வேட்கை
கு.பா.வெங்கடாசலம்
வாழ்க்கைப் புயலில் அகப்பட்டுத் துரும்பு போல் சுழன்று கொண்டிருந்தேன். வயிற்றின் பசியைத் தணிப்பதற்கு ஒரு யந்திரம் போல் வேலை செய்தேன். அணுவளவாவது இன்பம் -சாந்தி யில்லை. வயிற்றிற்காக உழைப்பதில் கூடச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. அந்த வாழ்க்கையில் ஒரு சிறு மாறுதல் தேவையிருந்தது. அதற்காக வெறி கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.
இந்தச் சமயத்தில்தான், தென்றலில் கலந்த சுகந்த வாசனை போல், அவள் வந்தாள். சலிப்படைந்த - உணர்ச்சியற்ற உள்ளத்தில் ஒரு கோடியில் இன்ப ஊற்றை நிர்மாணித்தாள். எனது அமைதியற்ற வாழ்க்கையில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கினாள். சாந்தி ஆசனத்தில் வீற்றிருக்கச் செய்தாள். அதுதான் நான் வேண்டிய மாறுதல் - சொர்க்கானுபவம்.
சுந்தரி! ஆம், அவள் பெயர். அவளை என் வாழ்வின் மாறுதலுக்காகவே சந்தித்தேன் போலும். அருள் பொங்கிய கண்களின் பார்வை என் மனதில் நெகிழ்ச்சியை உண்டாக்கியது. ஆசை இழுத்துச் சென்றது. எவ்விதமாகவோ கஷ்டமுற்றேன். கடைசியாக அவளை - அந்த இன்ப உருவை அடைந்து விட்டேன். பெரும் பாக்கியசாலி என்று பெருமிதம் கொண்டேன், அவள் எனது மனைவியானதற்காக.
அன்றுதான் முதல் நாள். அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது சொன்னாள். "நாதா! உலகம் ஒரே மாதிரியாயிருக்க விரும்புகிறதில்லை. எப்பொழுதும் மாறுதலை வேண்டித் தான் தவிக்கிறது. இன்று நீங்கள் என் மீது விருப்பாயிருக்கலாம். நாளை வெறுப்படையலாம். இது உலக இயற்கை; மனிதர்கள் சகஜமாய் விரும்புவது!'' என்று.
மாறுதல் வேண்டிய என் மனதை அவள் அறிந்து கொண்டாளா? ஏதாவது ஜாலங் கற்றவளா? நிச்சயமாய் ஜாலக்காரிதான். சலிப்படைந்த உள்ளத்திற்குச் சாந்தியளிக்கும் சக்தியுள்ளவளாயிருந்ததால், சந்தேகமில்லை. அவள் ஒரு ஜாலக்காரிதாள். இவை அந்தச் சமயத்தில் என் மனதில் ஓடிய எண்ணங்கள். பதில் பேசவில்லை. எங்கும் அமைதி - என் மனது மாத்திரம் 'டக் டக்' என்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த மௌனத்திலிருந்து அவள் என்ன அறிந்தாளோ? என்னிடம் சொல்லவேயில்லை.
காலம் வேகமாய்ச் சென்றதில் இரண்டு வருடங்கள் கழிந்தன. எங்கள் வாழ்க்கையில் இன்னொரு ஆத்மாவும் வந்து சேர்ந்து கொண்டது. தாயைப் போல் பிள்ளை. சுந்தரன்தான். என் இன்பத்திற்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தவன். வாழ்வு முன் போல் ரஸமாயில்லை. ஏதோ வருவதும் போவதுமாயிருந்தது. நிலைபெற்ற இன்பம் இல்லை. வெறும் பாலைவனம் மாதிரித் தோன்றியது. என் உள்ளத்தில் ஊறிய இன்ப ஊற்றுக்கள் வரண்டு பாழடைந்து விட்டன.
வாரத்திற்கு ஒருமுறை பையனுக்கு ஏதாவது அசௌகரியம். ஓய்வு ஒழிவில்லாமல் அவனுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். இதிலேயே என் மனம் முக்கால் வாசி சோர்ந்துவிட்டது. தொழில் செய்வது தடைப்பட்டது. வருமானம் இல்லை. வாழ்க்கையின் இனிமை மாறிக், கசப்பு எல்லைக்கு வந்து விட்டது. மறுபடியும் அடுத்த மாறுதலைத் தேடி அலைந்தது மனம்.
அப்பொழுதெல்லாம் உலக வாழ்வு சதமில்லை - நிச்சயமில்லை -வெறும் ஏமாற்றம் -மாய்கையின் தோற்றம் - என்றெல்லாம் ஒரு பெரும் யோகி போல் நினைப்பேன். பைத்தியம் போல் ஒரு பக்கம் போய் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். பட்டினத்தார் பாடல்களைப் பாராயணம் செய்வேன்.
