சனி, 1 பிப்ரவரி, 2025

மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து மற்றும் நான் படிச்ச கதை

 

மார்பக புற்றுநோயை ஒரே டோசில் குணப்படுத்தும் மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

புதுடில்லி: ஒரே டோஸில் மார்பக புற்றுநோய் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமை கொண்ட மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மருந்தால் எந்த பக்கவாதமும் ஏற்படாது என அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில் நேற்று (ஜன.,22) ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது.




விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர் ஏற்கனவே புற்றுநோய் செல்களை கொல்லும் ERSO என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டில் ஆய்வாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ERSO போன்ற சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறு மூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வின் இறுதியில் ERSO TFPY என்ற சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இது பல்கிப் பெருகும் மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் கட்டுப்படுத்துவதோடு மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை. இது எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.
================================================================================================

சென்னை; கிரிக்கெட் போட்டி முடிந்து, இரவு வீடுகளுக்கு புறப்பட்ட ரசிகர்கள், பாதுகாப்பாக பயணம் செய்வதை, போலீசார் உறுதிப்படுத்தியது, வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னை சேப்பாக்கத்தில், நேற்று முன்தினம், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான, இரண்டாவது 'டி20' கிரிக்கெட் போட்டி நடந்தது. இரவு 11:10 மணிக்கு போட்டி முடிந்து, ரசிகர்கள் வாடகை வாகனங்களில், தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது, அங்கிருந்த போலீசார், ரசிகர்கள் ஏறிய வாடகை வாகனங்களின் டிரைவர் பெயர், மொபைல் எண், வாகனத்தின் பதிவு எண் போன்ற விபரங்களை, ஒரு படிவத்தில் பதிவு செய்து கொண்டனர். ரசிகர்களிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி, தங்கள் மொபைல் எண்களை கொடுத்தனர். டிரைவர்களிடம் கவனமாக கொண்டு போய் விடுங்கள் என அறிவுரை கூறி அனுப்பினர். இது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,' இரவு நேரம் என்பதால், பெண்கள், குழந்தைகள், வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் உள்ளூர் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோம்' என்றனர்.
=============================================================================

 டெல்லி அருகே நொய்டாவில் செயல்படும் ஷிவ் நாடார் பள்ளியை சேர்ந்த தாஷ் மாலிக், நாசாவின் விண்வெளி திட்டத்தில் பங்கேற்று புதிய விண்கல்லை கண்டுபிடித்து உள்ளார். இந்த புதிய விண்கல்லுக்கு நிரந்தர பெயர் சூட்ட மாலிக்குக்கு நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.

தற்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாலிக் கூறியதாவது: சுமார் 2022-ம் ஆண்டில் நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு திட்டத்தில் இணைந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வு செய்து புதிய விண்கல்லை கண்டுபிடித்தேன். இந்த விண்கல் தற்போது ‘2023 OG40’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர பெயர் சூட்ட நாசா சார்பில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சில பெயர்களை மனதில் குறித்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு பெயரை விண் கல்லுக்கு சூட்டுவேன். இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

=========================================================================================== 

நான் படிச்ச கதை (JKC)


காதலிக்கணும் சார்


கதையாசிரியர்: சுப்ரமண்ய ராஜூ

சுப்ரமண்ய ராஜு பாண்டிச்சேரியில் சுப்ரமண்யம், லட்சுமி இணையருக்கு ஜூன் 6, 1948-ல் பிறந்தார். பெற்றோர்கள் இட்ட பெயர் ராஜு. சென்னை ஜெயின் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றினார்.

ராஜு என்ற தன் பெயருடன் தன் தந்தையின் பெயரான சுப்ரமண்யனை இணைத்து 'சுப்ரமண்ய ராஜு' என வைத்துக் கொண்டார். 1970-களின் தொடக்கத்தில் கசடதபறபத்திரிகையில் கவிதைகள் எழுதி இலக்கிய உலகில் அறிமுகமானார்.

சுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதைகளும் புனைவுகளும் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகின்றன.

சுப்ரமண்ய ராஜு டிசம்பர் 10, 1987-ல் தன் 39-ஆவது வயதில் சென்னை நந்தனம் சிக்னல் அருகே ஏற்பட்ட விபத்தில் காலமானார்.

