Thursday, September 1, 2016

எலியும் நானும்... நானும் எலியும்..


      Image result for rat images   ஃபேஸ்புக்கில் சின்னப் பதிவாகப் போடவேண்டிய விஷயத்தை வலைப்பதிவில் பதிவாகப் போடவேண்டி விஷய தானம் செய்த எலியார் வாழ்க!

    
Image result for rat images    எனக்கும் எலிக்கும் உறவுகள் விடுவதில்லை என்று நினைக்கிறேன்.  போதிய இடைவெளியில் அவ்வப்போது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி விடுகிறார்.  அவர் என் கண்ணில் பட்டதுமே என் மனக்கண்ணில் கம்பியூட்டர், ஃப்ரிஜ், ஏஸி, தொலைக்காட்சிப்பெட்டி  ஆகியவற்றின் ஒயர்கள் மனக்கண்ணில் வந்து ஆடத் தொடங்கி விடும்.

    
Image result for rat images   முதல் எலிப்பதிவில் கொஞ்சமான சஸ்பென்ஸும், இரண்டாவது ஒரு எலியின் சபதத்தில் சற்று அதிகமான சஸ்பென்ஸும் வைத்துப் பதிவிட்டிருந்தேன்.  எலிப்பதிவுக்கு எப்பவுமே வரவேற்புதான்.  ஏனென்றால், அவரால் பாதிக்கப் படாதவர் யார்!

   
Image result for rat images முந்தைய பதிவிலேயே ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.  "ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))"

    
Image result for rat images    யானையின் பாதையில் மனிதன் ஆக்ரமித்து அதன் பாதையை வழிமறிக்கிறானாம்.  தன் பாதை என்று வருடா வருடம் வலசையில் வழி மாறாமல் வரும் யானை அங்கு மனிதனைக் கண்டு மிரள்கிறதாம்.  அதே போல எலியின் பாதையில் நான்தான் குறுக்கிட்டிருக்கிறேனோ என்னவோ!


 


     Image result for rat images   என்னுடைய சிறு வயதிலேயே எலியுடனான அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன!  அப்போதெல்லாம் என் அப்பா பாஹேதான் எலி பிடிக்கும் கடமையைச் செய்து வந்தார்.  குடும்பத்த தலைவரின் பொறுப்புதானே அது!
     Image result for rat images    முதல் கொஞ்ச நாட்கள் ஒரு கொடூரமான பொறி ஒன்றில் எலியைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  'ட' போன்ற ஒரு பலகையில் படுக்கை வசத்தில் இறுக்கமாக இருக்கும் கெட்டியான கம்பியை எடுத்து, நிமிர்ந்திருக்கும் பக்கம் இருக்கும்  கொக்கியில் மாட்ட வேண்டும்.  அந்தக் கம்பி அந்த ட வடிவத்தின் பின்பக்கமாகச் செல்லும்.  அதனுடன் இணைந்திருக்கும் சிறு கொக்கி ஓட்டை வழியே முன்னால் உள்ளே வந்து நடுவில் உள்ள இடத்தில் இருக்கும் சிறு பள்ளத்தில் முடிந்திருக்கும்.  அதில் வடையை வைப்போம்.  அதைச் சாப்பிட வரும் எலி வடையைக் கடித்ததும், கொக்கி நகர்ந்து, கம்பியை விடுவிக்கும். அப்போது "டமார்" என்றுஒரு பயங்கர சத்தத்துடன்  அடிக்கும் கம்பியில் அந்த எலி மாட்டி சிதிலமாகி ஸ்பாட்டிலேயே பரலோகம் போகும்!  

     Image result for rat images   இந்தக் கொடூர மரணத்தைப் பார்க்கப் பொறுக்காமலும், அப்புறம் அந்தப் பொறியைச் சுத்தம் செய்யும் கஷ்டத்துக்காகவும் முறையை மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம்!


