிது குறைவாக இருந்திருக்கலாம்). கூப்பிட்டுவிட்டு, வராமல் செல்வது சரியில்லை என்று நினைத்தேன். இரவு நேரம் கிடைக்கும்போது செல்லலாம் என்றும் தோன்றியது (காலையில் பெருமாள், தாயார் மற்றும் பல சன்னிதி தரிசனம். பிறகு காட்டழகிய சிங்கர், உறையூர்.... திருவெள்ளறை... என்றெல்லாம் காரில் சென்றோம். வருவதற்கு இரவு 7 மணி ஆகிவிட்டது. பிறகு இந்தக் கடை)

      நீக்கு
  3. நல்லதொரு உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வாய்ப்பு கிடைக்கும்போது சென்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு உணவகம் அறிமுகம் நன்று. திருச்சியில் இருக்கும் உறவினர்களுக்கு சொல்லலாம்.

    கறுப்பு கவுனி ஆப்பம் செய்து பார்க்க வேண்டும். கஞ்சி, தோசை செய்து இருக்கிறேன், ஆப்பம் செய்தது இல்லை.

    முடக்கத்தான் தோசை பகலில் மட்டும் தானே கிடைக்கும் இரவு சாப்பிடுவார்களா? கால்வலிக்கு நல்லது என்று சொல்கிறார்கள்.

    நேற்று தங்கை முடக்கத்தான் காயவைத்து பொடி செய்த பொடி கொடுத்தால் தோசை மாவில் கலந்து வைத்து சிறிது நேரம் கழித்து சாப்பிடு என்றால். புதிதாக இலை கிடைத்தாலும் அரைத்து தோசை மாவில் கலந்து சுடலாம், நான் அப்படி செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.
    முடக்கத்தான் ரசம் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடக்கத்தானுக்கும் எனக்கும் என்னமோ ஒத்துக்கலை.. சென்னையில் அம்பத்தூரில் இருக்கிறச்சேயே முடக்கத்தான் தோசை, ரசம், கஞ்சியில் போட்டுனு முயற்சி பண்ணி எக்கச்சக்கமா வலி தான் வந்தது. கொஞ்சம் கூட ஒத்துக்கவே இல்லை. இங்கேயும் முடக்கத்தான் தைலத்தை வாங்கித் தேய்ச்சுக்க ஆரம்பிச்சதும் தான் காலில் பிரச்னை ஜாஸ்தி ஆகிடுத்து.

      நீக்கு
    2. திருவரங்கத்தில் இந்த உணவகம் எனக்கு (எங்களுக்கு) ரொம்பவே பிடித்திருந்தது. அதில் நான் பார்த்த வித்தியாசமானது, நிறைய வயதானவர்கள் அங்கு பார்சல் வாங்குவதற்காகக் காத்திருந்தது. அப்படியென்றால் நிறைய வயதானவர்களுக்கு உணவுப் பிரச்சனை ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது என்பதுதான்.

      முடக்கத்தான் நான் உபயோகித்ததே இல்லை.

      நீக்கு
    3. கீதா சாம்பசிவம் மேடம்... கால்வலி என்பது மிகப் பெரிய பிரச்சனை. அது நம் movementsஐ முடக்கிவிடும். ஒருவேளை "முடக்கத்தான்" அதைச் சாப்பிடுகிறார்களோ?

      நீக்கு
    4. பாண்டிச்சேரில இருக்கறப்ப முடக்கத்தான் கீரை ஒரு பாட்டி கொண்டு வந்து கொடுப்பாங்க நாராயணவாத கீரையும் இரண்டையுமே போட்டு தோசை செய்யலாம் அந்தப் பாட்டிதான் சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்கு பிறகு அந்தக் கீரை கிடைக்கலை சென்னைல...இங்கெல்லாம்

      கீதா

      நீக்கு
  6. நல்லாருக்கே இந்த உணவகம்.

    கவுனி அரிசி ஆப்பம் செய்திருக்கிறேன். நாமதான் எதையும் விட்டு வைக்க மாட்டோமே!!!! கவுனி அரிசி ஆப்பத்தை தமிழ்நாடு செய்முறையும் கேரளத்து செய்முறையும் இரண்டுமே செய்திருக்கிறேன். வெள்ளை அரிசி பயன்பாடு இல்லை...கவுனி அரிசி black rice என்னவோ இனியவங்களுக்கு நல்லதுன்னு சொல்லுவதுண்டு அப்படிச் செய்தவை நல்லா வரும். என்னன்னா அரிசியை நிறைய நேரம் ஊறப் போடணும். நைஸா அரைக்கவும் நேரம் எடுக்கும்.