வித்தியாசமானதெல்லாம் விசேமானதல்ல என்பது ராஜு அடிக்கடிக் குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் அந்த நியதியை உடைத்தெறிந்த முதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜு எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேஷமானவன்.” தேவகோட்டை வா.மூர்த்தி:

முன்னுரை 

சுப்பிரமணிய ராஜு பிரபலம் என்று சொல்லப் படாவிட்டாலும் ஓரளவு அறியப்பட்டவர் எனலாம்.

சிறுகதை என்ற இலக்கிய வடிவு எழுதப்பட்ட காலங்களுக்கு ஏற்ப பல மாறுதல்களை உட்கொண்டு அந்த அந்த காலகட்டங்களின் மக்களின் ரசனைக்கு ஏற்ப எழுதப்பட்டது. அப்படி பொருந்தி இருந்ததால் அவை வரவேற்கப்பட்டன. அந்த வரவேற்பின் அடிப்படையில் தான் வாசகர்களிடையே கதை ஆசிரியர்களின் பிம்பங்களும் அமைந்தன. அவ்வாறு நோக்கும்போது சுப்ரமணிய ராஜுவின் கதைகளுக்கு அவ்வளவாக அன்று வரவேற்ப்பில்லை எனலாம். 

சாவி குமுதம் பத்திரிக்கைகளில் கதைகள் எழுதியிருக்கிறார். பிரபஞ்சன், மாலன், பாலகுமாரன் ஆகியோர்  இவரது உற்ற நண்பர்கள்.   

இக்கதை எழுதப்பட்ட காலம் 1973. அக்கால கட்டத்தில் புதுக் கவிதைகள் என்ற வடிவில் பல மடக்கிப் போட்ட வார்த்தைகளும் வாக்கியங்களும், நவீனத்துவம் என்ற பெயரில் பல கதைகளும், முடிவை தெளிவாகக் கூறாமல் ஊகத்திற்கு விட்டு விடுவது சாதாரண இயல்பு. இக்கதையும் அது போல ஒன்றே எனக் கொள்ளலாம். இக்கதையின் முடிவு வாக்கியம்.

//ப்ளீஸ், மீதியை அப்புறம் வந்து எழுதறேனே? கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன் சார்!//

கதை நேரடியாக கதை நாயகனே சொல்வது போல் உள்ளது. அந்த எழுபதுகளில் காதல், சிகெரெட், பெல் பாட்டம், அரும்பு மீசை போன்றவை தான் முற்போக்கு அடையாளங்களாகக் கருதப்பட்டன. இப்படிப்பட்ட ஒரு இளைஞன் தான் கதை நாயகன். கவர்ச்சி வேறு, காதல் வேறு என்ற சங்க கால உண்மையை அறியாதவன். சைட் அடிப்பது காதல் என நம்புகிறவன்.

 //காதலிச்சால் என்ன சார் தப்பு?//   இது தான் முற்போக்கு சிந்தனை என்று பல இளைஞர்களைப் போல நம்புகிறவன்  //காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு பெண்ணை முன்னாலேயே தெரிஞ்சுக்காம எப்படி சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?//

ஆகவே கதையின் தலைப்பு சைட் அடிக்கணும் சார்என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

கதை சிறுகதைகள்  தளத்தில் இருந்து பெறப்பட்டது. கதை முழுதும் தரப்பட்டுள்ளது. கதையின் சுட்டி :

>>>>காதலிக்கணும்<<

காதலிக்கணும் சார்

கதையாசிரியர்: சுப்ரமண்ய ராஜூ 

என்ன கேட்கறீங்க? என் பெயரா? குமார் சார். வயசு 21. உயரம் ஐந்தடி ஐந்தங்குலம். நல்ல வெள்ளை. படிப்பு? பி.ஏ. எகனாமிக்ஸ், செகண்ட் ‘அட்டம்ப்ட்’ தான். இப்போது காலைப் பத்திரிகையில் ‘வான்ட்டட்’ காலம் பார்த்து, ‘பீயிங் கிவன் டு அண்டர்ஸ்டாண்ட்’ எழுதி, பின் அது கிடைக்காமல் அலுத்துப் போய் ‘மேட்ரிமோனியலை’ப் பொழுது போக்காய்ப் படித்துக் கொண்டிருக்கிறேன். நான் வேலை பார்த்துத் தான் ஆகவேண்டும் என்பதில்லை. அப்பா நிறைய சம்பாதிக்கிறார். மேலே படிக்கவும் இஷ்டமில்லை. வெளியே சுற்றும் நேரம் போக, வீட்டில் விவிதபாரதி கேட்டுக்கொண்டிருக்கிறேன். நடுநடுவே யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் போய் சிகரெட் குடித்துவிட்டு வருகிறேன். வேலை கிடைக்காமல் வீட்டில் இருப்பது இருக்கிறதே, சம்திங் ஹாரிபிள் சார்! உங்கள் வீட்டில் யாராவது அப்படி இருந்தால் ஒழிய, இதன் கஷ்டம் உங்களுக்குப் புரியாது. நீங்களே இருந்தால், பெட்டர்! இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.