     Image result for rat images   நீள் சதுர டப்பா போன்ற இந்தப் பொறியில், எலி உள்ளே நுழைந்து கம்பியில் மாட்டியிருக்கும் உணவைத் தொட்டதும் கம்பி நழுவி, 'டப்' பென்று கதவு மூடிக்கொள்ளும் வகையில்  வைத்துப் பிடித்த எலியை வீட்டிலிருந்து சற்றுத் தள்ளிச் சென்று, பொறியின் மூடியை சற்றே கஷ்டப்பட்டுத் திறந்து விடுவார்.  விடுதலை பெற்ற எலி துள்ளிக் குதித்து எதிர்த் திசையில் ஓடியதும் உண்டு.  எக்குத்த தப்பாக ஷேன் வார்னே சுழற்பந்து போலத் திரும்பி அப்பாவின் காலடி பக்கமே குதித்து ஒடத் தொடங்கியதும் உண்டு.  


     Image result for rat images   முதல்முறை இப்படி நடந்தபோது பாஹே வேஷ்டி நழுவ, அலறி, துள்ளிக் குதித்து டான்ஸ் ஆடி நின்றதை பார்த்துச் சிரித்த எங்களையும் மிரள வைத்து அந்த எலி எங்களுக்கும் முன்னாலேயே வேகமாக ஓடி எங்கள் வீட்டுக்குள்ளேயே மறுபடியும் நுழைந்து மறைந்தது!  உள்ளயிருந்து வெளியில் வந்த அப்பாவின் அம்மா, அதாவது எங்கள் பாட்டி  "டேய் பாலு..  இங்கக் கூட ஒரு எலி இருக்குடா.. இதையும் பிடித்து வெளில போடு" என்று அப்பாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.     Image result for rat images    உழைப்பு வீணாய்ப் போன கடுப்பிலும், தெருவில் வேஷ்டி நழுவிய வெறுப்பிலும் இருந்த அப்பா பொறியை 'ணங்' கென்று ஸ்டூலின்மேல் வைத்துக் கோபத்தைக் காட்டிக் குளிக்கப் போனார்.     Image result for rat images   அடுத்தடுத்த தடவைகளில் வெவ்வேறு முறைகளை முயற்சித்தார்.  யாரோ சொன்னார்கள் என்று  ஒரு சாக்கை எங்கிருந்தோ எடுத்து வந்து, அதைத் திறந்து, அதில் எலியை விடுவிக்க முயற்சித்தார்.  எலி அதற்குள் விழுந்ததும், அதை மூட்டையாகக் கட்டி சுவரிலோ, தரையிலோ மோதிச் சாகடிக்க வேண்டுமாம்.     Image result for rat images    சாக்கைப் பிடிப்பது என்னுடைய வேலையாகத் தரப்பட,  அப்பா பிடிபட்ட அந்த எலியை ஏதேதோ முயற்சித்து சரியாக சாக்கினுள் விடுவித்ததும், நான் சாக்கின் வாயை மூட வேண்டும்.  ஆனால் பீதியில் நான் சாக்கை நழுவ விட, எலி 'ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமே' என்று பாடாத குறையாக உள்ளே ஓடியது.  அப்பாவின் கையில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று சொல்லத்  தேவை இல்லை!


 


     Image result for rat images   அடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் என்று முயற்சித்தார்.  வாளியில் குதித்துப் பதமாக வெந்த எலியைத் தூக்கிப் போட்டபின், அந்த வாளியை வேறு யாரும் உபயோகிக்க மறுக்க, அந்த தடவையோடு அந்த முயற்சியும் நின்று போனது.  எவ்வளவு வாளி வாங்குவது!


                                                  

                                                                                                                                          - தொடரும் -[ பதிவு நீண்டு விட்ட காரணத்தினால் இதன் இறுதி பாகம் நாளை "வெள்ளிக்கிழமை வீடியோ" வுடன் சேர்ந்து வெளியாகும்] 
படங்கள்  : நன்றியுடன் இணையத்திலிருந்து... 

32 comments:

Geetha Sambasivam said...