    கவுனி அரிசி இட்லி, தோசை எல்லாமே நல்லா வருது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவுனி அரிசியில் எல்லாம் நானும் பண்ணுகிறேன். நன்றாகவே வருது. இந்த ஓட்டல் போகும் வழியில் தான் எங்களுக்குத் தற்போது சாப்பாடு கொடுக்கும் காடரர் (அன்னபூர்ணா காடரிங்) இருக்காங்க. காரம் ஜாஸ்தி, மத்தபடி சாப்பாடு ஓகே.

      நீக்கு
    2. வாங்க கீதா ரங்கன் அக்கா. நீங்க வித்தியாசமா பலதும் செய்துபார்க்கறீங்க. நேற்றைய ராகி இட்லியும் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன்.

      எனக்கு ஒரு சந்தேகம்... நியாயமாக ராகி, கவுனி மற்றவற்றில் செய்யும்போது, நம் standard ரெசிப்பில, சும்மா 2-3 ஸ்பூன் இவைகளைச் சேர்த்துக்கொண்டு, அந்தப் பெயரால் அந்த உணவை வழங்குவது சரியா? ராகி இட்லின்னா நியாயமான செய்முறை, அரிசிக்குப் பதில் முழுமையாக ராகி, அப்புறம் உளுந்து வேணும்னா வெந்தயம் சேர்க்கலாம். இல்லையா? அரிசியோடு ராகியும் சேர்த்து ராகி இட்லின்னு சொல்லமுடியுமா? (நீங்க பண்ணினது அப்படின்னு சொல்லவில்லை. கடைகள்ல ராகி முறுக்கு, தினை இட்லின்னுலாம் சொல்றாங்களே அதைச் சொல்றேன்)

      நீக்கு
    3. கீசா மேடம்... இந்த அன்னபூர்ணா காடரிங் உங்களுக்குச் சரியா வரணும்னு எனக்கு தோணுது. இல்லைனா, எல்லாமே நீங்களே செய்துகொள்ளும்படி ஆகிடும், உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

      நீக்கு
    4. நெல்லை நான் முழுசா ராகி, உளுந்து வெந்தயம், சேர்த்துதான் செய்யறது. இட்லி அரிசி சேர்க்காம....நான் இட்லி அரிசி சேர்க்காமதான் இந்த வகையான எல்லாம் செய்யறேன். தினை, கம்பு சோளம் எதுல செஞ்சாலும்....அது போல மகன் முன்ன வந்தப்ப ராகி, மில்லட் தேங்குழல் அரிசி சேர்க்காமதான் இப்ப எண்ணை பக்கமே போறதில்லை...பொட்டுக்கடலை கொஞ்சம் சேர்த்துக்கிட்டா நல்லா வரும்.

      கீதா

      நீக்கு
    5. ஓ.. அப்படியா கீதா ரங்கன்? அரிசி சேர்க்காமலேயே அவ்வளவு சாஃப்டா இருந்ததே. இனி இதுபோல் செய்துபார்க்கிறேன். நன்றி

      நீக்கு
  7. படங்கள் எல்லாமே சூப்பர். நல்லா எல்லாமே எடுத்துருக்கீங்க. எடுக்க அனுமதித்தாங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எடுக்கணும் என்று நினைத்தால் பட் பட் என்று எடுத்துவிடவேண்டும். அவங்க, எடுக்கக்கூடாது என்று சொன்னால், அப்படியா..அப்படீன்னா எடுக்கலைனு சொல்லிடணும். சும்மா எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்டால், கிடைக்காது.

      நன்றி என் கேமரா/மொபைலுக்கு

      நீக்கு
  8. விதம் விதமான தோசை!!

    பூண்டுப் பொடி தோசை என்று பார்த்ததும் ஆந்திரா ஸ்பெஷல் எர்ரா காரம் தோசை, எர்ரா காரம் மசாலா தோசை நினைவுக்கு வந்தது.