என்னிடம் ஒரு வீக்னெஸ் உண்டு. (என்னிடம் மட்டும்தானா?) பெண்கள்! அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் மனசுக்குள் கொஞ்சம் (நிறையவே) ஆடிப் போய்விடுவேன். உடம்பில் ஒரு தெம்பு வந்ததைப் போல உணர்வேன். கதையில் ஓர் அழகான பெண் வந்துவிட்டாலே தெம்பு வருகிறதே, நேரிலே வந்தால் வராதா? இது என்னோட பலவீனமா, அல்லது பலமா? புரியவில்லை.

நான் இப்போது கொஞ்சம் தெளிந்திருக்கிறேன். முன்னே மாதிரியில்லை. அப்பா சொல்லுவார், ”இன்னும் உனக்கு மென்டல் மெச்சூரிடி வரவில்லை. ஏன் இப்படிப் பொறுப்பில்லாமல் சுற்றுகிறாய்?” என்று. அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என்னை அளவுக்கு அதிகமாக விரும்பினதுதான் இதற்குக் காரணம்.

விஷயம் ஒன்றும் பெரிசில்லை. ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினேன். அவளுடைய அப்பா, எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொள்ளும் பொருட்டல்ல;  ‘உங்க பிள்ளையைக் கண்டிச்சு வைங்க’ என்று சொல்ல! இதைச் சொல்வதற்காக மந்தைவெளியிலிருந்து தன்னுடைய காரின் ஒரு லிட்டர் பெட்ரோலைச் செலவாக்கிக் கொண்டு வந்திருந்தார். அப்பா தன் பெல்ட்டை, முதன்முதலாய் என் மேல் உபயோகித்தார். முதுகெல்லாம் சிவப்புக் கோடுகள்.

அன்று இரவு ஒரு வைராக்கியத்துடன் சென்ட்ரலில் ரயில் ஏறினேன். பாதி தூரம் போவதற்குள் அம்மாவின் ஞாபகம் திரும்பத் திரும்ப வந்து, தொந்தரவு பண்ணியது. அம்மா என் மேல் உயிரையே வைத்திருக்கிறாளே!  தினமும் ராத்திரி என்னை எழுப்பி, எனக்கு ஹார்லிக்ஸ் தருவாளே! அவளை விட்டுவிட்டா? அவளையா? மறு நாள், மறு ரயிலில் சென்னைக்குத் திரும்பிவிட்டேன். அதற்குப் பின் அப்பா என்னைத் தொடுவது இல்லை.

கீழே கார் ஹாரன் சத்தம் கேட்கிறது. அப்பா ஆபீஸூக்குக் கிளம்பிப் போய்விட்டால், அவ்வளவு பெரிய வீட்டுக்கும் நான்தான் எஜமானன் என்ற எண்ணம் தோன்றி, என்னை ரொம்ப கர்வப்படுத்தும். அந்தத் தாற்காலிகமான கர்வம் கொடுக்கிற தெம்பில் வேலைக்காரனை, தோட்டக்காரனை அதட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் அதைச் சட்டை பண்ணுவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் கொடுக்கும் டிப்ஸூக்காக, ரொட்டித் துண்டு நாயாக அலைவார்கள். அவர்களை அப்படி அலைய வைத்துப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்; அவர்களது அலட்சியத்திற்குப் பழி வாங்கிவிட்ட சந்தோஷம்.

