வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

இறைவன் சபையின் கலைஞர்கள்

 இன்று நமதுள்ளமே,

மன்னவனே மன்னவனே, ஆடியில பெருக்கெடுத்து, ஏரிக்கரையில் மேலே, தென்றலில் ஆடும், சந்தக் கவிகள் பாடிடும், ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே என்று இந்தப் பாடல்கள் எல்லாம் ஆரபியில் இருந்தாலும் சட்டென மனதைக்கும் கவ்வும் பாடல் 'இன்று நமதுள்ளமே' பாடல்தான் முதலிடம் பெறும்.  அதிலும் 'மகிழ்ச்சிகள் துள்ளுமே' என்ற டியூனில் வரும் வரிகள்.

ஒரே ராகத்தில் பல பாடல்கள் வந்தாலும் அதில் ஏதோ ஒரு பாடல் மிகச் சரியாக அமைந்து எப்படியோ ஒரு விதத்தில் மனதில் பெரிய அளவில் இடம்பெற்று விடும்.  ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடலாம்.  நான் என் ரசனையில் சொல்கிறேன்.

கல்யாணி ராகத்தை எடுத்துக் கொள்வோம்.

சிந்தனை செய் மனமே, என்னருமை காதலிக்கு , காற்றில் வரும் கீதமே, வந்தாள் மகாலட்சுமியே, ஜனனி ஜனனி, தேவன் தந்த வீணை, மலையோரம் மயிலே, அதிசய நடனமிடும் அபிநய, ராதா அழைக்கிறாள், ஆராரோ ஆராரோ, சிறு கூட்டுல... 

இவை எல்லாமே கல்யாணி ராகத்தில் அமைந்த சில பாடல்கள்.  கொடுத்துள்ள லிஸ்ட்டில் முதலிரண்டு பாடல்கள் தவிர மற்றவை அனைத்தும் இளையராஜா.

​இன்று கல்யாணி ராகத் தழுவலில் இருக்கும் இரண்டு பாடல்களை பகிர்கிறேன்.  இந்த கல்யாணி பேஸில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் 'தேவன் தந்த வீணை.'  SPB வெர்ஷன்.

ஏன் தழுவலில் என்று சொல்கிறேன் என்றால் சின்மயியின் அம்மா எழுதிய இளையராஜா பாடல்கள் அலசலை படித்தேன்.  இந்தப் பாடல் இந்த ராக பேஸ் என்று சொல்லலாம் என்றாலும் அப்படியே அதுதான் என்றும் நிறைய பாடல்களில் சொல்லி விட முடியாது என்கிறார்.  ஒவ்வொரு பாடல் அலசலுக்கும் அவர் அபப்டி சொல்கிறார் என்றாலும் அவர் சொன்னது ரசிகப்ரியா ராகத்தில் அமைந்த ஒரு பாடலைச் சொல்லி, பிரித்து மேய்ந்து,  அது வேறொரு ராகம் என்றும் சொல்லலாம் என்றார்.  வர்ஷரூபிணி என்று நினைவு.

இளையராஜாவின் பாடல்களில் பாடல்களுக்கிடையேயான இன்டர்லூட் பற்றி சொல்ல வேண்டும்.  இல்லை இல்லை கேட்க வேண்டும்.  ஒவ்வொரு வாத்யத்தையும் அவர் எப்படி உபயோகிக்கிறார் என்று கேட்க வேண்டும்.


கன்னடப்பாடலின் இரண்டு சரணங்களில் முதல் சரணத்தை தமிழின் முதல் பாடலில் போட்டிருக்கிறார்.  தமிழ்ப் பாடலில் இரண்டு உண்டு.  ஒன்று SPB ஜானகியம்மா.  இன்னொன்று ஜெயச்சந்திரன் ஜானகியம்மா.  கன்னடப்பாடலின் இரண்டாவது சரண வடிவத்தை தமிழ்ப் பாடலின் இரண்டாவது சரண வடிவத்தில் கொண்டு வருகிறார்.