ஹெஹெஹெஹெ, நாங்கல்லாம் எலியை இவ்வளவு பயமுறுத்தியதில்லை. வீட்டு நபரைப்போலவே சீராட்டுவோம். உபசரிப்போம். கிட்டவே உட்கார்ந்துண்டு சமையல் மேல்பார்வை எல்லாம் பார்க்கும். அதுவும் ஒன்றிரண்டாகச் சேர்ந்து கொண்டு, குழந்தைங்களுக்கு விளையாட்டு பொம்மையே வாங்கிக் கொடுத்ததில்லை. இதுங்களோட விளையாட்டைத் தான் குழந்தைங்க பார்த்து வளர்ந்தாங்க. :)

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தொடருங்கள்
எலியாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்
தம +1

Avargal Unmaigal said...

இது என்ன பிள்ளையார் சதுத்தி ஸ்பெஷலா?

Dr B Jambulingam said...

எலித் தொந்தரவைப் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

middleclassmadhavi said...

எங்கள் அதாவது எங்களோட வீட்டில் மூஞ்சூறு துள்ளி விளையாடும்!! என் அம்மா அது பிள்ளையார் வாகனம் என்று அதைக் கொல்ல மறுத்து விட்டார்!! பிறகு பழகி விட்டது - காணோமே என்று தேடும் அளவுக்கு. தற்சமயம் இரு பூனைக் குட்டிகள் வீட்டு வாசலில் இளைப்பாறுவதால் மூஞ்சூறு வருவதில்லை!! :-))

'நெல்லைத் தமிழன் said...

எலி என்றாலே ரொம்ப பயம்தான் வீட்டில் எல்லோருக்கும். ஏதோ... வீட்டில் எலிக்கும் கரப்பானுக்கும் பல்லிக்குமாவது பயப்படுகிறார்களே. இந்த எலி இடுகையைப் பார்த்ததும், ஹிந்துமிஷன் ஹாஸ்பிடல் கேன்டீன் ஞாபகம் வந்துவிட்டது. அங்கு, சமையல் செய்யும் இடத்திலேயே பெரிய எலிகள் இங்கேயும் அங்கேயும் போகும். அதைப்பற்றி அங்கு சமையல் செய்பவர் அலட்டிக்கொண்டதே இல்லை. நான், சார்.. ஐயோ எலி சாப்பாட்டுக்குப் பக்கத்தில் போகிறது என்றால், அது என்ன சார்..அதுவும் ஒரு ஜீவன் தானே என்று அலட்டாமல் சொல்லிவிடுவார்.
தொடருங்கள்.

Bagawanjee KA said...

எங்கள் வீட்டிலும் எலியைப் பிடிக்க வடை வாங்கி வைப்போம் ,வரவே வராது !ஸ்பெஷல் சாம்பார் வடையை வைத்தவுடன்தான் , அய்யா வந்து மாட்டிக் கொள்வார் :)

ADHI VENKAT said...

என் சிறுவயதில் எங்கள் வீட்டு பரணில் வைத்திருந்த ஹோம குண்டத்தில் , துடைப்ப குச்சிகள், சணல் போன்றவற்றை வைத்து ஐப்தாறு குட்டிகள் கூட ஈன்றது.. அவ்வளவும் ரோஸ் கலரில் இருந்தது இன்னும் நினைவில்..

தில்லியிலும் உண்டு.. அலமாரியை திறக்கையில் மேலேயே வந்து விழுந்திருக்கிறது..கதி கலங்கி போய்விடுவேன்.

எது எப்படியோ!! பிடிக்கும் சமயத்தில் நான் உயரமான இடத்தில் ஏறி நின்றுவிடுவேன்..:))

ADHI VENKAT said...

என் சிறுவயதில் எங்கள் வீட்டு பரணில் வைத்திருந்த ஹோம குண்டத்தில் , துடைப்ப குச்சிகள், சணல் போன்றவற்றை வைத்து ஐப்தாறு குட்டிகள் கூட ஈன்றது.. அவ்வளவும் ரோஸ் கலரில் இருந்தது இன்னும் நினைவில்..

தில்லியிலும் உண்டு.. அலமாரியை திறக்கையில் மேலேயே வந்து விழுந்திருக்கிறது..கதி கலங்கி போய்விடுவேன்.