அவர்களுக்கு நான் ஏன் மதிப்பில்லை என்று யோசித்திருக்கிறேன். என் கோளாறு அவர்களுக்குத் தெரிந்திருப்பது தான் காரணம் என்ற முடிவுக்கு தான் என்னால் வர முடிந்தது. என்னை மதிப்பதற்குப் பதிலாகப் பரிதாபப் படுகிறார்கள். யாரும் என்னிடம் பரிதாபப்படுவது எனக்குப் பிடிக்காது. அதை அவர்களிடமிருந்து விரட்டியடிக்க, என் சுப்பீரியாரிட்டியைக் காட்ட அடிக்கடி அதட்டிப் பார்த்தேன். ஒருத்தனாவது லட்சியம் பண்ணப் போகிறான்கள்? கூப்பிட்ட ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு ஓடி வந்து (நிதானமாக, ஆனால் ஓடி வருகிற மாதிரி) ‘கூப்பிட்டீங்களா, இதோ செய்யறேன்’ என்று போலியாகப் பல்லைக் காட்டி என்னைச் சமாதானப்படுத்துகிற மாதிரி அடக்கி விட்டுப் போவான்கள். இடியட்ஸ்… ஹெல் வித் தெம்!  ஹெல் வித் மை டிஸீஸ்!

என் கோளாறையும் சொல்லி விடுகிறேனே! எப்போதாவது திடீர்னு வலிப்பு வந்து, பல்லெல்லாம் இறுகி, வாய் கோணிப் போய், கை கால் எல்லாம் உதறிக் கொண்டு அப்படியே நடு ரோட்டில் விழுந்துவிடுவேன்.

இது என்னிடம் இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அப்பா எவ்வளவோ டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போய்க் காண்பித்தார். ஒன்றும் பயன் இல்லை. ஒரே ஒரு டாக்டர் மட்டும் ‘இன்ட்ரெஸ்டிங்’கா ஒரு கேள்விக் கேட்டார்…

”நீ யாரையாவது லவ் பண்றியா?’

நான் சிரித்தேன்.

”ஏன் சிரிக்கிறே?” என்றார்.

”லவ் பண்ணினா வலிப்பு வருமா சார்?” என்று கேட்டேன். அவரும் சிரித்தார். அப்புறம் ஏதேதோ கேள்விகள் எல்லாம் கேட்டார். ”உங்க பையனுக்கு இந்த வியாதி…” என்று வாயில் நுழையாத ஒரு பெயரை அப்பாவிடம் சொன்னார். அப்பா, ‘உன்னைப் போய்ப் பெற்றேனே!’ என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான்… என் வலிப்பு என்னோடு நிரந்தரமாய்த் தங்கிவிட்டது.

அந்த டாக்டர் கேட்டது உண்மையோ என்று கூடத் தோன்றுகிறது. எனக்கு முதன்முதலில் இந்த வலிப்பு அப்படித் தான் ஆரம்பித்தது. பி.யூ.சி படிக்கிற போது ஹேமாவை அடிக்கடி பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன். ஹேமா ரொம்ப நல்லவள். சாது. குனிந்த தலை நிமிரமாட்டாள். நான் நிமிர வைத்தேன். (என் உருவத்தைப் பற்றித்தான் முதலில் சொல்லியிருக்கிறேனே?) என்னைப் பார்த்து அடிக்கடி சிரித்தாள். ஒரு நாள் டிரைவ்-இன்னில் தனியாகப் பார்த்தேன். அவளுடைய சிநேகிதிகளுக்காக வெயிட் பண்ணுவதாகச் சொன்னாள். அவள் அன்று எனக்குப் பிடித்த நீலத்தில் வந்திருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ராணி மாதிரி… அவள் ராணிதான்! ஆனால், என்னால் ராஜாவாக முடியலையே!

காபி வரவழைத்துச் சாப்பிட்டோம். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீர்னு உடம்பை என்னவோ பண்ணுவது போலிருந்தது. பல்லெல்லாம் இறுக ஆரம்பித்தது. வாய் கோணலாகி, கை கால் உதறலெடுத்து… அவள் ‘வீல்’ என்று கத்தினாள். கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. என்னைச் சரிப்படுத்தி எப்படியோ வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

அதற்குப் பின் ஹேமாவை நான் பார்க்கும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தனியாய்ப் போவதைத் தவிர்த்தாள். நான் பேசிவிடுவேனோ என்று பயம். அவள் அப்பாவுக்கு மாற்றல் ஆனதால் பெங்களூர் போய்விட்டாள்.

எனக்குக் கொஞ்ச நாள் தனிமையாய் இருப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. பின் அது பழகிப் போய்விட்டது. எந்த கஷ்டமும் பழகிப் போச்சுன்னா, கஷ்டமே இல்லை.