SPB யே ஒரு தரம் சிலாகித்துச் சொல்லி இருப்பது..  'என் குரலுக்கு ஏதோ தானே பாடுவது போல அழகாய் அபிநயம் செய்வது மோகன்தான்....'

இந்தப் பாடலிலும் அது தெரியும்.

முதல் பாடலில் கிடாரின் ஒற்றை ஸ்ட்ரிங் ஒலியைத் தொடர்ந்து வரும் SPB குரலைக் கேளுங்கள்.  பல்லவி முடிந்ததும் ஒரு 'பாஸ்' விட்டு ஆரம்பிக்கும் இசை, அப்புறம் இரண்டாவது சரணம் முடிந்ததும் மறுபடியும் SPB யின் அருமையான இழையும் குரலில் ஆலாபனை.  தொடர்ந்து இசை. அலைபோல மேலே எழுந்து அருவி போல கீழ்நோக்கி பொழியும் இசை. ஒரு கண இடைவெளி. அப்புறம் SPB பாடலை தன் கைக்குள், குரலுக்குள் கொண்டு வருகிறார்.'எங்கிருந்தேன், இங்கு வந்தேன்.. இசையினிலே என்னை மறந்தேன்..'  

நாமும்தான்! 

'இறைவன் சபையில் கலைஞன் நான்..'  

ஆம்..  இவர்கள் எல்லோருமே இறைவன் சபையின் கலைஞர்கள்தான்...  தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ....


ஆஆஆ…..ஆஆஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

தேவன் தந்த வீணை
வீணை வீணை
அதில் தேவி செய்த கானம்
கானம் கானம்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்
மோகமோ…….ஓஓஓ…..
மோகமோ சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ
நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

 தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்


தமிழின் இரண்டாவது பாடலையும் இணைத்திருக்கிறேன்.  SPB யின் ஆரம்ப ஆலாபனையை இதில் ஜானகி அம்மா எடுத்துக் கொள்கிறார்.  முதல் பாடல் பரவசத்தின் உச்சம் என்றால் இந்தப் பாடல் அமைதியோ அமைதி...  சாந்தம்!  எனக்கு ஜெயச்சந்திரனையும் ரொம்பப் பிடிக்கும்.  அவர் குரலின் இழைவும் இந்த பாடலின் ஸ்பெஷல்தான்.


கன்னடப்படம். கீதா. 1981.  இளையராஜா இசையாலேயே ஸூப்பர் ஹிட் ஆன படம்.  ஷங்கர் நாக், அக்ஷதா ராவ் நடித்த படம்.  படத்தின் பாடல் காட்சிகளை பார்க்கும்போது கதாநாயகியை பல இடங்களில் அழகில்லாமல் காட்டி இருப்பது போல எனக்குத் தோன்றியது.

தமிழ்ப் படம்  :  உன்னை நான் சந்தித்தேன்.  1984.  பாடல் கண்ணதாசன்.  

பாடல்கள் நன்றாய் இருக்கும் பட்சத்தில் நான் உடனே கேசெட் வாங்கி விடுவேன்.  மதுரை சுந்தரம் தியேட்டரில் நான் இந்தப் படம் பார்த்ததும் டவுன் ஹால் ரோட்டுக்கு ஓடி, மாதவராவிடம் வாங்கிய கேஸெட்டில் ஒருபக்கம் 'உன்னை நான் சந்தித்தேன்'.  மறுபக்கம் 'வைதேகி காத்திருந்தாள்'.  கேசெட் தேயத்தேய பாட்டு கேட்டேன் அப்போது!

41 கருத்துகள்:

  1. பாடலை மிகவும் ரசித்திருக்கிறீர்கள். நான் இந்த அளவு ரசித்துக் கேட்டதில்லை. பாடல் வரிகளே என்னைக் கவரும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க நெல்லை...

      எனக்கு அந்த ஆரம்பத்தைக் கேட்கும்போதே சிலிர்த்து கண்கள் கசியும்.  கண்களை மூடி அமர்ந்து விடுவேன். 

      நிறைய பாடல்களை, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதத்தில் ரசிப்பேன்.  பொதுவாக பாடல்கள் கேட்கும்போது எனக்கு குறுக்கீடுகள் கூடாது!  கண்களை மூடிக் கொண்டு கேட்பேன்! 