எது எப்படியோ!! பிடிக்கும் சமயத்தில் நான் உயரமான இடத்தில் ஏறி நின்றுவிடுவேன்..:))

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம். சிரிக்கவே முடியவில்லை. ஹாஹாஹா. எல்லார் பவீட்டிலும் ராமாயணம், பாரதம் போல எலியாயணமும் இருக்கா. நம் வீட்டில் எலி, பல்லி,பெருச்சாளி, கீரி புராணங்கள் நிறைய. இப்ப பல கட்டிடங்கள் வந்ததில் இவைகள் குறைந்திருக்கின்றன.
சூப்பர் எழுத்து மா.நகைச்சுவை உங்களுக்கு ஏற்றது. வாவ்.

Madhavan Srinivasagopalan said...

// அடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் //

வேக வைத்த எலி, கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமே !

Thulasidharan V Thillaiakathu said...

எலியுடன் போட்டுத் தாக்கல் சென்ற வாரம் கூட...அது தப்பித்து இப்போதைக்கு வெளியில் சென்றுள்ளது...கொன்றும் இருக்கிறோம்...பெரும்பாலும் அப்படித்தான்...

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் எலி ரொம்பவே அழகு...டாக்டர் டூ லிட்டில்...நினைவுதான் வருது அது போல் மௌஸ் ஹன்ட் சினிமா நினைவுக்கு வருது...

எங்கள் வீட்டில் நாங்கள் உங்களுக்குத் தெரியுமே அதனால் போனால் போகிறது என்று நாங்கள் விளையாட்டுதான்...நானும் எலி பதிவை பாதி எழுதி வைத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு நிபுணியே இருக்கிறாள்...முழுதாக முடிக்க நேரமில்லாமல் போகிறது...நிச்சயமாக உங்கள் பகுதி லிங்குடன் எனது எலியாரும் வருவார்....

ஸோ க்யூட் எலி!!!!! படத்தைத்தான் சொன்னேன்....

கீதா

ராமலக்ஷ்மி said...

எலிகளைப் பிடித்து வெளியில் விடும் பொறி அந்த நாட்களில் பயன்பட்டது. ஆனால் இப்போதைய எலிகள் எதற்கும் அசருவதில்லை. ஒட்டும் அட்டை, பொறி எல்லாவற்றையும் இலாவகமாகத் தவிர்த்து விட்டு உல்லாசமாக உலவுகின்றன. தோட்டத்துக் கதவிலிருந்த (sliding doors) ஒரு சின்ன இடைவெளியை சரிசெய்தபின் இப்போது காணவில்லை.

சின்ன வயதில் ஆதி சொல்லியிருப்பது போல பிங்க் வண்ண எலிக்குஞ்சுகளை நானும் பார்த்திருக்கிறேன்.

“எலியும் நீங்களும், நீங்களும் எலியும்” தொடரக் காத்திருக்கிறேன்:)

‘தளிர்’ சுரேஷ் said...

ஹாஹாஹா! எலி அனுபவங்கள் ஜோர்! எங்க வீட்டிலும் எலி பிடிப்பது என்னோட வேலையா ஆகிப்போச்சு! இப்ப எலித்தொல்லை கொஞ்சம் குறைஞ்சிருக்கு! பதிலுக்கு பெருச்சாளியார் விசிட் பண்றார்! சுத்தி வயல்வெளி இருக்கிறதாலே எதுவும் பண்ண முடியலை!

Madhavan Srinivasagopalan said...

'எலிசபெத் ராணி', இந்தப் பெயரை ஸ்கூல் புத்தகத்துல மொதோ மொதோ படிச்சப்ப, எனக்கு டக்குனு நெனப்பு வந்தது 'எலியார்'தான்..

காமாட்சி said...