காலியாய் இருந்த பக்கத்து வீட்டுக்கு ஒரு புதுக் குடித்தனம் வந்தது. வசந்தியும் வந்தாள். அவள் நன்றாகப் பாடுவாள். லதா மங்கேஷ்கர் மாதிரி குரல். நானும் கிஷோர்குமார் மாதிரி என் வீட்டு மாடியில் நின்று பாட முயற்சித்தேன். முடியவில்லை. வசந்திக்கும் என்னைப் பிடித்திருந்தது. வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். ‘வசந்தி… வசந்தி’ என்று அடிக்கடி உருக ஆரம்பித்தேன். பேனா கையில் இருக்கும் போதெல்லாம், அவள் பெயரை பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தேன். அவள் என் பக்கம் சாய்கிறாள் என்பதைக் கூட மறைமுகமாய்த் தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள், அவள் என் வீட்டுக்கு வந்தாள். ரெக்கார்ட் பிளேயரில் ‘பீ மை பேபி’ சுற்றிக் கொண்டு இருந்தது. நான் அர்த்தத்தோடு அவளைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டுவிட்டாள். கொஞ்ச நேரம் மௌனமாய்ப் பாட்டை ரசித்தோம்.

”இந்தப் பாட்டு உனக்குப் பிடிக்குமா?”

”ஓ… எஸ்!” – கண்களைப் பெரிதாக உருட்டி, அழகாகச் சிரித்தாள்.

‘என்னை?’ – தொண்டை வரைக்கும் வரும் இந்தக் கேள்வி, ஏன் வெளியே வர மறுக்கிறது?

நான் அதைக் கேட்கவேயில்லை. கேட்கமுடியாதபடி ஆகிவிட்டது.

வலிப்பு வந்துவிட்டது. எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. பதறிய அவளிடம் என் அம்மா, என் வலிப்பு பற்றி, நான் விழுவது பற்றி, டாக்டர் சொன்னது பற்றி – எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாய் சொல்லிவிட்டாள்.

இனியும் வசந்தி என் பக்கம் திரும்புவாள் என்று நான் நினைக்க வில்லை. அவளைப் பார்த்து ஏதாவது பேச எனக்குப் பயமாக இருந்தது. ஒரு நாள், ‘தேவி’யில் அவளை யாரோ ஒருவனோடு பார்த்ததும், நான் படம் பார்க்காமலேயே திரும்பிவிட்டேன். அதற்குப் பின், அவள் வீட்டுப் பக்கம் பார்ப்பதைக் கூட நிறுத்திக் கொண்டுவிட்டேன்.

திடீரென்று என் மேலேயே எனக்கு வெறுப்பு வளர ஆரம்பித்தது. இப்படி இருப்பதைவிடச் சாகலாம் என்று நினைத்தேன். ராத்திரி, யாருக்கும் தெரியாமல் டிக்-20-ஐ தண்ணீரில் கலந்தேன். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, ‘இது என் கடைசி சிகரெட்’ என்று சொல்லிக் கொண்டேன்.

அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா மட்டும் என்னை நினைத்து அடிக்கடி அழுவாள். வசந்தியும் அழுவாள். ஹேமாவுக்குத் தெரிஞ்சா அவளும் அழுவாள். அப்பாவும் மனசுக்குள் அழுவார். வேலைக்காரர்களும், தோட்டக்காரர்களும் கூட அழுவார்கள். என் சாவு சிலரை அழ வைக்கும் என்கிற கற்பனை மிகவும் சந்தோஷமாய் இருந்தது. எதிரே கண்ணாடித் தம்ளரில் டிக்-20 கலந்த தண்ணீர்! ஒரே ஒரு தம்ளர் தண்ணீர்… நான் குடித்து, என்னைக் குடிக்கப் போகும் தண்ணீர்… எங்கோ கார்ப்பரேஷனில் யாரோ சில தொழிலாளிகளால் சுத்தம் செய்து அனுப்பப் படும் தண்ணீர், இதோ என் வயிற்றில் விஷமாக இறங்கப் போகிறது.

நான் சிரித்துக் கொண்டேன். என்னால் சாகும்போது கூட நன்றாக யோசிக்க முடிகிறது! ஆனால், நான் சாகவில்லை. சாகவேயில்லை. தம்ளரை வாய் அருகே கொண்டு போனேன். அந்த பாழாய்ப் போன வலிப்பு அப்போது வந்தது. பற்கள் இறுகி, கை கால்கள் உதறல் எடுத்துத் தம்ளர் கீழே உருண்டு… என்னைக் கொல்லத் தூண்டிய அதே வலிப்பு என்னை மீட்டும் விட்டது. நான் மீண்ட பின், ஒரு முடிவுக்கு வந்தேன். ‘என்ன ஆனாலும் சரி, வாழ்ந்தே தீருவது. அழக்கூடாது. சாகக்கூடாது. நான் கோழை இல்லை’ என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். வேலை விஷயமாகச் சிலரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.