      "அப்பா தூங்கிட்டு கதை விடறார்" என்று மருமகள் கிண்டல் செய்வார்.

      நீக்கு
  2. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  3. இளையராஜா பாடல்கள் எல்லாமே கர்னாடிக் இசை அடிப்படை தான். மகன் நடித்து
    இளையராஜா இசையில் எஸ் பி பி பாடிய பாடல்கள் இறந்த வரிகளையும் உயர்த்தெழச்செய்யும்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன் என்பதை மோகன் என்று புரிந்து கொள்கிறேன்.

      நன்றி சக்ரபாணி ஸார்...  எல்லோரின் இசைக்கும் ஏழு ஸ்வரங்கள்தான் அடிப்படை, இல்லையா?  

      என் வாழ்வின் பெரும்பகுதியை இசைமழையால் நிரப்பி பரவாசப் பூக்களை மலரச் செய்தவர் இளையராஜா.

      நீக்கு
  4. மோகன் நடித்து என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பிடித்த பாடல்கள் இன்றைய பதிவின் பாடல்கள்...

    மீண்டும்
    பாடலைக் கேட்டதும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தமுறை உங்களுக்கும் பிடித்த பாடல்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. எங்கிருந்தோ இங்கு வந்தேன்
    இசையினிலே எனை மறந்தேன்
    இறைவன் சபையில்
    கலைஞன் நான்! ..

    அடடா!...

    பதிலளிநீக்கு
  7. கன்னடப் பாடலும் கேட்டேன் ரசனைக்கு மொழி அவசியம் இல்லை.

    நான் எந்த மொழி என்று தெரியாத பாடலையும் ரசித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  8. ஆசைக்கிளியே
    அரைக்கிலோ புளியே!
    -- என்று கூட ஒரு திரைப்பாடலா?
    கொடுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டலான பாடல் அது ஜீவி ஸார்...  என்ன சமையலோ டைப்பில்.  என்ன சமையலோ ராகமாலிகை.  இந்தப் பாடல் ஆரபி.    அதிலும் எப்படி ராகத்தைக் கொண்டு வந்திருக்கிறார் பாருங்கள் ராகதேவன். 

      இன்னுமோர் பாட்டு..  எல்லாம் இன்ப மாயம் என்று ஒரு மசாலா படம், கமல் நடித்தது..  அதில் 'மாமன் வூடு மச்சு வூடு பரிசம் போட்டது குச்சு வூடு' என்று ஒரு பாடல்.  அது ரா ரா வேணுகோபாலா பாடல் போல இருக்கும்.  அதாவது பிலஹரி ராகம்! 

      இளையராஜா.

      நீக்கு
  9. அந்த தேவன் தந்த வீணை -- ஆஹா!

    என்ன இருந்தாலும் தமிழ் என்றால் வார்த்தைகளின் புரிதலில் மனம் இசையில் தோய்ந்து போய் விடுகிறது. இது தான் எந்த மொழி தெரிந்திருந்தாலும் தாய் மொழிக்காக பெருமை எனலாம்.
    நாம் கைக் குழந்தைகளாக இருக்கும் பொழுதே அன்னை அமுதூட்டும் பொழுதே அவரவர் மொழிகளில் கொஞ்சி ஈடுபாட்டையும்
    சேர்ந்து ஊட்டி விடுகிறார்களோ?
    அதனால் தானோ தாய் மொழி என்ற ஈடு இணையற்ற பெருமை கிடைத்தது போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவி வரிகள் நிச்சயம் ரசிக்கப்பட வேண்டும்.  ரசிக்கவும் ரசிப்போம்.  ஆனால் நீங்கள் மொழியை மட்டும் ரசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ஜீவி ஸார்..  அந்தக் குரலின் குழைவு, இடை இசையின் மென்மையும் வசீகரமும் உங்களைக் கவரவில்லை போல...  