புது ரோஜா போன்ற அவள் மேனி வாடி வதங்கிச் சருகாய் உலர்ந்து விட்டது. அவளைக் காணும்போதெல்லாம் கோபம் காரணமில்லாமலே வரும். இவ்வளவு மனச் சோர்வுக்கும் அவள்தான் காரணம் என்று. அன்று மலர்ந்த மலரைக் கசக்கி முகர்வது போல் என் வாழ்க்கையில் அவளை நடத்தினேன். கண்களில் எப்பொழுதும் நீர் துளிர்த்துக் கொண்டேயிருக்கும். அமாவாசை வானம் போலிருந்தது அவள் முகம். அவளைப் பார்க்க என் மனம் வைரமாய் உறைந்து போனது எனக்கே வருத்தமாயிருக்கிறது.
வயிற்றில் ஒன்பது மாதம் சுமந்து கொண்டிருந்தாள். ஒருநாள் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். வயிற்றில் சகிக்க முடியாத வேதனை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். பையன் தலைப்பக்கம் நின்று அழுது கொண்டிருந்தான். நான் எனது வைரநெஞ்சுடன் பக்கத்தில் நின்று தைரியம் சொல்லிக் கொண்டி ருந்தேன்.
"உங்களைத்தானே!" என்றாள் என்னை நோக்கி.
''என்ன? சும்மா படுத்திரு," என்றேன்.
''எனக்கு முடிவு வந்து விட்டது. என்னால் வேதனை சகிக்க முடியவில்லை. நெஞ்சில் ஏதோ பண்ணுகிறது!" என்றாள் ஓர் தீர்க்கதரிசிபோல்.
"அப்படி எல்லாம் சொல்லாதே! சும்மா படுத்திரு. விடியற் காலை டாக்டரை அழைத்து வருகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்,'' என்று தைரியப்படுத்தினேன். அதற்கு மேல் எனக்குச் சொல்ல வாய் வரவில்லை. அவ்வளவு கஷ்டப்படுகிறாள். அந்தக் காட்சி என் நெஞ்சை உருக்கி விட்டது.
''எனக்கு இவ்வுலக வாழ்வில் சலிப்பு ஏற்படவில்லை. உங்களுடன் வாழ்வதில் சலிப்பும் கிடையாது; சாந்தமும் கிடையாது. இரண்டும் இரவு பகல் போல் மாறி மாறி வந்துகொண்டிருந்தது. நீங்கள் விரும்புகிறீர்களே! அந்தப் பொய்ச் சாந்தி, அது எனக்கு வேண்டாம். நான் விரும்பியதில்லை. ஆனால் எனக்கு இவ்வாழ்க் கையின் முடிவு சீக்கிரம் ஏற்படும் என்று தெரிகிறது. என் காலத்துக்குப் பிறகு உங்கள் வேட்கை பூர்த்தியடையலாம். ஆனால் மனிதனின் ஆசைக்கு எல்லையே கிடையாது. என்று என்னவெல்லாமோ சொன்னாள். நான் அப்படியே சிலை மாதிரி நின்று கொண்டிருந்தேன். என் கையைப் பிடித்துத் தன் நெஞ்சில் வைத்தாள்.ஏதோ சொன்னாள், வார்த்தைகள் உதட்டிலேயே அடங்கி விட்டன. அவள் நெஞ்சு என் மனதைவிட வேகமாய் அடித்தது. சற்று நேரத்தில் துடிப்பின் வேகம் குறைந்தது. முகத்தைப் பார்த்தேன்.
அன்று - முன்னால் - முதல் முதல் -அவளை அந்த வீட்டின்
முற்றத்தில் பார்க்கும் பொழுது இருந்த சோபையைப் போல்
பதின்மடங்கு பெருகியிருந்தது. ஆனால் அன்று என்னைப் பார்த்த
கண்கள் இன்று மூடிக் கிடந்தன.
மணிக்கொடி - 1936
கதையின் ஆரம்பமே நன்றாக இருக்கிறது. கதையின் சாராம்சம் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்கிறது...
பதிலளிநீக்குஎன்ன யாருமே காணலை?
நான் முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்
கீதா
"நாதா! உலகம் ஒரே மாதிரியாயிருக்க விரும்புகிறதில்லை. எப்பொழுதும் மாறுதலை வேண்டித் தான் தவிக்கிறது. இன்று நீங்கள் என் மீது விருப்பாயிருக்கலாம். நாளை வெறுப்படையலாம். இது உலக இயற்கை; மனிதர்கள் சகஜமாய் விரும்புவது!'' //
பதிலளிநீக்குஆசிரியரின் எழுத்து ஈர்க்கிறது. சில குடும்பங்களின் யதார்த்தம்,
அதே போன்று குழந்தை வந்ததும்....ஆசிரியர் சொல்லும் அந்த வரி!!! சில குடும்பங்களில் இதுவும்....