எனக்கு வேறு ஒன்றும் ஆசையில்லை சார்… காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு பெண்ணை முன்னாலேயே தெரிஞ்சுக்காம எப்படி சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஆனா ஒண்ணு சத்தியம், என்னை ‘தார் பாலைவனத்தில் போய் இரு’ என்று சொன்னாலும், போய் இருப்பேன். ஆனால் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு விட்டுக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன். காதலிச்சால் என்ன சார் தப்பு? ஒரு பெண்ணிடம் பழகி, அவளைப் புரிந்துகொண்டு கல்யாணம் பண்ணிக் கொள்வதில் உள்ள சௌகரியம் அப்பாவுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது? நான் காதலிப்பேன். என்ன ஆனாலும் சரி, காதலிப்பேன். கஜினி முகம்மது பற்றி எப்போதோ படிச்சது ஞாபகத்துக்கு வந்து கொஞ்சம் தைரியமும், நம்பிக்கையும் கூட வருகிறது.

மணி என்ன, ஒன்பதரையா? அடுத்த தெருவில் இருக்கும் கவிதா காலேஜுக்குக் கிளம்பியிருப்பாள். பஸ் ஸ்டாண்ட் போவதற்குள் அவளைப் பிடித்தாகணும். இது ரொம்ப அவசரம். ப்ளீஸ், மீதியை அப்புறம் வந்து எழுதறேனே? கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன் சார்!

– 18-03-1973

பின்னுரை.

இந்த கதையை எப்படி முடிக்கலாம் என்று வாசகர்கள் அவரவர் எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்க அழைக்கிறேன். முன்பு “தமிழ் மணத்தில்” என்று நினைக்கிறேன்… ஒரு கதையை ஒருவர் ஆரம்பித்து வைக்க ஒவ்வொருவராக பலர் அக்கதையை ஒவ்வொரு வாரம் தொடர எழுதி கதையை முடிப்பார்கள். அதைப்போல ஒரு முயற்சி. எனக்குத் தோன்றிய முடிவை பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

18 கருத்துகள்:

  1. ​நான் படிச்ச கதை வாக்கியங்கள் இடைவெளி கூடுதல் ஆக உள்ளன. ஸ்பேஸிங் ஒன்றரை ஆக்க கோருகிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு

  2. பார்த்து கொஞ்சம் நாளாயிட்டுது இல்லை? என்ன சார் அப்படி பார்க்கிறீங்க? 🤕 கால்கட்டு, சக்கர நாற்காலி, உட்கார வைத்து உருட்டிகொண்டு வர சரோஜா தேவி போன்ற பெண், இது எல்லாம் என்ன? ஏன்? எப்படி? என்று திகைப்பாயிருக்கிறதா? இப்போ எனக்கு இரண்டு கால்கட்டு. கல்யாணம் என்ற கால்கட்டு மற்றும் நிஜ கால்கட்டு. பின்னாடி நிற்பது தான் என் மனைவி கவிதா.

    அன்று கவிதாவைப் பார்க்கப் போவதோடு கதையை நிறுத்தியிருந்தேன் அல்லவா, மீதி இப்போ..

    கவிதா பஸ் ஸ்டாண்டிற்கு சென்று கொண்டிருந்தாள். பின்னாடி ஒரு பஸ் 🚌 அவள் மேல் மோத வந்தது. நான் உடனே பாய்ந்து கவிதாவை அப்புறம் தள்ளி விட்டேன். தள்ளி விட்ட வேகத்தில் நான் கீழே விழவும் பஸ் என்னுடைய கால் மேல் ஏறவும் சரியாக இருந்தது. பஸ், ஸ்டாண்டில் நிறுத்த வந்து கொண்டிருந்ததால் பஸ்ஸுக்கு வேகம் அதிகம் இல்லை. ஆகவே கால் எலும்பு முறிவுடன் உயிர் பிழைத்தேன்.

    காதல் கணிந்தது. உயிரை கொடுக்க முன்வந்து காதலியின் உயிரை காப்பாற்றிய எனக்கு காதலியான கவிதாவே மனைவியானாள். கவிதா அவள் அப்பாவிற்கு ஒரே பெண். தற்போது கவிதா அப்பா விஸ்வநாதனின் பாக்டரியில் எனக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி. ஆகவே காதலிக்கணும் சார். “விஸ்வநாதன் வேலை வேணும்” என்றெல்லாம் நான் பாடவில்லை. வேலையும் கிடைத்தது, கல்யாணமும் ஆயிற்று.