எலிபிடிக்க மஸால் வடை வாங்கிக்கூட வைத்திருக்கிறோம். வாஸனைக்கு வந்து மாட்டிக் கொள்ளும். இப்போதெல்லாம் ஏதோ விஷ மருந்து கலந்து இரவில்துளி சாதத்துடன் அது வரும் இடத்தில் வைப்பதாகவும், அதைச் சாப்பிட்டு பரலோகம் சேர்வதாகவும் கேள்வி. ஒரு வேளை பாபம் வந்து விடும் என்று யாரும் எழுதவில்லையா? பிறகு எலிகள் வருவதில்லை என்று சொன்னார்கள். மற்ற ,ஸாமான்களை உஷாராக மூடி வைத்து, காலையில் எலி அருகில் எங்காவதுதான் கிடக்கும்,தேடி இடம் சுத்தம் செய்கிறோம் என்று சொன்ன உண்மை எலி ஸம்ஹாரம்தான். எந்த விதமோ எலியார் கதி மோக்ஷம். போதுமா? அன்புடன்

காமாட்சி said...

அழகாக தமாஷான கட்டுரையாக எலியார் புராணம். நன்றாக உள்ளது. அன்புடன்

jk22384 said...

அமெரிக்காவில் (USA) எலிக்கறி போன்லெஸ் சிக்கன் பிரெஸ்ட் என்ற பெயரில் இறக்குமதி என்று செய்தி வந்தது. அதனால் ஹைப்பர் மார்க்கெட்களில் போன்லெஸ் சிக்கன் விற்பனை சரிந்தது விலையும் சரிந்தது.

--
Jayakumar

Ramani S said...

நாங்கள் இரண்டு மாத காலமாக
இங்கு( யு எஸ் ஸில் ) இருக்கிறோம்
அவ்வப்போது வாரம் ஒருமுறைவீட்டைக்
கிளீன் செய்யச் சொல்லி உறவினரிடம்
சாவியைக் கொடுத்து வந்துள்ளோம்
(வாட்ச்மென் முன்னறை )
இந்த வாரம் வீடு திறந்து கிளீன் செய்த
உறவினர் வீட்டுக்குள் எலி எப்படியோ
ஒன்று வந்து விட்டது என கிலி ஏற்படுத்திவிட்டார்
இப்போது எதை எதை கடித்துத் தொலைக்குமோ
போவதற்குள் எத்தனைக் குட்டிப் போட்டுத் தொலைக்குமோ
என என் மனைவிக்கு தூக்கம் கெட்டுப் போய்விட்டது
ஒரு குட்டி எலிக்கு எத்தனை மைல் கடந்து
தூக்கம் கெடுக்கும் பலம் இருக்கு பாருங்கள்

இந்தத் தொடருக்கும் எங்களுக்கும்
எலியால் ஒரு சம்பந்தம் ஏற்பட்டுவிட்டதால்
விடாது தொடர்கிறோம்

தொடர வாழ்த்துக்கள்

Bhanumathy Venkateswaran said...

எவியாயணம் சுவை. தொணடர்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

தொடர்கிறேன்..

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா... எலியாயணம்... தொடர்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஒரே சிரிப்பான பதிவு...கீழ் வீட்டில் இருந்து விட்டால் எப்போதும் எலியாரின் வருகைதான். தங்கள் அனுபவங்களை தங்கள் பாணியில் மிகவும் நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள். நாங்கள் சென்னையிலிருந்த போது சமயத்தில் இப்படி எலி கச்சேரிதான். அதை விரட்டும் போது நாங்கள் கத்தும் கச்சேரி அதுக்கும் மேல்! சமயத்தில் மிகவும் புத்திசாலியான எலிகள் பொறியில் மாட்டாமல், நம் கண்ணெதிரேயே பல நாட்கள் பகலிலும் நம்மோடு உலா வந்து கடுப்பேற்றும். ஒரு விடுமுறை நாளில் காலையிலேயே எலிப்பொறியில், திறந்திருக்கும் உணவகத்தை தேடிப்பிடித்து அதற்கு முதல் போணியாக மாசால் வடைகளை வாங்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நாங்கள் ஊர்சுற்றி வந்த அனுபவமொன்று தங்கள் பதிவால், எனக்கு நினைவுக்கு வந்தது. மேலும் தொடரும் தங்கள் எலிப்பதிவை படிக்க ஆவலாயுள்ளேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திருமாறன் said...