ஒரு சராசரிக்கும் கொஞ்சம் கீழே உள்ள மனநிலை உடைய ஆணின் உணர்வுகள்....ரொம்ப அழகாகச் சொல்லி வருகிறார்....உளவியல்
இன்னும் முடிக்கவில்லை. வருகிறேன் பின்னர்....
கீதா
//பொய் சாந்தி........ஆனால் எனக்கு இவ்வாழ்க் கையின் முடிவு சீக்கிரம் ஏற்படும் என்று தெரிகிறது. என் காலத்துக்குப் பிறகு உங்கள் வேட்கை பூர்த்தியடையலாம். ஆனால் மனிதனின் ஆசைக்கு எல்லையே கிடையாது//
பதிலளிநீக்குஇந்த வரிகளில் எவ்வளவு விஷயங்கள் மறைந்து!
முடிவு சொல்லிய விதம் ரொம்ப அழகு. அதுவும் 1936 ல் பாருங்க ஒரு சில ஆண்களின் மன உணர்வுகளைச் சொல்லியிருக்கிறார்.
//முற்றத்தில் பார்க்கும் பொழுது இருந்த சோபையைப் போல்
பதின்மடங்கு பெருகியிருந்தது. //
பரிபூரண அமைதி/சாந்தி கிடைத்துவிட்டது என்று!
கீதா
அதாவது இப்படியான கணவனிடமிருந்து அவளுக்கு அமைதி!!
நீக்குகீதா
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஆசிரியர், தீப்பெட்டி சைசுக்குள் அடைத்துவிட்டார் கதையை.
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பொக்கிஷ கதை நன்றாக உள்ளது. மனித மனங்கள்தான் தினந்தினம் மாறுபடுமே ..! அதை அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
/நாதா.. உலகம் ஒரே மாதிரியாயிருக்க விரும்புகிறதில்லை. எப்பொழுதும் மாறுதலை வேண்டித் தான் தவிக்கிறது. இன்று நீங்கள் என் மீது விருப்பாயிருக்கலாம். நாளை வெறுப்படையலாம். இது உலக இயற்கை; மனிதர்கள் சகஜமாய் விரும்புவது!'' என்று.!
என்னவொரு புரிதலான வரிகள். "நாதா" என்று கணவரை அழைப்பது அந்த கால சினிமாக்களில் கேட்டிருக்கிறேன். இன்றைய நிலைமை க. தே. க. தான். அப்புறம் கதை எழுதப்பட்ட வருடத்தை பார்த்தால், அப்படி எழுதாவிட்டால் மக்களே கோபிப்பார்கள் என புரிந்தது.
முடிவு மனதை வருத்துகிறது. நல்லவர்களுக்கு என்றுமே காலமில்லை என்ற சொல் உண்மைதான் போலும். இந்த மாதிரி சுயநலவாதிகள் (ஆண், பெண்) இன்றும் இருக்கிறார்கள். வேறு என்ன சொல்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தக் கால எழுத்துக்கள் என்றால் எழுத்துக்கள் தான்.
பதிலளிநீக்குசிறப்பு..
இதே போன்ற கருத்தில் புதுமைப்பித்தனும் ஒரு கதை எழுதியிருக்கிறார். அன்றைய கைக்கும் வாய்க்கும் எட்டாத வருமானம் இல்லா வாழ்க்கையை சித்தரிக்கும் கதை. மனைவி இறப்பதை கண்டு கொண்டிருப்பது அல்லாது வேறு ஒன்றும் செய்ய முடியாத கணவரின் நிலை.
பதிலளிநீக்குகதையின் சுட்டி
https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/May/15/sellammal-puthumaippitthan-3415898.html
கு பா வெங்கடாச்சலம் கு பா ரா விற்கு உறவா?
ஜெ கே அண்ணா எனக்கும் இது தோன்றியது.
நீக்குகீதா
404
நீக்குOops.. Page not found !
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.
https://archive.org/details/orr-3973
நீக்குhttps://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே
நீக்குநானும் புதுமை பித்தனின் "செல்லம்மாளை" முன்பே படித்திருக்கிறேன். இப்போது நீங்கள் நினைவூட்டியதும் மனது நிறைய பாரத்துடன் மீண்டும் ஒரு முறை படித்து வந்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Read Chellamma with heavy heart!
நீக்குகதை முடிவு சோகம். என்னதான் மாற்றங்களை விரும்பினாலும் கதாநாயகனுக்குத் தினம் தினம் மாறுதல் வேண்டும் போல! மனைவி இறந்ததும் என்ன செய்திருப்பான் என்பதை நம் யூகத்தில் விட்டு விட்டார் கதாசிரியர்.