    ஒன்னு சொல்ல மறந்துட்டேனே. கவிதாவுக்கு காது கேட்காது. பின்னாடி லாரி வந்தால் கூட கேட்காது. அதனால் அவள் கல்யாணமும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. நான் ஒருத்தன் தான் சரியாக அமைந்தேன். “இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று” .

    இப்படி கதையை முடிக்க வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அன்றைய (1973) திரைப்படங்கள் கோர்ட் சீன், கல்யாண சீன் என்று சுபமான! முடிவுகளுடன் முடியும். அதன்படி கதையின் முடிவையும் அமைத்தேன். இக்காலத்திற்கு ஏற்ப யாராவது வேற முடிவு சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முடிவு நன்றாக இருக்கிறது.

      நீக்கு
    2. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

      கதைக்கு தங்களது இந்த முடிவான இறுதி பகுதி நன்றாக உள்ளது. கதைக்கு இந்த சுபமான முடிவை ரசித்தேன். பாராட்டுக்கள்.நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. ​மார்பக புற்று நோய்க்கு மருந்து வரவேற்கத்தக்கது. தற்போதைய சிகிச்சை முறைகளான கீமோ, மற்றும் ரேடியேஷன் மிகுந்த பொருட் செலவும், வீரியம் கூடுதலாகவும் உள்ளன. சிகிச்சை பலன் ஒரு சிலருக்கே நிறைவுருகிறது. பல பக்க விளைவுகள் தாங்க முடிவதில்லை.

    வாடகை வாகனங்களில் பயணிப்போர் பற்றி போலீஸ் விவரங்களைக் குறித்துக்கொள்வதால் என்ன பயன் என்று புரியவில்லை. இங்கு ப்ரீபெய்ட் ஆட்டோ திட்டத்தில் அது செயல்படுத்தத்ப்படுவது தான். வண்டி எண் போன்ற விவரங்கள் அடங்கிய ஒரு ஸ்லிப் பயணிக்கு கொடுப்பார்கள். பிரச்சினை என்றால் அந்த ஸ்லிப்பை போஸ்ட் பாக்ஸில் போட்டால் போதும். மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இல்லாவிட்டால் அந்த பேப்பரில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் போதும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. மார்பக புற்று நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத நல்ல மருந்தை கண்டு பிடித்த விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.

    கிரிகெட் ரசிகர்களின் பாதுகாப்பிற்காக போலீஸார்கள் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைக்கும், சிறுவயதிலேயே சாதனை புரிந்த சிறுவன் தாஷ் மாலிக் சாதனைக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. கதையை படித்தேன். இவர் எழுதிய சிறுகதைகளை படித்ததாக நினைவு. குறிப்பிட்டு சொல்லத் தெரியவில்லை. இன்றைய கதையும் படிக்க நன்றாக விறுவிறுப்பாக இருந்தது இந்த முடிவும் வித்தியாசமாகவே உள்ளது. தாங்கள் தந்த சுட்டிக்கும் சென்று படித்து வந்தேன். தேர்ந்தெடுத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ​முடிவு எழுத கோரிய வேண்டுகோளில் ஒரு பிழை உள்ளது. அது வேண்டும் என்றே செய்யப்பட்டது. யாராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்ப்போம். வாசகர்களை பின்னூட்டம் எழுத தூண்டும் ஒரு உத்தி. ஒரு பொறி. (trap)

    Jaya​kumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நான் கவனித்ததில் இந்த பாணி "தமிழ் மரணத்தில்" இல்லையோ..? "தமிழ் மணத்தில்" ஒவ்வொரு வளரும் பதிவுகளையும், அவர்களின் பதிவுகளையும், சிலாகித்து சிறந்த பதிவர்கள் வாரம் ஒரு ஆசிரியராக வந்து வழி மொழிந்து ஊக்குவிப்பார்கள். அவ்விதம் நானும் பல மூத்த பதிவர்களால் முன்பு ஊக்குவிஎக்கப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை நான் பதிவுலகிற்கு வருமுன்பே இவ்விதம் கதைகளின் முடிவை பலர் எழுதி யூகிக்கும் முயற்சி நடந்ததோ என தங்கள் பின்னுரையை படிக்கும் போது நினைத்தேன்.