(வெந்நீர் வாளி தவிர) அனைத்தையும் நானும் கடந்து வந்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

எலிபுராணம் அருமை. குடும்பதலைவனுக்கு தான் நீங்கள் சொல்வது போல் எலியைவிரட்டும் பொறுப்பு.

அப்பாவின் நினைவுகள் அருமை.


ப்க்கத்து வீட்டு மாமா எலிபொறியில் பிடித்த எலியை சாக்குபையில் போட்டு ஓங்கி அடித்துக் கொன்றதை பெருமையாக எங்களிடம் கூறுவார் மிகவும் கலக்கமாய் இருக்கும் எங்களுக்கு.

கேக் வாங்கி வையுங்கள் சாப்பிட்டு விட்டு வெளியில் போய் இறந்து விடும் என்பதை கேட்டுவிட்டு அதை வாங்கி வைத்து வீட்டுகுள் செத்து போய் நம்மை கதி கலங்க வைத்த கதைகள் எல்லாம் உண்டு.

இப்போது எந்த வீட்டுக்கு வந்தாலும், கரப்பான், எலிக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுத்து விடுகிறோம் அதனால் நிம்மதி.

ஜீவி said...

எலி என்றாலே எனக்கு அலர்ஜி. அவ்வளவு ஒத்து வராத ஜந்து. இந்த 'எலி'ப் படங்களைப் பார்க்கையிலேயே 'ஒரு மாதிரி இருந்தது.

தலைப்பைப் பார்த்தவுடனேயே அசோகமித்திரன் சாரின் 'எலி' கதைக்கு மனசு தாவியது உண்மை. அருமையான அசோகமித்திரனின் மாஸ்டர் பீஸ். (என்னைப் பொருத்த மட்டில்) வாய்ப்பு கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். தேடி அலைந்து படித்து முடித்து கதையின் சிறப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வேன்.

G.M Balasubramaniam said...

இந்தப்பதிவைப் படித்ததும் வை கோபால கிருஷ்ணன் அவர்களின் எலி பிடிக்கும் புராணம்பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டில் எலித்தொல்லை என்று சொல்வதை விட பெருச்சாளியின் தொல்லையே அதிகம் பாசாணம் வைத்தால் அதைத் தின்று நீரைக் குடித்தால் பாஷாண்ம் வேலை செய்யாதாம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமான எலி வேட்டை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமான எலி வேட்டை

Ranjani Narayanan said...

எலிபுராணம் வேடிக்கையாக இருக்கிறது. பலவருடங்களுக்கு முன் படித்த ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. மேடையில் 'அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.....!'பாடிக்கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென்று ஒரு எலி வர, மேஜை மீது ஏறி நடுங்கிக் கொண்டே மீது பாட்டை பாடுகிறார்! வானிடிந்து வீழ்ந்தாலும் பயமில்லாதவருக்கு எலி என்றால் கிலி தான்!

சென்னையில் நிறைய எலிகளைப் பொறி வைத்துப் பிடித்திருக்கிறேன். பொறியுடன் ஒரு வாளியில் போட்டு குழாயைத் திறந்துவிட்டுவிடுவேன். ஜலசமாதி! எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து அதை வெளியில் போட்டுவிட்டு வருவாள். பெங்களூரில் இதுவரை காணோம்.
நான் இப்படிச் சொல்வது காதில் விழுந்து எலியார் வந்துவிடப் போகிறார்!

ஹுஸைனம்மா said...

ஆஹா.. .என் கமெண்டை “ரெஃபர்” செய்யுமளவு ஞாபகம் வச்சிருக்கீங்களா??!! நன்றி..

ஆனாலும், எலிகளின் படங்களுக்கு மத்தியில் கமெண்டை எழுதியதால், மறுபடி மறுபடி வாசிச்சு சந்தோஷப்பட முடியலை... அதுவுமில்லாமல், எலியைப் பற்றீத்தான் பதிவு என்றாலும்,இத்தனை எலிகளின் படங்களா??? :-(((((( பார்க்கும் தைரியமில்லாமல் ஸ்க்ரோல் பண்ணி ஓடி வந்துட்டேன்!! :-(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!