    தோசையின் அரைவட்டத்தில் பூண்டுச் சட்னி/பொடி - அடுத்த அரை வட்டத்தில் பொட்டுக்கடலை பருப்புப் பொடி தூவி மடித்தும் இல்லைனா கூடவே உகி மசாலா வைத்து மடித்தும் செய்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தால் ஆசையாத்தான் இருக்கு கீதா ரங்கன். தமிழக மசால் தோசை சாப்பிட்டு ரொம்ப மாதங்கள்/வருஷங்கள் ஆகிவிட்டது. இனி ஏப்ரல் முதல் வாரம்தான் வாய்ப்பு இருக்கிறது.

      நீக்கு
  9. மிகச் சமீபத்தில் தான் இந்த ஓட்டல் பத்தி எங்க தளத்தில் இருக்கும் 401 அபார்ட்மென்டின் பையர் சொன்னார் அவர் அநேகமாகத் தினம் போகிறார்,. மாமா உடம்பு மட்டும் சரியாக இருந்திருந்தால் இந்த ஓட்டல் ஆரம்பிச்சதுமே போய் வாங்கிண்டு வந்திருப்பார். :( இவங்க ஸ்விக்கியில் இல்லை இருந்தால் வாங்கி இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... இந்த ஹோட்டல்னால அந்த அளவு மக்களுக்கு செர்வ் பண்ணமுடியும்னு தோணலை. அங்க வர்றவங்களுக்கே கொஞ்சம் கஷ்டப்படறாங்க. பார்சல் வாங்க வர்றவங்கனால, அங்க போய்ச் சாப்பிடறவங்களுக்கு, 8 1/2 க்கு அப்புறம் சாம்பார், சட்னி போன்றவைகளெல்லாம் இருக்கறதில்லை என்று சொன்னார். நிச்சயம் ஸ்விக்கிலாம் இப்போதைக்கு இருக்காதுன்னு தோணுது (ஆனால் மாலை 7-10 தான் அந்த ரெஸ்டாரண்ட்.

      மாமா நிச்சயம் அந்த ரெஸ்டாரண்டை அதன் உணவை விரும்பியிருப்பார். சூப்பர் உணவு அது

      நீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய திங்கள் பதிவு உண்மையிலேயே வித்தியாசமாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. அங்கு பணி புரிபவர்கள் படங்களை எடுக்க விட்டது ஆச்சரியந்தான். அங்குள்ள உணவைப் பற்றிய எல்லாமே பயனுள்ள தகவல்கள். அடுத்த தடவை ஸ்ரீ ரங்கம் வரும் வாய்ப்பு கிடைத்தால், இந்த உணவகத்திற்கு செல்லலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் என்பதில் இருக்கும் நேட்டிவிட்டி நெல்லைத் தமிழர் என்பதில் இல்லை கமலா ஹரிஹரன் மேடம்.

      பணிபுரிபவர்கள் அவங்க வேலைல பிஸி. எங்க நேரம் இருக்கும் படம் எடுப்பவனைப் பார்க்க? அதுவும் எலி பிடிக்கற பூனை மாதிரி அங்கயும் இங்கயும் பார்க்காம சட் சட்னு படங்கள் எடுத்துவிடுவேன்.

      திங்கப் பதிவுக்கு செய்முறை தவிர வேறு மாதிரி எழுதலாம் என்று தோன்றியதால் இதனை அனுப்பினேன். நன்றி

      நீக்கு
  11. நல்லதொரு உணவகம். சில முறை இங்கே சென்று இருக்கிறேன். உணவகம் குறித்து எனது பக்கத்திலும் எழுதியிருக்கிறேன் என்று நினைவு.

    விதம் விதமான சட்னி, சுடச் சுடக் கிடைக்கும் உணவு வகைகள் என நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். உங்கள் பக்கத்தில் படித்த நினைவு இல்லை. நாங்கள் தங்கியிருந்த இட த்தில் இருந்தவர் சொல்லித்தான் இந்த உணவகம் தெரியும்.

      நீங்களும், அனு ப்ரேம்குமாரும் எழுதியிருந்த அழகிய மணவாளன் கோயிலுக்குச் சென்றோம். எங்கள் கார் டிரைவர் கொஞ்சம் சொதப்பிவிட்டார். நாங்கள் மதியம் 12:05க்குச் சென்றபோது நடை அடைத்திருந்தது.

      நீக்கு
  12. பதில்கள்
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். நலமா இருக்கீங்களா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!