      ஆனால் எ. பியிலோ, இல்லை சகோதரர் திரு. கௌதமன் அவர்களால் நடத்தப்படும் மின் நிலாவிலோ, இந்த மாதிரி கதைகளின் முடிவுகள் பல மாதிரியான வடிவத்தில் உண்டாகி, அதில் பங்கு பெற்றிருப்பதாக நம் சகோதர சகோதரிகளின் கருத்துரைகளில் படித்துள்ளேன். தாங்கள் குறிப்பிடுவது அவ்வகையோ.? ஏதோ என் சிற்றறிவுக்கு புலப்பட்டதை பகிர்கிறேன். தங்களின் கருத்தையும், மற்றவர்களின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      "தமிழ் மணத்தில்" என திருத்திப் படிக்கவும்.

      இந்த தட்டச்சு வார்த்தைகளில்தான் எத்தனை பிழைகள் வருகின்றன. அதிலும் கைப்பேசியில் மேலும், கீழுமாக ராட்டணத்தில் செல்வது போல சென்று பிழைகளை கவனிப்பதற்குள்....! அதை கவனித்து வெளியிடுவதற்குள் .. (சமயத்தில் எவ்வளவு கூர்ந்து கவனித்து வெளியிட்டாலும், அந்த சொல்லிலேயே அது வெளியிட்டு நம்மை அசிங்கப்படுத்தி மகிழ்கிறது. அது வேறு விஷயம்...!:)) ) அது தமிழில் பல வார்த்தைகளுக்கு பல சொல் வேறுபாடான அர்த்தங்கள், வந்து நிற்பதை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் அதற்காகவே, அதை கற்றுத் தரும் நயங்களுக்காவே இந்த கைப்பேசி தட்டச்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.:))

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. மார்பக புற்று நோய்க்கு மருந்து.. நிஜமாகவே நல்ல செய்தி.
    நாசாவிற்கு செல்லப்போகும் மாலிக்கிற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. சுப்ரமண்ய ராஜு, மாலன், பாலகுமாரனுக்கு மட்டுமல்ல இந்துமதிக்கும் நல்ல நண்பர். தன்னுடைய 'இரும்புக் குதிரைகள்' கதாநாயகன் விஸ்வநாதன் தானும் சுப்ரமண்யராஜுவும் சேர்ந்த கலவை என்று பாலகுமாரன் சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. 'காதலிக்கணும் சார்' ஆஹா எவ்வளவு நல்ல மெசேஜை இளைஞர்களுக்கு சொல்கிறது இந்தக் கதை! இந்தக் கதை சாவி ஆசிரியராக இருந்த குங்குமம் அல்லது சாவியில் வந்திருக்க வேண்டும். சாவியின் செல்லப் பிள்ளையாக சு.ராஜு இருந்ததால் பப்ளிஷ் செய்திருக்கிறார். வேறு ஒரு துவக்க நிலை எழுத்தாளர் இந்தக் கதையை அனுப்பியிருந்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. மார்பகப் புற்று நோய்க்கான மருந்து வாவ்! போட வைக்கிறது. புற்று நோய் அதுவும் வெகுவாக மார்பகப் புற்றுநோய், cervical cancer இவை பெண்களுக்கு சகஜம் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது அதுவும் cervical cancer சின்ன நகரங்களிலும் கிராமங்களிலும் என்றும்.

    மிக மிக நல்ல செய்தி. ஒரே டோஸின் விலை என்னவாக இருக்கும்?

    பொதுவாகப் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகள் சாதாரண குடும்பங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. புற்று நோய் என்றில்லை எல்லாமே தான்.

    நல்ல கண்டுபிடிப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கிரிக்கெட் - போலீஸாரின் செயல் மிக மிகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்படி முன்பு ஒரு செயலி கூட வந்தது இப்பவும் இருக்கா என்று தெரியவில்லை. நாம் ஏறும் வண்டியின் எண், ட்ரைவர் பெயரை அதில் உள்ளிட்டால் போதும் அல்லது கூப்பிட்டுச் சொன்னால் போது போலீஸ் கன்ட்ரோல் ரூமில் அது அடைந்து நம் வண்டி போகும் இடங்களை அங்கு மானிட்டரில் காட்டும் என்றும் அதைக் கண்காணிக்கும் ந்டவடிக்கையும் எடுத்தாங்க. போலீஸ் உங்கள் நண்பர் என்ற ஆப்? பெயர் மறந்து விட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. மாலிக் கிற்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!