      நீக்கு
    2. நான் சொன்னது இதே பாடல் இந்தியில் இருந்திருந்தால் என்னால் ரசித்திருக்க முடியாது என்பது தான். தாய் மொழியின் மீதான அன்பும் நேசமும், அந்த மொழி பேசும் மக்களிடம் வினை புரியும் ஆற்றல் அளப்பரியது.
      இது பற்றி யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா, தெரியவில்லை.

      நீக்கு
    3. தமிழ் மட்டுமல்ல, மற்ற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும் நான் சொல்வது பொருந்தும். அவரவருக்கு அவரவர் தாய் மொழி உசத்தி தான்!

      நீக்கு
    4. நான் பின்னூட்டமிடவில்லை என்றால் 'ஏன் வரவில்லை?' என்றிருக்கும்.

      வந்து பின்னூட்டமிட்டால் 'ஏன் வந்தான்?' என்றிருக்கும்.

      இது என் ராசி.

      நீக்கு
    5. // நான் சொன்னது இதே பாடல் இந்தியில் இருந்திருந்தால் என்னால் ரசித்திருக்க முடியாது என்பது தான். தாய் மொழியின் மீதான அன்பும் நேசமும், அந்த மொழி பேசும் மக்களிடம் வினை புரியும் ஆற்றல் அளப்பரியது. //

      மன்னிக்கவும் ஜீவி ஸார்...  இசைக்கு மொழி இல்லை.  மூன்று ஹிந்தி பாடல்கள் சொல்கிறேன். 1)  மெஹபூபா படத்தில் வரும் கிஷோர் குமார் பாடல் "மேரே நய்னா சாவான் பாதோ ....  2) பியா கா கர் படத்தில் வரும் யே ஜீவன் ஹை பாடல்  3)  யாறானா படத்தில் வரும் சூக்கர் மெரி மன்கோ பாடல் 

      மனதில் மற்ற மொழிகளின்மேல் வெறுப்பின்றி இந்த மூன்று பாடல்களையும் குறுக்கீடின்றி தனிமையில் கேட்டுப்பாருங்கள். மொழியே தேவை இல்லை.  ஆக்கலும், மாக்களும் மொழி புரிந்ததா கண்ணனின் குழல் கேட்டு ஓடிவந்தன?

      நீக்கு
    6. // இது பற்றி யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா, தெரியவில்லை. //

      செய்திருந்தால் மிகவும் ஒருதலைப் பட்சமாக இருந்திருக்கும். நேர்மை இருந்திருக்காது.

      நீக்கு
    7. //தமிழ் மட்டுமல்ல, மற்ற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும் நான் சொல்வது பொருந்தும். அவரவருக்கு அவரவர் தாய் மொழி உசத்தி தான்!//


      நானும் தாய்மொழியை மட்டமாக கருதவில்லையே....  இசையை ரசிக்கிறேன்.  அது மட்டும்தான் நான் செய்யும் குற்றம்!  தமிழ் பாடலை மட்டும்தான் ரசிப்பேன் என்று நான் சொல்ல மாட்டேன்.  மனதுக்கு அமைதி தரும்,  சந்தோஷம் தரும் இசையை எந்த வடிவத்திலும் ரசிப்பேன்.

      நீக்கு
    8. // வந்து பின்னூட்டமிட்டால் 'ஏன் வந்தான்?' என்றிருக்கும். //

      அப்படி நிச்சயமாக யாரும் நினைக்க மாட்டார்கள் ஜீவி ஸார்.

      நீக்கு
    9. மனத்தில் மற்ற மொழிகளின் மேல் வெறுப்பின்றி -- ஆஹா!
      வழக்கமான வசனம் வந்து விட்டதா?

      நான் சொன்னது வார்த்தைகள் புரிதலைப் பற்றி.

      நீக்கு
    10. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னே குறையேதும் எனக்கேதடி...

      கொள்ளை கொள்ளப்பட்ட மனதில் என்ன மொழி புரிந்தது?

      நீக்கு
    11. மன்னவன் பேரைச் சொல்லி
      மல்லிகை சூடிக் கொண்டேன்
      மன்மதன் பாடல் ஒன்று
      நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்..

      நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் -- அப்படீன்னா என்ன புரிந்தது? --- என்று கேட்காமல் போனீர்களே!