பதிலளிநீக்குகீதாக்கா இந்த மாதிரியான ஆண்கள் இருக்காங்க. அதாவது குழந்தை கூடாது, குழந்தை அழக் கூடாது, மருத்துவம் கூடாது....அப்புறம் எதுக்குக் கல்யாணமோ? ஒன்றே ஒன்றிற்காக... அதான் கதாசிரியர் மனைவி கதாபாத்திரத்துக்கு பரிபூரண சாந்தியை கொடுத்துவிட்டார்!!!!
நீக்குகீதா
நம்ம தேசப் பிதா கூட மனைவி கடும் வியாதியால் அவதிப்பட்டபோதும் சிறை அதிகாரிகளை மருத்துவரை அழைப்பதை வேண்டாம் என்று சொல்லிக் கடைசியில் மருத்துவமே செய்யாமல் இறந்தார் கஸ்தூரிபா காந்தி அவர்கள்.. தேசப்பிதாவின் உடல்நலமோ மணிக்கொரு மு?றை கண்காணிக்கப்படும்.
நீக்குநானும் படித்திருக்கின்றேன்.
நீக்குபொதுவாக வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்பவர்களே திருமணம் குழந்தை, குட்டி என இருக்கலாம் என்பதே என் கருத்து. இல்லை எனில் தன் பாட்டை மட்டும் பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான். மனைவிக்கு வேண்டியது எதையும் செய்யாமல் தவிக்க விட்டு மனைவி இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது கதாநாயகனின் கையாலாகாத் தனத்தின் மேல் வெறுப்பைக் கிளப்புகிறது. ஏதோ அவசரமாக எழுதி விட்டாரோ ஆசிரியர்?
பதிலளிநீக்குகீதாக்கா டிட்டோ செய்கிறேன் உங்க கருத்தை....
நீக்குஇப்படியும் சராசரிக்கும் கீழான ஆண்களின் மனப் போக்கைத்தான் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இப்படியும் இருக்காங்கன்னு.
அப்பா எல்லா காலத்துக்கும் பொருந்தும் போல....அவர் எழுதிய வருஷம் பாருங்க,
ஆமா அவசரமாக முடித்துவிட்டார்.
கீதா
கதை தொடக்கத்தில் இருந்து நன்றாகவே செல்கிறது.
பதிலளிநீக்குகஷ்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத குடும்பத் தலைவனாகவே இருக்கிறார். மனைவியின் துயர் கண்டும் இப்படியுமா கல்நெஞ்சனாக ஆண்கள் இருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது.
//வாழ்க்கைப் புயலில் அகப்பட்டுத் துரும்பு போல் சுழன்று கொண்டிருந்தேன். வயிற்றின் பசியைத் தணிப்பதற்கு ஒரு யந்திரம் போல் வேலை செய்தேன். அணுவளவாவது இன்பம் -சாந்தி யில்லை. வயிற்றிற்காக உழைப்பதில் கூடச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. அந்த வாழ்க்கையில் ஒரு சிறு மாறுதல் தேவையிருந்தது. அதற்காக வெறி கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.//
பதிலளிநீக்குகதை ஆரம்பத்திலேயே கதாநாயகன் நிலையை சொல்லி விட்டார்.
காசு சாம்பாதித்து வயிற்று பசியை தீர்த்து கொண்டாலும் , மனம் தேடும் இன்பத்தை அனுபவிக்க திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். மாறுதலை தேடும் மனிதரால் சுந்தரி என்ன சுகத்தை அனுபவித்து இருப்பார்.
//என் இன்பத்திற்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தவன். வாழ்வு முன் போல் ரஸமாயில்லை.//
//புது ரோஜா போன்ற அவள் மேனி வாடி வதங்கிச் சருகாய் உலர்ந்து விட்டது. அவளைக் காணும்போதெல்லாம் கோபம் காரணமில்லாமலே வரும். இவ்வளவு மனச் சோர்வுக்கும் அவள்தான் காரணம் என்று. அன்று மலர்ந்த மலரைக் கசக்கி முகர்வது போல் என் வாழ்க்கையில் அவளை நடத்தினேன்//
அவரின் மனநிலையை சொல்லி விட்டார் ஆசிரியர்.
அடுத்த குழந்தை வயிற்றில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாளோ!
//முதல் முதல் -அவளை அந்த வீட்டின்
முற்றத்தில் பார்க்கும் பொழுது இருந்த சோபையைப் போல்
பதின்மடங்கு பெருகியிருந்தது. ஆனால் அன்று என்னைப் பார்த்த
கண்கள் இன்று மூடிக் கிடந்தன.//
விடுதலை அடைந்து விட்டதால் ஏற்பட்ட சோபை போலும்.