      நீக்கு
  10. தேவன் தந்த வீணை - அருமையான பாடல் பகிர்வு. நன்றி. கன்னட பாடல் கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  11. தேவன் தந்த வீணை - ஆஹா அருமையான பாடல்.

    சின்மயி அம்மாவின் ப்ளாகை நானும் வாசித்திருக்கிறேன். இதே ரசிகப்பிரியா பற்றியும். ஆமாம் பிரித்து மேய்வார் அவர்.

    ஆரபியில் அமைந்த பாடல்களில் இன்று நமதுள்ளமே பாடல் ரொம்பப் பிடிக்கும். உங்கள் ரசனையை டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதே ரசிகப்பிரியா பற்றியும். ஆமாம் பிரித்து மேய்வார் அவர். //

      இது கல்யாணி கீதா, அது வேறு இரண்டு பாடல்கள்.

      நன்றி கீதா.

      நீக்கு
  12. கன்னட வெர்ஷன் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். எஸ் பிபி குழைந்திருக்கிறார்! ரொம்பப் பிடித்தது.

    தமிழில் ஏற்கனவே ரெண்டு வெர்ஷனும் கேட்டிருக்கிறேன். இரண்டுமே ரொம்பப் பிடிக்கும். இப்பவும் ரசித்துக் கேட்டேன், ஸ்ரீராம். இன்டெர்லூட் ரொம்பப் பொருந்திப் போகும் இயைந்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. நான் பாட்டு கேட்கணும்னா, disturbance இருக்கக் கூடாது. இப்பலாம் ஹெட் செட் போட்டுக் கேட்கிறேன். மத்தவங்களுக்குக் கேட்கப் பிடிக்காதே.

    நான் என் தம்பி (அத்தை பையன் எஸ்பிபி ஆராதகன், என் தங்கை ரொம்ப நன்றாகப் பாடுபவள் கச்சேரி செய்யும் அளவுக்கு, சினிமா பாடலும் நன்றாக வரும்.....ஆனால் வெளியில் தெரியாமல் போய்விட்டது, அவர் குடும்பச் சூழலினால்) நாங்க மூணு பேரும் சேர்ந்தா வீட்டில் வேலையே பிரித்து மேய்தல்தான்... சினிமா பாடல்களுக்குத் தங்கை ராகம் ஸ்வரம்...என்று பாடிக்காட்டி சொல்லிட...அதை தம்பி இந்த இடம் பாரு அந்த இடம் பாரு மொட்டை என்னமா போட்டிருக்கார், தலைவர் எப்படி பாடிருக்காரு பாரு என்று சிலாகிக்க,..அவளும் நானும் மீண்டும் பிரித்திட இன்டெர்லூடை

    என்று இருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்பொழுதும் அப்படி தான் ரசிக்கிறேன் கீதா... உயிரோடு கலந்தது இசை...

      நீக்கு
  14. "தேவன் தந்த வீணை...." அருமையான பாடல் கேட்டிருக்கிறேன் பிடிக்கும்.

    கன்னடப்பாடல் இப்பொழுதுதான் கேட்டேன் அதுவும் நன்றாக உள்ளது.
    பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் மிக அருமை. குறிப்பிட்ட பாடல்களின் ராகங்களை தெளிவாக கூறி, இந்த வெள்ளியை சிறப்பாக்கி விட்டீர்கள்.

    "தேவன் தந்த பாடல்" அடிக்கடி கேட்டிருக்கிறேன். இன்றுதான் காட்சியோடு கேட்கிறேன். இரண்டுமே மிக நன்றாக உள்ளது. நடிகர் மோகன் எஸ். பி. பி அவர்கள் சொல்வது போல அவரின் பாடல்களை நன்றாக அவரே அனுபவித்து பாடுவார். கன்னட பாடலும் மிக அருமை. அருமையான இசையில் நல்ல பாடல்களை இன்று பகிர்ந்தற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...  எனக்கு எப்போதுமே காட்சி இரண்டாம் பட்சம்தான்!  பாடல்தான் முதல்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!